நெஞ்சமடி நெஞ்சம்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 3, 2023
பார்வையிட்டோர்: 4,153 
 

அத்தியாயம் 28-30 | அத்தியாயம் 31-33

அத்தியாயம்-31

“உன் காதலில் எனக்கு சந்தேகமில்லை ரூபிணி… உன் மேல் நம்பிக்கை இல்லாமல் நான் அப்படிப் பேசவில்லை. ஆனால் உனக்கு சமூகத்தைப் பற்றிய பயம் உண்டு. என் மேல் உயிராய் இருந்தவள். உன் தோழிகளின் பேச்சுக்கும் கட்டுப்பட்டாய்.. என்னை விட்டு விலகி நிற்கத் துணிந்தாய்.. தோழிகளின் பேச்சுக்கே அவ்வளவு மதிப்புக் கொடுத்த நீ.. பெற்றவர்களின் பேச்சிற்கு எவ்வளவு மதிப்பு கொடுப்பாய்?” 

“அப்படியென்றால் உங்களை மறந்து… இன்னொருவனை மணந்து கொள்வேனா?” 

“இல்லைடி.. நான் அப்படிச் சொல்லவில்லை. அன்று ஜமுனாவின் ரிசப்ஷனில் நீ பாடிய போது உன்னிடமிருந்து வெளிப்பட்ட வேதனையை என்னால் இன்றும் மறக்க முடியவில்லை. மீண்டும் என்னைப் பிரிய வேண்டிய நிலை வந்தால் நீ உயிரோடு இருக்க மாட்டாய். அது எனக்கு நிச்சயமாய் தெரியும். இந்த ஹரிஹரன் ஒரு நாளும் அதை நடக்க விட மாட்டான்.” 

“ஹரி…” ரூபிணி அழுது விட்டாள். 

“அழாதே.. என்னுடன் தான் நீ உன் பெற்றோரைப் பார்த்துப் பேச வேண்டும். அவர்கள் சம்மதித்தால் அவர்கள் சம்மதத்தோடு நம் கல்யாணம் நடக்கும்.” 

“சம்மதிக்கா விட்டால்.” 

“அப்போதும் ஊரையே அழைத்துப் பிரம்மாண்டமாய் கல்யாணம் நடத்தி பகிரங்கமாய்த்தான் உன் கழுத்தில் தாலி கட்டுவேன்.” 

ரூபிணி மௌனமானாள். அவன் சொல்வதில் இருந்த நியாயம் புரிந்தது. மெள்ள அவன் பக்கம் நெருங்கி அவன் தோள் மேல் தலை சாய்த்துக் கொண்டாள். 

ஹரிஹரனின் மனம் நிம்மதியாகி விட்டது. ‘இவள் பூஞ்சை மனம் கொண்டவள். என் மேலிருக்கும் காதல் பெரிதா… பெற்று வளர்த்தவர்களின் பாசம் பெரிதா என்ற கேள்வி இவள் முன் எழுந்து விடக்கூடாது.. இவள் அதைத் தாங்கி நிற்க மாட்டாள். உயிரை விட்டு விடுவாள். இரண்டில் எது வேண்டும்? என்ற கேள்வியையே தவிர்த்து விட வேண்டும். இது மட்டும்தான். என் காதல் மட்டும்தான் உனக்கு… வேறு எதுவும்… எந்தவித பந்த பாசமும்.. நினைவும் உன் மனதில் இருக்கக் கூடாது என்று கட்டளையிட்டு சிறைப் படுத்தினால்தான் இவளைக் காப்பாற்றி கை பிடிக்க முடியும்…’ 

திருச்சியில் ஹோட்டலின் முன் காரை நிறுத்தினான். 

“வா.. சாப்பிடலாம்.” 

“எனக்குப் பசியில்லை ஹரி..” 

“எனக்குப் பசிக்கிறதே.. நீ சாப்பிடாமல் நான் சாப்பிட மாட்டேனே.” 

அவள் பதில் பேசாமல் இறங்கினாள். அவன் முகத்தில் இளநகை அரும்பியது. இவள்தான் சில மணி நேரங்களுக்கு முன்னால் உனக்கும்.. எனக்கும் என்ன சம்பந்த மென்று கேட்டாள்… இப்போது அவனது பசிக்காக அவளுக்கு தேவையில்லாவிட்டாலும் சாப்பிட வருகிறாள். இவளுக்கு ஊடலும் தெரிகின்றது… கூடலும் இயலபாய வருகின்றது. இவளில்லாத வாழ்வை நினைக்கவே முடியாதே. 

“என்ன சாப்பிடுகிறாய்?” 

“உங்களுக்குப் பிடித்ததை ஆர்டர் கொடுங்கள்.”

”உனக்கு என்னடி பிடிக்கும்.” 

‘எனக்கு உன்னைத்தான் பிடிக்கும்’ மனதில் நினைத்துக் கொண்டவளின் முகத்தில் புன்னகை வந்தது. அருகில் சர்வர் இருந்ததால்… விரல் நீட்டி ‘நீ’ என்று ஜாடை காட்டினாள். அவன் அவளை இமைக்காமல் ஒரு கணம் பார்த்தான். பின்னர் சர்வரிடம் தேவையானதை சொல்லிவிட்டு அவளருகே சேரை இழுத்துப் போட்டுக் கொண்டு அமர்ந்தான். 

“என்னடி ஜாடை காட்டினாய்?”

“ஏன்.. புரியவில்லையா?” 

“உன் வாயால் சொல்லேன்…” 

“உங்களுக்குத்தான் நான் வாய் திறந்தால் பிடிக்காதே.” 

அவன் டேபிளுக்கு அடியிலிருந்த அவளது முழங்கையில் கிள்ளினான். அவள் சிரித்துக் கொண்டே தலைசரித்து அவனைப் பார்த்துச் சிரித்தாள். அவன் மயங்கிப் போனான். 

“வரிசையாய் நெருக்கிக் கட்டப்பட்ட முத்துச் சரம் போல் உன் பல் வரிசை என்னை மயக்குதுடி.. சிரித்தே மயக்கு…” 

“ரொம்பவும் மயங்கினவர்தான். மயங்கியவர் பேசிய பேச்சைத்தான் காலையில் கேட்டேனே…” 

“இந்த மாதிரியான நேரத்தில் எதை நினைவுபடுத்துகிறாய் பார்.. உன்னை…” 

அவன் பல்லைக் கடித்துக் கொண்டு முறைத்தான். அவனது கோபத்தை ரசித்தவள் விஷமப் புன்னகையுடன் கூறினாள். 

“அப்பா… கோபத்தைப் பாரேன்.. மூக்கு நுனியில் கோபத்தை வைத்திருப்பீர்களா? முசுட்டு ஹரிஹரன்.” 

“என்னடி பட்டப் பெயர் வைக்கிறாயா?” 

“அப்படித்தான்.. போங்களேன். ஆனால் ஒன்று ஹரி..” 

“என்னடி..?”

“நான் சிரித்துத்தான் உங்களை மயக்குகிறேன். நீங்கள் முறைத்தே என்னை மயக்கி வைத்திருக்கிறீர்கள்.”

ஹரிஹரனின் கண்கள் மின்னின. அவளது கரத்தை இறுகப் பற்றி அதில் யாரும் கவனிக்காமல் இதழ் பதித்தான்… அப்போது அவனது செல்போனின் மணியொலித்தது. எடுத்துப் பேசினான். 

”ம்ம். ஓகே.. ஹாஸ்பிடலில் அட்மிட் பண்ணி விடு.” 

செல்போனை அணைத்துப் பாக்கெட்டில் போட்டவன் சர்வர் கொண்டு வந்து வைத்திருந்த உணவு வகைகளை அவள் பக்கமாய் தள்ளினான். 

“சாப்பிடு…” 

“யாருக்கும் உடம்பு சரியில்லையா?” 

“ஆமாம்.. உன் ஆபிஸில் வொர்க் பண்ணும் மூர்த்தி ஒரு ஆக்ஸிடெண்டில் மாட்டி ரோட்டில் கிடக்கிறானாம். ஆஸ்பத்திரியில் அட்மிட் பண்ணச் சொன்னேன்… நீ சாப்பிடு…” 

அவன் நிதானமாய் ரசித்துச் சாப்பிட ஆரம்பித்தான். 

அத்தியாயம்-32

ரூபிணியின் கையிலிருந்த முள் கரண்டியும் ஸ்பூனும் நழுவின. அதிர்ச்சியுடன் விழியகல ஹரிஹரனைப் பார்த்தாள் அவள். இவனால் எப்படி ஒருவனை ரத்தக் காயம் வர அடிக்கச் சொல்லிவிட்டு அமைதியாய் சாப்பிட முடிகின்றது… அவளுக்கு முதுகுத் தண்டு பயத்தில் ஜில்லிட்டது. 

அவன் அவள் முகத்தை நிமிர்ந்து பார்த்து அவளது உணர்வுகளை இனம் கண்டு கொண்டான். 

‘பயந்து விட்டாள்…’ மனம் கூற இதமாய் அவளைப் பார்த்துச் சிரித்தான். 

“என்னடி.. என்னை புதிதாய் பார்ப்பது போல் பார்க்கிறாய்…” 

“புதிதுதான். இந்த ஹரிஹரன் எனக்குப் புதிதுதான்.”

“ரூபிணி… அவனைக் கொல்லவில்லை… கைகால்… உடல் உறுப்புகளுக்கு சேதம் விளைக்கவில்லை. நாலு தட்டு தட்டி ஹாஸ்பிடலில் அட்மிட் பண்ணச் சொல்லியிருக்கிறேன்.”

“அதைக் கூட ஏன் செய்ய வேண்டும்?” 

“செய்யாமல் விட்டால் அவன் கொட்டம் அடங்காது. இவனும் ஒரு வகையில் ரௌடிதான். இவனை அடக்கித்தான் ஆக வேண்டும். எனக்கு பெண்களை டார்ச்சர் பண்ணும் வீரர்களை என்றைக்குமே பிடிக்காது. இவன் என்னடாவென்றால் என் பெண்டாட்டியையே டார்ச்சர் பண்ணுகிறான். சும்மா விட்டு விடுவேனா..?”

“உங்கள் பெண்டாட்டியா…? என்னையா சொல்கிறீர்கள்?” 

“இல்லைடி.. ரோட்டில் போகிறவளைச் சொல்கிறேன். அறை வாங்கப் போகிறாய்.. பேசாமல் சாப்பிடு.” 

“நமக்கு இன்னும் கல்யாணம் நடக்கவில்லை.”

“ஏய்ய்… கல்யாணம் என்பது ஊருக்காகத்தான்… என்று நீயாய் என் தோள் சாய்ந்தாயோ… அன்றிலிருந்து நீதான் என் பொண்டாட்டி”. 

ரூபிணியின் கலக்கம் விலகி காதல் வந்தது. ஹரிஹரனைப் பார்த்துக் கொண்டே சாப்பிடும்போது உணவு கூட என்றையும் விட இன்று அதிகமாய் ருசிப்பது போல ரூபிணிக்குத் தோன்றியது. ஊடே ஓர் முறை அவளைப் பார்த்த ஹரிஹரன் அவளது பார்வையைக் கண்டு புருவங்களை உயர்த்தி கண் சிமிட்டினான். அவளது முகம் சிவந்து விட்டது. 

‘இவன் இருக்கிறானே… காதல் ரௌடி.’ 

ஹோட்டலை விட்டு வெளியே வந்து காரில் ஏறி அமர்ந்தார்கள். காரைக் கிளப்பினான் ஹரிஹரன். ஏ.ஸி.யின் இதமான குளிர் காருக்குள் பரவியது. அருகே அமர்ந்திருந்த ரூபிணியை ஓர் முறை திரும்பிப் பார்த்துக் கொண்ட ஹரிஹரனின் மனதில் உல்லாசமும்.. மகிழ்ச்சியும் போட்டி போட்டுக் கொண்டு பீறிட்டன. ஒரு மணி நேரம் உடன் அமர்ந்து பேச மாட்டாளா.. என்று ஏங்கியவன். இன்று அவன் தோள் சாய்ந்து பல மணி நேரமாக அவனருகே பயணிக்கிறாள். 

ஹரிஹரன் சீழ்க்கையடித்தபடி காரை ஓட்டினான். ரூபிணி அவனது உற்சாகத்தை ரசித்தாள். ரசிக்கும் போதே கோவில்பட்டியில் ரெங்கநாதனும் வீரலட்சுமியும் அவர்களை எப்படி எதிர்கொள்வார்களோ என்ற பயம் அவள் மனதில் எழுந்தது. முகம் வாட அவனிடமிருந்து விலகி அமர்ந்து ஜன்னல் வழி சாலையைப் பார்த்தாள். 

அவளது ஒதுக்கத்தைக் கண்ட ஹரிஹரன். “என்னடி…?” என்று வினவினான். 

“அப்பா.. அம்மாவை நினைத்துக் கொண்டேன்.” 

“அதற்கெல்லாம் மூட் அவுட் ஆகாதே.. பார்த்துக் கொள்ளலாம்.” 

ரூபிணி கலவரத்துடன் அவனைப் பார்த்தாள். 

‘பார்த்துக் கொள்ளலாம் என்று என்ன அர்த்தத்தில் இவன் சொல்லுகிறான்? எப்படிப் பார்த்துக் கொள்வான்? மூர்த்தியை பார்த்துக் கொண்டது போலா.’ 

ஓரக் கண்ணால் அவளது முகத்தைப் பார்த்தவன் சிரித்து விட்டான். 

”பயப்படாதே. மூர்த்தியைப் பார்த்துக் கொண்டது வேறு… என் மாமனார் மாமியாரைப் பார்த்துக்கொள்வது என்பது வேறு.”

அவள் முகத்தில் அசடு வழிந்தது. 

‘அவளது பயத்தைக் கண்டு கொண்டான். ஜித்தன்.’

கோவில்பட்டி ஊர் எல்லைக்குள் கார் நுழைந்தது. 

“உன் அப்பாவின் ஊரின் பெயரில்தான் கோவில்பட்டி என்று பட்டி இருக்கிறது. ஆனால் ஊர் பக்கா டவுன்.” 

“என் அப்பாவின் ஊரா. என் ஊரும் இதுதான்.” 

“உன் ஊர் விழுப்புரம்தான்.” 

ஹரிஹரனின் குரலில் கண்டிப்பு இருந்தது. ரூபிணி மௌனமானாள். 

‘வீடு வந்து விட்டது. இனிமேல் இவனிடம் வாய் கொடுக்கக் கூடாது. வீட்டில் நிலைமை எப்படி இருக்கப் போகிறதோ?’ 

வீட்டுக் காம்பவுண்டின் முன் கார் நின்றது. ரூபிணி இறங்கி கேட்டைத் திறந்து விட்டாள். கார் வீட்டினுள் நுழைந்தது. ரூபிணி நடுக்கத்துடன் ஹரிஹரன் வருவதற்காக காத்து நிற்கையில் வீட்டுக் கதவு திறந்தது. 

கார் சத்தம் கேட்டு வாசல் கதவைத் திறந்து கொண்டு ரெங்கநாதனும், வீரலட்சுமியும் வந்தார்கள். ஹரிஹரன் கார்க் கதவைத் திறந்து கீழே இறங்கி ரூபிணியின் அருகே நின்று கொண்டான். 

“பார்த்தாயா.. நான் சொல்லச் சொல்லக் கேட்காமல் உன் சின்ன மகளுக்கு வக்காலத்து வாங்கிப் பேசினாயே.. இப்போது அவள் ஜோடி போட்டுக் கொண்டு வந்து நிற்பதை உன் கண் குளிரப் பார்.” 

வீரலட்சுமி பதட்டத்துடன் அக்கம் பக்கம் பார்த்தவாறு கணவனை அடக்கினாள். 

“சத்தம் போடாதீர்கள். அக்கம் பக்கம் கேட்டு விடப் போகுது. உள்ளே வந்து பேசுங்கள்.”

”ஏண்டி ஊரே சிரிக்கப் பண்ணி விட்டாள் உன் செல்லப் பெண், நீ மூடி மறைக்கப் பார்க்கிறாய்… எத்தனை நாள் மூடி மறைப்பாய்.” 

“ஐயோ.. கொஞ்சம் மெதுவாய்த்தான் பேசுங்களேன்.” 

வீரலட்சுமி அடக்கியும் கேட்காமல் வாயைத் திறந்த ரெங்கநாதன் கூரிய பார்வையுடன் நடுங்கிக் கொண்டிருந்த ரூபிணியின் கையைப் பிடித்துக் கொண்டு படியேறி வந்த ஹரிஹரனைக் கண்டதும் வாய் அடைத்துப் போனவராய் வீட்டுக்குள் பின் வாங்கினார். 

வீட்டிற்குள் பிரவேசித்த ஹரிஹரன் ஹால் சோபாவில் அமர்ந்து கொண்டு ரூபிணியையும் அருகே அமர வைத்தான். பின்பு ரெங்கநாதனைப் பார்த்து எதிரேயிருந்த சோபாவைக் காட்டி, 

”உட்காருங்களேன். ஏன் நிற்கிறீர்கள்?” என்று உபசரித்தான். 

ரூபிணி பயத்துடன் கண்களிரண்டையும் மூடிக் கொண்டாள். 

“இது என் வீடு..” ரெங்கநாதன் உறுமினார். 

“ஸோ வாட்..?” அமர்த்தலாய் வினவினான் ஹரிஹரன். “என் வீட்டிற்குள் வந்து என்னையே உட்காரச் சொல்லுகிறீர்களா?” 

“உட்கார்ந்து பேச வேண்டிய விசயத்தை உட்கார்ந்து தானே பேச வேண்டும்? உட்காருங்கள் மாமா.” 

“மாமாவா?” 

“ஆமாம்.”

ரூபிணிக்கு அவர்களின் உரையாடலைக் கேட்டு சிரிப்பதா இல்லை அழுவதா என்று தெரியவில்லை. விழி உயர்த்திப் பார்க்கக்கூட பயந்தவளாய் தரை மேல் விழிகளைப் பதித்திருந்தாள். 

ரெங்கநாதன் ஹரிஹரனைப் பார்ப்பதைத் தவிர்த்தார். மகளைப் பார்த்து, “ரூபிணி என்ன இதெல்லாம்” என்று கர்ஜித்தார். 

“அப்பா… அம்மாவுக்கு உடம்பு சரியில்லையென்று சொன்னீர்களே” ரூபிணி அச்சத்துடன் கேட்டாள். 

“நீ சரியில்லை.. அதனால்தான் அப்படிச் சொன்னேன்.” 

“அப்பா.. நான் இவரைக் காதலிக்கிறேன். கல்யாணம் பண்ணிக் கொள்ள ஆசைப்படுகிறேன்.” 

“அவ்வளவு தூரத்திற்கு வந்து விட்டாயா? கேட்டியாடி. உன் ஒன்றும் தெரியாத சின்னப் பெண் பேசுவதை.” 

ரெங்கநாதனுக்கு ரூபிணியை இழுத்து நாலு அறை கொடுக்க வேண்டும் போல் ரத்தம் கொதித்தது. ஆனால் அவரது ஆசையை நிறைவேற்ற முடியாமல் ஹரிஹரன் அவளது கையை இறுகப் பற்றிக் கொண்டு அவளுக்கு அரணாய் நின்றான். 

அத்தியாயம்-33

“என் பெயர் ஹரிஹரன் மாமா.”

”தயவு செய்து என்னை மாமாவென்று கூப்பிடாதீர்கள்.” 

“வேறு முறை சொல்லிக் கூப்பிட முடியாதே… அதனால் அதைப் பற்றிய பேச்சை விட்டு விட்டு என் பேச்சைக் கேளுங்கள்.. எனக்கு பல தொழில்கள் இருக்கின்றன… கோடிக் கணக்கில் சொத்து இருக்கிறது. நான் ரூபிணியை என் கண்ணுக்குள் வைத்து மகாராணி போல் பார்த்துக் கொள்வேன்.” 

வீரலட்சுமிக்கு அவனை மிகவும் பிடித்திருந்தது. இன்றைய உலகில் அடாவடியாய் இருந்தால்தான் பிழைக்க முடியும். இவன் என்ன அடுத்தவர் சொத்தை கொள்ளை அடித்தானா? சுயமாய் சம்பாதித்திருக்கும் கோடீஸ்வர மாப்பிள்ளை வீடு தேடி வந்து பெண் கேட்கும்போது.. ஜாதியாவது.. ஒன்றாவது.. இந்தக் காலத்தில் யார் அதையெல்லாம் பார்க்கிறார்கள். 

அவள் ஹரிஹரனைப் பார்த்து புன்னகை செய்தாள்.

“என்ன சாப்பிடுகிறீர்கள் மாப்பிள்ளை.” 

“அம்மா..” ரூபிணி விழி விரிய தாயைப் பார்த்தாள்.

“சூடாய் ஒரு கப் காபி கொடுங்கள் அத்தை… அதற்கு முன்னால் உங்களிடம் பேச வேண்டுமே.” 

“பேசுங்கள் மாப்பிள்ளை…” 

“எனக்கு அப்பா அம்மா இல்லை அத்தை. என் சார்பில் பெரியவர்களாய் நிற்க என் தாய் மாமாவும் அத்தையும் தான் வருவார்கள். மற்ற கல்யாண வேலைகளை நீங்கள்தான் முன்னால் நின்று செய்ய வேண்டும்.” 

வீரலட்சுமிக்கு உச்சி குளிர்ந்து விட்டது. பெங்களூரில் கூட வேலை பார்க்கிறவனை காதலிக்கிறேன் என்று மூத்த பெண் தாரிணி வந்து நின்றாள். திருமணம் பேசிய போது மாப்பிள்ளையின் பெற்றோர் பெரிய லிஸ்டையே சீர் வரிசைப் பட்டியலாய் போட்டு நீட்ட காதல் செய்த மாப்பிள்ளை மௌனமாகிப் போனான். கடைசிப் பைசா வரை செலவழித்து தாரிணியின் திருமணத்தை முடித்து அனுப்பி வைத்தார்கள். 

இவன் என்னடாவென்றால் நீ என் கல்யாண வேலைகளை மட்டும் கவனித்தால் போதும் என்கிறானே… 

“மாப்பிள்ளை… எங்கள் பெண்ணுக்கு சீர் வரிசை…” 

“அவளே எனக்குப் பெரிய சீர்வரிசை அத்தை. கட்டிய புடவையுடன் அனுப்பி வையுங்கள் போதும்…” 

வீரலட்சுமி மகிழ்ந்துபோய் காபி போட உள்ளே விரைய ரெங்கநாதன் அவளைப் பின் தொடர்ந்தார். ரூபிணி இவ்வளவு எளிதாக தன் திருமணம் முடிவாகி விட்டதா என்பதை நம்ப முடியாமல் திகைத்தாள். ஹரிஹரன் அவளைப் பார்த்து மர்மமாய் புன்னகைத்தான். 

“என்னடி நினைச்சுக்கிட்டு இருக்கே. இது என்ன ஆம்பளை இல்லாமல் பொம்பளை ராஜ்ஜியம் கட்டி ஆள்கிற வீடா. உன் இஷ்டத்துக்கு அவனிடம் கல்யாணம் பேசி முடிவு பண்ணுகிற. என்ன விஷயம்?” ரெங்கநாதன் விரோதமாய் மனைவியைப் பார்த்தபடி கேட்டார். 

சூடான காபியை ஆற்றியபடி கணவனின் முகம் பார்க்காமல் “வீட்டு ஆம்பளை, பொண்டாட்டிக்கு நல்ல புருசனா பெத்த பொண்ணுக்கு நல்ல அப்பனா இருந்தால் வீட்டுப் பொம்பளை ஏன் ராஜ்ஜியம் கட்டி ஆள நினைக்கப் போகிறாள்? தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் எங்காவது, நெறி கட்டுமா? காதல் பிடிக்கலைன்னா பெண்ணைக் கண்டிக்கலாம். அதை விட்டு விட்டு உங்க அக்காள் மகன் ஊரறிஞ்ச பொறுக்கி.. அவனுக்குப் போய் என் பெண்ணைக் கட்டிக் கொடுக்கத் திட்டம் போட்டிங்களே. அப்பவே எனக்கு உங்க புத்தி தெரிஞ்சு போச்சு… என் பொண்ணு எப்படா மாட்டுவா நாம் இதுதான் சாக்குன்னு அக்கா மகன் கையில் பிடிச்சுக் குடுத்திடலாம்கிறது தானே உங்க கனவு? நான் அதை நடக்க விட மாட்டேன்” என்று கடுகடுப்பாய் பதில் கூறினாள். 

“வீரலட்சுமி. அதெல்லாம் நம் வீட்டு உள் விவகாரம்டி. வந்திருப்பவன் நாடறிஞ்ச தாதா.” 

“பொறுக்கிக்கு தாதா பெட்டர்.” 

“ஏய்.. வேணாம்டி சொன்னால் கேளு. அவன் கொலை செய்யவும் அஞ்சாதவன். அவனைக் கண்டால் அவனது ஜில்லாவே பயப்படுதாம்.” 

“எனக்கு அதுதான் வேண்டும். உங்க அக்கா மகன். கண்டபடி அலைகிற அந்த நாதாரி .. என் மகளை கனவில் நினைச்சுப் பார்க்கக் கூட பயப்படுவான்.” 

வீரலட்சுமி அலட்டிக் கொள்ளாமல் பேசியபடி காபிக் கோப்பைகளை எடுத்து டிரேயில் அடுக்கி ஹாலுக்குக் கொண்டு சென்றாள். ரெங்கநாதன் அடங்கிப் போனவர் போல் பின் தொடர்ந்து சென்று ஹால் சோபாவில் உட்கார்ந்து கொண்டார். 

“என்ன மாப்பிள்ளை செய்வது? உங்களுக்கு தாய்க் குலத்தின் ஆதரவு எக்கச்சக்கமாக இருக்கிறது. பெண்ணை விட்டு விட்டுப் போங்க. நீங்க சொன்ன நாளில் வந்து உங்கள் கையில் பிடித்துக் கொடுக்கிறோம்”. 

ரெங்கநாதனே ஒப்புக் கொண்டார் என்றதும் ரூபிணி . மகிழ்ந்து போனாள். 

“அப்பா.. தேங்க்ஸ் அப்பா” என்று ஓடிப்போய் அவரது கால்களில் விழுந்தாள். 

“எழுந்திரும்மா.. எப்படியோ நீ நன்றாக இருக்க வேண்டும். எங்களுக்கு அதுதானே வேண்டும்..” கண்ணாடியைக் கழற்றி கண்களைத் துடைத்துக் கொண்டார் ரெங்கநாதன். 

“மாமா.. வரும் புதன்கிழமை நல்ல முகூர்த்த நாள்.”

“இன்னும் ஆறே நாட்கள்தான் இருக்கிறது மாப்பிள்ளை… மண்டபம் கிடைக்குமா? இன்விடேசன் அடித்துக் கொடுக்க நாள் வேண்டாமா?” 

”எனக்குச் சொந்தமான மண்டபம் இருக்கும்போது ஊரில் வேறு ஒரு மண்டபத்தை நான் ஏன் தேட வேண்டும் அத்தை…” 

வீரலட்சுமி மகிழ்ந்து போனாள். ஹரிஹரன் எழுந்து கொண்டான். “அப்போ.. நான் கிளம்பட்டுமா மாமா.. கிளம்புகிறேன் அத்தை…” 

ஹரிஹரனின் கார் கிளம்பிப் போன சற்று நேரத்தில் வாசலில் மீண்டும் கார் சத்தம் கேட்டது. ஓடிப்போய் பார்த்தார்கள். தாரிணி தன் கணவன் குமாருடன் இறங்கிக் கொண்டிருந்தாள். 

“தாரிணி. என்னம்மா திடீர்ன்னு கிளம்பி வந்திருக்கிறாய். வாங்க மாப்பிள்ளை.. நீங்கள் வந்ததும் நல்லதாகப் போயிற்று. ரூபிணிக்கு கல்யாணம் நிச்சயம் பண்ணியிருக்கிறோம்.”

வீரலட்சுமி மகிழ்வாய் மூத்தமகளையும் மருமகனையும் வரவேற்றாள். சற்று நேரத்தில் நவின் காலேஜிலிருந்து வந்து விட்டான். மூத்த சகோதரிகளைக் கண்டதும் அவனுக்குக் கொண்டாட்டம். வீரலட்சுமி வீட்டில் கல்யாணக் களை வந்து விட்டதாக நினைத்து மகிழ்ந்து போனாள். 

இரவுச் சாப்பாடு முடிந்ததும் ரெங்கநாதன் மனைவியையும் பிள்ளைகளையும் பார்த்து, 

“காலையில் நம்ம பெருமாள் கோவிலில் சிறப்பு அபிசேகத்திற்கு ஏற்பாடு பண்ணியிருக்கிறேன். குடும்பத்தோடு போக வேண்டும். காலையில் நான்கு மணிக்கெல்லாம் எழுந்து எல்லோரும் ரெடியாகி விடுங்கள். வேனை வரச் சொல்லியிருக்கிறேன்” என்றார். 

“விடியற்காலை நான்கு மணிக்கேவா…” வீரலட்சுமி விழித்தாள். 

“அதிகாலையில் அபிஷேகம்டி.. சரிசரி.. பேச்சை வளர்க்காமல் எல்லோரும் காலா காலத்தில் படுத்துத் தூங்குங்க. காலையில் சீக்கிரம் எழுந்திருக்க வேண்டும்…” ரெங்கநாதன் படுக்கப் போய் விட்டார். 

விடிந்தும் விடியாத இருள் பிரியாத அதிகாலை நேரத்தில் பெருமாள் கோவில் வாசலில் போய் நின்றது அந்த வேன். ரெங்கநாதன் குடும்பத்தினர் இறங்கினார்கள். கோவிலுக்கு வெளியே முரட்டு ஆட்கள் பலர் வெட்டரிவாள். வேல் கம்பு சகிதம் நின்று கொண்டிருந்தனர். 

‘யாரு இவங்க.. தெரிந்த முகங்களாக இருக்கிறதே…’ வீரலட்சுமி யோசனையுடன் பார்க்க, “ம்ம்.. சீக்கிரமாய் கோவிலுக்குள் போங்க..” என்று விரட்டினார் ரெங்கநாதன். 

கோவிலுக்கு உள்ளே ரூபிணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ரெங்கநாதனின் அக்காள் குடும்பமும் அவர்களது உறவினர் கூட்டமும் கோவிலுக்குள் இருந்தனர். மணமேடை அமைக்கப்பட்டு அதில் ரெங்கநாதனின் அக்காள் மகன் அமர்ந்திருந்தான். வீரலட்சுமி அதிர்ச்சியுடன் கணவனைப் பார்க்க அவரோ “பேசாமல் போய் உன் சின்ன மகளை மணவறையில் உட்காரச் சொல்… இல்லா விட்டால் விசத்தைக் குடித்து விடுவேன்” என்று தயாராய் வைத்திருந்த விஷப் பாட்டிலைக் காட்டி மிரட்ட ஆரம்பித்தார். 

“அப்பா… சிங்கத்தின் வாயில் தலையைக் கொடுக்கப் பார்க்கிறீர்களே. ஹரிஹரனுக்கு வாக்குக் கொடுத்து விட்டு ரூபிணியை உங்கள் அக்காள் மகனுக்குக் கட்டி வைக்க நீங்கள் நினைத்தது மட்டும் ஹரிஹரனுக்கு தெரிந்து விட்டால் உங்கள் கதி என்னவாகும் தெரியுமா?” தாரிணி தலையில் அடித்துக் கொண்டாள். 

“அக்கா… பேசாமல் இரு.. அப்பா.. நான் இன்னொருவர் பக்கத்தில் மணவறையில் போய் உட்கார மாட்டேன். உங்களுக்கு ஹரிஹரனைத் தெரியாது. உங்கள் எண்ணம் ஒரு நாளும் நிறைவேறாது…” ரூபிணி அழுத்தமாய் கூறினாள். 

“அது உன் அப்பாவிற்குப் புரிந்தால் ஏன் இப்படி அமெச்சூர் தனமாய் வில்லத்தனம் செய்யப் போகிறார்…” என்ற குரலைக் கேட்டு ஆனந்தத்துடன் திரும்பிப் பார்த்தாள் ரூபிணி. ஹரிஹரன் நின்று கொண்டிருந்தான். அவன் கையில் துப்பாக்கி இருந்தது. வாசலில் நின்று கொண்டிருந்த முரடர்களை ஹரிஹரனின் ஆட்கள் கட்டி வைத்திருந்தனர். கோவில் முழுவதும் ஹரிஹரனின் ஆட்களால் சூழப்பட்டிருந்தது 

ஹரிஹரன் மணமேடைக்கு வந்தான். பலி ஆடு போல் நடுங்கிக் கொண்டிருந்த ரெங்கநாதனின் அக்காள் மகனைப் பார்த்து, 

“எழுந்திருடா…” என்று அதட்டினான். அவன் தப்பித்தேன்.. பிழைத்தேன் என்று ஓடி விட்டான். ஹரிஹரன் மணவறையில் அமர்ந்து மாலையைப் போட்டுக் கொண்டான். ரூபிணியை பார்வையால் அழைத்தான். அவள் தயங்காமல் வந்து அவன் அருகே அமர்ந்து கொண்டாள். 

ரூபிணியின் ஆசைப்படி அவளது ஊரில்.. பெருமாள் கோவிலில்… அவளைப் பெற்றவர்கள்.. அவளுடன் பிறந்தவர்கள்.. அவளது சொந்தக்காரர்கள் முன்னிலையில் ஹரிஹரன் ரூபிணியின் கழுத்தில் மூன்று முடிச்சுப் போட்டு தாலியைக் கட்டினான். 

விழுப்புரத்தில் அவனது மாளிகை போன்ற வீட்டில் முதலிரவில் அவனது மனைவியாக அவன் கரங்களுக்குள் அடங்கினாள் ரூபிணி. போராட்டத்தை மட்டுமே அது வரை அறிந்த ஹரிஹரன். அவனைக் காதலித்தவளை அன்று அறிந்து கொண்டான்… போர்க்குணம் கொண்டவனை தன் நெஞ்சத்திலே கொண்டாடிய அந்தப் பேதை அவனது நெஞ்சத்தை மஞ்சமாக்கி துயில் கொண்டாள். இனி அவன் அவளது பொறுப்பு… தாயாய்.. தோழியாய்… காதலியாய் மனைவியாய் அவனை மடிதாங்க அவள் வந்து விட்டாள். ஹரிஹரன் என்னும் சிங்கம்.. சிறு மயிலின் கண்ணசைவில் கட்டுண்டு விட்டது.

-முற்றும்-

– நெஞ்சமடி நெஞ்சம் (நாவல்), முதற் பதிப்பு: ஜூன் 2010, அறிவாலயம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *