எங்கிருந்தோ வந்தாள்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: November 28, 2015
பார்வையிட்டோர்: 15,198 
 

சுந்தரும் மீனாவும் சாங்கி ஏர் போர்ட்டுக்கு வந்திருந்தார்கள். அமெரிக்காவில் ஒரு மருத்துவக் கருத்தரங்கில் கலந்து கொண்டுவிட்டு, பத்து நாட்களுக்குப் பிறகு இன்றுதான் சிங்கப்பூர் திரும்புகிறேன். மிகவும் களைப்பாக இருந்தது. ….

எனது கணவர் மரச்சமான்கள் செய்யும் பிசினசில் மிகவும் பிசியாக இருப்பவர். மகன் சுந்தர் ஒரு மல்டிநேஷனல் கம்பெனியில் டைரக்டராக இருப்பவன்; எப்போதும் கணினியும் கைத் தொலைபேசியுமாக இருப்பவன். மருமகள் மீனா, மனித வள மேம்பாட்டுத் துறையில் முதன்மை அதிகாரி….இப்படிக் குடும்பத்தில் எல்லோருமே, காலில் சக்கரம் கட்டாத குறையாகப் பறந்து கொண்டு இருப்பவர்கள்…

எனது கணவர் வீடு, தோட்டம், கார் என்று எல்லாவற்றையும் கவனமாகப் பராமரிப்பதில் வல்லவர். மார்க்கெட் போவதும், அன்றாடம் புதிதுபுதிதாய்ச் சமைப்பதும் எனக்கு விருப்பமான ஒன்று!

பகுதி நேரப் பணிப்பெண் ஒவ்வொரு வாரமும் வந்து உதவி செய்வது உண்டு. சுந்தருக்கும் மீனாவுக்கும் திருமணமாகி எட்டு மாதங்கள் ஆகியிருந்தன. அவர்கள் திருமணம் ஆகும் வரையில் நிரந்தரமாக வீட்டு வேலைக்கென்று நான் யாரையும் வைத்துக் கொள்ளவில்லை.

என் கணவர் மியன்மாரில் தனது வியாபாரத்தை விரிவாக்கம் செய்வதற்காக அடிக்கடி பயணம் செய்ய வேண்டி வந்தது. அப்படி ஒரு முறை சென்று வந்த போதுதான், சுமோனைப் பற்றிச் சொன்னார்.

மியன்மாரில் சுமோனின் தந்தை ஒரு கார்ப்பெண்டராக இருப்பவர். நான்கு குழந்தைகளை வைத்துக் கொண்டு, வயதான பெற்றோருடன் குடும்பம் நடத்துவது மிகவும் சிரமமாக இருப்பதாகவும், தனது மூத்த பெண் சுமோனைப் பணிப்பெண்ணாகச் சிங்கப்பூர் அனுப்ப விரும்புவதாகவும் சொன்னபோது, எனது கணவர் எங்கள் வீட்டுக்கே அவளைப் பணிப்பெண்ணாகக் கூட்டி வரலாமென்று அபிப்ராயப்பட்டு, எங்களைக் கலந்தாலோசித்தார்.

சுந்தருக்கு இப்படி ஒரு பெண்,வீட்டோடு தங்கி வேலைசெய்வது பிடிக்காத ஒன்றாக இருந்தது. நாளொரு செய்தியும், பொழுதொரு நிகழ்வுமாக இந்தப் பணிப் பெண்களால் ஏற்படும் பிரச்னைகள் அவனை அவ்வாறு எண்ணச் செய்தது! ஆனால் மீனாவுக்கு இந்த யோசனை மிகவும் பிடித்துப் போயிற்று . அவ்வளவாக வீட்டு வேலை செய்து பழகாததால். டக்கென்று கூப்பிட்ட குரலுக்கு ஒரு ஆள் இருந்தால் தேவலை என்று அவளுக்குப் பட்டது. படுக்கை விரிப்பைச் சரி செய்து, தனது உடுப்புக்களைத் துவைத்து இஸ்திரி செய்து, காரைத் துடைத்து, என்று பலவிதங்களிலும் உதவி தேவையாக இருந்தது!

மேலும், இவர் வேறு அடிக்கடி வெளிநாடு பயணித்ததில், தோட்டமும்..பூச்செடிகளும் கவனிப்பாரின்றிக் களை இழந்து போனது. அத்தோடு, பதவி உயர்வு கிடைத்ததால், நானும் மெடிக்கல் செமினார்/கான்பரன்ஸ் என்று அடிக்கடி பயணிக்க வேண்டி இருந்தது!..எனவே எல்லோரும் முழு மனதோடு, அந்த மியன்மார்ப் பெண்ணை வீட்டோடு வைத்துக்கொள்ள, ஒரு ஏஜன்சி மூலம் ஏற்பாடு செய்தோம்.

சுமோனுக்குச் சுத்தமாக ஆங்கிலம் பேச வரவில்லை. ‘வாட்ச்யுவர் நேம் ‘என்றால் மட்டும் பதில் சொல்வாள். ஆங்கிலப் பிரயோகம் வேறு படு வித்தியாசமாக இருந்தது. டொமாட்டோ கொண்டு வா என்றால் உருளையைக் கொண்டு வருவாள். அப்பெண்ணுக்குப் புரியும்படி ஆங்கிலத்தில் சொல்லித் தருவதற்குள் எனக்கு முழி பிதுங்கிப் போனது…கறி காய் பெயர்களையும், வேலை செய்முறையையும் மியன்மார் மொழியில் அவளை எழுதிக் கொள்ளச் செய்து ஒருவழியாக அப்பெண்ணை எங்கள் வீ ட்டுக்கு ஏற்றார்ப்போல் தயார்ப்படுத்தினேன் .

இப்படி ஒவ்வொரு வேலையையும் அவளிடம் செய்து வாங்குவதற்கு மிகவும் பொறுமை வேண்டி இருந்தது. ஆனாலும் படு நேர்த்தியாக உடுத்திக் கொள்ளவும், மிக மரியாதையாகப் பழகவும் தெரிந்திருந்தது. கறிகாய் நறுக்குவதில் ஒழுங்கு தெரிந்தது. சாமான்களைப் பளிச்சென்று தேய்த்து வைப்பாள். நான் தினமும் காலை ஐந்தரை மணிக்கு எழுந்திருப்பதைத் தெரிந்து கொண்டு, ஐந்து மணிக்கே எழுந்து குளித்து வீட்டைப் பெருக்கித் துடைத்து விடுவாள்.ஆசை ஆசையாகச் சமைக்கும் முறைகளையும், நாளாவட்டத்தில் தெரிந்து கொண்டு தான் ரொம்பச் சமர்த்து என்று காண்பித்துக் கொண்டாள்.

எங்கள் வீட்டின் முன்புறமும், பின்புறமும் அழகிய தோட்டம். சுமோன் வந்தபின் அனாவசியப் புற்கள் போன இடம் தெரியவில்லை! பசுமை படர்ந்து தோட்டத்திற்கு ஒருவித சோபை வந்திருந்தது! நுழைவு வாசலை ஒட்டி இருந்த மகிழ மரத்தடிப் பிள்ளையாருக்குத் தினமும் குளியல். புதுப் பூவோடு பொலிவாகக் காட்சி தந்தார். மூன்று கார்களும் பளபளவென்று புது மணப்பெண் போல் மின்னின.

சுமன் அசடு இல்லை என்பது புரிந்து எல்லோருக்கும் அவள்மீது ஒரு பிடித்தம் உண்டாகி இருந்தது. நாளாக நாளாக வீட்டின் பழக்க வழக்கங்களும், மனிதர்களின் அன்றாடத் தேவைகளை முன்னின்று பூர்த்தி செய்வதிலும் சுமன் வெகு விரைவில் தேர்ந்தவளாகி விட்டாள். தினமும் அனைவருக்கும் சான்ட்விச் செய்து கொடுத்து, வாசலில் நின்று பைபை சொல்லி எல்லோருடனும் மிகவும் தோழமையாகப் பழகிய தோரணையில், எனக்கும் சற்று நிம்மதியாக இருக்க முடிந்தது.

தினமும் ஸ்ட்ரெய்ட் டைம்ஸ் படித்து எங்கெல்லாம் ‘சேல் ‘ போட்டிருக்கிறது என்று சொல்வாள். தொலைக்காட்சியில் தெரியும் சப்-டைட்டிலைப் படித்துச சிறுகச் சிறுகத் தனது ஆங்கில அறிவை வளர்த்துக் கொண்டாள் என்றே சொல்ல வேண்டும். அத்தனை ஏன்? நாங்கள் பேசும் தமிழைக் கேட்டு, ஓரளவுக்குத் தமிழும் சுமோனுக்குப் புரிந்தது! சாதம், சாப்பாடு, தண்ணீர் என்று சொன்னால் அவளுக்குப் புரிந்தது. சுமோனின் இத்தகைய வளர்ச்சி மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், மனதுக்குள் ஒருவித பயமும் தொற்றிக் கொண்டது!

அண்டை அயலாருடன் ரொம்பப் பேச்சு வார்த்தை கூடாது என்றும், முக்கியமாக அயலார் வீட்டுப் பணிப்பெண்களிடம், குடும்ப விஷயம் ஏதும் சொல்லக் கூடாதென்றும் சொல்லி வைத்தேன். தான் உண்டு தன வேலையுண்டு என்று இருக்க வேண்டுமென்று கண்டிப்பு காட்டினேன் .

கிழக்குக் கடற்கரைக்கு நடை பயிலும்போது அவளையும் உடன் அழைத்துச் செல்வேன். கடைக்குப் போகும்போதும், வார இறுதி நாட்களில் வெளியே டின்னருக்கும் அவளையும் அழைத்துச் சென்றேன். அப்போதெல்லாம், உடலாலும் மனதாலும் ஒழுங்காக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினேன். சில பணிப்பெண்கள், இளமைக்குப் பலியாகிப் பிரச்னைகளிலிருந்து விடுபட முடியாமல், தங்கள் நாட்டுக்கு அனுப்பப்படுவதையும், சிலர் உயிரை மாய்த்துக் கொள்ளுவதையும் எடுத்துச் சொன்னேன். மனக் கட்டுப்பாடு மிகவும் முக்கியம் என்பதையும், திடமான சிந்தனையை மனதுக்குள் பயிற்சி செய்யவேண்டுமென்றும் கூறினேன். எதற்கு இப்படி நாடு விட்டு நாடு வந்திருக்கிறோம் என்பதையும், குடும்ப நிலவரத்தையும் ஒருபோதும் மறத்தல் ஆகாது என்றும் சொல்லி வைத்தேன்.

சுமோனுக்குக் கைத்தொலைபேசி பெற்றுத் தருவதில் எங்கள் யாவருக்கும் உடன்பாடு இல்லாததால், தொலைபேசி அட்டை வாங்கித்தந்து அவளது பெற்றோருடன் மாதம் இருமுறை பேசச்செய்தேன். பண்டிகையின் போதும், அவளது பிறந்த நாளின் போதும் புத்தாடை, பரிசுப்பொருட்களென்று கொடுத்த போதெல்லாம் சுமோன் மிகவும் நெகிழ்ந்து போவதுண்டு. ‘நி காவ்ங் ட்டே! நா ங்கா தேயுடா ம்யாச்சி ….நீங்காகோ காவ்ங் தேம்ப்பே!’ என்பாள். (நீங்கள் மிகவும் நல்லவர்; நான் நிறையக் கற்றுக் கொண்டிருக்கிறேன்.நீங்கள் எனக்கு நல்லவற்றைக் கற்றுத் தந்திருக்கிறீர்கள்!) …..

அவளுக்கு அரிசிச் சோறு பிடிக்குமென்பதால், அவளுக்கென்று மியன்மார் அரிசி வாங்கிக் கொடுத்தேன் .நாங்கள் வெஜிட்டேரியன் என்பதால், மாமிச உணவுகளைச் சாப்பிடும் ஆசையை அவள் அடக்கிக் கொண்டிருக்கணும்!

ஆனாலும், சாம்பாரும், பொரியலும், இட்லி, தோசையும் அவளுக்கும் பிடித்தமானதாகப் போனது மட்டுமன்றி, எல்லாவற்றையும் மியன்மார் மொழியில் எழுதி வைத்துக் கொண்டு சமைப்பதிலும் தேர்ச்சி பெற்றாள். ‘மாம்! எனது அம்மாவுக்குத்தான் நான் சமைத்துப் போட்டதில்லை…நீங்கள் இளைப்பாறுங்கள். உடற்பயிற்சிக்குச் செல்லுங்கள். எது வேண்டுமோ நான் செய்து தருகிறேன்’. என்பாள். சமயங்களில் எனது காலை மஸாஜ் செய்து விடுவாள். இப்படி இதமாகவும் பதமாகவும் எல்லோருக்கும் இணக்கமாகவும் சுமோன் இருந்த படியால், ‘சுமோன்!சுமோன்!! என்று அனைவரும் அவளையே சார்ந்திருக்கலானோம்!

……வீடு வருவதற்கு இன்னும் ஐந்து நிமிடங்கள் இருந்தன. ‘சுந்தர், சுமோன் எப்படி இருக்கா ? போன் பண்ணி கேட்டைத் திறக்கச் சொல்லு. மீனா….கொல்லைத் துளசி வாடாமல் இருக்கா? ரோஜா பூத்திருக்கா? அந்தப் பெண் தன் வீட்டாரோடு பேசினாளா?’…..

‘அம்மா …சற்றுப் பேசாமல்தான் வாயேன். இதோ வீடு வந்தாச்சு.’ கீரிமோட்டரில் கேட் திறந்தது. கதவைத் திறக்க அவர்கள் சாவியைத் தேடியபோது நெருடிற்று !….”சுந்தர், மீனா! சுமோன் எங்கே? காணோமே! வீடு இருண்டு கிடக்கு?”..

‘ஓ அம்மா…சுமோன் நல்ல பெண் இல்லம்மா! நம்மளை எல்லாம் ஏமாத்திருக்கா! ஷி வாஸ் எ ச்சீட்…அவளைக் கொண்டுபோய் அந்த
ஏஜன்சியிலே விட்டுட்டு வந்துட்டோம்’…எனக்குத் திகைப்பாக இருந்தது. ‘இது என்ன கூத்து? என்ன நடந்தது? ஏன் என்னிடம் எதுவும் சொல்லலை? வாட் ஹாப்பென்ட்?’…நடந்தவற்றை சுந்தரும், மீனாவும் மாற்றி மாற்றிச் சொன்னார்கள்…..

“அம்மா! நீங்கள் அமெரிக்கா போன இரண்டு நாட்களுக்குப் பிறகு, நான் மாடியிலியிலிருந்து சுமோனை அழைத்தேன். உடனே அவளிடமிருந்து பதில் வரவில்லை…ஒருவேளை தோட்டத்தில் இருக்கலாமென்று எண்ணிக் கீழே வந்தேன். நான் வந்தததைப் பார்க்காமல், சுமோன் ஒரு கைத்தொலைபேசியில் யாருடனோ மும்முரமாகப் பேசிக் கொண்டிருந்தாள். எனக்கு ரொம்பவும் ஷாக் ஆக இருந்தது! அவளுக்கு எப்படிக் கைத் தொலைபேசி கிடைத்தது? யார் கொடுத்திருப்பார்கள்?….

என்னைப் பார்த்ததும், நான் அவள் பேசியதைக் கவனித்திருக்க முடியாதென்று எண்ணி மிகவும் இயல்பாக இருக்க முயற்சித்தாள். அதற்குள் கைத்தொலைபேசியைத் தனது காற்சட்டைக்குள் சாமர்த்தியமாக மறைத்துக் கொண்டது புரிந்தது. ‘யெஸ் அக்கா….ஏதேனும் வேண்டுமா ?’ என்றபோது….நானும் அவளை விட்டுப் பிடிக்கலாமென்று, எதுவும் நடக்காதது போலச் சென்று விட்டேன்.

சுந்தருக்கு ரொம்பவும் கோபம் வந்தது…..அவளது அறையில் அவள் இல்லாத சமயமாகப் பார்த்து அவளது உடமைகளை எல்லாம் அலசி ஆராய்ந்தோம். அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது. அவளுக்கு நிறையக் கடிதங்கள். அத்தனையும் சிங்கப்பூரிலிருந்து! எல்லாம் தலையணை உறைக்குள் மறைத்து வைக்கப் பட்டிருந்தன! அவளது பெட்டிக்குள் கைத்தொலைபேசியும், சில தொலைபேசி நம்பர்கள் கொண்ட ஒரு டைரியும்! எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு அவளை விசாரித்தோம்! சுமோனின் முகம் வெளிறிப் போனது. முதலில் எதுவும் சொல்ல மறுத்தவளை மிரட்டிப் பேசும்படி செய்தோம்.

…தான் எவ்விதத் தவறும் செய்யவில்லை என்றும், தனது நாட்டு நண்பன் ஒருவன் அவளுடன் பழக்கம் கொண்டு அவளுக்குக் கைத் தொலைபேசியைத் தந்ததையும் கூறினாள். கடிதங்களைப் பற்றிக் கேட்டபோது, அந்தப் பையன் அவளை மிகவும் விரும்புவதாகவும், தொடர்ந்து கடிதமெழுதி இவளது விருப்பத்திற்குக் காத்திருப்பதாகவும் சொல்லி நிறுத்தியபோது, சுந்தரின் கோபம் கட்டுக்கடங்காமல் போனது. ‘ஹூம்! எப்படி நல்ல பெண்ணாக நடித்து எங்களை ஏமாற்றி இருக்கிறாய்? என் அம்மா உனக்கு எத்தனை புத்திமதி சொல்லி இருப்பார்கள்? உனது வேலைக்காரப் புத்தியைக் காண்பித்து விட்டாயே? நன்றி என்பது துளியும் இல்லையே? நாங்கள் உன்னை எப்படி அருமையாகப் பார்த்துக் கொள்ளுகிறோம் ? உன்னை நம்புவது ஆபத்து என்பது இப்போதாவது எங்களுக்குத் தெரிந்ததே! உம் …கிளம்பு, கிளம்பு. உன்னை ஏஜென்சியிடம் விட்டுவிடுகிறோம்.’….

அவள் மிகவும் அழுது கொண்டே ‘அண்ணா…அக்கா…ரொம்ப ஸாரி …நான் தப்பு செய்யல..சொல்லாமல் மறைத்ததுதான் நான் செய்த பெரிய தப்பு…என்னை மன்னியுங்கள்!’ என்று சொன்னதை நாங்கள் கேட்டுக் கொள்ளவில்லை. உடனே அவளை ஏஜென்சியில் விட்டுவிட்டு வந்துவிட்டோம். உங்களைத் தொந்தரவு செய்ய விரும்பாததால் சொல்லவில்லை. அப்பாவும் மிகவும் பிஸியாக இருப்பதால், அவருக்கும் தெரிவிக்கவில்லை’……

‘அம்மா ….. அவளுக்கு நீங்கள் எத்தனை தரம் படித்துப்படித்துச் சொல்லி இருப்பீர்கள்? பொய் சொல்லி இருக்கா….திருட்டுத்தனம் பண்ணி இருக்கா…முக்கியமா நம்பிக்கைத் துரோகம் செய்திருக்கா….இதுக்குத் தான் சொன்னேன், வீட்டோடு வேலைக்காரி ஆபத்து என்று….நல்ல வேளை …விபரீதமாக எதுவும் நடக்கும் முன் அவளை அனுப்பியாச்சு ‘! சுந்தர் படு கோபத்தில் இருப்பது தெரிந்தது.

எனக்கு மனது மிகவும் கனத்துப் போனது. நடந்தவற்றை ஜீரணிக்கக் கஷ்டமாக இருந்தது. உடம்பின் சோர்வும், மனதின் பாரமும் சேர்ந்து கொள்ள அப்படியே சோபாவில் அமர்ந்தேன். வீடு களேபரமாகக் கிடந்தது. செய்தித்தாள்கள் சிதறிக் கிடந்தன. சோபாக்கள் மூலைக்கொன்றாக இழுத்துப் போடப்பட்டிருந்தன. ஷோகேசில் மெலியதாகப் புழுதி படர்ந்திருந்தது. குப்பைகள் சரியாக அகற்றப் படாமல் ஒருவித துர்நாற்றம் வந்து ண்டிருந்தது. சமையற்கட்டில் வெங்காயம் முளைத்துப் போய், உருளைக் கிழங்கு அழுகிக் கிடந்தது….

குளிர்சாதனப் பெட்டிக்குள் ஒரு உள்நாட்டுப் போர் நடந்தது போல் தாறுமாறாக இருந்தது. பின்புறத் தோட்டத்தில் செடிகள் வாடி, துளசியும் வதங்கிப் போயிருந்தது. பிள்ளையார் ‘ஐயோ பாவம்’ என்ற கோலத்தில் காணச் சகிக்காமல் இருந்தார். குளியல் அறையில் எல்லாப் பொருட்களும் சூறையாடினாற் போல திக்குக்கு ஒன்றாகக் கிடந்தன……சுந்தரையும் மீனாவையும் என்ன சொல்ல முடியும்? ‘ஸாரிம்மா…வீட்டுக்கு வந்தால் எங்களுக்குக் களைப்பாறத் தான் நேரம் சரியாக இருக்கு…எதையும் ஒழுங்கு பண்ண நிஜமா முடியல….வெளிலே சாப்பிட்டு வந்துடறோம் ‘….. மீனாவின் பதிலில் இயலாமை தொக்கி நின்றது!

சுந்தரிடமும் மீனாவிடமும் எனது மருத்துவப் பயணத்தைப் பற்றிக் கூறி விட்டு அவர்களுக்கென்று வாங்கியிருந்த பரிசுப்பொருட்களைக் கொடுத்தேன். சுமோனுக்காக ஒரு அழகிய கிமானோ வாங்கி வந்திருந்தேன். என் மனம் சரியில்லை என்று தெரிந்து, …’அம்மா…டேக் இட் ஈஸிம்மா…ஜஸ்ட் கிவ் மீ சம்டைம்…வேறு ஒரு பணிப்பெண்ணைப் பார்த்து விடலாம்’…..இப்போதைக்கு நீங்கள் போய் ரெஸ்ட் எடுங்கள்’….என்றாள் மீனா.

சுமோனின் பளிச் முகம் வந்து போனது. இந்தக் காலத்துப் பெண்கள் இப்படித்தான் நம்பவைத்துக் கழுத்தறுப்பார்களா என்ன? என்னவொரு நாடகம் சட்டென்று அரங்கேறி இருக்கிறது? ஐயோ பாவம் என்று எண்ணி உதவியது எத்தனை பிசகு?

எனது கணவரிடம் சொல்லி ஒருபாட்டம் அழ வேண்டும் போல் இருந்தது. …..’இதோ பார்…..எல்லாத்துக்கும் ஒரு வழி இருக்கும்….நீ இப்போத்தான் வந்திருக்கே….ஜஸ்ட் ரிலாக்ஸ். எல்லாம் சரியாப் போகும்…..நான் சுமோனின் அப்பாவிடம் இப்போதைக்கு எதுவும் சொல்லப் போவதில்லை….’ என்று அவர் சொன்ன போது, எனக்கும் அப்போதைக்குச் சற்று உறங்கினால் போதுமென்றிருந்தது.

மறுநாள் காலை காபி போடுவதற்கு டப்பாவைத் றந்தேன். அதற்குள் சிறியதாக ஒரு காகிதம். ‘மாம்! ப்ளீஸ் கால் மீ ‘ என்று சுமோனின் கையெழுத்துடன் ஒரு தொலைபேசி நம்பரும்.

எனது ரூமில் எல்லாம் வைத்தது வைத்தபடி இருந்தது. நான் சுமோனுக்குப் பிறந்தநாள் பரிசாகக் கொடுத்த கைக்கெடிகாரமும் அங்கே இருந்தது. ‘ஹும் ! ரொம்ப செல்:.ப் ரெஸ்பெக்ட் உள்ள பெண்தான்!’….என் மனதை சுமோனின் சிரிப்பும், பேச்சும் ஆக்கிரமித்திருந்தது. எங்கிருந்தோ வந்த பெண்….எல்லோரையும் தனது அப்பாவித் தனத்தாலும், நாளடைவில் புத்திசாலித்தனத்தாலும்
கவர்ந்த பெண், இப்படி ஒரு தப்புக் காரியம் செய்துவிட்டுப் போய்விட்டதே? இனி யார் வீட்டுக்குப் போய் என்ன பாடு படப்போகிறதோ? எனக்கு சுமோன் மீது, வருத்தத்தையும் மிஞ்சிய ஒருவித அக்கறை எழுவதைத் தடுக்க முடியவில்லை….இளங்கன்று பயம் அறியாதல்லவா? மனது தவித்தது…

எனது கைத் தொலைபேசி ஒலித்தது. ‘டாக்டர் மாம்’….சுமோனின் குரல்தான். ‘யெஸ் சுமோன் ….. வாட் ஹாப்பென்ட் ?’

‘மாம்….ஐம் வெரி ஸாரி மாம்…ஐ வான்ட் டு டாக் மாம். ப்ளீஸ் கம்’’

சுமோனின் குரல் கரகரப்புடன் இருந்தது. பேசுகையில் விசும்புவதும் கேட்டது. ‘சுமோன் …. நான் வேலைக்குப் போகணும்…நேற்றுத்தான் வந்திருக்கேன்…எனக்குக் கொஞ்சம் டயம் வேணும்…உடனே எல்லாம் வர முடியாது’….எனது குரல் எனக்கே சற்று அந்நியமாகத் தெரிந்தது.

‘மாம்…ப்ளீஸ் மாம்…..நீங்கள் கட்டாயம் உடனடியா வரணும் மாம். இல்லாவிட்டால், என்னை யார் வீட்டுக்காவது ஏஜென்சியில் அனுப்பி விடுவார்கள்…நான் உங்கள் வரவுக்காகத் தான் காத்துக் கொண்டிருக்கிறேன். எனது நிலைமையை உங்களைத் தவிர யாரும் புரிந்து கொள்ள மாட்டார்கள்…..தாமதிக்காமல் வாங்க மாம்’

‘சரி…நாளை வரப் பார்க்கிறேன்,’ என்று சொல்லிவிட்டு உடனடியாக ஹாஸ்பிடலுக்குக் கிளம்பினேன். மறுநாள் திரும்பத் திரும்ப சுமோனிடமிருந்து அழைப்பு. அந்தப பணிப்பெண் அமர்வக ஏஜன்சியிடமிருந்தும் எனக்கு உடன் வருமாறு அழைப்பு வரவே, அங்கு விரைந்தேன் .கூடவே என்னோடு பணிபுரியும் எனது உற்ற தோழியான டாக்டர் இந்திராவும் என்னோடு வந்தார். இந்திராவுக்குச் சுமோனைப் பற்றி முதலில் இருந்தே தெரியுமென்பதால், ஒருவித ஆதங்கத்துடன் என்னோடு வரச் சம்மத்திதார்.

என்னைப்பார்த்ததும் சுமோனுக்கு அழுகை பீறிட்டது. ‘மாம்…நான் தப்பு செய்யலை மாம். நான் செய்த ஒரே தவறு எல்லாவற்றையும் மறைத்ததுதான். கொஞ்ச நாட்களுக்கு முன் நான் குப்பையைப் போட வெளியே போனபோது, பக்கத்துக் கட்டுமான இடத்திலிருந்து ஒரு பையன் வந்து என்னை நிறைய நாட்கள் கண்காணித்து வந்ததாகவும், நான் மியன்மார்ப் பெண் போல் இருப்பதால் பேச விரும்புவதாயும் தெரிவித்தான்.

எனக்குப் பயமாக இருந்தது. உடனே இது போல் பேசுவது தப்பு என்றும், எனக்குரிய கட்டுப்பாடுகளைப் பற்றியும் அவனுக்குத் தெரிவித்த போது, அவனது கைத் தொலைபபேசியை என்னிடம் கொடுத்துப் பேசும்படி சொன்னான். எனது உள்மனதுக்குத தவறு என்று தெரிந்த போதும், அந்தப் பையன் என் மேல் காட்டிய அக்கறை பிடித்திருந்ததால்,நான் அவனுடன் பேசுவதுண்டு. அவனுக்கும் வீட்டிற்குச் செய்ய வேண்டிய கடமைகள் நிறைய இருப்பதாகவும், குடும்பத்தை முன்னுக்குக் கொண்டு வந்த பிறகே திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும், எனக்கும் அது போல் எண்ணம் இருப்பதால், எனது பதிலுக்குக் காத்திருப்பதையும் சொன்னான்.

…’ மாம்….நீங்கள் சொன்ன அறிவுரை எனக்கு எப்போதும் கவசம் போல் இருந்தது. எனது எண்ணத்தில் சீரான ஒரு ஒழுங்கைக் கொண்டு வந்தது உங்களின் அறிவுரை தான்…அதனால் தான் நான் அப்பையனிடம் எதுவுமே இன்று வரை பதில் சொல்லவில்லை…உங்களிடம் சரியான சமயத்தில் சொல்ல நினைப்பதுண்டு. ஏனோ பயம் அப்படி என்னைச் செய்ய விடாமல் செய்து விட்டது.

‘ நீங்கள் ஒரு கனிவான அம்மாவாக என்னிடம் கருணையுடன் நடந்து கொண்டீர்கள். ஒரு கண்டிப்பான டீச்சர் மாதிரி நான் தெளிவுடன் நடப்பதற்கு புத்திமதி தந்தீர்கள். பெற்ற மகளைப் போல் எனக்கு ஆதரவையும் அன்பையும் காட்டி நீங்கள் இட்ட உணவு என் மனதையும் வயிற்றையும் குளிரச் செய்திருப்பதை என்னால் வார்த்தையால் கூற முடியவில்லை.

அண்ணாவும் அக்காவும் என்னைத் தங்கள் சகோதரியாக நடத்தியதற்கு நான் மிகவும் அதிருஷ்டம் செய்திருக்க வேண்டும்! நான் செய்தது தவறு தான்… தயவு செய்து என்னை மன்னித்து ஏற்றுக் கொள்ளுங்கள். என்னை நான் உங்களுக்கு நிரூபணம் செய்வதற்கு மற்றொரு சந்தர்ப்பம் தாருங்கள்.’

…….சுமோன் அழுது கொண்டே எனது கால்களில் விழுந்தாள்.

நான் சுமோனை ஆழமாகப் பார்த்தேன். எனது பெண்ணை விட நான்கு வயது சிறியவள் இந்தப்பெண்! தடுமாறும் வயது! தனிமையும், சந்தர்ப்பமும், சூழ்நிலையும் இடங் கொடுத்ததால்,எனது அறிவுரையையும் மிஞ்சி தப்பு செய்து விட்டாள் . ஆனாலும் தான் செய்த தவற்றை உணர்ந்து கொண்டு விட்ட பெண்…..மீண்டும் தவறு செய்யக் கூடாது என்று நான் கண்டிக்கலாமே தவிர ‘தப்பு செய்து விட்டாய்….அதற்கான துர்ப்பலனை அனுபவி…எக்கேடு கெட்டுப்போ’ என்று தண்டிப்பது எந்த விதத்தில் நியாயம்? எனது மனதிற்குள் சுமோனைப் பற்றிய ஒருவிதத் தீர்மானம் வந்திருந்தது.

டாக்டர் இந்திரா என்னைப் பார்த்து முறுவலித்தார்…..’டாக்டர்! இந்தப் பெண்ணின் வார்த்தைகளும் உணர்ச்சியும் உண்மையைப் பிரதிபலிப்பதாக இருக்கின்றன. எல்லோரது வாழ்வும் சிக்கலும் சிடுக்குமாகத்தான் இருக்கிறது….நம்மை அண்டிப் பிழைக்க வந்த பெண்ணுக்கு மட்டும் உணர்ச்சிகள் கூடாது என்று சொல்வதில் என்ன நியாயம் இருக்கிறது? நாம் தவறுகள் செய்வதில்லையா என்ன? உங்களுக்குத் தெரியுமே …..

என் பிள்ளையும் மருமகளும் கூட ஒரு விதத்தில் இந்த சுமோனைப் போன்றவர்கள் தானே? வெறும் நட்பு மட்டும் தானென்று சொல்லி என்னையும் என் கணவரையும் நம்ப வைத்து, ஒரு நாள் எனது உறவுக்காரப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள விருப்பமா என்று என் பிள்ளை சுரேஷைக் கேட்ட போதுதானே, என் பிள்ளை சுரேஷுக்கு அவனது பெண் தோழி லீலாவின் மீது விருப்பமென்று தெரிந்தது.

எத்தனை பிரயத்தனப்பட்டு எனது ஏமாற்றத்தை மறைத்துக் கொண்டு அவர்களுக்குத் திருமணம் செய்து வைத்தோம்! நம்பிக்கை என்ற சிறகை அவன் ஒடித்தது உண்மை என்றாலும், எனது கோபம், வருத்தம் அனைத்திலும் மிஞ்சிய அபரிமிதமான அன்பும் அவர்களது மகிழ்ச்சியே முக்கியமென்று அப்போது நான் எடுத்த தீர்மானமும் ஒரு நல்ல திருப்பு முனை அல்லவா?….

நம்மை மகிழ்விக்க ஒரு செயலைச் செய்ய நிர்ப்பந்திப்பதை விடப் பிறர் மகிழ்ச்சி அடைய நாம் ஒரு தடையாக இல்லாமல் இருப்பதே பெரிய குணம் அல்லவா? நமது ஆளுமையை இந்த எளிய பணிப்பெண்களிடம் காண்பிக்காமல், அவர்கலைச் சற்றே அரவணைத்தும் அங்கீகரித்தும் போனால் தவறுகள் நிச்சயம் குறையும் என்றே தோன்றுகிறது!

‘சிறியோர் செய்த சிறு பிழை எல்லாம் பெரியோராயின் பொறுத்தல் கடனே’ அல்லவா? எப்போதும் மறப்பதும் மன்னிப்பதும் தானே உத்தம குணங்கள்? இந்தப் பெண் மீது கோபம் கொள்வது நியாயமற்றது என்றே எனக்குத் தோன்றுகிறது..நமது கோபத்துக்கு ஒரு கடிவாளமிட்டு விட்டால், அந்த இடத்தில் ஒரு நியாயம் ஏற்பட்டு விடுகிறது….இந்தப் பெண்ணுக்கும் ஒரு நியாயம் கிடைக்க வேண்டும்…நெருப்பு சுடும் என்று இந்தப் பெண் உணர்ந்து கொண்டு விட்டாள் ….நிச்சயம் இனி தவறு செய்ய மாட்டாள் என்றே நம்ப வேண்டும். நீங்கள் ஒரு கண்ணியமான டாக்டர். நல்ல முடிவாக எடுங்கள்’…..

டாக்டர் இந்திராவின் பேச்சில் யதார்த்தமான அணுகுமுறை தெரிந்தது. சவாலும் சமாளிப்பும் எனக்கும் புதியதல்ல…தனது மனைவியைக் கவர்ந்து சென்ற இராவணனுடன் போரிடுகையில், அவன் நிராயுத பாணியாக நின்றபோது , ‘இன்று போய் நாளை வா’ என்று மறு சந்தர்ப்பம் கொடுத்தாரே ராமர்? நாமெல்லாம் எம்மாத்திரம்? சவால்களைச் சமாளிப்பது தானே வாழ்க்கை? ….. செய்யும் தவறுக்கு எல்லாம் தண்டனை என்றால், உலகில் நியாயம் என்பதைப் பூதக் கண்ணாடி கொண்டல்லவா தேட வேண்டும்?

கேள்விக்குறியோடு தலை குனிந்து கொண்டிருந்த சுமோனைத் தட்டிக் கொடுத்தபடி ….’ஆல்ரைட் சுமோன்! உன்னை நம்புகிறேன்…மீண்டும் தப்பு செய்யாமல் இருக்கும் பட்சத்தில் உன்னை வீட்டுக்கு அழைத்துச் செல்கிறேன். இதுவே உனக்கு ஒரு பாடமாக இருக்கட்டும்…’ என்றபடி சுமனை அழைத்துக் கொண்டு கிளம்பிய போது கைத்தொலைபேசி ஒலித்தது.

‘அம்மா….நீங்கள் வந்த பிறகு நாம் திரும்பவும் பணிப்பெண் எஜென்சிக்குப் போய் வேறு பணிப்பெண்ணை நியமனம் செய்ய ஏற்பாடு செய்யலாமா? வீட்டில் வேலை தேங்கிக் கிடக்கிறதே?…

மீனா பேசிய போது, ‘நான் வீட்டுக்குத்தான் வந்து கொண்டிருக்கேன்….ஒரு சூடு கண்ட சுட்டிப் பெண்ணோடு ‘…என்ற போது, எங்கிருந்தோ வந்து எங்களுக்குச் சேவகம் செய்யக் காத்து நின்ற சுமோன் கண்களில் நீர் பூத்திருந்தது!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *