உயிர் தொடும் அமுதம் நீ!

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 4, 2024
பார்வையிட்டோர்: 3,151 
 

(2021ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 10-12 | அத்தியாயம் 13-15

அத்தியாயம்-13 

“இப்ப எதுக்கு திரும்பவும் கிராமத்துக்கு கூப்பிட்டிருக்காங்க. ஒவ்வொரு முறை போகும் போதும், இப்பெல்லாம் ஏதாவது பிரச்சனையோடு தான் திரும்பறோம். 

முதலில் இருந்த சந்தோஷம் எல்லாம் தொலைஞ்சு போச்சு”

புவனா சொல்ல, 

“அடுத்தவங்களையே குறை சொல்லாமல் அமைதியாக வா புவனா”

காரை ஒட்டியபடி கிரிதரன் சொல்கிறான். 

“எங்க அம்மா சொன்னாங்க. அந்த நந்தினி தன் இடத்தை விட்டு தரமாட்டா… அதனால் தான் அனாதை பிள்ளையை மகனாக தத்தெடுத்திருக்கான்னு… அது தான் உண்மை..” 

“சரி, அப்படியே இருக்கட்டும். நந்தினியை சொல்றியே.. இப்ப நானே தடம்மாறி, இன்னொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்திருந்தால்.. நீ உன் இடத்தை விட்டு தருவியா…”

கோபத்தில் கேட்க, 

“தாராளமாக விட்டுத் தருவேன். அந்த கேடு கெட்டவளாடு வாழுங்கன்னு சொல்லி, என் பிள்ளைகளை கூட்டிக்கிட்டு எங்கம்மா வீட்டுக்கு போயிடுவேன். இந்த புவனாவை நீங்க சரியா புரிஞ்சுக்கலை. அதனால் தான் இப்படி பேசறீங்க. 

அப்படியொரு ஒழுங்கீனம் உங்க கிட்டே இருந்து, யாராவது உங்களை தேடி வந்தால்… 

உங்களை தக்க வச்சுக்க போராட மாட்டேன். 

தூக்கியெறிஞ்சுட்டு போயிடுவேன்,” 

ஆக்ரோஷமாக புவனா சொல்ல, 

மனதில் சின்னதாக ஒரு நடுக்கம் வருகிறது. ‘கடவுளே வயசு காலத்தில் தடம்மாறி, ஒரு அப்பாவி பெண்ணை காதல்ங்கிற பேரில் ஏமாற்றி, வந்துட்டேன். என்னால் கற்பை இழந்த பெண், இப்போது எங்கே இருக்கிறாள், எப்படி இருக்கிறாள் எதுவும் தெரியாது. என்னை மன்னிச்சிடு இறைவா… தயவு செய்து அவள் எந்த காலத்திலும் என் வாழ்க்கையில் வராமல் பார்த்துக்க. இனி எந்த ஜென்மத்திலும், இந்த மாதிரி தப்பை செய்யமாட்டேன்’ மனம் வேண்டுகிறது. 

“என்ன பேச்சு மூச்சையே காணோம். உங்க வாழ்க்கையில் இது வரை வேறுயாருக்காவது இடம் கொடுத்திருந்தால் சொல்லிடுங்க” 

“என்ன புவனா இது. ஏன் இப்படியெல்லாம் பேசற. என் மனசிலிருப்பது நீ ஒருத்தி தான் போதுமா. இனி இப்படியெல்லாம் பேசாதே” 

மன்னிப்பு கேட்பது போல சொல்கிறான் கிரிதரன். 

அத்தியாயம்-14

காரிலிருந்து இறங்கிய புவனா, ஆச்சரியப்படுகிறாள். கல்யாண வீடு போல் வாழைமரம் கட்டி, வெளியே பந்தல் போட்டு மலர் அலங்காரம் பண்ணி அந்த கிராமத்து வீடு, கல்யாண மண்டபம் போல காட்சிதருகிறது. 

குழந்தைகளை அழைத்துக்கொண்டு உள்ளே வருகிறார்கள்.

“வாங்க, வாங்க” 

ஏற்கனவே வந்திருந்த நந்தினியும், ரகுவரனும் மலர்ந்த முகத்துடன் வரவேற்கிறார்கள். 

“அதிதி, அஜய் எப்படியிருக்கீங்க. பெரியம்மா கிட்டே வாங்க” 

குழந்தைகளை அருகில் அழைத்து கொஞ்ச, 

சண்முகமும், வைதேகியும் வர, அவர்கள் இருவர் கைகளையும் பிடித்த படி நடுவில் நடந்து வருகிறான் ஆதி. 

ஆச்சரியத்தில் விழி விரிய பார்க்கிறாள். 

‘எப்படி இந்த மாற்றம். என்ன தான் நடக்கிறது. 

அத்தையும், மாமாவும் மனசு மாறி விட்டார்களா… இந்த அனாதை சிறுவனை பேரனாக ஏற்றுக்கொண்டு விட்டார்களா.. எப்படி இதெல்லாம் நடந்தது….’ 

“என்ன திகைச்சு போய் நிக்கிறீங்க. எங்க மகனுக்காகவும், மருமகளுக்காகவும் எங்க மனசை மாத்திக்கிட்டோம். 

அவங்க சந்தோஷம் தான் எங்க சந்தோஷம். அந்த கடவுள் எங்க புத்தியை தெளியவச்சுட்டாரு. 

அஜய் போல, ஆதியும் எங்க பேரன். இதில் எந்த மாற்றமும் இல்லை.” 

“இன்றைக்கு சாயந்திரம் விருந்து வைத்து, என் பேரனை கிராமத்து ஜனங்களுக்கெல்லாம் அறிமுகப்படுத்தப் போறேன்” 

சண்முகம் பெருமிதம் பொங்க சொல்கிறார். 


உள்ளே தடபுடலாக விருந்து ஏற்பாடுகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. 

அண்ணனிடம் வருகிறான் கிரி. 

”ரகு, நீ ஆதியை உன் மகனாக தத்தெடுத்தது எங்களுக்கும் சந்தோஷம்தான். எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.அப்பா, ஏன் என்கிட்ட முகம் கொடுத்து பேசமாட்டேங்கறாருன்னு தெரியலை. நான் என்ன தப்பு செய்தேன்” 

“நாம் செய்யற எல்லா தப்புகளும் வெட்ட வெளிச்சமாக எல்லாருக்கும் தெரியறதில்லை. பல தப்புகளை நாம் மறைச்சுடறோம். உனக்குள் ஏதோ மன உறுத்தல், குற்ற உணர்வு இருக்குன்னு நினைக்கிறேன். அதான் இப்படி பேசற.” 

“அப்படியெல்லாம் இல்லை. சாதாரணமாக தான் கேட்டேன்.” 

அவன் குரல் தடுமாற, 

“பரவாயில்லை கிரி.. நானும் சாதாரணமாக தான் சொன்னேன். ஆதியை பார்த்தியா… அவனை உனக்கு பிடிச்சிருக்கா. அவனுக்கு நீ ஒரு நல்ல சித்தப்பாவாக இருக்கணும்”

“கட்டாயம் ரகு என்னவோ தெரியலை. அவன் முகத்தை பார்த்தா… எனக்கு வேறு யாரோவாக தெரியலை. நம் குடும்பத்தில் ஒருவன் போல தான் இருக்கான்” 

புன்சிரிப்போடு அவனை பார்த்தவன், 

“சரி வா போகலாம். எல்லாரும் வர்ற நேரமாச்சு.”

சொல்கிறான். 

அத்தியாயம்-15

ஆதி, அஜய் இருவருக்கும் ஒரேமாதிரி புதிதாக எடுத்த டிரஸ்ஸை போடுகிறாள் நந்தினி. 

“அக்கா ஆனாலும் உங்களுக்கு ரொம்ப மனசு. நாலு வயது சிறுவனை மகனாக சுவீகாரம் பண்ணிட்டீங்க… அத்தான் ரொம்ப நல்லவர். இரண்டாம் கல்யாணம் என்ற பேச்சுக்கே இடம் கொடுக்காமல், உங்களை தாயாக்கிட்டாரு” புவனா சொல்ல, 

“நீயும் இவனை உன் மகனாக பார்க்கணும் புவனா. ஆதி என்கிட்டே வந்தது பூர்வஜென்ம பந்தம்னு நம்பறேன். 

கடவுள் ஏதோ ஒரு காரணத்திற்காக தான், எனக்கு தாயாகும் பாக்கியத்தை தராமல்.. இவனை என் கிட்டே அனுப்பி வச்சுருக்காரு. இவனுக்கு நான் ஒரு நல்ல தாயாக இருப்பேன் புவனா” 

மனம் நெகிழ நந்தினி சொல்ல, 

“என்னையும் நீங்க மன்னிக்கனும் அக்கா. என் அம்மாவோடு சேர்ந்து, அத்தையின் மனசைமாற்றி, அத்தானுக்கு நான்தான் இரண்டாம் கல்யாணம் பண்ணி வைக்கும் படி சொன்னேன். 

ஆனால் ஒரு பெண்ணாக, என்னை அந்த இடத்தில் வைத்து பார்க்கும் போது… ஒரு பேச்சுக்கு அவர் இன்னொருத்தி என் வாழ்க்கையில் வந்தால் ஏத்துப்பியான்னு கேட்டாரு.. எனக்கு அப்படியொரு கோபமும், ஆத்திரமும் வந்தது. எந்த ஒரு பெண்ணும் தன் கணவனை பங்கு போட விரும்பமாட்டாள். 

குழந்தையில்லைங்கிற காரணத்துக்காக ஒரு பெண்ணை ஒதுக்குவது போன்ற இழிவான செயல் வேறு ஏதுமில்லை. என்னை மன்னிச்சுடுங்க அக்கா” 

அன்போடு அவளை தழுவுகிறாள் நந்தினி.

விருந்து உபசாரம் நடைபெறுகிறது. 

கிராமத்து ஜனங்கள், விதவிதமான பலகார வகைகளுடன் திருப்தியாக சாப்பிடுகிறார்கள். 

”ஐயாவுக்கு ரொம்ப பெரிய மனசு. கிராமத்து ஜனங்களை எல்லாம் அவர் உறவுகளாக நினைக்கிறாரு. பணமும், பணிவும் ஒரே இடத்தில் இருப்பது இவர் கிட்டே தான்” 

சாப்பிட்ட படி பேசிக் கொள்கிறார்கள். 

“இன்னைக்கு ஐயா வீட்டில் என்ன விசேஷம் தெரியுமா” 

“ஏன் தெரியாமல். ஏழுமலை தான் விபரமாக சொன்னானே… பெரியதம்பி அஞ்சு வருஷமாகியும் குழந்தை பாக்கியம் இல்லைன்னு, ஆசிரமத்திலிருந்து ஒரு பிள்ளையை தத்தெடுத்து இருக்காங்களாம். 

பேரனை எல்லாருக்கும் அறிமுகப்படுத்த தான் இந்த விருந்து”. 

“கொடுத்து வச்ச புள்ளை. இந்த வீட்டில் வந்து வாழ என்ன புண்ணியம் செய்ததோ.. அப்பன், ஆத்தா பெயர் தெரியாத பிள்ளைக்கு ஒரு அடையாளத்தை கொடுத்துட்டாங்க” 

“எல்லாருக்கும் வணக்கம். இந்த வீட்டில் எந்த நிகழ்ச்சி நடந்தாலும், நம்ப கிராமத்து ஜனங்களின் வாழ்த்துக்களோடு தான் நடக்கும். அதான் உங்களையெல்லாம் வரவழைச்சேன். 

இன்னைக்கு என் பெரிய மகனின் புதல்வனை, என் அருமை பேரனை உங்களுக்கெல்லாம் அறிமுகப்படுத்த போறேன்” சொன்ன சண்முகம். 

அங்கே வைதேகி, மகன்கள், மருமகள்களுடன் நிற்கும் பேரனை அழைக்கிறார். 

“ஆதி இங்கே வாப்பா” 

அவர் அழைக்க,

தன கைபிடித்து அருகில் நின்றிருக்கும் அதிதியை பார்த்தவன். 

“நீயும் வா அதிதி”

அவளை அழைக்க. 

“நீ போ ஆதி. தங்கச்சி இங்கே இருக்கட்டும் தாத்தா உன்னை தான் கூப்பிடுறாரு” 

புவனா அன்போடு சொல்கிறாள். 

சண்முகத்தின் அருகில் வர, 

“இங்கே வாப்பா. எல்லாரும் பாருங்க. இவன்தான் ஆதித்யா என் பேரன்” 

அவனை குனிந்து தூக்கிக் கொள்கிறார். 

“என் பெரிய மகனுக்கு ஐந்து வருடமாகியும் குழந்தை பிறக்கலை. கடவுள் இந்த ஆதி அவங்க மகனாக வளரணும்ங்கிறதுக்காக அவங்களுக்கு குழந்தையை கொடுக்கலை. ரத்த பந்தங்களால் மட்டும் தான் உறவுகள் உருவாகும்னு கிடையாது. அன்பு, பாசம், நேசம் இதெல்லாம் உறவுகள் உருவாக்க பாலமாக இருக்கும். இதோ இந்த ஆதி அனாதை குழந்தை தான். தாய், தந்தை அறியாதவன். இவனை போல எத்தனையோ குழந்தைகள்… அனாதையாக வளரும் சூழ்நிலை. 

“இது எதனால் தெரியுமா… அறிவு பூர்வமாக யோசிக்க தெரியாமல், வெறும் காமத்தை மட்டுமே பெரிதாக நினைத்து சில இளைஞர்களுக்கு ஏற்படும் காதல். இளம்பெண்களை ஏமாற்றி தங்கள் இச்சையை தீர்த்துக் கொண்டு விலகி விடுகிறார்கள். இவர்களால் கருவை தாங்கும் அந்த பெண் ஒரு கட்டத்தில் குழந்தையை அனாதை ஆசிரமத்தில் போட்டு விடுகிறாள் 

தகப்பன் பெயர் தெரியாமல் குழந்தையை வளர்க்க முடியுமா.. இப்ப சொல்லுங்க. இதை போல அனாதை குழந்தைகள் உருவாக, இந்த மனப்பான்மையுள்ள இளைஞர்களும் காரணம் தானே” அவர் கண்கள் அங்கே நின்றிருக்கும் கிரிதரனை பார்க்க அவன் தலை தானாக குனிகிறது. 

“தயவு செய்து இந்த காலத்து இளைஞர்களை கையெடுத்து கும்பிட்டு கேட்டுக் கொள்கிறேன். 

காதல் தப்புன்னு சொல்ல வரலை. காதலியுங்கள், அதற்கான தகுதியும், வயதும் வரும் வரை காத்திருங்க, இப்படி அறியாத வயதில் அபலை பெண்களின்வாழ்க்கையில் விளையாடதீங்க…”

சொன்னவர் கண் கலங்க ஆதியின் கன்னத்தில் முத்தமிடுகிறார்.

கூட்டத்தில் இருந்த ஏழுமலை, 

“ஐயா.. இந்த ஆதித்யா. உங்க பேரனுக்கு இனி எந்த குறையும் கிடையாது. அவனை பெத்தவங்களைவிட அன்போடு சீராட்ட உங்க மகன், மருமகள் இருக்காங்க. இந்த ஆதித்யா நம்ப கிராமத்துக்கே செல்லபிள்ளை” 

உணர்ச்சி வசப்பட்டு சொல்கிறான். 

நந்தினியும், ரகுவரனும், சண்முகம், வைதேகியின் அருகில் வந்து அவர்கள் காலில் விழ, அங்கு கூடியிருந்த ஜனங்கள் வாழ்த்து தெரிவிக்க, 

“வாங்க நாமும் அத்தை, மாமா கிட்டே ஆசிர்வாதம் வாங்கலாம்.” 

குழந்தைகளுடன், கிரிதரனையும் அழைத்துக்கொண்டு வருகிறாள் புவனா. 

இருவரும் காலில் விழுந்து வணங்க, 

“தீர்க்காயுசாக இருங்க” 

வாழ்த்துகிறார்கள், 

காலில் விழுந்து எடுத்தவன், 

“அப்பா என்னை மன்னிச்சுடுங்க, அடுத்த ஜென்மத்திலும் உங்க மகனாக பிறந்து, மனதளவில் கூட எந்த தப்பும் செய்யாதவனாக இருந்து, உங்களை பெருமை படுத்துவேன்பா” 

தன் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்கிறான். என்பதை உணர்ந்தவர் அவன் தோள் தட்டி சமாதானப்படுத்துகிறார். 

“சித்தப்பா, சித்தி, அதோ அந்த அங்கிள் நம்மை போட்டோ எடுக்கப் போறாரு எல்லாரும் சிரிங்க வரிசையாக நில்லுங்க” 

சொன்ன ஆதி, 

அதிதி, அஜய் பக்கத்தில் நிற்க, 

அம்மா, அப்பா அருகில் நிற்கும் ரகுவரன், நந்தினியை அன்போடு பார்க்கிறான். 

“இனி இந்த குடும்பத்தின் பெரிய மனுஷன் யார் தெரியுமா நந்தினி.. உன் மகன் தான். இப்பவே பாரு அதட்டலும், அதிகாரமுமாக சொல்கிறான்.” 

புன்சிரிப்போடு சொல்ல, 

“அவன் நம்ப குடும்ப வாரிசு இல்லையா. அதான் அப்பாவின் அன்பான குணமும், அக்கரையும், அதட்டலும் அவன் கிட்டே இருக்கு” 

கிரிதரன் சொல்ல, 

சண்முகம், ரகுவரனை பார்க்கிறார். 

அந்த பார்வையில், “கிரிதரனின் மகன், உன் மகனாக வளரப் போகிறான். அந்த ஒரு நிறைவிற்காக அவனை மன்னித்து விடுவோம் ரகு. 

இது நாம் குல தெய்வமாக கும்பிட வேண்டிய அந்த தேவதைக்கு தரும் பரிசு.” 

என்பதை சொல்லாமல் சொல்ல, அந்த இடத்தில் மகிழ்ச்சியும், சந்தோஷமும் பூத்துக் குலுங்குகிறது.. 

(முற்றும்)

– உயிர் தொடும் அமுதம் நீ!, தேவியின் கண்மணி இதழில் (03-11-2021) வெளியான நாவல்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *