உயிர் தொடும் அமுதம் நீ!

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 31, 2023
பார்வையிட்டோர்: 4,193 
 
 

(2021ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12

அத்தியாயம்-7 

சோர்ந்த முகத்துடன் உட்கார்ந்திருக்கும் மாலதியை பார்க்க, ரகுவின் மனதில் பரிதாபம் தோன்றுகிறது. 

“எனக்கு பரவாயில்லை டாக்டர். நான் ஆட்டோ வச்சுட்டு போயிடுவேன். உங்களுக்கு சிரமம் வேண்டாம்” மெல்லிய குரலில் சொல்ல, “இதில் ஒன்றும் சிரமமில்லை. போற வழியில் உன்னைட்ராப் பண்ணப் போறேன். வீடு பக்கத்தில் தான்னு சொன்னாங்க.

இரண்டு நாளைக்கு வரவேண்டாம் மாலதி. வீட்டில் ரெஸ்ட் எடு கொடுத்திருக்க மாத்திரைகளை தவறாமல் சாப்பிடு. 

டென்சன் தான் பிரஷர் அதிகமானதற்கு காரணம். இரண்டு நாள் ரெஸ்ட் எடுத்தால் சரியாயிடும்” 

அவள் மறுக்க, கட்டாயப்படுத்தி காரில் அழைத்துச் செல்கிறான். 

மாலதியின் வீட்டருகில் கார் நிற்க, 

“உள்ளே வந்துட்டு போங்க டாக்டர்” 

மாலதியின் அழைப்பை ஏற்று காரிலிருந்து இறங்க, பக்கத்து வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த ஆதி ஓடி வர, 

பூட்டியிருந்த கதவை திறக்கிறாள். 

“இவன் தான் உன் பையனா மாலதி” 

அம்மாவின் புடவையில் ஒளிந்து கொண்டு அவனை பார்க்க, “ஆம்பிளை பையன் வெட்கப்படலாமா… இங்கே வா உன் பெயர் என்ன” 

அவனை அருகில் அழைத்து கேட்க, 

“ஆதித்யா. ஆனா எல்லாரும் ஆதின்னு கூப்பிடுவாங்க”

மழலை மாறாத குரலில் சொல்கிறான். 

”குட்” குட்டி பையன் இந்த வீட்டில் இருக்கான்றதை மறந்துட்டேன். நாளைக்கு வரும் போது, உனக்கு சாக்லெட்ஸ் வாங்கிட்டு வரேன். ஸாரி ஆதி” 

”உட்காருங்க டாக்டர். காபி எடுத்துட்டு வரேன்” 

“நீ சிரமப்பட வேண்டாம். இன்னொரு நாள் வந்து சாப்பாடே சாப்பிடறேன். நான் கிளம்பறேன்” 

அவன் விடை பெற்று காரில் ஏற, 

அவனை பார்த்தபடி உள்ளே வந்த விஜி, 

“யாரு மாலதி இது. உன்னை வீட்டில் விட்டுட்டு போறாரு. தெரிஞ்சவரா…” 

கேட்க, 

அதுவரை மனதில் அடக்கி வைத்திருந்த துக்கம் தொண்டையடைக்க, விஜியின் தோளில் சாய்ந்து ‘ஓ வென வாய்விட்டு அழுகிறாள் மாலதி 


“கடவுளே. என்ன சொல்ற. நீ சொல்றதெல்லாம் நிஜமா”.

“ஆமாம் விஜி. டாக்டரின் தம்பி தான் என்னை நம்ப வைத்து ஏமாற்றிய பாவி.” 

“அப்புறம் என்ன மாலதி. இன்னும் ஏன் பேசாமல் இருக்கே. அவன் யாருன்னு தெரிஞ்சாச்சு. நேராக அவங்க வீட்டிற்கே போய் நியாயம் கேளு. உன் வாழ்க்கையை விட்டுத் தராதே. நீ கையில் பிள்ளையோடு கஷ்டப்பட, உன்னை ஏமாற்றிய பாவி, குடும்பம், மனைவி, குழந்தைகள்னு சந்தோஷமா வாழ்ந்துட்டு இருக்கான்” 

கோபம் கொப்பளிக்க சொல்கிறாள் விஜி. 

“என்னை வேண்டாம்னு உதறிட்டு போனவரை தேடிப் போய் என்ன பிரயோஜனம் விஜி.

என்னையும், என் மகனையும் ஏத்துப்பாரா… முதலில் இவர் அவர் மகன்னு நான் சொன்னாலும் நம்புவாரா.. இல்லை அவர் மனைவி தான் தன் வாழ்க்கையை என்னுடன் பங்கு போடுவாளா?

வேண்டாம் விஜி. இவர் எங்கே இருக்கார்னு தெரியாமலேயே இருந்திருக்கலாம். 

இந்த நல்ல மனிதருக்கு தம்பியாக பிறந்து… என் வாழ்க்கையையே சூறையாடிட்டாரு.”

“முட்டாள் மாதிரி பேசாதே. தப்பு செய்தவன் அவன் தண்டனை அனுபவிப்பது நீ. இதென்ன நியாயம். நீ ஆஸ்திரேலியாவும் போக வேண்டாம். எங்கேயும் போக வேண்டாம். உன் பிள்ளையோடு இங்கேயே இரு பிள்ளைக்கு அப்பன் யாருன்னு தெரிஞ்சு போச்சு. 

அவன் மறுத்தால், டி.என்.ஏ. டெஸ்ட் பண்ணி, அவனுக்கு பிறந்தவன் தான் இந்த ஆதின்னு நிரூபிப்போம். அவனோட அண்ணனே ஒரு டாக்டர். அவருக்கு நியாயம், அநியாயம் தெரியாதா” 

“மனசு குழப்பமாக இருக்கு விஜி. இப்போதைக்கு என்னால் எதையும் யோசிக்க முடியலை” 

“சரி, சரி நீ ரெஸ்ட் எடு. ஆதி எங்க வீட்டில் இருக்கட்டும். நிதானமாக யோசித்து நல்லமுடிவுக்கு வருவோம்” 

சொன்னவள், 

“ஆதி, அம்மாவுக்கு உடம்பு சரியில்லை. ரெஸ்ட் எடுக்கட்டும். நீ வா எங்க போகலாம்’ 

கை பிடித்து அவனை அழைத்துச் செல்ல, கண்ணீருடன் படுக்கையில் சாய்கிறாள் மாலதி. 


“என்ன இன்னைக்கு லேட்டா வர்றீங்க. ஹாஸ்பிடலில் லேட்டாயிடுச்சா…” 

போர்டிகோவில் காரை நிறுத்தி இறங்கும் ரகுவரனிடம் கேட்க, 

“அன்னைக்கு ஷாப்பிங் போகும் போது பார்த்தோமே, மாலதி அவ வீட்டுக்கு போய்ட்டு வரேன்” 

“என்னாச்சு, ஏதாவது விசேஷமா” “உள்ளே வா… விபரமா சொல்றேன்” சோபாவில் சாய்ந்து உட்கார்ந்தவன். 

“மாலதி இன்னைக்கு ஹாஸ்பிடலில் மயக்கம் போட்டு விழுந்துட்டா..”

“ஐயோ…அப்புறம்…” 

“பயப்படற மாதிரி எதுவுமில்லை. ப்ரஷர் அதிகமாகி விழுந்துட்டா. ஏதோ டென்சன் தான் காரணம். அப்புறம் விசாரித்ததில், அவ ஹஸ்பெண்ட் வெளிநாட்டிலிருந்து வரவே இல்லையாம். தனிமையில் மகனுடன் இருக்காளாம். வாழ வேண்டிய வயசு… பார்க்கவே பாவமாக இருந்துச்சு. அதான் இரண்டு நாள் லீவு கொடுத்து வீட்டில் ரெஸ்ட் எடுன்னு சொல்லி அவளை வீட்டில் விட்டுட்டு வந்தேன்” 

சிறிது நேரம் மௌனமாக இருந்தவள், 

“பார்க்கவும் அழகாக இருக்கா… இந்த உலகில் தனியாக வாழறது எவ்வளவு கஷ்டம்… அவளுக்கு அம்மா, அப்பா யாருமில்லையா…” 

“அவள் அனாதை இல்லத்தில் வளர்ந்தவளாம்… 

இனிமேல் தான் அவள் கதையை கேட்கணும். நாளைக்கு போய் பார்த்துவிட்டு வரணும்.” 

“நானும் வரட்டுமா…” 

“நீ எதுக்கு நந்தினி. நான் ஹாஸ்பிடலில் இருந்து திரும்பும் “நீ போது அப்படியே போயிட்டு வந்துடுவேன். சரி எனக்கு தலை வலிக்கிற மாதிரி இருக்கு. உன் கையால ஒரு காபி போட்டுட்டு வா… பார்ப்போம்” 

நந்தினி எழுந்து உள்ளே போகிறாள். 

அத்தியாயம்-8

“புவனா… மாப்பிள்ளை கிட்டே கேட்டியா?” 

“கிராமத்துக்கு போறதை பத்தி தானே…”

“ஆமாம் சம்பந்தியை போய் பாத்திட்டு வரலாம்னு பார்க்கிறேன், நீயும், மாப்பிள்ளையும் வந்தால் நல்லா இருக்கும்.” 

“சொன்னேம்மா… அவருக்கு வேலை இருக்காம். பிள்ளைகளை அழைச்சுட்டு உன்னையும், என்னையும் போயிட்டு வர சொல்றாரு.” 

“அப்ப சரி, என்னோட காரிலேயே போகலாம். ஒரு நாள் தங்கிட்டு உங்க குல தெய்வம் கோவிலுக்கு போயிட்டு வருவோம்.” சொல்கிறாள் ஜானகி. 

ஊரிலிருந்து வந்திருக்கும் சம்பந்தியை புன்னகையுடன் வரவேற்கிறார்கள். 

“எங்களை பார்க்கணும்னு இவ்வளவு தூரம் வந்ததுக்கு ரொம்ப சந்தோஷம்.” 

பேரன், பேத்தியை அருகில் அழைத்து கொஞ்சுகிறார்கள் சண்முகமும், வைதேகியும்… 

“பிள்ளைங்க வந்தால் தான் வீடே நிறைஞ்சிருக்கும்”, வைதேகி சொல்ல, “பின்னே இல்லையா சம்பந்தி குழந்தை இல்லாத வீடு பாலை வனத்துக்கு சமம். வெறுமை குடி கொண்டிருக்கும் அந்த இடத்தில் சந்தோஷம் எப்படி வரும். மழலை செல்வம் தான் பெரிய சொத்து.” 

நீட்டிமுழக்கி ஜானகி சொல்ல எதுவும் சொல்லாமல் குழந்தை அஜயை தூக்கியபடி எழுந்து வெளியே போகிறார் சண்முகம். மட்டன், முட்டை மீன் என்று சம்பந்தி விருந்து தடபுடலாக நடக்கிறது. 

“கிராமத்து சுவையில் மட்டன் குழம்பு பிரமாதமாக இருக்கு”

உண்மையில் ருசித்து சாப்பிடுகிறார் ஜானகி. 

“ஒரு பத்துநாள்புவனாவோடு இருந்துட்டு போகலாம்னு வந்ே தன். ஒரு நாள் ஏதோ மீட்டிங் இருக்குன்னு பெரிய மாப்பிள்ளை வீட்டிற்கு வந்தாரு. அவரையும் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. ஆனால் அவர் முகத்தில் பழைய சந்தோஷம் இல்லை. எதையோ இழந்தது போல, சோர்வாகவே தெரிஞ்சாரு. மனசுக்குள் கவலை அதிகமாகிடுச்சு போலிருக்கு” 

ஜானகி சொல்ல வைதேகியின் முகம் வாடுகிறது. 

“என்ன பண்றது சம்பந்தி. அவன் விஷயம் தான் எங்களையும் தூங்க விடாமல் பண்ணுது. 

“எல்லாத்துக்கும் ஒரு விடியல் இல்லாமல் போகாது. அப்புறம் காலையில் உங்ககுலதெய்வம் கோவிலுக்கு போயிட்டு வரலாமா….” 

“தாரளாமாக போகலாம்… அந்த காத்தாயி அம்மனை பார்த்தால் மனதுக்கு கொஞ்சம் நிம்மதி கிடைக்கும்” சொல்கிறாள் வைதேகி. 

அபிஷேகம், ஆராதனை என தடபுடலாக சாமிகும்பிட்டு பிரகார மண்டபத்தில் வந்து உட்கார்கிறார்கள். 

சண்முகம் அங்கிருப்பவர்களுடன்பேசிக்கொண்டிருக்க,அஜய் அதிதி விளையாட ஆரம்பிக்க, 

”புவனா குழந்தைகளை பாரு.. விழுந்துடப் போறாங்க” வைதேகி சொல்ல, புவனா எழுந்து போகிறாள். 

“இதுதான் சரியான சந்தர்ப்பம். சம்பந்தியிடம் பேச்சை ஆரம்பிக்க வேண்டியது தான். 

“அம்மனை தரிசனம் பண்ணினது எனக்கும் மனசுக்கு நிறைவாக இருக்கு. என் தங்கை மகள் புஷ்பா… வயசாகிட்டே போது… கல்யாணம் கூடி வரலை. புவனாவுக்கு இரண்டு வயது மூத்தவள். காத்தாயி அம்மன் கிட்டே தான் அடுத்த வருஷத்துக்குள் மாலை எடுத்து கொடு.உனக்கு பொங்கல் வைக்கிறேன்னு வேண்டிக்கிட்டேன். 

“உங்க பிரார்த்தனையை அம்மன் கட்டாயம் நிறைவேத்துவாள்” 

சொல்கிறாள் வைதேகி. 

“நீங்க உங்க பெரிய மகனுக்காக ஏதாவது பிரார்த்தனை வச்சிருக்கீங்களா…” 

“ஊரில் கண்ணில் படற சாமிக்கெல்லாம் பிரார்த்தனை வச்சுருக்கேன். எந்த சாமியாவது கண் திறந்து பார்க்காதான்னு காத்திட்டிருக்கேன்….” 

“உங்க மருமகளால் குழந்தைக்கு தாயாக முடியாதுன்னு சொல்லிட்டாங்களாமே… புவனா சொன்னா…” 

“ஆமாம்… அதுதான் இப்ப எந்த முடிவுக்கும் வரமுடியாமல் குழம்பிப் போயிருக்கோம்” 

“எனக்கு ஒரு யோசனை தோணுது. தப்பா நினைக்க மாட்டீங்களே…”

“சொல்லுங்க சம்பந்தி. நல்ல விஷயமாக இருந்தால் யார் சொன்னால் கேட்டுக்க வேண்டியது தான்…” 

“நீங்க ஏன் உங்க பிள்ளைக்கு இன்னொரு கல்யாணம் பண்ணக் கூடாது”. கண்களை அகல விரித்து ஜானகியை பார்க்கிறாள். 

“உங்க பிள்ளைக்கு என்ன குறை சொல்லுங்க . ஆள் ராஜா வாட்டம் இருக்காரு. கை நிறைய சம்பாத்தியம் சொத்து சுகம் இருக்கு. எல்லாம் இருந்தும் குழந்தை இல்லைன்னா…. எதுவுமே பிரயோசனப்படாது. 

உங்க மருமகள் நந்தினிகிட்டே பேசுங்க.. அவளை வேண்டாம்னு ஒதுக்க சொல்லலை. இரண்டாம் தாரம் வந்து குழந்தை பிறந்தால் அவளுக்கும் சந்தோஷம் தானே… அவக்கிட்டே குறை இருப்பதால் தானே இப்படி ஒரு முடிவு எடுக்கிறோம்னு அவளும் புரிஞ்சுப்பா…. உங்க பிள்ளைக்கிட்டூ டயும் பேசி சம்மதிக்க வைங்க. ஊர் உலகத்தில் நடக்காதது இல்லை. குழந்தைக்காக இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிறது சகஜம் தான்” 

“என் மனசிலும் அப்படியொரு எண்ணம் வரத்தான் செய்யும். ஆனாலும் இது சரி வருமான்னு பயமும் வருது” 

“ஒன்றும் பிரச்சனையில்லை. உங்க எல்லாருக்கும், இரண்டாம் கல்யாணம் பண்ணுவதில் சம்மதம் இருந்தால் என் தங்கை கிட்டே பேசி அவ மகள் புஷ்பாவயே உங்க பெரிய புள்ளைக்கு கட்டி வைக்கிறேன்.. எங்க குடும்பத்தில் கல்யாணமான மறு வருஷமே எல்லாரும் இடுப்பில் குழந்தையோடு இருப்பாங்க.” 

முகம் மலர சம்பந்தியை பார்க்கிறாள். 

“என்ன சொல்றீங்க சம்பந்தி இதெல்லாம் நடக்குமா” 

“நீங்களும் உங்க மருமகள் நந்தினியும் மனசு வச்சால் நடக்கும். நீங்க உங்க மருமகள் கிட்டே முதலில் பேசுங்க” 

எப்படியோ விஷயத்தை சம்பந்தியின் காதில் போட்ட திருப்தியோடு எழுந்திருக்கிறாள் ஜானகி. 

மறுநாள் மதியம் ஒ.பி. முடிந்ததும், மாலதியிடமிருந்து அவள் *செல்லுக்கு அழைப்பு வர, ‘இவள் ஏன்கூப்பிடுகிறாள். திரும்ப ஏதாவது உடம்பு முடியாமல் போய் விட்டதா… ‘யோசனையுடன் எடுக்கிறான். 

“சொல்லு மாலதி… எப்படியிருக்க…. உடம்பு பரவாயில்லையா… “

“டாக்டர். ‘லஞ்ச்’க்கு வீட்டுக்கு போறதுக்கு முன்னால என் வீட்டிற்கு வந்துட்டு போக முடியுமா. கூப்பிடறேன்று தப்பா நினைக்காதீங்க. உங்க கிட்டே சில விஷயம் பேசணும்.” 

“கட்டாயம் வரேன்.” 

மனதில் குழப்பம். ‘என்னிடம் பேச என்ன விஷயம் இருக்கிறது. என் ஹாஸ்பிடலில் வேலை பார்க்கிறாள். நல்ல பெண் என்பதால் எல்லோரிடமும் காட்டும் அக்கறையை அவளிடம் காட்டினேன்’. மனசுக்குள் சின்ன தயக்கம் எட்டி பார்க்கிறது. 

இருந்தாலும் என்னதான் சொல்லப் போகிறாள் என்ற ஆவலில் புறப்படுகிறான். 

கார் சப்தம் கேட்டதும்… கதவை திறக்கிறாள் மாலதி.

“உடம்பு இப்ப எப்படியிருக்கு”

கேட்டவன் அவளை பார்க்க. கண்ணெல்லாம் சிவந்து முகம் வீங்கி இருக்கிறது. 

‘என்னாச்சு இவளுக்கு….’ 

“என்ன மாலதி அழுதியா… ஏன் இப்படி இருக்கே. உடம்புக்கு என்ன பண்ணுது” 

அக்கரையுடன் கேட்க, பொங்கி வரும் கண்ணீரை அடக்கியவள் 

“உட்காருங்க டாக்டர்… 

தயவு செய்து என் கதையை கேளுங்க. உங்ககிட்ட சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கேன். “ ரகுவரனுக்கு குழப்பம் இன்னும் அதிகமாக அவளையே பார்க்கிறான். 


அந்த பெரிய பங்களா கேட்டை திறந்து உள்ளே போகிறாள் மாலதி. 

மூடியிருந்த ரூம் கதவை திறக்க, 

“மாலதி.. வந்துட்டியாம்மா… வா…வா காலையிலிருந்தே உன்னை எதிர்பார்த்துட்டு இருந்தேன்.” 

படுக்கையில் ஸ்டோர்க் வந்து அசைய முடியாத நிலையில் இருக்கும் அந்த வீட்டு பெரியவள் அழைக்க “பெரியம்மா கொஞ்சம் லேட்டாயிடுச்சு… ஸாரிம்மா” சொன்னவள், விறுவிறுவென்று அவளுக்கு வேண்டிய உதவிகள் செய்கிறாள். 

“உங்க இல்லத்தில் எல்லாரும் நல்லாயிருக்காங்களா… உங்க மேடத்துக்கு அறுபது வயது பிறந்த நாள் சிறப்பாக கொண்டாடினார்களா” 

“ஆமாம்மா… அதற்காக தானே போனேன். வீட்டோடு உங்களுக்கு துணையாக இருக்க தான் அனுப்பியிருக்காங்க. இனிமேல் இப்படி போகமாட்டேன்” 

“பரவாயில்லம்மா… உன்னை மாதிரி இந்த சின்ன வயசில் யார் இப்படி பரிவோடு, அணுசரனையோடு இருக்காங்க… என் மகன் கிட்டே சொல்லி… உன் கல்யாணத்துக்கு நிறைய செய்யச் சொல்றேன்.’ 

“இருக்கட்டும்மா…இந்த அனாதைக்கு கல்யாணம் ஆகும் போது பார்ப்போம்.. அனாதை இல்லத்தில் வளர்ந்த எனக்கு உங்களை மாதிரி பெரியவங்க ஆதரவு கிடைச்சதே பெரிய விஷயம்.” 

சொல்கிறாள் மாலதி. 

அருகில் இருக்கும் மேன்சனில் தங்கி வேலைக்கு போய் வந்து கொண்டிருந்த கிரிதரன். ஒரு மாதமாகவே மாலதியை கவனிக்கிறான். 

‘பக்கத்து பங்களாவில் இருக்கும் பெண் என்ன ஒரு அழகு. சுடிதார், புடவை எது போட்டாலும் அழகாக இருக்கிறாள். வாசலில் எப்போதும் இரண்டு கார் நிற்கிறது. அவள் அண்ணன் போலிருக்கிறது’ என நினைத்துக் கொண்டான் மேலும் ‘அவன் கிரானைட் பாக்டரி வைத்திருப்பதாக கேள்விப்பட்டான். மாலதியை நேரில் சந்திக்கும் சந்தர்ப்பம் கிரிதரனுக்கு ஒரு நாள் கிடைத்தது. கோவிலுக்கு கிளம்பியிருப்பான் போலிருக்கிறது. கையில் அர்ச்சனை கூடையுடன் நடந்து வருபவனை பார்த்தாள். 

ஏதோ யோசனையில் எதிரில் வருபவனை கூட கவனிக்காமல் அவன் மேல் மோதுவது போல வர, 

“ஹலோ மேடம் பார்த்துவாங்க… இவ்வளவு பெரிய உருவம் எதிரில் வருவது தெரியலையா… “அப்போது தான் நிமிர்ந்து அவனை பார்க்கிறாள். 

“ஸாரி… பார்க்கலை…” 

இமைகள் படபடக்க அவனை பார்ப்பவளை அள்ளி விழுங்குவது போல பார்க்கிறான்… 

“இந்த பங்களாவில் தானே இருக்கீங்க….” 

“ஆமாம்.. கோவிலுக்கு போறேன்.”

“பார்த்தாலே தெரியுது. ரொம்ப பயபக்தியாக இருப்பீங்க போலிருக்கு”. ‘முன்பின் பழக்கமில்லாதவன் தெருவில் நிறுத்தி இவ்வளவு சகஜமாக பேசுகிறானே என்ற எண்ணம் வர தயக்கத்துடன் 

“நான் வரேன்…” அவனை தாண்டி நடக்க தொடங்க, 

“ஒரு நிமிடம்… பயப்படாதீங்க.. நான் ரொம்ப நாளாகவே உங்களை கவனிக்கிறேன். இதோ இந்த மேன்சனில் தங்கியிருக்கேன். ஐ.டி. கம்பெனியில் வேலை பார்க்கிறேன். என் பெயர் கிரிதரன். 

‘இவனை என்னிடம் அறிமுகப்படுத்தி கொள்ள அவசியம் என்ன..’ மனதில் கேள்வி எழ, 

“சரிங்க.. கோவிலுக்கு நேரமாச்சு….” 

“என் பேரை சொல்லி அறிமுகப்படுத்திக் கிட்டேன். உங்க பேரை நான் தெரிஞ்சுக்க கூடாதா…” 

“மாலதி” 

சொன்னவள் நெஞ்சம் படபடக்க நடக்கத் தொடங்கினாள். அதற்கு பிறகு அவனாக வலிய வந்து அவளை சந்திக்க ஆரம்பித்தான். அவள் தினமும் கோவிலுக்கு செல்வதை அறிந்து அவளுக்காக, அவனும் கோவிலுக்கு வர, 

அன்பையும் ஆதரவையும் எதிர்பார்க்கும் இளவயது, உறவென்று சொல்ல யாருமில்லாத தனிமையில் வளர்ந்தவள், கிரிதரன் தன்னை காதலிக்கிறான் என்பது தெரிந்து அவளும் மனதை அவனிடம் பறி கொடுக்கிறாள். 

”உன்னை எனக்கு ரொம்பவே பிடிச்சு போச்சு மாலதி. என்னே வா தெரியலை. உன்னை பார்த்ததும் உனக்கும் எனக்கும் பூர்வ ஜென்ம தொடர்பு இருக்குன்னு தெரிஞ்சுக்கிட்டேன். 

நான் இப்பதான் படிப்பு முடிஞ்சு வேலையில் சேர்ந்திருக்ே கன். கூடிய சீக்கிரம் நல்ல வேலை கிடைச்சு கோயமுத்தூர் போயிடுவேன். அப்புறம் அப்பா, அம்மா, கிட்டே சொல்லி உன்னை என் மனைவியாக்கிடுவேன் மாலதி…” 

அவள் கைபிடித்து அன்போடு சொல்கிறான். 

“கோயமுத்தூரில் பெரிய கம்பெனியில் நல்ல சம்பளத்தோடு வேலை கிடைச்சாச்சு!!” 

“எப்ப கிளம்ப போறே கிரி” 

அவனுடன் தங்கியிருக்கும் சக நண்பன் கேட்க “அடுத்த வாரத்தில் கிளம்பணும்.” 

“பரவாயில்லை. உனக்கு அதிர்ஷ்டம் நிறையவே இருக்கு. அப்புறம் கேட்கணும்னு நினைச்சேன். பக்கத்து பங்களாவில் வேலைக்கு இருக்கும் பொண்ணுடன் உன்னை பார்த்தேன். உனக்கு தெரிஞ்சவளா…” 

அதிர்ச்சியுடன் அவனை பார்க்கிறான். 

“அந்த பெண் அங்கே வேலை பார்ப்பவளா… எனக்கு தெரியாது. அடிக்கடி பார்ப்பதால் பேசினேன்.” சமாளிக்கிறான். “ஆமாம்பா அனாதை இல்லத்தில் வளர்ந்தவளாம். அந்த வீட்டு பெரியம்மா ‘ஸ்டோர்க்’ வந்து படுக்கையில் இருக்காங்க. நர்ஸிங் படிச்சதாலே இவள வீட்டோடு வேலைக்கு வச்சுருக்காங்க. நல்ல டிரஸ் பணம் கொடுத்து வீட்டில் ஒரு ஆள் போல வச்சிருக்காங்க. அந்த வீட்டு டிரைவர் சொன்னான். ” 

“மாலதி இது உன் வீடு இல்லையா…” அவனை நிமிர்ந்து பார்க்கிறாள். 

“ஏன் நான் ஏழைன்னா… என்னை கைவிட்டுடுவீங்களா கிரி..” 

“அப்படியில்லை. நாம் பழகி இரண்டு மாசமாகுது நீ உன்னை பத்தி எதுவும் சொல்லலை.” 

“எனக்குள்ளும் சின்ன தயக்கம் இருந்துச்சு கிரி. உங்க அன்பு உண்மையானதாக இருந்தா அதற்கு பிறகு என்னை பற்றி சொல்லலாம்னு இருந்தேன். நான் இந்த பங்களாவில் இருப்பதால் இது என்வீடு இல்லை. நான் அனாதை இல்லத்தில் வளர்ந்தவள். அம்மா, அப்பாயாரென்று தெரியாதவள். அவங்க தயவில் நர்ஸில் படிச்சதால் அவங்க பெரியம்மாவுக்கு உதவியாக இருக்க அனுப்பி வச்சாங்க 

என் வாழ்க்கையை நான் தான் தேடிக்கணும். எனக்குன்னு யாருமில்லை. உங்க பழக்கம். அன்பு.. என் மேல் காட்டிய அக்கறை சத்தியமா சொல்றேன் கிரி. உங்களை கைப்பிடிச்சு உங்களோடு வாழணும்ங்கிற ஆசை அதிகமாயிடுச்சு… இப்ப என்னை பத்தி சில விபரம் எல்லாம் சொல்லிட்டேன். இப்ப சொல்லுங்க கிரி. நம்ப காதல் உண்மையானது தானே” 

கண்களில் அன்பை தேக்கி பார்க்கும் மாலதியிடம் தன் ஏமாற்றத்தை மறைந்தவனாய், 

“உனக்கு இதில் என்ன சந்தேகம் மாலதி சொன்ன மாதிரி கோயமுத்தூரில் புது வேலையில் ஜாயின் பண்ணினதும் அம்மா, அப்பாக்கிட்டே பேசி நம் கல்யாணத்தை நடத்துவேன் போதுமா” 

சொல்ல மனம் நெகிழ்ந்தாள் மாலதி. 

“மாலதி அடுத்த வாரம் ஊரை காலி பண்ணி கிளம்புறேன். கோயமுத்தூர் போய் செட்டில் ஆன பிறகு உன்னை பார்க்க வரேன். எனக்காக காத்திருப்பியா மாலதி” 

“காலமெல்லாம் இந்த மாலதி உங்களுக்காக காத்திருப்பா.. சீக்கிரம் வந்துடுங்க கிரி…” 

“உன் ஞாபகமாக என் மனதில் எப்போதும் உன்னை வைச்சு இருக்கிற மாதிரி நீ ஏதாவது எனக்கு தரணும் மாலதி.”

“என்ன வேணும் கேளுங்க. உங்களுக்கு இல்லாததா எது கேட்டாலும் நிச்சயம் தருவேன்.” கண்களில் காதலுடன் சொல்கிறாள். ஆனால் அவன் தன்னையே கேட்பான் என்று கனவிலும் நினைக்கவில்லை. ஹோட்டல் தனி அறையில் அவளருகில் நெருக்கமாக அமர்ந்திருந்தவனிடம், 

“கல்யாணத்துக்கு முன்னாள் இது தப்பில்லையா கிரி, நாம தப்பு செய்யப்போறாம்னு பயமாயிருக்கு..” 

“அப்ப நீ என்னை முழு மனதாக நம்பலை அப்படித்தானே..”

“ஐயோ…அப்படியில்லை.. என் வாழ்க்கையே நீங்க தான்னு நினைச்சுட்டிருக்கேன்….” 

“அப்புறம் என்ன மாலதி நமக்குள் ஏற்படப் போற இந்த பிணைப்பு நிச்சயம் நம்மை ஒன்று சேர்க்கும்” 

தன்னோடு சேர்த்து தழுவுகிறான் கிரி.. 

“கோயமுத்தூர் வந்துட்டேன். மாலதி இங்கு வேலை பிஸியா இருக்கு. இன்னும் பத்து நாளில் அங்கு வரேன்.” 

அவனிடமிருந்து போன் வரநம்பிக்கையுடன் காத்திருக்கிறாள் மாலதி. நாட்கள் நகர தலைசுற்றல், வாந்தி வர மனதில் பயம் துளிர்க்கிறது. கிரியை தொடர்பு கொண்டால் போன் ஸ்விட்ச் ஆப்பில் இருக்கிறது. 

தவிக்கிறாள். மனதுக்குள் அழுது புலம்புகிறாள். விஷயம் வெளியே தெரிஞ்சு.. அவளுக்கு ஆதரவு தந்த பெரியம்மாவே, ஒழுக்கம் கெட்டவள் என்று வீட்டை விட்டு துரத்த, அவள் வளர்ந்த இல்லத்திலே… இனி நீ இங்கே இருக்க லாயக்கில்லை. உன் வழியை நீ பார்த்துக்கொள் என்று கைவிரிகிறார்கள். 

கிரிதரன் தன்னை ஏமாற்றி விட்டான் என்று முழுமையாக உணர்ந்த பிறகு வாழவே இஷ்டமில்லாமல் உயிர் விடதுணியும் போது நல்லவர் ஒருவரால் காப்பாற்றப்பட்டு… 

வாழ்க்கை எப்படி எப்படியோ சென்று … ஒரு குழந்தைக்கு தாயாகி வாழ வழி தேடி… ஊர் ஊராக திரிந்து … இப்போது இங்கே… 


இதற்கெல்லாம் காரணம் உங்க தம்பி கிரி…. 

யாரு… எங்கே இருக்காரு எதுவுமே தெரியாமல்… என் வாழ்க்கையை பறிகொடுத்து… அப்பன் பேர் தெரியாதவனாய் என் பிள்ளை வளர நான் செய்த பாவம் என்ன சொல்லுங்க டாக்டர்…. நான் தான் அடையாளம் இல்லாமல் அனாதை என்ற அடைமொழியோடு வாழ்ந்தேன்…. என் பிள்ளைக்கும் அதே நிலைமை வரணுமா….” 

அழுகையுடன் சொல்ல… 

திக்பிரமை பிடித்தவனாய் அப்படியே அமர்ந்திருக்கிறான் ரகு.. 

‘கடவுளே… கிரி என்ன காரியம் செய்திருக்கிறான்… 

ஒரு பெண்ணை நம்ப வைத்து ஏமாற்றும் குணம் இவனுக்கு எப்படி வந்தது. அப்பா அப்படியா எங்களை வளர்த்தார். கிராமத்தில் மரியாதை, கௌரவத்துடன் வாழும் குடும்பம் இது மட்டும் தெரிந்தால் அப்பாதுடித்துப் போய் விடுவார். என் மகனா இப்படியொரு காரியம் செய்தான் என்று, கூனிக்குறுகி போய் விடுவாரே…. 

கடவுளே இவள் கதை தெரிந்து நான் இப்போது என்ன செய்யப் போகிறேன். 

“மாலதி… ப்ளீஸ் அழாதே.. என் தம்பி எவ்வளவு பெரிய பாதகம் செய்திருக்கிறான்… அதுக்காக நான் வெட்கப்படறேன்.. வேதனைப் படறேன்.. உன்கிட்டே மன்னிப்பும் கேட்கிறேன்.. 

உன்கிட்டே நானும் எதையும் மறைக்கவும் விரும்பலை.. அவன் உன்னை காதலித்த விஷயம் எனக்கு தெரிந்திருந்தால் நிச்சயம் உன்னை அவனுக்கு கல்யாணம் செய்திருப்பேன். எங்ககிட்டே அவன் எதையும் சொல்லலை. இப்ப இரண்டு குழந்தைகளோடு மனதில் எந்த குற்ற உணர்வும் இல்லாமல் வாழ்ந்துட்டு இருக்கான். என் அப்பா அருமையாக இரண்டு பிள்ளைகளை பெத்தோம். நம் பெயர் சொல்லும்படி கௌரவமாக வாழ்ந்துட்டு இருக்காங்கன்னு மனதளவில் பெருமிதம் பொங்க வாழ்ந்துட்டு இருக்கார். ஆனா. 

அருமையான மனைவி எனக்கு அமைச்சும், கடவுள் குழந்தை பாக்கியத்தை தராமல் எங்களை தண்டிச்சுட்டானேன்னு மனக்கவலையை மறைச்சு நாங்க வாழ்ந்துட்டு இருக்கோம். 

இப்பமுடிவு உன் கையில் நீ என்ன சொன்னாலும் செயல்படுத்த தயாராக இருக்கேன். என் தம்பியை உன் கண் முன் கொண்டு வந்து நிறுத்தணுமா சொல்லு கட்டாயம் செய்யறேன்.” 

“கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்கார்க முடியும். எதுக்கு இனிமேல் அவரை பார்த்து என்ன நியாயம் கேட்க முடியும். அவர் அன்பு உண்மையானது இல்லை. நான் பணக்காரி இல்லை. அனாதைன்னு தெரிஞ்ச பிறகு… அவர் மனசை மாத்திக்கிட் டாரு… இருந்தாலும் என்னை வேண்டாம்னு சொல்லியிருந்தால் ஏமாற்றத்துடன் விலகி இருப்பேன். உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லி நம்பவச்சு ஏமாத்திட்டாரு. இப்ப நான் அவர் சட்டையை பிடிச்சு நியாயம் கேட்டு என்ன பிரயோசனம்… அவர் குடும்ப வாழ்க்கை சிதறிப் போகும். கிராமத்தில் கௌரவமாக வாழற அந்த பெரிய மனிதருக்கு தலைகுனிவு ஏற்படும். ஒரு டாக்டராக, நல்ல மனிதராக மக்க ளுக்கு சேவை செய்யுற உங்களுக்கு பெரிய அவமானமாக இருக்கும். 

வேண்டாம் டாக்டர். போன ஜென்மத்தில் என்ன பாவம் செய்தனோ தெரியலை. இப்ப அப்பா அம்மா யாருன்னு தெரியாத அனாதையா வாழறேன். ஒரு நல்ல குடும்பத்தை கெடுத்த பாவத்தை நான் செய்ய விரும்பலை. 

ஆனால் உங்க கிட்டே ஒரே ஒரு உதவி மட்டும் கேட்க தோணுது செய்வீங்களா…” 

தயக்கத்துடன் அவனை பார்க்கிறாள். 

“என்ன செய்யணும் சொல்லு மாலதி. செய்ய கடமைப்பட்டவன் நான்…” 

“நான் தான் அனாதையாக வாழ்ந்துட்டேன்.. என் மகனும் அதே போல வாழ்ந்திடக் கூடாது. நான் ஏற்கனவே எடுத்த முடிவு தான் இன்னும் இரண்டு மாசத்தில் வேலைக்கு ஆஸ்திரேலியா போறேன். திரும்பி இங்கே வரமாட்டேன். என் மகனை ஒரு நல்லவங்களுக்கு தத்து கொடுப்பதுன்னு முடிவு பண்ணி அதற்கான ஏற்பாட்டையும் செய்துட்டு இருக்கேன். ஆனால் என் மகன் உங்க குடும்ப வாரிசுன்னு தெரிஞ்ச பிறகு அவன் உரிமையுள்ள இடத்தில் வளரணும்னு என் மனம் ஆசைப்படுது. என்னை பத்தின உண்மை யாருக்கும் தெரிய வேண்டாம். அது உங்க மனதோடு இருக்கட்டும். ஆனால் நீங்க என் மகனை உங்க மகனாக தத்தெடுப்பீங்களா டாக்டர். 

உங்க தம்பி மகன் உங்க மகனாக வளரட்டும் நீங்களும், உங்க மனைவியும் அப்பா அம்மாவாக இருந்து என் மகனை வளர்த்து அவனுக்கு ஒரு கவுரவத்தை ஒரு அடையாளத்தை தரணும். உரிமையுள்ள இடத்தில் சேர்த்துட்டேன்கிற திருப்தியோடு இந்த உலகத்தின் ஏதாவது ஒரு மூலையில் வாழ்ந்துட்டு போயிடுவேன். இந்த உதவியை மட்டும் செய்வீங்களா டாக்டர். சத்தியமா இந்த விபரத்தை யார் கிட்டேயும் சொல்ல மாட்டேன். உங்க மனைவிக்கும் தெரிய வேண்டாம். ஏதோ ஒரு அனாதை இல்லத்திலிருந்து தத்தெடுத்ததாக எல்லாருக்கும் சொல்லுங்க.. உங்க தம்பி வாழ்க்கையிலும் குறுக்கிட மாட்டேன் இது சத்தியம்.” 

தெளிவாக பேசுபவளை பிரமிப்போடு பார்க்கிறான்.


இரவு களைப்போடும் சோர்ந்த முகத்தோடும் வருபவனை பார்க்கிறாள் நந்தினி. 

“என்னாச்சு, மதியம் சாப்பிட வரலை போன் பண்ணினாலும் எடுக்கலை.” 

“கொஞ்சம் பிஸியாக இருந்தேன். அதான் வரமுடியலை…”

“இல்லையே.. நான் ஹாஸ்பிடலுக்கு போன் பண்ணினேன். சாந்தி சிஸ்டர்.. நீங்க லஞ்சுக்கு கிளளம்பிட்டதாக சொன்னாங்க… “

“அப்படியா….. ஒரு ப்ரெண்டை பார்க்கப்போனேன்.. லேட்டாயிடுச்சு.. சரி விடு எனக்கு பசிக்குது. குளிச்சிட்டு வரேன். டிபன் எடுத்து வை” 

உள்ளே போக தன்னிடம் எதையோ மறைக்கிறான் என்பது மட்டும் தெளிவாக புரிய, மௌனமாக உள்ளே போகிறாள் நந்தினி. 

அத்தியாயம்-9

“முட்டாள் தனமான முடிவு மாலதி”

“இல்லை.. இதுதான் சரியான முடிவு. டாக்டரும் ஆதியை அவர் மகனாக ஏத்துக்க சம்மதம் சொல்லிட்டாரு.. எனக்கு இது போதும் விஜி. என் மகன் உரிய இடத்தில் சேரப் போறான்.. ஒரு குடும்பத்தை கெடுத்த பாவியாக விரும்பலை விஜி” தீர்மானமாக சொல்கிறாள் மாலதி… 

“மாலதி வேலையை விட்டு நின்னுட்டா டாக்டர்… என்ன காரணம்னு தெரியலை ஒரு சமயம் ஆஸ்தியேலியா போக போறதாக சொல்லியிருந்தா… அதுவோ என்னவோ தெரியலை” 

சாந்தி சொல்ல… 

”இட்ஸ் ஓ.கே… நீங்க வேற ஆளை அப்பாயிண்ட் பண்ணிருங்க சாந்தி…” 

அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் ரகுவரன் பதில் சொல்ல மாலதி நல்ல பெண் என்று அக்கறை காட்டியவர் ஒரு வார்த்தை கூட அது பற்றி பேசாமல் பதில் சொன்னது சாந்திக்கு உண்மையில் ஆச்சரியமாக இருந்தது. 

பை நிறைய சாக்லேட்.. பழங்களுடன் உள்ளே வருகிறான்.. ரகுவரன் 

“எதுக்கு டாக்டர் இவ்வளவு பழங்கள்” மாலதி கேட்க… “எல்லாம் என் மகனுக்கு தான்… ஆதி எங்கே காணும்..”

“பக்கத்து வீட்டில் இருக்கான் கூப்பிடறேன்”. வாசலில் கார் நிற்பதை பார்த்து அவனாகவே ஓடி வருகிறான். 

“ஆதி…வா…வா இதெல்லாம் உனக்கு தான் இங்கே பாரு.. இந்த டாய்ஸ் உனக்கு பிடிச்சிருக்கா..” 

“ரொம்ப நல்லா இருக்கு அங்கிள்’ 

ஆதி சொல்ல, 

“ஆதி உன்கிட்டே நான் என்ன சொல்லியிருக்கேன்” மாலதி அவன் கையை பிடித்து கேட்க 

“ஸாரி.. நீங்க அங்கிள் இல்லையாம்…. எனக்கு நீங்க அப்பாவாம்.. அதனால உங்களை அம்மா, டாடின்னு கூப்பிட சொல்லியிருக்காங்க… அதே மாதிரி இவங்க என் அம்மா இல்லையாம்… என் அம்மா உங்க வீட்டில் இருக்காங்களாம்… 

கூடிய சீக்கிரமே என்னை நீங்க உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போயிடுவீங்களாம்.. 

அப்புறம் அங்கே நிறைய டாய்ஸ் இருக்குமாம்… தினமும் காரில் ஸ்கூலுக்கு போகலாமாம்… என்னோட அம்மா என்னை ரொம்ப நல்லா பார்த்துக்குவாங்களாம்.. அம்மா சொன்னாங்க.. எப்படாடி என்னை கூட்டிட்டு போவீங்க..” 

புருவத்தை உயர்த்தி மாலதியை பார்க்கிறான்.. 

“ஆமாம்.. டாக்டர் ஆதி சின்ன குழந்தை இல்லை.. சொன்னால் புரிஞ்சுக்கக் கூடிய வயசு தான். அவன் கிட்டே விபரமாக சொல்லியிருக்கேன்… 

கொஞ்ச நாள் சாமி உன்னை என்கிட்டே கொடுத்தாரு, இப்ப உன்னோட அப்பா அம்மா வந்துட்டாங்க… நீ இந்த அம்மாவையே நினைச்சுட்டு இருக்கக் கூடாது சாமி வேற வேலை கொடுத்ததாலே அம்மா போயிடுவேன் என்னை தேடக் கூடாதுன்னு விபரமாக சொல்லியிருக்கேன்” 

“எனக்கென்னவோ மாலதி.. சின்ன தயக்கம் இருக்கு. உண்மையை மறைக்க முடியுமான்னு தெரியலை. நந்தினி ஆதியை நிச்சயமாக மகனாக ஏத்துப்பாள். அதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. இருந்தாலும் இவன் யார், எப்படி நமக்கு கிடைச்சான்னு அவ ஆயிரம் கேள்விகள் கேட்கும் போது ஆதியே உன்னை பற்றி சொல்வான் இதெல்லாம் எப்படி சாத்தியம் மாலதி. 

தப்பு செய்தவன் என் தம்பி. ஆனால் தண்டனை அனுபவிப்பது நீ. மனசுக்கு கஷ்டமாக இருக்கு மாலதி” 

“பயப்படாதீங்க டாக்டர்”

சொன்னவள் 

“ஆதி இங்கே வாப்பா” 

மகனை அருகில் அழைக்கிறாள் 

“உன்னை டாடி வீட்டுக்கு கூட்டிட்டு போனதும் அங்கே உன் அம்மா இருப்பாங்க இல்லையா” 

“ஆமாம்” 

“அவங்க உன்கிட்டே இத்தனைநாள் எங்கே இருந்தேன்னு கட்பாங்க அவங்களுக்கு நீ என்ன பதில் சொல்வே” 

“நான் நிறைய பிள்ளைகளோடு ஒரு இடத்தில் இருந்தேன். டாடி வந்து என்னை இங்கே அழைச்சுட்டு வந்தாங்க. அங்கே ஒரு அம்மா என்னை நல்லா பார்த்துக்கிட்டாங்க அந்த அம்மா இப்ப வேற ஊருக்கு போயிட்டாங்க. இனி நீங்க தான் என் அம்மான்னு சொல்வேன்” 

“ஆதி புத்திசாலி. நிச்சயம் நான் சொன்ன மாதிரி சொல்வான். எந்த பிரச்சனையும் வராது 

நானும் இரண்டு மாசத்தில் கிளம்பறேன். பிள்ளையை பிரிந்து போறோங்கிற வருத்தம் எனக்கு துளியும் இல்லை டாக்டர். 

கடவுள் என் மகனை சேர வேண்டிய இடத்தில் சேர்த்துட்டாரு ஒரு நல்லவரின்மகனாக அவனுக்கு உரிமையுள்ள இடத்தில் சகல சவுபாக்கியத்தோடு வாழப் போறான்ங்கிறதை நினைக்கும்போது மனசுக்கு நிறைவாக இருக்கு டாக்டர்.

எனக்கு இது போதும்” 

கண் கலங்க சொல்கிறாள். 


“உன் அக்கவுண்ட்டில் அஞ்சு லட்சம் பணம் போட்டிருக்ே கன்மாலதி. ஊருக்கு போக உனக்கு தேவையானதை வாங்கிக்க. அங்கே போனதும் எது தேவைன்னாலும் எனக்கு போன் பண்ணு. எந்த உதவியாக இருந்தாலும் கட்டாயம் செய்வேன்” 

மனம் கசிய சொல்கிறான் ரகுவரன். 

“நீங்க நான் இங்கே இருக்கும் வரை செய்யும் உதவிகள் மட்டும் போதும் டாக்டர். 

நான் ஆஸ்திரேலியா போனதும் தயவு செய்து நமக்குள் எந்த தொடர்பும் வேண்டாம். தேவையில்லாமல் அது என் மகன் வாழ்க்கையில் பிரச்சனைகளை ஏற்படுத்தும். அவன் உங்க மகன். நந்தினி அக்காவும் நீங்களும் தான் அவனுடைய அம்மா, அப்பா. தயவு செய்து அதற்கு பிறகு நீங்களும் என்னை மறந்துடுங்க” 

குரல் தழுதழுக்க மாலதி சொல்ல 

பதில் சொல்ல முடியாமல் மனம் கனக்க அப்படியே உட்கார்ந்திருக்கிறான் ரகுவரன். 

– தொடரும்…

– உயிர் தொடும் அமுதம் நீ!, தேவியின் கண்மணி இதழில் (03-11-2021) வெளியான நாவல்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *