பெண் மனம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 4, 2024
பார்வையிட்டோர்: 1,501 
 
 

(1938ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“எதற்காக இன்னும் சாய்ந்து கொண்டிருக்கிறீர்கள்? எழுந்து சாப்பிட வரப்படாதோ?” என்று கனகம் நடராஜனைச் சொன்னாளே ஒழிய தானும் வெகுநேரம், ஜானகி போன பின்பு, ஏதோ யோசனை செய்து கொண்டே படுத்துக் கொண்டிருந்தாள்.

பொழுது போனது இருவர்களுக்குமே தெரியவில்லை.

நடராஜன் கனகத்திற்குப் பதில் சொல்லாமல் தன் மனதில் இருந்த எண்ணங்களின் தொடர்ச்சியாக ஒரு கேள்வி கேட்டான்.

“உன் தோழியை இங்கேயே சாப்பிடக் சொல்லுகிறது தானே? மத்தியானம் வந்தவள் இனிமேல் போய் தானே சமையல் செய்ய வேண்டும், பாவம்.”

“அவள் சாப்பிட்டு விட்டால்? அவள் அகமுடையான் என்ன ஆகிறது?”

“ஓ மறந்து விட்டேன். ஆனால் – அவரும்-“

“அவரை மறந்து விட்டேளா? ரொம்ப அழகாயிருக்கே? ஜானகி என்ன கலியாணம் ஆகாதவள் என்று நினைத்தீர்களா?”

“இல்லை”

“என்ன இல்லை? ஏதாவது புத்தி குழம்பி விட்டதோ?” என்று கேலியில் இறங்கி தன் மனதிலிருந்த வேதனையை அகற்ற முயன்றாள் கனகம்.

“உன் தோழிக்கு என்ன வயசு?” என்று மறுபடியும் நடராஜன் தன் எண்ணங்களைத் தொடர்ந்தே கேட்டான்.

“இதென்ன கேள்வி? என் தோழி என்பவள் என்ன கிழவியாக இருப்பளா? அவளுக்கும் என் வயதுதான் இருக்கும்”.

“உன்னைக் காட்டிலும் உயரமாக இருக்கிறாள்.”

“அதற்கென்ன, அவர்கள் வீட்டில் எல்லோரும் உயரம்.”

“உயரம் என்றாலும் பொருத்தமாக இருக்க வேண்டாமா?”

கனத்திற்குக் கொஞ்சம் எரிச்சல் வந்தது.

“அதைப்பற்றி என்ன தர்க்கம் இப்பொழுது? எழுந்திருங்கள் சாப்பிட, எனக்குத் தூக்கம் கண்ணைச் சுற்றுகிறது” என்று கனகம் எழுந்து சமையலறைக்கு போகத் தயாரானாள்.

“அவள் புருஷனுக்கு என்ன வேலை?”

“கஸ்டம் ஆபீஸிலாம்!”

“என்ன சம்பளம்?”

“நாற்பது ரூபாயாம்!”

“பட்டணத்தில் நாற்பது ரூபாயில் பாவம் எப்படிக் காலட்சேபம் செய்கிறார்களோ!”

“அகமுடையான் பெண்சாதி இரண்டு பேர் தானே? செய்யாமல் என்ன பிரமாதம்? மிச்சம் கூடப் பிடித்து விடலாம். அதுவும் நம்மைப் போல, ஒரு சினிமா, ஒரு வேடிக்கை, வினோதம் – ஒன்றுக்கும் போகாமல் இருந்தால் என்ன செலவு?”

இந்தப் பாணம்கூட அவன் காதில் ஏறவில்லை.

“பாவம், பேச வேண்டுமென்று திருவல்லிக்கேணியிலிருந்து வந்திருக்கிறாள். இங்கேயே சாப்பிடச் சொல்லி இருக்கலாம்” என்றான் மறுபடியும்.

“சாப்பிட இருக்க மாட்டேன் என்று . விட்டாள்” என்று கனகம் அழுத்தமாகச் சொன்னாள்.

“இருக்கச் சொன்னயோ?”

”நன்றாயிருக்கிறது நீங்கள் பேசுகிறது! மெனக்கெட்டு ஆத்துக்கு வந்தவர்களை சாப்பிடச் சொல்லாமல் தான் இருப்பார்களாக்கும். என்னமோ”

“இல்லை-”

“சரி, சாப்பிட வாருங்கள். பிறகு இல்லை – இல்லை – என்று இழுத்துக் கொண்டே இருக்கலாம். வெறுமனே எழுதி எழுதி மூளை கலங்கிப் போய் விட் டது. இனிமேல் பைத்தியம் பிடிக்க வேண்டியது ஒன்றுதான் பாக்கி.”

கனகம் இலை போட்டுப் பரிமாறினாள். நடராஜன் இலையில் சாதம் விழுவதற்கு முன்பே “போதும், போதும்!” என்று கை அமர்த்தினான்.

“இதென்ன!-“

”ஓகோ, சாதம் போடவே இல்லையா?”

“எங்கே ஞாபகம்?”

இந்தக் கேள்வியைத் தான் கேட்ட பிறகுதான் கனகத்திற்கே மனதில் ஏதோ தட்டிற்று. அந்தக் கேள்வி காதில் பட்டவுடன் நடராஜனும் சட்டென்று தலையைத் தூக்கி கனகத்தின் முகத்தைக் கவனித்தான்.

ஆனால் தான் பயந்தது போல அவள் முகத்தில் ஒரு குறியும் தென்படவில்லை. மறுபடியும் யோசனையில் ஆழ்ந்தான். கனகம் பரிமாறிக்கொண்டிருக்கும்பொழுதே அவன் மெய்ம்மறதியை கவனித்தாள்.

“நாளைக்கு அவளை இங்கே சாப்பிட வரச்சொல்லி இருக்கிறேன்” என்றாள் அவனுடைய முகத்தை உற்றுக் கவனித்துக்கொண்டே.

நடராஜன் முகம் உடனே மலர்ந்ததைக் கண்டான். அவள் உள்ளத்தில் சுரீர் என்று குத்தினது போன்ற ஒரு வேதனை உண்டாயிற்று. அதை எப்படியோ முகத்தில் தென்படாமல் மறைத்துக்கொண்டாள்.

“அவன் புருஷனையும் கூட்டிக்கொண்டு வாச்சொல்லி இருக்கிறேன்” என்று சொல்லிவிட்டு கனகம் மறுபடியும் அவன் முகத்தைக் கூர்ந்து கவனித்தாள் – தன் வார்த்தைகளால் அவன் முகம் எப்படி மாறுகிறது என்பதைக் கவனிக்க.

அவன் முகம் சட்டென்று சிறுத்தது. சிறிது அசடுகூடத் தட்டிற்று. அவனால் மறைக்க முடியவில்லை. மனைவி யின் முகத்தைப் பார்த்தான் – அவள் கவனித்துவிட்டாளா என்று அறிய. ஆனால் அதை அவன் முன்பே ஊகித்து தலையைத் திருப்பிக்கொண்டு வேறு எதோ கவனமாய் இருப்பதுபோல் இருந்தாள். தனது ஊகம் சரி என்றதால் ஏற்பட்ட ஒரு திருப்தியும் அதனாலேயே ஒரு வேதனையும் ஒரே சமயத்தில் அவள் உள்ளத்தில் எழுந்தன.

“நாளைக்கென்ன, ஆபீஸ் லீவு கிடையாதே?” என்று நடராஜன் சொன்னது அவள் காதில் படவில்லை.

‘”அவள் அகத்துக்காரர் சொம்ப நல்லவர் என்கிறாள்… போகிறது. ஜானகி ரொம்ப கெட்டிக்காரி, இங்கிதம்-”

“அழகுக்குத்தான் என்ன?”

“கொடுத்துவைத்தவள். அனுபவிக்கிறாள்” என்று சொல்லிவிட்டு கனகம் திடீரென்று மௌனம் ஆனாள்.

அன்று ஜானகி வந்தது முதலே நடராஜன் வெறிகொண்டு விட்டதைக் கனகம் அறிந்துகொண்டாள். தோழிகள் இருவரும் பேசிக்கொண்டிருக்கும் பொழுது அடிக்கடி ஏதோ சாக்கு வைத்துக் கொண்டு அவர்கள் உட்கார்த்துகொண்டிருந்த அறைப்பக்கம் வந்தான். கனகத்திற்கு வெட்கம் நாக்கைப் பிடுங்கிக் கொள்ளலாம் போலிருந்தது. தன் தோழி அதை அறிந்துவிடக்கூடாதென்று வெகு கவனமாக இருந்தாள். அவன் பாதி தூரம் வருவதற்குள் தான் எதிர்கொண்டு எழுந்துபோய் என்னவென்று கேட்டு விட்டு வந்தாள். அப்பொழுதும் அவன் தலையை உள்பக்கம் திருப்பி ஜானகியைத் திருட்டுப் பார்வை பார்த்தான். ஜானகி அதைக் கவனிக்கவில்லையென்று கண்டு கனகம் கொஞ்சம் ஆறுதல் அடைந்தாள்.

அவளைச் சாப்பிடச் சொல்ல வேண்டுமென்று கனகத்திற்கு உள்ளூா ஆசை. ஆனால் தன் புருஷன் அதற்குள் ஏதாவது அசட்டுத்தனமாக நடந்துகொண்டுவிட்டால் என்ன செய்கிறது என்ற பயம் மேலிட்டது. ஜானகி என்ன நினைப்பாள்? அவளைப்பற்றி எப்படியாவது நினைத்துவிட்டுப் போனால் போகட்டும் – தன்னைப் பற்றி என்ன நினைப்பாள்?

அத்துடன் கூட மற்றொரு வேதனையும் கூடவே எழுந்தது கனகத்தின் மனதில். ஜானகி மிகவும் அழகாக இருந்தாள் என்பது என்னமோ வாஸ்தவம்தான், தான்கூட அவ்வளவு அழகு இல்லை. ஆனாலும்-அதனால்தான் – கனகத்தின் மனதில் உள்ளத்தைக் கிளறிய அசூயை உண்டாயிற்று. தன் புருஷன் ஒவ்வொரு தடவையும் ஜானகியைப் பார்க்கும் பொழுதும் கனகத்தின் ஹிருதயத்தில் அடித்தாற்போல இருந்தது. அப்படியே நெஞ்சைப் பிடித்து சமாதானம் செய்து கொண்டாள்.

நடராஜன் சாப்பிட்டு விட்டு எழுந்து போனான். கனகம் சாதம் முதலியவற்றை எடுத்து இலையருகில் வைத்துக்கொண்டு இலையில் உட்கார்ந்து கொண்டாள். அவளுக்குச் சாதம் இறங்கவில்லை. துக்கம் நெஞ்சை அடைத்தது. அழுதாள். மிருகப்பிராயமான அந்த அசூயை உணர்ச்சி அவளை உலுக்கி எடுத்தது.

தன் புருஷன் நெருங்கி இவ்வளவு பழகின பிறகு, தன்னிடம் இருந்த அழகை அறியாமல், முதல் முதலாகப் பார்த்த ஜானகியைக் கண்டு மனதைப் பறிகொடுத்து விட்டது அவளுக்குத் தாங்க முடியவில்லை. ஆனால் ஜானகியையோ ஜானகியின் அழகையோ அவள் குற்றம் கண்டு பிடிக்கவில்லை. தன் புருஷனுடைய அலட்சியத்தைக் கண்டுதான் அப்படிக் கலங்கினாள். தன்னெதிரில், தான் என்ன நினைத்துக் கொள்ளக் கூடும் என்பதைக்கூட கவனியாமல் அவளைப் பார்த்துப் பார்த்து ஏங்கினான். அவன் அழகாக இருக்கிறாள் என்று தன்னிடமே சொன்னான் – என்னடா இப்படிச் சொல்லுகிறோமே என்பதைக்கூடக் கவனிக்காமல்.

அரைமணி நேரம் அப்படியே இலையடியில் உட்கார்ந்து போய் விட்டாள். அடுத்த நாள் சாப்பிடக் கூப்பிட்டிருப்பதாகச் சொல்லி நடராஜனின் மனப்போக்கை இன்னும் நன்றாகத் தெரிந்து கொண்டது ஒருபுறம் அவளுக்கு வருத்தமாக இருந்தது என்றாலும் மற்றொருபுறம் அவனுக்கு அளிக்கப்போகும் ஏமாற்றத்தை நினைத்து கொஞ்சம் சந்தோஷமடைந்தாள்.

நடராஜன் அவளுக்காகக் காத்துக் கொண்டிருந்தான். அவள் வராததைக் கண்டு அவள் சாப்பிடும் இடத்திற்கு வந்தான். அவள் இலையில் உட்கார்ந்திருப்பதைக் கண்டு அதைப்பற்றி ஒன்றுமே கேட்கவில்லை.

“எப்பொழுது வருகிறார்கள் நாளைக்கு?” என்றான்.

கனகம் கண்களைத் துடைத்துக்கொண்டு தலை நிமிர்ந்தாள்.

“ஏன்?” என்றாள் குரலில் ஆழ்ந்த அர்த்தத்தை ஏற்றி.

நடராஜன் அலறிப் போனான்.

“இல்லை-எப்பொழுது வருகிறார்கள் என்று கேட்டேன்” என்று மழுப்பினான்.

“அவள் வரமாட்டேன் என்று சொல்லி விட்டாள்.”

“ஏன்?” என்று நடராஜன் கேட்ட பொழுது அவன் குரலில் இருந்த ஏமாற்றத்தைக் கண்டு கனகம் கோபமும் சந்தோஷமும் ஏககாலத்தில் அடைந்தாள்.

“நீங்கள் இல்லாவிட்டால் வந்திருப்பாள்.”

“என்ன? ஏன்?” என்று நடராஜன் திகிலடைந்து கேட்டான்.

“ஆமாம். நீங்கள் அசட்டுப் பிசட்டு என்று பார்த்தது அவளுக்கு மனதிற்கு சமாதானமாக இல்லை. என்னிடம் கேட்டே விட்டாள். ‘என்னடி கனகம்? உன் ஆம்படையான் அப்படி வெறிச்சி வெறிச்சிப் பார்க்கிறார்?’ என்று கேட்டாள்.”

நடராஜன் வெலவெலத்துப் போனான். அந்த இடத்தில் நிற்பதே அவனுக்கு அசாத்தியமாகி விட்டது. மெளனமாக ஒன்றும் பதில்சொல்ல வாய் வராமல் தன் அறைக்குச் சென்றான்.

கனகம் ஒருவாறு ஆறுதலடைந்ததால் மனதில் ஒரு திருப்தி ஏற்பட்டது. கொஞ்சம் நிம்மதியுடன் சாப்பிட்டுவிட்டு கைக்காரியத்தைச் செய்தாள். அப்பொழுது பழிதீர்த்துக் கொண்டதுபோல அவளுக்கு ஒரு உற்சாகம் கூட ஏற்பட்டது. பால் பாத்திரத்தையும் வெற்றிலைத் தட்டையும் எடுத்துக்கொண்டு படுக்கை யறைக்குப் போனாள். நடராஜன் அவள் முகத்தைப்பார்க்க வெட்கினவனாய் தூங்குவதுபோல் பாசாங்கு செய்துகொண்டு படுத்துக் கொண்டிருந்தான்.

கனகம் அவனை எழுப்ப முயலவில்லை.

திடீரென்று அவள் மனது இளகிற்று. அவனை அதற்குமேல் அவமானத்திற்குள்ளாக்க அவளுக்கு மனம் வரவில்லை.

– பாரதமணி 1938

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *