கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 17, 2023
பார்வையிட்டோர்: 7,588 
 
 

(1980ல் வெளியான தொடர்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 9-10 | அத்தியாயம் 11-12 | அத்தியாயம் 13-14

அத்தியாயம்-11

அன்பே! உன்
கடைக்கண் பார்யைக்கேனும்
விளக்க உரை
எழுதலாம் என்றால் –
காலம் போதாது போலிருக்கிறதே!
[வெங்கடேச ரவி – ‘இருட்டில் தொலைந்த ‘வெளிச்சங்கள்’]

ராஜீவ் ஏற்கனவே திருமணம் ஆனவரா? அவள் மனம் குழம்பியது: குமுறியது.

”ராஜீவ்! நீங்கள் என்னை இப்படி ஏமாற்றுவீர்கள் என்று நான் கனவிலும் எண்ணவில்லை! அப்படியானால், நான் உங்களுக்கு வெறும் விளையாட்டுப் பொருள்தானா? ஆத்மார்த்தமான காதல் என்று நான் நினைத்ததெல்லாம் என் கற்பனைதானா? உலகில் ஏமாந்துபோன பெண்கள் ஆயிரம் ஆயிரம், அவர்களில் நானும் ஒருத்தியா?” என்றுமனத்துக்குள் புலம்பினாள். வெந்தாள்.

கொதித்து எழுந்த ஆவேசத்தைக் கட்டுப் படுத்திக்கொள்ள முயன்று, ”நீங்கள் கல்யாணம் ஆகாதவர்னு தானே எல்லாருமே நினைக்கிறாங்க? நானும் அப்படித்தான் நம்பினேன். உங்களுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகியிருக்கிற விஷயத்தை ஏன் முதல்லேயே என்கிட்டச் சொல்லலை?” என்று வேதனை மிகுந்த குரலில் கேட்டாள்.

ராஜீவ் வேறு எங்கோ பார்த்தபடி. “சொல்ல வேண்டிய அவசியம் இல்லைன்று நான் நினைச்சதாலே” என்று பதில் அளித்தான்.

உஷாவுக்கு ஆத்திரம் பற்றிக்கொண்டு வந்தது. எவ்வளவு சாதாரணமாகச் சொல்லி விட்டான்! என்ன நெஞ்சழுத்தம் அவனுக்கு! சீறி எழுந்தாள்.

“சொல்ல வேண்டிய அவசியம் இல்லைன்னு நினைச்சீங்களா? அதுக்கு என்ன அர்த்தம்? உங்களுக்கு ஏற்கனவே ஒரு மனைவி இருக்கிறப்போ இங்கே எனக்கு என்ன வேலை?”

ராஜீவ் அவளைத் திரும்பிப் பார்த்தான், சோகத்துடன் அவன் உதடுகள் லேசாகத் துடித்தன.

திடீர் என்று ஒரு யோசனை தோன்றியது அவளுக்கு. ஒருவேளை அப்படியும் இருக்கலாமோ? அப்படித்தான் இருக்க வேண்டும்!

“உங்க மனைவி இறந்து போயிட்டாங்களா?” என்று கேட்டாள். அதற்கு ‘”தெரியாது” என்ற விநோதமான பதில் அவனிடமிருந்து வத்தது.

உஷாவுக்கு ஆத்திரமும் அழுகையும் எரிமலை வேகத்தோடு வெடித்துக் கொண்டு கிளம்பிற்று.

“போதும் உங்க விளையாட்டு! உங்களுக்குக் கல்யாணம் ஆகலைன்னு எல்வோரும் நினைக்கிறபோது கல்யாணம் ஆயிட்டதுங்கிறீங்க.. மனைவி உயிரோட இருக்காங்கனா செத்துட்டாங்களான்னு கேட்டா தெரியாதுங்கிறீங்க! உங்க விளையாட்டுக்கு நான்தானா அகப்பட்டேன்? உண்மையைச் சொல்லுங்க! எங்கே இருக்காங்க உங்க மனைவி?”

ராஜீவ் இன்னும் கொஞ்சம் விரிவாகப் புன்னகைத்தான். “உண்மையாவே எனக்குத் தெரியாது டார்விங்!” என்றான்.

இதற்கு மேல் உஷாவால் சகித்துக்கொள்ள முடியவில்லை. கோபமும், துக்கமும். ஏமாற்றமும் தொண்டையை அடைக்க, அழுதவாறே, “நான் போறேன்!” என்று வெளியேறத் திரும்பினாள்.

சடாரென்று ராஜீவ் சிறுத்தைப் புலியின் வேகத்துடன் பாய்ந்து அவளைத் தடுத்து நிறுத்தி, போக விடாமல் அவள் இரு தோள் களையும் பற்றிக் கொண்டான். ”உ.ஷா! ஸாரி டார்லிங், என்னை மன்னிச்சுடு. ஐ வாஸ் ஒன்லி டீஸிங் யூ!”

அவள் சற்றே சமாதானமடைந்தாள்.

”அப்போ, இவ்வளவு நேரமும் சினிமா வசனம்தான் பேசினீங்களா?” என்று சந்தேகம் முழுதும் தீராமல் கேட்டாள்.

”உஷா, இப்படி வந்து உட்காரு.” அரை மனத்தோடு அவன் பக்கத்தில் படுக்கையின் மீது அமர்ந்தாள்.

அவளுடைய கைகளைத் தன் கைகளில் எடுத்துக் கொண்டு, “ஐ’ம் ஸாரி மை லவ், நான் சொன்னது பொய்யில்லை. இருபது வருஷங்களுக்கு முன்னாலே எனக்குக் கல்யாணம் ஆனது உண்மை. ஆனா இப்போ நான் கல்யாணம் ஆனவன் இல்லை”

“மறுபடியும் என்ன குழப்புறீங்க?”

“ப்ளீஸ், டார்லிங்! நான் சொல்றதைக் கொஞ்சம் பொறுமையாக் கேளு. கல்யாணம் நடந்த ஒன்றரை வருஷத்துக்குள்ளே என் மனைவி என்னை விட்டுட்டுப் போயிட்டா. என்னை டைவோர்ஸ் பண்ணிட்டா. ஸோ, ஐ ஆம் ரியலி எ பேச்சலர். இப்போ புரியுதா?'”

ஒரு கணம் உஷா பேசாமல் இருந்தாள். பின்பு கண்களை மூடிக் கொண்டு, ஒரு நீண்ட பெருமூச்சு விட்டாள். “அப்பாடா! இப்போ தான் எனக்கு உயிரே திரும்பி வந்தது! எங்கே நீங்க….”

”உன்னை ஏமாத்திட்டேனோன்னு பயந்தியா?” என்று ராஜீவ் குறுக்கிட்டான்.

ஆமாம் என்பது போல் உஷா மௌனமாகத் தலையசைத்தாள். அவளுடைய முகத்தைத் தன் இரு கரங்களுக்கு நடுவே ஏந்திக்கொண்டு ராஜீவ் அவள் விழிகளுக்குள் ஆழமாகப் பார்த்தான்.

”உ ஷா, என்னை நம்பு, உன்னை ஒருபோதும் ஏமாத்த மாட்டேன். உன்னை ஏமாத்தினா, என்னை நானே ஏமாத்திக்கிட்ட மாதிரி. உனக்கு எந்த வகையிலேயும் துரோகம் செய்ய மாட்டேன். மனசாரக்கூட அப்படி நினைக்க மாட்டேன். நீ வேறு நான் வேறா? என் உயிருக்கு உயிரா, ரத்தத்தோட ரத்தமா என்னோட கலந்து போயிட்டே, உனக்கே தெரியாதா? டோன்ட் யூ நோ ஹவ் மச் ஐ லவ் யூ?”

கண்களில் கண்ணீர் ததும்ப, உ.ஷா சட்டென்று அவன் கழுத்தைத் தன் கைகளால் வளைத்துக் கொண்டு அவன் மார்பில் தனது முகத்தைப் புதைத்துக் கொண்டாள். கண்களை இறுக்கி மூடிக்கொண்டு,

”ஐ நோ. ஐ நோ. மை டார்லிங்!'” என்றாள்.

“ராஜீவ், நான் உங்களை எந்த அளவு நேசிக்கிறேங்கறதை என்னாலே வார்த்தைகளாலே அளந்து சொல்ல முடியல்லை. அதனாலேதான், உங்க வாழ்க்கையிலே இன்னொருத்தி இருக்காள் என்ற எண்ணத்தையே என்னாலே சகித்துக் கொள்ள முடியல்லை, பதறிப்போயிட்டேன். ராஜீவ், என்ன ஆனாலும் சரி, வேறு ஒரு பெண்ணோடு உங்களை என்னாலே பகிர்ந்து கொள்ள முடியாது. அது மட்டும் என்னாலே முடியவே முடியாது?”

அவள் தலை மீது ராஜீவ் முத்தமிட்டான்.

”அந்த நிலை உனக்கு வரவே வராது, அப்படி ஒரு சூழ்நிலையை என்றைக்குமே ஏற்படுத்த மாட்டேன். நீ யார் கூடவும் என்னைப் பகிர்ந்துகொள்ள வேண்டிய அவசியமே இல்லே உஷா, எதிர்காலத்திலும் இருக்காது. ஜ பிராமிஸ் யூ. இனிமேல் நான் உனக்கே சொந்தம்”.

ஆணித்தரமாக அழுத்தமாக, திடமாக அவன் கூறிய இந்த உறுதிமொழி, உஷாவின் நெஞ்சத்தில் வர்ணிக்க முடியாத பூரிப்பை உண்டாக்கியது. அவன் எண்ணத்தில் இருந்த உண்மை அவன் குரலில் தெளிவாகத் தொனித்தது.

இளமைக்கே உரித்தான மீளும் தன்மை யோடு. நிமிஷங்களுக்கு முன்பாகத் தான் அனுபவித்த உணர்ச்சிக் கொந்தளிப்பிலிருந்து மீண்டு, உஷா சடாரென்று நிமிர்ந்து உட்கார்ந்தாள்.

காதலனைப் பற்றிய எல்லா விவரங்களையும் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற பெண்களுக்கே இயல்பான ஆவலோடும் அக்கறையோடும். “உங்க மனைவி எப்போ உங்களை விவாகரத்துச் செய்தாங்க? ஏன் அப்படிச் செய்தாங்க?'” என்று கேட்டாள் உஷா.

ராஜீவ் எங்கோ தூரத்தில் எதையோ பார்த்தபடி விருப்பமில்லாமல் பதில் சொன்னான்:

”அதெல்லாம் ரொம்ப வருஷங்களுக்கு முன்னாலே நடந்தது உஷா. அப்போ நான் இன்னும் நடிகன் ஆகல்லே, நடிப்புத் துறைக்கு வரணுங்கிற எண்ணம்கூட அப்போ எனக்கு இருக்கலை. நான் சினிமா இன்டஸ்ட்ரீக்கு வருவதற்கு முன்னாலேயே கல்யாணம், விவாகரத்து – எல்லாமே முடிஞ்சு போச்சு. அதனாலேதான் நான் நடிகனாகப் பிரபலமடைஞ்ச பிறகு, எனக்கு முந்தி ஒரு கல்யாணம் ஆகியிருந்த விஷயமே யாருக்கும் தெரியல்லை. இதைப் பத்தி நானும் யார் கிட்டேயும் சொல்லலை. எந்தப் பத்திரிகை பேட்டியிலேயும் அதைப் பத்தி நான் பேசல. எதுக்காக அதைப் பத்திப் பேசணும்? என்னைப் பொறுத்த வரைக்கும் அது என் லைஃப்லே ஒரு க்ளோஸ்ட் சேப்டர், அவளுக்கும் எனக்கும் கல்யாணம் நடந்து ஒன்னரை வருஷம் கூடப் பூர்த்தி ஆகியிருக்கவில்லை, அதுக்கு மேலே என்னோட சேர்ந்து வாழ அவள் விரும்பலை. என்னை விட்டுடறதுன்னு அவளே முடிவு பண்ணா. விட்டுட்டுப் போயிட்டா”

“ஆனா ஏன்? என்ன நடந்தது? எதுக்காக விவாகரத்து வரைக்கும் போச்சு?” விடாப்பிடியாக உஷா வற்புறுத்தி மீண்டும் கேட்டாள்.

வேறு யாராவது இப்படி அவனிடம் அடம் பிடித்து அவன் அந்தரங்க விஷயங்களை அறிவதற்குக் குடைந்து குடைந்து கேள்விகள் கேட்டிருந்தால் நடப்பதே வேறாக இருந்திருக்கும். அது உஷாவுக்குத் தெரியாது. ஆனால், ராஜீவைப் பொறுத்தவரையில் அவள் வேறு யாராகவோ இருக்கவில்லையே, அவன் உயிருக்கு உயிரான உஷாதானே இப்படிக் கேட்டாள்? அவளுக்கு இல்லாத உரிமையா?

அவன் கண்களில் மின்னலாய் வீசிய கோபத்தை உஷா கவனித்தாள். ஒரு விநாடி பயந்து போனாள், கோபம் மறைந்து அவன் சிரித்ததும், அவள் மனம் ஆறுதல் அடைந்தது.

அவன் உட்கார்ந்திருந்த நாற்காலிக்கு முன்னால் மண்டியிட்டு, அவன் முழங்கால் களுக்கு மேல் தன் கைகளை ஊன்றி பதித்து, அவனை உருக வைக்கும் வகையில் புன்னகைத்துக் கெஞ்சினாள்.

“ப்ளீஸ், ராஜீவ், சொல்லுங்க.”

அன்புடன் அவள் கன்னத்தைக் கிள்ளினான். ”அவசியம் தெரிஞ்சுக்கத்தான் வேணுமா?”

“ஆமாம்!”

“ஏன்?”

“பிகாஸ், யூ ஆர் ஸச் எ வொண்டர்ஃபுல் மேன். உங்களை மாதிரி ஒருவரைக் கணவரா அடைய எந்தப் பெண்ணுமே கொடுத்து வச்சிருக்கணும். அப்படிப்பட்ட உங்களைக் கணவரா அடைஞ்சும். உங்க மனைவி உங்களை விட்டுட்டுப் போயிட்டாங்கன்னா, ஐ திங்க் ஷீ மஸ்ட் பீ ஏ வெரி ஃபூ லிஷ் வுமன், ஏன் அப்படி நடந்தது, அவங்க ஏன் அப்படி நடத்துக்கிட்டாங்கன்னு தெரிஞ்சுக்க ஆசைப் படறேன். நீங்களும் நானும் ஒண்ணுன்னு சொன்னீங்களே – அது உண்மையானா, நமக்குள்ளே எந்த ரகசியங்களும் இருக்கக் கூடாது இல்லையா? என்கிட்டச் சொன்னா என்ன?”

ராஜீவ் விரக்தியோடு சிரித்தான்.

“சொல்லலைன்னா நீ விடப் போறதாத் தெரியலையே!'”

“கரெக்ட்”

“சரி, சொல்றேன் கேளு”


எதிர்பார்ப்புடன் ஷா அவனையே உற்று ஆவலோடு பார்த்துக் கொண்டிருந்தாள். ராஜீவ் வாயைத்திறந்து பேச ஆரம்பித்தான்.

“ஒரே ஒரு ஊரிலே. ஒரே ஒரு ராஜா இருந்தாராம். ஒரே ஒரு ராஜாவுக்கு ஒரே ஒரு ரா….”

“ஓ ராஜீவ்! ஸ்டாப் இட்! யூ ஆர் இன் காரிஜிபில்” என்று அழாத குறையாக உஷா அலுத்துக் கொண்டாள். ராஜீவால் சிரிப்பை அடக்கிக் கொள்ள முடியவில்லை, ”இல்லை… பின்னக் குழந்தை பாட்டி கிட்டே ஏதோ பெரிய கதை கேக்கப் போற மாதிரி உன் எக்ஸ்பிரஷ்னைப் பார்த்ததும். எனக்கு டெம்டேஷன் தாங்கலை, அதான் இப்படி ஆரம்பிச்சேன்….” என்று மீண்டும் சிரிக்கஆரம்பித்தான்.

“ராஜீஸ்! பி சீரியஸ்! ராஜா ராணி கதையையா கேட்டேன்? உங்க சொந்தக் கதையைச் சொல்லுங்கன்னா! சொல்லப் போறீங்களா இல்லையா?”

சட்டென்று சிரிப்பு அடங்கி ராஜீவுடைய முகம் மாறியது. “நெஞ்சுலே என்னிக்கோ ஏற்பட்ட ஆழமான காயம். அது ஆற ரொம்ப நாளாச்சு. ஆறிப்போன தழும்பை அனாவசியமாக் கீறிப் புதுசாப் புண்ளை ஏற்படுத்த வேண்டாமேன்னு பார்க்கிறேன் – அவ்வளவுதான்” என்றான்.

அந்த வார்த்தைகளின் அடியில் உட்பிரவாகமாக ஓடிய சோகத்தை உஷா சட்டென்று கிரஹித்துக் கொண்டாள்.

“ராஜீவ், பழைய நினைவுகளைக் கிளறி நான் உங்களை வேதனைப்படுத்திட்டேன்னு நினைக்கிறேன். என்னை மன்னிச்சுடுங்க. ஐம் ஸாரி, நீங்க சொல்ல விரும்பாத விஷயங்களைச் சொல்லும்படி கட்டாயப் படுத்த எனக்கு என்ன உரிமை இருக்கு?” என்றாள்.

ராஜீவ் அன்பாக அவள் தலையை வருடி விட்டான். “அப்படிச் சொல்லாதே டார்லிங். உனக்கு என்கிட்டே இல்லாத உரிமைன்னு எதுவும் கிடையாது.”

உஷா நீர்க்கமாக அவனையே பார்த்தாள்.

“என்ன உஷா அப்படிப் பார்க்கறே?”

“ராஜீவ்! ஒரே ஒரு கேள்வி கேக்கறேன். அதுக்கு மட்டும் தயவு செய்து பதில் சொல்லுங்க”

‘“என்னம்மா?”

“ராஜீவ்…. உங்க மனைவி… டிட்யூ லவ் ஹர் வெரி மச்? அவங்களை ரொம்ப ஆழமாக் காதலிச்சிங்களா? அவங்க உங்களை விட்டுட்டுப் போயிட்டாங்களேங்கற துயரம் தாங்காமத்தான் நீங்க மறுபடியும் கல்யாணமே வேண்டாங்கிற முடிவுக்கு வந்தீங்களா?” என்று உஷா கேட்டாள்.

“நோ’தோ! மை காட்! உனக்கு எப்படி இந்த ஐடியா வந்தது?” என்று ஆச்சரியத்துடன் கேட்டான் அவன்.

”பின்னே ஏன் அதுக்கு அப்புறம் கல்யாணமே வேண்டாம்னு இருந்துட்டீங்க? தட் மீன்ஸ் யூ மஸ்ட் ஹேவ் லவ்ட் ஹர் வெரி டீப்லி”

ராஜீவ் சிரித்தான், பரிகாசமாக, ஆனால் அந்தப் பரிகாசம் உஷாவின் மீது அல்ல – அவன் மனைவியை நினைக்கையில் அந்தப்பரிகாசம் தோன்றியது. ”இல்லை டார்லிங். அவளை நான் காதலிக்கவே இல்லை, அது எங்க அப்பா அம்மா பார்த்து நிச்சயம் பண்ணினி கல்யாணம். ”

“உங்க அப்பா அம்மா எங்கே இருக்காங்க?”

“ரெண்டு பேருமே இறந்து போயிட்டாங்க”

“ஓ”

சிறிது நேரம் ஏதோ ஆழ்ந்த சித்தனையில் இருப்பவள் போல் உஷா மௌனமாகத் தரையைப் பார்த்தபடி இருந்தாள். ராஜீவ் அவள் சஞ்சலம் மிகுந்த தோற்றத்தைக் கவனித்தான். ஒரு தீர்மானத்துக்கு வந்தான். ”உஷா, நான் எல்லாத்தையும் விவரமாச் சொல்றேன். சொல்றதே தேவலைன்னு இப்போ எனக்குத் தோணுது. இல்லைன்னா. நீ அந்த அழகான தலைக்குள்ளே மூளையைப் போட்டுக் குழப்பிக்கிட்டு என்னென்ன கற்பனை பண்ணிக்குவியோ! நான் ஃபிராங்கா எல்லாத்தையும் சொல்றேன். என்னை நீ சரியாப் புரிஞ்சுக்கணும். அவ்வளவுதான்”

தலையை நிமிர்த்தி நேராக அவன் கண்களுக்குள் விழித்தாள், “நீங்க என்ன சொன்னாலும் உங்களைத் தவறா நினைக்கவே மாட்டேன் ராஜீவ்”.


அந்த வார்த்தைகள் ஏதோ தைரியமூட்டும் தூண்டுதலாக அமைந்தது போல், ராஜீவ் தனது கதையைச் சொல்ல ஆரம்பித்தான். அவன் பிறந்தது அருப்புக்கோட்டை கிராமத்தில், மதுரை அருகே. அவன் பெற்றோர்கள் ஓரளவு வசதி உள்ளவர்கள், ராஜீவுக்கு ஓர் அண்ணனும் இருந்தார். இரண்டு பிள்ளைகளையும் நன்றாகப் படிக்க வைக்க வேண்டுமென்று ராஜீவுடைய பெற்றோர்களுக்கு ஆசை. இரு பிள்ளைகளும் சென்னையில் படித்தார்கள்.

அண்ணன் மேல் படிப்புக்காக அமெரிக்கா சென்று, அங்கேயே நல்ல உத்தியோகம் பார்த்துக் கொண்டு, ஓர் அமெரிக்கப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு அங்கேயே தங்கிவிட்டார். அவர் தாய்நாடு திரும்பவே இல்லை. திரும்பும் உத்தேசமும் கிடையாதென்று திட்டவட்டமாகக் கடைசியாக ஒரு கடிதத்தின் வாயிலாகத் தெரிவித்துவிட்டு, அத்தோடு தன் குடும்பத்தாரோடு எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ள விரும்பாதவராக ஒரே அடியாக உறவைத் துண்டித்துக் கொண்டார். அமெரிக்காவில் தனது விலாசத்தைக் கூடக் கடிதத்தில் குறிப்பிடவில்லை.

இதனால் பெற்றோர்கள் மனம் உடைந்து போனார்கள். தம் ஆசைகளை யெல்லாம் இரண்டாவது மகனான ராஜீவ் மீதே பின்னிக் கொண்டார்கள். “எங்களைப் பொறுத்த வரைக்கும் அவன் செத்துப்போயிட்டான். எங்களுக்கு இனிமே ஒரே மகன்தான் இருக்கான்னு நினைச்சுக்கிறேம். நீயும் எங்களை அழவைச்சு ஏமாத்திட்டுப் போவிடாதேப்பா!” என்று பெற்றோர் கண்ணீர் மல்க ராஜீவிடம் கெஞ்சினார்கள்.

அண்ணனின் போக்கும் நடத்தையும் ராஜீவுக்கு மிகுந்த வேதனையை உண்டாக்கிவிட் டது. “அண்ணன்தான் இப்படிப் பெற்ற தாய் தந்தையை மறந்து, ரத்த சம்பந்தத்தைக்கூட தூக்கி எறிந்து போய் விட்டார். நானாவது அப்பா, அம்மாவுக்கு நல்ல பிள்ளையாக இருந்து, அவர்கள் மனத்தை நோக வைக்காமல் இந்த வேதனையிலிருந்து அவர்கள் மீளும்படி நடந்து கொள்ள வேண்டும். முதல் பிள்ளையை இழந்த அவர்களுக்கு, இரண்டாவது பிள்ளையாகிய நான் அந்த நஷ்டத்துக்கு இரட்டை மடங்கு ஈடு செய்ய வேண்டும்” என்று தனக்குத்தானே மனத்துக்குள் சபதம் செய்து கொண்டான்.

சென்னையில் ஒரு பெரிய கம்பெனியில் ஜூனியர் ஸேல்ஸ் எக்ஸிக்யூடின் பதவியை ராஜீவ் அடைந்து, நன்றாகச் சம்பாதிக்கத் தொடங்கினான். லீவ் கிடைக்கும் போதெல்லாம் கிராமத்துக்குச் சென்று தாய் தந்தையருடன் சில நாட்களைக் கழிப்பான். அவர்களும் சில சமயம் மெட்ராஸுக்கு வந்து அவனுடன் சில நாட்கள் தங்குவார்கள்.

ராஜீவுக்கு ஜூனியர் எக்ஸிக்யூடிவ் வேலை ஊர்ஜிதம் ஆனதும். அவனுடைய பெற்றோர்கள் அவனுடைய திருமணத்தைப் பற்றித் தீவிரமாகப் பேச ஆரம்பித்தார்கள்.

அதே அருப்புக்கோட்டைக் கிராமத்தில் ஒரு மிராசுதார் இருந்தார். அவருக்கு ஒரே மகள் கமலா. பார்ப்பதற்கு அழகாகவே இருப்பாள். அவளையே ராஜீவுக்கு மணம் முடித்து வைக்க விரும்பினார்கள். கிராமத்துக்குப் பெற்றோரைப் பார்க்கப் போனபோது பலமுறை ராஜீல் அவளைப் பார்த்திருந்தான். அவளுடன் பேசியிருக்கவில்லை. ஆனால் பல சந்தர்ப்பங்களில் அவளைக் கண்டிருந்தான். கமலாவுடைய தந்தை மிராசுதாரும் இந்தச் சம்பந்தத்தை விரும்பி வரவேற்றார்.

பெற்றோர் விருப்பத்துக்குத் தடை சொல்ல ராஜீவ் விரும்பவில்லை. பெண்ணும் நன்றாக இருந்தாள். திருமணத்துக்கு அவனும் சம்மதம் தெரிவித்தான்.

ராஜீவுக்கும் கமலாவுக்கும் திருமணம் கிராமத்திலேயே நடந்தது. திருமணத்துக்குப் பிறகு கமலாவின் தந்தை ராஜீவுடன் தனியாகப் பேச வேண்டும் என்றார். அவனை ஓர் அறைக்குள் அழைத்துச் சென்று, மனம் விட்டுப் பேசினார்.

அத்தியாயம்-12

ஒரு பெண்ணுக்கு
தாய்வீடே போதுமென்றால்
தலைவனோடு
தலையணைச் சகவாசம்
தேவையில்லை…
-மு. மேத்தா – ‘கண்ணீர்ப் பூக்கள்’

அந்த மிராசுதார் பல ஆண்டுகளுக்கு முன் அதிகப் பெண் சபலம் உள்ளவராக இருந்தவராம். அவ்வப்போது ஒரு புதிய ஆசை நாயகியைத் தேர்ந்தெடுப்பார். நாள் முழுவதும் அவள் வீட்டிலேயே கிடப்பார். அவருடைய மனைவிக்கு (கமலாவின் தாயாருக்கு) அவருடைய நடத்தை ஆழ்ந்த வருத்தத்தை உண்டாக்கிற்று. கணவரின் போக்கை எண்ணி உள்ளம் நொந்து சதா சர்வகாலமும் கவலையாகக் காட்சி அளிப்பாள். அழுது கொண்டே இருப்பாள், அடிக்கடி, கணவனுக்கும் மனைவிக்கும் இதைக் குறித்து வீட்டில் சச்சரவு ஏற்படும். வீட்டுக்கு வந்தவுடன் அவள் ஏதாவது தட்டிக் கேட்பாள், அவர் கண்டபடி திட்டுவார். அடிப்பார். இதையெல்லாம் சிறுமியாகிய கமலா கவனித்துக் கொண்டே வந்தாள், தாயாரிடம் அளவற்ற பாசமுள்ள கமலாவுக்கு. “அப்பா எப்பொழுதும் அம்மாவை அழ வைக்கிறாரே! அம்மாவை இப்படிச் சித்திரவதை செய்து துன்புறுத்திக் கொண்டே இருக்கிறாரே!” என்ற எண்ணம் வேரூன்றிப் போக, தந்தையிடம் மனத்தில் ஒரு துவேஷத்தை வளர்த்துக்கொள்ள ஆரம்பித்தாள்.

கமலாவுக்குப் பதின்மூன்று வயது இருக்கும். ஓர் இரவு, மிராசுதார் அளவுக்கு மீறிக் குடி போதையில் புதிய ஆசைநாயகியை வீட்டுக்கே அழைத்து வந்துவிட்டார்.

“வெளியே நீங்க என்ன செய்தாலும் இத்தனை வருஷமாச் சகிச்சுக்கிட்டேன், இப்போ என் வீட்டுக்குள்ளேயே இன்னொருத்தியை அழைச்சுக்கிட்டு வந்துட்டீங்களே! இதை என்னாலே எப்படிப் பொறுத்துக்க முடியும்? நீங்க செய்யறது உங்களுக்கே நல்லா இருக்கா?” என்று அவர் மனைவி அழுது கொண்டே கேட்டாள்.

குடிபோதையில் இருந்த மிராசுதார், என்ன செய்கிறோம் என்று தமக்கே புரியாத நிலைவில் தம் மனைவியை அடித்து உதைத்து, வாய்க்கு வந்தபடியெல்லாம் இழிவாகத் திட்டிவிட்டார். எல்லாமே ஆசைநாயகியின் முன்னிலையிலேயே நடந்தது. கமலாவும் பயத்துபோன நிலையில் மறைவாக நின்று எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்தாள்.

கணவர் சொந்த வீட்டுக்குள்ளேயே ஆசை நாயகியை அழைத்து வந்ததும் இல்லாமல், அவள் எதிரில் தன்னை இப்படி அவமானப் படுத்திவிட்டாரே என்று எண்ணும்போது கமலாவின் தாயாரால் இந்தக் கொடுமையைச் சகித்துக் கொள்ள முடியவில்லை, அவமானம் தாங்காமல், அன்று இரவே தன் மீது மண் எண்ணெயை ஊற்றிக் கொண்டு தன்னையே எரித்துக் கொண்டாள்.

அப்போது கமலாவுக்கு வயது பதின்மூன்று. உயிரினும் மேலாக நேசித்த தனது தாயின் இந்தக் கோர முடிவு. கமலாவின் இதயத்தில் பழுக்கக் காய்ச்சிய இரும்பால் சூடு போட்ட மாதிரி அழியாத தழும்பை ஏற்படுத்தி விட்டது. அருமைத் தாயின் தற்கொலைக்குக் காரணமாக இருந்த மிருகத்தனமான நடத்தை கொண்ட தந்தையின் மீது கமலாவின் நெஞ்சினுள் துவேஷம் நெருப்பாகப் பற்றி எரியத் தொடங்கிற்று.

மனைவியின் தற்கொலை உண்டாக்கிய அதிர்ச்சியில் மிராசுதார் உண்மையாகவே மனம் வருந்தித் திருந்தி விட்டார். அதன் பிறகு தமது தீய வழக்கங்கள் அனைத்தையும் துறந்தார். கமலாவுக்கு ஒரு நல்ல தகப்பனாக இருந்து மகளின் நலனே இனி தம் வாழ்க்கையின் லட்சியமாக மேற்கொண்டார். தாயின் இழப்புக்குக் கமலாவுக்கு ஈடு செய்ய விரும்பினார்; மகளின் அன்பைப் பெறுவதற்கு ஆயிரம் முயற்சிகளைச் செய்தார் ஆனால் பலனில்லாமல் போய்விட்டது.

வெளிப்படையாகக் கமலா அதிகம் பேச மாட்டாள். ஆனால் மனத்துக்குள் தந்தை மீது அவளுக்கு இருந்த வெறுப்பு, துவேஷம், துளியும் தணியவில்லை. தணலாய் எரிந்து கொண்டே இருந்தது, நாளடைவில் தந்தை மீது இருந்த வெறுப்பு மொத்தமாக ஆண் வர்க்கத்தின் மீதே வெறுப்பாக மாறி விட்டது. ஆண்கள் என்றாலே மிருகங்கள் என்ற வெறுப்புணர்வை, துவேஷத்தைக் கமலா மனத்தில் வளர்த்துக் கொண்டாள். தன் வாழ்க்கையில் திருமணம் என்ற சொல்லுக்கே இடமில்லை என்று தானே முடிவு செய்தாள், மற்ற சாதாரண இளம் பெண்களைப்போல் சிரிப்பது, விளையாடுவது, உல்லாசமாக இருப்பது – எல்லாவற்றையும் தாயின் தற்கொலைக்குப் பின் விட்டுவிட்டாள். எப்போதும் நெஞ்சினுள் சுமையோடு. நீராத துயரத்தோடு. ஆண்கள் மீது வஞ்சம் தீர்த்துக் கொள்ள வேண்டு மென்ற தணியாத நெருப்பாக இதயத்தைச் சுட்டெரிக்கும் உணர்வோடு பெரியவளானாள்.

இதையெல்லாம் மிராசுதார் வருத்தத்துடன் உணர்ந்தார், கமலாவை ஒரு சாதாரணப் பெண்ணாக மாற்ற எத்தனையோ முயற்சிகள் செய்தார் – நடக்கவில்லை. இருப்பினும் தந்தை என்ற முறையில் அவர் கடமையைச் செய்ய விரும்பினார்.

கமலாவுக்கு வயது பதினெட்டு நிரம்பியதும், அவளுக்குத் திருமணம் முடித்து வைக்க மிராசுதார் தீர்மானித்தார். இதைக் குறித்து ராஜீவுடைய பெற்றோருடன் பேசி அவனுக்கே காலாவைக் கட்டி வைப்பதென்று முடிவு செய்தார். கமலா வெளியில் காண்பதற்கு அழகான பெண்ணாக மட்டும் தெரிந்தாள், அவளுக்குள் புதைந்து கிடக்கும் எண்ணங்களைப் பற்றி ராஜீவுடைய பெற்றோருக்கு எப்படித் தெரியும்?”

திருமணம் ஆனபிறகு கமலா மாறிவிடுவாள் என்று மிராசுதார் நம்பினார். ராஜீவுடன் அவள் திருமணம் நிச்சயிக்கப்பட்டதை மிராசுதார் அவளிடம் சொன்னதும் கல்யாணமே வேண்டாம் என்று கமலா அழுதாள். புலம்பினாள். எரிந்து விழுந்தாள். மன்றாடிக் கேட்டாள். ஓயாமல் தந்தையுடன் வாதாடினாள். சண்டை போட்டாள். ஒன்றும் பலிக்கவில்லை. “வயசுப் பெண்கள் எல்லோருமே இப்படித்தான் முதலில் சொல்வார்கள். திருமணம் முடிந்துவிட்டால், எல்லாம் சரியாகிவிடும்” என்று மிராசுதார் முடிவாகக் கூறிவிட்டார் – அப்படிவொரு நம்பிக்கையைத் தாமும் மனத்தில் வளர்த்துக்கொண்டிருந்தார்.

இதையெல்லாம் திருமணம் முடிந்த பிறகு, மீராகதார் ராஜீவிடம் சொன்னார். “மாப்பிள்ளை! என் பெண்னோட மனேபாவம் இப்படி ஆனதுக்கு நான்தான் காரணம், என்ன இருந்தாலும் அவ சின்னப் பொண்ணு. நீங்கதான் பொறுமையா அவளை வழிக்குக் கொண்டு வரணும், நடத்ததை யெல்லாம் ஒளிவு மறைவு இல்லாமல் சொல்லிவிட்டேன். ஆரம்பத்திலே அவ உங்க மனசு நோகும்படி நடத்துக்கிட்டாலும்,தயவு செஞ்சு அவகுற்றங்களை மன்னிச்சு அவகிட்டத் கொஞ்சம் மென்மையா நடந்து கொள்ளுங்க. பொறுமையாயிருந்தீங்கன்னா, சீக்கிரமே அவ சரி ஆயிடுவான்னு நம்பறேன். அவளுடைய வாழ்வு உங்க கையிலேதான் இருக்கு. அவளை உங்ககிட்டே ஒப்படைக்கிறேன், கமலா எனக்கு ஒரே குழந்தை, தயவு பண்ணி அவளைப் பத்திரமாப் பார்த்துக்கங்க” என்றார். மிராசுதார் உருக்கத்தோடு.


“உங்க மாமனார் அப்படிச் சொன்னதும் உங்களுக்கு எப்படி இருந்தது?” என்று உஷா இப்போது கேட்டாள்.

“ஆரம்பத்திலே நான் ஏமாற்றப்பட்டேங்குற எண்ணமே ஏற்படலை, உஷா. கமலாவோட கதையைக் கேட்டவுடனே, அவ மேலே எனக்கு முதல்லே அனுதாபம்தான் பிறந்தது. பாவம், இளம் வயசுலே அப்படிப்பட்ட கொடூரமான சூழ்நிலையிலே தாயை இழந்த ஒரு பெண், அப்படி ஆனதிலே ஆச்சரி யப்படறதுக்கு ஒண்ணுமில் லைன்னு நினைச்சேன். ரொம்ப ஸென்ஸிடிவ் கால், அவளை மென்மையா. பொறுமையோடு கையாண்டா அவளைச் சரிப்படுத்திவிட முடியும்னு நம்பினேன்” என்றான் ராஜீவ்.

“உம்…அப்புறம்?”

“நான் மெட்ராஸிலே வேலை பார்த்துக் கிட்டு இருந்தேன் இல்லையா? கல்யாணம் முடிஞ்சதும் கமலாவையும் அழைச்சிக்கிட்டு மெட்ராசுக்கு வந்தேன், இங்கே ஒரு அபார்ட்மென்ட் பில்டிங்குலே ஒரு சாதாரண ஃபீளாட்டை வாடகைக்கு எடுத்தேன். அங்கே புதுக் குடித்தனம் ஆரம்பிச்சோம்.”

ராஜீவ் மேலும் தன் கடந்த கால வாழ்கையை விவரித்தான். தொடக்கத்திலிருந்தே கமலா ஒரு வெறுப்புடனேயே அவனிடம் பழகினாள், அவனைப் பழி தீர்த்துக்கொள்ள வேண்டிய எதிரியைப் போலப் பாவித்தாள். அவளுக்குத் தாம்பத்திய வாழ்க்கை அறவே பிடிக்கவில்லை. இல்லற வாழ்வைத் தனக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டரையாகக் கருதினாள். அதிலிருந்து தப்ப வழியே இல்லை என்று அவள் நினைத்ததாலோ என்னவோ, தொட்டதற்கெல்லாம் கடிந்து கொண்டாள். மிக அற்பமான விஷயங்களுக்காக அவனுடன் கடுமையாகப் போராடுவாள், சச்சரவு செய்வாள்.

”என் வாழ்க்கையே ஒரு போர்க்களமாக மாறிவிட்டது உஷா, ஏன்தான் திருமணம் செய்து கொண்டேனோ. அதற்கு முன்பு நிம்மதியாக இருந்தேனே என்று ஒவ்வொரு நாளும் நினைத்தேன். கல்யாணத்துக்கு அப்புறம் என் வாழ்க்கை நரகமாகிவிட்டது. ஆயிரம் ஆசை எண்ணங்களோடு புதுசாக் கல்யாணம் பண்ணிக்கிட்ட ஒரு இளைஞனுக்கு இப்படி ஒரு அனுபவம் ஏற்பட்டால் எப்படி இருக்கும் சொல்லு? மனசாரச் சொல்றேன் – என் ஜன்ம விரோதிக்குக்கூட கமலா மாதிரி ஒரு மனைவி வாய்க்கணும்னு விரும்ப மாட்டேன்.

“இருந்தாலும் பொறுமையாகவே இருக்க முயற்சி பண்ணினேன். கமலாவோட அப்பா சொன்னதை மனசுலே வைச்சுக்கிட்டு, எல்லாத்தையும் பொறுத்துக்கிட்டேன், கமலா என்ன சொன்னாலும், என்ன செய்தாலும் நான் அவகிட்டக் கடுமையா நடந்துக்கவே மாட்டேன். ஆனா நானும் மனுஷன் தானே? அப்போ எனக்குச் சின்ன வயசு, எப்போதாவது நானும் பொறுமை இழந்து ஏதாவது கோபமாச் சொல்வேன். ரொம்பப் பொறுக்க முடியாமப் போனா வெளியே போயிடுவேன். கோபம் தணிஞ்சதுக்கு அப்புறம் வீட்டுக்குத் திரும்புவேன்”

”புவர் ராஜீவ்! ஹவ் யு மஸ்ட் ஹேவ் சஃப்பர்ட்!” என்றாள் உஷா அனுதாபத்தோடு.

“வெறும் வேதனை இல்லை – சித்திரவதை! மென்டல் டார்ச்சர்!” பழைய நினைவுகள் நெஞ்சுக்குள் அலைமோதவே ஒரு நிமிஷம் ராஜீவ் மௌனமாகிவிட்டான்.

“அப்புறம்?” மேலும் அவன் கதையைத் தொடர உஷா தூண்டிவிட்டாள். “அப்புறம் என்ன ஆச்சு?…

– தொடரும்

– உறவின் கைதிகள், கல்கி வார இதழில் (22-06-1980 – 26-10-1980) வெளியான தொடர்கதை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *