சுவருக்குள்ளே மறையும் படுக்கை!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 13, 2012
பார்வையிட்டோர்: 8,009 
 

கனடாவுக்கு வந்து இறங்கிய முதல் நாள் அவருடைய மருமகள் வத்ஸலா ஒரு பொய் சொன்னாள். அவள் எதற்காக சொன்னாள் என்பது இன்றும் மர்மமாகவே இருந்தது. யாரைக் காப்பாற்றுவதற்காகச் சொன்னாள். அல்லது யாரைப் பழிதீர்க்கச் சொன்னாள். அதுவும் காதலித்து கல்யாணம் செய்துகொண்ட தன் கணவனிடம், அவருடைய மகனிடம், சொல்லியிருக்கிறாள். அவருக்கு அது தெரியாது. நாலு வருடங்கள் கழித்து தற்செயலாகத்தான் அதைக் கண்டுபிடிப்பார்.

எல்லாமே விசித்திரமாக இருந்தது. கனடா விமான நிலையத்தில் அவரை அழைத்துப்போக மகன் வரவில்லை; மருமகள்தான் வந்திருந்தாள். மகன் வராததற்கு அவள் சொன்ன காரணமும் நம்பமுடியாததாக இருந்தது. கம்பனி விசயமாக அவசரமாக அடுத்த மாநிலம் போகவேண்டி இருந்ததாம். நாளைக் காலை வந்துவிடுவானாம். இந்தக் கணத்துக்காக அவர் பன்னிரண்டு வருடங்கள் அல்லவா காத்திருந்தார். வத்ஸலாவைக் கூர்ந்து கவனித்தார். முதன்முதலாக அவளைப் பார்க்கிறார். தலைமுடியை தூக்கி மேலே கட்டியிருந்தாள். அது ஒரு கடுமையான தோற்றத்தை அவளுக்கு கொடுத்தது. கையிலே மாட்டவேண்டிய ஒரு வளையத்தை காதிலே மாட்டியிருந்தாள். கூர்மையான நாடி. அவள் முகம் முழுக்க கீழ் நோக்கி இறங்கி ஒரு முனையில் சேர்ந்ததுபோல முக்கோண வடிவமாக இருந்தது.

அவள் பெரிய பேச்சுக்காரியும் அல்ல. அவர் சீட் பெல்ட்டை இழுத்துக் கட்டமுன்னரே காரை எடுத்தாள். ஆகப்பின்னால் ஆசனத்தை தள்ளிப்போட்டு கைக¨ளை மடிக்காமல் நீட்டிப்பிடித்து வாகனத்தை ஓட்டினாள். ஆறு வீதி நெடுஞ்சாலையில் அது வேகமாக ஓடியது. இரண்டு பக்கமும் தொழிற்சாலைகள் பச்சைப் புகையை கக்கின. பார்த்த பக்கமெல்லாம் வாகனங்கள் மனிதருக்கு சாத்தியப்படும் உச்சபட்ச வேகத்தில் ஒன்றையொன்று துரத்தின. கைப்பிடியை இறுகப் பற்றியபடி சீட் நுனியில் இருந்தார் ராஜநாதன். ஏதாவது கேட்டால் மட்டுமே வத்ஸலா பதில் சொன்னாள். பாதி பதில் காற்றில் அள்ளிப் போனது. திடீரென்று காரை ஓரத்தில் நிறுத்திவிட்டு வாந்தி எடுத்தாள். இவர் பதறியபடி என்ன என்ன என்றார். அவள் ஒன்றுமே பேசாமல் மறுபடியும் காரை எடுத்தாள்.

வீடு வந்து சேர்ந்தபோது இரவு பதினொரு மணி. நிலவறையில் அவருக்காக ஒரு சின்ன அறையை தயார்செய்து வைத்திருந்தார்கள். ஒரு சின்னப் படுக்கை. சின்ன மேசை அதற்குமேல் ஒரு சின்ன டிவி. சுவரில் சாத்திவைத்த ஒரு கதிரை; கயிற்றைப் பிடித்து இழுத்தால் எரியும் மின்விளக்கு, அவ்வளவுதான். அவருடைய மகன் காலையில் வந்துவிடுவான் என்று சொல்லிவிட்டு அவள் மறைந்துவிட்டாள். நெஞ்சிலும் வயிற்றிலும் அவருக்கு முடிச்சுக்கள் விழ ஆரம்பித்தன. வீட்டையும் தோட்டத்தையும் விட்டு விட்டு ஒரேயடியாக வந்திருக்கிறார். இந்த அறையில்தான் அவர் இனிமேல் வசிப்பார்; இங்கேதான் தூங்குவார்; இங்கேதான் சாவார். அதை நினைத்தபோது கிலி பிடித்தது. பேருக்குக்கூட சாப்பிட்டீங்களா என்று அவள் கேட்கவில்லையே என்று நினைத்தபோது துக்கம் பொங்கியது. இலங்கையிலிருந்து விமானத்தில் புறப்பட்டு, துபாயில் ஒரு மணி நேரம் இளைப்பாறி, அட்லாண்டிக் சமுத்திரத்தை ஒரே மூச்சில் கடந்து வந்த களைப்பில் அப்படியே தூங்கிவிட்டார். நெஞ்சுக்கு மேலே தொங்கும் கயிற்றை இழுத்து லைட்டை அணைக்கலாம் என்பதுகூட மறந்துவிட்டது.

காலையில் மகன் வந்தபோது அவர் கைப்பிடி வைத்த கதிரையின் ஓரங்களில் உடம்பு படாமல் உட்கார்ந்திருந்தார். குச்சிபோன்ற கால்கள். அவர் கன்னத்தில் பதிந்த தலையணை வரிகள்கூட இன்னும் அழியவில்லை. அவரை அந்தக் கோலத்தில் பார்த்தபோது மகனுக்கு என்னவோ செய்தது. அப்பா என்று கட்டிப்பிடித்து இரண்டு கன்னத்திலும் கொஞ்சினான். வத்ஸலா சிரித்துக்கொண்டு நின்றாள். அவன் பக்கத்தில் ஒட்டிக்கொண்டு நிற்கும்போது அவள் பூத்துக் குலுங்குவாள் என்பதையும், இல்லாதபோது வெடிப்பாள் என்பதையும் வரும் காலங்களில் அவர் கற்றுக் கொள்வார். இரவு சாப்பிட்டீங்களா அப்பா என்றான். இவர் சாப்பிட்டேனே என்றார். வத்ஸலா சிரிப்பு குறையாமல் பார்த்துக்கொண்டே நின்றது இவருடைய மனதுக்குள் திக்கென்றது.

அவருடைய பயிற்சி மகனிடம் ஆரம்பித்தது. எப்படி கணப்பு அடுப்பை இயக்குவது; எப்படி தொலைக்காட்சி சானல்களை மாற்றுவது; எப்படி கட்டிலை மடித்து வைப்பது. அந்தக் கட்டிலை மடித்து சுவருக்குள்ளே தள்ளிவிடலாம். மறுபடியும் வேண்டும்போது இழுத்துப் போட்டுகொள்ளலாம். வீட்டிலே அவர்களுக்கு உதவியாக கடையிலே போய் சாமான்கள் வாங்கி வருவார். புல் வெட்டுவார்; பனி தள்ளுவார். அருண் பிறந்தபோது ராஜநாதனுக்கு ஒரே மகிழ்ச்சி, தன்னால் உபயோகமாக இருக்க முடிகிறதே என்று. குழந்தைகள் காப்பகத்தில் அருணை சேர்த்தார்கள். ஒரு மணிக்குப் போய் குழந்தையை எடுத்துவந்து பால் கொடுத்து தூங்கவைப்பார். மூன்று மணிக்கு வத்ஸலா வேலையால் வந்து பொறுப்பேற்றுக் கொள்வாள். மாலையில் மகன் வந்துவிடுவான். இப்படி வாழ்க்கை நிதானமாகப் போய்க்கொண்டிருந்தது.

பக்கத்து வீட்டில் ஒரு சீனக்கிழவர் இருந்தார். நுனி நாக்கால் பல்லைத் தொட்டு உண்டாக்கும் வார்த்தைகளை அவரால் பேசமுடியாது ஆனால் கோடை காலங்களில் அழகான காய்கறித் தோட்டம் போடுவார். ராஜநாதன் யாழ்ப்பாணத்தில் வாழை, கத்தரி, தக்காளி, வெண்டைக்காய் என்று நிறைய பயிர் செய்தவர். கனடா மண்ணும் சுவாத்தியமும் அவருக்கு பழக்கமில்லை. சீனக்கிழவர் கொடுத்த தைரியத்திலும், புத்திமதியிலும் அவரும் மண்ணைக் கொத்தி பதப்படுத்தி காய்கறித் தோட்டம் போட்டார். ‘ஏனப்பா இந்தக் கஷ்டம்’ என்றான் மகன். வத்ஸலாவுக்கோ சுத்தமாகப் பிடிக்கவில்லை.

அவர் வந்த நாளிலிருந்து வத்ஸலா அவருக்கு புரியாத புதிராகவே இருந்தாள். முதல் நாள் சம்பவத்திலிருந்து ராஜநாதன் மகனிடம் எதையும் சொல்லமாட்டார் என்பதை சரியாக ஊகித்துக்கொண்டாள். அந்த வீடு எப்படி இயங்குகிறது, அதிலே அவருடைய மகனின் அங்கம் என்ன என்ற விசயம் அவருடைய மூளைக்குள் அகப்படக்கூடியதாக இல்லை. மகன் வீட்டில் இல்லாத சமயங்களை வெறுத்தார். கீழ் பற்களால் மேல் பற்களைக் கவ்விக்கொண்டு வத்ஸலா வெளிப்படும்போது இவர் நிலவறைக்குப் போய் பதுங்கிவிடுவார். சில நாட்கள் முன்புதான் வத்ஸலா செய்த காரியத்தை அவர் தற்செயலாகக் கண்டுபிடித்தார். ஆனால் ஏன் அப்படிச் செய்தாள் என்பதை மட்டும் அவரால் விளங்கிக்கொள்ள முடியவில்லை.

அவரிடம் அருணைப் பார்க்கச் சொல்லிவிட்டு மகனும் மருமகளும் ஒரு விருந்துக்கு புறப்பட்டார்கள். அப்பொழுது மகன், ‘வத்ஸலா, அப்பா வரும்போது வாங்கிக்கொண்டுவந்த அட்டியலைப் போட்டுக்கொண்டு வாரும்’ என்று சொன்னான். ‘அட்டியலா’ என்று இவர் வாயை திறக்க முன்னர் வத்ஸலா திரும்பி ஒரு பார்வை பார்த்தாள். அது அவருடைய நெஞ்சை துளைத்துக்கொண்டு போனது. வாயை பட்டென்று மூடிக்கொண்டார். அவள் ஒரு பச்சை நிற அட்டியலை அணிந்து, பச்சை நிற சேலையில், பச்சை நூல் ஒன்று பின்னால் இழுபட புறப்பட்டாள். அப்பொழுது தலையைப் பின்னுக்கு எறிந்து இவரை அர்த்தத்தோடு பார்த்தாள். புருசனுக்கு தெரியாமல் அட்டியல் வாங்கி அதை அவர் கொண்டுவந்ததென்று ஏன் கூறினாள் என்று அவர் குழம்பிப்போய் வெகு நேரம் அங்கேயே நின்றார்.

அடுத்து நடந்த சம்பவத்தில் அவருக்கு விடை கிடைத்தது. ஆனால் இன்னொரு கேள்வி உண்டானது. அருணுக்கு மூன்று வயது நடந்தது. வத்ஸலா சாப்பாடு தீத்திக்கொண்டிருந்த சமயம் மிஸஸ் ஜேம்ஸிடமிருந்து தொலைபேசி வந்தது. மிஸஸ் ஜேம்ஸ் என்றால் கடவுளுக்கு அடுத்தபடி. அவர்கள் பேசியபோதுதான் வத்ஸலா ரகஸ்யமாகச் சீட்டுப் போடுவது தெரிந்தது. அந்தக் காசில்தான் அட்டியல் வாங்கியிருக்கிறாள். ஆனால் எதற்காக இதை மகனிடம் இருந்து மறைக்க வேண்டும். காலநேரம் தெரியாமல் அருண் பசி பசியென்று விடாமல் அழுதான். வத்ஸலாவுக்கு தொலைபேசிப் பேச்சை தொடர முடியவில்லையே என்ற கோபம். அருணுடைய சாப்பாட்டை எடுத்து அப்படியே கொட்டிவிட்டாள். அவன் ஓவென்று கதறியதை அவரால் தாங்கமுடியவில்லை. ‘பச்சைப் பிள்ளையை ஏன் பட்டினி போடுறாய்’ என்று அவளுடைய முதுகிடம் சொன்னார். அவள் திரும்பி சிங்கம்போல பாய்ந்து வந்தபோது அடித்துவிடுவாள் என்றே பட்டது. அருணுடைய கழுவாத பிளேட்டை அவர் முகத்துக்கு முன்னே நீட்டி ‘வாயை மூடுங்கோ. உங்கள் புத்திமதியை உங்கள் பிள்¨ளையிடம் சொல்லுங்கோ; அல்லது மஞ்சள் கலர் பேப்பரில் அவருக்கு எழுதுங்கோ.’ இப்படிக் கத்தியபடியே அவருடைய முழங்கால்களுக்கிடையில் ஒடுங்கி நின்ற அருணை இழுத்துக்கொண்டு அறைக்குள்ளே போய்க் கதவைச் சாத்திக்கொண்டாள்.

ராஜநாதனுக்கு அப்போது கொஞ்சம் புரிந்தது. அவர்கள் காதலித்தபோது மகனுக்கு புத்திமதி சொல்லி நிறையக் கடிதங்கள் எழுதியிருந்தார். எல்லாம் மஞ்சள் பேப்பரிலே இருக்கும். என்ன மயக்கமோ அவருடைய மகன் அவர் சொல்லைக் கேட்காமல் வத்ஸலாவையே கட்டினான். அதைத்தான் அவள் சொல்லிக் காட்டுகிறாள் என்பது பளிங்குபோல தெரிந்தது. இந்தச் சம்பவத்தையும் அவர் மகனிடம் சொல்லவில்லை.

தோட்டத்தில் கத்தரி, தக்காளி, வெள்ளரிக்காய் மூன்றையும் பயிரிட்டிருந்தார். முதலில் காய்த்தது கத்தரிதான். உருண்டையான கத்தரிக்காய் அல்ல வழுவழுவென்ற நீண்ட கத்தரிக்காய். வதக்கி குழம்பு வைக்க அருமையாக இருக்கும். எதிர்பார்த்ததுபோலவே நல்ல விளைச்சல் ஆனால் எதிர்பாராமல் வத்ஸலாவின் உணவுத் தெரிவு மாறிவிட்டது. ஒருநாள் இவர் முற்றாத கத்தரிக்காயாகப் பார்த்து ஆய்ந்து கொண்டுவந்து சமையலறை மேசையில் வைத்தார். அங்கே ஏற்கனவே அதேமாதிரியான கத்தரிக்காய் குவிந்துபோய் கிடந்தது. கடையில் வாங்கியதுதான். இவர் பேசாமல் திரும்பிவிட்டார். அன்று இரவு அவர்கள் சாப்பிட்டது கடையில் வாங்கியதாகத்தான் இருக்கவேண்டும். அவருடைய கத்தரிக்காய்க்கு என்ன நடந்தது என்பதை அவரால் கடைசிவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

சரி, இது தற்செயலாக நடந்திருக்கலாம் என்று மறக்கப் பார்த்தார். ஆனால் இரண்டாவது சம்பவம் அதை உறுதிப் படுத்தியது. இப்பொழுது தக்காளியின் முறை. இது விசேஷமாக கனடாவில் மட்டுமே விளையும் ஒரு வகைத் தக்காளி. கறி வைப்பதற்கோ, வதக்குவதற்கோ, சாறு பிழிவதற்கோ உகந்தது அல்ல. சாலட் செய்வதற்கு மாத்திரம் ஏற்றது என்று சீனக் கிழவர் சொல்லியிருந்தார். சுப்பர்மார்க்கெட்டில் இந்த தக்காளியில் விலைச் சீட்டு ஒட்டி காம்புடனும் விற்பார்கள். இவருடைய தோட்டத்தில், தக்காளி ரத்தச் சிவப்பில் மாசு மருவில்லாமல் காய்த்திருந்தது. நல்லாகக் கனிந்த, ஆனால் தோல் இறுக்கம் குறையாத நாலு பழங்களை ஆய்ந்து வந்தார். சொல்லி வைத்தாற்போல சமையல் மேசையிலே அன்றும் நாலு தக்காளிப்பழங்கள் இருந்தன. அந்தப் பழங்களில் விலைச்சீட்டு ஒட்டியிருந்தது.

அன்று இரவு போசனத்தின்போது அவருடைய மகன் மூன்று நிமிடம் பல்லுக்கு வேலை கொடுக்கும் ஒரு பெரிய தக்காளித்துண்டை வாய்க்குள் திணித்தான். வத்ஸலா சாப்பிடும்போதும், அதற்கு முன்னரும், சாப்பிட்ட பிறகும் ஒரு துணியினால் வாயை ஒற்றிக்கொண்டிருந்தாள். அவள் விரல்களினால் சுட்டிக்காட்டுவது கிடையாது. கண் இமைகளை அடித்தபடி, முகத்தினால் சுட்டிக்காட்டி அவரை தக்காளி சாலட் சாப்பிடச் சொன்னாள். அவள் மனதுக்குள் சிரித்துக்கொண்டிருந்தது தெரிந்தது.

அவருடைய உபயோகத்தன்மை முடியமுன்னர், மகனிடம் வத்ஸலாவின் காரியங்களைச் சொல்லவேண்டும் என்று ராஜநாதன் நினைத்தார். உடனேயே, அவன் விவாகரத்து செய்துவிடுவானோ என்ற பயமும் பிடித்தது. அருணின் கதி என்னவாகும்? ஒரு முடிவுக்கும் அவரால் வரமுடியவில்லை.

அன்று ஒருவருக்கும் சொல்லாமல் அவர் தோட்டத்திலே காய்த்த வெள்ளரிப் பிஞ்சுகள் அத்தனையையும் பிடுங்கி அவருடைய நண்பர்களுக்கும், சீனக் கிழவருக்கும் அனுப்பிவைத்தார். அதிலே முக்கியமாக மிஸஸ் ஜேம்சுக்கு நாலு காய்கள் எடுத்துப்போய் கொடுத்திருந்தார். ஒரு நாள் பேசும்போது மிஸஸ் ஜேம்ஸ் வெள்ளரிப் பிஞ்சு தனக்கு பிடிக்கும் என்று கூறியிருந்தார். இதுபற்றி அவர் ஒருவருக்கும் சொல்லவுமில்லை; சமையலறை மேசையில் ஒரு பிஞ்சைக்கூட வைக்கவுமில்லை. காரணம் வத்ஸலாவுக்கு அவரை இன்னொருமுறை அவமானம் செய்வதால் கிட்டும் மகிழ்ச்சியை கொடுக்க மனம் இல்லாததுதான்.

அதிகாலையிலேயே வத்ஸலாவுக்கு அந்த தொலைபேசி அழைப்பு வந்தது. ராஜநாதன் நிலவறையில் படுக்கையில் இருந்தபடி அன்றைக்கு என்ன செய்யலாம் என்பதை யோசித்துக் கொண்டிருந்தார். வத்ஸலாவின் குரல் திடீரென்று தேனில் தடவியதுபோல இனிமையாக மாறியது. அடுத்த முனையில் மிஸஸ் ஜேம்ஸ் இருக்கவேண்டும். உற்றுக்கேட்டபோது ‘யேஸ் மிஸஸ் ஜேம்ஸ், யேஸ் மிஸஸ் ஜேம்ஸ்’ என்று வத்ஸலா குழைவது கேட்டது. ‘வெள்ளரிக்காய் பிஞ்சா? ஓமோம் நான் அனுப்பினதுதான். ……உங்களுக்கு பிடித்துக்கொண்டதா?…….இன்னும் நிறைய இருக்கிறதே…….அனுப்புகிறேன்……உடனே அனுப்புகிறேன்.’

முந்திய தினம் வெள்ளரிப்பிஞ்சுகளை ஆய்ந்தபிறகு தக்காளிச் செடிகளையும், வெள்ளரிக் கொடிகளையும் அவர் வெட்டிச் சாய்த்துவிட்டார். விரைவில் இலையுதிர் காலம் தொடங்கிவிடும் என்பதால் மண்ணைக் கொத்தி, செடிகளைப் புதைத்து, அடுத்த பருவத்துக்கு தயார் செய்திருந்தார். வரும் ஏப்ரலில் நல்ல பசளை கிடைக்கும்.

மேலேயிருந்து வத்ஸலா ‘மாமா, மாமா’ என்று அழைத்தாள். அவருக்கு தன் காதுகளை நம்பமுடியவில்லை. வழக்கம்போல தும்புக்கட்டு முனையால் தரையில் இடித்து அவரைக் கூப்பிடாதது ஆச்சரியமாயிருந்தது. இந்த நாலு வருடங்களில் மாமா என்று அவரை அழைப்பது இதுவே முதல் தடவை. மிஸஸ் ஜேம்சுடன் பேசியபோது மிச்சப்படுத்திய தேன் அவள் குரலில் இன்னமும் இருந்தது. ராஜநாதன் மேலே போனதும் ‘மாமா, மிஸஸ் ஜேம்சுக்கு இன்னும் நாலு வெள்ளரிப்பிஞ்சுகள் அனுப்பமுடியுமா?’ என்று கேட்பாள். அந்தக் காட்சியை கற்பனையில் கண்டு ரசித்தார். அவர் உதடுகளில் நாக்கிளிப்பூச்சி ஊர்ந்து வெளிவருவதுபோல ஒரு சிரிப்பு உண்டாகியது. மீண்டும் ‘மாமா’ என்ற குரல் அவசரமாக ஒலித்தது.

படுக்கையின்மீது கால்களை மடித்து அதற்குமேல் உட்கார்ந்திருந்தார் ராஜநாதன். மெதுவாக கால்களை அவிழ்த்து எழுந்து நின்றபோது சூரியனுடைய சதுரம் அவர் நடு நெஞ்சில் விழுந்தது. கதவு இன்னும் பொருத்தப்படாத நிலவறையின் தட்டைக் கூரை அவர் தலைக்கு மேலே நாலு அங்குலம் உயரத்தில் இருந்தது. உடம்பை எச்சரிக்கையாக முறிக்கவேண்டும். கைகளைத் தூக்க முடியாது. அன்றிரவு முழுக்க உண்டாக்கிய ஒரு வார்த்தை அவர் தொண்டைக்குழியில் இருந்தது. அது வெளியே வந்தால் ஒரு குடும்பம் நாசமாகிவிடும். அதை விழுங்கினார். படுக்கையை தட்டி, மடித்து தேர்ந்த அனுபவக்காரர்போல தள்ளினார். அது சில்லுகளில் ஓடி சுவரைக் கிழித்து உள்ளே போனது. சுவர் மறுபடியும் மூடிக்கொண்டது. படுக்கை ஒன்று அங்கே இருந்ததற்கான அடையாளம் இப்போது இல்லை.

– 28th மார்ச் 2007

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *