கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 31, 2023
பார்வையிட்டோர்: 5,646 
 
 

(2004ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 17-20 | அத்தியாயம் 21-25

அத்தியாயம்-21 

“நன்னாப் பத்து மணிக்குப் போய்ட்டுப் பன்னிரண்டு மணிக்கு வந்தேள்” என்று மாமி மூர்த்தியைக் கோபித்துக் கொள்கிற மாதிரி சிவராமையரையும் சேர்த்துச் சொன்னாள். 

“என்ன அவசரமாம்? பேசிக்கொண்டே, ஆற அமரக் குளித்து விட்டு வந்தோம்” என்றார் சிவராமையர். 

ஒரு டம்ளர் ஜலம் கொண்டுவந்து வைத்துவிட்டு மாமி, “மாத்தி யான்ஹிகத்தைப் பண்ணுங்கோ, சாப்பிடலாம். கிட்டா பட்டணத்துக்காரன். அதெல்லாம் பண்ணமாட்டான்” என்றாள். 

உண்மையில் மேஜர் மூர்த்திக்கு, சந்தியாவந்தனம் மாத்தியான் ஹிகம் என்கிற மாதிரி ஒரு பழக்கம் தங்களுக்குள் உண்டு என்பதே மறந்துபோய்விட்ட விஷயந்தான். மாமியின் குற்றச்சாட்டுக்கு என்ன பதில் சொல்வது என்று அறியாமல் அசட்டுச் சிரிப்புச் சிரித்துக்கொண்டு நின்றான். 

சிவராமையரின் மூன்றாவது பேத்தி களுக்கென்று சிரித்தாள். 

“ஏன் அம்மா! தாத்தா கப்பலேறிப் போனவனோடேயும் சந்தியா வந்தனம் பண்ணாதவனோடேயும் கூட உட்கார்ந்திண்டு சாப்பிடலாமோ?” என்று நியாயமான ஒரு சந்தேகத்தைக் கிளப்பினாள் 

“என்ன பிராயச்சித்தம் பண்ணிக்கொள்ளச் சொல்றயோ, பண்ணிக்கொள்றேன்” என்றான் மூர்த்தி. 

“நான் மந்தரம் சொல்லித் தரேன். கூடச் சொல்லிண்டே வா, மாத்தியான்ஹிகம் பண்ணிவிடேன்” என்றார் சிவராமையர், தம் மாத்தியான் ஹிகம் பண்ணிவிடேன்” என்றார் சிவராமையா, தம் மாத்தியான்ஹிகத்தை முடித்துவிட்டு, டம்ளரில் மீதமிருந்த ஜலத்தைக் கொட்டிவிட்டு எழுந்து வந்து. 

“போருமே! மணி பன்னிரண்டேகால் ஆயிடுத்து. இனிமே மருமான் மாத்தியான்ஹிகம் பண்ணி முடிக்க இரண்டாயிடும். சமைச்சு வச்சதெல்லாம் ஆறிப் போயிடும்” என்றாள் அம்மாமி. 

“நம்பாத்துக் கடிகாரம் பத்து நிமிஷம் ஃபாஸ்ட் ; இல்லை, இல்லை, ஸ்லோ” என்றான் பேரன்மார்களில் ஒருவன். 

மூர்த்தியைப் பார்த்துச் சிவராமையர், “உட்காரு கிட்டா” என்று இலையில் உட்காரச் சொல்லிவிட்டுத் தாமும் உட்கார்ந்து கொண்டார். பேரன் பேத்திகள் ஆரவாரம் செய்து கொண்டே உட்கார்ந்தனர். 

“அன்பு, பிரியம், உள்ளத்தில் உண்மையிலேயே நெருக்கம் இருக்கிற இடத்தில் எந்தவிதமான தவறுக்கும் பிராயச்சித்தமே தேவையில்லை என்றுதான் நம்ப சாஸ்திரங்கள் எல்லாம் சொல்லுகின்றன” என்றார் சிவ ராமையர். 

முதலில் பாயஸத்தைக் கொணர்ந்து பரிமாறினாள் மாமி. 

“மருமானே மாப்பிள்ளையாக வந்தால் யார் வேண்டாமென்பார்கள்?” என்றார் சிவராமையர். 

மேஜர் மூர்த்தி சிறிது நேரம் தயங்கிவிட்டுச் சொன்னான்: “நீங்க கேலியாகச் சொல்றேளோ, நிஜமாகச் சொல்றேளோ, எனக்குத் தெரியாது. ஆனால் நான் கல்யாணம் பண்ணிக் கொண்டு விடறேன் என்று சொல்லி விடுவேன்” என்றான். 

கறியைப் பரிமாறிக்கொண்டே மாமி சொன்னாள்: “இப்படி எல்லாம் பயமுறுத்தாதே கிட்டா. யார் தேவலைன்னு படறது உனக்குன்னு சொல்லு. நான் பொறுப்பு. முகூர்த்தம் பார்த்து ஏற்பாடெல்லாம் செய்து விடுகிறேன். இப்படிப்பட்ட அழகான அநுபவம் நிறைந்த, ஊரெல்லாம் தெரிந்த, புகழும் பிரக்யாதியும் பெற்ற மாப்பிள்ளை கிடைக்க வேண்டுமே!” என்றாள் மாமி. 

“ஆனால் ஒண்ணு” என்றான் மூர்த்தி.பாதி விளையாட்டாகவும், பாதி உண்மையாகத் தொனிக்கவும், உடனே கல்யாணம் பண்ணிக்க நான் சம்மதிக்க மாட்டேன். பட்டணத்துக்குப் போய் எனக்குன்னு நான் இருக்கவும் உழைக்கவும் ஒரு இடம் தேடிக்கொள்ளணும். தேடிக்கொண்டு வந்து கல்யாணம் பண்ணிக்கிறேன்” என்றான். 

மூன்றாவது பேத்தி மங்களம் துடுக்குக்காரி. “ஐயையோ! அதுக் குள்ளே நான்கூடக் கிழவியாயிடுவேன்” என்றாள். 

மற்ற இரண்டு பேரும் சமையல் அறையில் இருந்தபடியே கலகல வென்று சிரித்தார்கள் சிவராமையரும் சிரித்தார்; ‘மாமியும் சிரித்தாள். 

மூர்த்தியும் சிரித்துக்கொண்டே சொன்னான்: “நீதான் காத்துக் கொண்டிரேன் மங்களம். நான் அடுத்த வருஷமே வந்து கல்யாணம் பண்ணிக்கொண்டு போய்விடுகிறேன்” என்றான். 

எங்கேயோ ஒரு கழுதை கத்திற்று. 

பூஜை அலமாரியில் சாத்தியிருந்த பூமாலையிலிருந்து ஒரு பூ உதிர்ந்து கீழே விழுந்தது. 

இரண்டையும் கவனித்த மாமி உடனேயே இது நிச்சயந்தானே கிட்டா?” என்றாள். 

“நிச்சயந்தான்” என்றான் மூர்த்தி. 

“நல்ல சகுனங்கூடக் கிடச்சுடுத்து, அம்மாடி! எனக்கு மூன்றில் ஒரு பங்கு கவலை குறைந்தது” என்றார் சிவராமையர். 

கூடத்தில் சாப்பிடுகிறவர்களுக்கு எதிரே, ஊஞ்சலில், ஒய்யாரமாக இதுவரை உட்கார்ந்துகொண்டிருந்த மங்களத்துக்கு எங்கிருந்தோ இப்போது வெட்கம் வந்துவிட்டது. தடதடவென்று சமையல் அறைக்குள் போய்ப் புகுந்துக்கொண்டாள். அங்கே குசுகுசுவென்று பெண் குரல்கள் ஒலித்தன. இரண்டு பெண் குரல்கள் கேலி செய்தன. ஒரு குரல் கோபித்துக் கொண்டது. கூடத்தில் சாப்பிட்டுக்கொண்டிருந்தவர்களுக்கும் இது காதில் விழுந்தது. 

“கல்யாணம் நிச்சயம் பண்ணிவிடறது என்றே அம்மாமி விருந்தாகப் பண்ணிவிட்டாள்போல் இருக்கு!” என்றான் மேஜர் மூர்த்தி, 

“இது விருந்தில்லேடா அப்பா! பாயசத்தையும் வடையையும் தவிர இங்கே தினசரி ஆகிற சாப்பாடுதான்” என்றாள் மாமி. 

“இந்த மாதிரி சாப்பாடு- நாவுக்கு ருசியான சாப்பாடு-நான் சாப்பிட்டு எவ்வளவோ நாள் ஆச்சு! ஏன் மாமி, பேத்தி எல்லாமே சமைக்குமோல்லியோ?” என்று கேட்டான் மூர்த்தி. 

“கேட்டாயே ஒரு கேள்வி!” என்றாள் மாமி. “மங்களத்துக்குச் சமைக்கத் தெரியுமான்னுதானே நீ கேக்கறே! நீ ஒரு வருஷத்திலே வந்து கல்யாணம் பண்ணிக்கிறேன்னியே, அந்த ஒரு வருஷத்திலே சமைக்கிறதிலே எனக்குத் தெரிஞ்சதை எல்லாம் அவளுக்குச் சொல்லித் தந்துடறேன்” என்றாள் மாமி. 

மீண்டும் சமையல் அறையில் குசுகுசுவென்று பேச்சும் கேலிக் குரல்களும் கோபக்குரலும் ஒலித்தன. 

பாயசம் கொண்டு வந்து போட்டாள் மாமி. 

மேஜர் மூர்த்தி சொன்னான்: “நான் ஜர்மனியில் படிக்கப் போனபோது என் கையில் என்னுடையது என்று செல்லாக் காசுகூடக் கிடையாது. என்னை அழைத்துப் போன ஆசிரியரும் அங்கே நடுத்தெருவில் நிறுத்திவிட்டுப் போன பிறகு எனக்குச் சாப்பாட்டுக்கே லாட்டரியாகி விட்டது. அந்த நிலைமையில் தெருவில் பட்சணக்கடைகள், ஓட்டல்கள் இவைகளில் உள்ள தின்பண்டங்கள் எல்லாவற்றையும் பார்க்கும்போது எனக்கு நாக்கில் ஜலம் ஊறும். அதுவும் தித்திப்பு என்றால் எனக்கு எப்பவுமே பிடிக்கும். எங்கே எந்தத் தித்திப்புப் பட்சணம் கண்ணில் பட்டாலும் பேயறைந்து பிரமித்தவன் போல் பிரமித்துப்போய் அப்படியே பார்த்துக்கொண்டு நின்றுவிடுவேன்!” 

“பாவம்!” என்றாள் மாமி. அவன் இலையில் இன்னும் கொஞ்சம் பாயசம் கொண்டு வந்து போட்டாள். 

“உனக்குத் தித்திப்புப் பிடிக்குமென்று அம்மாமிக்குத் தெரிந்திருந்தால் சேமியாப் பாயசத்தில் இன்னும் கொஞ்சம் சர்க்கரை போட்டிருப்பாள்” என்றார் சிவராமையர். 

“சர்க்கரை போராதா என்ன? அந்தப் பொண் போட்டாள்” என்றாள் மாமி. 

“இல்லையே, சரியாயிருக்கே” என்றான் மூர்த்தி. 

“எங்கள் காலேஜில் முன் வாசலில் ஸ்பினோஸா என்ற ஒரு வைத்திருக்கும். அந்த தத்துவாசிரியனின் உருவச்சிலை உருவச்சிலைதான் அப்போதெல்லாம் நான் கும்பிட்ட தெய்வம். அதன் முன் போய் நின்று கொண்டு, ‘ஸ்பினோஸா தெய்வமே, தித்திப்புப் பக்ஷணங்கள் சாப்பிட இப்போது என் கையில் காசில்லாமல் செய்துவிட்டாய். பிற்காலத்திலாவது எப்பவாவது கணக்கில்லாத, போதுமென்கிற மட்டும், தித்திப்புப் பக்ஷ்ணங்கள் சாப்பிடுவதற்குப் பொருள் அருளுவாய்’ என்று பிரார்த்தித்துக் கொள்வேன்” என்றான் மூர்த்தி. 

இலையில் சாதம் போட்டுத் தயிர் ஊற்றினாள் மாமி. 

“என் ஸ்பினோஸா தெய்வமும், மனிதர்கள் கும்பிடுகிற மற்றத் தெய்வங்களைப் போலத்தான். அதற்கும் இன்றுவரை காது செவிடாகவே தான் இருக்கிறது” என்றான் மூர்த்தி. 

“அது போகட்டும். மங்களத்துக்குத் தித்திப்புப் பக்ஷணங்கள் சகலமும் செய்யச் சொல்லித் தந்துவிடுகிறேன்” என்றாள் மாமி. 

சாப்பிட்டுக் கையலம்பிய பிறகு மூர்த்தி, சமையலறைக்குள் பதுங்கிக்கொண்டுவிட்ட மங்களத்தைத் தேடிக்கொண்டு போனான். கூட அவன் மாமியும் வந்தாள். 

“ஏன் மாமி, மங்களத்தையும் ஒரு வார்த்தை கேட்க வேண்டாமா? என்னைக் கல்யாணம் பண்ணிக்க அவளுக்குச் சம்மதந்தானா?” என்று கேட்டான் மூர்த்தி. 

“நீயேதான் கேளேன்” என்றாள் மாமி. 

மங்களம் அங்கிருந்து தப்பி ஓடிவிட முயன்றாள், முடியவில்லை. கூட இருந்த மற்றவர்கள் அவள் ஓடிவிடாமல் பார்த்துக்கொண்டிருந்தனர். மாமி சமையலறை வாசற்படியில் – நின்றுகொண்டிருந்தாள். 

“ஏன் மங்களம், எனக்காக ஒரு வருஷம் காத்திண்டிருப்பயோல் லியோ? உனக்கு இஷ்டந்தானே!” என்று மங்களத்தையே கேட்டான் மூர்த்தி. 

முகம் சிவக்க, “ஒரு வருஷம் என்ன! ஒன்பது வருஷமானாலும் காத்திண்டிருக்கேன்” என்றாள் மங்களம். அவள் அதைக் கேலியாகத்தான் சொல்ல முயன்றாள். ஆனால் கேலி அவள் குரலில் தொனிக்கவில்லை. தன் தோல்வியை ஒப்புக் கொண்டவள் போல் மங்களம் தலைகுனிந்து கொண்டாள். 

அதே சமயம் கணகணவென்று தூரத்தில் மணி அடித்தது. “தேவலையே, சகுனமெல்லாம் சரியாகத்தான் இருக்கு. இந்தக் கல்யாணம் தெய்வப்ரீதிதான்” என்றாள் மாமி. 

சிவராமையர், ” இன்றைக்கு என்ன, கோயிலில் உச்சிகால பூஜை இத்தனை நேரம் கழித்து ஆறது?” என்றார். 

“எல்லாம் நமக்காகத்தான், பாருங்களேன்!” என்றாள் மாமி. உலகமே, இப்பிரபஞ்சமே நமக்காகத்தானே! 

தெய்வம், தன் உச்சிக்காலப் பூஜை வேளையை, நமக்காகத் தள்ளிப் போட்டுக்கொள்கிறது! 

என்ன திடம்! என்ன நம்பிக்கை! 

களங்கமற்ற உள்ளங்கள், அன்பு நிறைந்த உள்ளங்கள் தவிர வேறு எந்த உள்ளங்கள் இம்மாதிரி முடிவு செய்யத் துணிய முடியும்? 

ஏன்? மங்களம் நன்றாகத்தான் இருந்தாள். வயசு வித்தியாசமும் அதிகம் இல்லை. பாதகமில்லை. 

கடவுள் சித்தம் அதுவானால் மேஜர் மூர்த்தி அதை ஏற்றுக் கொள்ளத் தயாராகவே இருந்தான். 

அத்தியாயம்-22

சிறிது நேரம் மாமாவுடன் பேசிக்கொண்டிருக்கலாம் என்று சிவராமையரைத் தொடர்ந்து வாசலுக்குப் போனான். திண்ணையில் அவர் துணியை விரித்துக்கொண்டு படுத்து விட்டார். “இன்று சாப்பாடு கொஞ்சம் ஜாஸ்தி” என்றார். 

மூர்த்தியும் பேசுகிற பாவத்தில் இல்லை, அப்போது. “நானும் சற்றுப் படுத்துத் தூங்கினால் தேவலைதான்” என்றான். 

“திண்ணையில் வேண்டாம். ஒரே சத்தமாக இருக்கும். வெயிலாகவும் இருக்கும். நீ மாடியில் போய்ப் படுத்துத் தூங்கு” என்றார் சிவராமையர். 

வெற்றிலை போட்டுக்கொண்டான் மூர்த்தி. அதைத் துப்புவதற்காக ஆளோடியில் இறங்கிப் போனான். 

நிழல்கள் கிழக்கு நோக்கிச் சாயத் தொடங்கிவிட்டன. 

வாசலில் காவல் நின்ற இரண்டு வேப்பமரங்களும், நாள் பூராவும் வெயிலில் காய்ந்தும், பசுமையான புன்னகை இழக்காமல் குளுமையாக இருந்தன. கண்ணுக்கும் உடலுக்கும் மனசுக்கும் குளுமை தந்தன. 

வீட்டு வாசலில் எச்சில் இலை வந்து விழப்போகிறது என்று ஒரு நாய் வேப்பமரத்து நிழலில் படுத்திருந்தது. 

எதிர்வீட்டுத் திண்ணையில் சீட்டாட்டம் தொடங்கிக் கொண்டிருந்தது. 

தெருவோடு ஒரு சாயபு ஒரு சுட்டு வெற்றிலையைத் தூக்கிக் கொண்டு போய்க்கொண்டிருந்தான். 

தெருக்கோடியில் யாரோ ஒருவன் வெகு தூரத்துக்கு எட்டும் படியாகக் குரல் கொடுத்துக்கொண்டிருந்தான். யாரையோ கூப்பிட்டுக் கொண்டிருந்தான் போல் இருந்தது. 

காற்று லேசாக வீசிக்கொண்டிருந்தது. வெயில் வெப்பம், சாப்பிட்ட பிறகு சற்று அதிகமாகி இருப்பதுபோலத்தான் இருந்தது. 

சிவராமையர் கண் மூடிவிட்டார். 

சத்தப்படுத்தாமல் மூர்த்தி உள்ளே போனான். அவன் மாமியும் இரண்டு பேத்திகளும் சாப்பிட இலையில் உட்கார்ந்து விட்டார்கள். மங்களம் இன்னும் இலையில் உட்காரவில்லை. 

“எனக்கு ஒரு டம்ளர் ஜலம் வேண்டும் மாமி” என்றான் மூர்த்தி. 

“மங்களம், தீர்த்தம் கொண்டுபோய்க் கொடு” என்றாள் மாமி. 

குடத்திலிருந்து ஜலம் சரிக்கும் சப்தம் கேட்டது. ஆனால் உடனே மங்களம் ஜலத்தை எடுத்துக்கொண்டு வரவில்லை. 

“அவசரப்படாதேடா. கிட்டா! அவள் முகத்தைத் துடைச்சுண்டு வரட்டும்” என்றாள் மாமி. 

“பவுடர் வேண்டுமானாலும் போட்டுண்டு வரட்டும்! காத்திண்டிருக்கேன்” என்றான் மூர்த்தி சிரித்துக்கொண்டே.. 

“புடைவை மாத்திண்டு போடியம்மா மங்களம்” என்று பரிகாசம் பண்ணினாள் அவள் அக்கா. 

குனிந்த தலை நிமிராமலே தீர்த்தத்தைக் கொண்டு வந்து மூர்த்திக்கு முன் வைத்தாள் மங்களம். விருக்கென்று ஒரு பார்வை பார்த்து விட்டு உள்ளே போய்விட்டாள். 

சிரித்துக்கொண்டே போகிறவளைப் பார்த்துக்கொண்டே தீர்த்தத்தைச் சாப்பிட்டுவிட்டு, ஊஞ்சலில் உட்கார்ந்தான் மூர்த்தி. 

“அடேயப்பா! திடீர்னு என்னடியம்மா இப்படி வெட்கம் வந்து விட்டது? கல்யாணம் பண்ணிண்டப்புறம் தானேடி ஆம்படையான்? அது வரையில் அத்தான்தானே” என்று மங்களத்தைக் கோபித்துக் கொண்டாள் மாமி. 

“ரொம்பக் கோபிச்சுக்காதே மாமி, அவள் சாப்பிடாத இருந்துடப் போறா. அப்புறம் நான் கல்யாணம் பண்ணிக்கறச்சே இளைச்சுப் போயிடுவாள்” என்றான் மூர்த்தி ஊஞ்சலை லேசாக ஆட்டிக்கொண்டே. 

“இளைச்சுப் போனாத்தான் என்னவாம். முதல் பிள்ளையைப் பெத்த பிறகு அவள் அம்மா மாதிரி குண்டுப்பெருச்சாளி ஆகிவிட மாட்டாளா?” என்றாள் மாமி. 

கல்யாணம் என்கிற பேச்சுத் தாண்டி இப்போது குழந்தை பிறக்கறதைப்பற்றிப் பேசுகிற கட்டம் வந்துவிட்டது. 

தான் அப்படித் திடீரென்று முன்பின் யோசியாமல் கிளம்பிச் சாத்தனூருக்கு வந்தது பிசகுதானா? 

சாமா தன் மனைவியையும் கிழத் தகப்பனாரையும் தளைகள் என்று சொன்னான். 

தான் அதுவரையில் அந்த நிமிஷம் வரையில் – எந்தவிதமான தளைகளும் இல்லாமல் காலம் தள்ளிவிட்டவன், இப்போது மனைவி, மக்கள், சுற்றம் என்கிற எல்லாத் தளைகளுக்கும் உட்படச் சம்மதிக்கிற மனோபாவத்துக்கு வந்துவிட்டான். 

மனிதனுக்கு எந்த உருவத்தில் எந்தச் சமயத்தில் எப்படிப் பட்ட பலவீனம் வரும் என்று யார் சொல்லமுடியுமா? 

ஆமாம், இது பலமா, பலவீனமா? 

யார் நிச்சயமாகச் சொல்வது? 

மாமியும் மாமாவும் நடத்திய வாழ்க்கையைப் பார்த்தால், ‘இது தான் வாழ்க்கை’ என்று சொல்லத் தோன்றியது மூர்த்திக்கு. அந்த வாழ்க்கை, தனக்கும் சாத்தியமானால் அதில் ஈடுபட வேண்டியதுதான் தன் கடமை என்று தன் உள்ளம் வற்புறுத்தியது என்பதை அவன் உணர்ந்தான். அந்த வற்புறுத்தலின் காரணமாகத்தான் அவன் மாமி பரிகாசம் செய்தபோது மங்களத்தைக் கல்யாணம் செய்துகொண்டு விடுகிறேன் என்று சொன்னான். 

அதுவெறும் வேடிக்கை வார்த்தையல்ல. உண்மையிலேயே முழுச் சம்மதத்துடனும் மூர்த்தி தனக்குள் செய்து கொண்ட தீர்மானம்தான் அது. 

ஆனால் இப்படி நினைப்பது இப்போது உள்ளத்திற்கு எட்டாத ஒரு பலவீனத்தின் விளைவாக இருக்கப் போகிறதே என்றுதான் ஒரு வருஷம் ஆகட்டும் என்று பின்யோசனையுடன் அவன் சொன்னான். 

இப்போது கல்யாணம் என்கிற பேச்சுக்குப் பிறகு குழந்தை என்கிற நிலைக்கு வந்தாகிவிட்டது – முதல் குழந்தை என்று திட்டம் 

போடத் தொடங்கிவிட்டாள் மாமி. 

எவ்வளவு திடமான நம்பிக்கை இருந்தது! 

ஆஹா! வாழ்க்கையிலேதான மாமாவுக்கும் மாமிக்கும் நம்பிக்கையில் கொஞ்சம் தனக்கும் எதற்கும் அஞ்சாமல் அவன் அந்த இருந்துவிடுமேயானால்? முன்னேறலாமே! 

“என்ன கிட்டா? யோசனையில் ஆழ்ந்துவிட்டாய்?” என்றாள் மாமி. 

“யோசனை என்ன? சாப்பாடு கொஞ்சம் பலம். தூக்கம் வராபலே இருக்கு. அவ்வளவுதான்” என்றான் மூர்த்தி. 

“படுத்துக்கோயேன், மாடியிலே போய். இந்தப் பாளையங்கள்ளாம் வந்து தொந்தரவு பண்ணாமே நான் பார்த்துக்கறேன்” என்றாள் மாமி. 

“இருந்தாலும் இன்னிக்குச் சாப்பாடு கொஞ்சம் பலம் தான்” என்றான் மூர்த்தி. 

“என்ன பலம் என்கிறே! வழக்கமாகச் செய்யறதுதான். பாயசமும் வடையும் மட்டும் அதிகப்படி. அவ்வளவுதான். இங்கேதான் நபர் இரண்டு டஜன் இருக்கே. ஒண்ணுக்குக் குழம்பு பிடிக்காது; ஒண்ணுக்கு ரஸம் பிடிக்காது; ஒண்ணு பச்சடி இல்லையாங்கும்; ஒண்ணு அப்பளம்னு கத்தும்; இப்படியாத் தினம் இங்கே சம்பிரமமான சாப்பாடுதான். எல்லாக் குழந்தைகளுக்கும் மேல் அவர் குழந்தை எல்லாம் இருந்தால் தான் அரை வயிறு ரொம்பித்து என்பார் அவர்” என்றாள் மாமி. 

“இத்தனையையும் மாமி ஒரு குறையாகச் சொல்லிக்கொள்ள வில்லை. நிறை என்கிற அர்த்தத்திலே சொன்னாள் என்பதுதான் விசேஷம்’ என்று எண்ணினான் மேஜர் மூர்த்தி. 

மாமியுடன் பேசப்பேசக் குடும்பம் என்கிற மன மயக்கம், வசீகரமான மயக்கம் அதிகரித்துக்கொண்டுதான் போகும் போல் இருந்தது. 

ஊஞ்சல் சங்கிலியில் சாய்ந்துகொண்டு உட்கார்ந்தான். 

ஊஞ்சல் ஆடவில்லை. அவன் மனம் உருவகம் ஆகாத சிந்தனை களுக்கு இடையே ஊசலாடிக் கொண்டிருந்தது. 

மனிதனுடைய வாழ் நாட்களிலே எந்த நாளை முக்கியமானது என்று சொல்வது? எந்த நாளை முக்கியம் அல்லாதது என்று சொல்வது? எல்லா நாட்களுமே, எல்லா நாழிகைகளுமே, எல்லா விநாடிகளுமே முக்கியமான நாட்கள்தாம். நாழிகைகள்தாம். விநாடிகள்தாம். 

எப்படியோ நேர்ந்துவிடுகிற ஒரு விஷயம் இது. ஒரு நாள், ஒரு நாழிகை, ஒரு விநாடி சிறந்துவிட்டதாக அவனுக்குத் தோன்றிவிடுகிறது. 

பிறந்த நாள் தெரிவதில்லை; இறந்த நாளும் மனிதனுக்குத் தெரிவதில்லை. இந்த இரண்டு நாட்களுமே முக்கியமான நாட்கள்தாம். இடையில் பல நாட்களைக் கொண்டாடுகிறான் மனிதன். ‘ஜோசியத்தில் உனக்கு நம்பிக்கை உண்டா கிட்டா?” என்று சிவராமையர் காலையில் கேட்டார். 

ஜோசியத்தில் மூர்த்திக்கு அவ்வளவாக நம்பிக்கை இல்லைதான். ஆனால் இப்போது – இந்த ஒரு நாள் – சாத்தனூர் சர்வமானிய அக்கிர காரத்தில் தன் மாமா வீட்டில் தான் செலவழித்துக் கொண்டிருந்த இந்த நாள் – தன் வாழ்க்கையை எப்படிப் பாதிக்கப்போகிறது என்று தீர்மானிக்க முயன்று கொண்டிருந்தான் அவன். 

சிந்தித்து முடிவு கண்டுவிடுகிற விஷயம் அல்ல அது. ஜோசியம் பார்த்துத்தான் முடிவு சொல்லலாம். ஊஞ்சல் சங்கிலியில் சாய்ந்தபடியே அவன் கண்ணை மூடி விட்டான். 

கண்ணை விழித்தபோது மங்களம் கையில் எச்சில் இலையுடன் ஓரக்கண்ணால் அவனைப் பார்த்துக்கொண்டே, வாசல் பக்கம் போய்க் கொண்டிருந்தாள். 

இருவர் கண்களும் ஒரு விநாடி சந்தித்தன. 

“தூணிலே மோதிக்காதே” என்றான் மூர்த்தி கேலியாக. பதில் சொல்லாமல் போய்விட்டாள் மங்களம். 

சற்று உரத்த குரலில் மூர்த்தி சொன்னான்: “மாமி, நான் இன்று ராத்திரி பட்டணத்துக்குத் திரும்பிவிடலாம்னு பார்க்கிறேன்” என்றான். 

“என்னடா கிட்டா? என்ன சொல்றே?” என்று கேட்டுக் கொண்டே மாமி கொல்லைப் பக்கத்திலிருந்து வந்தாள். 

“இல்லை! இன்னி ராத்திரிக்குப் பட்டணத்துக்குத் திரும்பி விட லாம்னு பார்க்கிறேன்” என்றான மூர்ததி மீண்டும் ஒரு தரம். 

“ஏண்டா, என்ன அவசரம் அப்படி, அதுக்குளினோ” என்றாள் மாமி. 

“திடீரென்று நினைச்சுண்டேன். புறப்பட்டு வந்தேன உங்களை எல்லாம் பார்த்தாச்சு, போகலாமே என்று தோணித்து, சொன்னேன்” என்றான் மேஜர் மூர்ததி. 

“வயசு இருபத்தி ஏழு இருபத்தி எட்டு ஆறதே தவிர நீ இன்னும் குழந்தைப் பிள்ளை மாதிரி தாண்டா இருக்கே!” என்றாள் மாமி. 

“ஏன்?” 

“அத்திம்பேர், உங்கப்பா – கூட இப்படித்தானாம். திடீானு நினைப்பாராம்; எங்கேயாவது ஒடுவாராம். திடீனு நினைச்சுப்பாராம்! திரும்பி வருவாராம். எல்லோரையும் அப்டியேதான விரட்டு விரட்டுன்னு விரட்டு வாராம்” என்றாள் மாம். 

“அப்பாவுக்கு ஏத்த பிள்ளைதான நான்னு சொல்லுமாய்” என்றான் மூர்த்தி, 

“அது சரி, ஆனால் பட்டணத்திலே அப்படி அவசரமா என்ன வேலை இருக்கு உனக்குன்னு சொல்லு அவசரமா வேலையிருந்தாப்போ. நான் குறுக்கே நிற்கமாட்டேன் என்றாள் மாமி. 

அவசரமாக வேலை இருப்பதாகப் பொய் வேண்டுமானாலும் சொல்லியிருக்கலாம் மூர்த்தி ஆனால் சொல்லவில்லை. “மனசில போகலாம் என்று தோணித்து; சொன்னேன என்றான் உண்மையை. 

“உன்னை நன்னா ஆட்டி வைக்கவும் படுத்திவைக்கவும் மங்களத்தைப்போல் ஒருத்திதாண்டா தேவை” என்றான் மாமி. 

“அதுதான் நிச்சயமாயிடுத்தே’ மங்களத்துக்கும் என்னைக் கல்யாணம் பண்ணிக்க இஷ்டந்தான் என்று தெரிஞ்சு போச்சே என்றான் மூர்த்தி. 

“எப்படித் தெரிஞ்சது உனக்கு!” என்றாள் மாமி. 

“அவள் நடந்துக்கறதைப் பார்த்தால் தெரியவில்லையா?” என்றான் மூர்த்தி. 

“நீ அசடு என்று பார்த்தேன்; கெட்டிக்காரன் என்று இப்பத்தான் தெரிகிறது” என்றாள் மாமி. 

“ஏதோ கொஞ்சம் அறிவு, கொஞ்சம் அநுபவம் எல்லாம் இருக்கு. அது இருக்கட்டும் மாமி; இப்போ நான் சொல்லுறது இதுதான். இத்தனை நாளாகக் கல்யாணம் பண்ணிக்கிற உத்தேசமே எனக்கு ஏற்பட்டது கிடையாது. இப்போ இங்கே வந்தப்புறம் திடீர்னு முக்கியமா நீ சொல்றதைக் காதில் வாங்கின குத்தம் – நான் சரி, கல்யாணமும் பண்ணிக்கலாமே, என்று யோசித்தேன். இல்லை; நான் இத்தனையும், மங்களத்தைப் பத்தி விளையாட்டுக்குத் தான் சொன்னேன் என்று நினைச்சுக் கொண்டாயோ நீ, அதுவும் எனக்குத் தெரியாது” என்று கொஞ்சம் தடுமாறியவனாக நிறுத்தினான் மேஜர் மூர்த்தி, 

மாமி சிரித்தாள். “உங்க மாமாவே நான் சொல்லித்தான் உனக்குக் கடிதாசு எழுதினார். என் மூன்று பேத்திகளிலே ஒருத்தியை உன் தலையில் கட்டிவிடறது என்றுதான் உன்னை இங்கே நான் வரவழைத்ததுங்கூட?” என்றாள் மாமி. 

“என் கிட்ட இருக்கிற பிரியத்தினால் வா என்று எழுதச் சொல்லியிருப்பாய் என்று எண்ணினேன் நான்” என்றான் மூர்த்தி. 

“அதுவும் கொஞ்சம் உண்டுதான். கேளேன். நீ கெட்டிக்காரன். மூன்று பேரில் கெட்டிக்காரியைப் பார்த்துப் பிடித்து விட்டாய். அதிருஷ்டக்காரன்தான். தெய்வசம்மதமும் இருக்காப்லேதான் இருக்கு” என்றாள் மாமி. 

*அதைத்தானே சொல்ல வந்தேன். இப்ப, சத்தியாக நான் வெத்து ஆள். இருந்தால் சாப்பிடுவேன்; இல்லாவிட்டால் பேசாமல் இருந்து விடுவேன். பொறுப்பு எதுவும் இல்லாமல் இதுவரை காலந் தள்ளியாகிவிட்டது. இனிமேல் கல்யாணம் செய்துகொள்வது என்று தீர்மானித்துவிட்ட பிறகும் அப்படியே இருந்துவிட முடியாதில்லையா?” 

“அதுக்காக? இன்னிக்கே பட்டணம் போய் என்ன பண்ணப் போகிறாயாம்?” என்று கேட்டாள் மாமி. 

“கிடைக்க இருக்கிற என் புது அந்தஸ்திற்கும் பொறுப்பிற்கும் ஏற்றபடி வேலை தேடுவேன்” என்றான் மூர்த்தி. 

“அடேயப்பா! நீ வந்து தேடப்போறே என்று வேலை எங்கேயோ காத்திண்டிருக்கு இல்லையா?” என்று கேலி செய்தாள் மாமி. 

மூர்த்தி கேட்டான்: “இப்படியே சொல்லிக்கொண்டு ஒரு வருஷமும் போய்விட்டால்?” 

மாமி சொன்னாள்: “நான் சொல்கிறபடி செய், பத்துப் பதினைந்து நாள் இங்கேயே, இரு. எங்கெங்கெல்லாமோதான் வருஷக்கணக்காக இருந்து அல்லல் பட்டாகி விட்டது. இனிக் கவலை வேண்டாம். இரண்டொரு மாசத்திற்கெல்லாமே கல்யாண நாள் இருக்கு. முகூர்த்தம் வைக்கச் சொல்றேன்.” 

“சரிதான் போ!” என்றான் மேஜர் மூர்த்தி; ‘அடுத்த வருஷத்திற்கு முந்தி நீ எவ்வளவு சொன்னாலும் நான் கல்யாணம் செய்து கொள்ள மாட்டேன். அதுமட்டும் நிச்சயம். அதற்குள் நான் இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்ள லாயக்குத்தானா என்பதை நான் எனக்குள்ளாகவே தீர்மானித்துக்கொள்ள வேண்டும்” என்றான். 

“இங்கிருந்துகொண்டே தீர்மானித்துக்கொள்ளேன்” என்றாள் மாமி. 

மூர்த்தி சிரித்தான்; “உன்னிடமிருந்து தப்பித்துக் கொள்ள வழியுண்டான்னு பார்க்கத்தானே ஒரு வருஷம் டயம் கேட்டேன்?” 

“மங்களத்திடமிருந்து தப்பித்துக்கொள்ள இனி உன்னால் முடியுமா? கல்யாணம் என்பது உன் போன்றவனுக்குப் பெரிய பொறுப்பா?” என்றாள் மாமி. 

“நான் போற வழியில் விடு மாமி, நான் தூங்கி எழுந்து கோயிலுக்குப் போறேன். போய்விட்டுக் கும்பகோணம் போய் ராத்திரி ரெயிலுக்குப் பட்டணம் போறேன். கூடிய சீக்கிரமே திரும்பி வறேன்.” என்றான் மூர்த்தி. அவன் குரலில் பிடிவாதம் தொனித்தது. 

அவனையே ஒரு விநாடி பார்த்துக்கொண்டு நின்றாள் மாமி. பிறகு, “போய்த் தூங்கு. கோயிலுக்குச் சாயந்தரம் அர்ச்சனை எல்லாம் பண்ண ஏற்பாடு செய்கிறேன்” என்றாள் மாமி. 

எழுந்து மாடிப்படியேறி, கடைசிப்படியில் நின்று திரும்பிப் பார்த்தான் மூர்த்தி. மாமி ஊஞ்சல் பலகையண்டையில் நின்றபடியே யோசனையில் ஆழ்ந்திருந்தாள். 

அடுத்த அங்கணத்தில் மங்களமும் சிலைபோல அசையாமல் நின்றிருந்தாள். 

மாடிப்படி ஏறிவருகிற காரியத்திலே தூக்கம் கலைந்து விட்டது, மேஜர் மூர்த்திக்கு. படுக்கையை விரித்துக்கொண்டு படுத்தவன் கைக்கடி காரத்தைப் பார்த்தான். மணி ஒன்று. 

தெற்குப் பக்கமும் வடக்குப் பக்கமும் சுவரில் வரிசையாக ஜன்னல்கள் இருந்தன. ஜன்னல்களுக்கு அப்பால் அந்த உயரத்தில் அடைப்பு எதுவும் இல்லை. ஆகவே காற்று அடித்தது. 

வீட்டுக்கூரைமேல் பட்டு பிரதிபலித்த உஷ்ணமும் வெளிச்சமும் உறைத்தன. ஐப்பசி மாதத்தில் இப்படி இருப்பது ஆச்சரியந்தான் என்று எண்ணினான் மேஜர் மூர்த்தி. 

மாதம் மும்மாரி பெய்த காலம் எல்லாம் கலி முற்றுவதற்குமுன் என்றுதான் தோன்றியது. இப்போது வருஷத்தில் மும்மாதிரி பெய்தால் ஆச்சரியப்படவேண்டியது. இல்லா விட்டால் அவசியம் இல்லாத சமயத்தில் அகாலத்தில் மழை பெய்தால் நன்மைக்குப் பதில் கெடுதி விளையக் கூடிய சமயத்தில் – மழை கொட்டியது. 

உலகில் நல்லவர்களே இல்லாமல் போய்விட்டார்கள் என்று தான் அர்த்தமா இதற்கு? 

ஒருவர் இருந்தாலும் போதும் என்று பாட்டுக் கூறியது. பாட்டுகளும் கவிகளும் கூறியவை எல்லாமே பொய்தானோ? 

தென்னண்டைப் பக்கத்து ஜன்னல் வழியாகத் தென்னையும் கமுகும் இலவ மரமும் தெரிந்தன. 

சிவராமையர் வீட்டுக் கொல்லையிலே எல்லாவிதமான கறிகாய்ச் செடிகளும் புஷ்பச்செடிகளும் பழமரங்களும் வேறுபல மரங்களும் வைத்துப் பயிரிட்டிருந்தார்கள். அதைத் தாண்டிப் படுகை; காவேரி நதியைத் தொடுகிற வரையில் இடம் இருந்தது. 

மாமி மத்தியானமே சொன்னாள். “மருமான் நீ வந்திருக்க யேன்னு மாமா இன்னிக்குக் கொல்லை கொத்தப்போகவில்லை. இல்லா விட்டால் காபி சாப்பிட்டதும் சாப்பிடாததுமாகத் தலையில் முண்டாசை வரிந்துக் கட்டிக்கொண்டு கிளம்பிவிட மாட்டாரா? கொல்லையில் அவர் நட்ட செடியில் ஒரு வெண்டைக்காய், ஒரு தக்காளி, ஒரு கத்தரிக்காய் காய்த்து விட்டால் போதுமே! அதற்குப் பிறகு அவர், ‘பெண்டாட்டி வேண்டாம், பிள்ளை வேண்டாம், பேரன் பேத்திகள் வேண்டாம்!’ என்று சொல்லிவிட மாட்டாரா?” என்று. 

மாமா பதில் சொல்லாமல் இல்லை. “தோட்டம் வைத்துப் பயிர் செய்பவனுக்குத் தெரியும் அதனுடைய மேன்மை,உனக்கென்ன தெரியும்!” என்றார். 

மூர்த்தி குறுகிட்டான்: “மாமிக்கு அது பற்றி எதுவும் தெரியாது என்று சொல்றது தப்பு மாமா. பேரன் பேத்தி எடுத்து, வளர்த்து எண்ணெய் தேய்த்து, உண்ணக் கொடுத்துச் சீராட்டித் தாலாட்டித் தூங்கப் பண்ணுகிற பொம்மனாட்டிக்குத் தோட்டக்கலைத் தத்துவம் தெரியாதுன்னு நீங்கள் சொல்றது சரியில்லை” என்றான். 

மாமி சிரித்தாள்: ” மருமான் பத்து விஷயமும் தெரிஞ்சவன்தான்” என்றாள். 

படுக்கையிலிருந்து தூங்க முடியாமல் புரண்டு கொண்டிருக்கும்போது இது ஞாபகம் வந்தது மூர்த்திக்கு. 

அதைத் தொடர்ந்து மனக்குரங்கு வேறு ஒரு ஞாபகத்தை, ஒரு சிந்தனையை அவன் மனத்தில் தட்டி எழுப்பியது. 

கல்யாணம் செய்து கொண்டு விடுகிறேன் என்று சம்மதித்த அவன் பெண்மை என்கிற புதிருக்குப் புதியவன் அல்ல. 

ஜர்மனியில் அவனுடைய கலாசாலைப் படிப்புத்தான் பூர்த்தி யுறவில்லையே தவிர, மற்றப் படிப்புகளெல்லாம் பூர்த்தியாகிவிட்டன. 

சாதாரணமான ஆண் பெண் உறவு வரையில் உள்ள எல்லாவகை உறவுகளிலும் ஆராய்ச்சி செய்யச் சந்தர்ப்பம் கிடைத்தபோது அவன் தவறியதில்லை. 

முழுமனத்துடனும் தேடிக்கொண்டுபோய் அவன் இதிலெல்லாம் ஈடுபட்டான் என்று சொல்ல முடியாது, நண்பர்கள், 

சந்தர்ப்ப விசேஷங்கள் இவை உதவி செய்தபோது ஈடுபட்டான், அவ்வளவுதான். 

அவன் மிகவும் சாதாரணமான ஆண்மையும் ஆண் மனோபாவமும் படைத்தவன். அறியாப்பருவத்திலே கனவுகள் கண்டவன்; பெண்மையையும் பெண்மையின் ரகசியங்களையும் பற்றி. அவன் ஜர்மனிக்குக் கிளம்பும் முன்னரே சென்னையிலே தான் குடியிருந்த வீட்டின் முப்பத்தைந்து வயசு அம்மாளின் ஜோக்குக்குப் பாத்திரமாகி இரண்டு மாசங்கள் வள்ளிசாக அவளுடைய காமத்தின் கைப்பாவையாக இருந்தவன். அப்போது அவனுக்கு வயசு பதினாறு அல்லது பதினேழு தான் இருக்கும். 

அவளுடைய, வயசாகிக்கொண்டிருந்த காமம் பயங்கரமான ரூபம் எடுத்து வருகிற சமயத்திலே தப்பித்துக்கொண்டு ஜர்மனிக்குக் கிளம்பி விட்டான் மூர்த்தி. 

ஜர்மனியில் அவனுடைய அநுபவங்களைப் பற்றிச் சொல்லி மாளாது. மாணவனாகவும் படை வீரனாகவும் அவன் பெண்ணுறவின் சகல அம்சங்களையும் அநுபவித்தவன். 

ஒரு ஜர்மானியப் பெண்ணைக் கல்யாணம் செய்து கொண்டு ஹிட்லர் ஸ்தாபித்த ஸ்வர்க்கத்திலே இருந்து விட வேண்டும் என்பதுதான் அவனுடைய ஆசை. பெண்ணையும் தேடிக் கொண்டான். ஆனால் அந்தப் பெண் அவனுடைய சக மாணவி. அவனைக் கல்யாணம் செய்து கொள்ள மறுத்து விட்டாள். 

ஏதோ இந்தியனுடன் பொழுது போக்காக ஒரு நாள். இரண்டு நாள், ஒரு மாசம் இரண்டு மாசங்கூட உடல் உறவு கொள்ள அவள் ஆட்சேபிக்கவில்லை. ஆனால் அவனைக் கல்யாணம் செய்து கொள்ள அவள் துணியவில்லை; விரும்பவில்லை. 

இந்தியாவில் ஆண் பெண் உறவின் புனிதத்தையும் புனித மின்மையும் பக்கத்தில் பக்கத்தில் பார்த்து அநுபவித்தவன் அவன். 

ஆண் பெண் உறவுப்பற்றி அவன் சிந்தனைகள் தெளியத் தொடங்கின. 

உலகில், மனித சமூகத்திலே குடும்பம் என்கிற கொள்கை எவ்வளவு மகத்தான ஸ்தானம் வகிக்கிறது என்பதை அவன் சிந்தித்து அறிந்து கொண்டான். 

குடும்பம் அடிப்படையில் ஆண் பெண் உறவு என்கிற உண்மையில்தான் திளைக்கிறது; கிளைத்துத் தழைக்கிறது. 

ஜப்பானில் அவன் அநுபவங்கள் விரிந்தன. மலேயாவிலும் பர்மாவிலும் அவனுக்குச் சொந்தமாகவும், பிறர் விஷயத்தில் கவனிக்கவுமாக ஏராளமான அநுபவங்கள் கிடைத்தன. 

சென்னையில் தனக்குக் கன்னி கழித்துவிட்ட அந்த ஸ்திரீயை ஒரு நாள் – வேறு ஒன்றும் வேலை இல்லாத சமயத்தில் தேடிக் கொண்டு போனான். ஆசையுடன் அல்ல; ‘அவள் இத்தனை வருஷங்களில் கிழவியாக இருப்பாள். பார்க்க வேண்டும்; அந்தப் பழைய அநுபவம் இப்போது எப்படி மனசில் உருவம் எடுக்கிறது; பார்க்கலாம்’ என்று. 

ஆனால் அந்தக் குடும்பம் சென்னையை விட்டுப் போய்விட்டதாகத் தெரிந்ததே தவிர, எப்போது போயிற்று எங்கே போயிற்று என்று விசாரித்து அறிந்துகொள்ளக் கூடவில்லை. 

அதற்குப் பிறகு இரண்டு வருஷங்கள் வரையில் அவனுக்குப் பெண் என்கிற ஞாபகமே வரவில்லை! இங்கே சாத்தனூர் வந்து, அன்று மாமி ஞாபகப்படுத்தும் வரையில். 

அவன் ஏன் கல்யாணம் செய்துகொண்டு சாதாரண மனிதர்களிடையே சாதாரண மனிதனாக வாழ்க்கை நடத்தக் கூடாது? 

சிவராமையரையும் மாமியையும் பார்த்த பிறகு அதுதான் சிறந்த வாழ்க்கை; அதுபோன்ற குடும்ப வாழ்க்கையைத் தானும் நடத்த வேண்டும் என்றுதான் அவனுக்குத் தோன்றியது. 

சாத்தனூர் சர்வமானிய அக்கிரகாரத்தின் காற்றிலேயே குடும்பம் என்கிற கொள்கையின் மணம் வீசுவதுபோல அவனுக்குத் தோன்றியது. 

அந்த வாடை அவன்மேல் ப்ட்டுவிட்டது. மங்களம் என்கிற பெண் கடைக்கண் வலை வீசி அவனைப் பிடித்துவிட்டாள். அவன் இனித் தப்புவது சிரமம்! 

அவன் மங்களத்தின் கடைக்கண் வீசிய வலையிலிருந்து தப்ப விரும்பவும் இல்லை. 

மூர்த்தி தூங்கிவிட்டான். 

அத்தியாயம்-23 

அவன் விழித்தெழும்போது மணி நாலரைக்குமேல் ஆகி விட்டது. 

அப்படியும் தானாகத் தூக்கம் கலைந்து விழித்துக்கொள்ள வில்லை அவன். யாரோ எழுப்பித்தான் எழுந்தான். 

“காபி தயாராகிவிட்டது” என்று மாமி வந்து எழுப்பினாள். நல்ல காபியாகக் கொடுத்தாள். அதைச் சாப்பிட்டு விட்டுக் கீழே இறங்கி வந்தான் மூர்த்தி. 

கூடத்திலோ, சமையல் அறையிலோ மங்களத்தைக் காணவில்லை அவன் நாலா பக்கமும் கண்களை ஓட்டியதைக் கவனித்த அவன் மாமி சொன்னாள்: “யாரு, மங்களத்தைத் தேடறயா?” என்றாள் கேலியும் பரிவும் கலந்த குரலிலே. 

மூர்த்திக்கே வெட்கமாகப் போய்விட்டது. மாமி தெரிந்து கொள்ளும்படியாக இவ்வளவு அப்பட்டமாக மங்களத்தைத் தேடிவிட்டோமே என்று! 

இருந்தாலும் இந்த மாமிக்குத்தான் எவ்வளவு அறிவு இருந்தது? அட்டா! குடும்பத்தை நிர்வகிப்பதிலே அவள்தான் எத்தனை வித்தைகளையும் எத்தனை கலைகளையும் கற்றிருந்தாள்! 

“இல்லை..” என்று தொடங்கினான் மூர்த்தி. 

“நிஜத்தை ஒப்புக்கோயேன், மங்களத்தைத்தான் தேடினேன்னு. அதிலே என்ன தப்பு?” என்றாள் மாமி. 

“ஆமாம். அப்படித்தான் வச்சுக்கோயேன் மாமி, அவள் எங்கே?” என்றான் மூர்த்தி. 

கலகலவென்று சிரித்தாள் மாமி. பிறகு சொன்னாள்: “மூணாவது ஆத்துக்கு எல்லோருமாகப் போயிருக்கா; மங்களத்துக்கு அலங்காரம் பண்ணிண்டு வர. பாரேன்; இன்னும் அரை மணிக்கெல்லாம் வந்துடுவா! உனக்கே அவளை அடையாளம் தெரியாது; பாரேன்” என்றாள் மாமி. 

“அவளை என் மனைவியாக அடையாளம் தெரிஞ்சுக்கணும்னு தானே நான் அவளைக் கல்யாணம் பண்ணிக்கிறேன் என்று சொன்னேன். மங்களத்தை நான் மங்களமாகத் தெரிந்து கொள்ளாவிட்டால் எதற்காக நான் அவளைக் கல்யாணம் பண்ணிக்கொள்றதாம்?” என்றான் மூர்த்தி. 

அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்த மாமி, “அப்படி ஒன்றும் சுலபமாக ஒருத்தரை ஒருத்தர் தெரிஞ்சுகொண்டுவிட முடியாது” என்றாள். 

அதைக்கேட்டுக்கொண்டே, வாசல் பக்கத்திலிருந்து உள்ளே நுழைந்த சிவராைைமயர், “நிஜந்தாண்டா கிட்டா, ஒருத்தரை ஒருத்தர் மனுஷாள் சரிவரத் தெரிந்துகொள்றதுக்கே வருஷக்கணக்காக ஆயிடறது. இதோ பாரேன் – உன் மாமியும் நானும் எத்தனை வருஷமாச் சேர்ந்து குடித்தனம் நடத்தறோம்? அப்படியும் எனக்கு உன் மாமியை இன்னமும் சரியாகத் தெரிந்தபாடில்லையே!” என்றார். 

“ஆனால் எனக்கு உங்க மாமாவைச் சரியாகத் தெரியும்” என்றாள் மாமி. 

அவள் பெண்குலத்தில் பிறந்தவள். அவள் அப்படிச் சொன்னது தகும் என்று மூர்த்திக்குத் தோன்றியது. உலகில் பெண்களுக்கு மட்டும் மனிதர்களைத் தெரிந்துகொள்வதில் அசாதாரணமான, அலாதியான ஒரு சமர்த்தியம் இருப்பது போலத்தான் இருந்தது. 

சிவராமையர் சொன்னார்: “நான் தூங்கி எழுந்து வந்ததும் உன் மாமி ஒரு சமாசாரம் எனக்குச் சொன்னாள். எனக்குத் தூக்கிவாரிப் போட்டது.” 

“என்ன அது?” என்றான் மூர்த்தி, முகத்தைக் கவலை தெரிவிக் கிற பாவத்தில் வைத்துக்கொண்டு. 

“நல்ல சமாசாரந்தான்” என்றார் சிவராமையர். “நீ மங்களத்தைக் கல்யாணம் செய்துகொள்ளச் சம்மதித்து விட்டாய் என்று சொன்னாள்” என்றார். 

“உங்களுக்குத் தெரிந்தாப்லே சாப்பிடுகிறபோது பேசினது தானே அது?’ என்றான் மூர்த்தி. 

“அது சரி. பேச்சு அதேதான். நான் அதை விளையாட்டுப் பேச்சாக எடுத்துக் கொண்டேன்” என்றார் சிவராமையர். 

“எது நிஜம், எது கேலி என்று தெரியாத ஆம்பிள்ளையைக் கட்டிண்டு நானும் நாற்பது வருஷமாக் குடித்தனம் பண்ணிப்பிட்டேன்” என்றாள் மாமி கேலியாக. 

“உங்களுக்கும் மாமிக்கும் ஆட்சேபம் இல்லையானால், மங்களத் தைக் கல்யாணம் பண்ணிக்க எனக்கும் ஆட்சேபம் இல்லை” என்றான் மூர்த்தி. 

“எங்களுக்கென்னடா ஆட்சேபம் கிட்டா. உன்னைப்போல வரன், தேடிண்டுபோனாலும் கிடைக்குமா?” என்றார் சிவராமையர். “என்னைப்போல மாப்பிள்ளைதான் தேவையா உங்களுக்கு என்பதுதானே பிரச்னை?’ 

“ஏதேது; மருமான் ரொம்ப சாமர்த்தியமாகவும் அடக்கமாகவும் பேசற மாதிரி தோன்றதே எனக்கு?” என்றாள் மாமி. “மங்களத்தைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு, ஏன் சொன்னோம் என்று தோன்றிவிட்டதா உனக்கு?” என்றார் சிவராமையர். 

“அதெல்லாம் இல்லை மாமா. ‘ஊரெல்லாம் சுத்தினவன் கெட்டிக்காரன்னு’ நினைச்சுக் கொண்டிருக்கேள் நீங்க. பத்திரிகையிலே படமெல்லாம் வந்தது; பெரிய மனுஷன்தான்னு தீர்மானம் பண்ணிவிட்ட மாதிரி தோன்றது எனக்கு. உண்மை என்னவென்றால்.” தொடங்கிச் சற்றுத் தயங்கி நிறுத்தினான் மூர்த்தி. 

‘உன்னைப்பற்றி உண்மையை நீ தெரிஞ்சுண்ட வரையிலும் சொல்லு. கேட்கிறேன்” என்றார் சிவராமையர். 

“சுருக்கமாக இதுதான். இன்று, எனக்கு 29 ஆகிறதா வயசு, முப்பதா? இன்று வரையில் யாருடனும் ஒட்டாமல், யார் கிட்டவும் பிரியமும் அன்பும் இல்லாமலே காலந்தள்ளிவிட்டவன் நான். ஊரெல்லாம் சுற்றினேனே தவிர ஓரிடத்திலும் தங்கவில்லை. ஒரு பெரிய பேராகப் பத்திரிகைகளில் அடிபடுகிறதே தவிர ஒரு காசு சம்பாதிக்கக் கையாலாகாதவன் நான். இந்தியாவுக்கு நான் திரும்பிய நாள் முதல் இன்று வரை நானும் எவ்வளவோ விதங்களில் முயன்று பார்த்தாகிவிட்டது. எந்தப் பொறுப்பான வேலைக்கும் என்னை வைத்துக்கொள்ள யாரும் சம்மதிக்கிற மாதிரியே தெரியவில்லை.” 

மூர்த்தி சற்று நிறுத்திய சமயம் பார்த்துச் சிவராமையர் சொன்னார்: “காலம் சரியாக இல்லை. உனக்கு வேலை கிடைப்பதெல்லாம் தானே நடந்துவிடும். படிப்பும் அறிவும் இருக்கிறது.” 

“படிப்பும் போதாது; அறிவும் போதுமானது இருப்பதாகத் தெரியவில்லை” என்றான் மூர்த்தி, 

“சம்பாதிப்பது, சாப்பிடுவது எல்லாப் பொறுப்பும் ஏற்பட்டுவிட்ட பிறகு சரிவரவே நடந்துவிடும். அதில் ஒன்றும் சிரமம் இராது. மனசும் திடசித்தமும் இருந்தால் உன்னைப் போன்றவனுக்கு-” என்று சிவராமையர் சொல்லிக்கொண்டிருக்கும்போது மூர்த்தி குறுக்கிட்டான். 

“என் போன்றவன் என்றால் எப்படி, ஏன் என்று சொல்லத் தான் தொடங்கினேன். நீங்கள் நடுவில் ஏதோ குறுக்குப் பாய்ச்சிப் பேச்சை மாற்றிவிட்டீர்கள். விஷயம் இதுதான்; நான் காலேஜில் படிக்கும்போது என்ன செய்வது எப்படிச் செய்வது என்றெல்லாம் சிந்திப்பதே கிடையாது. இன்றைப்பாடு ஆச்சா என்பதுடன் எல்லாம் முடிந்துவிடும். நாளையைப் பற்றிய யோசனை நாளைக்கு. யாரோ ஒரு லெக்சரர் பிரியமாக இருந்தார். அவர் கூப்பிட்டார் என்பதற்காக, அவரை நம்பிக்கொண்டு நான் கிளம்பி விட்டேன். அங்கிருந்த வாழ்வே சதம் என்று நம்பி ஹிட்லர் பிரசாரத்துக்கு மனசைப் பறிகொடுத்தேன். நேதாஜி வந்ததும் அவர் வழியில் மனசு மாறியது. இப்போது சாத்தனூர் வந்த பிறகு சாத்தனூர் வாழ்வுதான் லட்சிய வாழ்வு என்று தோன்றுகிறது. என் லட்சியங்கள் திடம்படாமல் மாறுகின்றன. இன்றைய என் தீர்மானம் நாளை வரையில் நீடிக்குமா? அதை நோக்கி நான் செய்கிற முயற்சிகள் வெற்றி பெறுமா என்பதுதான் கேள்வி” என்றான் மூர்த்தி. 

இன்றைத் தீர்மானம் நாளைக்கு இராது என்றால் கிட்டாவுக்கு இன்றைக்கே மங்களத்தைக் கல்யாணம் செய்துவைத்து விட வேண்டியது தான். பிறகு தானாகவே பொறுப்பும் இந்தத் தீர்மானமும் நிலைக்க வழி செய்தாகிவிடுகிறது” என்றாள் மாமி. 

சிவராமையர் சொன்னார்: “அது ஒரு வழி; அல்லது பிறருடைய உதவியால் இதுதான் லட்சியம் என்று திடப்படுத்திக் கொள்வது இன்னும் நல்ல வழி. மங்களம் காத்திருப்பாள் என்கிற ஞாபகத்துடன் ஏற்பாடுகள் செய். கல்யாணத்துக்குத் தயார் செய்துகொள். ஒரு வருஷம் ஆகட்டுமே, மங்களத்துக்கு அப்படி ஒன்றும் வயசு ஆகிவிடவில்லை. காத்திருக்கலாம்” 

மூர்த்தி சொன்னான்: “அதைத்தான் நானும் சொன்னேன். ஒரு வருஷம் கழித்துக் கல்யாணம் செய்துகொள்கிறேன் என்று” 

“அது நியாயந்தான். ஆனால் இந்த ஒரு வருஷமும் இத்தனை நாளும் பண்ணிவந்தது போலச் சோதனைகள் செய்யக் கூடாது. அதாவது இந்த லட்சியத்தை விட்டுத் தாவி, இன்னொரு லட்சியத்தை மேற்கொள்ளலாம் என்று எண்ணக் கூடாது. அப்படி எண்ணத் தொடங்கினால், அத்துடன் போச்சு” என்றார் சிவராமையர். 

“தங்களுடைய ஆசீர்வாதம்.” 

“எங்களுடைய ஆசிர்வாதத்துக்கு என்ன? அது எப்பவும் இருக்கு. உனக்கும் மங்களத்துக்கும் அது எப்பவும் உண்டு. கோயிலுக்குப் போய் அர்ச்சனை செய்துண்டு வருவோம். குளிக்கறதானால் குளித்துவிட்டுக் கிளம்பு. ஆறு மணிக்குள் போய்விடலாம் கோயிலுக்கு” என்றாள் மாமி. 

“இன்று ராத்திரி எப்படியும் போட் மெயிலுக்குக் கிளம்பி விடறேன்” என்றான் மூர்த்தி. 

“அவசியம் போகணும்னு தோன்றினால் கிளம்பு” என்றார் சிவராமையர். 

“வந்தது வந்தாச்சு. இன்னும் நாலுநாள் இருந்துவிட்டுத் தான் போயேன்” என்றாள் மாமி. 

“இல்லை மாமி, இந்தக் கல்யாணப் பேச்சும் நிச்சயமும் இல்லாவிட்டால் ஒரு மாசங்கூட இருந்துவிட்டுப் போய் விடுவேன். இப்போது புதுசா ஒரு பொறுப்பு வந்துவிட்டது. போய், அவசரமாக ஏற்பாடுகளெல்லாம் செய்யணும் என்று தோன்றுகிறது” என்றான் மூர்த்தி. 

“ஒரு வருஷம் இருக்கே அதான்” என்றாள் மாமி. 

“நான் நினைக்கிறமாதிரியான ஏற்பாடுகளுக்கு ஒரு வருஷம் போதாமலும் இருக்கலாம்” என்றான் மூர்த்தி. 

“ஒரு வாரமே போரும்னாலும் போரும்” என்றார் சிவராமையர். 

“உண்மைதான்” என்று எண்ணிக்கொண்டே குளிக்கக் கிணற் றடிக்குப் போனான் மூர்த்தி. 

தெருப்பக்கத்தில் இருந்ததைவிடக் கொல்லைப்பக்கத்தில் குளுமையாக இருந்தது. மாலை வேளை என்பது மட்டும் அல்ல; கொல்லையில் கிணறும், கிணற்றைச் சுற்றிப் பாக்குமரங்களும் பார்ப்பதற்கு ரம்மியமாக இருந்தன. 

வெயிலே அவ்வளவாகத் தெரியவில்லை. கிணற்றடியில் ரோஜாச் செடிகளும் வேறு பல புஷ்பச் செடிகளும் பூத்துக் குலுங்கின. கிணற்றுக்கு அப்பால் ஒரு திராக்ஷைக்கொடி பயிராகி உயரத்தில் படர்ந்திருந்தது.ஒரு கொத்துத் திராக்ஷை தொங்கிக்கொண்டிருந்தது. அது இன்னும் பழுக்கவில்லை. இருந்தாலும் கை நீட்டி ஒன்றைப் பறித்துத் தின்னவேண்டும் என்றுதான் இருந்தது. மூர்த்தி பறித்து வாயில் போட்டுக் கொண்டான். 

ஆஹா! என்ன புளிப்பு! என்ன புளிப்பு! 

கொல்லையில் வைத்து மாமா பயிராக்கியிருந்த செடி கொடி மரங்களைப் பார்வையிட்டுக்கொண்டே சிறிது நேரம் நின்றான் மூர்த்தி, கொஞ்ச தூரம் போனான். பிறகு கோயிலுக்குப் போக நாழிகையாகிவிடும் என்று மாமி சொன்னது ஞாபகம் வந்தது. 

ஏழெட்டுக் குடம் ஜலம் இழுத்து விட்டுக்கொண்டு, துடைத்துக் கொண்டான். ஸ்நானம் பண்ணியது மனசுக்கு உல்லாசமாகத்தான் இருந்தது. 

இடுப்பில் துண்டைக் கட்டிக்கொண்டு உள்ளே போனான். புது வேஷ்டியைக் கையோடு எடுத்துவர மறந்துவிட்டான். 

கூடத்தில் ஏழெட்டுப் பெண்களுக்கு மத்தியில் சர்வாலங்கார பூஷிதையாகப் புதுப் புடைவை கட்டிக்கொண்டு உட்கார்ந்திருந்தது யார் என்று புரிய அவனுக்கு இரண்டு நிமிஷம் பிடித்தது. மங்களம் அழகியாக அப்போது தோன்றவில்லை அவனுக்கு; அலங்காரியாகத்தான் தோன்றினாள். 

ஒரு நிமிஷம் மெய்ம்மறந்தவனாகத் தன் அதிருஷ்டத்தை நினைத்து வியந்தவனாக மங்களத்தையே பார்த்துக்கொண்டு நின்று விட்டான். 

மாமியின் குரல் அவன் சிந்தனைகளைக் கலைத்தது. “கிட்டா, யாரோன்னு நினைக்காதே; மங்களந்தான்!” என்றாள் மாமி. 

கூடத்திலிருந்த மற்றப் பெண்களெல்லாம் சிரித்தார்கள். மங்களம் விறுக்கென்று எழுந்து சமையலறைக்குள் மறைந்து விட்டாள். மாமிக்கு என்ன பதில் சொல்லலாம் என்று சிறிது நேரம் யோசித்தவனாகத் தயங்கினான் மூர்த்தி, பிறகு பதில் சொல்லத் தேவையில்லை என்று எண்ணியவனாக மாடிக்குப் போய் விட்டான். 

அத்தியாயம்-24 

எவ்வளவு அவசரப்பட்டும் கோயிலுக்கு ஆறரை மணிக்குத்தான் போக முடிந்தது. 

போகும்போது அவர்களுடன் இலக்கியாசிரியன் சாமாவும் வந்தான். 

“மனிதனுக்குத் தெய்வம் என்ற சித்தம் உண்டாகியதைத் தான் மனித குலத்தின் முதல் வெற்றியாகக் கொண்டாட வேண்டும்” என்றான் சாமா 

“பல்வேறு ரூபங்களில், ரூபமில்லாத ரூபத்திலும், பல்வேறு சமயங்களில் பல்வேறு இடங்களில் கடவுள் தோன்றித் தோன்றி மனிதனை ஆட்டி வைத்திருக்கிறார்” என்றார் சிவராமையர். 

“அற்றுவிடுமா அடியோடு?” என்று கேட்டான் சாமா. 

“அற்றுவிட்டால் அன்று கலி முற்றி முடிந்துவிட்டது. பிறகு பிரளயமும் மீண்டும் சத்திய யுகமுந்தான் என்று நாம் தீர்மானித்துக் கொள்ளலாம்” என்றான் மூர்த்தி. 

சாத்தனூர் கோயிலைக் கவிகள் பாடியிருக்கிறார்கள். தலை முறைக்குப் பின் தலைமுறை என்று நூற்றுக்கணக்ான தலைமுறைகள் நல்லவர்களும் கெட்டவர்களும் வந்து நின்று கடவுளை பக்தியுடனும் கேலியாகவும் வரம் வேண்டியும் படாடோபமாகவும் அடக்கத்துடனும் நின்று தொழுதுபோன இடத்திலே நின்று மூர்த்தியும் தொழுதான். 

அவன் ஆதிகாலத்தில் கிறிஸ்தவன் ஆகிவிடவேண்டும் என்று எண்ணியது உண்டு. ஆனால் கிறிஸ்தவர்களின் பழக்க வழக்கங்களை அறிந்து கணித்துக்கொண்ட பின் அது நிரம்பவும் அற்பமான ஆசை என்று பட்டுவிட்டது அவனுக்கு. ஜர்மனியில் பல கோயில்களில் புகுந்து தொழுதிருக்கிறான். தத்துவாசிரியன் ஸ்பினோஸாவே தெய்வம் என்று அவன் எண்ணிய காலமும் உண்டு. 

சாத்தனூர் சுப்பிரமணிய ஸ்வாமி சந்நிதியிலே நின்று அவன் தொழும்போது, இதோ தெய்வம்; ஆசைகள் அபிலாஷைகள், ஏக்கங்கள், துக்கங்கள் இவற்றை மறந்து விட்டு, காரண காரியமில்லாமல் தொழுவோம்’ என்று தொழுதான். 

ஆராதனை நடந்துகொண்டிருக்கும்போது மங்களத்தின் ஞாபகம் உண்டாயிற்று. திரும்பித் திருட்டுத்தனமாகப் பார்த்தான். அவள் முகம் தூண்டிவிட்ட சுடர் விளக்குப்போலப் பிரகாசிக்க அவள் ஸ்வாமியையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு இருந்த தெய்வபக்தி தனக்கு இல்லையே என்று சிறிது வெட்கமாகக்கூட இருந்தது மூர்த்திக்கு. ஆனால் அவன் இப்படி நினைப்பதற்கும் மங்களம் அவனைத் திரும்பிப் பார்ப்பதற்கும் சரியாக இருந்தது. 

தீபாராதனை நடக்கிறது என்று மாமி ஞாபகப்படுத்த வேண்டி யிருந்தது மூர்த்திக்கு. 

ஆராதனையின் போதும், முந்தியும் பிந்தியும் சாமா ஏதோ பேசிக் கொண்டு வந்தான். வழக்கம்போல இருந்தால் மூர்த்தி அவற்றிற்கெல்லாம் சாங்கோபாங்கமாகப் பதில் சொல்லி வந்திருப்பான். சாமாவின் வார்த்தைகளுக்கெல்லாம் சிவராமையர்தான் பதில் சொன்னார். 

சாமா என்ன சொன்னான். சிவராமையர் என்ன பதில் சொன்னார் என்றுகூட மூர்த்தி கவனிக்கவில்லை. 

அவனுடைய மெளனமும் ஈடுபாடும் சிவராமையருக்குத் திருப்தி அளிப்பதாக இருந்தன. 

அத்தியாயம்-25 

இரவும் விருந்துதான். 

வீடு திரும்பும்போதே மணி ஏழரையாயிற்று. 

சாப்பிட்டு முடிக்கும்போது மூர்த்தி அசாதாரண மௌனம் சாதிப்பதைப் பார்த்து மாமி அவனைப் பேச்சுக்கு இழுக்கப் பார்த்தாள்; பலிக்கவில்லை. 

“ஏது, நேத்து வந்த கிட்டாமாதிரியில்லையே இது? யாரோ மேஜர் மூர்த்தி என்றார்களே, அதுமாதிரி இருக்கே!” என்றாள் மாமி. 

“இப்படி ஒரு கிட்டா” என்றார் சிவராமையர். 

“இருந்தாலும் கலகலப்பா இருக்கப்படாதோ? அதுவும் இன்னிக்கே ஊருக்குப் போறேன் என்கிறான்…” 

மூர்த்தி சொன்னான்: “இந்த ஒரு நாள் என் வாழ்விலேயே அதிர்ச்சி தந்துவிட்ட ஒரு நாள். நான் செய்வதில்லை என்று நினைத்துக் கொண்டிருந்த காரியங்களை எல்லாம் மாமியும் நீங்களுமாகச் சேர்ந்து செய்ய வைத்துவிட்டீர்கள். நான் என் பிற்கால வாழ்க்கையைப் பற்றிக் கட்டியிருந்த கோட்டைகள் எல்லாம் ஒரே நாளில் தகர்ந்துவிட்டன. எனக்குப் பேச நாவெழவில்லை. சிந்திக்கக்கூடத் தைரியம் வரவில்லை” என்றான் மூர்த்தி. 

“மங்களத்தை எண்ணி நீ அப்படியெல்லாம் பயப்பட வேண்டாம், கிட்டா! அவள் ரொம்பவும் சாது” என்றாள் மாமி சிரித்துக்கொண்டே. 

“பயமில்லை மாமி, இது பயமில்லை” 

“பக்தியாக்கும்!” என்றாள் மாமி. 

“பொறுப்பு” என்றார் சிவராமையர். 

பொறுப்பும் இருக்கக்கூடாது என்றுதான் முதலில் நினைக்கிறான். ‘ஒவ்வொருவனும் தனக்கு வாழ்வில் எவ்விதமான ஆனால் எப்படியோ ஒவ்வொருவன் தலையிலும் அவன் சுமக்கச் கூடிய அளவுக்குப் பொறுப்பு ஏற்பட்டுவிடுகிறது. ஏற்றப்படுகிற பொறுப்பைச் சகிக்கக் கூடிய அளவுக்கு மனிதன் தன்னைத் தயார் செய்து கொள்ள வேண்டியது அவசியந்தானே!” என்றான் மூர்த்தி. 

சாப்பிட்டுவிட்டு வெற்றிலை போட்டுக்கொண்டு கிளம்பினான் மூர்த்தி. வாசலில் குதிரை வண்டி வந்து நின்றது. போட்மெயில் கும்ப கோணத்தில்தான் நிற்கும். மணி எட்டு அடிக்கவில்லை, இன்னும். பெட்டி படுக்கையை எடுத்து வைக்கச் சொன்னான் மூர்த்தி, மாமா மாமி குழந்தைகளிடம் சொல்லிக் கொண்டான். 

“மங்களத்தையும் கூப்பிடு மாமி! அவளிடத்திலேயும் சொல்லி விட்டுப் போறேன்” என்றான். 

“அவள்கிட்ட சொல்லப்படாது. நீ சொல்கிறதெல்லாம் அவள் காதிலேயும் விழுந்துண்டுதான் இருக்கு. சமையல் அறைக் கதவுக்குப் பின்னாடிதான் இருக்கா” என்றாள் மாமி. 

“நான் நடுவில் இன்னும் பத்து நாளைக்குப் பின், இரண்டு நாள் இருக்கும்படியாக வறேன்.” 

“நானும் வரட்டுமா கிட்டா, கும்பகோணத்துக்கு?” என்றார் சிவராமையர். 

“வேண்டாம் மாமா” என்று கிளம்பினான் மூர்த்தி. “ஏதுக்கு?” என்றான். 

“மங்களம் கொடுத்தாள்” என்று அவள் தம்பி, மூர்த்தியிடம் ஒரு கடிதத்தைக் கொடுத்தான். 

“ஏண்டா தடிப்பயலே! மங்களம் ரகசியமாகக் கொடு என்று கொடுத்தால் நீ இப்படி இரைஞ்சு சொல்லி, அமர்க்களப் படுத்தறேயே!” என்று பையனைக் கோபித்துக் கொண்டாள் மாமி. 

கடிதத்தைப் படித்துப் பார்த்தான் மூர்த்தி. அதில் மணி மணியாக, ‘காத்துக்கொண்டிருப்பேள். மங்களம்’ என்று எழுதியிருந்தது. 

‘அடேயப்பா! இவளுக்குத்தான் என்ன துணிச்சல்!’ என்று எண்ணிக்கொண்டே மூர்த்தி வெளியே வந்தான். 

எல்லாரும் வெளியே வந்தார்கள். மூர்த்தியைக் குதிரை வண்டியில் ஏற்றிவிட. 

“வரட்டுமா?” என்று திரும்பினான் மூர்த்தி. 

ரேழிக்கு அப்பால் கையில் அரிக்கேன் லைட்டுடன் மங்களத்தின் உருவம் தெரிந்தது. 

“வறேன்” என்றான் மூர்த்தி. குதிரை வண்டியில் ஏறி உட்கார்ந்தான்.  

கோயிலில் இரண்டாம் கால பூஜை மணி அடித்தது.

வண்டி கிளம்பிற்று. 

(முற்றும்)

– ஒரு நாள் (நாவல்), முதற் பதிப்பு: 2004, கண்மணி கிரியேட்டிவ் வேவ்ஸ், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *