கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 30, 2015
பார்வையிட்டோர்: 16,973 
 

பாயின் மீது புரண்டு புரண்டு படுத்துக்கொண்டிருந்தாள் நந்தினி. பக்கத்தில் உள்ள சர்ச்சில் இருந்து மணி அடிக்கும் சத்தம் கேட்டது. இரண்டு தடவை அடித்து விட்டு அது ஒய்ந்தது. மணி இரண்டாகி விட்டதா? ஐயோ இன்னும் கொஞ்ச நேரத்தில் பொழுது விடிய ஆரம்பித்து விடும். அதுவரைக்கும் இப்படித்தான் பாயில் புரண்டுக் கொண்டிருக்க வேண்டுமா? என மனது சந்தோஷத்துடன் அலுத்துக் கொண்டது. வானத்தில் மேகம் மிதப்பது போல அவளது மனம் சந்தோஷத்தில் மிதந்து கொண்டு இருந்தது. சந்தோஷத்தில் தூக்கம் வராமல் புரண்டு கொண்டு இருப்பது கூட ஓர் இனிய அவஸ்தையாகத்தான் தோன்றியது. அதற்கு காரணம், அவளது பீரோவில் வெல்வெட் பெட்டியில் தூங்கிக் கொண்டிருக்கும் அடுக்குமாலை. இதுநாள் வரைக்கும் இரவில் தூக்கம் வராமல் நந்தினி பாயைப் பிறாண்டிக் கொண்டு இருந்தாள் என்றால், அது ஏதாவது மனக்கவலையின் காரணமாகத்தான் இருக்கும். ஏன் விடிகிறதோ என்றுதான் கவலைப்பட்டிருக்கிறாளே தவிர, எப்போது விடியும் என்று ஆவலுடன் எதிர் பார்த்து இதுவரை காத்திருந்ததில்லை. ஆனால் இன்றுதான் விடியலை ஆவலுடன் எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறாள்.

அடுக்கு மாலை

பக்கத்தில் படுத்திருக்கும் கணவன் கணேசனைப் பார்த்தாள். அவன் இவளின் உணர்வுகள் எதையும் தெரிந்து கொள்ளாதவனாய் நித்ராதேவியின் இறுக்கமான அணைப்பில் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தான். மெதுவாக எழுந்தாள். பீரோவைத் திறந்தாள். உள்ளே இருந்த சிகப்பு கலர் பெட்டியை ஒரு குழந்தையைத் தூக்குவது போல தூக்கினாள். மெதுவாக பெட்டியை திறந்து பார்த்தாள். உள்ளே அந்த இருட்டிலும் பளபளவென மின்னிக் கொண்டு இருந்தது அவளின் நீண்ட நாள் கனவான அடுக்கு மாலை. தூங்கும் குழந்தையை ரசிக்கும் தாயைப் போல அந்த மாலையை ரசித்துப் பார்த்தாள். குழந்தையை ரசிக்கும் தாய் அதன் தூக்கம் கலையாமல் அதை மெல்ல தொட்டுத் தடவி கொஞ்சுவதைப் போல அந்த மாலையை மெல்ல தடவிக் கொடுத்தாள். தனது முதல் குழந்தை பிறந்து, அதை தனது பக்கத்தில் நர்ஸ் கொண்டு வந்து போட்ட போது அவள் குழந்தையைப் பெருமிதத்துடன் தடவிப் பார்த்த போது மனது எவ்வளவு சந்தோஷத்தில் துள்ளியதோ, அதே உணர்வுதான் இப்போதும் ஏற்பட்டது.

நாளை காலை எழுந்தவுடன் குளித்துவிட்டு இந்த மாலையைப் போட்டுக் கொண்டு கோயிலுக்குப் போக வேண்டும். பக்கத்து வீட்டு கமலா, எதிர்த்த வீட்டு மேரி அக்கா, ஏன் இந்த தெருவில் உள்ள எல்லாருமே இதைப் பார்த்து விட்டு விசாரிப்பார்கள். என்னல்லாம் கேப்பாங்க. என்ன பதில் சொல்லலாம் என நினைத்துப் பார்க்கும் போதே மனம் முழுவதும் சந்தோஷம் புகை பரவுவது போல பரவியது.

அவளது எத்தனை வருடக் கனவு இன்று நனவாகி இருக்கிறது. அவளது உடல் இங்கே இருந்தாலும் மனம் பல வருடங்கள் முன்னோக்கி சென்றது.

முதன் முதலில் அடுக்கு மாலையை தனது தோழி கல்பனாவின் கல்யாணத்தின் போதுதான் பார்த்தாள். மூன்றடுக்கு மாலை. அந்த ஒரு மாலையைப் போட்டாலே போதும். கழுத்து நிறைந்தது போல இருக்கும். வேறு நகையே போட வேண்டாம். அவ்வளவு அழகாக இருந்தது. தனக்கும் இந்த மாதிரி ஒரு மாலை வேண்டும் என்று தோன்றியது. ஆனால் அந்த மாலை எத்தனை பவுன் என்று விசாரித்த பொழுது அவளுக்கு தூக்கி வாரிப் போட்டது. எனென்றால் அந்த ஒரு மாலை மட்டும் எட்டுப் பவுனாம். அவளது அப்பா அவளது கல்யாணத்திற்கே மொத்தம் எட்டுப் பவுன் நகைதான் போடுவதாக இருந்தார். அதில் மாப்பிள்ளைக்கு போடும் மோதிரமும் அடக்கம். இந்த லட்சணத்தில் அடுக்கு மாலைக்கு ஆசைப்படுவது வீண் என்பது நந்தினிக்கு நன்றாகவே தெரிந்தது. ஆனாலும் எப்படியாவது இந்த மாலையை வாங்கி தனது கழுத்தில் போட வேண்டும் என்பது அவளது தீராத ஆசையாக மனதில் தங்கி விட்டது.

அவளது கணவனுக்கோ ஒரு தனியார் நிறுவனத்தில் கிளார்க் உத்தியோகம். வரும் வருமானம் வாய்க்கும் கைக்குமே சரியாக இருந்தது. ஆனாலும் தூங்கும் எரிமலைக்குள் சுழன்றுக் கொண்டிருக்கும் நெருப்பு குழம்பு போல அவளது மனதில் எப்படியாவது அடுக்கு மாலை வாங்க வேண்டும் என்ற ஆசை சுழன்று கொண்டே இருந்தது.

வீட்டுச் செலவை என்னதான் சுருக்கினாலும் மாதம் நூறோ, இருநூறோ மிச்சம் பிடிக்க முடிந்தது. தீபாவளி சமயத்தில் அலுவலகத்தில் கொடுக்கும் போனசும், தீபாவளி ஜவுளி வாங்கவே சரியாக இருந்தது. காய்கறி இல்லாமல் சமைப்பது எப்படி… சிக்கனமாக சமைப்பது எப்படி… என்று முப்பது வகை சமையலுக்கான புத்தகம் எழுதும் அளவிற்கு வீட்டு செலவுகளைக் குறைத்தாள். ஆனாலும் சாண் ஏறினால் முழம் சறுக்கியது அவளுக்கு.

பிறகு தனது கணவரிடம் கெஞ்சிக் கூத்தாடி பக்கத்தில் உள்ள கார்மெண்ட்ஸ் ஒன்றிற்கு வேலைக்குப் போக சம்மதம் வாங்கினாள். தனது சம்பளத்தில் மாதம் ஒரு கிராம் தங்கமாவது வாங்கியே தீர வேண்டும். ஒரு மாசத்திற்கு ஒரு கிராம் வாங்கினால், ஒரு வருசத்திற்கு ஒன்றரைப் பவுன் வாங்கிடலாம். இப்படியே தொடர்ந்து வாங்கினால் ஆறு வருசத்தில் ஒன்பது பவுன் வாங்கிடலாம். அத அப்படியே கொண்டு போய் ஆசாரிக்கிட்டே கொடுத்து அடுக்கு மாலை பண்ணிரலாம். எக்ஸ்ட்ரா இருக்கிற ஒரு பவுன் சேதாரத்துக்கு சரியாக இருக்கும் என கணக்குப் போட்டுப் பார்த்தாள்.

அய்யோ இன்னும் ஆறு வருஷம் காத்திருக்க வேண்டுமா? என்ற மலைப்பு ஒரு புறம் எட்டிப் பார்த்தது. அப்புறம் ஆறுவருஷம் ஆறுநிமிஷத்திலே ஓடிப்போய் விடும். இப்பதான் நாம் இரட்டை சடை போட்டுக்கிட்டு ஸ்கூலில் அடியெடுத்து வச்ச மாதிரி இருக்கு. அதுக்குள்ளே காலேஜை முடிச்சிட்டு இப்ப கல்யாணம் ஆகியே இரண்டு வருஷம் முடியப் போகுதே… நாள்தான் எவ்வளவு வேகமா ஓடுது… அதே மாதிரி இந்த ஆறு வருஷமும் கண்முடி திறப்பதற்குள் ஓடி விடும் என்று தன்னைத் தானே சமாதானப்படுத்திக் கொண்டாள்.

ஆனால் அவள் நினைத்த மாதிரி ஆறுவருஷத்திற்குள் தேவையான தங்கத்தைச் சேர்க்க முடியவில்லை. இடையில் இரண்டு குழந்தைகள் வேறு பிறந்து, அதற்கான பேறுகால லீவு, பேறுகால லீவு முடிந்து வேலைக்குப் போனாலும், குழந்தைகளுக்கு பால், மருந்து என குழந்தைகளுக்கான செலவுகளே மூன்று வருடங்களுக்கு இழுத்து விட்டது. ஒரு மாதத்திற்கு ஒரு கிராம் வாங்க வேண்டும் என்று நினைத்தாலும், சில மாதங்கள் வேறு செலவு முளைத்து விடும். ஆக கஷ்டப்பட்டு எப்படியோ பன்னிரண்டு வருஷத்திற்குள் ஒன்பது பவுனைச் சேர்த்து விட்டாள். ஆசாரியிடம் தங்கத்தைக் கொடுத்து மாலை செய்யச் சொல்லலாமா அல்லது கடையில் போய் ரெடிமேடாக நகை வாங்கலாமா என யோசித்தாள். ஆசாரியிடம் தங்கத்தைக் கொடுத்துவிட்டு காத்திருக்க விருப்பமில்லை. இதுவரை காத்திருந்த அவளால் இனியும் காத்திருக்க முடியும் என்று தோன்றவில்லை. எனவே கடையிலேயே போய் அவள் ஆசைப்பட்ட அடுக்குமாலையை வாங்கிக் கொண்டு வந்து விட்டாள். முதலில் அதை சாமியின் முன்பு வைத்து விட்டாள். ஆனால் கொஞ்ச நேரம் ஆனதும் பயம் வந்து விட்டது. அய்யோ யாராவது எடுத்துக் கொண்டு போய்விட்டால் என்ன பண்ணுவது என்ற எண்ணம் வரவும், அதை எடுத்து பீரோவில் வைத்து பூட்டிய பிறகே மனசு நிம்மதி ஆனது.

வழக்கமாக காலையில் இன்னும் கொஞ்ச நேரம் தூங்கமாட்டமா? என்ற எண்ணம் தலை தூக்கும். ஆனால் இன்று மிக உற்சாகமாக எழுந்தாள். காலையில் இட்லி பண்ணும் போது, கூட கொஞ்சம் கேசரியும் கிளறிக் கொண்டாள். இன்றைய பொழுது இனிப்புடன் ஆரம்பிக்க வேண்டும் என்று கேசரியில் சற்று தாரளமாகவே நெய்யும், சர்க்கரையும் போட்டு கிளறினாள்.

அடுக்குமாலை போடும் போது பட்டுப் புடவை கட்டினால்தான் நன்றாக இருக்கும் என தனது கல்யாணப் பட்டை முதல்நாளே எடுத்து அயர்ன் பண்ணி வைத்து விட்டாள். அதை உடுத்துவதற்காக வெளியே வைத்து விட்டு குளிக்க கிளம்பினாள்.

குளித்து விட்டு வெளியே வரும் போது, மாமனார் ரூமில் இருந்து அலறும் சத்தம்.

என்னவென்றுப் பார்த்தபோது நெஞ்சைப்பிடித்துக் கொண்டு வலியினால் துடித்துக் கொண்டிருந்தார்.

ஆஸ்பத்திரியில் கொண்டுப் போய் சேர்த்தபோது, ஈ.சி.ஜி. எடுக்கணும். ஆஞ்சியோ எடுக்கணும். உடனடியா ஐம்பதாயிரம் கட்ட வேண்டும் என்று சொல்லி விட்டார்கள். கணேசனுக்கு என்ன பண்ணுவது என்றே தெரியவில்லை. ஐம்பதாயிரம் எப்படிப் புரட்ட? ஏதோ நாலாயிரம், ஐயாயிரம் என்றால் கூட யாரிடமாவது கடன் கேட்கலாம். பத்தாயிரம் வரை கூட ஆபிஸில் கேட்டு வாங்கலாம். ஆனால் ஐம்பதாயிரம் பணத்திற்கு என்ன பண்ண என்று கையை பிசைந்து கொண்டு இருக்கும் போது, நந்தினி,

“”கவலைப்பட வேண்டாங்க. பணத்துக்கு நான் வழிசொல்றேன். நான் புதுசா வாங்கியிருக்கிற அடுக்குமாலையை அடவு வைங்க. அவசரத்துப் பயன்படாத நகை இருந்துதான் என்ன பிரயோசனம்? இப்ப மாமாவை காப்பாத்தணும்” என்று மாலையை அவனிடம் கொண்டு வந்து கொடுத்தாள்.

அடகு வைத்த நகையை மீட்பதற்காக மறுபடியும் வேலைக்குப் போக ஆரம்பித்தாள்.

நகையை மீட்டும் விட்டாள். அவள் கணவன் கணேசன் இவளிடம் வந்து,

“”நந்தினி ஆபிஸிற்கு சைக்கிளில் போக சிரமாயிருக்கு. இப்ப வயது வேற நாப்பதை தாண்டிட்டா… பழையபடி சைக்கிள் மிதிக்க முடியல. முட்டியெல்லாம் ரொம்ப வலிக்குது. அதனாலே ஒரு பைக் வாங்கலாம்னு நினைக்கிறேன். ஆபிஸில் வண்டிக்கு லோன் போடலாம்னு இருக்கேன்” என்று மெதுவாக இவளது தாடையை கொஞ்சலாக பிடித்தப்படி பேச ஆரம்பித்தான்.

“”லோன் போட்டா பணத்தை பிடிப்பாங்களே… இப்ப வர்ற வருமானத்திலே குடும்பம் நடத்துறது ரொம்ப சிரமமாயிருக்கு… இதுல லோனுக்கு வேற பணம் பிடிச்சிட்டா மிச்சமிருக்கிற பணத்துல எப்படி குடும்பத்தை ஓட்ட முடியும்?”

“”அதெல்லாம் ஏற்கெனவே யோசிச்சு வச்சிட்டேன். அடுத்த மாசம் எனக்கு இன்கிரிமெண்ட். அதனால சம்பளம் கூடும். அதை வச்சி லோனைக் கட்டிக்கலாம். உன்னையும் அப்படியே வண்டியிலே கொண்டுப் போய் உன் ஆபிஸில் விட்டிருவேன். நீயும் லொக்கு லொக்குன்னு அவதி அவதியா ஆபிஸிற்கு ஓட வேண்டாம். உடுத்தின சேலை மடிப்பு கலையாம சொகுசா ஆபிஸில் போய் இறங்கிடலாம்” என்று மேலும் ஆசை வார்த்தைகளை கூறினான்.

“”சரி உங்க இஷ்டம் வண்டி வாங்கிக்கோங்க…” என்று பச்சைக் கொடி காட்டினாள்.

“”ஆனா… அதுக்கு உன்னோட உதவியும் தேவை” என்று இழுத்தான்.

“”என்னோட உதவியா… நான் என்ன பண்ணனும்?”

“”அது வந்து வண்டிக்கு லோன் போட்டா… முழுப்பணமும் தரமாட்டாங்க… முக்கால்வாசிப் பணம்தான் தருவாங்க… மீதியை நாம கையில இருந்துதான் போடணும்”

“”அதுக்கு நான் என்னங்க பண்ணனும்?”

உன்னோட அடுக்குமாலையைக் கொடுத்தா, அத அடகு வச்சி மீதிப்பணத்தைக் கொடுத்திடுவேன். தீபாவளி போனஸ் போடுறப்ப மாலையை திருப்பித் தந்திடுவேன் என்று மிகவும் கொஞ்சலாகச் சொன்னான். நந்தினிக்கு நன்றாகவே தெரியும். தீபாவளி போனஸில் தனது நகையைத் திருப்ப முடியாது என்று. ஏனென்றால் அங்கு கொடுக்கும் போனஸ் புதுடிரஸ் எடுக்கவே பத்தாது. இந்த நிலையில் நகையை எப்படித் திருப்ப முடியும்? அவன் சொல்வது அவளைச் சமாதானப்படுத்த என்பது அவளுக்கு நன்றாகவே தெரிந்தது. ஆனாலும் தனது கணவன் கோரிக்கையில் நியாயம் இருந்ததால் மறுபடியும் நகையை அடகுக் கடைக்கு அனுப்பினாள்.

அதன் பிறகு நகை வீட்டிற்கு திரும்ப வருவதும், பையனின் காலேஜ் பீஸ் கட்ட, மாமியாருக்கு கண்ஆபரேசன் பண்ண, பொண்ணு வயசுக்கு வந்ததுக்கான ஃபங்சன் வைக்க என ஒவ்வொன்றுக்காக மறுபடியும் அடகு கடைக்குப் போவதும் வாடிக்கையாகி விட்டது. ஆனாலும் நந்தினிக்கு ஒரு நம்பிக்கை. “கிணத்து தண்ணீரை ஆத்து வெள்ளமா அடிச்சிட்டுப் போகப் போகுது. நகை எப்படியும் நம்மக்கிட்டதானே இருக்கு. இப்ப இல்லாட்டியும் என்னைக்காவது ஒரு நாள் நம்மக்கிட்ட வரத்தானே போகுது. அப்ப ஆசை தீரப் போட்டுப் பாத்துக்கலாம்’ என மனசை தேத்திக் கொண்டாள்.

அடுக்குமாலை தொடர்ந்து ஒரு வாரமாக வீட்டில் இருக்குது. இப்போதைக்கு அது அடகு கடைக்கு போற மாதிரி எந்த நிகழ்வும் ஏற்படவில்லை. இன்று சாயங்காலம் இதைப் போட்டுக் கொண்டு கோயிலுக்குப் போக வேண்டும் என்று நினைத்தாள். ஆனாலும் மனதிற்குள் ஒரு பயம் பூனை போல சுருண்டு படுத்திருந்தது. ஏனென்றால் அவளது அம்மாவும் நகை எதுவும் அணிந்து அவள் பார்த்ததில்லை. எப்போதும் எண்ணெய்ப் பிசுக்கால் கறுப்பு நிறத்திற்கு மாறிய மஞ்சள் கயிற்றைத்தான் அணிந்திருந்தாள்.

“”ஏம்மா உங்க வீட்டுல உனக்கு செயின் ஏதும் போடலியா? பக்கத்து வீட்டு அத்தையெல்லாம் எப்போதும் கழுத்தில ரெண்டு செயின் போட்டிருக்காங்களே… நீ ஏம்மா செயினே போடலை?” என்று மகள் கேட்டாள்.

“”நம்மள மாதிரி ரெண்டுக்கெட்டானா நடுத்தர வர்க்கத்திலே இருக்கவங்க நகை வாங்கிறது நாம போட்டு அழகுப் பார்க்கயில்லே. அவசரத்துக்கு அடவு கடையிலே கொண்டுப் போய் வைக்கத்தான்” என்று விரக்தியாய் பேசியது ஞாபகத்திற்கு வந்தது.

அது உண்மைதான் என நினைத்துக் கொண்டாள்.

சாயங்காலம் கோயிலுக்கு கிளம்பிய பொழுது, இவளது மகள் சாந்தியும்,

“”என்னம்மா கோயிலுக்கா போறே நானும் வர்றேம்மா… எனக்கும் வீட்டில் இருந்து போர் அடிக்குது… எவ்வளவு நேரம்தான் டிவியே பாத்துக்கிட்டு இருக்கிறது… காலாற எங்கயாவது வெளியில் போயிட்டு வந்தா நல்லாயிருக்கும்” என்று சொல்லிவிட்டு அவளும் கிளம்பினாள்.

எப்போதும் சுடிதார் போட்டாலும், கோயிலுக்கு போவதால், அன்று அழகாக பட்டுப் பாவடை, தாவணி கட்டிக் கொண்டு கிளம்பினாள்.

நந்தினி நல்ல அரக்குக் கலரில் பட்டுச் சேலையை எடுத்து கட்டினாள். அரக்கு கலரில் தங்க நகை எடுப்பாக தெரியும் என்ற எண்ணம். மாலையை எடுத்தாள். கழுத்தில் போடப் போனாள்.

“”அம்மா நான் போட்டிருக்கிற இந்த கரும்பச்சை பாவாடை தாவணிக்கு, இந்த மாலையைப் போட்டால் அழகாக இருக்குமே… எனக்கு போட்டு விடம்மா” என்று சாந்தி சொல்ல,

மாலையை எடுத்து அப்படியே சாந்தியின் கழுத்தில் மாட்டினாள் நந்தினி. அவளது கண்ணில் துளிர்த்த கண்ணீரை மகளுக்குத் தெரியாமல் துடைத்துக் கொண்டாள். அந்த கண்ணீர் தான் ஆசைப்பட்ட மாலையை போடவே முடியாமல் போய் விட்டதே என்ற கவலையினாலா அல்லது தான் ஆசைப்பட்டதை தன் மகளாவது போட்டு அழகுப் பாக்கிறாளே என்ற ஆனந்தத்தினாலா? என்பது அவளுக்கே புரியவில்லை.

– எஸ்.செல்வசுந்தரி (மார்ச் 2014)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *