உயிர் தொடும் அமுதம் நீ!

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 2, 2024
பார்வையிட்டோர்: 7,881 
 
 

(2021ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12 | அத்தியாயம் 13-15

அத்தியாயம்-10 

ஹாஸ்பிடல் உள்ளே வருகிறான் ரகுவரன். அவனை பின் தொடர்ந்து அவன் ரூமிற்கு வந்த சாந்தி “டாக்டர் மதியம் நீங்க பனிரெண்டு மணிக்கு போயிட்டு அப்புறம் வர்றதாக சொன்னதால் பத்து பேஷண்டுக்கு மேலே வெயிட் பண்ணி பார்த்துட்டு மூணு மணிக்கு தான் போனாங்க டாக்டர்” 

“பரவாயில்லை என்ன செய்யறது டாக்டர்னா தொழிலை மட்டும் பார்க்க முடியுமா வேற வேலையும் இருக்கத் தான் செய்யும். நீங்க தான் எதையாவது சொல்லிசமாளிக்கணும். இப்பவும் ஓ.பி. முடிச்சுட்டு சீக்கிரம் கிளம்பணும். எட்டு மணிக்கு மேல் டோக்கன் தராதீங்க. எனக்கு வேலையிருக்கு” 

ரகுவரன் சொல்ல 

“ஓகே டாக்டர்” 

சொன்ன சாந்தி வெளியே வருகிறாள் “என்னாச்சு டாக்டருக்கு ஒரு மாதமாகவே வித்தியாசமாக நடக்கிறார். எப்போதும் ஏதாவது யோசனையுடன் இருப்பதாகவே தோன்றுகிறது” 

ஒருசமயம் குழந்தைக்காக ட்ரை பண்ணுவதில் ஏதாவது பிரச்சனையா. எதுவும் புரியவில்லை சாந்திக்கு. 

செல்போன் அழைக்க 

“சொல்லுங்க சித்தி நான் டியூட்டியில் இருக்கேன். அப்புறம் பேசட்டுமா” 

“ஒண்ணும் விஷயமில்லை சாந்தி. சித்தப்பாவுக்கு உங்க டாக்டர்கிட்டே காண்பிக்கணும் கிளம்பி வரலாமான்னு கேட்க தான் போன் பண்ணினேன்.’ 

“தாராளமா வாங்க ஏழு மணிக்குள்ள வந்துடுங்க டாக்டர் சீக்கிரமே கிளம்பிடுவாரு” 

“நானே கேட்கணும்னு இருந்தேன். நம்ப வீட்டுக்கு அடுத்த தெருவில் இருக்கும் சூப்பர் மார்க்கெட்டுக்கு அடிக்கடி போவேன், அந்த தெருவில் உங்க ஹாஸ்பிடலில் வேலைக்கு சேர்ந்தாளே மாலதி அவள் வீட்டு முன் உங்க டாக்டரின் கார் அடிக்கடி நிக்குது. 

அந்த பொண்ணு புருஷன் இல்லாமல் பிள்ளையோடு தனியா இருக்குது. உங்க டாக்டருக்குஅங்கே என்ன வேலை. நல்ல மனுஷன்னு சொல்வே… எப்படியோ அந்த பொண்ணு அங்கே தானே வேலை பார்க்குது.” 

“இல்ல சித்தி… அவ வேலையிலிருந்து நின்னு ஒரு மாசத்துக்கு மேலாச்சு… நீங்க நேரில் வாங்க பேசுவோம்…” 

போனை வைத்தவளின் மனதில் பல குழப்பங்கள் உண்டானது. 

காலையில் எழுந்ததிலிருந்து மனது சரியில்லை நந்தினிக்கு. இரவு ஏதோ கெட்ட கனவு. அதனாலோ என்னவோ… தலை வலிக்கிற மாதிரி இருக்க ரகுவரன் ஹாஸ்பிடல் கிளம்பியபிறகு மாத்திரை போட்டு சோபாவில் சாய்கிறாள். 

ரகுவரனும் ஒரு மாதமாக சரியாக பேசாமல் பித்து பிடித்துவிட்டது போல இருக்கிறார். அடிக்கடி ஹாஸ்பிடலிலிருந்து வெளியே போகிறார் நேரத்திற்கு சாப்பிட வருவதில்லை. 

ஒவ்வொரு நாள் சாப்பாடே வேண்டாம் என்கிறார் என்னாயிற்று இருவருக்கு.

வெளியே, குழந்தை இல்லை என்பதுபெரிய விஷயமில்லை என்று சொன்னாலும் மனதளவில் பாதித்திருக்கிறார் என்பது நன்றாக தெரிகிறது. இந்த விஷயத்தில் நான் என்ன செய்ய போகிறேன்.’ 

நினைக்க நினைக்க தலைவலி அதிகமாகியது. 

செல்போன் அழைக்க யார் என்று பார்க்கிறாள். கிராமத்திலிருந்து போன், 

“ஹலோ மாமா எப்படி இருக்கீங்க…” 

“நான் மாமா இல்லை அத்தை பேசறேன் நந்தினி.”

“சொல்லுங்க அத்தை… நல்ல இருக்கீங்களா…. எப்பவும் மாமா தான் கூப்பிடுவாங்க… அப்புறம் தான் உங்க கிட்டே தருவாங்க அதனால மாமாதான்னு நினைச்சேன்.”

“மாமா தோட்டத்திற்கு போயிருக்காங்க. அவங்களுக்கு தெரியாமல் உன்கிட்டே சில விஷயங்கள் பேசணும்னு தான் கூப்பிட்டேன்.” 

மனதில் சின்ன நெருடல்

‘என்ன பேசப் போகிறார்.’ 

“ரகுவரன் எப்படியிருக்கான். குழந்தை விஷயத்தில் என்ன முடிவுக்கு வந்திருக்கீங்க…” 

“அதைபத்தி நாங்க அதிகம் பேசறதில்லை அத்தை. டாக்டர் நம்பிக்கையாக எதுவும் சொல்லலை. இருந்தாலும் தொடர்ந்து மருந்து மாத்திரை சாப்பிடச் சொல்லியிருக்காரு.” 

“என்ன பிரயோசனம் அதான் உன் கருமுட்டைக்கு குழந்தையை உருவாக்கும் திறன் இல்லைன்னு கைவிரிச்சுட்டாங்களே…” 

சிறிது நேரம் எதுவும் பேசாமல் மௌனமாக இருக்கிறாள் நந்தினி. 

“அத்தை இப்படி சொல்றேன்னு தப்பா நினைக்காதே. இந்த விஷயத்தில் பெண்களாகிய நாம் தான் பேசி நல்ல முடிவெடுக்கணும். என் மகனுக்கு வாரிசு இல்லாமல் அவன் வாழ்க்கை முடியக்கூடாது. நீ மனசு வச்சால் மட்டும்தான் அவன் வாழ்க்கையில் நல்லது நடக்கும்.” 

“நான் என்ன செய்யணும். சொல்லுங்க அத்தை” 

“பெரிசா ஒண்ணுமில்லை. உன் வாழ்க்கையை நீ இன்னொருத்தியுடன் பகிர்ந்துக்க தயாராக இருந்தால் மட்டும் போதும். 

ரகுவரனுக்கும் ஒன்றும் வயசாகலை. குழந்தை பெத்துக்கிற தகுதி அவனுக்கு இருக்கு. 

ஒரு நல்ல பெண்ணாக பார்த்து இரண்டாம் தாரமாக கட்டிவச்சால், அடுத்தவருஷமே குழந்தை பிறக்கப் போகுது. 

இது ஒன்றும் உலகத்தில் நடக்காத விஷயமில்லை. என்ன, இது நடைமுறைப்படுத்தறது உன் கையில் தான் இருக்கு. நீதான் ரகுவரன் கிட்டே பக்குவமாக இதைபத்தி பேசணும்.” 

மனம் கனக்க நந்தினியின் கண்களில் கண்ணீர் பெருகுகிறது.

“என்ன நந்தினி நான் சொல்றது சரிதானே. யோசிச்சு பாரு. உனக்கும் சரின்னு படும். 

வாழ்க்கையை இப்படியே வெறுமையாக கழிக்க முடியாது நந்தினி. 

உன்னை விட்டுட்டு வரச்சொல்லலை. உன்னோடு சேர்த்து இன்னொரு பெண்ணுடனும் வாழச் சொல்றேன். அதுவும் குழந்தைக்காக நான் சொல்றதை நல்லவிதமாக புரிஞ்சுக்கிட்டு, ரகுவரன் கிட்டே இதை பத்தி பேசு” 


‘இனியும் தள்ளிப்போட வேண்டாம். இன்று நந்தினியிடம் ஆதியை தத்தெடுப்பது பற்றி பேச வேண்டும். 

மாலதியும் இன்னும் இரண்டு வாரத்தில்கிளம்பப் போகிறாள். வக்கீல் மூலம் பேசிதத்தெடுப்பதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்தாகிவிட்டது. 

இன்னும் இரண்டு நாளில் ஆதியை வீட்டுக்கு அழைத்து வரவேண்டும்.’ 

ரகுவரன் உள்ளே வர, நந்தினியும் எதுவும் கேட்காமல் இரவு டிபன் வேலைகளை கவனிக்கிறாள். 

இரவு பால்டம்ளருடன் பெட்ரூமிற்குள் வர, கட்டிலில் உட்கார்ந்திருந்த ரகுவரன் 

“பால் டம்ளரை அப்படி வச்சிட்டு இங்கே வந்து உட்காரு நந்தினி. உன்கிட்ட முக்கியமான விஷயம் பேசணும்.” 

“நானும் இன்னைக்கு உங்ககிட்டே சில விஷயங்கள் பேசி தெளிவு படுத்திக்கலாம்னு இருக்கேன்.” 

நந்தினியின் சோர்ந்த முகத்தை அப்போது தான் கவனிக்கிறான். 

“சரி நீயே சொல்லு என்ன விஷயும்”. 

“இன்னைக்கு அத்தை என்கிட்டே போனில் பேசினாங்க.”

“அப்படியா என்ன விஷயம்” 

“குழந்தையை பத்தி” 

“குழந்தையை பத்தி பேச அவங்க கிட்ட என்ன இருக்கு”

“அவங்க உங்களை பெத்தவங்க. இல்லையா… மகன் வாழ்க்கை நல்லா இருக்கணும்னு நினைப்பாங்க தானே.” 

ஏதோ விஷயம் பேசியிருக்கிறார்கள் என்பது மட்டும்புரிய, அவளே சொல்லட்டும் என மெளனமாக இருக்கிறான். 

“நம்ம குடும்பம் வாரிசு இல்லாமல் முடியக் கூடாது. உங்களுக்கு குழந்தை பெத்துக்கிற தகுதி இருக்கு. 

நான்தான் அந்த தகுதியை இழந்து நிற்கிறேன். 

அதுக்காக இப்படியே வெறுமையாக வாழ்க்கையை கழிக்க முடியாது. 

நமக்கு கட்டாயம் குழந்தை வேணும்னு சொல்றாங்க.”

“அதுக்கு…” 

“கோபப்படாதீங்க… அவங்க சொன்ன விஷயத்தில் எனக்கும் உடன்பாடு தான். உங்களுக்கு இன்னொரு கல்யாணம் பண்ணினால் நிச்சயம் குழந்தை பிறக்கும். நான் சந்தோஷமாக என் வாழ்க்கையை வருபவளுடன் பங்கு போட்டு வாழத் தயாராக இருக்கேன். தயவு செய்து யோசனை பண்ணுங்க..” 

“போதும் நிறுத்தறியா… அம்மாவுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை… சரி… இப்ப நமக்கு குழந்தை வேணும். உன்னையும் என்னையும் அப்பா, அம்மாவாக நினைச்சு நம்மோடு இருக்கணும் அவ்வளவு தானே…” 

‘என்ன சொல்ல வருகிறான். புரியாமல் அவன் முகத்தை பார்க்கிறாள். 

“அதற்கான ஏற்பாடு பண்ணிட்டேன் நந்தினி. ஒரு மாசமாக இது விஷயமாக தான் அலைந்தேன். 

ஒரு ஹோமிலிருந்து நாலு வயது பையனை நம் மகனாக தேர்ந்தெடுத்து முறைப்படி தத்தெடுக்க எல்லா ஏற்பாடும் பண்ணிட்டேன். எல்லாம் நல்லபடியாக முடிஞ்சதும் உன்கிட்டே சொல்லலாம்னு இருந்தேன். 

ஆதி, ஆதித்தியா.. .அம்மாவை பார்க்கணும்னு எவ்வளவு ஆவலாக இருக்கான் தெரியுமா.

வெள்ளிக்கிழமை உன் மகன் வரப் போறான் நந்தினி. இனி நம் வாழ்க்கையில் எந்தக் குறையுமில்லை” 

கண்களில்கண்ணீர் தளும்பி நிற்க ரகுவரனை பார்க்கிறாள்.

“நிஜமாகவா…” 

“ஆமாம் நந்தினி… குழந்தைக்காக இன்னொரு வாழ்க்கை வேண்டாம். நம் மகன் நம்மை தேடி வரப்போகிறான். 

இதுதான் என் முடிவு. உனக்கு சம்மதம் தானே நந்தினி”.

அவன் மார்பில் சாய்ந்து வாய்விட்டு அழுகிறாள் நந்தினி. 


அம்மாவின் கன்னத்தில் மாறி, மாறி முத்தமிடுகிறான் ஆதி.. 

“அம்மா… ப்ளீஸ் நீயும் வரயேன்மா…” 

“இல்லடா கண்ணா… அம்மாவுக்கு சாமி இவ்வளவு நாள் உன்னை பார்த்துக்க சொன்ன மாதிரி இப்ப வேற வேலை கொடுத்திருக்காரு. அதை நான் பார்க்கணும். 

உன்னோட அப்பா, அம்மா உனக்கு கிடைச்சாச்சு… நீ உன் அம்மா சொன்னதை கேட்கணும். நல்லா படிக்கணும். உன் அப்பா மாதிரி பெரிய டாக்டரா வரணும். எல்லாமே சத்தியமாக நடக்கும். 

அம்மா உன்னை சந்தோஷமாக வழியனுப்பி வைக்கிறேன். போயிட்டு வா ஆதி.. 

டாடி உன்னை கூட்டிட்டு போக வெயிட் பண்றாரு பாரு” மாலதியை மனம் நெகிழ பார்க்கிறான் ரகுரவன். 

“இப்பவும் ஒன்றும் பெரிய விஷயமில்லை மாலதி. உண்மையை நந்தனிகிட்டே மட்டும் சொல்வோம் நீ எங்கேயும் போக வேண்டாம். ஆதி எங்க மகனாக இருந்தாலும் நீயும் உன் மகனின் வளர்ச்சியை எங்களோடு இருந்து பார்த்து சந்தோஷப்படலாம்.

கிரிதரன் குடும்பத்திற்கு தெரியாமல், நீதனியாக இருக்கலாம். உன் மகனை பிரிய வேண்டிய அவசியமில்லை மாலதி. ” 

“வேண்டாம் டாக்டர் இது என்னைக்கும் சரிவராது. 

நான் எடுத்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை. நான் சந்தோஷமாக கிளம்பறேன். என் மகனை அவனுக்குரிய இடத் தில் சேர்த்துவிட்டேன். கடவுள் அந்த சந்தோஷத்தை எனக்கு கொடுத்திருக்கார். தயவு செய்து நிம்மதியாக கிளம்புங்க.” 

“என்னைக்கு உனக்கு ப்ளைட் மாலதி…” 

“பத்தாம் தேதி…” 

“வேறு எதுவும் வேலை இருக்கா…” 

“எல்லாம் முடிஞ்சாச்சு… நான் சொன்ன மாதிரி நிம்மதியாக கிளம்பறேன். கிளம்பற அன்னைக்கு என்னோடுபெங்களூரு. வந்து ப்ளைட் ஏற்றிவிட்டால் மட்டும் போதும். 

அதுவும் நானே போயிடுவேன்னு சொல்றேன். நீங்க தான் கேட்க மாட்டேங்கிறீங்க… 

“ஓ.கே.மாலதி. ஆதி அம்மாவுக்கு பை சொல்லு…” கலங்கும் கண்களைமறைத்தவளாய்கை அசைக்கிறாள் மாலதி. 

“உன்னைப் போல தியாகி யாருமே இருக்கமாட்டாங்க… மாலதி… எனக்கே மனசுதாங்கலை.. ஆதி இல்லாமல் வீடே வெறிச்சுன்னு இருக்கு. சரி வா சாப்பிடலாம்.” 

“எனக்கு உண்மையில் மனசுக்கு நிறைவா இருக்கு விஜி… என் மகனை பிரிந்தேன்கிற வருத்தம் இல்லை. அவனுக்குரிய இடத்தில் அந்த குடும்பத்தில் வாரிசாக வளரப் போறான்ங்கிற நிம்மதி இருக்கு.’ 

சொல்லும் சிநேகிதியை பரிதாபத்துடன் பார்க்கிறாள் விஜி.


கார் ஹார்ன் சப்தம் கேட்டு, கையில் ஆரத்தி தட்டுடன் வேகமாக வெளியே வருகிறாள் நந்தனி. 

காரிலிருந்து இறங்குகிறான் ஆதி… 

துருதுருவென்ற அந்த திராட்சை விழிகள் நந்தனியை பார்க்கிறது. 

“டாடி இவங்க தான் என் அம்மாவா..” 

“ஆமாம் ஆதி “

அம்மா ஓடிவந்து அவள் கால்களை கட்டிக்கொள்ள, மெய்மறந்தவளாய் ஆரத்திதட்டை கீழே வைத்து அவனை அள்ளி அணைக்கிறாள். 

“என் செல்லமே… இவ்வளவு நாள் எங்கேடா போனே… இந்த அம்மாவை உனக்கு பிடிக்குதா…” 

அவன் கன்னத்தில் முத்தமிடுகிறாள். 

“உங்களைமட்டுமில்லை, டாடியையும் எனக்கு ரொம்பவே பிடிச்சிருக்கு.”

சொன்னவன், அவள் எதிர்பாராமல் அவள் கன்னத்தில் முத்தமிட, 

“என்னங்க… ஆதி நம் மகன். இனி நமக்கு எந்த குறையும் இல்லை. ” 

சந்தோஷம் பிடிபடாமல் வார்த்தைகள் தடுமாற, 

“சரி, நந்தனி முதலில் உன் மகனுக்கு ஆரத்தி சுற்று. உள்ளே போகலாம்”. 

புன்னகையுடன் சொல்கிறான் ரகுவரன். 

இவ்வளவு சந்தோஷமும் இவ்வளவு நாள் இந்த வீட்டுக்குள்தான் இருந்ததா என்று வியக்கும்படி பொழுதுகள் உற்சாகத்துடன் போகிறது. 

வந்து நான்கு நாட்களிலேயே ஆதியும், நந்தினியும் மிகவும் நெருங்கி விட்டார்கள். 

அம்மா அம்மா என்று ஆதி நொடிக்கு நாலுமுறை அழைப்பதும், ஆதி இதை சாப்பிடு, இங்கே வா குளிக்கலாம் மொட்டைமாடிக்குபோகலாம் என்று அவன் தான்உலகம் என்பதுபோல தன்னையே மறந்திருக்கிறாள் நந்தினி. 

“என்னங்க… நமக்கு குழந்தை இல்லை வாழ்க்கை வெறுமையாக போகுதுன்னு அத்தை ரொம்பவும் கவலைப்பட்டாங்க… நமக்கான சந்தோஷம் கிடைச்சிருச்சு. நம்ம மகன் நம்மகிட்டே வந்துட்டான்னு அவங்களுக்கு தெரிவிக்க வேண்டாமா… 

“போனில் வேண்டாம் நந்தினி நேரில் போய் சந்தோஷப் படுத்துவோம் ’” 

“ஆமாங்க அதுதான் சரி! அப்படியே உங்க தம்பியையும் புனவாவையும் வரச் சொல்லுவோம், அவங்களும் நம் மகனை பார்க்கட்டும்.” 

நந்தனி சொல்ல ரகுவரன் பதில் சொல்லாமல் அமைதியாக இருக்கிறான். 


“நானே இந்த அளவு எதிர்பார்க்கலை மாலதி. நந்தினியும் ஆதியும் ஒருத்தரையொருத்தர் பிரியாமல் அவ்வளவு க்ளோஸ் ஆக இருக்காங்க… 

ஆதியுடன் இரண்டுமாசம் இருந்துட்டு அப்புறம்தான் ஸ்கூலுக்கு அனுப்புவேன்னு நந்தனி கண்டிச்சு சொல்லிட்டா…” 

மாலதியின் மனம் பூரிக்கிறது. 

“ஆதிக்கு ஒரு நல்ல அம்மா, அப்பா கிடைச்சுட்டாங்க… “நாளைக்கு ஆதியோட எங்க கிராமத்துக்கு போறோம். மாலதி கிரிதரனையும் வரச் சொல்லியிருக்கேன். எங்க மகனை எல்லாருக்கும் அறிமுகப்படுத்த போறேன்”.ரகுரவன் சொல்ல,, 

“எந்த காரணம் கொண்டும் ஆதி…”

“புரியுது மாலதி.. யாருக்கும் எதுவும் தெரியவராது. 

முறைப்படி அவனை என் மகனாக தத்தெடுத்ததாக சொல்வேன். 

உன் வாழ்க்கையை தியாகம் பண்ணி, எங்க குடும்பத்தை வாழவச்சுருக்கே மாலதி. அதை எந்த நாளும் மறக்கமாட்டேன்” 

அன்போடு சொல்கிறான் ரகுரவன். 


சூப்பர் மார்க்கெட்டில் சாந்தி, சித்தியுடன் வந்திருக்க, சாமான்கள் வாங்கிக் கொண்டு வாசலுக்கு வந்ததும் 

“நான் சொன்னேன் இல்லையா.. உங்க டாக்டர் அடிக்கடி அந்த பெண் மாலதியை தேடி வர்றார்ன்னு அதோபார், அவன் ராட கார் அவங்க வீட்டு வாசலில் நிக்குது.” 

சித்தி சுட்டிக் காட்ட, 

சாந்தியும் கவனிக்கிறாள். 

மாலதி வேலையை விட்டு நின்ற பிறகும், டாக்டர் அவளுடன் தொடர்பில் இருக்கிறார். 

அவளுக்கு நாலுவயதில் மகன் இருப்பதா சொன்னாளே… அப்படியிருந்தும் அவளுடன்… 

வேண்டாம் டாக்டர் நல்லவர் இப்படியெல்லாம் யோசிப்பது தப்பு.’ 

“எனக்கொன்னவோ, அந்த டாக்டர் தான் அந்த பெண்ணை இங்கே வரவழைச்சு குடிவச்சிருப்பாருன்னு தோணுது. எத்தனை வருட பழக்கமோ? இதுக்கு முன்னால பெங்களூரில் இருந்தாளாம். 

அந்த பிள்ளை கூட டாக்டருடையதாக இருக்கலாம்.யாருக்கு தெரியும் புருஷன் வெளிநாட்டில் இருப்பதாக பொய் சொல்லி இவர் இன்னொரு குடும்பம் நடத்தராரோ என்னமோ…. 

அதனால தான் தனக்கும் குழந்தை பிறக்கவில்லை என்பதை கூட பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அதான் பேர் சொல்ல இங்கே ஒரு மகன்… பேர்கூட ஆதி ஆதித்தியா… இருக்கானே”

“சித்தி.. விஷயம் தெரியாமல் பேசக்கூடாது.”

“கண்ணுக்கு நேராக வெட்டவெளிச்சமாக தெரியும்போது நம்பாமல் எப்படி இருக்க முடியும். அது சரி, பெரிய இடத்து விவகாரம் நமக்கெதுக்கு கை நிறைய சம்பாத்தியம் அவரால் சமாளிக்க முடியும் வா… நாம் போகலாம்.. 

அபூர்வமாக இன்னைக்குவீட்டுக்கு வந்திருக்கே, உனக்கு பிடிச்சதை செய்துதரேன்”. 

மனம் குழம்ப தூரத்தில் நிற்கும் டாக்டரின் காரை திரும்பி, திரும்பி பார்த்தபடி நடக்கிறாள் சாந்தி. 

அத்தியாயம்-11

கார் கிராமத்தை நோக்கி செல்ல, 

“என்னங்க, உங்க அண்ணன் என்ன விஷயம்னு சொல்லாமல் கிராமத்துக்கு வாங்க முக்கியமான செய்தி சொல்லணும் நம்ம குடும்பம்ஒரே இடத்தில்இருந்தா நல்லது. நீயும், புவனாவும் புறப்பட்டு வாங்கன்னு சொன்னாரு. என்னவா இருக்கும்.” 

புவனா கேட்க, 

“எதுக்கு இப்படி பரபரக்கிற நேரில் போனதும் தெரியப் போகுது.” 

கிரிதரன் அவளுக்கு பதில் சொல்ல, 

“எனக்கென்னவோ, அத்தை பேசியதில் மனசுமாறி, நந்தனி அக்கா உங்க அண்ணனுக்கு இன்னொரு கல்யாணம் பண்ணி வைக்க முடிவு பண்ணிட்டாங்கன்னு நினைக்கிறேன்.” 

“என்ன உளர்றே…” 

“நான் ஒன்றும் உளரலை… எங்கம்மாவும் உங்கம்மாவும் இது விஷயமா பேசியிருக்காங்க. உங்க அண்ணன் சம்மதம் சொன்னால், என் சித்தி மகள் புஷ்பாவை கல்யாணம் பண்ணி வைக்கப்போவதாக இருக்காங்க.” 

“அப்படியெல்லாம் இருக்காது. அண்ணன் ஒரு பொழுதும் அண்ணியை விட்டுத் தரமாட்டாரு. 

குழந்தை இல்லைன்னு இன்னொரு கல்யாணமா நீயாக கற்பனை பண்ணாமல் பேசாம வா.” 

பின்சீட்டில் தூங்கும் குழந்தைகளை திரும்பி பார்த்தவள், “குழந்தை இல்லைன்னா வாழ்க்கையே நரகமாயிடும் நீங்க புரியாமல் பேசாதீங்க…” 

பேச்சை அத்துடன் முடிக்கிறாள். 

கார் வந்து நிற்க, 

ஆவல் தாங்காமல் அத்தை, மாமா, கணவனுடன் வெளியே வருகிறாள். 

நந்தினி அக்காவும், அத்தானும் வந்துவிட்டார்கள்.

“வா ரகு வாம்மா..” 

வரவேற்றபடி வந்த வைதேகி, அவர்களுடன் நான்கு வயது மதிக்கத் தக்க சிறுவன் இறங்குவதை பார்த்து கேள்விக்குறி முகத்தில் தெரிய, 

“யாருப்பா இது”

கேட்க, 

“உள்ளே வாங்க விபரமாக சொல்றேன்…” 

ரகுவரன் நந்தினி ஆதியோருடன் உள்ளே வருகிறான். 

“இப்ப சொல்றேன் எல்லாரும் கேளுங்க… 

இவன் நம் குடும்பத்தில் ஒருவன் 

என்னுடைய உறவுகள் எல்லாம் இனி இவனுக்கும் உறவகள்” 

சொன்னவன், 

“ஆதி இங்கே வா, தாத்தா பாட்டிக்கு சித்தி, சித்தப்பாவுக்கு வணக்கம் சொல்லு,” 

பிஞ்சு விரல்களை குவித்து வணக்கம் சொல்லும் அந்த சிறுவனை மனம் நெகிழ பார்க்கிறார் சண்முகம். 

‘யார் பெற்ற பிள்ளையோ இன்று என் மகனுக்கு அப்பா என்ற அடையாளத்தை தந்து அவன் குடும்பத்தில் ஒருவனாகி விட்டான் எப்படியோ குழந்தை இல்லை என்ற குறை மறைந்து அவர்கள் சந்தோஷமாக இருக்கட்டும்.’ 

அவர் மனம் நினைக்க, 

“இங்கே தாத்தா கிட்டே வாப்பா ராஜா”

அன்போடு அழைக்க 

வைதேகி கோபத்தின் உச்சிக்கு போகிறாள். 

“என்னங்க, உங்களுக்கென்ன பைத்தியமா, யாரோ ஒரு சிறுவனை அழைச்சுட்டு வந்து, இனிமேல் இவன் என் மகன்னு சொல்வானாம் நாம் உடனே வாப்பா பேரான்னு கொஞ்சணுமாம். என்னங்க இது.. எதுக்கு இப்படியொரு முட்டாள்தனமான காரியம்.” 

சொன்னவள், 

மகனருகில் வருகிறாள். 

“இங்கே பாரு ரகு குறை உன் கிட்டே இல்லை, இப்ப உனக்கு கல்யாணம் பண்ணிவச்சாலும் உன் குழந்தைக்கு தந்தையாக முடியும் .அப்படியிருக்கும்போது யாரோ பெத்த பிள்ளைக்கு அப்பான்னு சொல்றே…இதை என்னால் ஒத்துக்க முடியாது.” 

புவனா வாயடைந்து போய்நிற்க, கிரிதரன் துருதுருவென்ற விழிகளுடன் அங்குமிங்கும் மிளர பார்த்தபடி நிற்கும் சிறுவனை பார்க்கிறான். 

இப்படியொரு எதிர்ப்பு வரும் என்பதை எதிர்பார்க்காத நந்தினி தலை குனிந்து நிற்கிறாள். 

“அம்மாதயவு செய்து கோபப்படாதே! உன் எண்ணம் என்ன, நானும் நந்தினியும் குழந்தையுடன் சந்தோஷமாக இருக்கணும் அதுதானே… இப்ப அதுதானே நடக்குது. 

இவன் எங்களுக்கு பிறக்காட்டியும் இவன் எங்க பிள்ளை தான்மா… முறைப்படி இவனுக்கு நாங்க அப்பா, அம்மான்னு ஆகிட்டோம்… 

ரத்தபந்தத்தால் உருவாகாட்டியும், அன்பால் உருவான இவர்கள் உறவு தொடரும்மா..ப்ளீஸ் எங்க மனசை புரிஞ்சுக்கோங்க…” 

“வைதேகி இது அவங்க வாழ்க்கை. இந்த பிள்ளையோடு இவர்களால் நிறைவாக வாழமுடியும்னா வாழட்டுமே இதை நாம் ஏன் தடுக்கணும். அவங்க சந்தோஷம் தானே நமக்கு முக்கியம். கள்ளம் கபடமில்லாத அந்த குழந்தையின் முகத்தை பார்த்துட்டு பேசு வைதேகி”. அவள் கோபம் இப்போது நந்தினியின் பக்கம் திரும்புகிறது. 

“எல்லாம் உன்னால்தான் உன் வாழ்க்கையை விட்டு கொடுக்க உனக்கு இஷ்டமில்லை அப்படித்தானே… நாங்க என்ன பாவம் செய்தோம்.. யாரோ பெத்தபிள்ளையை எங்க குடும்ப வாரிசுன்னு சொல்றதுக்கு.. 

அவன்தான் இப்படி ஒருகாரியம் செய்தால், உனக்கு எங்கே போச்சு புத்தி. 

இன்னொரு கல்யாணம் பண்ணி குழந்தை பெத்துக்கலாம்னு சொல்ல உனக்கு மனசு வரலை. 

இவ்வளவு சுயநலவாதியா இருக்கக் கூடாது. 

என்ன பெண் ஜென்மம் நீ. சை! உன் பிறப்பே தேவையில்லாதது.” 

கோபத்தில் வார்த்தைகள் வரம்பு மீறி வர, அதற்கு மேல தாங்காதவனாய் 

“போதும் நிறுத்துங்க! இவனை எங்க மகனாக நாங்க ஏத்துக்கிட்டோம். உங்களுக்கு இஷ்டமில்லை பரவாயில்லை. நாங்க கிளம்பறோம். எப்ப உங்க மனசு மாறுதோ அப்ப வர்றோம். 

அதுவரைக்கும் நாங்களும் இனி வரமோட்டோம். 

நந்தினி நீ ஏன் கண்கலங்கறே, பெரிய மனுஷங்க நம்ப மனசை புரிஞ்சுப்பாங்கன்னு நினைச்சோம். அது இல்லைன்னு ஆயிடுச்சு கிளம்பலாம்.” 

வந்த ஒரு மணி நேரத்தில்புறப்பட, 

“ரகு அவசரப்படாதே இருப்பா பேசுவோம்” சண்முகம் தடுக்க, 

“இல்லப்பா எங்களுக்கு இங்கே வரவேற்பில்லை தயவு செய்து தடுக்காதீங்க…” 

சொன்னவன், 

“ஏழுமலை பெட்டியை எடுத்து காரில் வை” 

சொல்ல, ‘கடவுளே ஒற்றுமையாக இருந்த குடும்பத்தில் விரிசல் வந்துவிட்டதே, என்ன கண்ணே பட்டுவிட்டது.’ 

வருத்தத்துடன் பெட்டியை காரில் ஏற்ற, 

“என்னங்க இது அவர் செய்த காரியத்தின் தப்பு அவருக்கு தெரியலை. நம்ம கிட்டே கோபப்பட்டுட்டு போறாரு. அத்தை அப்படி என்ன தப்பா சொல்லிட்டாங்க…” 

“தேவையில்லாமல் இந்த விஷயத்தில் நாம தலையிடக் கூடாது புவனா பேசாமல் இரு.”

“அப்படிவிட முடியாதுங்க… அத்தையும் மாமாவும் எவ்வளவு வருத்தப்படறாங்க பாருங்க” 

இந்த விஷயத்தில் யார் பக்கம் பேசுவது என்று தெரியாமல் “நான் போய் குழந்தைகளுக்கு சாப்பாடு கொடுத்து தூங்க வைக்கறேன். காலையில் நாமும் கிளம்பலாம்.” 

கிரிதரன் உள்ளே போக, 

அமைதியாக உட்கார்ந்திருக்கும் அத்தை, மாமாவிடம் புவனா. 

“கவலைப்படாதீங்க அத்தை. அத்தான் இப்படியொரு முடிவுக்கு வந்திருக்க வேண்டாம். இதுக்கெல்லாம் காரணம் நந்தினி அக்காதான். அவருக்கு இன்னொரு கல்யாணம் பண்ணி வைப்பதில் இவங்களுக்கு என்ன கஷ்டம்” 

எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதுபோல புவனா பேசுவது சண்முகத்திற்கு கோபத்தை வரவழைக்க, 

“என்ன பேசற புவனா., இதே நிலைமை உனக்கு வந்தால் ஏதோ ஒரு காரணத்திற்காக நாங்க இப்ப கிரிதரனுக்கு இரண்டாம் கல்யாணம் பண்ண முடிவு பண்ணி உன் வாழ்க்கையை அவளுடன் பகிர்ந்துக்கன்னு சொன்னால் நீ ஏத்துப்பியா” 

“என்ன பேசறீங்க… மாமா… நான் என்ன மலடியா.. இரண்டு பிள்ளைகளுக்கு தாய் ஞாபகம் வச்சுக்குங்க.. என் வாழ்க்கையில் ஏன் இன்னொருத்தி வரணும். 

நான் இருக்கும்போது இன்னொருத்திய தேடிப்போக என் புருஷன் கேடுகெட்டவன் இல்லை” ஆத்திரத்துடன் பதில் சொல்ல 

“போதும் புவனா நீயும் பதிலுக்கு பதில் பேசி எங்க மனசை கஷ்டப்படுத்தாதே. உள்ளே போய் குழந்தையை கவனி…” 

கோபமாக சொன்ன வைதேகி, அந்த இடத்தை விட்டு எழுந்து போகிறாள். 

ஊருக்கு வந்தபிறகும் புவனாவின் கோபம் குறையவில்லை. “நந்தினிக்கு பரிந்து பேசுகிறேன் என்று மாமா என்னை அவமானப்படுத்திட்டாரு. நீங்க உங்கப்பாவை ஒரு வார்த்தை கேட்லை.”

“என்ன கேட்க சொல்ற” 

“அவங்களுக்கு குழந்தை இல்லை அதனால இன்னொரு கல்யாணம்ங்கிற பேச்ச வந்தது. 

நம்ம குடும்பத்தில் இன்னொருத்தி வந்தால் நீ ஏத்துப்பியான்னு கேட்கிறாரு. இது உங்களை அவமானப்படுத்தற மாதிரி இல்லையா. என்னமோ நீங்க இன்னொருத்தியோடு குடும்பம் நடந்த தயாராக இருக்கிற மாதிரியும், நான் தடுக்கற மாதிரியும் சொல்றாரு.” 

நீண்ட வருடங்களுக்கு பிறகு, தான் காதலித்து ஏமாற்றிவிட்டு வந்த மாலதி அவன் நினைவுக்கு வருகிறாள். 

‘இந்த விஷயம் மட்டும் புவனாவுக்கு தெரிந்தால் அவ்வளவுதான். உத்தமபுத்திரன் என்று நினைத்துக் கொண்டிருக்கும் அவள் முன் கூனிகுறுகி நிற்க வேண்டும்’. 

“என்னங்க பேசாம இருக்கீங்க… “

“சரிவிடு புவனா ஏதோ கோபத்தில் அப்பா நாலு வார்த்தை பேசிட்டாரு.” 

“இன்னொன்றும் சொல்றேன். ஒரு சமயம் அத்தை, மாமா, மனசு மாறி, அவனை பேரனாக ஏத்துக்கிட்டாலும் குடும்ப சொத்துகளில் அவனுக்கு பங்கு இருக்கக் கூடாது! எல்லாம் நம் பிள்ளைகளுக்கு தான் சேரணும். அப்படி ஒரு நிலைமை வந்தால் நீங்க கண்டிச்சு சொல்லணும். 

அப்பவும் இப்படியே வாயை மூடிக்கிட்டு மௌன சாமியார் மாதிரி இருக்கக் கூடாது புரியுதா.” 

புவனா சொல்ல, 

“அப்படி நடக்கும்போது பார்ப்போம்.” 

பதில் சொல்கிறான் கிரிதரன். 


ஆதி விளையாடிக் கொண்டிருக்க 

குளித்து பூஜையறையில் சாமி கும்பிடும் நந்தினியின் வருகைக்காக சோபாவில் காத்திருக்கிறான் ரகுவரன். 

“என்ன நந்தினி சாமி கும்பிட்டாச்சா… கடவுள் இப்ப உனக்கு பிள்ளைய கொடுத்துட்டாரு. 

அப்புறம் என்ன கேட்டே” 

“என் பிள்ளையை அத்தையும், மாமாவும் பேரனாக ஏத்து க்கிற நாளை சீக்கிரம் கொடுன்னு வேண்டிக்கிட்டேன்”. 

“அதுவும் கட்டாயம் நடக்கும் நந்தனி. அப்புறம் இந்த மாசம் ஹாஸ்பிடல் அக்கவுண்ட்ஸ் பார்கணும். எனக்கு ஒரு இரண்டு மணி நேர வேலை இருக்கு சன்டே தானே லஞ்ச் எல்லாரும் ஹாட்டலில் சாப்பிடலாம். நீ எதுவும் செய்ய வேண்டாம்”. 

“அம்மா இந்த மோட்டார் பைக் நல்லாயிருக்கு ” 

“உனக்கு பிடிச்சிருந்தா எடுத்துக்க ஆதி”

“அப்புறம் இந்த ஸ்போர்ட்ஸ் கார்”

“அதுவும் உனக்குதான்”

“எனக்கு இவ்வளவு டாய்ஸா” 

கண்களை அகலவிரிந்து கேட்க, 

இதுமட்டுமல்ல இன்னும் அம்மா உனக்கு நிறைய டிரஸ் வாங்க போறேன். துணிக்கடைக்கு அடுத்து போகப் போறோம்.” 

சொன்னவள் குனிந்து அவன்கன்னத்தில் முத்தமிட, 

“தாங்க்ஸ்மா, உங்களை எனக்கு இவ்வளவு பிடிக்கும். கை களை அகலவிரித்து காண்பிக்க வாய்விட்டு சிரிக்கிறாள் நந்தினி. ஆதிக்கு பிடித்த மாதிரி நிறைய டீஷர்ட், பேண்ட் என எடு த்தவள் அவன் கைபிடித்து அழைத்துக் கொண்டு பில்போடும் கவுண்ட்டருக்கு வருகிறாள். 

“மேடம் நல்லாயிருக்கீங்களா…” 

அருகில் ஹாஸ்பிடலில் வேலை பார்க்கும் சாந்தி நிற்பதை பார்த்து முகம் மலர, 

“நீங்க எப்படி இருக்கீங்க சாந்தி. சன்டேன்னு ஷாப்பிங் கிளம்பிட்டீங்களா…” 

விசாரிக்கிறாள். 

“ஆமாம் கொஞ்சம் பர்சேஸ் வேலை இருந்தது.” 

சொன்னவள், அப்போதுதான் அவள் கைப்பிடித்து நிற்கும் சிறுவனை பார்க்கிறாள். 

“இவன் யாரு மேடம்…”

“உங்க கிட்டே சொல்லலையா… நாங்க இவனை எங்க மகனாகதந்தெடுத்திருக்கோம். பெயர் ஆதித்யா…” சொன்னவள். 

“ஆதி ஆண்ட்டிக்கு ஹலோ சொல்லு” 

ஆதியும் புன்சிரிப்போடு சொல்ல, சாந்தியின் முகம் மாறுகிறது

‘இவன் மாலதியின் பையன் இவனை தன் மகனாக அங்கீகாரம் செய்திருக்கிறார் டாக்டர் அப்படியானால் அவருக்கும் மாலதிக்கும் சித்தி சொன்னது போல, ஏற்கனவே…’

“என்ன சாந்தி, ஏன் உங்க முகம் மாறிப் போச்சு… என்ன விஷயம் சொல்லுங்க…” 

“ஒண்ணுமில்லை மேடம்… ஆதியை எங்கிருந்து அழைச்சுட்டு வந்தீங்க…” 

“எனக்கு தெரியலை… ஏதோ ஹோமிலிருந்துதான்னு சொன்னாரு… ஏன் கேட்கறீங்க…” 

குனிந்து ஆதியை பார்த்தவள், 

‘ஆதி நீ இங்கே அம்மா கிட்டே வர்றதுக்கு முன்னால எங்கப்பா இருந்தே. யாரு உன்ன பார்த்துக்கிட்டா…’ 

சாந்தி கேட்கிறாள் 

“நான் நிறைய பசங்களோடு இருந்தேன். அம்மா என்னை பார்த்துக்கிட்டாங்க. சாமி அவங்களுக்கு வேற வேலை கொடுத்துட்டாரு, இவங்க கிட்டே வந்துட்டேன்.” 

சொன்னதை அப்படியே சொல்ல, “சரி உன்னை பார்த்துக்கிட்டாங்களே அந்த அம்மா பெயர் என்ன…” 

பொய் பேசத் தெரியாத குழந்தை அழகாக, “மாலதி ” என்று சொல்ல, 

நந்தினி புரியாமல் சாந்தியை பார்க்க, 

“மேடம், நான் இப்படி சொல்றேன்னு தினைக்காதீங்க… டாக்டர் நல்லவர்தான். இருந்தாலும் சில விஷயங்களை கண்ணால் பார்த்தபிறகு நம்பாமல் இருக்க முடியல”

மனதில் சின்ன நெருடல் தோன்ற அவளை பார்க்கிறாள். “இந்த ஆதி, அந்த மாலதியின் மகன் தான். அவனை தான் டாக்டர் தத்தெடுத்து இருக்காரு.”

குழப்பத்துடன் பார்க்கிறாள் 

“அவர் அப்படி சொல்லலையே. மாலதி எப்படி அவள் பிள்ளையை கொடுப்பாள். நிஜமாக தான் சொல்றீங்களா சாந்தி “.

“தயவு செய்து பொறுமையா கேளுங்க… டாக்டர் அடிக்கடி மாலதி வீட்டுக்கு போறாரு. நாலுமாசமாகவே இது நடக்குது.

இப்ப அவள் மகனையே தத்தெடுத்து இருக்காரு. 

என்ன காரணம்னு தெரியலை. இப்ப மாலதி ஊரை காலி பண்ணிட்டு பெங்களூருக்கு போகப் போறதாக கேள்விப்பட்டேன். சித்தி அங்கே பக்கத்தில் இருப்பதால் இந்த விபரம் தெரியும். 

எனக்கும் எதுவும் புரியவில்லை. நீங்களும் பதட்டப்படாமல் பொறுமையாக டாக்டர் கிட்ட கேளுங்க. 

டாக்டர் ரொம்ப நல்ல மனிதர். ஆனால் இப்ப நடப்பதை தான் என்னாலும் நம்ப முடியலை.” 

‘இவள் சொல்வதை பார்த்தால் அந்த பெண் மாலதிக்கும் இவருக்கும் ரொம்ப காலமாகவே தொடர்பு இருந்திருக்கிறதா ஏற்கனவே பெங்களூரில் இருந்து இங்கு வந்ததாக சொன்னார்கள். அவள் கணவன் வெளிநாட்டில் இருப்பதாக சொன்னது பொய்யா… ஆதி மாலதியின் மகன் என்றால் அவனுடைய அப்பா யார்… 

‘ரகு ரகுவரனா….’

தலைசுற்றி மயக்கம் வரும் போல இருந்தது. 

ஆதியுடன் உடனே அங்கிருந்துபுறப்பட்டாள் நந்தினி.


“என்ன ஆச்சு நந்தினி, ஒரு வாரமாகவே உன் முகம் சரியில்லை. திரும்ப அம்மா ஏதும் போனில் பேசி சண்டை போட்டாங்களா”

“அதெல்லாம் இல்லை. ஆதியை பத்தி யோசனை பண்ணினேன். பாவம் பெத்தவங்க யாருன்னு தெரியாமல், அனாதை இல்லத்தில் இருந்திருக்கிறான். 

நாம் இங்கே குழந்தைக்காக தவம் இருந்திருக்கோம் கடவுள் எப்படியெல்லாம் கண்ணாமூச்சி விளையாடறாரு” 

“இப்ப என்ன, இவ்வளவு நாள் எப்படியோ யார் தயவுலயோ வளர்ந்துட்டான். இப்ப தான் நம்ப பிள்ளையாக நம்ப கிட்டே வந்துட்டானே… உன் பாசம், அன்பு எல்லாம் இனி அவனுக்கு தானே…” 

அவன் முகத்தையே கூர்ந்து பார்த்தவள், 

“நீங்க என்ன நினைக்கிறீங்க… நீங்களும்முழு மனசோடு அவனை மகனாக ஏத்துக்கிட்டீங்க இல்லையா” 

“என்ன நந்தினி இப்படி கேட்கற. என்னால் அவனை எந்த காலத்திலும் பிரிச்சு பார்க்க முடியாது. அவன் என் மகன். நம் குடும்ப வாரிசு. அந்த அருமை, பெருமையோடு நம் மகனாக வாழப் போறான். 

இனி உனக்கு எந்த குழப்பமும் வேண்டாம். நிம்மதியாக இரு நந்தினி. 

அப்புறம் சொல்ல மறந்துட்டேன். இரண்டொரு நாள்ல பெங்களூர் போற வேலை இருக்கு. மீட்டிங் ஒன்று இருக்கு. 

ஆதியை பத்திரமா பார்த்துக்க. 

வந்ததும், அவனை கூட்டிக்கிட்டு நாம ஒரு வாரம் கொடைக்கானல் போயிட்டு வருவோம்” 

ரகுவரன்சொல்ல, சாந்தி சொன்னது போல, இவர் மாலதியுடன் பெங்களூர் போகப்போகிறார். அவளை அங்கே குடித்தனம் வைக்கப் போகிறார். 

நிழல் வாழ்க்கையில் பிறந்தவனை, ஊரறிய மகனாக அறிமுகப்படுத்த தான் தத்தெடுத்து இருக்கிறார். இது உண்மையானால்…. 

இந்த நான்கு வருடமாக எனக்குத் தெரியாமல்… மாலதியுடன்… அதனால் தான் இரண்டாம் கல்யாணம் வேண்டாம் என்று மறுத்தாரோ…”

மனம் குழம்பித் தவிக்கிறது. 

“நான் கிளம்பறேன் நந்தினி, ஆதி அம்மாவோடு சமர்த்தா இருக்கணும். இரண்டு நாளில் அப்பா வந்துடுவேன். வந்ததும் நாம் ‘டூர்’ போகலாம்” 

கையசைத்து ‘டாடா’ சொல்ல, கார் கிளம்பிப் போகிறது. வேலை செய்யும் பெண்ணை கூப்பிட்டு 

“ஆதியை பத்திரமாக பார்த்துக்க. எனக்கு ஒரு அவசர வேலை இருக்கு கொஞ்ச நேரத்தில் வந்துடுவேன்.” 

ரகுவரன் கிளம்பிய அரை மணி நேரத்தில் அவளும் கிளம்புகிறாள். 

சாந்தியிடம் மாலதி இருக்கும் அட்ரஸ் வாங்கியதால் அந்த தெருவில் இருக்கும் சூப்பர் மார்க்கெட்டில் ஆட்டோவை நிறுத்தி இறங்குகிறாள். 

ரகுவரனின் கார், மாலதி வீட்டு வாசலில் நிற்பதை பார்த்ததும் துக்கம் தொண்டையடைக்கிறது. 

“ரெடியா மாலதி… புறப்படலாமா…” 

“கிளம்பியாச்சு… அக்கா கிட்டே என்ன சொல்லிட்டு வந்தீங்க” 

பெங்களூரில் ஒரு ‘மீட்டிங்’ அதுக்கு போறதாக சொல்லியிருக்கேன் 

உனக்கு நைட் இரண்டு மணிக்கு ‘ப்ளைட்’ உன்னை அனுப்பிட்டு, ஹோட்டலில் கொஞ்சம் நேரம் ‘ரெஸ்ட்’ எடுத்துட்டு மதியம் ‘லஞ்ச்’ முடிச்சு கிளம்பிடுவேன்” 

“உங்களுக்கு தான் சிரமம். இவ்வளவு தூரம் ‘டிரைவ்’ “

“நீ எங்களுக்கு எவ்வளவோ செய்திருக்கே மாலதி. உனக்காக இது கூட செய்யலைன்னா எப்படி. 

ஆதியை நேத்து அழைச்சுட்டு வரேன்னு சொன்னேன் நீ தான் வேண்டாம்னு சொல்லிட்டே…” 

“வேண்டாம் டாக்டர். அவன் உங்க மகன். அந்த திருப்தியோடும் சந்தோஷத்தோடும் கிளம்பறேன்.” 

“மனசுக்கு கஷ்டமாக இருக்கு மாலதி”

உண்மையான வருத்தத்துடன் சொல்கிறான். 

“எதுக்கு” 

“இப்படி ஒரு நல்ல மனசுள்ள பெண்ணை மனைவியாக அடைந்து வாழ என் தம்பிக்கு கொடுத்து வைக்கலை..” 

“சரி.. நடந்து முடிந்ததை பத்தி பேச வேண்டாம். நீங்களும், அக்காவும் ஆதியோடு நிறைவான வாழ்க்கை வாழணும்” 

“எல்லாம் நல்லபடியாக நடக்கும் மாலதி. நீ தயவு செய்து என்னோடு தொடர்பில் இருக்கணும். உன் மகனின் வளர்ச்சியை பார்த்து நீ சந்தோஷபடணும் மாலதி. மறுபடியும் உன்னை கெஞ்சி கேட்கிறேன். போனதும் எனக்கு போன் பண்ணு.” 

“ப்ளீஸ் டாக்டர். மறுக்கிறேன்னு வருத்தப்படாதீங்க. என்னை ப்ளைட் ஏத்தினதும் இந்த மாலதியை மறந்துடுங்க. நான் இனி உங்க வாழ்க்கையில் வரமாட்டேன்.சரி. கிளம்பலாமா” 

மன உறுதியுடன் இருக்கும் அந்த பெண்ணை நினைத்து நெகிழ்ந்தவனாய், பெட்டியை காரில் ஏற்றுகிறான். 

சூப்பர்.. மார்க்கெட்டில் பேருக்கு சில சாமான்கள் வாங்கி விட்டு யாருக்கோ காத்திருப்பது 

“அதோ பெட்டியுடன் வெளியே வருகிறான் ரகுவரன்.  அவனை தொடர்ந்து மாலதி.. 

அங்கு நிற்கும் பெண்ணிடம் விடை பெற்று முன்பக்க கதவை திறந்து ரகுவரன் அருகில் உட்கார கார் புறப்படுகிறது. 

கடவுளே எல்லாம் வெட்ட வெளிச்சமாகிவிட்டது. 

சாந்தி சொன்னது அத்தனையும் உண்மை. ரொம்ப வருஷமாக அவர்களுக்குள் தொடர்பு இருக்கிறது. எனக்கு தெரியாமல் இன்னொரு வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார். 

ஆதி அவர் மகன். இப்போது நான் என்ன செய்யப் போகிறேன். 

வேண்டாம். நான் அவருடன் வாழ தகுதியில்லாதவள் உரிமையுள்ளவள் அவள் தான். மகனுடன் இருவரும் சிறப்பாக வாழட்டும். உண்மை தெரிந்த பிறகு… நான் என் இடத்தை விட்டுக் கொடுத்து ஒதுங்குவது தான் நல்லது. 

அத்தியாயம்-12

“என்னம்மா நந்தினி. என்னாச்சு ஏன் குரல் ஒரு மாதிரி இருக்கு. உடம்புக்கு முடியலையா…”

“மாமா சில முக்கிய விஷயங்களை முடிவு பண்ண வேண்டியிருக்கு. நீங்களும், அத்தையும் உடனே புறப்பட்டு வாங்க…” 

“என்னம்மா ஆச்சு. அந்த பையன் ஆதி நல்லாயிருக்கானா… என்ன பிரச்சனை. ரகுவரன் எங்கே அவன் கிட்டே போனை கொடும்மா” 

“வேண்டாம் மாமா, தயவு செய்து இப்போதைக்கு அவர்கிட்டே பேச வேண்டாம். நீங்க புறப்பட்டு வாங்க. நேரில் சொல்றேன்” 

நந்தினி சொன்ன அனைத்தையும் கேட்டவர்கள் சிலையாக அமர்ந்திருக்கிறார்கள். 

“நம்ப முடியலை நந்தினி. என் மகனா இப்படியொரு காரியம் செய்திருக்கான். 

உன்மேல் அளவு கடந்த பிரியம் வைத்திருப்பவன், எப்படி இன்னொருத்தியுடன் வாழ முடியும்..” 

சண்முகம் சொல்ல, 

“நம்பிதான் ஆகணும் மாமா. நானே என் கண்ணால் நேரில் பார்த்துட்டேன். அவளுக்கு குடித்தனம் வைக்க பெங்களூர் போயிருக்காரு.” 

ஆதியை மடியில் வைத்தபடி உட்கார்ந்திருக்கும் வைதேகியிடம் வருகிறாள். 

“இப்ப உங்களுக்கு திருப்தியாக இருக்கும். ஆதி உங்க பேரன் தான். 

இப்ப நான் தான் இந்த குடும்பத்தில் இருந்து விலக வேண்டியவள். 

உங்க மகனுக்கு குழந்தைக்காக இன்னொரு கல்யாணம் பண்ணிவைக்க விரும்பினீங்க. 

இப்ப அவர் குழந்தையோடு ஒருத்தி இருக்கா. அவளையே நீங்க கல்யாணம் பண்ணி வைக்க சந்தோஷமாக சம்மதிக்கிறேன். 

என் வருத்தமெல்லாம் என்ன தெரியுமா. அஞ்சு வருஷம் என்னோடு வாழ்ந்தவர்… ஒரு தடவை கூட அவருக்கு இன்னொருத்தியோடு, தொடர்பு இருப்பதை சொல்லவில்லை. இந்த நிமிஷம் வரை எனக்காக அவர் இருப்பதாக சொன்னதை நம்பினேன் அத்தை. 

இப்ப ஏமாந்து நிற்கிறேன். அதைத்தான் நான் என்னால தாங்க முடியலை. 

மனம் குமுறி மண்டியிட்டு அழ,, 

வைதேகி மடியில் உட்கார்ந்திருந்த ஆதி ஓடி வந்து. 

“அம்மா அழாதீங்க. நீங்க அழுதா எனக்கும் அழுகை வருது” பிஞ்சு விரல்களால் அவள் கண்ணீரை துடைக்க, சண்முகம் நடப்பதை ஜீரணிக்க முடியாமல், என்ன பேசுவது என்று தெரியாமல் அமைதியாக உட்கார்ந்திருக்கிறார். 

வாசலில் கார் வந்து நிற்கிறது. 

கை கொள்ளாமல் வாங்கிய பொருட்களுடன் உள்ளே வருகிறார். ரகுவரன். 

“ஆதி.. எங்கே இருக்கே. உனக்கு டாடி என்ன வாங்கிட்டு வந்திருக்கேன்னு வந்து பாரு” 

கூப்பிட்டபடி வந்தவன், அப்போது தான் ஹாலில்அம்மா, அப்பா உட்கார்ந்திருக்க. ஓரமாக நந்தினி நிற்பதை பார்க்கிறான். 

வாங்கிய சாமான்களை தரையில் வைத்தவன், முகம் மலர, 

“வாங்கம்மா, வாங்கப்பா, எப்போ வந்தீங்க, உங்க மனசு மாறிடுச்சா… எங்க மகனை ஆசிர்வாதம் பண்ண வந்தீங்களா..” 

சொன்னவன், 

“நந்தினி… நான் சொன்னேன் இல்லையா… அம்மா மனசு மாறும் நிச்சயம் ஆதியை பேரனாக ஏத்துக்குவாங்கன்னு.. அது நடந்துடுச்சு” 

சந்தோஷ குரலில் சொல்கிறான். 

“இருக்கட்டும் ரகு, நீ இப்ப எங்கே போயிட்டு வர்றே” சண்முகம் இறுகிய முகத்துடன் கேட்க, “நந்தினி சொல்லலையா. பெங்களூரில் ஒரு ‘மீட்டிங்’அதுக்கு போயிட்டு வரேன்” 

“பொய் சொல்றதை நிறுத்து ரகு. உண்மையை மட்டும் பேசு. ஆதியோட அம்மா யாரு.”

நேரிடையாக சண்முகம் கேட்க, 

சற்று தடுமாறுகிறான். ‘நான் ஊருக்கு போனதும் ஏதோ நடந்திருக்கிறது. இவர்களுக்கு சில விஷயங்கள் தெரிந்து இருக்கிறது. சமாளிக்க வேண்டும். 

“என்னை மன்னிச்சுடுங்கப்பா.. பொய் சொல்லணும்னு நினைக்கலை. எனக்கு தெரிஞ்ச பெண், குழந்தையை தத்து கொடுக்க நினைத்த போது… குழந்தையில்லாத நானே அவளை தத்தெடுக்கலாம்னு முடிவு பண்ணினேன். 

அதை தெரிவிக்க விரும்பாமல் நந்தினி கிட்டேயும் ஹோமிலிருந்து அழைச்சுட்டு வந்ததாக சொன்னேன்.” 

“சரி… அப்படியே இருக்கட்டும். ஆதியோட அம்மா பெயர் என்ன” 

சிறிது தயங்கியவன், 

“மாலதி” மெல்லிய குரலில் சொல்கிறான். 

“சரி, அவனுக்கு அப்பா இல்லையா..” 

“தெரியலை.. எங்கே இருக்கான்னு தெரியலை, நானும் கேட்கலை…” 

“போதும் நிறுத்து ரகு. என்மேல சத்தியமாக சொல்லு. ஆதி என் பேரன்தானே. நம்ப குடும்ப வாரிசுதானே. உண்மையை மறைக்காமல் பதில் சொல்லு.” 

கண்களில் கோபம் தெரிய பார்க்கிறார். 

‘இனி மறைத்து எந்த பிரயோசனமுமில்லை. யாருக்கும் தெரிய வேண்டாம் என்று நினைத்ததை சொல்ல வேண்டிய இக்கட்டான நிலைமை வந்து விட்டது.’ 

“ஆமாம்பா. ஏத்துக்கிறேன். ஆதி உங்க பேரன் தான் நம்ப குடும்ப வாரிசு தான்” 

இவ்வளவு நேரம் பேசாமல் அழுகையை அடக்கி ஓரமாக நின்ற நந்தினி, 

“போதுமா மாமா. அவர் வாயாலேயே ஏத்துக்கிட்டாரு. நீங்க தாராளமாக உங்க மகனுக்கு மாலதியை கல்யாணம் பண்ணி வைக்கலாம். 

நான்  அவருடன் வாழ தகுதியில்லாதவள். நான் எங்கேயாவது போறேன்.” 

அழுகையுடன் சொல்ல, 

“நந்தினி, போதும் நிறுத்தறியா. ஆதி அவங்க பேரன்தான்னு சொன்னேனே தவிர அவனுடைய அப்பா நான்தான்னு சொன்னேனா.. முட்டாள். உன்னை தவிர யாருக்கும் என் மனசில் இடமில்லை நந்தினி. என்னோடு வாழ்ந்த இவ்வளவு நாளில் இதைக் கூடவா நீ தெரிஞ்சுக்கலை.” 

“ஆதியின் அப்பா யார் தெரியுமா. இப்ப சொல்றேன். எல்லாரும் கேளுங்க. உங்க இளைய மகன் கிரிதரன்” 

அனைவரும் வாயடைத்து போகிறார்கள். 

மாலதி ஹாஸ்பிடலில் வேலைக்கு சேர்ந்ததிலிருந்து, அவர்கள் பேமிலி போட்டோவை பார்த்து மயங்கியது.. 

பிறகு அவள் மூலமே அவன் கேட்டறிந்த அவள் கதை.. இதற்கெல்லாம் காரணம் கிரிதரன் தான் என்று தெரிந்து உடைந்து போனது எல்லாவற்றையும் சொல்கிறான். 

“என்னப்பா அப்படி பார்க்கிறீங்க. தங்கமாக வளர்த்த உங்க பிள்ளை தான் இத்தனை பெரிய தவறை செய்திருக்கிறான். அது தெரிஞ்சா நீங்க உடைஞ்சு போவீங்கன்னு பயந்தேன். 

கிரிதரன் மேலே ஆத்திரம், கோபம் வந்துச்சு. 

மாலதி கிட்டே முடிவை விட்டுட்டேன். 

நீ என்ன சொல்றியோ அதை செய்யறேன். கிரிதரனை சட்டையை பிடிச்சு இழுத்துட்டு வந்து நிறுத்தச் சொல்றியா சொல்லுன்னு கேட்டேன். 

அந்த பெண் என்ன சொன்னாள் தெரியுமா… 

‘அவர் சட்டையை பிடிச்சு நியாயம் கேட்டு என்ன ஆகப்போகுது அவர் குடும்ப வாழ்க்கை சிதறிப் போகும். கிராமத்தில் கௌரவமாக வாழற அந்த பெரிய மனிதருக்கு தலை குனிவு ஏற்படும். 

ஒரு டாக்டராக, நல்ல மனிதராக மக்களுக்கு சேவை செய்யற உங்களுக்கு அவமானம் தேடி வரும். 

வேண்டாம் டாக்டர். போன ஜென்மத்தில் என்ன பாவம் செய்தேனோ… தெரியலை…அம்மா, அப்பா யாருன்னு தெரியாத அனாதையாக வாழறேன். ஒரு நல்ல குடும்பத்தை கெடுத்த பாவத்தை நான் செய்ய விரும்பலை. 

ஆனால் உங்க கிட்டே ஒரே ஒரு உதவி மட்டும் கேட்க தோணுதுனு சொன்னா” 

”பாவம்பா.. அந்த மகராசி உன்கிட்டே என்ன உதவி கேட்டா…” 

குரல் தழுதழுக்க கேட்கிறார் சண்முகம். 

“நான் தான் அனாதையாக வாழ்ந்துட்டேன். என் மகனும் அப்பன் யாருன்னு தெரியாமல் வாழக்கூடாது. 

நான் ஏற்கனவே எடுத்த முடிவு தான். 

இன்னும் இரண்டு மாசத்தில் வேலைக்கு ஆஸ்திரேலியா போறேன். திரும்பி இங்கே வரமாட்டேன். 

என் மகனை ஒரு நல்லவங்களுக்கு தத்து கொடுப்பதுன்னு முடிவு பண்ணி, அதற்கான ஏற்பாட்டையும் செய்துட்டு இருக்கேன். 

ஆனால் என் மகன் உங்க குடும்ப வாரிசுன்னு தெரிஞ்சபிறகு அவன் உரிமையுள்ள இடத்தில் வாழணும்னு என் மனசு ஆசைப்படுது. 

என்னைப் பற்றி உண்மை யாருக்கும் தெரிய வேண்டாம் அது உங்க மனசோடு இருக்கட்டும். 

என் மகனை உங்க மகனாக தத்தெடுப்பீங்களா டாக்டர். நீங்களும், உங்க மனைவியும் அப்பா, அம்மாவாக இருந்து என் மகனை வளர்த்து, அவனுக்கு ஒரு கௌரவத்தை, ஒரு அடையாளத்தை தரணும். 

உரிமையுள்ள இடத்தில் சேர்த்துட்டேன்கிற திருப்தியோடு, இந்த உலகத்தின் ஏதாவது ஒரு மூலையில் வாழ்ந்துட்டு போயிடுவேன்” 

“என்னப்பா சொல்ற.. இப்ப அந்த பெண் மாலதி…” 

“ஆமாம்பா. அவ சொன்னது மாதிரி ஆஸ்திரேலியா கிளம்பி போயிட்டா. அவளை தான் பெங்களூர் போய் ப்ளைட் ஏத்திட்டு வரேன்! அவ இனி எந்த காலத்திலும் நம்மோடு தொடர்பு கொள்ள மாட்டாள்” 

வருத்தம் குரலில் தெரிய சொல்கிறான். 

கண்ணீர் பொங்கி வர, காலில் விழாத குறையாக அவன் முன் நிற்கிறாள் நந்தினி. 

“என்னை மன்னிச்சிடுங்க. உங்க நல்ல மனசை புரிஞ்சுக்காம அஞ்சு வருஷம் உங்களோடு வாழ்ந்தும், உங்களை தப்பா நினைச்சுட்டேன்.” 

“பரவாயில்லை நந்தினி, இதை நீ நேரிடையாக என்கிட்ட கேட்டிருக்கலாம். எப்ப உன் மனசில் இப்படியொரு சந்தேகம் வந்ததோ அப்பவே கேட்டிருந்தால், இப்ப அம்மா, அப்பா வரைக்கும் தெரிஞ்சிருக்காது. 

நான் உன்கிட்டேயாவது உண்மையை சொல்லியிருக்கலாம்”

நந்தினியை சமாதானப்படுத்துகிறான். 

“அவ எங்களை கூப்பிட்டது நல்லது தான் ரகு. இப்ப என் மனசும் மாறிடுச்சி. ஒரு குழந்தை இல்லைங்கிறதுக்காக நந்தினி கிட்டே நான் எவ்வளவு கடுமையாக நடந்திருக்கேன்னு எனக்கே புரியுது. 

பாவம் இந்த குறை அவளாக விரும்பி கேட்டதில்லையே.

என்னை போன்ற மாமியார்கள் திருத்தணும் ரகு.

தாய்மை பேறுங்கிறது ஒரு பெரிய வரம் தான். இருந்தாலும் ரத்த சம்பந்தமில்லாத ஒரு குழந்தைக்கு தாயாகும் நல்ல மனசு எல்லாருக்கும் வராது. 

ஆதியை நீ அவக்கிட்டே கொடுத்ததும், தாய்மை பொங்க வாரியணைச்சாளே, அவளுக்கு முன்னால, இரண்டு குழந்தையை பெத்த நானெல்லாம் சாதாரணம்பா…” 

குரல் கம்ம சொன்ன வைதேகி, 

“நந்தினி நீயும் என்னை மன்னிச்சுடும்மா என் வார்த்தைகளால் உன்னை ரொம்பவே காயப்படுத்திட்டேன்” 

“ஐயோ என்ன அத்தை நீங்க பெரியவங்க. என் கிட்டே கோபப்பட உங்களுக்கு எல்லா உரிமையும் இருக்கு.” 

நந்தினி சொல்ல, அவள் கையை ஆதரவாக பிடிக்கிறாள் வைதேகி. 

“என்னங்க ரகு சொன்னதையெல்லாம் கேட்டுட்டு நீங்க எதுவும் சொல்லாமல் இருக்கீங்க.” 

கணவனை பார்க்க 

“நம்ப குடும்பத்துக்கு குலதெய்வமாக மாறி, குழந்தையையும் கொடுத்துட்டு, அவள் வாழ்க்கையயே தியாகம் செய்துட்டு போயிருக்கா அந்த மகராசி.. 

அந்த கடவுள் அடுத்த ஜென்மத்திலாவது அவளுக்கு ஒரு குடும்பத்தை நல்ல கணவனை கொடுத்து கௌரவமாக வாழ வைக்கணும். 

இதை தான் என்னால் நினைக்க முடியும். 

ஆனால் தப்பு செய்த கிரி, எந்த குற்ற உணர்வும் இல்லாமல் வாழ்ந்துட்டிருக்கான். 

ஒரு பெண்ணுக்கு செய்த துரோகம் மன்னிக்க முடியாதது. அவனை நேரில் நிற்க வைத்து நாலு வார்த்தை கேட்கணும். அப்பதான் என் மனசு ஆறும். 

நல்லதை சொல்லி தானே என் பிள்ளைகளை வளர்த்தேன். அவனால் எப்படி இப்படியொரு காரியம் செய்ய முடிந்தது. வேதனையாக இருக்கு வைதேகி ” 

“கண்ணீருடன் சண்முகம் சொல்ல, 

அப்பாவிடம் வருகிறான் ரகுவரன். 

“அப்பா… தயவு செய்து.. இந்த விஷயம் நம்மோடு போகட்டும்.

கிரியால் பாதிக்கப்பட்ட அந்த பெண்ணே, மன்னிச்சு அவன் குடும்பத்தோடு வாழட்டும்னு சொல்லிட்டு போயிட்டா.. 

அவளோட விருப்பம். ஆதி என் மகனாக வளரணும், இந்த சமூகத்தில் பேர் சொல்லும் நல்ல இடத்தை அவனுக்கு நாம் தரணும். 

அவள் விருப்பத்தை நிறைவேற்றுவோம்மா. ஆதி எந்த குறையுமில்லாமல் வாழட்டும்.”

“எப்படிப்பாதப்பு செய்தவன் அவன். நாமெல்லாம் குழம்பி தவிச்சு… உன்னை சந்தேகப்பட்டு… அவனால் தாயாக்கப்பட்டு… வாழ வழி தெரியாமல் அந்த பெண் ஊரை விட்டே போக, 

இதோ பாருடா.. பாவி.. இப்படியொரு ஒரு அழகான மகனை கொடுத்து, அந்த மகராசியை ஏமாற்றி ஓடி வந்தாயே… நீயெல்லாம் ஒரு ஜென்மமான்னு கேட்கணும் ரகு” 

“வேண்டாம்பா இதனால் என்ன நடக்கும் போனவளுக்கு தான் வாழ்க்கை கிடைக்கப் போகுதா… இல்லை புவனா கணவனின் தப்பை மன்னித்து, ஆதியை மகனாக ஏத்துப்பாளா… எதுவும் நடக்கப் போறதில்லைபா. இதனால் கிரியின் வாழ்க்கை நாசமாகும். 

புவனா.. அவளை பிரிந்து பிள்ளைகளோடு போய் விடுவாள். அவளோட அம்மா ஜென்மத்துக்கும் மாப்பிள்ளையை மன்னிக்க மாட்டாள். 

இந்த தண்டனையை அவனுக்கு கொடுக்க வேண்டாம்மா… அது மட்டுமில்லை, ஆதி அவனுக்கு பிறந்தவன் என்று தெரிந்தால் அது எங்களையும் பாதிக்கும். 

ஆதி எங்க மகன். தெய்வமான மாலதி எங்களுக்கு கொடுத்த பரிசு. எங்க உயிர் தொடும் அமுதம் ஆதி. அவனை சிறப்பாக வளர்ப்போம்மா. ஒரு தாய், தந்தையாக வாழ்ந்து காட்டுவோம். 

ப்ளீஸ்பா… எங்களை புரிஞ்சுக்குங்க” 

அப்பாவின் காலடியில் சிறு பிள்ளையாக விழுந்து ரகுவரன் கதற, மனம் நெகிழ, அவனை தொட்டு தூக்குகிறார் சண்முகம்.

– தொடரும்…

– உயிர் தொடும் அமுதம் நீ!, தேவியின் கண்மணி இதழில் (03-11-2021) வெளியான நாவல்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *