அப்பனுக்குப் பிள்ளை…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 30, 2014
பார்வையிட்டோர்: 11,065 
 

சென்னை ஏ. ஜி. எம் மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தாள் சாந்தி. தவறு அவளுடையது அன்று. சாலையோரத்தில் இருந்த ஓர் இளநீர் கடையில், இளநீர் வாங்கி குடித்துக் கொண்டிருந்தாள். ஆனால் அப்போது அந்த சாலையில் நடந்த விபத்தினால், எதிர்பாராத விதமாக ஒரு கார் அவளை மோதியது. வயிற்றில் பலத்த அடி. வயிற்றில் மட்டும் அன்று, ஆம், கிரி-சாந்தி தம்பதியினரின் கனவிலும், வாழ்விலும் பலத்த அடி.

திருமணமாகி ஏழு ஆண்டுகள் ஆகியும் குழந்தை பாக்கியம் இல்லை. பார்க்காத மருத்துவர் இல்லை, ஏறாத கோவில் இல்லை, வேண்டாத கடவுள் இல்லை. அப்படி இருந்த நிலைமை, அடுத்த சில மாதங்களில் மாறியது.

மூன்று மாதங்களுக்கு முன் கருவுற்றாள் சாந்தி. இந்த செய்தியைக் கேட்டு கிரியின் தந்தை ஜெயகோபாலும், தாய் சுந்தரியும் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. சாந்தியோ, தன்னைவிட்டு பிரிந்து சென்ற தன் தந்தையோ, தாயோ தான் தனக்குப் பிறக்கப் போவதாக நினைத்து மகிழ்ச்சியுடன் கூடிய எதிர்பார்ப்பில் இருந்தாள். ஆனால் பாவம், இன்று இப்படி ஒரு அசம்பாவிதம் நிகழ்ந்துவிட்டது.

சாந்தியின் பையில் இருந்த கைப்பேசியை எடுத்து, அதில் இருந்த எண்ணைப் பார்த்து, சாந்தியின் நிலைமையைப் பற்றி, அலுவலகத்தில் இருந்த கிரிக்குத் தகவல் சொல்லப்பட்டது. அடுத்த அரை மணி நேரத்தில் அவன் அந்த மருத்துவமனைக்கு வந்தான். அப்போது சாந்திக்கு ஆப்பரேஷன் நடந்துகொண்டிருந்தது. நடந்ததையெல்லாம் கிரி தன் பெற்றோரிடம் சொல்ல, அவர்களும் அடுத்த சில நிமிடங்களில் அந்த மருத்துவமனைக்கு வந்தனர்.

மூவரும் இஷ்ட தெய்வங்களை வேண்டிக் கொண்டிருந்தனர். இடையில் சொந்தங்களிடமிருந்து வந்த அழைப்புகளை ஏற்று நடந்த விவரத்தை சொல்லிக்கொண்டிருந்தனர்.

அப்போது ஆப்பரேஷன் தியேட்டரிலிருந்து ஒரு டாக்டரும், ஒரு நர்ஸும் வெளியே வந்து, கிரியிடம் ஏதோ பேசினர். கிரியிடம் ஏதோ ஒரு தாளைக் கொடுத்து அதில் அவனது கையெழுத்தை வாங்கி மறுபடியும் ஆப்பரேஷன் தியேட்டருக்குள் சென்றனர்.

கிரியின் முகத்தில் இருந்த சோகமும், பயமும் அதிகமானதுபோல் இருந்தது. இதைப் பார்த்துவிட்டு, இருக்கையில் இருந்து எழுந்து வந்து, கிரியிடம் ஏதோ சொல்ல நினைத்து ஆனால் சொல்ல முடியாமல் அமைதியாக நின்றார் ஜெயகோபால்.

பின் அவன் தோளை இறுக்கமாகப் பிடித்து, “கடவுள் இருக்காரு கிரி. கவலைப்படாதே…” என்று அவர் சொல்லும்போது அவர் கண்ணிலிருந்து கண்ணீர் வழியத் தொடங்கியது. அவரைக் கட்டியணைத்துக் கொண்டான் கிரி. வார்த்தைகள் வரவில்லை, கண்கள் கண்ணீரின் மூலம் வருத்தத்தை, கவலையை, சோகத்தைத் தெரிவித்தன. மனது குமுறிக்கொண்டிருந்தது, மூளை கடவுளிடம் ப்ரார்த்தனை செய்துகொண்டிருந்தது.

இரண்டு மணி நேர ஆப்பரேஷன் நல்லபடியாக முடிந்தது. சாந்தி இன்னும் தீவிர சிகிச்சைப் பிரிவில்தான் இருந்தாள், அதனால் அவளைப் பார்க்க அனுமதி வாங்குவது கடினம். அனுமதி கிடைத்தாலும் ஒரே நேரத்தில் மூவரும் உள்ளே சென்று பார்க்க முடியாது.

முதலில் கிரியை மட்டும் சாந்தியைப் பார்த்துவிட்டு வர அனுமதித்தனர் மருத்துவர்கள். அதற்குப் பிறகே ஜெயகோபாலும், சுந்தரியும் உள்ளே சென்று சாந்தியைப் பார்க்கலாம் என்று சொல்லப்பட்டிருந்தது.

உள்ளே சென்ற கிரி அரை மணி நேரம் சாந்தியுடன் பேசிவிட்டு வெளியே வந்தான். கண்கள் கலங்கியிருந்தன. அதற்குப் பிறகு உள்ளே சென்று, சாந்தியைப் பார்த்துவிட்டு, பின் வெளியே வந்தனர் ஜெயகோபாலும், சுந்தரியும்.

வெளியே வந்தவுடன், வீட்டுக்குப் போகும்போது திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவிலுக்குச் சென்று, அர்ச்சனை செய்துவிட்டு, உண்டியலில் ஆயிரத்தொரு ரூபாயைப் போட்டுவிட்டுத்தான் வீட்டுக்குப் போகவேண்டும் என்று ஜெயகோபாலிடம் சுந்தரி சொல்ல, அதற்கு ஜெயகோபாலும் சரி என்பதுபோல தலையசைத்தார்.

சாந்தி வீடு திரும்ப ஒரு வாரம் ஆனது. கிரிதான் அவளை மருத்துவமனையிலிருந்து அழைத்துவந்தான். நேரம் காலை பத்தரை மணி.

சாந்தியும் கிரியும் வீட்டுக்குள் நுழையும் முன் ஆரத்தி எடுத்து, திருஷ்டி எல்லாம் கழித்துவிட்டு அவர்களை உள்ளே அனுப்பினார் சுந்தரி. பூரணமாக குணமாகியிருந்தாள் சாந்தி. ஆனால் அவள் உள்ளத்தில் இருந்த சோகத்தை, அவள் முகத்தால் மறைக்க முடியவில்லை. முகமும் ஒரு கண்ணாடிதானே.

கிரியின் தோளில் கைவைத்துக்கொண்டு, மெதுவாக நடந்து, வீட்டுக்கூடத்தில் போடப்பட்டிருந்த மர நாற்காலியில் உட்கார்ந்தாள் சாந்தி. ஜெயகோபால் உள்ளேயிருந்து அவளுக்கு தண்ணீர் எடுத்துவர, ஆரத்தித் தட்டில் இருந்த நீரை வெளியே கொட்டிவிட்டு, சுந்தரியும் அப்போது கூடத்திற்கு வந்தார்.

“அப்பா, இங்க வந்து உக்காருங்க. அம்மா நீங்களும் வாங்க. உங்க ரெண்டு பேர் கிட்டயும் ஒரு முக்கியமான விஷயத்தைப் பத்தி பேசணும்” என்று சொன்னாள் சாந்தி.

“என்னம்மா வந்ததும், வராததுமா முக்கியமான விஷயம் பேசணும்னு சொல்றே? கொஞ்ச நேரம் ஓய்வு எடுத்துக்கோ. சாயங்காலம் பேசிக்கலாம்” என்றார் ஜெயகோபால்.

“இல்லப்பா, இப்பவே பேசிடலாம். தயவுசெஞ்சு நான் சொல்றதை கேளுங்க”

“சரிம்மா சொல்லு. எதுவா இருந்தாலும் பதட்டப்படாம சொல்லு”

“கிரிக்கு நீங்க வேற ஒரு கல்யாணம் பண்ணி வெக்கணும்னு நான் ஆசைப்படறேன். செய்வீங்களா?”. கண்கள் கலங்கின, குரல் நடுங்கியது.

இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை ஜெயகோபாலும், சுந்தரியும். சுந்தரி அதிர்ச்சியில் உறைந்து போனார். ஜெயகோபால், தன்னைக் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொண்டு, “ஏம்மா, என்னாச்சு? ஏன் திடீர்னு இப்படியெல்லாம் பேசறே? நாங்க ஏதாவது தப்பு பண்ணியிருந்தா எங்களை மன்னிச்சிடும்மா. உன் முடிவைக் கொஞ்சம் மாத்திக்கோம்மா ப்ளீஸ்” என்று கேட்டுக்கொண்டார். குரலில் இருந்த வருத்தம், நடுக்கம், அவர் சொன்ன வார்த்தைகள் மனதிலிருந்து வந்தவைதான் என்பதை உணர்த்தியது. சுந்தரியின் கண்கள் கலங்கின.

“இல்லப்பா. நான் கிரியை உண்மையா நேசிக்கறேன். என்னால அவர் கஷ்டப்படக்கூடாது. அதனாலதான் அவருக்கு இன்னொரு கல்யாணம் பண்ணி வையுங்கன்னு சொல்றேன்” ஜெயகோபாலையும், சாந்தியையும் மாறி மாறி பார்த்துக்கொண்டிருந்தார் சுந்தரி. வார்த்தைகள் தொண்டையிலேயே சிக்கிக்கொண்டன, வெளியே வரவில்லை.

“அப்படி என்ன கஷ்டப்படப்போறான் கிரி? நீங்க ரெண்டு பேரும் இத்தனை வருஷம் சந்தோஷமா குடும்பம் நடத்தினது எங்களுக்குத் தெரியும். ஒருத்தர் மேல ஒருத்தர் எவ்ளோ பாசமா நடந்துப்பீங்க. இப்போ எங்கேயிருந்து இன்னொரு கல்யாணம் பண்ணுற பேச்சு வந்தது?”

“கிரி உங்ககிட்ட சொல்லலையா அப்பா? அம்மா, உங்களுக்கும் நான் எதனால சொல்றேன்னு தெரியலையா?”

“இல்லையே மா. என்னாச்சு? சொல்லேன். கிரி, நீயாவது சொல்லேன்டா”

அப்போது கிரி, “நான் ஹாஸ்பிட்டல்ல இருந்தப்போ ஒரு தாள்ல கையெழுத்து போட்டது ஞாபகமிருக்கா?” என்று ஜெயகோபாலைக் கேட்டான்.

“ஆமா, அதுக்கென்ன இப்போ?”

“நடந்த விபத்துனால சாந்தியோட கரு கலைஞ்சுபோய், அவளோட கருப்பையும் ரொம்ப சேதம் ஆகியிருந்தது. அந்த கருப்பையை எடுக்கலைன்னா சாந்தியை காப்பாத்த முடியாதுன்னு சொல்லிருந்தார் டாக்டர். இந்த ஆப்பரேஷன் ரிஸ்க்கான ஒன்னு. அப்படி அந்த கருப்பையை எடுக்கும்போது அவளுக்கு ஏதாவது ஆச்சுன்னா, அதுக்கு ஹாஸ்பிட்டல் பொறுப்பில்லை அப்படிங்கிற விஷயம்தான் அந்த தாள்ல இருந்தது. அதை படிச்சுப்பார்த்து கையெழுத்து போட்டேன். இதைப்பத்திதான் இப்போ சாந்தி சொல்றா”

அதிர்ச்சியாய் இருந்தது ஜெயகோபாலுக்கும், சுந்தரிக்கும். பூகம்பமே வெடித்ததுபோல் இருந்தது. தன் மருமகளுக்கு இப்படி ஆகிவிட்டதே என்ற வருத்தத்தில், சோகத்தில் அவர்களால் எதுவுமே பேச முடியவில்லை.

கிரி பேச்சைத் தொடர்ந்தான்.

“அதுக்கு நான் சொன்னேன். உனக்கு நான் குழந்தை, எனக்கு நீ குழந்தை அப்படிங்கற சினிமா வசனம் எல்லாம் நான் சொல்ல மாட்டேன். எத்தனையோ அனாதை ஆசிரமங்கள் இருக்கு. அதுல எத்தனையோ முத்து முத்தா குழந்தைங்க இருக்கு. அதுல ஒன்னு, ரெண்டு நாம தத்தெடுத்துக்கலாம். இந்த ரெண்டாவது கல்யாணம் பேச்செல்லாம் பேசாதேன்னு சொன்னேன் அப்பா” என்றான் கிரி.

அப்போது சாந்தி, “தத்து எடுக்கறதெல்லாம் சரி வராது. குழந்தை எப்படி ஒட்டும்? ரத்தப்பாசம் இருக்காதே?” என்றாள்.

அப்போது சுந்தரி, “அதெல்லாம் இல்லம்மா. நாமதான் பாசம், அன்பு எல்லாத்தையும் ஊட்டி வளர்ப்போமே. பயப்படாதேமா. நாங்க எல்லாரும் இருக்கோம். இந்த மாதிரி ரெண்டாவது கல்யாணம், அது இதுன்னு தயவுசெஞ்சு உளறாதே” என்று சொல்லி, சாந்தியின் அருகில் வந்து அவள் தலையை தன்மீது சாய்த்துக்கொண்டார். சில நிமிடங்கள் அப்படியே இருந்தனர் அனைவரும். எதுவும் பேசவில்லை. சாந்திக்கு, தன் தாயின் மீது தலைசாய்த்து வைத்திருப்பது போன்ற உணர்வு.

“இது உங்க வாழ்க்கை. நீங்கதான் முடிவு செய்யணும். மனசுவிட்டு பேசுங்க. அப்பறம் உங்க முடிவை எங்ககிட்ட சொல்லுங்க. அதுக்குள்ளே நானும் அம்மாவும் பக்கத்துல இருக்கற முருகர் கோவிலுக்குப் போயிட்டு வர்றோம்” என்று சொல்லி, சுந்தரியை கிளப்பிக்கொண்டு அங்கிருந்து வெளியே சென்றார் ஜெயகோபால்.

கோவிலை வந்தடைந்தனர் இருவரும். உள்ளே நுழைந்தவுடன், “என்னங்க, நம்ம பையன் தெளிவா இருக்கான். ஆனா தத்தெடுக்கறதுக்கு சாந்தி மறுக்கிறாளே. முடிவை மாத்திப்பாளா?” என்று ஆதங்கத்துடன் கேட்டார் சுந்தரி.

அதற்கு ஜெயகோபால், “நம்ம பையன் சாந்தியின் மனசை மாத்தி, நல்ல வழிக்குக் கொண்டு வந்திடுவான். குழந்தையும் தத்தெடுத்துப்பாங்க. கவலைப்படாதே. புரியுதா?” என்றார்.

“அதெப்படிங்க இவ்ளோ நம்பிக்கையோட சொல்றீங்க?” என்று சுந்தரி கேட்க, ஜெயகோபால் தன் பர்ஸில் இருந்து ஒரு தாளையும், ஒரு புகைப்படத்தையும் எடுத்து, சுந்தரியிடம் காண்பித்தார்.

அந்தத் தாளையும், புகைப்படத்தையும் பார்த்ததும் புரிந்தது சுந்தரிக்கு. கவலை மறையத் தொடங்கியது. எதையோ நினைத்து புன்னகைத்தார். முகத்தில் நம்பிக்கை தோன்றியது. அந்தப் புகைப்படத்தையே சில நிமிடங்கள் பார்த்துகொண்டிருந்தார். கண்களில் ஆனந்தக்கண்ணீர் நிரம்பியது.

அந்த தாளும், புகைப்படமும் என்ன தெரியுமா? கிரியைத் தத்தெடுத்ததற்கான ஒப்புதல் படிவத்தின் நகல், அவனைத் தத்தெடுத்த அன்று எடுக்கப்பட்ட ஒரு சின்ன புகைப்படம்.

அப்போது ஜெயகோபாலின் கைப்பேசி ஒலித்தது. மறுமுனையில் கிரி, “அப்பா, சாந்தி குழந்தைகளை தத்தெடுக்கறதுக்கு ஒரு வழியா சம்மதிச்சிட்டா” என்று சொன்னதைக் கேட்டு, ஜெயகோபாலின் முகம் மலர்ந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *