கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 3, 2023
பார்வையிட்டோர்: 2,621 
 

(1928ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

(தமிழில் முஸ்லிம் பெண்மணியால் எழுதப்பட்ட முதல் நாவல்)

அத்தியாயம் 3-4 | அத்தியாயம் 5-6 | அத்தியாயம் 7-10

5 – வனமாளிகையில் நிகழ்ந்த நிகழ்ச்சிகள் 

பகலவன் கிழக்கே தோன்றினான். அவனது வெய்ய கிரணங்கள் இராகுலப் பிரபுவினது வன மாளிகைமீது வீழ்ந்தன. 

சுரேந்திரன் கண் விழித்தான், தான் ஒர் புற்றரையில் படுத்திருப்பதை உணர்ந்து, உடனே எழுந்து உட்கார்ந்தான். காலை நேரத்தில் அவ்விடம் மிக்க மனோகரமாய்த் தோன்றியது. அத்தோட்டத்தைச் சுற்றிப் பார்க்க எண்ணி, மெதுவாய் எழுந்தான். எங்கு பார்க்கினும் அழகிய பூஞ்செடிகளும், குரோடன் வரிசைகளுமே காணப்பட்டன. அத்தோட்டத்தின் நடுவே எழில் மிகுந்த மாளிகை யொன்றிருந்தது. அம்மாளிகையின் எதிரிலிருந்த கொடிப்பந்தல், எல்லாவற்றினுஞ் சிறந்து மிகக் கம்பீரமாய் விளங்கிற்று. அதன் மீது பல நிறங்களையுடைய பூக்கள் எண்ணற்று மலர்ந்திருந்தன. பூக்கள் இலைகளைக்கூட மறைத்துவிட்டன. தென்றலின் அவை ஒய்யாரமாய் அசைந்தசைந்தாடியது. காண்போரைக் களிப்புறும்படி செய்தது. இத்தகைய எழில் மிகுந்த அச்சிங்கார வனத்திடையே சுரேந்திரன் உலாவி வரும்பொழுது, அங்கியணிந்த, நீண்ட ஒருருவம் தன்னை நோக்கி வருவதைக் கண்டு தம்பித்து நின்று விட்டான். அங்ஙனம் எதிர்பாராது தன்னை நோக்கிவரும் உருவத்தைக் கண்ட நமது இளவல் சற்று அச்சமடைந்தானென்றே கூறல் வேண்டும். அவ்வாறு வந்த அவ்வுருவம் கிட்ட நெருங்கியதும், அஃது கம்பீரத் தோற்றமுடைய ஓர் கனவான் என்று சுரேந்திரன் அறிந்து கொண்டான், அக்கனவான் அவனை நெருங்கி வந்ததும், நின்று தலைவணங்கி பிறகு அவனைப் பார்த்து,” என்ன இளவரசே! காலை நேரத்தில் உல்லாசமாய்ப் பொழுது போக்குகிறாப்போல் தெரிகிறதே” என்று விகடமாய்க் கூறினார். 

அக்கனவான் காட்டிய மரியாதையையும், கூறிய மொழிகளையுங் கேட்ட சுரேந்திரன் முந்தியைப் போன்று அத்துணை வியப்படையவில்லை. எனினும், ஹோட்டல்காரன் கூறியவை. அவன் மனத்திற்கு உறுதிப்பட்டன. இங்ஙனம் அவன் பல்வேறு எண்ணங்களான் மனங்குழம்பி வாய் பேசாதிருக்க, அக்கனவான் அவனை உற்று நோக்கியதும் பெரிதும் வியப்படைந்து, சிறிது நேரம் ஒன்றும் பேசாதிருந்து, பிறகு அவனைப் பார்த்து, “ஐயா, நீர் யாரென அறிவிக்க முடியுமா? உலகினில் ஒருவரின் சாடை மற்றொருவர்க்கு இருப்பது இயல்பே. ஆயினும், இங்ஙனம் ஒருவரைப்போல் மற்றொருவர் அச்சு, அடையாளம் பூராவும் இருத்தல் சாத்தியமாமா? எங்கள் இளவரசர்க்கும் உமக்கும் எவ்வித உருவவேற்றுமையுமில்லை. உமது மீசையை எடுத்துவிடின், உம்மை யாரும் இளவரசரல்லவென்று நினைக்க இயலாது. இளவரசரோடு நெருங்கிப் பழகும் நானே, உம்மை உடனே கண்டுபிடிக்க இயலவில்லையே-“என்று கூறி வரும்பொழுது, வெகு தமாஷாய்ப் பேசிக்கொண்டே ஒருவர் இவர்களை நோக்கி ஓடி வந்தார். “என்ன கமலாகரரே! பேச்சு வலுத்தாப் போலிருக்கிறதே!” என்று கூறிக்கொண்டே இவர்களை நெருங்கினார். மிகச் சமீபமாய் நெருங்கியதும் சுரேந்திரனைக் கண்டு பிரம்மித்து நின்றுவிட்டார். சுரேந்திரனும் வந்தவரை நோக்கி ஆச்சரியத்தில் அமிழ்ந்து வாய்பேசாது நின்றான். 

சிறிது நேரத்திற்கெல்லாம் வந்தவரே பேசத் தொடங்கி, சுரேந்திரனைப் பார்த்து, “இளைஞனே, நீ யார்? உன்னை பார்க்கப் பார்க்க, நீ இளவரசனா? நான் இளவரசனா யென்பது எனக்கே சந்தேகமாகி விட்டது. உண்மையிலேயே என்னைப் போலவே யிருக்கின்றாய்! உயரம், பருமன், நிறம் எல்லாம் ஒரேமாதிரியாகவேயிருக்கின்றன. நீ யாரப்பா? உண்மையைக் கூறு” என்றார். 

சுரேந்திரன் வந்தவரே இளவரசரென முன்னரே ஒருவாறு யூகித்துக்கொண்டான். அவர் கூறியதைக் கேட்டதும், அவனது யூகம் உறுதிப்பட்டது. அங்ஙனம் உறுதிப்பட்டதும், இளவரசர்க்கு உடனே தலை வணங்கினான். இளவரசர்க்குமுன் வந்து தன்னோடு பேசிக்கொண்டிருந்தவர் சேனைத் தலைவர் என்பதையும் அறிந்துகொண்டான். சிறிதுநேரம் ஏதோ சிந்தித்திருந்து பிறகு அவர்களைப் பார்த்து, 

“மாட்சிமை தங்கிய இளவரசே! சேனாதிபதியவர்களே! நான் மதுரையைச் சேர்ந்தவன், என் பெயர் சுரேந்திரனென்பர். பல ஊர்களையுஞ் சுற்றிக்கொண்டு முந்தா நாள் மாலை இவ்விடத்திலிருந்து ஏறக்குறைய ஒரு மைல் தூரத்திலுள்ள சாப்பாட்டு விடுதி வந்தடைந்தேன். அச்சாப்பாட்டு விடுதியின் சொந்தக்காரர் இன்னும் இரண்டொரு நாட்களில் முடிசூட்டு வைபவம் நிறைவேறப் போவதாய்க் கூறினார். ஆகவே, அதைப் பார்க்கும் பொருட்டு, தலைநகர்ச் செல்ல உத்தேசித்து இவண் வந்தடைந்தேன்” என்றான். 

என் இளவரசே! நான்கூட முதலில் தாங்கள்தானென்றெண்ணி விட்டேன். பிறகே உண்மையை உணர்ந்தேன் உடையினாலும், மீசையினாலுமன்றி வேறுவிதத்தால் இவரை தாங்கள் அல்லல்வென்று உணர்தற்கியலா. ஆனால், இவர் தங்களை விட இளமையாய்த் தோன்றுகிறார்” என்றார் கமலாகரர். 

“உண்மையே சகோதரா, நீ தனியே தலைநகர்ச் செல்லவேண்டாம். நாம் எல்லாரும் ஒன்றாகவே போவோம். என் சிம்மாசனத்தருகிலேயே உன்னை உட்கார வைத்துக் கொண்டால் எல்லாரும் வியந்து நம்மையே நோக்குவர். நல்ல வேடிக்கையாயிருக்கும். சேனாதிபதியவர்களே! நான் கூறுவது எப்படி?” என்றார் இளவரசர். கமலாகரரும் அவர் கூறியதையே தழுவிக் கூறினார். 

மீண்டும் இளவரசர் சுரேந்திரனைப் பார்த்து, “சுரேந்திரா, நாளைக்குத்தான் முடிசூட்டு வைபவம். இன்றிரவு இங்கிருந்து விட்டு, நாளைக்கு அதிகாலையில் நாம் எல்லாரும் அரண்மனைக்குச் சென்றுவிடல் வேண்டும். நீயும் எங்களோடு கூடவே தங்கிவிடு” என்று அன்போடு கூறி, அவனது கையினைப்பற்றி இழுத்துக்கொண்டே வனமாளிகையின் உட்புறம் செல்ல, சுரேந்திரன் மட்டற்ற மகிழ்ச்சியோடு அவரைப் பின் தொடர்ந்தான். பிறநாட்டில் தனது அனாதரவான நிலையில், எதிர்பார்க்க முடியாதவிடத்தின் நட்பு கிடைத்ததைப்பற்றி எல்லாம் வல்ல இறைவனை மனத்தாற்றொழுதான். அன்று பகற்பொழுது மிக்க ஆடம்பரத்தோடு கழிந்தது. 

இரவு வந்தடுத்தது. மாளிகை முழுதும் எங்கு பார்க்கினும் பட்டப்பகல் போன்று பல விளக்குகள் ஏற்றப்பட்டு ஒளி வீசின. இரவு மணி ஒன்பதடித்தது. இளவரசர் பிரதாபனும், சேனைத் தலைவர் முதலியோரும் நமது கதாநாயகனை அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்த அறைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மேஜையின் மீது பலவகையான சிற்றுண்டிகளும் மதுபானங்களும் வைக்கப்பட்டிருந்தன. எல்லாரும் மேசையைச் சுற்றி போடப்பட்டிருந்த நாற்காலிகளிலமர்ந்து சிற்றுண்டிகளருந்தினர். அப்பால் மதுபானமருந்த ஆரம்பித்தனர். எல்லாரும் மட்டாகவே குடித்தனர். ஆனால், இளவரசரோ மிதமிஞ்சி பருகிக்கொண்டே போக, இடையிடையே கமலாகரர் எச்சரித்துக்கொண்டே வந்தார். ஆயினும் இளவரசர் கேட்டாரில்லை, 

இறுதியில் இராகுலப் பிரபுவினால் அங்கு அமர்த்தப்பட்டிருந்த பணிமகனொருவன், உருக்கிய பச்சைநிற ஸ்படிகம்போல் பளபளவென்று பிரகாசித்த, ஒருவகைபானத்தை, ஒருகிண்ணத்தில் ஊற்றி, அதை இளவரசர்க்கு மட்டும் தனியே கொடுத்தமையால் ஐயுற்ற கமலாகரர், அதைப் பருகவேண்டாமென்று இளவரசரிடந் தெரிவித்தார். இளவரசர் அவர் கூறியதைக் கேட்காது அப்பானத்தை மடமடவெனக் குடித்துவிட்டார். அப்பால், எல்லாரும் மிக்க மகிழ்வோடு பற்பல விஷயங்களைப்பற்றி உரையாடிக் கொண்டிருக்க, இளவரசர் தமக்கு தூக்கம் வருவதாய்க் கூறி பள்ளியறைக்குட் சென்றனர். 

சுரேந்திரனும் சீக்கிரமாகவே அங்கிருந்து எழுந்து, தனக்கெனக் கொடுக்கப்பட்ட அறைக்குட் சென்று படுக்கையிற் படுத்து துயிலில் ஆழ்ந்தான். மணி மூன்றிருக்கலாம். யாரோ அவனது படுக்கையறைக் கதவை மெல்ல மெல்லத் தட்டுஞ் சத்தங்கேட்டு, திடுக்கிட்டு துயிலுணர்ந்தெழுந்து, கண்களிரண்டையும் கசக்கிக்கொண்டே சென்று கதவினைத்திறக்க, எதிரே சேனைத்தலைவர் பெரிதும் வாடிய வதனத்தினராய் நின்றுகொண்டிருக்கக் கண்டான். கண்டவன் ஆச்சரிய மேலீட்டால் அப்படியே தம்பித்து நிற்க, கமலாகரர் உள்ளேவந்து வாயல் கதவினை மூடிவிட்டு சுரேந்திரன் அருகேவந்தார். 

சுரேந்திரன் ஏதோ பேச வாயெடுத்தான், ஆனால் அவனைத் தடுத்துவிட்டு, அவன் கையை அன்போடுபற்றி “ஜயா! நீர் ஒரு உதவி செய்ய முடியுமா?” என்றார், 

“நானா? தங்கட்கா? என்னால் என்ன செய்ய இயலும்? என்று சுரேந்திரன் ஆச்சரியத்தோடு வினாவினான். 

6 – பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடிந்தது 

வியப்போடு தன்னைநோக்கி வினாவிய இளைஞனை கையமர்த்தி,சேனாதிபதி அவனருகே உட்கார்ந்து கொண்டு அவனைப் பார்த்து, “நண்ப, நேரமாகிறது. விஷயத்தை சுருக்கமாய்க் கூறுகின்றேன். கவனமாய்க் கேளும்” என்றார். 

சுரேந்திரன் அவரது வாயைப் பார்த்த வண்ணமே வீற்றிருந்தான். மீண்டும் அவர் பேசத்தொடங்கி, “நமது இளவரசர் பிரதாபனுக்கு, இன்றிரவு கடைசியாய்க் கொடுக்கப்பட்ட பானத்தில் மயக்கமருந்து கலந்துகொடுக்கப்பட்டிருக்கின்றது. அவர் மயக்கந் தௌ-ந் தெழுந்திருக்க குறைந்தது மூன்றுநாட்களாகிலுஞ் செல்லும். ஆனால் நாளைகாலைதான் முடிசூட்டுவதாய்த் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. அஞ்ஞான்றும் எப்படியும் இளவரசர் அரண்மனையிலிருத்தல் வேண்டும். பொது மக்கள் ஏற்கனவே பிரதாபன் பேரில் அருவருப்படைந் திருக்கின்றனர். இந்நிலையில் மதுபானத்தை மட்டுக்கு மீறி அருந்திவிட்டு, குடி மயக்கத்தில் ஆழ்ந்து, முடிசூட்டுதலையே அடியோடு மறந்து விட்டதாய் குடிமக்கள் எண்ணி விடுவர். இங்ஙனம் குடிவெறியில், பொறுப்புடைய இம்முக்கிய சம்பவத்தையே மறந்துவிடும் ஒருவர், தமக்கரசராய வரின், எத்தகைய நன்மையை அவரிடம் எதிர்பார்க்க முடியுமென்று குடிமக்கள் எண்ணுவதும் இயல்பே. அதுவுமன்றி, முன்னமே பிரதாபன் செய்கைகளால் உள்ளுக்குள் அருவருப்படைந்திருக்கும் இளவரசி விஜயாள், இளவரசரின் இச்செய்கையால் பெரிதும் மணமுடைந்து விடுவார். குடிமக்கள் தங்கட்கு அரசியாக வர விரும்புவது விஜய சுந்தரியையே, ஆகவே இப்போது குடிமக்களின் எண்ணமும், இளவரசி விஜயாளின் விருப்பமும் பிரதாபுக்கு விரோதமாய் மாறி விடுமாயின், அடுத்தபடி அரசராய் வரக்கூடியவர் இராகுலப் பிரபுவே. இவைகளையெல்லாம் முன்னரே ஆழ சிந்தித்தே தான். இராகுலன் தன் பணியாள் மூலமாய்ப் பிறர் சிறிதும் ஐயுறாவண்ணம் பானத்தில் மயக்க மருந்தைக் கலந்து கொடுக்கும்படி திட்டம் பண்ணியிருக்கிறார். இந்நெருக்கடியான நிலைமையில், நீர் எங்கட்கோர் உதவி செய்யின், நாங்கள் என்றும் உமக்கு நன்றி பாராட்டக் கடமைப்பட்டவராவோம்” என்றார். 

சிறிது நேரம் ஏதும் பேசாமலிருந்த சுரேந்திரன், கமலாகரரைப் பார்த்து, ‘சேனாபதியவர்களே! தாங்கள் கூறுவதை ஒருவாறுணர்ந்து கொண்டேன். ஆனால், அதற்காக நான் என்ன செய்ய முடியுமென்பதுதான் எனக்கு விளங்கவில்லை” என்றான். 

“வீணில் நேரம் போக்க எனக்கு விருப்பமில்லை. உருவத்திலும், பிறவற்றினும் நீர் அரசரைப் போன்றே இருக்கின்றீர். ஒருவரும் உம்மை பிறன் என்று கண்டு பிடிக்க இயலாது. அரசர் மயக்கந்தௌ-ந் தெழுந்திருக்கும் வரையிலும் நீர் அரசராய் நடிக்கவேண்டும்! இதுதான் நீர் எங்கட்குச் செய்யக்கூடிய மாபெரும் உதவி!” என்றார் சேனாதிபதி. 

சுரேந்திரன் உண்மையிலேயே திடுக்கிட்டுவிட்டான். அவர் கூறியது கனவோ, நனவோவென 

ஐயுற்றான். தன் பக்கத்தே உட்கார்ந்திருக்கும் கமலாகரரை உற்று நோக்கி உண்மையேயென்றுத் தௌ-ந்தான். உண்மையாயின், சிறியனும், அரசர் நடந்துகொள்ளக்கூடிய பழக்க வழக்கங்களைச் சிறிதும் அறிந்துகொள்ளாதவனும், பிறநாட்டைச் சேர்ந்தவனுமான தான், எங்ஙனம் இத்தகைய மாபெரும் பொறுப்புடைய அரசுரிமையை ஏற்றுக்கொள்ளுவதென நினைத்தான். இங்ஙனம் பற்பல எண்ணங்களான் குழம்பிய மனத்தோடு சுரேந்திரன் ஏதும் பேசாது நின்று கொண்டிருந்தான். 

“இளைஞனே! சீக்கிரம் விடைகொடும். நீர் அரசராய் நடிக்கவேண்டுவது இன்றியமையாதது. நண்பா, நீர் செய்யும் இவ்வுதவி, எங்கட்குமட்டுமல்ல: மாயாபுரியின் அரச சம்சத்திற்கே உண்டாம் சிறு சொல் நீங்கும்படி செய்ததாகும். அதுவுமின்றி அரசுரிமை பொருட்டு நேரப்போகும் கலகங்களும் உண்டாகாமல் தடுத்தவராவீர். ஆதலால் மாயாபுரியின் அரச குடும்பத்திற்கு உண்டாகப் போகும் சிறுசொல் நீங்கும்படி ஆவதைச் சொல்லும் உயிர்போன்ற என்னை நோக்கியும், தலைவன் தன் தலைமையினின்றும் வழுவும் நிலைமையை நோக்கியும் இந்த வரத்தை அருளிச் செய்ய வேண்டும்” என்று மிகவும் இரந்துவேண்டினார் கமலாகரர். 

“இளைஞனாகிய என்னிடத்து பெரியவராகிய தாங்கள் இங்ஙனம் வேண்டிக்கொள்ளுவதை நான் கேட்க மறுப்பதாக எண்ணவேண்டாம். திடீரென ஓர் அரசராய் நடிப்பதென்றால், அரசியல் விஷயங்களை நன்றாய் உணர்ந்த தங்களை போன்ற நிபுணர்கட்கே இலேசான காரியமல்லவென்பது தங்கட்குத் தெரியாததல்ல. அங்ஙனமிருக்க ஏதுமறியாத சிறுவனான யான், எங்ஙனம் பொறுப்புடைய,இவ்விஷயத்தில் தலையிடுவதென்றே அஞ்சுகின்றேன். முதலாவது மந்திரி பிரதானிகள், மற்றும் அரண்மனை வேலைக்காரர்கள் முதலியோரின் பெயர்கள் தெரிந்திருக்க வேண்டாமா?, மேலும்,அரசர்கள் நடந்து கொள்ள வேண்டிய முறைகள், பழக்க வழக்கங்கள் முதலியன தெரிந்திருக்க வேண்டாமா? இளவரசி விஜயாளுக்கும், இளவரசர் பிரதாபனுக்கும் ஏதும் நெருங்கிய சம்பந்தமிருக்கலாம். எதுபற்றியாயினும் நான் ஐயுறப்படுவேனாயின், அதனால் ஏற்படும் பிரதிபலன் தங்கட்குத் தெரியாததல்ல. இவையெல்லாம் தாங்கள் நன்கு சிந்திக்குபடி வேண்டுகின்றேன்” என்றான் சுரேந்திரன். 

“நண்பரே, நீர் கூறுவது முற்றிலும் உண்மையே. இவைகளையெல்லாம் நான் சிந்திக்கவில்லையென்று நினைக்க வேண்டாம். எவ்வளவு தூரம் ஆழ சிந்திக்க வேண்டுமோ அவ்வளவுதூரம் சிந்தித்துவிட்டேன். என்ன செய்கிறது. வேறு வழியில்லை; நீர் கூறிய எல்லா விஷயங்களையும் நான் கவனித்துக் கொள்ளுகின்றேன்; உமக்குத் தெரிவிக்க வேண்டிய விஷயங்களை அவ்வப்போது குறிப்பாய் அறிவிக்கின்றேன். நேரமாகிறது, தயவுசெய்து சீக்கிரம் எழுந்திரும்” என்று கமலாகரர் பிறர் மறுக்கமுடியாத ஒருவிததொனியில் கூறினார். 

அதற்குமேல் சுரேந்திரன் ஏதும் மொழிந்தானில்லை உடனே எழுந்து சேனாபதியைப் பின் தொடர்ந்தான். இருவரும் பல அறைகளைத் தாண்டி அரசனது படுக்கையறைகுட் சென்றனர். ஆங்கு இளவரசர் தன்னுணர் விழந்து படுக்கையின் பேரில் கிடந்தார். மெல்ல 

இருவரும் இளவரசரைத் தூக்கிக்கொள்ள, நம்பிக்கையுள்ள ஆயுத பாணிகளான இருவர் கையில் விளக்கேந்திய வண்ணம் மிகவும் வாடிய வதனத்துடன் அவர்களைத் தொடர்ந்தனர். ஒருவரும் வாயைத் திறவாமலே இருண்டிருந்த ஒருநிலவறை வழியாய் சென்றனர். அந்நிலவரையின் இறுதியில் அழகிய-ஆனால் மிக்க மர்மமான ஓர் அறை 

அமைக்கப்பட்டிருந்தது. அவ்வறையின்கண் போடப் பட்டிருந்த படுக்கையொன்றில் இளவரசரைப் படுக்க வைத்தனர். பிறகு வீரர் இருவரிடமும், கமலாகரர், இளவரசரை மயக்கம் தௌ-யும்வரையிலும் மிக்க விழிப்போடு கவனித்துக்கொள்ளும்படியும், இராகுலனது வேலைக்காரர்யாரும் சிறிதும் அறிந்துகொள்ளாதவாறு மிகவும் பத்திரமாய்ப் பாதுகாத்துக்கொள்ளும்படியும் அன்றைக்கு மூன்றாம் நாளிரவு தாம் அங்கு வரும்வரையிலும் அவ்வீரர்தம் உயிர்க்கே அபாயம் நேரிடினுங்கூட இளவரசரைக் காட்டிக் கொடுத்து விடக்கூடாதென்றும் கண்டிப்பான கட்டளையிட்டு விட்டு சுரேந்திரனுடன் அவணிருந்தகன்றனர். 

பின்னர், அரசர் அணியத்தக்க ஆடையாபரணங்களெல்லாம் நமது இளவலான சுரேந்திரனுக் கணிவிக்கப் பட்டது. அவனது மீசையும் எடுக்கப்பட்டது. அரசசின்னங்கள் சுரேந்திரனுக்கு புது அழகைத் தந்தன. இப்போதே சுரேந்திரன் அரசனாய் விளங்கினான். அவன் குதிரையின் மீதேறிக்கொள்ள, சேனாதிபதி மற்றொரு புரவியூர்ந்து அவன் அயலில்செல்ல மெய்காப்பாளர் இருபதின்மர் புடை சூழ, எல்லாரும் தலைநகரை நோக்கிப் பிரயாணமாயினர். 

அரசன் வருதலைக்கேட்ட நகரத்தார் மிகுந்த மகிழ்ச்சியடைந்து வீதிகள்தோறும் நடைக்காவணமிட்டு, கீழே பூக்களைப் பரப்பிப் பழுக்குலைக்கமுகு, குலைவாழை, கரும்பு முதலியவற்றை இரண்டுபக்கங்களிலும் முறையே கட்டி முத்துமாலைகளையும் பவழமாலைகளையும் ஆங்கங்கே நாற்றி வாயில்தோறும் தோரணகம்பங்களை நாட்டி, பெருங்கொடிகளையும் சிறுகொடிகளையுங் கட்டி பின்னும் பலவகையான அலங்காரங்களையுஞ் செய்தனர். செய்து வெந்துய ரருவினை வீட்டிய அண்ணலை இந்திரவுலக மெதிர் கொண்டாற்போல, அவர்கள் சுரேந்திரனை எதிர்கொண்டார்கள். முரசங்கள் முழங்கின; பலவகையான வாத்தியங்கள் ஒலித்தன. மகளிரும் மைந்தரும் வாயில்களில் வந்து, நின்று அரசனைக்கண்டு கண்குளிர்ந்து மனங்களித்து “எங்களுடைய துன்பமாகிய இருளைப் போக்குதற்குச் சூரியன்போலவே தோன்றிய பொங்குமலர்த் தாரோய்! புகுக” என்பாரும், “காணுதற்கரிய கட்டழகியான விஜயாளை மணந்து, கண்கள்பெற்ற பயனையடையும்படி செய்யும் மன்னர் மன்னன் மன்னுக” என்போரும், தத்தமக்குத் தோன்றியவாறே இன்னும் இவைபோன்ற பலவற்றைச் சொல்லுபவர்களுமாய் அங்கங்கே நிற்க, சுரேந்திரன் அமராபதியிற்புகும் இந்திரன்போல நகரத்திற் புகுந்து அரண்மனையை யடைந்தான். 

அங்கு அரசனை வரவேற்கும் பொருட்டு, பிரபுக்களும், அல்லாத பிறரும் குழுமியிருந்தனர். “அரசர் பிரதாபனுக்கு ஜே” கோஷம் அரண்மனை முற்றும் தொனித்தது. எங்கணும் வாழ்த்தொலி நிரம்பியது. மேளவாத்தியங்கள் கடலொலிபோல் ஆர்ப்ப, பெரியோர் ஆசி கூற, மாயாபுரியின் அரசனாக சுரேந்திரன் முடிபுனையப் பெற்றான். சற்று நேரத்திற்கெல்லாம் அரசிளங்குமரி விஜயாள், தோழியர் புடைசூழ அரசவைக்கு வந்து மன்னர் மன்னனாய் வீற்றிருக்கும் சுரேந்திரனுக்கு முழந்தாட்பணிந்தெழுந்தாள். எழுந்த அதேசமயம், சுரேந்திரனின் கண்களும் இளவரசியின் கண்களும் ஒன்றையொன்று நோக்கின. அக்கோமகளின், எழுதற்கும் எண்ணுதற்குமரிய பேரழகு, சுரேந்திரனை திக்பிரமையடையும்படி செய்தது. அவ்வமயம் பொறாமையோடுகூடிய இருகண்கள் அரசனையே உற்று நோக்கின.

– தொடரும்…

– முதற் பதிப்பு: பெப்ரவரி 1928, மின்னூல் வெளியீடு – http://FreeTamilEbooks.com 

2003 ல் இந்த நூல் தமிழ் மரபு அறக்கட்டளையால் மின்னூலாக்கப் பட்டு இங்கு: http://www.tamilheritage.org/old/text/etext/sidi/sidistor.html வெளியிடப்பட்டது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *