கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: September 19, 2022
பார்வையிட்டோர்: 12,636 
 

(1942ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

1.தலைவன் பிரிவு

காவிரிப்பூம்பட்டினம், சோழர் தலை நகரமாய்த் திகழ்ந்தது. கடலின் துறைமுகமாகவும் சிறப்புற்று விளங்கியது. அப்பட்டினத்தில் சாதுவன் என்போன் ஒருவன் வாழ்ந்துவந்தனன்; செல்வம் மிகப் பெற்றவன்; ‘பொருளினைப் போற்றி வாழ்,’ எனும் உயர்மொழியைக் கடைப் பிடித்து அவன் மூதாதையர் ஈட்டிய பொரு ளுக்கோ எல்லை இல்லை. ஆயினும், அதனை எவ்வழியில் செலவிடுதல் நல்லது என்பது சாதுவனுக்குத் தெரியவில்லை. அவனுக்கு நல்லறிவு இல்லை. அவன் தவறான வழியிலேயே பொருளைச் செலவிட்டுவந்தான்.

சாதுவனுடைய இல்லக்கிழத்தியின் பெயர் ஆதிரை. அவள் திருமகளுக்கு நிகரான அழகுடையவள். கற்பென்னும் செல்வத்தைப் போற்றிப் பொலிந்தவள். ‘கொழுநனினும் உயர்ந்த கடவுள் இல்லை; கொழுநனே கடவுள்,’ என்னும் உறுதியான எண்ணம் படைத்தவள். மங்கையர்க்கு அரசியாகத் திகழ்ந்தவள். இத்தகைய நன்மனைவியைப் பிரிந்து, சாதுவன் வாழத் தொடங்கினான்.

சாதுவன் எங்குச் சென்றான்? காவிரிப்பூம் பட்டினத்தின் கணிகை ஒருத்தி இருந்தாள். தேனினை உறிஞ்சிப் பின் வெறும் பூவினை விட்டு நீங்கும் வண்டு. அதனை ஒத்தவள் இவள். ஆதிரையின் அருமையான குணங்களுக்கெல்லாம் நேர்மாறான இழி குணங்களே உருவமாக உள்ளவள். இவளைப் புகலிடமாகக்கொண்டு புகுந்தனன் சாதுவன்.

ஆதிரையைப் பிரிந்து வாழ்தல் என்ற அளவிலேயே சாதுவனது தீச்செயல் நின்று விடவில்லை; மிகக் கொடிய செயல்களுள் ஒன்ராகிய சூதாடுதலையும் மேற்கொண்டான். சாதுவனது நிதிக்கொட்டில் மிக விரைவில் வெறிதாயிற்று.

சாதுவன் எச்செயலுமின்றிச் சாதுவா னான். இவனிடம் பொருளில்லாமையால், கணிகை கடுஞ்சொல் கூறி வெளியில் துரத்தி விட்டனள். கவறாடும் நண்பர்களும் கைவிட்டனர். சாதுவன் வேறு வழி இன்றி வீட்டை நோக்கி நடந்தான்.

2.நடத்தையின் பயன்

பெருமை குலைந்த சாதுவன், தன் உரிமை வீடு அடைந்தான். பேரன்புடன் தலைக்கற்பில் சிறந்திருந்த தன் இல்லக்கிழத்தியைக் கண் டான். நெருப்பில் இடினும், பொன் தன் நிறம் மாறாது நன்னிறங்கொண்டு சிறக்கும். அவ் வாறே, தனக்கு உண்டான துன்பமாகிய பெரு நெருப்பில் ஆதிரை பொன்போல் ஒளிர்ந்து நின்றனள். அவள் மனமாற்றம் ஒரு சிறிது மின்றித் தன்னை வரவேற்று நிற்றல்கண்டு, சாதுவன் மனம் துண்ணென்றது. தான் செய்த பிழைகளை அவன் நெஞ்சம் உற்றுணர்ந்து நீராய்க் கரைந்தது. கண்ணீர் இருவிழிகளில் இருந்தும் அருவிபோலப் பெருகி வழிந்தது.

ஆதிரையோ அறிவிற் சிறந்தவள். கொழு நன் அடையுந்துயர்கண்டு அவள் நெஞ்சம் பொறுக்க முடியவில்லை. கணவன் திருவடிகளில் வீழ்ந்து, ‘நடந்துபோனதை நினைந்து இனி வருந்த வேண்டாம்,’ என்று உருக்கமாக வேண்டிக்கொண்டாள்.

நாள் பல கழிந்தன. தனது பெரும் பொற்குவியல் தீயவழியில் மாய்ந்ததை எண்ணிச் சாதுவன் மிக வருந்தினன். ‘என் செய்வது’ என்ற கவலை மட்டும் அவனுக்குத் தோன்றவில்லை. ஏன்? பெரும்பொருளை இழந்தமையால் பேர் அறிஞனானான். அவனுள்ளத்தில், முன்னிருந்த மடமைக்குணம் இடமின்றி ஒழிந்தது. பகுத்தறிவு சிறந்து விளங்கிற்று. ‘தீயவை இவை நல்லவை இவை,’ என்று உணரும் அறிவு வரப்பெற்றான். யாது நேரினும், இனித் தீயவழியில் தன் அறிவு தொழிற்படாது என்னும் உறுதி அவனுக்கு வந்தது. பொருளுக்கு என் செய்வான்?

அறம், இன்பம் என இரண்டையும் தருவது பொருள். பொருளில்லாதபோது இல் வாழ்வான், தான் செய்ய வேண்டியவற்றை எவ்வாறு செய்வான்? ஆதலின், பொருளீட்டலைபற்றிச் சாதுவனுக்குப் பல எண்ணங்கள் தோன்றின.

தமிழ்நாட்டு இளைஞர் தம் மூதாதையர் ஈட்டிய பொருளில் கருத்தினைச் செலுத்த மாட்டார். ‘வினையே ஆடவர்க்கு உயிர்’ என்பது அவர்கள் கொள்கை. தம் முயற்சியினால் பொருள் ஈட்டிச் செலவு செய்தலையே விரும்புவர். அவ்வாறு ஈட்டப்படுவதே அறம் செய்வதற்கு ஏற்றது. ஆகவே, இனியாவது பொருளீட்ட வேண்டும் என்று எண்ணங்கொண்டான்.

வணிகர்கள், கலங்களில் ஏறி, வாணிபம் செய்வதற்காகப் பல இடங்கள் செல்லுதலுண்டு. அவ்வாறு செல்வோர் கூட்டம் கூட்டமாகச் செல்வர். காவிரிப்பூம்பட்டினத்திலிருந்து அத்தகைய கூட்டம் ஒன்று, புறப்படுதற்கு ஏற்பாடுகள் செய்தது, சாதுவன். அக்கூட்டத்தாருடன் செல்ல ஆவல்கொண்டனன். தன் கருத்தை ஒருவாறு மனைவிக்குத் தெரிவித்துப் பிரிந்தான்.

இந்நாளில், கப்பலில் எல்லா நலங்களும் அமைந்திருக்கின்றன. நீராவியின் வன்மை யால் ஓடுதலின், அஞ்சவேண்டியது மில்லை. கடல் கடப்போர்க்கு எவ்வகையான தொல்லையும் நேராது. காற்றின் உதவியையும் தேடமாட் டார். முற்காலத்தில், கப்பல்கள் இவ்வாறு அமையவில்லை. பாய்மரம் விரித்துக் கட்டப் பட்டிருக்கும். காற்று வீசும்பொழுது அதன் உதவியினால் நாவாய் செல்லும். உயிருடன் எண்ணிய இடத்தை அடைதல் மிகக் குறைவே.

கப்பலில் சாதுவன் ஏறியிருந்தான். கப்பல் தலைவன் கடற் கடவுளைத் தொழுது, கப்பலைச் செலுத்தினான். அசைந்தசைந்து கப்பல் நடுக் கடலை அடைந்தது. சாதுவன் நீல நிறம் பெற்றுத் திகழும் கடலை ஆழ்ந்த நினைவுடன் காண்கின்றான். காணக்காண விரிந்து பரந்து எங்கும் நிறைந்து நிற்கும் கடவுளை எண்ணும் வாய்ப்பும் சாதுவனுக்குக் கிட்டியது. “என்னே! இக்கடலினை முற்ற உணர்ந்தார் யார்? இதன்கண் நிறைந்து ஒளிரும் அருமணிகளையும் பிற அளவிறந்த செல்வங்களையும் அறிந்தார் எவர்? எத்துணை மக்கள் இக் கடலில் அடங்கித் தம் உயிரை ஒப்புவித்தனரோ? இவ்வாறே, தம் இயல்பு முழுவதும் பிறரால் அறிய முடியாத நிலைமையிலிருப்பவன் எம்பிரான் ஒருவன் அன்றோ? கடவுளாகிய குணக்கட லின் குணச்சிறப்புக்களை அறிந்தார் யார்? அவனது பேரின்பத்தில் அடங்கிக் கிடப்போர் தொகையை அளவிட்டு உரைக்கவும் ஆகுமோ?” எனக்கடலையும் கடவுளையும் ஒன்றுகூட்டி உணர்ந் தான். சீரிய கடவுளின் இணையடிகளில் தன் கருத்தைச் செலுத்தாது, தீய நெறிகளில் தன் காலத்தைக் கழித்ததையும் எண்ணி வருந்தினன்.

SangaNool5ஒருநாள், ஞாயிறு மறைந்தது. மாலையும் மாய்ந்தது. எங்கும் இருள் நிறைந்தது. செம் பொன் தகட்டை யொத்து வெண்ணிலா விளங்கியது. நற்காற்று மெல்லென வீசியது. கடல் அமைதி நிறைந்து விளங்கிற்று. சில நாழிகைகள் ஆயின. நள்ளிரவு வெள்ளென, வெண்ணிலவில் மூழ்கியிருந்த வானம் கரு நிறம் பெற்றது. மேகங்கள் எங்கிருந்தோ வந்து ஒருங்கு குழுமின. இளங்காற்று, கொடுங்காற்றாயிற்று. மகிழ்ச்சியுடன் அலைமேல் அமர்ந்து கடல் மீன்களைக் கவர்ந்து உண்டு மகிழ்ந்த பறவைக்கூட்டம் விரைவில் மறைந்தது.

கடற் பழக்கம் உடையோர் புயற்காற்று வீசும் என்று சொன்னார்கள். அலைகள் மலைகள் போல் எழத் தொடங்கின. மண் மலைகளையே கண்டு பழகிய சாதுவன் கண்கள் விண்வரை முட்டும் நீர் மலைகளையும் கண்டன. கப்பல் ஒரு தலைக் கொருதலை உயரும்; சாயும், உள்ளிருப் போரை வெளியில் தள்ளிவிடுமோ என்ற ஐயமும் உண்டாகும். வாய்திறந்து விழுங்க வருவன போலப் பேரலைகள் கப்பலை நோக்கி வந்தன.

காற்றின் கடுமை உச்ச நிலையை அடைந்தது. கப்பல் மிக அலைந்தது. கப்பலின் கட்டு அசைந்தது, கப்பல் ஆடுவதனால் பலகைகள் வலிவிழந்தன. பாய்மரம் ஒடிந்தது. இனிப் பிழைக்க முடியாது எனக் கப்பல் தலைவனும் கருதினான். ஆதலின், யாவரையும் நோக்கி, அவரவரும் தத்தம் வழிபடு கடவுளை வணங்கிக் கொள்ளுமாறு கூறினான். பேரலை ஒன்று! கலத்தின் முற்பாகம் நீருள் அமிழ்ந்தெழுந்தது. நீரின் கனத்தோடு கப்பல் அலையவே, பலகைகள் தனித்தனியே பிரிந்தன.

கலத்துள்ளிருந்தோர் நீர்மேலாயினர். ஒவ்வொருவருக்கும் அவரவர் உயிர் உயர்ந்தது. அதனைக் காப்பாற்ற எத்தகைய முயற்சியையும் கைக்கொள்வர் நீருள் அமிழ்வோன் வைக்கோல் துரும்பினையும் பற்றுவான் என்பர். அவ்வாறே, கடலில் தள்ளப்பட்டோர், கைப்பட்ட தொன்றைப் பிடித்துக்கொண்டு உயிருக்காக நீந்தினர். சிலர், எந்த எண்ணமும் மனத்தில் வரும் முன் மாண்டனர்.

3.சாதுவன் துயர்

மறு நாள் பொழுது புலர்ந்தது. ஞாயிற் றின் இளங்கதிர்கள் தலை நீட்டுகின்றன. மரங் களில் இராமுழுவதும் வாயை மூடி இருந்த பறவைக்கூட்டம் இப்போது வாய் திறந்து கூவுகின்றது. காற்று தண்ணென வீசுகின்றது. கடல் அமைதியுற்று விளங்குகின்றது. முன்னாள் இரவு, கொலைக்களத்தை ஒத்திருந்தது கடல். இந்நாட் காலையிலோ ஒன்றும் அறியார் போன்று ஓய்ந்திருக்கின்றது. கடற்பறவைகள் இங்கும் அங்கும் பறந்துகொண்டிருக்கின்றன.

கடற்கரையில் அவிழ்ந்த உடையுடன் இறந்தவனைப்போல் சாதுவன் கிடந்தான். அவனருகில், அவன் உயிர் பிழைப்பதற்குக் காரணமாயிருந்த மரத்துண்டு இருந்தது. சாதுவன் உடலெல்லாம் கடற்பாசி சுற்றிக்கொண்டிருந்தது. தலைமயிர் மணலில் புதையுண்டு கிடந்தது. வாய் மிக அழுத்தமாக மூடிக்கொண்டிருந்தது. மரச் சோலைகளில் காற்று வீசுதலாலுண்டாகும் ஒலி, சாதுவனை உறக்கத்தில் மேலும் ஆழ்த்தியது.

கதிரவன் வெளிப்படுகின்றான்; கதிர் சூடேறுகின்றது; உடலின் எங்கும் படுகின்றது; சூடு, உணர்ச்சியை உண்டாக்குகின்றது; சோர்வு சிறிது அகல, கண் விழிக்கின்றான்.

கப்பலில் மக்களோடு முன்னாளிருந்தவன் சாதுவன். இப்போது, அவன் கண்முன் மக்கள் யாரும் இல்லை. இதற்குமுன் பார்க்காத இடத்தினைக் காண்கின்றான். மணற்கரையில் அலைகளால் தான் ஒதுக்கப்பட்டிருத்தலை ஒருவாறு அறிகின்றான். கண்கள், நன்றாகத் திறந்து பார்க்கமுடியாத நிலையில் முன்னிருந்தன. இப்போது கூர்ந்து பார்க்கும் வன்மைபைக் கண்கள் பெறுகின்றன. கடற்சங்குகள் அழகாக இட்ட கோலம் அவனுக்குக் காட்சி அளிக்கின்றது.

அலைகள் ஒதுக்கிய முத்துச் சிப்பிகளும் பவழங்களும் நிரை நிரையாகக் கிடக்கின்றன. சில்லை, உழுவல் முதலிய கடற்பறவைகள் பந்தி பந்தியாகக் குந்திக்கொண்டிருக்கின்றன.

இவற்றையெல்லாம் கண்ட சாதுவனுக்கு நல்லுணர்வு தோன்றுகின்றது. ‘அந்தோ! நான் உயிர் பிழைத்தது எதற்கு? உயிர் வாழும் மக்கள் யாரும் இங்கில்லையே! மக்கள் வாழாத இத்தீவில் நைந்து உயிரை விடவோ? என்னுடன் கலத்தில் வந்தோர் யாருக்கும், கடல், உயிர் வழங்கவில்லைபோலும்! அவர்கள் நல்லவர்கள் போலும்! அவர்களை அலைத்துப் பட்டினி போட்டுக் கொல்லக் கடலுக்கும் எண்ணம் இல்லை. தீச்செயலையே செய்து உழன்ற கொடுமையாளனாகிய என்னைப் பசியானது பற்றித் தீய்த்துக் கொல்லட்டும் என்பது இதன் கருத்தோ!’ என்று புலம்பி மனமுடைந்தான்.

துன்பம் உச்ச நிலையை அடைகின்றது. ஆதிரையைப்பற்றிய எண்ணங்கள் பல எழுந்தன. “ஆதிரை; ஆதிரை!! அன்பிற்குரிய ஆதிரை!! குற்றம் பொருத்த குணமணியே! உன்னை முன்னும் பிரிந்தேன்! இன்றும் பிரிந்தேன்! இப்பிரிவு பெரும்பிரிவாய்விடுமோ? யான் நின் வாழ்வைப் பாழ்படுத்தினேனே! என்னைக் கொழுநனாக அடைந்தமையாலன்றோ இவ்வாறு துயருறுகின்றாய்! நின் பெருமையை இப்போதன்றோ முழுதும் உணர்கின்றேன்! நின்னுடன் இனியேனும் இல்லறத்தைச் சீர் பெற நடத்தி மகிழலாம் என எண்ணி யிருந் தேனே! ஆனால், தீவினை என்னைத் தடுக்கின் றது. ஐயோ! இனி, ஆகும் என்னிலைமையை எண்ணும்போதே நெஞ்சம் பகீர் என்கிறது. மக்கள் வாழாத இந்நிலப்பகுதியில் எறியப்பட்டேன். இனி, உணர்வற்று, என் உயிர் இவ்வுடலைவிட்டு அகலுவது உறுதி. கற்புடைய நின் மனம் நோக உன்னைவிட்டு நீங்கிக் காலம் கழித்தேன். அதனால் உண்டாகிய தீவினையே என்னை இக்கொடுமையாகிய சாதலுக்கு உட்படுத்துகின்றதுபோலும்! ஆதிரை, உனக்கு நான் பழி இழைத்தவனானேன். என்னை நீ மன்னிக்க வேண்டும். இன்றேல் செல்லும் உலகத்து நற்கதி இல்லை,” என்று வாய்விட்டு அலறி அலறிச் செயலழிந்தான்.

4.கற்பின் வெற்றி

சாதுவனைப்போலவே உயிர் உய்ந்தோர் சிலர். அவர் நல்வினை வயத்தால் காவிரிப்பூம் பட்டினத்துக் கரையில் ஒதுக்கப்பட்டனர். கப்பலில் சென்றார், இக்கதியில் வந்தனரே என்று யாவரும் கடற்கரையில் கூடினர்.

சென்றோர் அனைவரும் காணப்படவில்லை. சிலரே சேர்ந்தனர். உயிர் பிழைத்து வந்தோர் பட்டினத்தார்க்கு நடந்தவற்றைக் கூறினர். சாதுவனை அறியாதார் அப்பட்டினத்தில் இல்லை. ஆதலின், அவனைப்பற்றி வினாக்கள் பல கேட்டனர். சாதுவன் மலைநாட்டில் ஒதுக்கப்பட்டமையை அவர் அறியார், ஆதலின், ‘அவனைக் கடல் கொண்டது,’ என்று கூறி வருந்தினர். சாதுவன் இறந்தான் எனக் கேட்டு “ஐயோ!” என யாவரும் வருந்தினர்.

“ஆதிரையிடம் சென்று இதனை எவ்வாறு கூறுவது? அந்நங்கை எவ்வாறு வருந்துவளோ? இக்கடுஞ் சொற்களையோ யாம் சென்று கூறல்வேண்டும்,” என்று யாவரும் கருதினர்.

“சாதுவன் கடலில் கலம் உடைய இறந்தான்,” என்பதைக் கற்பரசியாகிய ஆதிரை அறிந்ததுதான் நேரம்! ‘ஆ’ என்று அலறி அடியற்ற மரம்போல் நிலமிசை வீழ்ந்தாள். உடல், ‘கிடுகிடு’ என நடுங்கத்தொடங்கியது. உயிர் ஓய்ந்த பிணமேபோலாயினள். சிறிது நேரம் கழிந்தது. உணர்வு சிறிது தோன்றக், கண்களில் நீர் தாரை தாரையாக வழிந்தது.

“காவிரிப்பூம் பட்டினத்து உற்றார்களே! உடன்பிறந்த உயர்ந்தோர்களே! என் கொழுநர் மாய்ந்தார்! என்னுயிர் அவரே; யான் அவர் உடல் போன்றவள். உயிரின்றி உடல் இயங்குமோ! அன்புகூர்ந்து நீங்கள் ஈமத்தில் எனக்கு எரி வளர்த்து உதவவேண்டும். அதன் கண் இந்த உடற்சுமையை நான் உடனே கழித்துவிட வேண்டும்,” என்று அங்கு நின்ற அனைவரையும் கைகுவித்து வேண்டிக்கொண்டாள்.

பட்டினத்து மக்கள், வேறு செயலில்லாதவராயினர். ஆதிரைக்கென்று ஈமத்தில் எரி வளர்க்கப்பட்டது. அவள் புதிய ஆடை உடுத்துச் சாந்தம் உடலில் அப்பிக் கூந்தலில் மாலை சூடித் தீயினை வலம்வந்தாள். “என் கணவனுயிர் வினைவழி எங்குச் சென்றதோ, அங்கு என்னுயிரும் செல்க,” என்று கூறினள். என்றும் மறவாத சாதுவன் நினைவோடு அவள் நெருப்பில் வீழ்ந்தனள்.

என்ன விந்தை! ஆதிரை ஈமத்தேறி இனி திருந்தனள். நெருப்பு அவளைச் சுடவில்லை. உடுத்திருந்த கூறை எரியால் பற்றப்படவில்லை. பூசிய சாந்தம் சிறிதுங் கருகவில்லை. சூடிய நறுமலர் புத்தொளிபெற்றுத் திகழ்ந்தது, தீ தண்ணெனக் குளிர்ந்து நின்றது. “ஐயோ, நான் என்ன செய்வேன்! கணவனாலும் முன்னர் ஒதுக்கப்பட்டேன்! இன்று தீயும் என்னைக் கொல்லவில்லையே! ‘தீயும் கொல்லாத் தீவினை செய்தவளோ யான்! எரியும் நெருப்புமா என்னை வெறுக்கவேண்டும்!” என்று ஆதிரைக்கு வருத்தமே மேலிடுவதாயிற்று.

அப்போது அனைவரும் வியக்க வான் நிழல் ஒன்று தோன்றி, “ஆதிரை! கேள். நின் கண்ணனையான் இறக்கவில்லை! நின் கற்பு அவனைக் காத்தது! கடலில் ஒடிமரம் ஒன்று பற்றி நீந்திக் கரை சேர்ந்திருக்கின்றனன்! – இன்று நாகர் எனும் ஒரு சாரார் வாழும் தீவில் இருக்கின்றான்! அங்கே நெடு நாள் தங்கியிருக்க மாட்டான்! சந்திரதத்தன் என்பவனது கலத்தில் விரைவில் வந்து சேர்வான்! நீ நின் துன்பம் நீங்கி நலமுற வாழ்வாய்,” என்று கூறியது.

ஆதிரை அழுதுயர் நீங்கினாள். நன்னீர்ப் பொய்கையிலிருந்து நீராடி வருவார்போன்று நெருப்பினின்றும் வெளிவந்தாள். மனக் கவலையை விடுத்து மனையகம் புகுந்து ‘என் உயிர்த்தலைவன் விரைந்து வருக’ என்னும் நினைவோடு அமைந்திருந்தனள். கற்புடைப் பெண்டிர் அனைவரும் இவள் மாட்சிமை கண்டு வியந்தனர்.

5.தாய்மொழி அன்பு

சாதுவன் கிடந்த தீவில் அவனை அந் நாட்டு மக்கள் கண்டனர்; அவர்கள் நாகர் எனப்படுவோராவர். அவர்களுக்குப் பாம்பின் இலச்சினை உண்டு. அதனால் அவர்களுக்கு. ‘நாகர்’ என்னும் பெயர் உண்டாயிற்று. அவர் களுக்கு உடை இன்றி வாழும் இயல்பினராத லால் ‘நக்கர்’ என்றும் ஒருபெயர் உண்டு. என்ன கொடுமை! அவர்கள், உயிருடன் மக்களைக் கொன்றுண்பது வழக்கமாயிருந்தது. வேறு பல கொடிய வழக்கங்களும் அவரிடம் இருந்தன.

இவருள் சாரணர் என்பார் ஒருவகையினர். நக்கர்களுக்கு அரசனேபோல் தலைவனாய் விளங்கியவன் குருமகன் என்பான். இக் குருமகனுக்குச் சாரணர் ஒற்றர் தொழில் புரிந்திருந்தனர். இச்சாரணர் கடலருகிற் கிடந்த சாதுவனைக் கண்டனர். கலம் உடைந் தமையால் அவன் கரை சார்ந்தவன் என ஊகித்தனர். அவன் துன்பத்தை நீக்க ஒரே வழி கருதினர். கொன்று தின்றலே அவர்கள் கருதிய சுருக்கமான வழி! கொன்றவுடன் சாதுவன் துன்பம் ஒழியும்! தின்றவுடன் இவர்கள் பசி நீங்கும்!

நாகருடைய தீக்குணங்களை எவ்வாறெடுத்துச் சொல்வது! ‘ஊனைத் தின்று ஊனைப் பெருக்காமை முன்னினிதே’ என்றனர் அறிஞர். ‘ஊன் ஊண் துறமின்’ என்றார் முடிதுறந்த இளங்கோ. புலாலுண்ணுதலே ஏனை எல்லாப் பொருந்தாச் செயல்களுக்கும் வாயில். மக்களைக் கொன்று தின்னலினுங் கேடு பயக்கும் தீவினை யாதுளது?

‘உணவு இவன் நமக்கு,’ என எண்ணிய நாகர் சாதுவனைச் சுற்றிக்கொண்டனர்; துயிலினின்றும் எழுப்பினர். எழுப்புகின்றவர் நோக்கம் தன்னைக் கொல்லுதல் என்பதை அவர் முகத்தாலும் செயலாலும் சாதுவன் அறிந் தான். நமன் பல உருவங்களில் வந்ததைப் போன்ற சாரணர்களைக் கண்டதும், சாதுவனுக்கு உள்ளம் எவ்வாறிருக்கும்? இன்னும் அவன் துன்பத்துக்கு வேறு என்ன வேண்டும்? திடுக்கிட்டு நெஞ்சு புண்ணாகப் பின், ‘ஏன் என்னைக் கொல்லுதற்குச் சூழ்கின்றீர்?’ என்று அவர்களை வினாவினான்.

என்ன வியப்பு! சாதுவன் அவ்வாறு கேட்டவுடன் சாரணர்கள் தமது கொலை முகம் மாறி வியப்பெய்தினர். அவர்கள் கையிலிருந்த கொலைக் கருவிகள் அவர்களை அறியாமலே நழுவின.

இத்தகைய மாறுதல் அவர்களிடம் தோன்றியதேன்? சாதுவன் சில சொற்களைச் சொன்னான். அச்சொற்களே அம்மாறுதலுக்குக். காரணம்! ஆம், அதுவே! எவ்வாறு? சாதுவன் நாகருடைய தாய்மொழியில் பேசினன். சாதுவன் அவர் மொழியை அறிந்திருந்தானாதலின் அம்மொழியில் கேட்க நேர்ந்தது. அதுவே சாரணர்களுக்கு வியப்பைவிளைத்துச் சாதுவனுக்கு அவன் உயிரைத்தந்தது!

இவ்வுண்மையை, மாணவர்களாகிய நீங்கள் நன்றாக அறிந்துகொள்ளவேண்டும். நாகர், மனிதனைக் கொன்றுண்ணும் கொடியோர்; அவர்கள் தம் தாய் மொழியில் வைத்திருக்கும் அன்பினை உன்னுங்கள். நாகரிக மற்று விலங்கினை ஒத்துவாழும் இவர்களுக்கே தாய்மொழியில் அழுந்தி நிற்கும் பற்று இத்தகைத்து என்றால், நாகரிகம் மிகுந்து மனி தர்களாக வாழும் நமக்கு நமது தாய்மொழியில் எவ்வளவு பற்று இருக்கவேண்டும்! தாய் மொழிப் பற்றில்லாதவன் மக்கள் இனத்தில் சேர்த்தெண்ணும் தகுதி உடையவனல்லன். நீங்கள் நும் தாய்மொழியில் உண்மை அன்புடையவர்களாக விளங்குகின்றீர்கள் அல்லவா ?

நாகர் கொலைப்படையைக் கீழ் வீழ்த்தினர். சுற்றினும் நிற்றலைவிட்டு விலகி ஒருபுடை ஒதுங்கி நின்றனர். கைகூப்பி வணங்கினர். “பெருந்திறலோய்! எம் குருமகன்பால் வரல் வேண்டும். ஈதெம் வேண்டுகோள்,” என்று கூறி மீண்டும் தலைவணங்கினர். அவர்கள் வழிகாட்டி முன் செல்லப் பின் சாதுவன் தொடரலுற்றான்.

SangaNool6சிறிது தூரம் நடந்தவுடன் சாதுவனுக்கு ஒரு காட்சி தோன்றியது. அக் காட்சியின் சிறப்பே சிறப்பு! அதற்கு உவமையாகக் கூற இவ்வுலகத்தில் வேறொன்றும் இல்லை. வெள்ளிய எலும்புகள் மலைபோல் குவிந்திருக்கின்றன, இம்மலையை இருக்கையாகக்கொண்டு. அதன் மீது அவர்தம் குருமகன் என்போன் உட்கார்ந்திருந்தனன். அவன் உடல் முழுவதும் மயிர் அடர்ந்து வளர்ந்து தொங்கிக்கொண்டிருந்தது. அவன் பார்வையில் கரடியாகவே காணப்பட்டான். அவனருகில் அவன் இல்லக்கிழத்தி இருந்தனள். அத்தோற்றம், ஆண் கரடியும் பெண் கரடியும் ஒருங்கே உட்கார்ந்திருப்பதை ஒத்திருந்தது. அவர்களுக்கு அருகில் கட்குடங்கள் பல வரிசையாக அடுக்கப்பட்டிருந்தன. சுடப்பட்ட ஊன் துண்டுகளும் மலை போல் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. புலால் நாற்றமும் கள் நாற்றமும் கலந்து சாதுவனுக்கு விளைத்த துன்பத்துக்கோ ஓர் அளவில்லை.

சாதுவன் குருமகன் முன் நின்றான். குரு மகன், அவன் தமது தாய்மொழியை அறிந்திருக்கின்றான் என்பது தெரிந்து, அவன் அங்கு வர நேர்ந்தது எவ்வாறு என்று வினவினான்.

அலைகடல் உழந்தோன் தனக்கு நேர்ந்தவற்றை . நவின்றான். நமது நாகர் மொழியில் அவன் மிகச் சுவையோடு பேசுதலறிந்து, குருமகனுக்குக் கண்களில் அருள் சுரந்தது. சாதுவன்பால் மிக்க அன்புடையவனாய், “இவன் கடல் கலக்க வருந்தியவன்! உணவும் இன்றி இருக்கின்றான். இவனுக்குப் புலாலையும் கள்ளையும் நிரம்பக் கொடுங்கள். பின் ஒரு மங்கையையும் மணம் செய்து வையுங்கள்,” என்று கட்டளை இட்டான்.

குருமகனைக் கண்டதுமே திடுக்கிட்ட சாதுவன்; இப்போது அவன் கூறிய சொற்களைக் கேட்டுப் பின்னும் அச்சம் அடைந்தான். ‘இனியேனும் நல்லறச் செயலில் ஈடுபடல் வேண்டும்,’ என்ற துணியுடனிருந்த சாதுவனுக்குக் குருமகனுடைய குறுஞ்சொற்கள் பெருந்துன்பம் உண்டாக்கின. எதிர்த்து ஏதேனும் சொல்லுவானானால் அவன் உயிருக்கே தொல்லை நேரினும் நேரும். வாய்மூடி இருப்பின், கள்ளைக் குடித்துப் புலால் உண்ணவேண்டும். தன் கற்பரசி தன்னையே எண்ணி மனம் நொந்து பட்டினத்திருக்க, இங்கு ஓர் இளையாளுடன் கூட வேண்டும். இக்கொடுஞ்செயல்களை யெல்லாம் செய்தோ ஒருவன் உயிர்வாழ வேண்டும்? அன்றி ‘இவற்றில் ஈடுப்டேன்’, எனக் கூறி மறுத்து, இறப்பதா? கொடுஞ்செயல்கள் செய்து சில நாள் உயிர் வாழ்தலினும், ‘செய்யேன்’, என மறுத்து உயிர்விடுதல் உயர்ந்தது என்ற முடிவுக்கு வந்தனன்.

“குருவே! நீவிர் என்பால் வைத்த அன் பால் சில கூறினீர்; மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். குடித்தல் முதலிய கொடுஞ்செயல்களுக்கு யான் உடன்படேன். உயிர் உடலுடன் வாழு. நாள் எந்நாள். அந்நாள்காறும் இத்தகைய கொடுஞ்செயல்களுக்கு யான் உடன்படேன்,” என்று ஒரே துணிவாகக் கூறினான்.

குருமகனுக்குச் சிறிது சினக்குறிப்போடு வியப்பும் தோன்றியது. சாதுவன் அவ்வாறு கூறுதற்குரிய காரணம் யாதாயிருக்கலாம் என்று அறிய அவன் ஆவலுற்றான். ஆதலால் அக்குருமகன், “கள்ளையும் புலாலையும் தவிர மக்களுக்கு வேறு உண்டி உண்டோ? பெண்டிரில்லை யேல் மக்கள் இன்பம் அடைவது எவ்வாறு?” என்று கேட்டனன்.

சாதுவன், “அன்பினீர்! கள்ளையும் கொலையையும் அறிஞர் அறவே நீக்கினர்.

“உறங்குவது போலும் சாக்காடு, உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு.”

என்பது திருமறை. நாம் இறத்தல் தூங்குவதை ஒத்தது. மீண்டும் பிறத்தல், தூங்கி விழித்தலுக்கு நேர். உறங்கி விழிப்பதைப் போன்று இறந்து பிறக்கின்றோம். ஆதலின், பிறப்பும் இறப்பும் சுழன்று சுழன்று வந்து கொண்டே இருக்கின்றன.

“பிறந்தார் நல்லறம் செய்வாராயின், வீட்டுலகம் எய்துவர் ; தீச் செயல் செய்யின் நரகத்தை அடைவர். ஒவ்வொருவனும் இறத்தல் உறுதி. இறக்கு முன் நல்லறம் செய்தல் வேண்டும். அதுதான் நல்லுலகுக்குக் கொண்டு போகும். தீச்செயல் நரகத்தில் சேர்க்கும். கள் குடித்தல், புலாலுண்ணல் முதலியவை தீச்செயல்கள். இவற்றைச் செய்வோர் நரகத்தை அடைந்து வருந்துவர். ஆதலின், இதைச் செய்தலாகாது!” என்றான்.

சாதுவன் சொற்கள் குருமகன் உள்ளத்தில் அமைதியை உண்டு பண்ணவில்லை. அவை அவன் இயற்கை வெகுளியைக் கிளர்ந்தெழச் செய்தன. ஆகலின், மிக்க சினத்தினனாய் இடி இடி எனப் பெருஞ் சிரிப்புச் சிரித்தான். சிரித்துப், “பெருந்துயருழந்தோய்! உடம்பை விட்டு நீங்கும் உயிர் உருவம் கொண்டு வேறிடம் புகும் என எமக் குரைத்தாய். உயிர் எவ்வாறு சென்று புகும்? அவ்வழியைச் செவ்வையாக எடுத்துரைப்பாயாக,” என்றனன்.

குருமகன் கண்கள் வெகுளியால் செந்நிறம் அடைந்தன; சாதுவன் கண்டனன். “குரு மகனே! வெகுண்டு உரையாடாதே: நீ சினத்துடனிருந்தால் யான் கூறுகின்ற உண்மைகளை அறியமாட்டாய். வெகுளியை விட்டுக் கேள். நின் வினாவிற்கு விடை கூறுகின்றேன். உயிரோடு வாழும் நாம், நம் உடல் சிறு துன்பத்தை அடைந்தாலும் அதனை உடனே அறிகின்றோம். பிணம், தீயில் இட்டுச் சுடப்படுங் காலத்தும் ஒன்றினையும் உணர்கின்றிலது. உணர்ச்சியைத் தரும் ஏதோ ஒன்று பிணத்தில் இல்லை என்பது உறுதியாக அறியப்படுகின்றது. அப்பொருள் யாது? அதுவே உயிர் என்பதாம்.

“உயிரிருந்த காலத்தில், உற்றதை உணர்ந்தது உடல். அஃதில்லாக் காலத்தில் பிணமாகிக் கிடக்கின்றது. ஒரு வீட்டில் குடி இருப்போர், அதிலிருந்து நீங்கினால், வேறிடத்தில் குடியிருந்தே தீர்வர். அவ்வாறே ஓர் உடம்பிலிருந்து உயிர் நீங்கியது என்றால், அது, வேறோர் உடலில் குடிவாழும் என்பது சொல்லாமலே அமையும்.

“இவ்வுண்மையை உறுதிப்படுத்த வேறொன்றும் கூறுகின்றேன். நாம் நனவை இழந்து உறங்குகின்றோம். அக்காலத்தில் கனாக் காண்கின்றோம். கனவு காணுங்கால், உயிர், உடம்பை ஓரிடத்தில் இட்டுப் பல கல் தூரம் சென்று பலவற்றைச் செய்துவருதலைக் காண்கின்றோம். இதனினும் சிறந்த சான்றும் ஒன்று உண்டோ? ஆதலின், செய்த வினைக்கேற்ப உயிர் உடலை அடைகின்றது. இதில் எள்ளளவும் ஐயம் கொள்ள வேண்டாம். இக்காரணத்தினாலதான் அறிஞர்கள், கள் முதலியவற்றை வெறுத் தொதுக்கினர்.”

சாதுவன் சொற்கள் வெள்ளிடையில் கொட்டிய பால்போல் வீணாகவில்லை. நற்பயன் அளித்தன. நாகன் தவறுள்ளத்தைத் திருத்தின. மேடும் பள்ளமுமாய அவன் உள்ளம் ஒழுங்காயிற்று. அவனுக்கு உண்மை அறிவு உண்டாயிற்று. ஆதலின், அவன்பால் மிகுந்து நின்ற சினம் உடனே அவிந்தது. உண்மை உணர்வு மிகமிகச் சாதுவனிடம் நன்மதிப்பும் மிகுந்தது. தன் என்பிருக்கையிலிருந்து இறங்கிக், கைகளைத் தலைமேல் கூப்பிய வண்ணமாகச் சாதுவன் அருகிற் சென்று, அடியற்ற நெடுமரம் போல் அவன் கால்களில் வீழ்ந்து வணங்கினான். எழுந்து நின்று வாய்மூடி, அடக்கத் துடன் கீழ்வருமாறு புகன்றான்.

“அறிஞர் ஏறே! பிறந்த நாள் தொடங்கிக் கள்ளையும் ஊனையுமே கைக்கொண்டிருக்கின்றேன். இவற்றை விட்டால், என் உயிரை ஓம் புதலாற்றேன். இன்று என் பிழைகளை உணர்ந்தேன். இன்று தொடங்கி, யான் என் குணம் குறிகளை மாற்றி அமைத்துக்கொள்வேன். ஆதலின், யாங்கள் பின்பற்றுதற்குரிய அறங்களை மேலும் எடுத்துரைத்தல் வேண்டும்.”

சாதுவன் அகம் மகிழ்ந்து, “நாகர் தலை வரே! நன்று சொன்னீர். நீடூழி வாழ்வீராக! திருந்திய இவ்வறிவு என்றும் நிலைக்க! உம்மால் செய்யத்தக்க நல்லறம் கூறுவேன்.

“ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வா யெல்லாம் செயல்”

என்பது தமிழ் முதுமொழி. “ஒவ்வொருவனும் தன்னாலியன்ற அறத்தை எப்போதும் எங்கும் செய்தல் வேண்டும்,” என்பது கருத்து. என்னை யொத்துக் கலம் உடைந்தோ, கலம் கவிழ்ந்தோ, கரை சேருவோரைக் காப்பாற்றல் வேண்டும். அவரைக்கொன்று உண்ணல் மிக்க மறச்செயல். எல்லா மக்களிடத்தும் அன்புடையவராக இருத்தல் வேண்டும். இங்ஙனமே விலங்குகள் முதலிய எல்லா உயிர்கள் மாட்டும் அருள் நிறைந்து விளங்குதலொன்றே நீங்கள் செய்தற்குரியது,” என்றான்.

குருமகன் கண்கள் மகிழ்வால் பொலிந்தன. “எங்களிடத்தில் ஆண்டவன் அருள்வைத்தே உம்மை எம் பக்கல் அனுப்பியுள்ளான். எமக்கு ஆகும் பேரறம் உரைத்த உமக்கு, யாம் செய்யத் தகும் கைம்மாறு யாதிருக்கின்றது? நீவிர், கைம் மாறு வேண்டாக் கடப்பாட்டினீர். ஆயினும் யான் கூறும் ஒன்றினை மறாது ஏற்கவேண்டும். முன்னெல்லாம் கலம் கவிழ்ந்த மக்களை உண்டோம். அவர்தம் பொருள்கள் இங்கிருக்கின் பறன. அன்றி, எம்மிடமும் விரைமரம், மென்துகில், விழுநிதி உள்ளன. இவற்றையும் கைக் கொள்ள வேண்டும்,” என்றுரைத்தனன். அவன் அன்பிற் கட்டுண்ட சாதுவன், வேண்டாம் என்று மறுக்கும் ஆற்றல் ஆற்றவனானான்.

6.ஆதிரை மகிழ்ச்சி

‘சந்திரதத்தன் வங்கத்தில் சாதுவன் வருவன்,’ என ஆதிரைக்கு வானிழல் வாயிலாக ஆண்டவன் முன் அருளினன். அவ்வணிகனின் கப்பல், நாகர் நாட்டுப் பக்கம் வந்தடைந்தது. முன்போல் மக்களைக் கொல்லும் வழக்கம் நாகரிடையில் இல்லை. ஆதலின், சந்திரதத்தன் கரைசார்ந்தனன். சாதுவன் இருத்தலை அறிந்தான். நாகர் தலைவனால் சிறப்பிக்கப்பட்ட வணிகன், சாதுவனையும் தன் கலத்தில் ஏற்றிக் கொண்டான்.

நாகரும், அவர் தலைவனும் சில ஆண்டுகள் சாதுவனுடன் வாழ்ந்து திருத்தமுற்ற வாழ்க்கை யினராயினர். ஆதலின், அவனைப் பிரிதற்கு வருந்தினர். சாதுவனும், அவ்வாறே மனம் கசிந்தான். மனையாட்டியின் நினைவு ஒருபுறம் இழுத்தது; தனக்கு எக்குறையும் உண்டாகா வண்ணம் காப்பாற்றிவந்த நாகர் தலைவன் அன்பும் மற்றொருபுறம் இழுத்தது; ஆதலின், ஊட டிக்கொண்டிருந்த கன்றுக்கும் பிறந்த கன்றுந்கும் வருந்தும் ஒரு பசுவை ஒத்தான் சாதுவன்; கலம், கடல் நோக்கி நகரத் தொடங்கியது. நாகரது வாழ்த்தொலியும் அவர் பெருமூச்சும் கலந்து ஒலித்தன.

பட்டினத்தை நோக்கி விரைந்து வந்தது கலம். கரை சார்ந்ததும், சாதுவன் வந்துள்ளதை மக்கள் அறிந்தனர். வாணிப நெறியில் பொருளீட்டா விடினும் அறநெறியில் நின்றமையால் அறக்கடவுள் மகிழ்ந்தளித்த பெரும்பொருளுடன் சாதுவன் வந்தமை தெரிந்து, யாவரும் மகிழ்ந்தனர்.

உறவினரும் நண்பரும் சூழச் சாதுவன் வீடுநோக்கிச் சென்றான். கண்டனன் ஆதிரையை இல்லில்! அவள் கண்ணீர் ஊற்றையும் உள்ளத்துடிப்பினையும் கண்டனனா இல்லை. ஏன்? அவன் நிலையும் அவ்வாறே இருந்தது. உள்ளம் படபடத்தது, பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ? இருவரும் பேரன்பிற் சிறந்து, நெடுங்காலம் இனிது வாழ்ந்துவந்தனர்.

– சங்கநூற் கதைகள், முதற் பதிப்பு: ஜனவரி 1942, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *