அபூர்வ சகோதரிகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 5, 2024
பார்வையிட்டோர்: 1,662 
 
 

(1950ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

என் கண்களை நம்ப முடியவில்லை. ஆனால் எதிரிலிருந்த செய்தித்தாள் விளம்பரமோ மூவர்ண முகப்புடன் சுலோவின் புன்னகை தவழும் வதனத்தைத் தாங்கியபடி ‘இது நிஜம்’ என்றது. 

கண்கள் மேற்கொண்டு வேலை செய்யவில்லை. ஆனால் மனம் ஆரம்பித்துவிட்டது. பழைய எண்ணங்கள், பழைய நாட்கள் இவை புரண்டு வந்தன. அவற்றை எண்ணிப் பார்ப்பதில் இப்போது ஒரு திருப்தி ஏற்படுகிறது. மலையுச்சியை அடைந்தவன், தான் ஏறிவந்த வழியைப் வியப்பது போல! எவ்வளவோ கஷ்டங்களுக்குப் பிறகுதான் வாழ்வு செப்பனிடப்படுகிறது. காட்டை வெட்டிச் சமதரையாக்குவது போன்ற கடினமான வேலைதான் அது. ஆனால் காட்டை வெட்ட ஆரம்பிக்கும்போது, எவ்வளவு கஷ்டங்கள்! 

இப்போது நிம்மதியாக, கிராமத்தில் உட்கார்ந்திருக்கிறேன். அரை வயிற்றுக்குமேல் சாப்பாடு போடும் காணி நிலம் இருக்கிறது. மேல் செலவுக்கு ஒரு சிறு கடை ‘சுசீலா ஸ்டோர்ஸ்’ என்ற பெயருடன் ஊரின் பிரதான வீதியில் இருக்கிறது. இரண்டு வருஷங்களுக்கு முன்பு.. 


 
ஒரு ஞாயிற்றுக்கிழமை. பகல் வெந்து கொண்டிருந்தது. என் மனைவி லீலா என் தூக்கத்தைக் கலைக்க முயன்றாள். அது பலிக்காமல் போகவே கோபமாகத் தன் சிநேகிதியின் வீட்டுக்குப் போய்விட்டாள். முதல் நாள் சீட்டாட்டத்தில் இழந்த தொகையை மறுபடியும் எப்படியாவது அடைந்துவிடவேண்டும் என்பது என் திட்டம். மயிலாப்பூர் நண்பன் ‘புகையிலை ரங்கு’வின் வீட்டில்தான் கச்சேரி. இது எங்களுடைய வழக்கமான ‘புரோக்ராம்.’ 

சீட்டாட்டமும் நானும் நகமும், சதையும் போல ஆகிவிட்டதைக் கண்டு பொறாமைப்பட்டாள் லீலா. அவளுக்கு எவ்வளவோ ஆசைகள். சினிமா, டிராமா, பாட்டு! இவையில்ல விட்டால் இலவசக் காற்று வாங்க பிச்சாவது! இவைதான். நான் அநேகமாக லீவ் நாட்களில் அவள் ஆசையைப் பூர்த்திசெய்ய வீட்டில் தங்குவதில்லை. 

நாலு மணிக்கு அவள் திரும்பி வந்தாள்.

“காபி போட்டாயா?” என்று கேட்டேன்.

“இல்லை,” என்று வெடுக்கென்று பதில் வந்தது. 

“ஏன்?” 

“பால்காரன் வரலை”. 

“ஏன்? குழாயில் ஜலம் வரவில்லையா? ” என்று கேட்டுவிட்டு நான் புறப்பட்டேன். 

லீலா, வழக்கம்போல, “எங்கே போகிறீர்கள்?” என்று கேட்டாள். 

எனக்குக் கோபம் வந்துவிட்டது. “சட்! என்ன கேள்வி இது அபசகுனம் மாதிரி!” என்றேன். 

“அடேயப்பா, பெண் பார்க்கவா போகிறீர்கள்? அபசகுனம் மாதிரி! என்கிறீர்களே!” என்று கூறிச் சிரித்தாள் அவள். 

ஆரம்பத்திலேயே இப்படி ஒரு அபசகுனம் நேரிட்டால் அன்றைக்கு ஆட்டம் உருப்பட்டால் போலத்தான் என்பது என் கட்சி. ஆகவே கோபமாக, “அப்படித்தான் வைத்துக்கொள்ளேன்” என்று கூறிவிட்டு நடந்தேன். 

பலவித யோசனைகளுடன் டிராமில் ஏறிக் கொண்டேன். கூட்டம் அதிகம்தான். வேகமும் அதற்குமேல், ஆனால் அதற்காக யாரும் அதை விட்டுவிடுவதில்லையே! கிடைத்த இடத்தில் அமர்ந்திருந்தேன். ஆனால் புருஷ தர்மம் என்று ஒன்று இருக்கிறதே. அதன்படி அடுத்த ஸ்டாண்டில் ஏறிய ஸ்ரீமதிகளுக்கு இடத்தைக் காலிசெய்து கொடுத்தேன். 

காபி இல்லாத குறை இன்னும் மறையவில்லை. கோபம் சூடேறிக்கொண்டே தான் இருந்தது. டிராமில் நின்றுகொண்டு ஊசலாடுவது பெரிய வேதனையாய் இருக்கவே கோபமும் அதிகரிக்க ஆரம்பித்தது. பொதுவாக ஸ்திரீகளுக்கு இடம் விடுவது எனக்குப் பிடிப்பதில்லை. 

அகஸ்மாத்தாக நான் அந்தப் பெண் உட்கார்ந்திருந்த பக்கம் பார்த்தேன். என்ன ஆச்சரியம்! அவளும் என்னையே பார்த்துக்கொண்டிருந்தாள். அந்தப் பார்வையில் எவ்வளவு குளுமை! கொடி போன்ற உடல். கழுத்தில் சிறு செயின். கையில் ஒற்றை வளையல் மட்டும். ஆனாலும் அழகு எப்படிப் பதிந்துவிட்டது அவளிடம்! 

மயிலாப்பூரில் இறங்கி நடக்க ஆரம்பித்தேன். அவளுடைய அழகிய உருவம் மனதில் பதிந்திருந்தது. “மிஸ்டர்!” என்ற குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்தேன். அவள்தான் நின்றுகொண்டிருந்தாள். 

“என்னையா?” என்று கேட்டேன் நான். 

“நான் ஊருக்குப் புதிசு. இந்த நம்பர் விலாசத்துக்கு என்னை அழைத்துச் செல்ல முடியுமா?” என்று கேட்டாள் அவள். 

நான் அவளைக் கவனித்தேன். கண்களில் புரிபடாத ஏக்கம் கவிந்திருப்பதுபோலக் காணப் பட்டது. என் மனது நெகிழ்ந்துவிட்டது. “ஆகட்டும்” என்றேன்.

தெப்பக் குளக் கரையோரமாக அவளுடன் நடக்கும்போது என் உடம்பு ஆகாயத்தில் மிதப்பதுபோலிருந்தது. அவள் தன் கதையைத் தானாகவே கூறினாள். 

“என் பெயர் சுசீலா. என் தகப்பனார் பர்மாவில் உயர்ந்த பதவியில் இருந்தார், நான், என் அக்கா. அண்ணா எல்லோரும் எவ்வளவோ சௌக்கியமாகவும், பிரியமாகவும் வளர்ந்தோம்……ஆனால் திடீரென்று யுத்த வெறி பரவியது. ஜப்பானியர் படையெடுத்த சமயம் அது…என் தந்தை வெடி விபத்தில் காலமானார்…நாங்கள் நிர்க்கதியாக இந்தியாவை நோக்கிப் புறப்பட்டோம். கால்நடையாக…வழியில்…அதை எப்படிச் சொல்வேன்?…என் அண்ணா…அண்ணா…” என்று விசித்து அழ ஆரம்பித்தாள் சுசீலா. 

அவள் கதையைக் கேட்க எனக்குப் பரிதாபமாக இருந்தது. “என்ன நேர்ந்தது அண்ணாவுக்கு?” என்று கேட்டேன். 

“என் அண்ணா இறந்துவிட்டான். அந்த அதிர்ச்சி என்னைப் பைத்தியமாக்கிவிட்டது. அண்ணா, நான் பைத்தியமா? நீங்களே சொல்லுங்கள். நீங்கள் தான் இனிமேல் என் அண்ணா” என்றாள் அவள். 

என் மனம் துடித்தது. “சுசீலா, கவலைப்படாதே. நான் உன் அண்ணனாகவே இருக்கிறேன். எனக்கும் கூடப்பிறந்த தங்கை கிடையாது” என்றேன். அவள் சந்தோஷத்தில் பூரித்துப் போனாள். 

“அண்ணன் போய்விட்ட பிறகு எனக்கு எதிலும் மனது பிடிக்கவில்லை. நானும் என் அக்காவும் பெல்லாரியில் ஒரு உறவினரின் ஆதரவில் இருந்தோம்…’ட்ரெயினிங்’ படித்துப் பாஸ் செய்தோம்” என்றாள் அவள். 

வழியெல்லாம் இன்னும் என்னென்னவோ விஷயங்களைப்பற்றி, பர்மாவிலுள்ள இந்தியக் கோயில்களைப்பற்றி, பர்மிய மக்களைப்பற்றி எல்லாம் சொன்னாள். அவளுடைய கள்ளங் கபடமற்ற மனதைக் கண்டு எனக்கு அவள் மீது அன்பு அதிகரித்தது. தங்கைப் பாசம் ஊற்றுப்போலச் சுரந்துவிட்டது உள்ளத்தில். 

லீலாவிடம் எல்லாவற்றையும் சொன்னேன். அவள் எதையும் நம்புவதாகவே காட்டிக் கொள்ளவில்லை. 

மறு நாள் சுசீலா வீட்டிற்கு வந்தாள். ‘மன்னி’ என்று அழைத்தபடி லீலாவைக் கட்டிக்கொண்டாள். அந்தக் காட்சியைக் கண்டு என் மெய் சிலிர்த்தது. உள்ளத்தில் அலை புரள அன்புக்கடல் கொந்தளித்தது. லீலாவுக்கு மட்டும் கொஞ்சம் சந்தேகம். 

முன்பின் தெரியாத ஒரு சிறுபெண் திடீரென்று என் தங்கையானாள் என்பதை அவளால் எளிதில் நம்ப முடியவில்லை. 

என்னாலேயே அதை நம்ப முடியவில்லையே! நினைத்தாலும் உள்ளம் படபடக்கிறதே. உலகில் சகோதரியின் அன்புக்கு இணையாக வேறு எதுதான் இருக்கிறது? 

சுசீலா மன்னியிடம் ரகசியமாக ஏதோ சொன்னதைக் கவனித்தேன். “என்ன லீலா, அவ்வளவு ரகசியமாகச் சொல்றா உன் காதில் மட்டும்?” என்று கேட்டேன். 

அவள் நாணத்தால் தலை குனிந்துகொண்டாள். 

சுசீலாவே பதில் சொன்னாள், “ஒன்றுமில்லை, அண்ணா, எனக்கு ஒரு மருமான் கிடைக்க வேண்டாமா? அதை எடுத்து நான் கொஞ்ச வேண்டாமா?” என்று கேட்டாள் அவள். 

நான் சிரித்தேன். கல்யாணமாகி, பத்து வருஷங்களாகியும் குழந்தை இல்லாத குறை எனக்கும்தான் இருந்து வந்தது. அதைச் சுசீலா எடுத்துக் காட்டியதும் அது மலைபோல எனக்குப்பட்டது. 


நாட்கள் நடந்தன. மாதங்கள் உருண்டன. 

வருஷம் ஒன்று ஓடிவிட்டது. எல்லாம் கண் இமைப்புப்போல நடந்துவிட்டன. 

சுசீலாவை அதற்குப் பிறகு பார்க்கவே முடியவில்லை. ஆனால் அவள் நினைவு அகலவில்லை. அகதியான அவள் எங்கு அவதிப்படுகிறாளோ! எனக்கு வேலையில் மனம் லயிக்க வில்லை.சிறு வயது முதலே தங்கைப் பாசத்தில் விசித்திர பிரேமை எனக்கு. அது கைகூடியதும் கண்ணுக்குத்தெரியாது மறைந்தது பெரிய அதிர்ச்சியாய் இருந்தது. 

மன நிலை சரியாயிருந்ததால் லீலாவுடன் கிளம்பினேன். அன்று ஒரு சினிமாவுக்குக் பொழுதுபோக்காக இருக்கும் என்றுதான். வெளியுலகத்தைப் பற்றியே கவலைப்படாதிருந்த நான் அந்தப் படத்தில் நடிக்கும் புது முகமான மோகன குமாரியைக் கண்டதும் திடுக்கிட்டேன். அவள் நடனத்தைக் கண்டு வியக்காதவர்களே இல்லை. திக்கெட்டும் அவளைப் பற்றிய பேச்சுத்தான். 

அவள் நடனமோ, நடிப்போ என்னை அதிசயப்படுத்தவில்லை. ஆனால் அந்த முகம்……! எங்கோ பார்த்த முகம்…யோசித்தேன். ஆ! அது சுசீலாவின் முகமல்லவா? நான் துள்ளி உட்கார்ந்தேன். சுசீலா சினிமாவில்  நடித்துப் பெயர் பெற்றுவிட்டாளா? சபாஷ்! 

மேற்கொண்டு படம் பார்க்க முடியவில்லை. இருப்புக் கொள்ளாமல் மனதில் ஒரு குறு குறுப்பு. இப்பொழுதே ஓடிச்சென்று அவளைப் பார்த்துப் பேசவேண்டும் என்ற ஆசை. ஒரு வருஷம்தான். ஆனால் அந்த ஒரு வருஷத்தில் அவள் எப்படிப்பட்ட நிலையை அடைந்து விட்டாள்! 

லீலா சினிமா பார்த்து ரசிப்பதில் கைதேர்ந்தவள். சோக கட்டம் வந்தால் இவள் கண் ‘மல, மல’ வென்று நீர் பெருகிவிடும். சந்தோஷமான சம்பவங்கள் வந்தாலோ இவள் கலகல வென்று சிரிக்க ஆரம்பித்துவிடுவாள், நான் பொம்மை போல உட்கார்ந்திருந்துவிட்டு வெளியே வந்தேன். 


மோகன குமாரியின் விலாசம் லகுவில் கிடைத்தது. அத்துடன் அவளுடைய வாழ்க்கைக் குறிப்பும் ஒரு பிரபல ‘சினிமா மின்மினி’ யில் நிருபரால் கைச்சரக்குடன் எழுதப்பட்டிருந்தது. சுசீலங் என்னிடம் கூறியிருந்த அதே சம்பவங்கள் தான் அங்கும் காணப்பட்டன. அவள்தான் மோகன குமாரி என்பதற்கு என்ன சந்தேகம்! 

மறுநாள் அவளைப் பார்க்க உள்ளம் நிறைந்த ஆனந்தத்துடன் புறப்பட்டேன், பூ, பழம் முதலியவற்றுடன். பெரிய சினிமா நடிகையைப் பார்க்கப் போகிறோம் என்கிற எண்ணமே எனக்கு இல்லை. என் தங்கையைப் பார்க்கும் ஒரே எண்ணம்தான். 

பெரிய பங்களா. சுற்றிலும் அழகான தோட்டம். ஆடம்பரத்திற்குக் குறைவில்லை. அங்கே சென்றதும் ஒரு சேவகன் தடுத்து நிறுத்தி, “ஸார் இப்படி உட்காருங்கள்.உங்கள் விஸிட்டிங் கார்டைக் கொடுங்கள்” என்றான். 

எனக்கு உள்ளூற வருத்தம்தான். என் தங்கையைப் பார்க்கவா இவ்வளவு கட்டுப்பாடு? ஆனாலும் அவளுடைய அந்தஸ்தில் அப்படித் தானே இருந்தாகவேண்டும்! ஆகவே ஒரு காகிதத்தில், “சுசீலா, உன்னைப்பார்க்க விரும்புகிறேன் – உன் அண்ணன்” என்று எழுதிக் கொடுத்தேன். 

தர்வான் திரும்பி வந்து என்னை உள்ளே அனுப்பினான். 

விசாலமான அறை. எ திரே பெரிய மேஜை. அதன்மேல் அழகான புஷ்பங்களைத் தாங்கிய ஒரு பூக்கிண்ணம் இருந்தது. சுசீலா – அல்ல, அல்ல – மோகனகுமாரி அங்கு உட்கார்ந்திருந்தாள். 

“உங்களுக்கு யாரைப் பார்க்கணும்?” என்று அவள் கேட்டாள். 

நான் அயர்ந்து போய்விட்டேன். “பெயர் தான் மாறிற்றே ஒழிய உள்ளம் மாறி இருக்காது என்றல்லவா நினைத்திருந்தேன். என்னைத் தெரியவில்லையா. சுசீலா!” என்று கேட்டேன். 

அவள் என்னையே கூர்ந்து கவனித்தாள். “நீங்கள் தவறுதலாக யாரையோ தேடுகிறீர்கள். முதலாவதாக என் பெயர் சுசீலா இல்லை. இங்கு அந்தப் பெயருடையவர்கள் யாருமே இல்லை.” என்றாள் அவள். 

அவள் பேசும்பொழுது கவனித்தேன். அதே அசைவுகள்தான்! சுசீலாதான் இவள். ஆனால் பதவியும், பணமும் வந்து குவிந்து விட்டபோது அவளுக்கு என் நினைப்பு ஏன் வரப்போகிறது? அண்ணா, அண்ணா என்று ஆர்வமுடன் அழைத்த அதே சுசீலாவா இவள்? “என்னை அடியோடு ஞாபகமில்லையா உனக்கு?” என்று கேட்டேன் பரிதாபமாய். 

அவள் மேஜை மணியை அடித்தாள். சேவகன் உள்ளே வந்து என்னை வெளியே அழைத்து வந்தான். நான் உயிரற்ற சிலை போலத் திரும்பினேன். இங்கு வரும்போது என் உள்ளத்தில் ஆசை காட்டாறாகப் பெருக் கெடுத்து ஓடியதே! இப்போது அது வறண்டு பாலைவனமாகிவிட்டதே! 


ஏமாற்றம் இருதயத்தில் பதிந்துவிட்டது. சுசீலாவைப் பற்றி நினைக்கும்போது பரிதாபப்படுவேன் நான். அவள் புகழ் அடைந்து பெருமை அடைந்து என்ன பயன்? தன் மனத்தையே அல்லவா ஏமாற்றிக் கொண்டிருக்கிறாள்? 

தனிமையில் எனக்கு எப்பொழுதும் இதே நினைவுகள்.அன்றும் இதே நினைவாக நடந்து போய்க் கொண்டிருந்தேன். லீலா பிறந்தகம் போயிருக்கிறாள். எங்களுடைய நெடுநாள் குறை தீர்ந்துவிடப்போகிறது. அழகான பிள்ளைக் குழந்தை பிறக்குமென்று ஜோசியம் கூடக் கூறுகிறது. இப்படி நான் எண்ணமிட்டுக்கொண்டே சென்றபொழுது என்மீது உராய்ந்துவிடுவதுபோல ஒரு மோட்டார் கார் வளைந்துசென்றது. நான் திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தேன், அது மோகன் குமாரியின் கார் அல்லவா? அவள் இங்கே எங்கு வந்தாள்? 

நான் சுற்றுமுற்றும் பார்த்தேன். வெகுதூரம் நடந்து கீழ்ப்பாக்கம் அல்லவா வந்துவிட்டேன்? அருகில் பைத்தியக்கார ஆஸ்பத்திரி தெரிந்தது. அதிலிருந்துதான் கார் வெளியே வந்திருக்கவேண்டும். அவள் ஏன் அங்கே வந்தாள் என்பதை அறிய ஆஸ்பத்திரிக்குள் நுழைந்தேன். வாசலில் இருந்த காவற்காரன் தூங்கிக்கொண்டிருந்தான். ஆனால் எப்படியோ விழித்துக்கொண்டு “சாமி, சாமி” என்றான். 

“என்னப்பா?” என்று கேட்டேன். 

“நீங்கள் பாட்டுக்குப் போறீங்களே.. யாரைப் பாக்கணும்னு சொல்லுங்க… உத்தரவு வாங்கியாறேன்” என்றான். 

நான் யாரைப் பார்க்க வந்தேன்? அவனுக்கு என்ன பதில் சொல்வது என்று புரியாமல், “இல்லேயப்பா… இப்போ ஒரு கார் வந்துதே… அதுதான் சினிமா நடிகையின் கார்…” என்றேன். 

“ஆமாங்க. அவுங்ககூட எனக்கு மாசா மாசம் ஒரு ரூவா கொடுப்பாங்க…” என்றான் அவன். 

இப்படி இவனுடன் பேசிக்கொண்டிருக்கும் பொழுது உள்ளிருந்து. “யாரது, சீனுவா? வாப்பா” என்ற குரல் கேட்டது. நான் திரும்பிப் பார்த்தேன். என் பால்ய நண்பன் சேஷகிரி நின்றுகொண்டிருந்தான். 

“சேஷகிரி, இங்கேயா இருக்கிறாய்?” என்று கேட்டபடி உள்ளே போனேன். 

“ஆமாம்பா.” என்றான் அவன். 

எனக்கு வந்த காரியம் நினைவுக்கு வந்தது. “உன்னிடம் ஒரு சமாசாரம் கேட்க வேண்டுமே!” என்றேன். 

“ஒன்று என்ன, ஆயிரம் கேள். சொல்கிறேன்……வா, போவோம் ரூமுக்கு” என்றான் அவன். 

சேஷகிரி படிப்பில் சூரன். எல்லாப் பரிசுகளையும் பிறருக்கு என்று ஒன்றுகூட வைக்காமல் தானே தட்டிக்கொள்வான். டாக்டர் படிப்புக்கு மேல் நாடுகளுக்குக்கூடச் சென்று வந்தவன். அவன் இந்தப் பயித்தியக்கார ஆஸ்பத்திரியில் அகப்பட்டுக்கொண்டது எனக்கு ஆச்சரியமாய் இருந்தது. இதைப்பற்றி அவனிடம் கேட்டேன். அவன் சரியாகப் பதில் சொல்லவில்லை. ஆனால் ஏதோ ஒன்றை மறைக்கிறான் என்பது மட்டும் நன்றாகப் புலப்பட்டது. அதைப் பற்றிச் சாவகாசமாகக் கேட்டுக்கொள்வோம் என்று வந்த காரியத்தைத் தொடர்ந்தேன்.

“சேஷகிரி, இப்போது மோகன குமாரி என்ற சினிமா நடிகையின் கார் வந்தது அல்லவா?” என்று கேட்டேன். 

“ஆமாம்..அதற்கென்ன?” என்றான் அவன். 

“கேள், அவசரப்படாதே…அவள் ஏன் இங்கு வருகிறாள் என்ற விவரம் தெரிய வேண்டும்” என்று கேட்டேன். 

சேஷகிரி என்னைக் கூர்ந்து நோக்கினான். பிறகு சிரித்தபடியே, “நீ பெரிய ஆள் தானப்பா!” என்றான். 

நானும் மெல்லச் சிரித்தேன். 

“அவளுடைய தங்கை காந்தா இங்கே சிகிச்சையில் இருக்கிறாள்” என்றான் அவன். 

நான் நிமிர்ந்து உட்கார்ந்தேன். மோகன குமாரியின் தங்கை சிகிச்சையிலிருக்கிறாளா? “என்ன?” என்று கேட்டேன் ஆச்சரியத்துடன். 

“ஆம். அவள் தங்கைதான். ஆனால் இருவரும் ஒரே அச்சில் வார்த்ததைப் போலிருப்பார்கள். கொஞ்சங்கூட வித்தியாசம் கிடையாது இவர்களுக்குள்” என்றான் சேஷகிரி. 

நான் பரபரப்புடன் எழுந்திருந்தேன். “சேஷகிரி, அந்தப் பெண்ணை இப்போதே நான் பார்க்கவேண்டும்” என்றேன். 

சேஷகிரி என் பரபரப்பைக்கண்டு ஆச்சரிய மடைந்தவன்போல என்னையே சற்றுநேரம் உற்றுப் பார்த்தான். பிறகு “சரி, போவோம்” என்றான். 

என் உடலில் புது வேகம் புகுந்து கொண்டது. அடித்துக் மனது படபடவென்று கொண்டது.’ இந்தப் பெண் சுசீலாவாக இருப்பாளோ!’ என்ற ஆசை, 

ஒரு விசாலமான அறை. அதன் மூலையில் ஒரு மேஜை இருந்தது. அதற்கருகிலிருந்த ஜன்னல் வழியாக ஒரு பெண் வெளியே பார்த்துக் கொண்டிருந்தாள். பின்புறத்தோற்றம் சுசீலாவினுடையதைப் போலவே இருந்தது. நான் ஆவலுடன் “சுசீலா!” என்று கூப்பிட்டேன். 

அவள் திரும்பிப் பார்த்தாள். நான் அவளை நன்றாகக் கவனித்தேன். ஆம். அவளேதான். என் தங்கை சுசீலாவேதான். அவளுடைய கண்கள் ஒரு கணம் பிரகாசமடைந்தன. அடுத்த கணம் “அண்ணா!” என்று அலறியபடி அவள் என்னை நோக்கி ஓடிவந்தாள். 

நான் அவளைக் குழந்தையைப்போல அணைத் துக்கொண்டேன். அலைபோல்புரளும் கேசத்தை வருடியபடியே, “சுசீலா, நீ இங்கேயா இருக்கிறாய்? உன்னைத்தேடி எங்கெல்லாம் அலைந்தேன் தெரியுமா?” என்றேன். 

சுசீலா என்னை ஏறிட்டுப் பார்த்தாள். “என்ன அண்ணா இது? என் பெயரைக்கூட மறந்து விட்டாயா? என் பெயர் காந்தா இல்லையா ?…… அதுபோகட்டும். நீ சின்ன வயசில் என்னை ‘நாய்க்குட்டி’ன்னு கூப் பிடுவையே அதை மறந்துட்டாயா?…அப்பா என்னை ‘பேபி’ன்னு கூப்பிடுவா…ஆனா நீ மட்டும்…” என்று பேசிக்கொண்டே போனாள். 

நான் தடுத்து, “அப்போதெல்லாம் நீ நாய்க் குட்டியாட்டம் இருந்தாய்… இப்போ சுசீலாவாகி விட்டாய்…” என்றேன். 

சேஷகிரி எங்களைப் பார்த்ததுமுதல் ஏதே மீதா ஒரு பிரச்னையை விடுவிக்க முயல்பவனைப் போலக் காணப்பட்டான். எங்கள் உறவு அவனுக்குப் புரியவில்லை. பாவம்! அவனுக்கு எப்படிப் புரியும்? என் சொந்த மனைவியே புரிந்துகொள்ள வில்லையே! 

சேஷகிரியிடம் தனிமையில் எல்லா விவரங்களையும் கூறினேன். அவன் உள்ளம் உருகிவிட்டது. இப்படிப்பட்ட சகோதர பாசம் ஏற்படக் கூடியது பெரிய விசித்திரமாக அவனுக்குப்பட்டது. ஆனால் நிரந்தர சாட்சியாக நான் இருக்கும்போது அவனால் எப்படி அதை மறுக்க முடியும்? அவனுடன் பேசிய உயர்ந்ததில் ஒரு விஷயம் புலனாயிற்று. படிப்பும் தீவிர முயற்சியும், நல்ல மேதையும் உடைய சேஷகிரி இந்தப் பைத்தியக்கார ஆஸ்பத்திரியிலேயே இருப்பதற்குக் காரணம் இந்தப் பெண் சுசீலாதான். அவளைக் குணப்படுத்தி விடவேண்டும் என்பது அவன் நோக்கம். மேலும் அவள் மீது அவன் காதல் கொண்டிருந்தான். இதைக் கேட்டதும் நான் மிகவும் சந்தோஷமடைந்தேன்.

பேசிக்கொண்டே இருந்தோம். சுசீலாவை அவன் எடுத்துக்கொண்ட குணப்படுத்த முயற்சிகளை எல்லாம் விளக்கினான் அவன். பொதுவாகத் தன் சகோதரனை இழந்த துக்கமே அவளைப் பைத்தியமாக்கி இருக்கிறது என்று அவன் கூறினான். பிறகு கடைசியில், “சீனு, தெய்வாதீனமாக நீ அவளுடைய அண்ணனாக அமைந்துவிட்டாய்…… உன்னால்தான் அவள் குணமாக வேண்டும்…… இதற்காக நீ ஒரு மகத்தான தியாகம் செய்தாகவேண்டும்” என்றான் அவன். 

நான் ஒன்றும் புரியாமல் “என்னை என்ன செய்யச் சொல்கிறாய்? அவளுக்காக எதையும் செய்ய நான் தயார்” என்றேன். 

“நீ செய்வாய். எனக்குத் தெரியும். ஆனால் தீர்மானித்துக்கொள். நடுவில் புரளக்கூடாது” என்றான், அவன் பீடிகை போடுவதுபோல, 

“இல்லை, சொல்லு, என்றேன்.” 

“முதலில் நீ உன் வேலையை ராஜீநாமா செய்துவிடவேண்டும்” என்றான் சேஷகிரி. 

“என்ன? என்ன……? ராஜீநாமாவா?” என்று கேட்டேன் பதட்டத்துடன் 

“ஆமாம்….. அப்புறம் இங்கேயே உன் தங்கை அருகிலேயே இருந்து அவளுடைய மனப் போக்கின்படி நடக்கவேண்டும்……… உன் அன்பால்தான் அவள் மனப் பிரமை மாறவேண்டும்….. என்ன புரிகிறதா?……” என்று கேட்டான் அவன். 

நான் உடனடியாகப் பதில் சொல்ல முடியவில்லை. வேலையை ராஜீநாமா செய்துவிட வேண்டும்!…… பிறகு?……… சுசீலாவின் அருகிலேயே இருக்கவேண்டும்…… அதுசரி … ராஜீநாமா என்றால் மாதம் இருநூறு ரூபாய் வருவாயுள்ள உத்தியோகம் போய்விடும். 

சேஷகிரி தொடர்ந்து பேசினான். “வேலை போய்விட்டால் பிறகு சாப்பாட்டுக்கு என்ன செய்வது என்றெல்லாம் கவலைப்படாதே. மோகன குமாரி தன் தங்கைக்காக எதையும் செய்யத் தயாராயிருக்கிறாள்… அவளிடம் கூறி உனக்கு நிரந்தரமாக ஒரு பெரிய தொகையை நியமிக்கும்படி ஏற்பாடு செய்கிறேன்.” 

எனக்குக் கடைசியாக அவன் சொன்னதைக் கேட்டதும் கோபம் வந்துவிட்டது. “என்ன சொல்கிறாய் சேஷகிரி! என் சுசீலாவுக்காக நான் எதையும் செய்யத் தயார். எங்கள் அன்பை நீ பணத்தால் பிணைத்துவிட நினைக்கிறாய் போலிருக்கிறது” என்றேன். 

சேஷகிரி சாவதானமாக, “வித்தியாசமாக நினையாதே, சீனு. நான் சொன்னதில் பிசகில்லை…..மேலும் நீ ஒரு பைத்தியத்துக்காக உன் வாழ்வையே தியாகம் செய்யப் போகிறாய். ஆகையால் பணம் அதற்கு ஈடு செய்ய முடியாது…… என்றாலும் இது உன் பெரும் தியாகத்துக்கு மிகச்சாமான்யமான பிராயச்சித்தம், அவ்வளவே” என்றான். 


வேலையை ராஜீநாமா செய்தேன், ஆனால் இதை லீலாவுக்கு அறிவிக்கவில்லை, அவள் குணம்தான் தெரிந்ததாயிற்றே! இதைக் கேட்டால் அவள் கோபிப்பாள், ஒரு பைத்தியத்துக்காகத் தன் கணவன் வேலையை ராஜீநாமா செய்தது பெரிய அவமானமாகக் கருதுவாள். 

என்னைப்பற்றிப் பிறர் என்ன சொல்வார்கள் என்ற கவலை எனக்கு எழவில்லை. என் ஆசை எல்லாம் சுசீலா மீளவேண்டும் என்பதே. மோகன குமாரி என்மீது தன் நம்பிக்கை பூராவும் வைத்தாள். அவளும் ‘அண்ணா’ என்றே என்னை அழைக்க ஆரம்பித்தாள். 

நாட்கள் கடந்தன. சேஷகிரியும் நானும் விடாமல் பாடுபட்டோம். இதற்கிடையில் மோகன குமாரியைப்பற்றிச் சில விபரீதமான பேச்சுகள் என் காதில் விழுந்தன. அவளுடன் கூடவே இருந்துவரும் தர்மராஜு என்பவனின் வலையில் அவள் சிக்கி இருப்பதாகப் பேச்சுக் கிளம்பியது. இது வதந்தியோ என்று முதலில் சந்தேகித்தேன். ஆனால் பிறகு நிஜம் என்று என் கண்கூடாகக் கண்டேன். அவளுடைய பங்களா, பாங்கியிலுள்ள பூரா பணம் யாவும் அவன் பேரிலிருந்தன. அவர்களிருவருக்கும் விரைவில் பதிவுத் திருமணம் கூட நடக்கப் போவதாகவும் அறிந்தேன். இதைப்பற்றி அவளிடம் எச்சரிக்க எனக்கு ஆசை ஏற்பட்டது. பிறகு ஒருநாள் மெல்ல விஷ்யத்தை ஆரம்பித்தேன். உடனே அவள், “அதைப்பற்றிப் பேசவேண்டாம், அண்ணா. நல்லதோ கெட்டதோ நடந்துவிட்டதை மாற்ற நான் விரும்பவில்லை… அப்படியே ஏதாவது ஏற்பட்டுவிட்டாலும் என் தங்கையைப் போல நானும் நிம்மதியாகப் பைத்தியமாகி விடுகிறேன்” என்றாள். 

இதற்குமேல் நான் என்ன பேசுவது? 


நற்செய்தி ஒன்று பறந்துவந்தது, எனது நெடுநாள் குறை மறைந்தது. எனக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கும் செய்தியே அது.

சுசீலா ஆனந்தமாகப் பாடிக்கொண்டிருந்தாள். சில நாட்களில் அவளுக்குச் சந்தோஷம் மில்லாத கவிதைகள் அவளுடைய இனிய கரை புரளாது, ஏதாவது பாட்டுகள் – சம்பந்த குரலில் உருவெடுத்து வரும். ஒரு பைத்தியம் பாடும். பாட்டாகவே அவற்றை மதிப்பிட முடியாது! 

“சுசீலா, இதோ பார்……” என்று கூறியபடியே உள்ளே ஓடினேன். 

சுசீலா திடுக்கிட்டு எழுந்திருந்து,” என்ன அண்ணா?” என்று கேட்டாள், அவள் முகத்தில் அசாதாரண அழகு மின்னியது, கண்களில் லேசாக நீர் துளிர்த்து இளம் வெய்யிலில் மின்னியது. கூந்தல் காற்றில் கலைந்து கிடந்தது. என்னை அறியாமல் என் உள்ளம் இப்பேர்ப்பட்ட அழகி பைத்தியமாகவே இருக்க நேர்ந்திடுமோ என்ற விசித்திர பயமும் பரவியது. 

“எனக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறதாம். சுசீலா… இதோ பார் தந்தி….. உனக்கு மருமான் வேண்டுமென்று ஆசைப்பட்டாயே!” என்றேன். 

சுசீலா என்னையே உற்றுப் பார்த்தாள், முகத்தில் திடீரென்று விசித்திர மாறுதல் ஏற்பட்டது, அடுத்த கணம் “ஹா!” என்று அலறலுடன் அவள் கீழே சாய்ந்தாள். 

நான் பிரமித்து நின்றுவிட்டேன். சேஷகிரி சப்தம் கேட்டு ஓடிவந்தான். “என்ன நடந்தது?” என்று கேட்டான் நான் நடுங்கும் குரலில் நடந்ததைச் சொன்னேன். 

குனிந்து அவளைப் பரிசோதித்தான். சேஷகிரி. நான் கவலையுடன் அருகில் நின்று கொண்டிருந்தேன். சிறிது நேரத்துக்குப் பிறகு அவன் முக மலர்ச்சியுடன் கூறலானான். “சீனு. இனி சுசீலா பைத்தியமல்ல. அவள் மூளை தெளிந்துவிட்டது. நீ கூறிய செய்தி அவளுக்கு அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது. அதன் பலனாகச் சுவாதீனமற்ற மூளை இப்போது தெளிந்துவிட்டது” என்றான். 

எனக்கு ஆனந்தம் புரிபடவில்லை. “நிஐமாகவா?” என்று கேட்டேன். 

“ஆமாம்” என்றான் சேஷகிரி. 

இந்தச் சந்தோஷ சமாசாரத்தைத் தெரிவிக்க டெலிபோனை எடுத்தேன். மோகன குமாரியின் பங்களாவை அழைத்தேன். அதற்குள் அங்கிருந்தே “ஹலோ. யார் பேசறது?” என்ற குரல் கேட்டது. 

”நான்தான் சீனுவாசன் பேசுகிறேன் ஆஸ்பத்திரியிலிருந்து.” என்றேன். 

“ஓ!…இங்கு மோகன குமாரிக்கு எதிர்பாராத விதமாக சித்தப் பிரமை ஏற்பட்டிருக்கிறது. தர்மராஜ பணத்தை எல்லாம் சுருட்டிக்கொண்டு ஓடிவிட்டதுதான் காரணம்” என்று பதில் வந்தது. 

நான் திடுக்கிட்டேன். சுசீலா எழுந்து புன்முறுவலுடன் நின்றாள். சேஷகிரிக்கு ஆனந்தம். அவனைக் கண்டதும் வெட்கத்தால் தலை குனிந்துகொண்டாள் சுசீலா. இந்த நிலையில் அந்தப் பயங்கர தகவலை உடனே நான் வெளியிடவில்லை. 

சுசீலாவுக்கு வெகுநாள் வரை அந்த விஷயமே தெரியாது. தன் அக்காவைப் பற்றி அவள் விசாரித்த பொழுதெல்லாம் நாங்கள் ஏதாவது சாக்குப் போக்குக் கூறிவிடுவோம். அவளுடைய சித்தம் நல்ல நிலைமைக்கு வந்த பிறகே இதை வெளியிட்டோம். 


“என்ன பேப்பரைப் பிரித்தபடி அப்படியே உட்கார்ந்து விட்டீர்களே!” என்று லீலா கூப்பிட்டதும்தான் எனக்குச் சுய நினைவு வந்தது. 

“ஒன்றுமில்லை…இந்தப் பேப்பரைப் பார்.. நம்ம சுசீலா நடிக்கிறாள்… படத்தின் பெயர் என்ன தெரியுமா? ‘அபூர்வ சகோதரிகள்’ எப்படி?” என்று கேட்டேன். 

அவள் சிரித்தாள். “அவர்கள் அக்கா. தங்கை இருவருமே அபூர்வ சகோதரிகள் தானே!” என்றாள். 

எனக்கும் அவள் அபூர்வ சகோதரிதான். அவளையும் சேஷகிரியையும் பார்த்துவர விரைவில் போகப் போகிறேன். 

– காவேரி, விக்ருதி மலர் 10, கார்த்திகை இதழ் 4, நவம்பர் 1950

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *