சாதி இரண்டொழிய

0
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 10, 2024
பார்வையிட்டோர்: 64 
 
 

(2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பகல் இரவிடம் கையசைத்து விடைபெற்றுக் கொண்டிருந்தது!” வீடு நோக்கி ஒடி வந்த என்னையே “என்று எங்கோ ஒலித்துக்கொண்டிருந்த பாடலுக்கேற்ப, “அப்பாடா” என்று சோர்வுடன் விடுதி அறையின் பூட்டைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்த செல்வத்தின் கண்களில் அந்த அஞ்சல் உறை பட்டது. ஆவலுடன் எடுத்தான். அவன் நினைத்தபடி அக்கடிதம் இரமணனுக்குத் தான் வந்திருந்தது. ஒரு வாரமாக இரமணன் எதிர்பார்த்துத் தவித்துக்கொண்டிருந்த கடிதம்!

இரமணன் இன்னும் அலுவலகத்திலிருந்து வரவில்லை. “வேணிக்குத் திருமணம் நிச்சமாகியிருக்குமோ! மாப்பிள்ளை வீட்டார் என்ன சொல்லியிருப்பார்கள் ?…” கடிதத்தைப் பிரிக்கத் துடித்தன செல்வத்தின் கரங்கள். “ஆனால்… என்னதான் இரமணன் உயிர் நண்பன் என்றாலும் பிறரின் கடிதத்தைப் பிரித்துப் படிப்பது பண்பு ஆகாதே!” தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்ட செல்வத்தை மேலும் காக்க வைக்காது, அதற்குள் இரமணனே வந்துவிட்டான்.

“டொட்டடைன்” என்று கடிதத்தை நீட்டினான் செல்வம்.” “பிரியேண்டா” என்றபடிச் சட்டையைக் கழற்றினான் இரமணன்.

“அன்புள்ள சி. இரமணனுக்கு அநேக ஆசீர்வாதம்.

நலம். அவ்வாறே கோருகிறேன். இப்பவும் நம் வேணியைப் பெண் பார்த்துவிட்டுப்போன மாப்பிள்ளை வீட்டார் சம்மதம் என்று சொல்லிவிட்டார்கள்..”

மேலே படிக்காது, “வாவ்” என்று துள்ளினான் செல்வம். “என்ன அப்பா இவரு! பொண்ணுக்குக் கல்யாணம் உறுதியாகியுள்ளது தொலைபேசிச் செய்தி, அல்லது ஒரு தந்தி கொடுத்திருக்கக்கூடாதா? தாமதமாகக் கடிதம் போடறாரு” என்று செல்வம் வியந்தான்.

இரமணன் புன்னகையுடன், “போடா முட்டாள், மேலே படிடா” என்றதும் தொடர்ந்தான் செல்வம்: “ஆனால், நகை இருபது பவுன், வரதட்சிணையாகக் கையில் சுளையாகப் பதினையாயிரம், அப்புறம் வெள்ளிச் சாமான்கள், பாத்திரம் பண்டம்னு நீண்ட பட்டியலே கொடுத்திருக்கா!”

“இன்னும் கல்யாணச் செலவு வேறே இருக்கு. எல்லாத்தையும் எப்படிச் சமாளிக்கிறதுன்னு ஒரே மலைப்பா இருக்கு. இவளுக்குக் கேட்டை நட்சத்திரம்: செவ்வாய் தோசம் வேறே. ஜாதகம் அமையறதே பெரும்பாடா இருக்கு. இந்தப் பையன் பரவாயில்லை. எழுத்தர்ன்னாலும் அரசாங்க வேலை. எப்படியாவது முடிச்சிடணும்னு தோண்றது. அவா போய்த் திருமண உறுதிக்கு நாள் பார்த்து எழுதறதாச் சொல்லியிருக்கா. எனக்குக் கையும் ஓடலை, காலும் ஓடலை. வேணி என்னன்னா, எனக்குக் கல்யாணமும் வேண்டாம், ஒண்ணும் வேண்டாம், மேலே படிக்கிறேன்னு ஒரே அழுகை. நீ உடனே புறப்பட்டு வா. நேர்லே கலந்து பேசி ஏற்பாடு பண்ணலாம். உன் சிநேகிதன் பன்னீர்ச்செல்வத்திற்கு என் அன்பும், ஆசியும் சொல்லு. ஆசிர்வாதம்.

அன்புள்ள அப்பா,
எம்.இராமசாமி

“ஊம்… ஒண்ணு பெரி.ய பணக்காரனா இருக்கணும்… இல்லே, பரம ஏழையா இருக்கணும். நாலு வீட்டிலே யாசகம் வாங்கியாவது காரியத்தை முடிச்சுடலாம். இப்படி நம்மளப்போல நடுத்தர வர்க்கம் இருக்குப்பாரு.. இப்படியும் போகமுடியாது, அப்படியும் போகமுடியாது.. திரிசங்கு சொர்க்கம்தான்” என்று அலுத்துக்கொண்ட இரமணனை அனுதாபத்துடன் பார்த்தான் செல்வம்.

‘இரமணா! வேணியோட அழகுக்கும், அறிவுக்கும் அவளைக் கட்டிக்கக் கொடுத்து வைச்சுருக்கணும்! இது புரியல்லியே அந்த முட்டாப் பசங்களுக்கு! பட்டியல் போட்றாங்களாம் பட்டியல்” கடுப்புடன் கூறினான் செல்வம்.

“ஏண்டா, நீ மட்டும் எங்கள் சாதியில பொறந்திருக்கக் கூடாதா?” “ஏம்பா! எங்கள் சாதிக்கு என்ன குறைச்சல்?”

“அதில்லைடா! போகாத ஊருக்கு வழி தேடிக்கிட்டு! இப்ப நடக்கிற வழியைப் பாரு ! இந்தா தாள். வா, உக்கார்ந்து எவ்வளவு செலவாகும்னு ஒரு கணக்குப் போடுவோம்.”

இருவரும் அமர்ந்து அழைப்பிதழில் தொடங்கி, மேளம், பந்தல், சாப்பாடு, சத்திரம் என்று கூட்டிப் பார்த்ததில் அதுவே ஐம்பது ஆயிரத்தைத் தொட்டது!” அப்புறம் நகை, புடைவை, சீர்வகை இந்தக் கணக்கு ஒன்றரைவரை போயிற்று மொத்தத்தில் இரண்டு இலட்சம் வேண்டும்.

“உங்கப்பா கையில் எவ்வளவு இருக்கு?” என்று செல்வம் கேட்டான் அந்த நேரத்திலும் சிரித்தான் இரமணன்.

கையிலேயா? கடன் தான் இருக்கு. அதுவும் வீட்டின் பேர்லே”

“பேசாமல் வீட்டை வித்துட்டாக் கடன் போகக் கையிலே சிறிது பணம் தேறுமில்லே”

“தேறுந்தான் ..ஆனா.. அம்மாதான் நிம்மதியாப் போய்ச் சேர்ந்துட்டா.. அப்பா கடைசிக் காலத்துலே என்ன பண்ணுவார், பாவம்…”

“வீடு இல்லாவிட்டால் நிரம்பத்துன்பம்”

“ஏண்டா.. உன் தங்கச்சிதான் கணவன் வீட்டுக்குப் போயிடப் போறா. பேசாமல் உங்கப்பா இங்கே வந்து நம்மகூட இருக்கலாமில்லே.”

“இந்தாப் பாரு, செல்வம்! கல்யாணம்னா அதோட சரியில்ல! ஆடி, ஆறாம்மாசம், தீபாவளி இதுக்கெல்லாம் சீர் செய்யணும். அதெல்லாம் இந்த அறையிலே கொண்டாடலாங்கறயா.. ? மண்டு! அது சரிப்படாது.. வீட்டோட பேர்லே இன்னும் சிறிது பணம் வேணாக்கடன் வாங்கலாம்… ஊம்..”

“இரமணா! ஒண்ணும் யோசிக்காதே.. தைரியமா வேலையிலே இறங்கு. விடுப்புக் கடிதத்தை எங்கிட்டேக் கொடுத்துட்டு “நீ உடனே ஊருக்குக் கிளம்பு. போயி, தேதியைக் குறிச்சுட்டுவா. நம்ம சுந்தரத்தோட மாமா துணிக் கடை வைச்சுருக்காரில்லே. அவங்ககிட்டச் சொல்லிக் கடனாத் துணிகள் வாங்கிடலாம்.”

“நம்ம உணவு இல்லத்துக்கு வேண்டியவற்றை அளிக்கின்ற மளிகைக் கடைக் கோபால் செட்டியார் எங்கள் ஊர்க்காரர்தான். அவர் கிட்டே சொல்லி வேண்டிய பலசரக்கு வகைகளைக் கடனாக வாங்கிச் சமாளிக்கலாம். மாசம் மாசம் பணம் கட்டிட்டாப் போகுது. அப்புறம் என்னோட சீட்டுப் பணம் இருக்குல்ல. அதுலே கடன் போட்டா ஒரு பத்தாயிரம் கிடைக்கும். அதுக்கு நான் உடனே ஏற்பாடு பண்றேன்.”

செல்வம் சொல்லிக் கொண்டே போக அவனையே கண்கொட்டாது பார்த்த இரமணன் அதற்குமேல் தாளமுடியாமல் அப்படியே அவனைக் கட்டிக்கொண்டு, “செல்வா.. செல்வா” என்று விம்மினான். திகைத்துப்போன செல்வம்..” “அட என்னடா இரமணா !.. தைரியமா நிமிந்து நில்லுடா. இந்தாப் பாரு உழைக்க நம்ம கையிருக்கு.. காலம் நம் எதிரே பரந்து கிடக்கு, அப்புறம் என்ன! எதையும் சமாளிக்கலாண்டா” என்று கூறினான்.

“இல்லைடா, உன்னை விட்டா எனக்கு இப்படித் தைரியம் கொடுக்க யார் இருக்கா! உன்னோட நட்பு எனக்குக் கிடைச்சது நான் செஞ்ச புண்ணியண்டா.”

“ஐயோ,விட்டாக் கோயிலே கட்டிச் சிலையும் வெச்சுடுவே போல இருக்கே. இதானே வேண்டாங்கறது… சரி.. சரி ஊருக்குக் கிளம்பற வழியைப் பாரு, “செல்வம் துரிதப்படுத்தினான்”

அடுத்த சில நிமிடங்களில் மதுரைக்குச் செல்கின்ற பேருந்தில் இருந்தான் இரமணன்.

சூன் இருபது ! அதுதான் வேணியின் திருமண நாள்!

அதைப் பிடிக்க வேகமாக ஒடி வந்த நாள்கள் பதினெட்டில் வந்து தயங்கி நின்றன!

ஏன் தெரியுமா? அன்றுதான் அது நடந்தது.

“பால் கடையில் பணத்தைக் கட்டிவிட்டு மிதிவண்டியில் வீடு திரும்பி வந்துகொண்டிருந்த இரமணன்மீது அந்தப் பொதுச்சுமைதூக்கி மோதியது.

அருமைத் தங்கையின் திருமணத்தைப்.. படாத பாடு பட்டு ஏற்பாடு செய்திருந்த அந்தக் கல்யாணத்தைக் காணமுடியாமல் உடலெங்கும் கட்டுகளுடன் தன் நினைவின்றி மருத்துவமனைக் கட்டிலில் படுத்துக்கிடந்த இரமணனைப் பார்த்துக் கண் கலங்கினான் செல்வம்.

“அவன் தங்கையின் மேல் வைத்திருந்த பாசம், ஆசை எவ்வளவு, இக்கல்யாணம் நடக்க இராப் பகலாக அவன் பட்டபாடுகள்தாம் எத்துணை? அவையெல்லாம் வீணாவதா? இதோ இரமணன் இறைவன் அருளால் பிழைத்து எழுந்துவிடுவான். ஆனால், கல்யாணம் நின்றுபோனால்.. கூடாது.. எப்படியாவது நடக்கணும், நடத்தணும்” விரைந்து செயல்பட்டான் செல்வம்.

அந்த வீட்டில் காணாமல் போயிருந்த மகிழ்ச்சி, தைரியம் எல்லாவற்றையும் பிடித்து இழுத்து வந்து எல்லோரையும் சமாதானம் செய்து, மேளம் கொட்ட வைத்து மாப்பிள்ளை அழைப்பை நடத்தி, “அப்பாடா” என்று நிமிர்ந்த போது…

சூன் இருபது பலபலவென்று விடிந்தது!

“காசி யாத்திரைக்கு நாழியாச்சு” என்று சாஸ்திரிகள் பலமுறை கூறியும், மாப்பிள்ளை வீட்டிலிருந்து யாரும் கிளம்பவில்லை. அங்கங்குக் கசமுசா! ஓடியாடிக்கொண்டு கருமமே கண்ணாய் இருந்த செல்வம் நின்றான். மருத்துவமனையில் இருந்து ஏதாவது தகவல்.. கப்பென்று நெஞ்சை அடைத்த அந்த எண்ணத்தை ஒதுக்கித் தள்ளிய செல்வத்தை நோக்கி ஓடி வந்தார் இராமசாமி.

“அவா சொல்றா… பாக்கி மூணு பவுனையும் இப்பவே போட்டாத்தான் கல்யாணம் நடக்குமாம்.” இதைச் சொல்லி முடிப்பதற்குள் அவருக்கு வியர்த்துக்கொட்டியது.

“நாமதான் தீபாவளிக்குள்ளே போடறதாச் சொன்னோமே.. அப்பச் சரின்னு சொன்னாங்க.. இப்ப என்ன திடீர்னு.”

ஏற்கெனவே முதல் நாள் அவர்கள் செய்த கெடுபிடியில் நொந்து போயிருந்த செல்வத்திற்கு ஆத்திரமாக வந்தது.

ஆனாலும், அடக்கிக் கொண்டு பொறுமையாக நிலைமையை எடுத்துக் கூறிக்கெஞ்சினான். அவனுடன் இராமசாமியின் உறவினர்கள் சிலரும் எவ்வளவோ கூறியும் அந்த மூன்று பவுனுக்காக அவர்கள் முரண்டு பிடித்தார்கள்.

சே.. என்றிருந்தது செல்வத்திற்கு. அப்போதுதான் அவர் சொன்னார். ‘அட! நீ யார்ரா பயலே! அவாளுக்கு வக்காலத்து வாங்கறதுக்கு ? சாதியா, சனமா?”

“அதானே” என்று மற்றொருவர் இழுத்தார்.

“சீமாச்சு! அண்ணன்காரன் தான் இப்பவோ, அப்பவோன்னு இழுத்துட்டுக் கிடக்கான். இந்தப் பயனற்ற மனுசனாலே ஒண்ணும் செய்ய முடியாது. சூட்டோட சூடா அடிச்சுப் பிடிச்சு இப்போதே வாங்கினாத்தான் உண்டு. அப்புறம்னா நாமம்தான்” இந்தச் சொற்கள் காதில் விழுந்ததும் வெடித்துவிட்டான் செல்வம்.

“சே.. நீங்கள்ளாம் மனுசங்கதானா ? இராட்சசங்க! போங்க.. இனி நீங்கக் கெஞ்சினாலும் எங்கள் பெண்ணை இந்தப் படுகுழியில் தள்ளமாட்டோம். இப்பவே இந்தப் பேச்சுப் பேசறவங்க நாளைக்கு என்னதான் செய்யமாட்டீங்க! கிளம்புங்க… மரியாதையாப் பணம், சீர்வரிசை எல்லாத்தையும் எடுத்து வைச்சுட்டு நடையைக் கட்டுங்க” முழங்கிய அவனைக் கண்டு எல்லாரும் தம்பித்துப் போனார்கள். இராமசாமிக்குக்கூட ஏதோ ஓர் இனம் புரியாத நிம்மதிதான் ஏற்பட்டது. முதல் நாள் அவர்கள் செய்த கெடுபிடியில் கலங்கிப்போயிருந்தார் அவர்.

அடுத்து விடுவிடுவென்று மணமேடைக்கு வந்தான் செல்வம். “ இந்தக் கல்யாணம் நிற்கக்கூடாது. இங்கே தன்மானம் உள்ள ஆம்பிளை எவனாவது மாப்பிள்ளையா இந்த மணவறையில் ஒக்கார முன்வரணும்” இப்படி அவன் கூற, யாரும் அசையவில்லை.

“இவனுக்கு என்ன பைத்தியமா?” என்பது போலத்தான் பார்த்தார்கள். ‘சித்தப்பாவுக்குத் தன் பெண் பெரிய இரதின்னு நினப்பு. மாப்பிள்ளைக்குச் சல்லடை போட்டுன்னா சலிச்சார். இந்தத் துக்கிரிப் பெண்ணோட தோசம் சும்மாவிடுமா? கல்யாணமே நின்னு போச்சு. பிள்ளையும் அங்கே உசிருக்கு மன்னாடிண்டு கிடக்கான்.” உறவு ஒன்று வீசிய இச்சொல்லம்பு வேணியைத் துடிக்க வைத்தது.

“ஆமா! தோசிப் பொண்ணு, இது காலடி எடுத்து வெச்சாக் குடும்பம் உருப்பட்டாப்லேதான். கலக்காசுக் கொட்டிக் கொடுத்தாக்கூட வேண்டாண்டியம்மா.” இது இரண்டாவது சவுக்கடி!

“இராமசாமி.. இந்தக் காலத்துல வெறும் பயகூட ஆயிரம்,இரண்டாயிரம்னு கேக்கறான். நீ கையிலே இருந்ததையும் கரைச்சுட்டே. இனிமேல் கல்யாணமாவது.. ஒண்ணாவது. ஆகின்றவழியைப்பாரு.”

“ஆமாமாம்.. நிச்சயதார்த்தம் நடந்து கல்யாணமும் நின்னு போன பொண்ணுக்கு எவன் தாலி கட்டுவான் ?”

அங்கு மணமகளுக்கு உரிய நகைகளுடன் கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்து வழிய நின்றிருந்த வேணி, அந்தச் சபையில் சொல்லம்புகளால் துகில் உரிக்கப்பட்ட திரௌபதியாகத் துடித்தாள். “கிருஷ்ணா” என்று கதறக்கூட அவளால் முடியவில்லை.

அதுவரைச் சிலையாக நின்ற செல்வம், பொங்கி எழுந்தான்

“நான் கட்றேன்யா! ஒரு பொண்ணுக்குக் கணவனாக இருக்கக்கூடிய எல்லாத் தகுதியும் எனக்கு இருக்கு. இவளைக் காலம் பூராக் கண் கலங்காமல் நான் காப்பாத்துவேன்.’

“ஐயா! உங்கப் பெண்ணை எனக்குத் தருவீங்களா? தயவு செஞ்சு வேறு சாதின்னு சொல்லிடாதீங்க. அந்த.. ஒரு சாகடிக்கும் தீயைக் காட்டி இந்த நல்ல காரியத்தைத் தடுத்திடாதீங்க.’

செல்வத்தின் ஒவ்வொரு வார்த்தையும் இராமசாமியை உலுக்கியது.

கழுத்தில் மெல்லிய தங்கச்சங்கிலி ஆடினாலும் அதைக் கழற்றித் தருகின்ற துணிவின்றி வாய்ச்சொல் வீரராக வார்த்தைகளை விடமாகக் கொட்டிய அந்தக் கூட்டத்திலிருந்து பிரிந்து வரத்துணிந்தார்.

“இவன் என்ன சாதி?” என்ற ஆராய்ச்சியை ஆரம்பிப்பதற்குள் விழித்துக்கொண்டார். “சாதி இரண்டொழிய வேறில்லை” எனத் தான் நடத்திய பாடத்தை ஞாபகப்படுத்திக் கொண்டார்.

“செல்வம்! உன்னைவிட என் வேணிக்குத் தகுதியான ஒரு மாப்பிள்ளை கிடைப்பானா! இரமணன் பொழச்சு எழுந்து வந்த மனதார உன்னை வாழ்த்தி மகிழ்வான். இல்லேன்னா அவன் ஆத்மா சாந்தியடையும்!” என்ற கூறியபடித் “தூற்றுவோர் தூற்றட்டும், வாழ்த்துவோர் வாழ்த்தட்டும்” என்று எதற்கும் கலங்காது தாலியை எடுத்துச் செல்வத்தின் கைகளில் கொடுத்தார்.

தன்னை மறந்து ஐயர் மந்திரம் ஒதக் கெட்டி மேளமும் ஒலித்தது.

பொறாமை, பேராசை, கையூட்டு, இழிவு இவை எல்லாம் இல்லாத ஓர் அன்புமயமான உலகில் பயணப்பட அந்த மணமக்களின் இரு கரங்களும் ஒன்றாக இணைந்தன!

– ஜெயா இராஜாமணி, மதுரை-2.

– மனங்கவர் மலர்கள், முதற் பதிப்பு: ஜூன் 2005, சிங்கைத் தமிழ்ச் செல்வம், சிங்கப்பூர்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *