கற்பனைக் கணவன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 27, 2023
பார்வையிட்டோர்: 2,611 
 

(1947ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

வருத்தம் தேங்கிய அந்தக் கண்களின் பார்வையைக் கண்டு, ரங்கனாதனின் மனம் உருகியது. நட்சத்திரச் சுடரின் ஒளியைத் தோற்கச் செய்துகொண்டிருந்த அந்தக் கண்களின் பிரகாசம், நாளுக்குநாள் குறைந்து கொண்டே வருவதை அறிந்த அவன் மனம் வாடியது. வேதபாடசாலையைப் பெருக்க வந்த சம்பகம் நீண்ட பெருமூச் செறிந்துகொண்டே, சர சர சரவென்று பெருக்கி விட்டு ஓடி மறைந்தாள். அவளுடைய பராமுகம்-ஏன், அலட்சியம் அவனுடைய மனத்தை நோகவைத்திருந்தது. இருந்தாலும், சம்பகம் அவனுடைய பாலியத் தோழியாக இருந்து, அவனுடன் சகஜமாக விளையாடி மகிழ்ந்த நாட்களின் இன்ப நினைவால், அவளுடைய குற்றத்தை அவன் பொருட்படுத்தவில்லை.

சம்பகத்துக்கு இப்பொழுது வயது பதினாறு. வசந்தத்தில் மலர்ந்து பிரகாசிக்கும் மலரைப்போல் இருக்கவேண்டிய அந்த யுவதி, வாடிக் கருகிக்கொண்டு வருவதன் காரணம்: விவாகம் ஆகாததுதான். ராமனாத சாஸ்திரிகள் அவளுக்காக வரன்களுக்கு அலைந்தது கொஞ்ச நஞ்சம் அல்ல. பெரிய பட்டணங்களில் இருக்கும் சாஸ்திரிகளுக்கு வரும் வரும்படி, அந்தச் சிற்றூரில் இல்லை. ஏதோ சாப்பாட்டுக்குப் போதுமான அளவு கிடைத்துவந்தது. குடும்பமோ பெரியது. சம்பகம் மூத்தவள். புத்திசாலித்தனம், அழகு, பொறுமை முதலியவை நிறைந்திருந்தன அவளிடத்தில்.

மேனியில் சாயம்போன சீட்டிச் சிற்றாடை, கையில் கண்ணாடி வளையல்கள், மூக்கில் ரத்தின மூக்குத்தி, காதில் பழைய தோடு – இவை அவளுடைய அலங்காரங்கள். அவள் தலைமயிர் அழகாக வளைந்து சாட்டைபோல் தொங்கிக்கொண்டிருக்கும். குறு குறுவென்று பேசும் கண்கள். வீட்டில் சகலமான வேலைகளையும் அவளே செய்வாள். பெற்றோரிடத்தில் அத்தியந்த பக்தி. ஆனால், அவள் மனம் ஏதோ ஒரு பெரிய அதிர்ஷ்டத்தை நாடி. அவளுடைய பதினைந்தாவது வயதிலிருந்து திரிந்துகொண்டிருந்தது. எதிர்வீட்டு மீனாவின் கணவன் பட்டதாரி; பட்டணத்தில் நூறூ ரூபாய் சம்பளம். அண்டை வீட்டுக் குந்தளத்தின் கணவன் பம்பாயில் வேலையாக இருக்கிறான்.

குந்தளம் வந்து இறங்கும்போது, அவள் முகத்திலும் அவள் பெற்றோர்களின் முகத்திலும் வடியும் உத்ஸாகத்தைக் கண்டு, தனக்கும் தொலைவிலேயே புக்ககம் வாய்க்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டாள் சம்பகம். ஆஜானுபாகுவாய், பெரிய படிப்பாளியாய், கை நிறையச் சம்பாதிப்பவனாய் ஒரு யுவன் அவளது கற்பனையில் வளர்ந்துவந்தான். இரவு கண்களை மூடினால், ஊர் பெயர் தெரியாத அந்தச் சுந்தர புருஷன் அவளை மயக்கி வந்தான்.

சாஸ்திரிகள், பக்கத்திலே அநேக வரன்களைப் பார்த்தார். வரன்களெல்லாம் ஊர் மணியமாகவும், பதினைந்து ரூபாய் சம்பளம் வாங்கும் குமாஸ்தாக்களாகவும் இருந்தார்களே தவிர, அவள் கற்பனையில் உருவான சுந்தர புருஷனைக் காணவே இல்லை.

ரங்கனாதன்! அவனை அவள் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. மாநிறமாகத் தலையில் கட்டுக் குடுமியுடன்! சுறு சுறுப்பு வாய்ந்தவன் ரங்கநாதன்; சாஸ்திரிகளின் சிஷ்யன். “அப்பாவைப்போலத்தானே, அவனும் வீடு வீடாகத் திரியவேண்டும்? ஊரில் நல்லதும் கெட்டதும் மாறி மாறி வந்துகொண்டே இருக்கவேண்டும். இல்லா விட்டால் பிழைப்பேது அவனுக்கு?” சம்பகத்தின் மனம் அவனைத் துச்சமாக உதறித் தள்ள ஆரம்பித்தது. ஆனால் ரங்கநாதனின் உள்ளமோ அவளை உயர்ந்த வஸ்துவாக எண்ணி, ஆனந்தத்தில் லயித்து வந்தது. ஜாடைமாடை “சம்பகம், தீர்த்தம் கொடு; சம்பகம், பாடசாலையைப் பெருக்கிவிடுகிறாயா?” என்று அவன் கேட்பான். சம்பகம் சுளித்த முகத்துடன், “ஏன்? நீதான் கொஞ்சம் பெருக்கேன்! எனக்கு வேறே வேலை இல்லையா ?” என்பாள். அவளுடைய இனிய குரலைக் கேட்டதே போதும் ரங்கநாதனுக்கு.

சாஸ்திரிகளின் மனைவி, சம்பகத்தின் விஷயமாக அவரை ஓயாமல் பிராணனை வாங்க ஆரம்பித்தாள்.

“நான் என்னடி செய்யட்டும்? உன் பெண் வாயைத் திறந்தால்தானே? எவன் வந்தாலும் தான் பதிலே இல்லையே!” என்றார்.

“அவளை என்ன கேள்வி? நாமாகப் பார்த்து நிச்சயம் பண்ணித் தொலைக்கவேண்டியதுதானே?” என்றாள் மனைவி.

“சரிதான்! இதிஹாஸம் புராணம் எல்லாம் படித்து விட்டு, வயதுவந்த பெண்ணை இஷ்டமில்லாமல் எங்கே யாவது தள்ளச் சொல்கிறாயா? வேண்டாமடி அந்தப் பாவம்” என்றார் சாஸ்திரிகள்.

பெற்றவர்களின் இந்தப் பேச்சு, சம்பகத்தின் மனத்தில் அம்புபோல் பாயும். “அப்பா அழைத்துவந்த அடுத்த ஊர் மணியக்காரரையே பண்ணிக்கொண்டு விடலாமே?” என்று நினைப்பாள். “ஐயோ, உயிர் உள்ள வரைக்கும் கிராமத்தை விட்டுப் பட்டணம் என்ற பேச்சே இல்லையே ! வேண்டாமடா ஈசுவரா! வெளியுலக சம்பந்த மில்லாத இந்த வாழ்க்கை வேண்டவே வேண்டாம்” என்று அடுத்த கணம் மனம் சலிப்பாள். சம்பகத்தின் மனம், அவளது கற்பனைப் புருஷனையே பின்பற்றிச் சென்றுகொண்டிருந்தது.

சம்பகத்துக்குத் தன்னைப் பிடிக்கவில்லை. அவள் பெரிய இடத்தை விரும்புகிறாள் என்று ரங்கனாதன் தெரிந்துகொண்டான். கொல்லையில் ஜலம் சேந்திக்கொண்டிருந்த சம்பகத்தை, அவன், ”சம்பகம்! அடுத்த ஊர் மணியக்காரரை உனக்குப் பிடித்திருக்கிறதா?” என்று கேட்டான்.

அவள் நெஞ்சில் மறைந்திருந்த துக்கம் குமுறிக் கொண்டு வெளியே வந்தது. “எப்படி எனக்குப் பிடிக்கும், ரங்கா? நீ பால்ய சிநேகமாயிற்றே என்று உன்னிடம் சொல்கிறேன். எனக்குப் பட்டணம்போன்ற இடத்தில்தான் வாழ்க்கைப்பட இஷ்டம்” என்றாள். அவளுடைய பெரிய கண்களில் ஜலம் தேங்கி நின்றது. அவள் முகத்தைப் பரிதாபமாகப் பார்த்தான்.

“ஆமாம், சம்பகம்! உன்போன்ற அழகிக்கு அப்படிப்பட்ட இடந்தான் நல்லது. ஆனால், பெரிய இடத்தைப் பார்க்க, அப்பாவுக்குப் பணம் இருக்கிறதா?”

“கொடுத்துத்தான் ஆகவேண்டும். பெண் சுகப்படுவதுதானே முக்கியம்?”

ரங்கனாதன் அவளுடைய முகத்தைக் கூர்ந்து நோக்கினான்: “சரிதான் ! இருக்கிற நிலத்தை விற்று வரதட்சிணை கொடுத்துவிடச் சொல்கிறாயா? அப்பாவுக்குச் சம்மதமானால் எனக்குத் தெரிந்த வரன் ஒன்று இருக்கிறது. படித்தவன்: பட்டணத்தில் வேலையாக இருக்கிறன். நாளைக்கு உன்னைப் பார்க்க, அழைத்துக் கொண்டு வருகிறேன்.பணம் கொடுக்கச் சக்தி உண்டானால், முடித்துவிடலாம்.”

சம்பகத்தின் வருத்தம் தேங்கிய விழிகள் பிரகாசித்தன; அவள் கன்னம் குபீரென்று சிவந்தது. “நிஜமாக அழைத்து வருகிறாயா?” என்று ஆவலுடன் அவள் கேட்டாள்.

ரங்கனாதன் பதில் பேசவில்லை, அவளுக்கிருக்கும் ஆவலை, மௌனமாக அறிந்துகொண்டான்.

மறுதினம் மாலையில் சம்பகம் தன்னை அலங்கரித்துக் கொள்வதில் ஈடுபட்டிருந்தாள். மாந்துளிர் வர்ணப் புடைவை தன் அம்மாளுடையதை உடுத்திக் கொண்டு கண்ணாடிமுன் பார்த்தபோது, தன்னைக் கண்டு அந்த வாலிபன் மயங்கிவிடுவான் என்றே நினைத்தாள். கதிரவன் மறைந்து ஸ்வாமிக்கு விளக்கேற்றியவுடன், “அம்மா, சம்பகம்!” என்று சாஸ்திரிகள் கூப்பிட்டார். கூடத்தில் ஊஞ்சலில் அவன் உட்கார்ந்திருந்தான். உண்மையில் அவளுடைய மனத்தில் குடிகொண்டிருந்த சுந்தர புருஷன் அவன்தான். மெதுவாகக் குனிந்து நமஸ்காரம் செய்த போது, அவன் சிரித்த புன்சிரிப்பு, அவள் மனத்தை ஆகர்ஷித்தது. சம்பகத்தின் பூரிப்பைக் கண்டு, ரங்கனாதன் வருத்தத்துடன் வேறுபக்கம் திரும்பிக்கொண்டான். சம்பகம் உள்ளே போனதும், பண விஷயம் பற்றிய பேரம் ஆரம்பமாயிற்று.

“நான் குடும்பி. அளவுக்கு மீறிச் செய்ய என்னால் முடியாது” என்று தன் உத்தேசத்தைத் தெரிவித்தார் சாஸ்திரிகள்.

“பெண் லக்ஷணமாய் இருப்பாள் என்று சொன்ன தன்பேரில்தான் வந்தேன. எங்கள் அந்தஸ்துக்குத் தக்க படி ஆயிரம் ரூபாயாவது ரொக்கம் கொடுக்கவேண்டும். இதுவே குறைவு என்று பெரியவர்கள் கோபித்துக்கொள்ளலாம்” என்றான் வாலிபன்.

சாஸ்திரிகள் யாசகம் கேட்கும் தோரணையில், கை கூப்பிக்கொண்டே, “நீங்கள் அப்படிச் சொல்லப்படாது. என் பெண்ணைப்பற்றி நானே சிலாகித்துக்கொள்வது நல்ல தல்ல சம்பகம் புக்ககத்துக்கு அதிர்ஷ்டமாக இருப்பாள்” என்றார்.

“வருங்காலத்தில் ஏதோ நடக்கும் என்று இப்பொழுது விட்டுக்கொடுக்க முடியுமா?” என்றான் இளைஞன்.

சாஸ்திரிகள் முகம் சுண்டியவராய்ப் பேசாமல் இருந்தார். பேச்சும் முடிந்தது.

சமையல் உள்ளே இருந்தவண்ணம் ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்த சம்பகம், மனம் இடிந்துபோனாள். சாஸ்திரிகள் அன்று சாப்பிடும்போது, சம்பகத்தை ஏறிட்டும் பார்க்கவில்லை. அவருடைய முகத்தில் வருத்தமும் வெறுப்பும் குடிகொண்டிருந்தன.

ஏதோ தந்தையிடம் சொல்லவேண்டுமென்று நினைத்த சம்பகம், அவரது முகத்தைப் பார்த்ததும் பேசாமல் இருந்துவிட்டாள்.

இரவு பன்னிரண்டு மணிக்குமேல் இருக்கும். உலகம் உறங்கிக்கொண்டிருந்தது. சம்பகம் சமையல் கட்டில் கண்ணீர் பெருகப் படுத்துக்கொண்டிருந்தாள். பெற்றவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பால், அன்று அவளைக் கவனிக்கவில்லை. கற்பனை யுவன் நிஜமாகவே தோன்றினான். ஆனால்; அவளது காதலைக் கவரவில்லை. அவளுடைய இருதயத்தைத்தான் பிளந்துவிட்டான். “படித்தவர்கள் எல்லோருமே இப்படித்தான் இருப்பார்களோ? யார் கண்டார்கள்?”

நாழிக்கு நாழி ரங்கநாதனின் அன்பு கனிந்த வார்த்தைகளும் பொறுமை நிறைந்த முகமும் அவள் முன் தோன்றின. தன்னிடம் அவன் செலுத்திவரும் அன்புக்குப் பலனாக, தன்னுடைய பராமுகத்தைத்தான் அவன் கண்டான். “பாவி! சண்டாளி! என்ன காரியம் செய்துவிட்டாய்?” என்று அவளுடைய மனமே அவளை இடித்துக் கூறியது. பெருமூச்சுடன் கண்ணீர் வழிய, ஆகாயத்தைப் பார்த்தாள். அது சலனமற்று, உலகில் நடக்கும் நியாய அநியாயங்களைக் கண்டு புன்னகை புரியும் வேதாந்தியைப் போல் இருந்தது. “எல்லையற்றவனே! இந்தப் பேதை உள்ளத்தின் துயரை நீ அறிய மாட்டாயா?” என்று ஏங்கினாள்.

ஆம், அவன் அறிந்திருக்கிறான். இல்லாவிட்டால்…? அன்புடன் ஒரு கரம் அவளது முகத்தைத் திருப்பியது. “சம்பகம்! என்னைத் தவறாக நினையாதே. ஏன் இப்படி வருத்தப்படுகிறாய்? வேறு வரன் கிடைக்காமலா போய் விடும்? அவன் உன்னை அடையக் கொடுத்து வைக்கவில்லை” என்றான் ரங்கநாதன். அந்தக் கடைசி வார்த்தையைச் சொன்னபோது அவனுடைய குரல் கம்மிவிட்டது. சம்பகம் வாரிச் சுருட்டிக்கொண்டு எழுந்தாள்.

“அழாமல் தூங்கு, சம்பகம்!”

சம்பகம் வருத்தத்தோடு அவனைப் பார்த்தாள்.

“இந்த மூடப் பெண்ணை நீங்கள் தான் ஏற்றுக் கொள்ளவேண்டும்.”

ரங்கனாதன் திகைத்து நின்றான்: “நானா!..”

“ஆம், நீங்கள் தான். இந்த மௌட்டிகத்தை எப்படி ஏற்பது என்று அஞ்சுகிறீர்களா? உங்களது அகண்ட உள்ளத்தின் அன்புத் தீக்கு, அதை எரித்துப் புனித மாக்கும் சக்தி இல்லை என்றா அஞ்சுகிறீர்கள்?”

“இல்லை, சம்பகம்… ஆனால் நான் பட்டணத்தான் அல்லவே?”

“ஐயோ! ஏன் அந்த மயக்கத்தையே குத்திக் காட்டுகிறீர்கள்? இனி நீங்கள் இருக்கும் இடந்தான் எனக்குப் பட்டணம். அதுதான் என் சொர்க்கமும். உங்கள் அன்பே எனக்குப் போதும். உலகமே வெறுத்தாலும் கவலை இல்லை.”

ரங்கநாதனின் முகத்தில் புன்முறுவல் தவழ்ந்தது. “ஆமாம் சம்பகம்! இதெல்லாம் சரி… நீங்கள், தாங்கள் என்கிறாயே? இப்படிப் பேச எப்பொழுது பழகிக் கொண்டாய், சம்பகம்! மாலைவரையில் நீ என்றுதானே கூப்பிட்டு வந்தாய்?”

“இனிமேல் அப்படிச் சொல்வது நன்றாயிராது.”

“நாம் இனிமேல் இப்படித் தனியாகப் பேசுவதும் நன்றாயிராது; என்ன, தெரியுமா?… அப்பாவிடம் இதை நீ சொல்கிறாயா?”

“ஊஹும்.”

“ஆனால், நானே நாளைய தினம் அவரிடம் சொல்லி விடுகிறேன்” என்றான் ரங்கநாதன் சிரித்துக்கொண்டே.

அமைதியான இரவில் இரண்டு உள்ளங்களும் அமைதி அடைந்து ஆனந்தத்தில் ஆழ்ந்தன.

– நவராத்திரிப் பரிசு, முதற் பதிப்பு: 1947 , கலைமகள் காரியாலயம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *