வருவாள், காதல் தேவதை…

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: March 28, 2024
பார்வையிட்டோர்: 10,256 
 

(2012ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

அத்தியாயம் 21-25 | அத்தியாயம் 26-30 | அத்தியாயம் 31-35

அத்தியாயம்-26 

நான் மனிதர்களை மூன்று வகையாகப் பிரிக்கிறன். உலகத்தில் செயல்களை செய்து காட்டுபவர் சிலர்; செய்து காட்டும் செயலைப் பார்த்துக் கொண்டிருப்பவர் பலர்; என்ன நடக்கிறது என்றே அறியாமல் இருப்பவர் அஷ்கர் – பட்லர்.

“பிள்ளைக்கு கல்யாணம் பண்ணும்போது எல்லா அம்மாவும் மாறி போய்டுவாங்கன்னு கேள்விப் பட்ருக்கேன். ஆனா நீ கூட அந்த லிஸ்ட்டுல சேருவன்னு நா நினைச்சுக் கூடப் பார்த்ததில்லம்மா”

வீட்டுக்கு வந்த சற்றுநேரத்தில் பிரவீண் வேதனையோடு சொன்னான். சம்பத்தின் வீட்டிலிருந்து கிளம்பியது முதல் வீடு வந்து சேரும் வரை வழியில் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. பெண் பார்த்த இடத்தில் அம்மா போட்ட கண்டிஷனில் அவன் ஆடிப் போயிருந்தான். அம்மாவா இப்படி என்று திகைத்துப் போனான். பெண் வீட்டுக்காரர்களுக்கு முன்னிலையில் குறுக்கிட்டுப் பேசி அம்மாவை அவமானப்படுத்த அவன் மனம் இடம் கொடுக்காததால் தற்காலிகமாய் தன்னை ஊமையாக்கிக் கொண்டான். சங்கீதாவும் சம்பத்தும் அவனைப் பற்றி என்ன நினைத்திருப்பார்கள்! தாயின் முந்தானையில் மறைந்து கொண்டு வரதட்சணை கேட்கும் கோழையே என்று உள்ளுக்குள் நகைத்திருப்பார்களோ? நினைக்கும் போதே உடலும் மனமும் கூசியது. 

இத்தனை காலம் கஷ்டப்பட்டு சேர்த்து வைத்திருந்த நற்பெயரும், மதிப்பும் ஒரு வினாடியில் கரைந்து காணாமல் போய்விட்டது போலிருந்தது. ஒரு ஆணின் உண்மையான மதிப்பும் கௌரவமும், அவனுக்கு மனைவியாய் வரப்போகிறவள் அவனைப் பற்றி என்ன நினைக்கிறாள் என்பதில்தான் இருக்கிறது. அப்படிப் பார்த்தால் இந்நேரம் அந்த வீடும், சங்கீதாவும் அவனைப் புழுவாய் நினைத்து ஒதுக்கியிருப்பார்கள். இப்போதே இப்படி என்றால் பின்னால் நீ இன்னும் என்ன பாடு படுத்துவாய் என்று பயந்திருப்பாள் சங்கீதா. இந்த இடம் வேண்டாம் என்று அப்பாவிடம் சொன்னாலும் சொல்லியிருப்பாள். இதை விட ஒரு ஆணுக்கு வேறு என்ன அவமானம் வேண்டும். 

பிரவீண் உள்ளுக்குள் நொறுங்கிப் போனான். அந்த வேதனையோடுதான் வீட்டுக்கு வந்ததும் அம்மாவிடம் அப்படி சொன்னான். 

அம்மா மௌனமாய் அவனைப் பார்த்தாள். 

”ஏம்மா பேசாம இருக்க? நா சம்பாதிச்சு சேர்த்து வெச்சிருக்கறதெல்லாம் உனக்கு பத்தலையா? பத்தலன்னா என்கிட்டயே சொன்னா நானே இன்னும் அதிகம் சம்பாதிச்சு கொடுத்திருப்பேன் இல்ல? அதை விட்டுட்டு பெண் வீட்ல போய் என்னை காட்டி பேரம் பேசறயே நியாயமாம்மா…? இப்டி என்னைக் கேவலப்படுத்தவா இவ்ளோ நாள் கஷ்டப்பட்டு வளர்த்த..? இதை விட என்னை குப்பத்து புழுதியிலயே படிப்பு எழுத்து எதுவும் கொடுக்காம புரள விட்ருக்கலாமே. மஞ்சத் தண்ணி ஊத்தி மாலை போட்டு, குங்குமப் பொட்டு வெச்சு, கற்பூரம் காட்டி பலி கொடுக்கற ஆட்டோட நிலைமைதானா கடசீல எனக்கும்..?” 

“இதுக்கு மேல ஒரு வார்த்தை கூட பேசாதே… நிறுத்திடுடா பிரவீண்…”அம்மா கண்கள் பள பளக்க குறுக்கிட்டாள். மேற்கொண்டு அவனிடம் எதுவும் பேசாமல் விறுவிறுவென்று தன் அறைக்குச் சென்று கதவைத் தாளிட்டுக் கொண்டாள். 

பிரவீண் வேதனை மாறாமல், வேறு வேலையும் ஓடாமல் சோர்ந்து போய் சோபாவில் சாய்ந்து கொண்டான். நீங்களுமா பிரவீண்..? உள்ளுக்குள் சங்கீதா கிண்டலாகக் கேட்டுச் சிரிக்க கண்களை இருக மூடிக் கொண்டான். 

மொட்டை மாடியில் பிரம்பு சேரில் சாய்ந்து வானத்தை யோசனையோடு பார்த்துக் கொண்டிருந்த பெண்ணின் அருகில் வந்தார் சம்பத். காற்று மென்மையாய் வீசிக் கொண்டிருந்தது. மொட்டை மாடித் தொட்டிகளிலிருந்த மலர்களின் நறுமணம் காற்றில் கலந்திருந்தது. 

”என்னம்மா பலமான யோசனையோ?” அப்பாவின் குரல் கேட்டு சட்டென்று திரும்பினாள். 

“என்ன யோசனை..?” 

”ஒரே குழப்பமார்க்குப்பா?” 

“என்ன குழப்பம்..? எங்கிட்ட சொல்லு. தெளிய வெக்க முடியுதான்னு பார்க்கறேன்” 

“அவங்க நல்லவங்க தானாப்பா..?’ 

“உனக்கெப்டி தோணுது?” 

“நல்லவங்க மாதிரி தான் தெரியுது.ஆனா ஏம்பா அப்டி ஒரு கண்டிஷன் போட்டாங்க? அண்ணி வீட்ல அவங்களுக்கு குடுக்கறதெல்லாம் நானும் கொண்டு வரணும்னு சொல்றது சரியாப்பா..?’ 

“எனக்கென்னமோ சரின்னு தான் படுது” 

”உண்மையைச் சொல்லுங்கப்பா. குழப்பாதீங்க ” 

சம்பத் சிரித்தார். அவளை உற்றுப் பார்த்தபடி அவள் எதிரில் அமர்ந்தார். 

“கவலையே படாத நாங்க உனக்கு என்னல்லாம் கொடுத்துனுப்பணும்னு நினைச்சுட்ருக்கோமோ அதை விட ரொம்ப ரொம்ப கம்மியா தான் அந்த பொண்ணு கொண்டு வரப்போறா” 

“அதெப்டி சொல்றீங்க?” 

“எனக்குத் தெரியும்?” 

“எப்டி தெரியும்னு சொல்லுங்க” 

“எனக்குத் தெரியாதுன்னு நினைச்சு இந்த வீட்லு நிறைய காரியம் நடக்குதும்மா. எல்லாம் எனக்குத் தெரியும்னு பாவம் அவங்களுக்குத்தான் தெரியாது”

“ஓசில விசு படம் பாக்கறா மாதிரி. இருக்குப்பா. இப்டி குழப்பறீங்களே” 

சம்பத் அடக்க முடியாது சிரித்தார். 

“உனக்கு பையனைப் பிடிச்சிருக்குல்லம்மா? அப்புறம் மத்ததைப் பத்தி நீ ஏன் யோசிச்சு உடம்பைக் கெடுத்துக்கற?” 

”அவர் அப்டி பேசாம இருந்தது எனக்கு கஷ்ட்ட மார்ந்துதுப்பா. சீர் சினத்தி விஷயம் பேசும் போது மட்டும் ஏன் எல்லா ஆண்களும் சைலன்ட்டா ஆயிடறாங்கன்னு தெரியல” 

“பிரவீண் பாவம் சங்கீதா. உண்மையச் சொல்லப் போனா அவங்கம்மா அப்டி கேப்பாங்கன்னு அவனே எதிர் பார்த்திருக்க மாட்டான். அவன் முகத்துல அப்பொ ஏற்பட்ட தர்ம சங்கடத்தை நீ கவனிக்கலையா?” 

”ஓகே. பிரவீண் நல்லவராவே இருக்கலாம். ஆனா அவங்கம்மா அப்டி கேட்டது சரியா? இப்டி ஒரு பேரம் அவங்க பேசினதால அவங்களைப் பத்தின அபிப்ராயம் என் மனசுல குறைஞ்சில்லப் போகுது. அதுக்கப்பறம் எப்டி அவங்களோட கல்மிஷமில்லாம பழக முடியும்? நெஞ்சுல கசப்பும் நாக்குல தேனுமா என்னால் நடமாட முடியாதுப்பா. இந்த கல்யாணம் எனக்கு வேண்டாம்”. 

“அவசரப்படாதே சங்கீதா…நீ இப்பொ அவசரப்பட்டு, எங்கிட்ட சொன்னதை உங்கம்மாட்ட போய்ச் சொன்னா என் திட்டமெல்லாம் தவிடு பொடியாய்டும்” 

‘”திட்டமா?” சங்கீதா அவரை விழித்துப் பார்த்தாள். 

”ஆமாம்மா. திட்டம்தான். பணம் பணம்னு அலையற உங்கம்மாவுக்கு சில நிஜங்களைப் புரிய வெக்க நா போட்ட திட்டம்தான். வாழ்க்கைங்கறது பணத்தை நம்பியில்ல, மனசை நம்பி, நல்ல மனசுகளை நம்பின்னு அவ புரிஞ்சுக்கணும். அந்த சுஜிதா மேல எனக்கொண்ணும் வெறுப்பில்ல. எப்பொ ஆகாஷ் மனசை அவ கவர்ந்துட்டாளோ அப்பறம் நா அதுல குறுக்கிட விரும்பல. எவ்ளோ பெரிய கோடீஸ்வரங்கன்னு உங்கம்மாவேணா அவங்களைப் பார்த்து வாயப்பிளக்கலாம். சம்பந்தம் வெச்சுக்க பெருமைப்படலாம்.” 

“அதே பெருமை அவங்களுக்கும் இருக்கணும் இல்ல? ஒரு வேளை இவங்க காதலுக்கு அந்த பொண்ணோட வீடு எதிர்ப்பு தெரிவிச்சுதுன்னா இந்த பொண்ணு வீட்டை விட்டு வெளிய வரலாம். அப்டி வெறுங்கையோட வெளில வர பொண்ணை உங்கம்மா சிரிச்ச முகத்தோட வரவேற்று ஆகாஷ்க்கு கட்டி வெப்பான்னு நினைக்கறயா? நிச்சயம் மாட்டா. உண்மையைச் சொல்லணும்னா, இப்பவே அந்த பொண்ணு வீட்டை பகைச்சுக் கிட்டுதான் நம்ம வீட்ல வந்து தங்கி இருக்குன்னு நா சொன்னா நம்புவயா நீ…?” 

சங்கீதா ஆச்சர்யமாக அப்பாவைப் பார்த்தாள். 

“நிஜம்மாவாப்பா..? இதெப்டிப்பா உங்களுக்குத் தெரிஞ்சுது? ஆகாஷ்க்கு இது தெரியுமா?” 

”தெரியும். அன்னிக்கு அவங்கப்பாவை வழில் பார்த்ததாகவும், அவங்கம்மாக்கு உடம்பு சரியில்லன்னு அவ போயிருக்கறதாவும் ஆகாஷ் வந்து சொன்னானே நினைவிருக்கா?” 

“ஆமா…” 

”அன்னிக்கு ராத்திரியே அந்த பொண்ணு திரும்பி வந்துட்டா. அதுவரை நிலை கொள்ளாம தவிச்சுட்ருந்தான் ஆகாஷ். அவளைப் பார்த்ததும் வாசலுக்கு ஓடினான். தோட்டத்து பக்கம் நின்னு அவங்க பேசினதையெல்லாம் மாடில இருந்த நான் எதேச்சை கேட்டதை பாவம் அவங்க கவனிக்கல. எனக்கு ஒரே கவலையாய்டுச்சு. ஒரு வேளை அந்த பொண்ணு வெறுங்கைய வீசிட்டு வந்தாலும் உங்கம்மா இப்பொ காட்டற இதே அன்பை, மரியாதையை அந்த பொண்ணுக்கு கொடுக்கணும் இல்லையா? அதான் என் கவலை. இந்த விஷயம் தெரிஞ்சா நிச்சயம் உங்கம்மா குணம் மாறும். ஏமாந்துட்டமேன்னு கொதிச்சு போவா. அந்த பொண்ணை கட்டிக்கக் கூடாதுன்னு ஆகாஷை நச்சரிப்பா.”

“ஆனா அவன் கேக்க மாட்டான். நம்ம எல்லாரையும் உதறிட்டு வெளில போவான் அவளைக் கூட்டிக்கிட்டு. இதான் நடக்கும். இது நடக்கக் கூடாதுன்னா உங்கம்மாக்கு உண்மை தெரியணும், பணம் முக்கிமில்லன்னு புரிஞ்சுக் கிட்டு அவ மனுஷங்களை நேசிக்க ஆரம்பிக்கணும். ஆகாஷோட காதலை மட்டும் மதிக்கத் தெரிஞ்சுக்கணும். அந்த பொண்ணை பிடிச்சுதோ பிடிக்கலையோ நல்ல படியா நடத்தணும். இதுக்காக நா போட்ட திட்டம்தான் இது. பிரவீணோட அம்மகிட்ட இப்டி கேக்கச் சொல்லி சொன்னதே நான்தான். எனக்காகத்தான் அவங்க தன்பேரை கெடுத்துக்கறா மாதிரி நாடகமாடினாங்க. ஏன் நா சொல்லி அவங்க கேக்கணும்னு உனக்கு தோணினா அதுக்கும் பதில் இருக்கு. அவங்க புருஷன் என் பால்ய கால நண்பன்தான். அந்தம்மா கஷ்டப் பட்டப்பொ என்னால முடிஞ்ச சில உதவிகளை நானும் செய்திருக்கேன். அவங்க பிள்ளைதான் பிரவீணங்கற விஷயம் எனக்கே சமீபத்துலதான் தெரிஞ்சுது. அவங்க வீட்டுக்கு கல்யாண விஷயம் பேசப் போனப்பொ உங்கம்மாவைப் பத்தி மனசு விட்டுப் பேசி நா சொல்றபடி கேக்கச் சொன்னேன். பிள்ளைக்குத் தெரிஞ்சா வருத்தப்படுவான்னு அவங்க தயங்கினாங்க ஒரு நல்ல காரியத்துக்காகத்தானே இந்த நாடகம்னு, நாந்தான் சமாதானப்படுத்திட்டு வந்தேன். உண்மைல அவங்க எதுக்கும் டிமாண்டு பண்ணவும் இல்ல.” 

”பண்ணப்போறதும் இல்ல. இதை ஒரு காரணமா வெச்சு உங்கம்மா சுஜிதாவோட அப்பா அம்மாகிட்ட கல்யாணம் பேசணும். பேசினாதான் அவளுக்கு உண்மை தெரியும். அவங்களுக்கு இந்த கல்யாணத்துல இஷ்டமில்லங்கறதையும் எலும்புத் துண்டு மாதிரி, நம்ம அந்தஸ்துக்கு இது போதும்னு அவங்கப்பா போடப்போற நகையும் குடுக்கற பணமும்தான் சுஜிதா கொண்டு வரப்போற சீர்னு அவ தெரிஞ்சுக்கணும். முதல்ல பிரச்சனை வந்தாலும் எல்லா பிரச்சனையும் அவங்க கல்யாணத்துக்கு முன்னாலயே தீரணும். உங்கம்மா தன் எதிர்ப்பார்ப்புகளை நிறுத்தி எல்லாத்துக்கும் தயாரா தன்னை மாத்திக்கணும். அந்த பொண்ணோட ஆகாஷ் இதே வீட்ல சந்தோஷமா வாழணும். இதான் என் கவலை. இதுக்காகத்தான் என் திட்டம்.” 

அப்பா நிறுத்த, சங்கீதா இமைக்க மறந்து அமர்ந்திருந்தாள். சுஜிதாவை பிடிக்காவிட்டாலும் பிள்ளையின் காதலை மதிக்க நினைக்கும் அவருடைய பண்பில் நெகிழ்ந்து நின்றாள். 

“இப்பொ குழப்பமெல்லாம் தீர்ந்து தெளிஞ்சாச்சா?” அப்பா அவளை அசைத்ததும் வெட்கத்தோடு சிரித்தாள். 

”இன்னும் கூட ஒரு சந்தேகம் இருக்கே” 

“என்ன அது?” 

“பூவோட சேர்ந்த நாரும் மணக்கும்னு சொல்லுவாங்க. இவ்ளோ வருஷம் உன்னோட வாழ்ந்தும் அம்மா மட்டும் எப்டி மணக்காம அதே குணத்தோட இருக்காங்க?” 

”நா எப்டி நாறிப்போகாம இருக்கேனோ அதே மாதிரிதான்” அப்பா குறும்பாகச் சொல்லி சிரிக்க சங்கீதா அடக்க முடியாமல் சிரித்தாள். 

”உங்கம்மாவை ரொம்பவும் தப்பா நினைச்சுடக்கூடாது சங்கீதா. பண விஷயத்துல மட்டும்தான் அவ பலவீனமானவ. பணமும் பங்களாவும், நகையும்,பட்டுப்புடவையும், பகட்டு காரும்தான் மத்தவங்களோட மரியாதையையும் மதிப்பையும் சம்பாதிச்சுத் தரும்னு தப்புக்கணக்குப் போட்டு வெச்சுட்ருக்காளே தவிர அடி மனசுக்குள்ள அவளும் நல்லவதான். அந்த தப்புக்கணக்கை புரிஞ்சுக்கிட்டு சரி செயிதுட்டான்னா நம்பளை விட அவதான் நல்லவ. புரிஞ்சுதா..?” 

“புரியுதுப்பா” 

”குட்… இப்பொ நா போறேன். நீ உன் கனவு டூயட்டை கன்டின்யூ பண்ணு. பிரவீண் கோச்சுக்கப் போறான்” அவர் கீழே இறங்கிச்சென்றார். 

சரண்யா வீட்டிற்கு வரும்போது வீட்டில் யாருமில்லை. வீடு பூட்டியிருந்தது. அடுத்த வீட்டுப் பெண்மணி இவள் தலையைக் கண்டதும் சாவி எடுத்துக் கொண்டு வந்தாள். 

”உங்கக்காக்கு ஏதோ உடம்பு முடியல போலருக்கு. டாக்டர்கிட்ட போறதா சொல்லிட்டு போனாங்க.” 

“எந்த டாக்டர்..?” 

“அது தெரியலையேம்மா. நீ வந்தா சாவி மட்டும் குடுத்துடச் சொன்னாங்க.” 

சரண்யா கவலையோடு கதவு திறந்து உள்ளே வந்தாள். வீட்டில் எல்லாம் போட்டது போட்டபடி இருந்ததைப் பார்த்தால் ஏதோ அவசரமாய் போனாற்போலிருந்தது. சாமான்களை ஒதுக்கி வீட்டை பெருக்கி துடைத்தபடியே அக்காவுக்கு ஒன்றும் இருக்கக் கூடாதே என்று வேண்டிக் கொண்டாள்.எட்டு மணிக்கு சத்யாவின் புருஷன் மட்டும் திரும்பி வந்தான். 

“அக்காக்கு என்ன உடம்பு?’ சரண்யா அவசரமாய் கேட்டாள். சரவணின் முகம் வேதனையில் சுருங்கியது. கண்ணில் நீர் துளிர்த்தது. 

“என்னாச்சு..?” 

சரண்யா பதறினாள். அப்படியும் இருக்குமோ என்று மனசு நடுங்கியது. 

“அதென்னமோ தெரியல சத்யா… ஏன்னு புரியல” 

“மறுபடியுமா…?” சரண்யாவின் குரல் நடுங்கியது. 

“அதேதான். இந்த முறை இன்னும் சீக்கிரமாவே கலஞ்சுடுச்சு. கர்ப்பப்பை புண்ணாகியிருக்கு. டாக்டரம்மாவே கவலைப்படறாங்க. டெஸ்டுக்கு குடுத்திருக்காங்க. நாளைக்குதான் எதுவும் எதுவும் சொல்ல முடியும்ங்கறாங்க!” 

சரண்யாவுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. எத்தனை பேருக்கு எவ்வித பிரச்சனையுமின்றி திரும்பிப் பார்ப்பதற்குள் குழந்தை பிறக்கிறது. இதில் கூடவாதன் உடன் பிறந்தவள் சிரமப்பட வேண்டும்? அடுத்தடுத்து இப்படி கரு தங்காமல் கலைந்து கொண்டிருப்பது உடம்புக்கு நல்லதல்லவே. எவ்வளவு சக்தி வீணாகிறது..! ஏன் இப்படி சோதனைகளாகவே கொடுக்கிறது தெய்வம்? 

இனம் புரியாத வேதனையோடு அவனுக்கு காப்பியும் டிபனும் கொண்டு வந்து கொடுத்தாள். 

சரவணன் காப்பி மட்டும் எடுத்துக் கொண்டான். பசியில்லை என்று டிபன் வேண்டா மென்றான். மன வேதனையோடு இருப்பவனை வற்புறுத்தாது டிபன் தட்டை மேடையில் வைத்து மூடி விட்டு வந்தாள். 

“நா வேணா போய்ட்டு அம்மாவை வீட்டுக்கு அனுப்பிடறேனே. பாவம் அவங்க ஏன் சிரமப்படணும்?” 

”அம்மாவும் அதான் சொன்னாங்க. நீ கிளம்பு” 

அடுத்த பத்து நிமிடத்தில் சரவணன் அவளையும் அழைத்துக் கொண்டு கிளம்பினான். 

தங்கையைப் பார்த்ததும் கண் கலங்கினாள் சத்யா. 

”பரவால்லக்கா. எல்லாம் நல்லதுக்குன்னு நினைப்போம். உடம்பு முதல்ல சரியாகட்டும். ஏதோ காரணத்தோடதான் கடவுள் இதை செய்திருப்பான். அடுத்தாப்பல இப்டியாகாது. கொழு கொழுன்னு ஒரு குழந்தை நம்ம வீட்லயும் பிறக்கும் பார்” 

“அப்பொ நாங்க கிளம்பவா சரண்யா… நீ பார்த்துப்ப இல்ல? நாங்க காலேல வரோம்” 

சரவணன் அம்மாவை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு கிளம்பினான். 

மறுநாள் எட்டு மணிக்கெல்லாம் காப்பி டிபனை எடுத்துக் கொண்டு வந்து விட்டார்கள். பத்து மணிக்கு டாக்டர் சரவணனை அழைத்தாள். அவனோடு அத்தையும் கூடச் சென்றாள். சற்று நேரத்தில் திரும்பி வந்தவர்கள் முகம் பேயறைந்தாற்போல் வெளிறிப் போயிருந்தது. 

அத்தியாயம்-27 

பிறப்பு, இழப்பு, மரணம்… இவைகளைத் தடுப்பதற்கு மருத்துவம் இல்லை. அதனால் இவற்றுக்கு நடுவே இருக்கும் இடைவேளைகளை ரசிக்கக் கற்பது நன்று. – ஜார்ஜ் சான்டியானா. 

“ஏண்டா ஆகாஷ் அவங்களுக்கு ஏதாவது பதில் சொல்ல வேணாமா? அவங்க வந்துட்டு போய் நாலஞ்சு நாளாகுதே” வெளியில் கிளம்பிக் கொண்டிருந்தவனை நிறுத்திக் கேட்டாள் சாரதா. 

“என்ன சொல்லப்போற?” 

“எனக்கென்னமோ இந்த இடம் சரிப்படும்னு தோணல.”

”உம் பொண்ணுக்கு பிடிச்சிருக்கே” 

“அப்படின்னா அவங்க கண்டிஷனுக்கு ஒத்துக்கச் சொல்றயா?” 

“இதோ பாரும்மா இதையெல்லாம் முடிவு செய்ய வேண்டியது நீயும் அப்பாவும்தான். நீங்க என்ன முடிவெடுத்தாலும் எனக்கு ஒண்ணுமில்ல. அப்பாகிட்ட நீ இது பத்தி பேசினயா?”

சாரதா இல்லையென்பது போல் உதடு பிதுக்கினாள். “எங்கே… அந்த மனுஷன்தான் இப்பல்லாம் எங்கூட நின்னு பேசறதேல்லயே. அப்டியே கேட்டாலும் அவர் நம்ம பக்கமா பேசப் போறார். அவங்க கேக்கறது நியாயம்னு அன்னிக்கு அவங்க எதிர்க்கயே சொன்னவர்தானே. இப்பவும் அதையேதான் சொல்லுவார். 

“நீயா எதையாவது கற்பனை பண்ணி பேசாதம்மா. முதல்ல அப்பாவோட பேசு..அவர் என்னதான் சொல்றார்னு கேளேன். அதுக்கப்பறம் நாம ஒரு முடிவுக்கு வருவோம்” சொல்லிக் கொண்டே காரில் ஏறியமர்ந்தான் ஆகாஷ். 

சாரதா யோசனையோடு உள்ளே வந்தாள். சம்பத் மாடியில்தான் இருந்தார். போய்ப் பேசினால்தான் என்ன? ஒரு தீர்மானத்தோடு மாடி ஏறினாள். பேப்பர் படித்துக் கொண்டிருந்தவர் அவளைக் கண்டதும் அதை மடித்து டீபாய் மீது வைத்துவிட்டு என்ன என்பது போல் அவளைப் பார்த்தார். 

“அந்தம்மாக்கு என்ன பதில் சொல்லி அனுப்பறது?”

“பரவால்லயே! எங்கிட்ட கன்ஸல்ட் பண்ற!” 

“குதர்க்கமெல்லாம் வேண்டாம். வரவர உங்க பேச்சு நடவடிக்கை எதுவும் சரியில்ல. அப்டி என்ன நா உங்களுக்கு கெடுதல் பண்ணிட்டேன்னு விலகி விலகிப் போறீங்க?” 

”நா விலகிப் பேறேன்? உன் நடவடிக்கைகள் என்னை விலகிப் போகச் சொல்லுது. பணத்துக்கும் பகட்டுக்கும் மரியாதையை அளவுக்கதிகமா கொடுக்காதே, மனுஷங்களை நீ இழந்துடுவன்னு எவ்வளவோ முறை எப்டி எப்டியெல்லாமோ சொல்லிப் பார்த்துட்டேன். நீ கேட்டாதானே? பணம்ங்கற அந்த மூணெழுத்துலயே தொங்கிட்டு நிக்கற! அதுதான் பரமசுகம்னு தீர்மானம் பண்ணிட்ட. பணம்தான் எல்லாம்னு உனக்கு தோண்றா மாதிரி அந்தம்மாக்கும் தோணுது போலருக்கு. அதை எப்டி தப்புன்னு சொல்ல முடியும்? தப்புன்னு சொல்ல நினைச்சா முதல்ல நம்பளை திருத்திக்கணும், அப்பறம் சொல்லணும்.” 

“இருந்தாலும் நா என்ன அந்தம்மாவை மாதிரி பேராசையா படறேன்? இல்ல கண்டிஷன் போடறேனா?” 

“இந்த ஆசையே தப்புங்கறேன். இதுல பேராசை என்ன சின்ன ஆசை என்ன?” 

“இப்ப அதைப்பத்தி என்ன..? அந்தம்மாக்கு என்ன பதில் சொல்லலாம்னு சொல்லுங்க?” 

“என்ன சொல்லலாம்னு நீ நினைக்கற?” 

“எனக்கென்னமோ. இந்த இடம் சரிப்படும்னு தோணல.”

”அப்பொ?” 

”வேணாம்னு சொல்லிட வேண்டியது தான்” 

“இதைச் சொல்றதுக்கு எங்கிட்ட கலந்தாலோசிப்பானேன்? சொல்லிட வேண்டியதுதானே?” 

”நா ஏன் சொல்லணும்? நீங்கதானே இந்த வரனைக் கூட்டிட்டு வந்தீங்க. சரிப்படாதுன்னு நீங்கதான் அவங்ககிட்ட சொல்லணும்” 

”எனக்கு சரிப்படும்னு தோணுதே” 

“அப்படின்னா அவங்க என்ன கேட்டாலும் குடுக்கத் தயாரா நீங்க?” 

“அவங்க அப்டி ஒண்ணும் பெரிசா கேட்டுடலையே உங்க மருமக என்னல்லாம் கொண்டு வராளோ அதை மகளுக்கும் கொடுத்தனுப்புங்க போதும்ங்கறாங்க அவ்ளோதானே?” 

“அவ்ளோதானேன்னு சாதாரணமா சொல்லிட்டீங்க! சுஜிதா கோடீஸ்வரி. நாலஞ்சு கோடிக்கு கூட அவங்கப்பா அவளுக்கு சீர் செய்வார். நம்பளால் முடியுமா?” 

“நீ ஏன் சுஜிதாகிட்ட சீரை எதிர்பார்க்கற? எதுவும் வேணாம்னு சொல்லிடேன். பிரச்சனை தீர்ந்திடும் இல்ல? நீயும் சங்கீதாக்கு எதுவும் செய்ய வேண்டாமே!” 

“ஆவற காரியமா பேசுங்க. அவங்க அந்தஸ்துக்கு அவங்க சும்மா அனுப்புவாங்களா? இல்ல நாமதான் சங்கீதாவை சும்மா அனுப்பிடுவோமா?” 

”அப்படின்னா ஒரே ஒரு வழிதான் இருக்கு!” 

“என்ன?” 

”உன்னால சங்கீதாக்கு என்ன செய்ய முடியுமோ அதையே சுஜிதா வீட்ல செய்தா போறும்னு அவங்கப்பாகிட்ட ஸ்டிரிக்டா சொல்லிட வேண்டியதுதான். அப்பறம் என்ன? உனக்கும் சிரமமிருக்காது, சங்கீதா மனசுப்படியும் கல்யாணம் நடக்கும், சம்பந்தியம்மாவும் வாயத்திறக்க மாட்டாங்க. இதைத்தவிர வேற வழியில்ல” 

“அதெப்டிங்க. நம்பளால சங்கீதாக்கு ஒரு அம்பது பவுன் நகை போட முடியும். ஒரு அஞ்சாறு லட்சத்துக்கு சீர் செஞ்சு சிறப்பா கல்யாணம் பண்ண முடியும். நம்ம பொண்ணுக்காக அந்த பொண்ணு தனக்கு கிடைக்கற சீரை வேண்டாம்னு சொல்லுவாளா? அப்டி சொல்லச் சொல்றதுதான் நல்லார்க்குமா?” 

”அவ ஏண்டி கஷ்டப்படணும். அதுக்கப்பறம் அவளுக்கு வேண்ங்கற நகையெல்லாம் நீ செய்து போடேன். என்ன தேய்ஞ்சு போச்சு? இதோ பார் சாரதா இந்த விஷயத்துல நா சொல்றதைக் கேக்கலன்னா, சங்கீதா ஓடிப்போனாங்கற அவமானத்தை நீ சந்திச்சுதான் ஆகணும். பரவல்லன்னா உன் இஷ்டப்படியே செய்! நா போய் எங்களுக்கு சரிப்படாதுன்னு சொல்லிட்டு வந்துடறேன்.” 

சம்பத் கிளம்ப சாரதா ரெண்டுங்கெட்டானாய் அவரைப் பார்த்தாள். “இருங்க இருங்க… நா யோசிக்கிறேன். அப்பறம் சொல்லலாம்” என்றபடி கீழே செல்ல, சம்பத் புன்முறுவலோடு அவள் செல்வதைப் பார்த்தார். 

உடனடியாய் கர்ப்பபையை நீக்காவிட்டால் உயிருக்கு ஆபத்தாகி விடும் என்று டாக்டர் சொன்னதற்கு காரணம், கர்ப்பப்பையில் பரவ ஆரம்பித்திருந்த புற்றுநோய். 

குடும்பமே ஆடிப் போயிற்று. புற்றுநோய் என்ற வார்த்தை ஏற்படுத்திய அதிர்ச்சி ஆயிரம் மடங்கு என்றால், இனி குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கை அடியோடு தகர்க்கப்படப் போகும் அதிர்ச்சி இரண்டாயிரம் மடங்கு தாக்கியது. சரவணன் சின்னக் குழந்தை மாதிரி ஒரு பக்கமாய் சாய்ந்து நின்று அழுதான். யாரை யார் தேற்றுவது, யாருக்கு யார் ஆறுதல் சொல்வது என்று புரியாமல் மூவரும் அதிர்ச்சியில் உறைந்து போயிருந்தனர். மேற்கொண்டு என்ன செய்வதென்று கூடப் புரியவில்லை. சரண்யா ஒரு வழியாய் தன்னை சமாளித்துக் கொண்டு சரவணனிடம் வந்தாள். 

“இப்படியே நின்னுட்டா எப்டி மாமா? டாக்டருக்கு உடனடியா பதில் சொல்ல வேணாமா? வாங்க போய் ஆபரேஷனுக்கு எவ்ளோ பணம் ஆகும் என்னன்னு கேட்டுக்கிட்டு வருவோம். வசதிப்படும்னா இங்கயே வெச்சுக்குவோம். இல்லாட்டி வேற ஏதாவது ஆஸ்பத்திரிக்காவது போவோம்” 

சரவணன் கண்ணைத் துடைத்துக் கொண்டு அவளோடு நடந்தான். அவன் அம்மா பெஞ்சில் சுருண்டு அமர்ந்திருந்தாள். 

“டெஃபனட்டா அம்பதாவது கைல வெச்சுக்கணும் மிஸ்டர் சரவணன்” டாக்டர் சொன்னதும் தலை சுற்றியது. அவ்வளவு பணத்திற்கு எங்கே போவது? 

“என்ன யோசனை? பணப் பிரச்சனைன்னா தாராளமா நீங்க கேன்ஸர் இன்ஸ்டிடியூட் கொண்டு போகலாம். அங்க இவ்ளோ ஆகாது. யோசிச்சுக்குங்க” டாக்டர் அடுத்த கேஸ் பார்க்க கிளம்ப, இருவரும் எழுந்து வெளியில் வந்தனர். 

அம்மாவிடம் விஷயத்தை சொல்லி ஆலோசனை கேட்டான். 

“புள்ள பொறந்தா வளர்க்கணும் படிக்க வெக்கணும், கட்டிக் கொடுக்கணும்னு எவ்ளோ செலவு! அதெல்லாம் சந்தோஷமா செய்யலாம் அந்த புள்ள வளர வேண்டிய பையையே அறுத்தெடுத்து வெளிய போடப் போறாங்கன்னா மனசு ஆடுதடா சரவணா. உன் சக்தி என்னன்னு பார்த்து செய். எனக்கொண்ணும் சொல்லத் தெரியல”. ஈனஸ்வரத்தில் பதில் சொன்னாள் அவள். 

சரவணன் சத்யாவைப் பார்த்தான். “நிச்சயம் அம்பதுன்னா ரொம்ப கஷ்டமாய்டும் சத்யா. நாம் கேன்ஸர் இன்ஸ்டிடியூட்க்கே போய்டுவோம். அதான் சரி. டாக்டர்கிட்ட சொல்லி டிஸ்சார்ஜ் பண்ணச் சொல்லிட்டு வந்துர்றேன்” என்றபடி போனான். கதறியழுத சத்யாவை சமாதானப்படுத்தி, மறுநாளே புற்றுநோய் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்கள். கர்ப்பப்பையில் புற்றுநோய் இருப்பது அங்கு உறுதி செய்யப்பட்டது. “ஆரம்ப கட்டம்தான். வேற எங்கயும் பரவறதுக்கு முன்னாடி யூட்ரஸ் ரிமூவ் பண்ணிட்டோம்னா உயிருக்கு ஆபத்தில்லாம இருக்கலாம்” 

சரவணன் சம்மதித்தான். கையெழுத்துப் போட்டுக் கொடுத்தான். 

பலவித பரிசோதனைகளுக்குப் பிறகு ஐந்தாவது நாள் சத்யாவுக்கு ஆபரேஷன் நடந்தது. சரவணனின் அலுவலகம் மருத்துவச் செலவுகளுக்கு பண உதவி அளிக்க முன்வந்தது ஒரு ஆறுதலான விஷயம். 

கிழித்துப் போட்ட நாராய்க்கிடந்தாள் சத்யா. எல்லா சக்தியும் போய்விட்டாற் போலிருந்தாள். இனி மருந்து மாத்திரை நல்ல உணவு என்று கொடுத்து மெல்ல மெல்ல அவள் உடல் நிலையைத் தேற்ற வேண்டும். 

இனி குழந்தை பிறக்காது என்ற சோகம் ஒட்டுமொத்த குடும்பத்தையும் பாதித்திருந்தது. முக்கியமாக சரவணனின் அம்மா ரொம்பவே ஆடிப் போயிருந்தாள். ஒரு தாய்க்கு தாயாவதைக் காட்டிலும் அதிக சந்தோஷம் பாட்டியாவதுதான். அந்த சந்தோஷம் தனக்கு இனி கிடைக்கவே போவதில்லை என்ற உண்மை அவளுக்குள் ஊசியாய்க் குத்தி வலி ஏற்படுத்தியது. அந்த வலி அவள் மனநிலையைக் கூட பாதித்து விட்டதோ என்று தோன்றுமளவுக்கு நாள் செல்லச் செல்ல அவளது பேச்சும் நடவடிக்கைகளும் மாறிப் போயிற்று. திருப்திதான் மனிதனின் நற்குணங்கள் வெளிப்பட காரணமாயிருக்கிறது. திருப்தியில்லாதவனுக்கு மனம் அலைபாய்கிறது. அதிருப்தி ஆட்டி வைக்க வைக்க மனம் மேலும் கீழும் புரட்டிப் போட்டாற் போல் ஆகிவிடுகிறது. 

மேலேயிருக்கும் நற்குணம் பின்னால் சென்று புதைய அடி ஆழத்தில் இருக்கும் மிருகம் கிடைத்த இடைவெளியில் எட்டிப் பார்க்க ஆரம்பித்து விடுகிறது. நோண்டிப் பார்த்தால் மனிதனின் எல்லா செயல்களுக்கும் காரணமாயிருப்பது அவனது ஆசைகள்தான் என்பது புரிந்து விடும். ஆசைகள் நிறைவேறி திருப்தியடையும்போது மனம் அமைதி நிலை அடைந்துவிட, அவனது குணமும் நற்குணமாகவே அமைதியாய் வெளிப்படும். ஆசை நிராசையாகி அதிருப்தி ஏற்படும்போது அதே மனது அலைபாய்ந்து குழம்பி அழுத்தமும் புயலும் அதிகமாக அந்த சீற்றத்தில் முதலில் சின்னாபின்னப்பட்டுப் போகும் முக்கியமான ஒன்று அவனுடைய குணம்தான். சத்யாவின் மாமியாரும் அதே நிலையில்தான் இருந்தாள். 

பேரனோ பேத்தியோ என்ற ஆசை, நிராசையாகிப் போனதில் அவளுக்குள் உறங்கிக் கொண்டிருந்த மிருகம் புரட்டி போடப்பட்டு தடக்கென்று விழித்துக் கொண்டது. ஏதாவதுசெய், ஒரு பேரனுக்கு வழியா இல்லாமல் போய்விட்டது? என்று அவளுக்குள் அந்த மிருகம் தூண்டி விட்டுக் கொண்டே இருந்தது. முதலில் அதை சட்டை செய்யாதவள் நாளடைவில் சோர்ந்து போய் அந்த குரலுக்கு செவிசாய்க்க ஆரம்பித்தாள். அவள் பேச்சிலும் நடவடிக்கைகளிலும் அந்த மனமாற்றம் மெல்ல மெல்ல வெளிப்பட ஆரம்பித்தது. ஆரம்பத்தில் அதை யாரும் உற்று கவனிக்கவில்லை அல்லது பொருட்படுத்தவில்லை என்றுதான் கூறவேண்டும். போகப் போக சரண்யாவுக்கு, மாமியின் போக்கு லேசாய்ப் புரிய, அவளுக்குள் கவலை சூழ்ந்தது. 

சாரதாவின் முடிவு சுஜிதாவுக்கு வியப்பாயிருந்தது. மிகப் பெரிய பிரச்சனை ஒன்று இதனால் தானாகத் தீர்ந்து விடும் என்று அவள் சுத்தமாய் எதிர்பார்க்கவில்லை. அப்பாவுக்கும் தனக்கும் ஏற்பட்ட விரிசலும் தன் குடும்பம் தன்னை ஒதுக்கி வைத்த விஷயமும் தெரிந்தால், எங்கே தங்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்க ஆரம்பிப்பாளோ என்ற பயம் போய் அவளே இப்போது, என் பொண்ணுக்கு நான் என்ன செய்கிறேனோ அதையே உன் வீட்டில் உனக்கும் செய்தால் போதும் என்று சொல்கிறாள் என்றால் ஆச்சர்யப்படாமல் எப்படி இருக்க முடியும். ஆக மொத்தம் சங்கீதாவின் மாமியார் போட்ட கண்டிஷன் தனக்கு மறைமுகமாக நன்மையே செய்திருக்கிறது என்பது புரிந்ததும் உள்ளுக்குள் இதற்கு மேல் சங்கீதாவின் திருமணத்தைத் தடுக்கப் பார்த்தால் அது தனக்குத்தான் ஆபத்து என்பதும் அவளுக்குப் புரிந்தது. சந்தோஷமடைந்தாள். 

“என்ன யோசனை சுஜி? என் பெண்ணுக்காக உனக்கு கிடைக்க வேண்டிய பணம் பொருள் சுகம் எல்லாத்தையும் இழக்கச் சொல்றேனேன்னு வருத்தமார்க்கா?”

“ம்… அதெல்லாம் இல்ல ஆண்ட்டி… உங்க முடிவை மறுத்துப் பேச நான் யார்? என் பணம் எங்கயும் போகாது. எவ்ளோ நாள் அந்தம்மா இதை கவனிச்சுட்ருக்க முடியும்? வருஷங்கள் போகப் போக மறந்துடுவாங்க. அதுக்கப்பறம் எங்கப்பா எது கொடுத்தாலும் அவங்களுக்கென்ன தெரியவா போகுது? அப்டியே தெரிஞ்சாலும் அது நீங்க எனக்கு வாங்கிக் கொடுத்ததுன்னு சொல்லிட்டா போச்சு. வாயே திறக்கமாட்டாங்க.ஏன்னா நீங்க எனக்கு செய்தா, அவங்க சங்கீதாக்கு செய்யணுமே, அதுக்கு மனசு வந்துடுமா என்ன? ஓசில கிடைச்சா வாங்கிப் போட்டுக்கு வாங்களே தவிர காசு போட்டு யாராவது மருமகளுக்கு செஞ்சுடுவாங்கன்னு நினைக்கறீங்க? நிச்சயம் மாட்டாங்க!” 

சங்கீதாவின் மாமியாரைத்தான் அவள் தாக்கிப் பேசினாள் என்றாலும் அது தனக்கும் சேர்த்து தான் சொல்லப்பட்டதோ என்று துணுக்குற்றது சாரதாவின் மனம். அசட்டு சிரிப்பினால் அதை மறைத்துக் கொண்டு நகர்ந்தாள். 

ஒரு நல்ல நாள் பார்த்து நால்வரும் பிரவீணின் வீட்டுக்கு போய் பேசினார்கள். ஐம்பது பவுன் நகையும் ஐந்து லட்ச ரூபாய்க்கு மற்ற சீர் வரிசைகளும் மட்டும்தான் சுஜிதாவின் வீட்டில் தான் கேட்டிருப்பதாகவும், அதே அளவுக்கு சங்கீதாவுக்கும் செய்து விடுவதாகக் கூறினாள். பிரவீணுக்கு இந்த பேரமே பிடிக்கவில்லை என்று அவன் முகம் சொல்லியது. பெண்பார்த்து விட்டு வந்த அன்று அம்மாவிடம் பேசியதோடு சரி. அதற்குப் பிறகு இன்று வரை அம்மாவிடம் பேசவில்லை அவ.ன் சங்கீதாவை இனி மறக்க முடியாது என்பதால்தான் இந்த திருமணத்திற்கு ஒப்புக் கொண்டான் அவன். அம்மாவே பேசிக் கொள்ளட்டும் என்பது போல் எழுந்து சென்று சிட் அவுட்டில் வந்து அமர்ந்து விட்டான் அவன். 

“எனக்கு சம்மதம்தான். நிச்சயதார்த்தம் அடுத்த வாரமே வெச்சுக்குவோம். அடுத்த முகூர்த்தத்துலயே கல்யாணத் தையும் நடத்திடலாம்” பிரவீணின் அம்மா ஒரு வழியாய் பிரச்சனைக்கு முற்றுப் புள்ளி வைத்தாள். அனைவருக்கும் இனிப்பும் காரமும் காபியும் கொண்டு வந்து கொடுத்தாள். தானே பஞ்சாங்கம் எடுத்து வந்து நல்ல நாள் பார்த்து சொன்னாள். 

தனியே அமர்ந்திருந்த பிரவீணின் மனநிலை புரிய சம்பத் மெதுவாக எழுந்து அவனிடம் வந்தார். 

“என்ன பிரவீண் டல்லார்க்க…? உடம்பு கிடம்பு சரியில்லையான்ன?” 

“இ… இல்லையே… ஒண்ணுல்ல” பிரவீண் மரியாதை நிமித்தம் எழுந்தான். 

“எதுவார்ந்தாலும் பளிச்சுனு பேசறவன் நீ! இப்பொ உன் மனசுல இருக்கறதையும் பளிச்சுனு சொல்லிட்டா நல்லார்க்கும். எதுவும் இல்லன்னு மட்டும் சொல்லிடாதே.” அவர் புன்னகையோடு சொன்னார். 

“யெஸ் சார்… இருக்கத்தான் இருக்கு. வேதனை! அதான் இருக்கு” 

“என்ன வேதனை?” 

”அம்மா உங்ககிட்ட பேரம் பேசினதுக்காக நா உங்ககிட்ட மன்னிப்பு கேட்டுக்கறேன் சார்'” 

”அடடே என்னப்பா இது…” 

“எனக்கு சங்கீதா வேணும்ங்கறதால என்னால் அவங்களை எதிர்க்க முடியல. நாங்க பேசி பதினைஞ்சு நாளாறது” 

“தப்பு பண்ணிட்ட பிரவீண். உங்கம்மா நிரபராதி. ரொம்ப நல்லவங்க. பின்ன குற்றவாளி யாருன்னு கேட்டா அது நான்தான். இதுக்குப் பின்னால இருக்கற உண்மைகளை முதலிரவன்னிக்கு சங்கீதா கிட்ட கேட்டுத் தெரிஞ்சுகோயேன்” சம்பத் கண்ணடித்து சிரிக்க, பிரவீண் திகைப்போடு அவரைப் பார்த்தான். 

அத்தியாயம்-28 

உள்ளே ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாய் இரைச்சல்! இதற்கு அடிப்படைக் காரணம் தேவைகளுக்கும் ஆசைகளுக்கும் வித்யாசம் தெரியாமல் வாழ்வதுதான். தேவைகள் ஆசைகள்.. – டாக்டர் ருத்ரன். 

லொட்டு லொட்டென்று கார்ப்பரேஷன் பம்பில் யாரோ தண்ணீர் அடிக்கும் ஓசையில் சத்யா விழித்துக் கொண்டாள். அருகில் சரவணன் அசந்து தூங்கிக் கொண்டிருந்தான். எழுந்து கூடத்துக்கு வந்தாள். சரண்யாவும் நன்கு தூங்கிக் கொண்டிருந்தாள். அவள் அருகில் இருக்க வேண்டிய அத்தையைத்தான் காணவில்லை. சத்யா பின்பக்கம் வந்தாள். வியர்க்க விறுவிறுக்க தண்ணீர் அடித்துக் கொண்டிருந்த அத்தையைப் பார்த்ததும் பதறினாள். 

“நீங்க எதுக்கு அத்தை இந்த வேலையெல்லாம் செய்றீங்க?” 

“பின்ன யார் செய்வாங்க? நீ சீக்காளி. அவ சின்ன பொண்ணு,எம்பிள்ளைய வேல வாங்க எனக்கு மனசு வராது” 

“சரி நகருங்க நா அடிக்கறேன்” 

“வேணாண்டி தாயே. உனக்கு ஏதாவது ஆச்சுன்னா எம் பிள்ளைக்கு யாரு பதில் சொல்றது?” 

“எனக்கு ஒண்ணும் ஆகாது நகருங்க”

”வேணாம்… வேணாம் நீ போ, நானே அடிச்சுக்கறேன்” மாமியார் பிடிவாதமாய் பம்ப்பை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டு அடிக்க, சத்யா என்ன செய்வதென்று தெரியாமல் ஒரு சில வினாடிகள் மலங்க மலங்க நின்றாள். அதற்குள் சத்தம் கேட்டு சரண்யாவும் எழுந்து வந்தாள். 

“எனக்கா இங்க நிக்கற..?” 

”கொஞ்சம் தண்ணியடி சரண். என்னை அடிக்க விட மாட்டேன்றாங்க அத்தை” 

“நகருங்கத்தை நா அடிக்கறேன்” 

“வேணாந்தாயி.. அவன் கத்துவான்” 

“ஒண்ணும் கத்தமாட்டார். வயசானவங்களை தண்ணியடிக்க விட்டுட்டு வேடிக்கை பாக்கறீங்களான்னு எங்களைத்தான் கத்துவார். நகருங்க” சரண்யா பலவந்தமாய் அத்தையை நகரச் செய்து தண்ணீர் அடிக்க ஆரம்பித்தாள். 

“அவதான் அடிக்கறா இல்ல. இன்னும் ஏன் நிக்கற? போய் படுக்கைல விழுந்து கிடக்க வேண்டியதுதானே” 

சத்யாவை பார்த்து எர்ச்சலோடு சொல்லிவிட்டுச் சென்றாள் மாமியார். கொஞ்ச நாளாகவே இப்படித்தான் எதற்கெடுத்தாலும் எரிந்தெரிந்து விழுகிறாள். இவள் ஒரு வியாதிக்காரியாகி விட்டாளே என்ற எரிச்சலா அல்லது இனி தனக்கு பேரக்குழந்தையே பிறக்கப் போவதில்லை என்ற ஆத்திரமா தெரியவில்லை. உடம்பென்னும் இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டு விட்டால் மரியாதை அன்பு எல்லாமே குறைந்து போய்விடும் போலும். எதற்கெடுத்தாலும் சுருக் சுருக்கென்று ஏதாவது சொல்வது இப்போதெல்லாம் வாடிக்கையாகி விட்டது. 

சரவணனிடம் மாமியாரைப் பற்றி எதுவும் சொல்ல முடியவில்லை. தலையணை மந்திரம் என்றுதான் சொல்லுவானே தவிர நம்ப மாட்டான். முதலாவதாக ஒருவரைப் பற்றி ஒருவரிடம் குறை சொல்லி எல்லாம் பழக்கமில்லை. அப்பா அவர்களை அப்படி வளர்க்கவில்லை. மாமியாரின் எரிச்சலுக்கு காரணம் பேரக்குழந்தை பிறக்க வழியில்லையே என்பதுதான் என்று புரிந்த பிறகு அவள் மீது பரிதாபம்தான் ஏற்பட்டது. எந்த ஒரு தாய்க்கும் இயல்பாய் ஏற்படும் நியாயமான ஆசைதானே பாட்டியாக வேண்டுமென்பது! அந்த ஆசையில் மண் விழுந்துவிட்டதால் எரிச்சல்படுகிறாள். இதைப்போய் குற்றம் என்று அவளைப் பற்றி புருஷனிடம் எப்படி குறை சொல்வது? போகட்டும் அம்மா இருந்திருந்தால் எதற்காவது கோபப்படமாட்டாளா? அந்த மாதிரி நினைத்துக் கொண்டு விடுவோம்! சத்யா தன்னைத்தானே சமாதானப் படுத்திக் கொண்டு உள்ளே வந்தாள். சரவணன் இன்னும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தான். 

“ஏங்க… மணியாகலையா..? இன்னிக்கு சீக்கிரமே போணும்னு சொல்லிட்டு இன்னும் தூங்கறீங்க!” அவனை அசைக்க அவன் சட்டென்று எழுந்து மணியைப் பார்த்தான். பிறகு அரக்க பரக்க எழுந்து பின் பக்கம் வந்தான். தண்ணீர் அடித்துக் கொண்டிருந்த சரண்யாவைப் பார்த்து சிரித்தபடி பிரஷ்ஷில் பேஸ்ட்டைப் பிதுக்கினான். சத்யா பின்பக்கம் வந்து அவன் குளிப்பதற்கு நீர் எடுத்து வைக்க பக்கெட்டை எடுத்தாள். அந்த நேரம் அங்கு வந்த அத்தை சத்யாவை முறைத்துப் பார்த்தாள். 

“அட்டாடா! உம் பொண்டாட்டிக்கு எத்தனை தரம் சொன்னாலும் புரியாதாடா சரவணா..? இவ தண்ணி எடுத்து வெக்காட்டி நீ குளிக்க மாட்டாயா..?” 

“நா ஒண்ணும் எடுத்து வெக்கச் சொல்லலம்மா. அவளேதான்…'” 

“அதான் எதுக்குன்னு கேக்கறேன். உடம்பு முடியல இல்ல..? ஒரு இடமா கிடக்க வேண்டியதுதானே..? நாங்க இல்ல… உனக்கு தண்ணி எடுத்து வெக்க. இவ எதுக்கு கிடந்து அல்லாடறா…?” 

“நீ போ சத்யா உள்ள..” 

சரவணன் உத்தரவிட சத்யா கண் கலங்கியதை மறைத்துக் கொண்டு உள்ளே சென்றாள். 

”சரண்யா அவனுக்கு கொஞ்சம் தண்ணி எடுத்து வெச்சுட்டு வா” அத்தை சரண்யாவிற்கு உத்தரவிட சரண்யா மறு பேச்சு பேசாமல் ஒரு பக்கெட் தண்ணீரை எடுத்து பாத்ரூம் உள்ளே வைத்துவிட்டு வந்தாள். சரவணன் குளிக்கப் போனான். அவன் குளித்துவிட்டு வந்ததும் அத்தை மறுபடியும் சரண்யாவை அழைத்தாள். 

“இந்த காப்பிய அவனுக்கு ஆத்திக்குடுத்துட்டு வா” 

சரண்யா காப்பி டம்ளரை வாங்கிக் கொண்டு கூடத்திற்கு வந்தாள். 

“வெச்சுட்டு போ சரண். நா ஆத்திக்கறேன்” சரவணன் தலை சீவியபடி சொன்னான். 

“வேணாம் அத்தை திட்டு வாங்க. நானே ஆற்றித்தரேன்” 

”ஆச்சா சரண்யா? இந்தா இந்த டிபனைக் கொடு அவனுக்கு. அப்டியே அவன் டிபன்பாக்ஸ்ல கொஞ்சம் தயிர்சாதம் கட்டிக் கொடுத்துடு” 

அடுத்தடுத்து சரண்யாவுக்கு அம்மா போட்ட உத்தரவில் சரவணன் திகைத்தான். இந்த அம்மாவுக்கு என்ன ஆயிற்று? எதற்காக அந்த பெண்ணை விரட்டி விரட்டி வேலை வாங்குகிறாள்? 

”ஏம்மா இதெல்லாம் சத்யா செய்யமாட்டாளா. சின்னச் சின்ன வேலைதானே. அவளுக்கு படிக்கற வேலை இருந்தா படிக்கட்டுமே” 

“நெனச்சேன்! என்னடா நீ இன்னும் எதுக்கும் வாய்த் திறக்கலையேன்னு! நா இந்த வீட்ல இருக்கறது பிடிக்கலன்னா சொல்லுடா. நா வேணா ஏதாவது ஹோம்ல சேந்துக்கறேன்” 

“இப்ப நா என்னம்மா சொல்லிட்டேன்?” 

“பின்ன என்னடா அவளுக்கு உடம்பு முடியலையேன்னு இவகிட்ட வேலை சொன்னாதப்புங்கற? வேண்டாம்ப்பா உம் பெண்டாட்டி, மச்சினி ரெண்டு பேரையுமே நா வேலை வாங்கல. இந்த தேகத்துல தெம்பிருக்கற வரை நானே செய்துட்டு போறேன்” 

”உனக்கென்னமா ஆச்சு..? ஏன் ஏதேதோ பேசற..?” 

”அப்பொ இங்க நடக்கறதையெல்லாம் பாத்துக்கிட்டு ஊமையார்க்கணுங்கறயா..?” 

”அப்டி இங்க என்ன நடக்குதுன்ற..?” 

”எதுவும் நடக்கலடாப்பா! நாந்தான் தப்பு பண்ணிட் ருக்கேன். இந்த வீட்ல எனக்கும் உரிமையிருக்குன்னு பேசிட்ருக்கேன் பாரு அதான் தப்பு” 

”கடவுளே…நீ ஏன் இப்டி ஏறுக்குமாறா பேசறன்னு புரியல. எனக்கு டிபனும் வேணாம் ஒரு எழவும் வேணாம்!” சரவணன் எரிச்சலோடு சொல்லிவிட்டு கிளம்பிச் சென்றான். 

வீடு ஒரு வினாடி படு நிசப்தமாயிருந்தது. 

சரண்யா என்ன பேசுவதென்று புரியாமல் நின்றாள். அத்தை சொல்வதைத் தட்டமுடியாமல்தான் அவள் சொன்ன வேலைகளைச் செய்கிறாள் என்றாலும் சரவணனுக்கு அது சுத்தமாய்ப் பிடிக்கவில்லை என்பது புரிந்தது. சரண்யாவின் உதவிகளை அவன் விரும்பவில்லை. அம்மா தன் மனைவியை உதாசீனப்படுத்துவது அவனுக்கு வருத்தத்தைக் கொடுத்தது. அம்மா ஏன் இப்படியெல்லாம் நடந்து கொள்கிறாள் என்பது புரியவில்லை என்றாலும் இதற்கெல்லாம் முடிவு கட்ட வேண்டும் என்பது போல்தான் அவனும் இன்று சட்டென்று படபடத்து விட்டான். அதன் பின் விளைவாக அத்தையின் கோபம் சத்யாவின் மீதுதான் பாய்ந்தது. ”இப்ப திருப்தியா..? உம்புருஷன் சாப்டாம போறான். இதுக்குத்தானே குறுக்கும் நெடுக்கும் நடமாடிட்டு இருந்த!” 

சத்யா மௌனமாக அமர்ந்திருந்தாள். சரண்யா என்ன செய்வதென்று புரியாமல் திகைத்துப் போனாள். அத்தையை எதிர்த்துப் பேச முடியாது. அக்காவைப் பார்த்தாலும் மனதுக்கு கஷ்டமாக இருந்தது. சரவணனாவது கொஞ்சம் பேசாமல் இருந்திருக்கலாம். அவன் பாட்டுக்கு படபடவென்று பேசிவிட்டுப் போய்விட்டான். இதனால் சத்யாவுக்கும் சரண்யாவுக்கும்தான் கஷ்டம் என்றுயோசிக்க வேண்டாமா..? ஒரு வேளைதான் இங்கு வந்து தங்கியிருப்பது அத்தைக்குப் பிடிக்கவில்லையா? இப்படியெல்லாம் வேலை வாங்கினால், வீட்டை விட்டு தான் கிளம்பிடுவோம் என்று நினைக்கிறாளா? ஒன்றும் புரியவில்லை அவளுக்கு. அதற்கு மேல் பேசாமல் நின்றிருந்தால் அதற்கும் ஏதாவது சொல்லப் போகிறாள் என்று பயந்து, தன் உடைகளை எடுத்துக் கொண்டு குளிக்கப் போனாள். 

அவள் குளித்துவிட்டு வரும்போது அத்தை அடுக்களையில் உட்கார்ந்து அழுது கொண்டிருந்தாள். சரண்யா பதறிப்போய் கிட்டே வந்தாள். 

”என்னத்த எதுக்கு அழறீங்க..? மாமா சாப்டாம போனதுக்கா..?” 

“எல்லாத்துக்கும் சேர்த்துதான் அழுவறேன்” 

“எங்கிட்ட ஏதாவது கோவமா அத்தை?” 

அத்தை இல்லையென்பது போல் தலையாட்டியவள், கண்ணைத் துடைத்துக் கொண்டு அவளைப் பார்த்தாள். 

“இப்டி உக்காரு சரண்” 

சரண்யா அவளருகில் அமர்ந்தாள். 

“எனக்கு யார் மேலயும் கோவமில்ல. உங்கக்கா உடம்பிருக்கற நிலையில் அவளை வேலையெல்லாம் செய்ய வேணாம்னு சொல்றேன். அது தப்பா சொல்லு..”

“தப்பில்ல” 

”நீ புரிஞ்சுக்கிட்ட! புரிஞ்சுக்க வேண்டியவங்களுக்கு எங்க புரியுது” 

”அக்காகிட்ட நா சொல்றேன் அத்தை. அவ புரிஞ்சுப்பா” 

“அது மட்டும் போதாது சரண். சரவணனுக்கு வேணுங்கற உதவியெல்லாம் நீயே செய்துட்டா என் வேலை குறையும். அவனுக்கு எல்லாமே நானே செய்து பழக்கிட்டேன். இப்போ சத்யாவுக்கும் முடியலதானே செய்துக்கறேன்னுதான் அவன் சொல்லுவான். ஆனா மூணு பொம்பளைங்க வீட்ல இருக்கும்போது அது நல்லார்க்குமா சொல்லு” 

”சரி அத்தை. அவ்ளோதானே..? நா பாத்துக்கறேன் விடுங்க முதல்ல நீங்க டிபன் சாப்பிடுங்க. மாமா ஒண்ணும் பட்னி கிடக்கமாட்டாரு. ஹோட்டல்ல மூக்கு பிடிக்க சாப்ட்டுட்டு போயிருப்பார். அதை நினச்சு உங்க உடம்பைக் கெடுத்துக்காதீங்க வாங்க.” 

சரண்யா அவளை உட்கார வைத்து டிபன் கொடுத்தாள். சத்யாவுக்கும் டிபன் கொடுத்து சாப்பிட வைத்தாள். 

“உம்மேல இருக்கற அக்கறைல தான் வேலை செய்யாதேன்னு சொல்றாங்க சத்யா. எதுக்கு அனாவசிய பிரச்சனை? நீ பேசாமதான் இரேன். மாமாக்கு வேணுங்கறதைச் செய்ய மாட்டோமா நாங்க..” 

சத்யா மௌனமாகச் சாப்பிட்டாள். 

சரண்யா தானும் டிபன் சாப்பிட்டு விட்டு கிளம்பினாள். இங்கு இருப்பதற்கு லைப்ரரிக்குச் சென்றால் நாலு புத்தகங்களாவது ரெஃபர் செய்யலாம் என்ற எண்ணத்தோடு பிரிட்டிஷ் கவுன்ஸிலுக்குக் கிளம்பிச் சென்றாள். 

அவள் போனதும் அத்தை சத்யாவிடம் மாத்திரைகளோடு வந்தாள். 

“இதை சாப்டு” மாத்திரைகளையும் தண்ணீரையும் நீட்டினாள். 

“என்னால் உங்களுக்கு ரொம்ப கஷ்டம் இல்லத்தே…? போறாததுக்கு சரண்யா வேற ஒரு பாரம்!” 

அத்தை எந்த பதிலும் சொல்லாமல் எழுந்து போனாள். சத்யாவுக்கு அப்படி அவள் பேசாமல் போனது என்னவோ போலிருந்தது. அந்த வீட்டில் திடீரென்று தான் அன்னியமாகப் போய்விட்டாற் போலிருந்தது. சரவணன் எப்போதும் போல்தான் இருக்கிறான். அத்தையின் பேச்சும் போக்கும்தான் காயப்படுத்துவதாயிருந்தது. அவள் மனதில் என்ன இருக்கிறதென்றே புரியவில்லை. பேரக்குழந்தைக்கு ஏங்கும் அந்தக் காலத்து மனுஷியாதலால் அது கிடைக்க வழியில்லை என்றானதும் அந்த ஆத்திரத் தால் இப்படி நடந்து கொள்கிறாள் என்பது மட்டும் புரிந்தது. ஒரு குழந்தைக்காக மனிதன் முயற்சிக்கலாமே தவிர ஒரு உயிரின் ஜனனமும், மரணமும் இறைவனின் ஆணைப்படித்தான் ஏற்படும் என்பதை புரிந்து கொண்டு விட்டால் தேவையின்றி இவள் மீது ஆத்திரம் ஏற்படாது. அத்தை அப்படி யோசிக்க முற்படவில்லை. அவளுக்கு புரிய வைக்க சத்யாவிற்கு வயதும் இல்லை. எனக்கே புத்தி சொல்கிறாயா என்று ஆங்காரப்படுவாள். அது ஒரு புது பிரச்சனையாகும் சத்யா பெருமூச்சு விட்டாள். 

அத்தை ஒரு முறத்தில் ரேஷன் அரிசி கொண்டு வந்தாள். 

“இதைக் கொஞ்சம் சுத்தம் பண்ணிக் கொடு… முடியுமில்ல?” 

“குடுங்க…” 

அத்தை முறத்தை அவளிடம் கொடுத்துவிட்டு காய்கறி நறுக்க அமர்ந்தாள். நெல்லும் களிமண் உருண்டைகளும் பொறுக்கிப் போட்டுக்கொண்டிருந்த சத்யாவையே ஒரு சில வினாடிகள் உற்றுப் பார்த்தாள். 

“நா ஒரு விஷயம் சொன்னா காது கொடுத்து கேப்பியா சத்யா?” 

“சொல்லுங்கத்தை ” சத்யா நிமிர்ந்து பார்த்தாள். 

”என்னடா இப்டி சொல்றாளே இவன்னு கோவப்படாம பிராக்டிகலா யோசிச்சு நீ ஒரு முடிவுக்கு வரணும் சரியா?” 

இவ்வளவு பீடிகையோடு அப்படி என்ன விஷயம் பேசப் போகிறாள்? சத்யாவின் இதயம் திடீரென்று படபடக்க ஆரம்பித்தது பயத்தில்.. 

அத்தை வார்த்தைகளை சாதுர்யமாய் தேர்ந்தெடுத்து தன்னுடைய எண்ணங்களைச் சொல்லச் சொல்ல சத்யாவின் முகம் பேயறைந்தாற்போல் ஆயிற்று. விழி பிதுங்க அத்தையைப் பார்த்தவள் பிறகு முகத்தை மூடிக் கொண்டு அழ ஆரம்பித்தாள். 

அத்தியாயம்-29 

சுகம் என்பது இருவகையானது. ஒன்று பிரபெல்; மற்றொன்று கிரேயஸ். பிரேயல் என்பது நம் மனம் விரும்பிப் பெறுவது. மற்றது நமக்கு நன்மை பயப்பது. தொடக்கத்தில் இன்பம் தந்து கறுதியில் துயரம் தருவது பிரபெஸ், தொடக்கத்தில் துயரமும் இறுதியில் கன்பமும் தருவது சிரேயஸ். – கடோபநிஷத். 

சாரதா குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டிருந்தாள். 

மண்டபம் கிடைத்ததும் போன் பண்ணுகிறேன் என்று சொன்ன சம்பத்திடமிருந்து இதுவரை போள் வரவில்லை. ஒருவேளை சத்திரம் கிடைக்கவில்லையோ? சாரதா கவலையோடு அமர்ந்தாள். நிச்சயதார்த்தத்தையே பாதி கல்யாணம் அளவுக்கு கிராண்டாக நடத்திவிட வேண்டும் என்று சம்பந்தியம்மாள் சொன்னதும் சம்பத் உடனடியாக ஒப்புக் கொண்டார். தங்களது சக்தியும் செல்வாக்கும் என்னவென்று சம்பந்தியம்மாளுக்கு காட்ட இது ஒரு வாய்ப்பு என்பதால் சாரதாவும் மறுக்கவில்லை. தன் பெண்ணின் திருமணமும் சரி நிச்சயதார்த்தமும் சரி சிறப்பாக நடத்த வேண்டுமென்பதுதான். அவளது நெடுநாளைய ஆசை. இன்னும் பத்து நாளே நிச்சயதார்த்தத் தேதிக்கு இருக்க கல்யாண மண்டபம் கிடைப்பது பெரும்பாடாய் இருந்தது. 

“என்ன ஆண்ட்டி என்ன யோசனை?” 

பின்னால் சுஜிதாவின் குரல் கேட்க திரும்பினாள்.

“மண்டபம் கிடைச்சுதான்னு தெரியலையே சுஜி”

“எதுக்கு மண்டபம்?” 

”என்னம்மா இப்டி கேக்கற? நிச்சயதார்த்தத்தை மறந்துட்டயா?” 

“அதுக்கு மண்டபம் எதுக்கு ஆண்ட்டி” 

“கிராண்டா பண்ணணும்னு மாப்ள வீட்ல சொல்லியிருக்காங்களே”. 

‘அப்படியா சொன்னாங்க?” 

“ஆமாம்மா. நாந்தான் உங்கிட்ட சொல்ல மறந்துட்டேன் போல்ருக்கு” 

“அவங்க பண்ற டிமாண்டுக்கெல்லாம் ஏன் ஆண்ட்டி ஒத்துக்கறீங்க? எனக்கென்னமோ அவங்களை நல்லவங்களாவே நினைக்க முடியல். ஏதோ உள் நோக்கத்தோடயே ஒவ்வொண்ணா டிமாண்ட் பண்றா மாதிரியிருக்கு.” 

“போய்ட்டு போகுது சுஜி. நம்ம பொண்ணுக்கு எல்லாமே கிராண்டா பண்ணணும்னு எனக்கும் ஆசைதான்.” 

”என்னமோ செய்ங்க ஆண்ட்டி. உங்க வீட்டு காசு, உங்க பொண்ணு. நா என்ன சொல்ல? இல்ல நா சொல்றதைத்தான் நீங்க நம்பிடப் பொறீங்களா?” 

”நம்பாத அளவுக்கு என்ன சொல்லப் போற சுஜி?” 

”நிச்சயம் பண்ற அளவுக்கு ஆனப்பறம் எனக்கு சொல்லவே கஷ்டமார்க்கு” 

“என்ன விஷயம் சுஜி?” 

“ரெண்டு நாள் முந்தி என் டாக்டர் பிரண்டு ஒருத்தரைப் பார்க்க அவரோட நர்ஸிங்ஹோம் போயிருந்தேன் ஆண்ட்டி. அங்க இந்த பிரவீண் டாக்டரோட பேசிட்ருந்தான். அவங்க உள்ள பேசிக்கிட்டது எனக்கு நல்லாவே கேட்டுது. டாக்டர் அவங்கிட்ட கல்யாணம் பண்ணிக்கிட்டா உங்க உயிருக்கு நா கியாரண்ட்டி இல்லன்னு சொல்லிட்ருந்தார். எனக்கு ஷாக்காய்டுச்சு. பிரவீண் எழுந்து வெளிய வரதைப் பார்த்ததும் நா ஓடி வந்துட்டேன். அதுக்கப்பறம் டாக்டர் கிட்ட அவனுக்கு என்ன உடம்புன்னு கேக்கணும்னு ஆனவரை டிரை பண்ணினா டாக்டர் அன்னி நைட்டே லண்டன் போய்ட்டாராம்”. 

சாரதாவின் முகம் மாறியது. ”என்ன சொல்ற சுஜி நீ? என்னால நம்ப முடியலையே”. 

“தெரியும். நா சொல்லல? நீங்க நம்ப மாட்டீங்கன்னு.” 

”சரி அப்டியே நம்பினாலும் நா என்ன செய்ய? என்னன்னு காரணம் கேட்டா என்ன சொல்ல? அப்டியே கேட்டாலும் அவங்க ஆமாம்னு உண்மையை ஒத்துக்குவாங்கன்னா நம்பற? அப்டியெல்லாம் எதுவுமில்லன்னு சாதிப்பாங்க” 

”சாதிக்கட்டும். அதை நாம நம்பணும்னா நமக்கு தெரிஞ்ச டாக்டர்கிட்ட உடம்பை ஃபுல் செக்கப் பண்ணிக்க சொல்லுங்க. ஒண்ணுமில்லன்னு அந்த டாக்டர் சொல்லட்டும்.” 

“இதுக்கு அந்த பையன் ஒத்துப்பானா?” 

“ஒத்துக்காட்டி பயப்படறான்னு அர்த்தம்” 

“நாம் அவனை அவமானப் படுத்தறோம்னு நினைச்சா?”

“இது நம்ம வீட்டு பொண்ணு வாழ்க்கை பிரச்சனையாச்சே. விட்டுட முடியுமா?” 

“அவங்களை விடு சுஜி. எம்புருஷனே இதை நம்பமாட்டாரே! நீ சொல்றதை நா வேணா நம்பலாம். ஆனா எம்புருஷன் நம்புவார்னா நினைக்கற?” 

“இப்டியெல்லாம் அனாவசிய சந்தேகம் வரும்னுதான் நா வாய மூடிட்ருந்தேன். நீங்கதான் என் வாயப்பிடுங்கினீங்க. ஏற்கனவே குழம்பிக்கிடந்த மனக்குளம் இன்னும் குழம்ப, சாரதா யோசனையோடு அமர்ந்தாள். சுஜிதா சொன்னதை நம்பவும் முடியவில்லை. நம்பாமலும் இருக்க முடியவில்லை. இப்போது அலட்சியப்படுத்திவிட்டு ஒருவேளை இவள் சொன்னது உண்மைதான் என்பது பின்னால் தெரிய வந்தால் வருத்தமல்லவா பட வேண்டியிருக்கும். 

“யோசனை பண்ணி செய்ங்க ஆண்ட்டி. நம்ம வீட்டு பொண்ணு நல்லார்க்கணும்னுதான் சொல்றேன். என்னைக் கேட்டா இனிவர காலத்துல கல்யாணத்துக்கு ஜாதகம் பார்க்கறதை விட, பிளட் குரூப் பாக்கறதும் மெடிகல் ஃபிட்னஸ் பாத்தும் கல்யாணம் பண்றதுதான் பெட்டரார்க்கும். ஜாதகத்துல உடம்புக்குள்ள இருக்கற வியாதியெல்லாம் தெரிஞ்சுடுமா என்ன?” 

சுஜிதா மாடிக்கு செல்ல, சாரதா கலக்கத்தோடு அவளைப் பார்த்தாள். 

போன் அடித்தது. 

எழுந்து சென்று எடுத்தார். சம்பத்தான் எதிர்முனையில் பேசினார். 

“மூணு மண்டபம் ஃபிரியார்க்கு அந்த தேதில சாரதா. ஒண்ணு சிட்டிலயே இருக்கு. ஆனா சின்னது. மத்த ரெண்டும் அண்ணாநகர்லயும், தாம்பரத்துலயும் இருக்கு இருபதாயிரத்து கிட்ட வாடகை. எதை புக் பண்ணட்டும்?” 

“எதுவும் பண்ண வேண்டாம். முதல்ல வீட்டுக்கு வாங்க. உங்ககிட்ட ஒரு முக்கயமான விஷயம் பேசணும்.”

“என்ன சாரதா” 

“முதல்ல வீட்டுக்கு வாங்க” 

சாரதா ரிஸீவரை வைத்தாள். 

அடுத்த ஒரு மணி நேரத்தில் சம்பத் ஒரு ஆட்டோவில் வீட்டுக்கு வந்தார். 

”என்ன சாரதா..திடீர்னு குண்டைத் தூக்கி போடற? ஏன் மண்டபம் வேணான்ன?” 

“அதுக்க முன்னாடி எனக்கு ஒரு விஷயம் தெரிஞ்சாகணும்.” 

“என்ன?” 

“மாப்ள பிரவீணுக்கு உடம்புல எந்தக் கோளாறும் வியாதியும் இல்லன்னு கம்ப்ளிட்டா மெடிகல் செக்கப் பண்ணி சர்ட்டிபிகேட் தரணும். நம்ம டாக்டர்கிட்டதான் செக்கப் பண்ணிக்கணும்.” 

”உனக்ககென்ன பைத்தியம் கிய்த்தியம் பிடிச்சிடுச்சா?” 

”அப்டிதான் வெச்சுக்குங்க. எனக்குத் தேவை டாக்டர் சர்ட்டிபிகேட். அந்த பையனுக்கு ஏதோ வியாதின்னு நா கேள்விப்பட்டேன். சந்தேகப்பட்டுக் கிட்டே எம்பொண்ணை அவனுக்கு கட்டி வெக்க முடியாது. நா கேக்கறதுல ஒண்ணும் தப்பில்லயே”. 

“அந்த பையனை எனக்குத் தெரியும் சாரதா. அவனுக்கு எந்தக் குறையும் இல்ல.” 

”அதை டாக்டர் சொல்லட்டும். அப்பறம்தான் நிச்சய தார்த்தம்!” சாரதா பிடிவாதமாக இருந்தாள். 

“நாம்ப இப்டி கேட்டா அவங்க என்ன நினைச்சுப்பாங்க சாரதா? நம்ம பொண்ணுக்கு குறையிருக்கான்னு அவங்க கேட்டா? இவளையும் மெடிகல் செக்கப்புக்கு அனுப்புவயா?” 

“அனுப்பிட்டா போச்சு. நம்ம கிட்ட குறையிருந்தாதானே பயப்படணும்” 

சம்பத் அவளை வெறித்துப் பார்த்தார். 

“அந்த பையனுக்கு வியாதின்னு உனக்கு யார் சொன்னாங்க சாரதா?” 

“யாரோ சொன்னாங்க அதைப் பத்தி என்ன இப்போ?” 

”யாருன்னு சொல்லு. அதை வெச்சே அவங்க சொல்றது உண்மையா புரளியான்னு சொல்றேன். தெருவுல போறவங்க சொல்றதையெல்லாம் கேட்டுக்கிட்டு ஆடக்கூடாது சாரதா.” 

“தெருவுல போறவங்க ஒண்ணுமில்ல” 

“பின்னே?” 

“இந்த வீட்டுக்கு வரப் போறவங்கதான்”

“யாரைச் சொல்ற…?” 

”நம்ம சுஜிதான்” 

“அவளுக்கெப்டி தெரியுமாம்?” 

“இவனும் அவங்க டாக்டரும் பேசிட்ருந்ததை இவ கேட்டாளாம்.” 

”அந்த பொண்ணு உன்னை குழப்பியிருக்கா சாரதா.” 

”அவ ஏன் என்னைக் குழப்பணும்? இதுல அவளுக்கென்ன லாபம்? உங்களுக்கு அந்த பொண்ணு மேல என்னிக்குமே பாசம் கிடையாது. அவ வந்ததுலேர்ந்து வெறுப்புதான். ஆனா நா அவளை நம்பறேன்.” 

“அப்பொ என்னைக் கூட நம்பமாட்ட?” 

”சந்தேகத்தோட ஒரு நல்ல காரியம் செய்ய வேண்டாம்ங்கறேன். புரிஞ்சுக்கிட்டா சரி” 

”ஓ.கே.ஆகாஷ் வரட்டும். அவங்கிட்டயும் உன் சந்தேகத்தை சொல்லு. அவன் என்ன சொல்றான்னு பார்ப்போம். அதுக்கப்பறம் முடிவெடுப்போம்.” 

இதற்குமேல் உன்னிடம் பேசத் தயாராயில்லை என்பது போல் சம்பத் வெறுப்போடு மாடிக்குச் சென்றார். அவர் வருவது கண்டதும் சுஜிதா தன் அறைக்குள் சட்டென்று நகர்ந்து மறைவதை வினாடி நேரத்தில் அவர் கண்கள் கவனித்தது. ஏன் இந்தப் பெண் இப்படி குட்டையைக் குழப்பகிறாள். இவளுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் தானே பிரவீணின் அம்மாவிடம் தன் வீட்டு நிலவரத்தை எல்லாம் வெளிப்படையாக சொல்லி, சுஜிதாவின் வீட்டில் தன் மனைவி எதையும் எதிர்பார்த்து ஏமாந்து போய், அந்த ஏமாற்றம் காதலர்களை பிரித்து விடும் அளவுக்கு போய்விடக்கூடாது என்பதால் சுஜிதாவின் வீட்டில் குறைந்த சீர் வரிசை கேட்டால் போதும் என்ற அளவுக்கு சாரதாவின் மனதை மாற்ற வைத்தார் என்றால் அது இந்த பெண்ணின் நல்வாழ்வுக்காகத்தானே. 

ஆனால் இந்தப் பெண் மட்டும் யாருக்கும் நல்லது செய்யக் கூடாது என்று கங்கணம் கட்டிக் கொண்டாற்போல் ஏன் நடந்து கொள்கிறாள்? இவளுடைய சுபாவம் தெரிந்துதான் ஆகாஷ் இவளைக் காதலிக்கிறானா அல்லது காதல் எல்லாவற்றையும் ஆராய்ந்து பார்க்கவிடாமல் செய்துவிட்டதா? இன்று சங்கீதாவுக்கு பிரச்சனை தரும் குணம் நாளைக்கு ஆகாஷுக்கே பிரச்சனை கொடுக்க ஆரம்பித்தால் என்ன செய்வான்? காதலி என்ற அந்தஸ்தில் இருக்கும்போதே இந்த வீட்டை ஆட்டி வைக்கிறவள், மனைவி என்ற மரியாதை கிடைத்ததும் எவ்வளவு ஆட்டி வைப்பாள்! இப்போதே அடக்க முடியாத நிலையில், அப்போது யாரால் இவளை அடக்க முடியும்..? சம்பத் பெருமூச்சு விட்டார். 

அப்பா மூலம் அன்றிரவு விஷயம் கேள்விப்பட்ட சங்கீதா கொதித்துப் போனாள். நேராக அம்மாவிடம் வந்தாள். சுஜிதா ஹாலில் உட்கார்ந்து ஆங்கில இதழ் ஒன்றை படித்துக் கொண்டிருந்தாள். 

“ஏம்மா என்ன சொன்ன நீ அப்பாகிட்ட?” 

சாரதா நிமிர்ந்து அவளை முறைத்துப் பார்த்தாள். 

”நீ சின்னப் பொண்ணு. தேவையில்லாத விஷயத்து லல்லாம் தலையிடாம போய் வேலையைப் பாரு” 

”யாரோ ஏதோ சொன்னாங்கன்னு நீயும் தலைகால் புரியாம ஆட வேண்டாம்” 

“சொலறவங்க உன் நன்மைக்காகத்தான் சொல்றாங்கன்ற நினைப்பிருக்கட்டும்” 

“ஆடு நனையுதேன்னு எந்த ஓநாயும் வருத்தப்பட வேண்டாம்னு சொல்லி வை” 

“ஷட் அப் சங்கீதா! யாரைப் பார்த்து ஓநாய்ங்கற?” சுஜிதா ஆத்திரத்தோடு குறுக்கிட்டாள். 

‘ஆமா நா யாரையோ ஓநாய்னா உங்களுக்கு ஏன் பொத்துக்கிட்டு வருது!” 

“வாய் மூட்றி. அவ உன் அண்ணியாகப் போறவன்ற மரியாதை இருக்கட்டும்” 

”முதல்ல அண்ணியாகட்டும். இப்பொ சாதாரண பேயிங் கெஸ்ட்தானே..? அந்த நினைப்போட அவங்களை இருக்கச் சொல்லு அனாவசியமா நம்ம வீட்டு விஷயத்துல எல்லாம் தலையிட வேண்டாம்” 

சுஜிதா முகம் சிவக்க ஏதோ சொல்ல முற்பட சாரதா அவளை கையமர்த்தி விட்டு கோபத்தோடு பெண்ணைப் பார்த்தாள். 

“அந்த பையனுக்கு உண்மையிலயே ஒரு வேளை பெரிய வியாதியோ வேற குறையோ இருந்தா என்னடி செய்வ? ஏம்மா இப்டி பண்ணி வெச்சன்னு என்னைத்தானே கேப்ப?” 

”மாட்டேன். தாலி கட்டின அடுத்த நிமிஷமே அவருக்கு ஏதாவது ஆச்சுன்னாலும் பரவால்ல… எந்த கஷ்டமானாலும் அனுபவிக்கத் தயாரார்க்கேன். எனக்காக யாரும் உருகத் தேவையில்லை” 

பெண் இப்படி பேசுவாள் என்பதை எதிர்பார்க்காத சாரதாவின் முகம் அதிர்ச்சியில் உறைந்து போயிற்று. அவளை வேறு விதமாகத் தான் வழிக்கு கொண்டு வரவேண்டும். என்ன வழி? அவள் யோசித்த நேரம், சுஜிதா விறுவிறுவென்று மாடிக்குச் சென்றாள். ஒரு சிறிய சூடசேஸில் தன் துணிமணிகளை அடைத்துக் கொண்டு போன வேகத்தில் கீழே இறங்கி வந்தாள். 

”நா கிளம்பறேன் ஆண்ட்டி. இவ்ளோ நாள் எனக்கு சோறு போட்டதுக்கு ரொம்ப நன்றி” 

”என்னம்மா சொல்றே… எங்க கிளம்பிட்ட நீ?”

“மரியாதையில்லாத வீட்ல இனிமே இருக்கறது கஷ்டம் ஆண்ட்டி. ஆகாஷ் வந்தா சொல்லிடுங்க, எல்லாரும் நல்லார்க்கணும்னு நாந்தான் பைத்திம் மாதிரி ஆசைப்பட்டேனே தவிர, நா நல்லார்க்கணும்னு மத்தவங்க யாரும் விரும்பலங்கறது எனக்கு புரியவேல்ல. உங்க பொண்ணு, உங்க வீட்டு கல்யாணம். நா சொன்னதை யெல்லாம் மனசுலேர்ந்து அழிச்சுடுங்க. நா வரேன்” சுஜிதா கிளம்ப சாரதா பதைபதைத்துப் போனாள். 

“என்ன சுஜி…நா உன்னை ஏதாவது சொன்னேனா? அவ கிடக்கா விடு. ஆகாஷ் வந்தா என்னை இல்ல கோவிச்சுப்பான். நா திட்டு வாங்கணும்னு ஆசையார்ந்தா போ. எம்மேல அன்பிருந்தா இரு. இனிமே உனக்கு எந்த மரியாதைக் குறைவும் வராம நா பார்த்துக்கறேன்” 

“இல்ல ஆண்ட்டி. அன்பு நிறைய இருக்கு. ஆனாலும் இங்க இனிமே இருக்கறது கஷ்டம். தப்பா நினைச்சுக்காதீங்க” 

சுஜிதா கிளம்பினாள். 

“ஆகாஷ் வந்ததும் சொல்லிட்டு கிளம்பு சுஜி” 

“வேணாம் ஆண்ட்டி பிரச்சனை இன்னும் பெரிசாகும் என் பிரண்டுக்கு போன் பண்ணி சொல்லிட்டேன். அவ எனக்காக காத்துட்ருப்பா” 

சாரதா எவ்வளவு சொல்லியும் கேட்காமல் சுஜிதா அந்த வீட்டை விட்டுக் கிளம்பி வாசலுக்கு வந்தாள். ஆட்டோ ஏதாவது கிடைக்குமா என்று பார்த்துக் கொண்டிருக்கும் போது ஆகாஷின் கார் வந்து நின்றது. 

“என்ன சுஜி… சூட்கேசும் கையுமா எங்க கிளம்பிட்ட இந்த நேரத்துல?” ஆகாஷ் வியப்போடு கேட்டான். கார் சத்தம் கேட்டு வாசலுக்கு வந்தாள் சாரதா. 

சங்கீதா அப்பாவைப் பார்த்தாள். 

“நாடகம் பிரமாதமா இருக்குல்ல?” சம்பத் சிரித்தார். 

பத்து நிமிடம் கழித்து ஆகாஷ் கோபமாக உள்ளே வந்தான். சங்கீதாவை முறைத்துப் பார்த்தான். சுஜிதாவை உள்ளே அழைத்தான். அவள் தயங்கியபடி உள்ளே வர அவள் பின்னால் சாரதாவும் வந்தாள். ஆகாஷ் சங்கீதாவைப் பார்த்தான். 

“இவ இங்க இருக்கறது உனக்கு பிடிக்கலையா?” 

”என் விஷயத்துல தலையிடறதுதான் பிடிக்கலன்னு சொன்னேன்” 

”ஓகே தலையிட அவளுக்கு உரிமையில்லன்னு நீ நினைச்சா, இனிமே நானும் உன் விஷயத்துல தலையிடல. நானும் வீட்டைவிட்டுப் போறேன். உங்கல்யாணத்துக்குக் கூட வரமாட்டேன். சந்தோஷம்தானே. இரு சுஜி…நானும் வரேன்” ஆகாஷ் விறுவிறுவென்று மாடிக்குச் செல்ல சங்கீதா பதறிப்போய் அப்பாவைப் பார்த்தாள். 

அத்தியாயம்-30 

எத்தனை விறகுகள் வந்து விழுந்தாலும் அணையாத நெருப்புதான் பெண். எத்தனை நதிகள் வந்து கலந்நாலும் நிரம்பாத கடல்தான் பெண். – உபநிடதம் 

“இப்ப நா என்ன சொல்லிட்டேன்னு நீ இப்டி அழுற?” அழுது கொண்டிருந்த சத்யாவைப் பார்த்து எரிச்சலோடு கேட்டாள் அத்தை. 

“இதோ பார் சத்யா ஊர்ல உலகத்துல நடக்காத விஷயத்தையா நா சொல்றேன். அவங்கவங்களுக்கு ஆசாபாசம் இருக்கக் கூடாதுன்றயா? வேற எவளோ வரதுக்கு உன் தங்கச்சியே இருந்துட்டுப் போகட்டும்ங்கறேன். இதுல என்ன தப்பு? உன்னைக் கட்டிக்கிட்ட தோஷத்துக்கு எம்பிள்ளை ஆயுசுக்கும் அவதிப்படணுமா சொல்லு. எனக்கிருக்கறது ஒரே பிள்ளை. அவன் வம்சம் பூத்துக்குலுங்கணும்ங்கற ஆசை எனக்கிருக்காதா? ஒரு ஆம்பளை அக்கா தங்கச்சி ரெண்டு பேரையும் கட்டிக்கறது வழக்கத்திலுள்ள விஷயம்தானே? அழுகைய நிப்பாட்டிட்டு நிதானமா யோசி. சரண்யாவைக் கட்டிக்குடுக்க உங்கப்பா ஏதாவது சேர்த்து வெச்சுட்டு போயிருக்காரா? இல்ல உங்கிட்டதான் காசு இருக்கா? நா சொல்றபடி நடந்தா, உன் கடமையும் முடிஞ்சிடும்! காசும் மிச்சமாகும். நம்ம வீடும் நிறையும். நீ இதுக்கு ஒத்துக்காட்டியும் நா விடறதால்ல. சரவணனுக்கு நா வேற பெண்ணைப் பார்த்து கட்டி வெக்கத்தான் போறேன். வரவ உன்னையும் உன் தங்கச்சியவும் சேர்த்து வெளிய விரட்டுவா. பரவால்லன்னா சொல்லு” 

அத்தை மிரட்டலாகச் சொல்லிட்டு எழுத்து செல்ல சத்யா பிரமை பிடித்தவள் மாதிரி அமர்ந்திருந்தாள். அத்தை சொன்னதையெல்லாம் கேட்டு மிரண்டு போயிருந்தது அவள் மனசு. உரிமைகளை தங்கையிடமே இழப்பது மேலா அல்லது வேறு யாரோ ஒருத்தியிடம் இழந்துவிட்டு தங்கையின் திருமண பாரத்தை தலையில் சுமந்து கொண்டு புருஷனைப் பிரிந்து செல்வது மேலா? நினைக்கும்போதே கதிகலங்கியது. அந்த அளவுக்கெல்லாம் அவளுக்குத் துணிச்சல் இல்லை. அப்படியே உரிமைகளை விட்டுக் கொடுத்துவிட்டு சரண்யாவுடன் வெளியில் போய், எப்படியோ சரண்யாவுக்கும் ஒரு திருமணம் ஆகி, அவளும் போயிவிட்டால் தன் நிலை? தனியாக வாழ முடியுமா தன்னால்? நிச்சயம் முடியாதென்று தோன்றியது. வியர்த்தது. நெஞ்சுக்குள் பக்பக்கென்று ஒரு படபடப்பு. 

அத்தை மறுபடியும் கையில் ஹார்லிக்ஸோடு வந்தாள். ”இந்தா இதைக்குடி ” டம்ளரை சத்யாவிடம் கொடுத்து விட்டு அவளையே பார்த்தாள். 

”யோசிச்சயா?” 

“எனக்கு ஒண்ணும் புரியலத்த”

“இதுல புரிய என்ன இருக்கு? 

“சரண்யாவை அவனுக்கு கட்டி வெச்சுட்டா அவளே உன்னை நல்லா கவனிச்சுக்குவா. சரவணன் உங்கிட்ட ஆசையா பேசினாலும் தடுக்க மாட்டா. இதுதான் உனக்கு நல்லது. அவங்களுக்கு குழந்தை பிறந்தா நீயும் வித்யாசமில்லாம தூக்கிக் கொஞ்சலாம். என் மனசும் நிறைஞ்சிடும். அதனால நா சொன்னா மாதிரியில்லாம 
நீயாவே அவங்களை ஒண்ணு சேர்த்து வைக்க முயற்சி செய். ரெண்டு பேர்கிட்டயும் நைச்சியமா பேசி அவங்க மனசை மாத்தற பொறுப்பு உன்னோடது சரியா?” 

சத்யா கண்ணீர் பளபளக்க தலையசைத்தாள். 

“இப்பத்தான் நல்ல பொண்ணு! இந்த கல்யாணம் நடந்தாலும் உன் கிரீடத்துக்கு ஆபத்து வராது. அதுக்கு நா கேரண்ட்டி. சரியா?” 

அத்தை காலி டம்ளரை எடுத்துக் கொண்டு சந்தோஷமாக உள்ளே சென்றாள். 

சரவணன் அன்று சீக்கிரமாகவே வந்து விட்டான். காலையில் கோபித்துக் கொண்டு போனதில் அவனுக்கே வருத்தமாக இருந்தது. இத்தனை வருடத்தில் அம்மாவிடம் இப்படி கோபித்துக் கொண்டு சாப்பிடாமல் வந்ததில்லை. அவன் வெளியில் வந்த பிறகு அம்மா சத்யாவிடம்தான் இந்த எரிச்சலைக் காட்டியிருப்பாள். சத்யாவை என்னவெல்லாம் திட்டினாளோ? பாவம் சத்யா மிகவும் நொந்து போயிருப்பாள். சீக்கிரமே வீட்டுக்கு போய் சத்யாவை வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும். சினிமா பார்த்து எவ்வளவு நாளாகிறது. சேது படம் பார்க்க வேண்டும் என்று பலமுறை சொல்லிவிட்டாள் தியேட்டருக்குப் போய் அட்வான்ஸ் புக்கிங் பண்ணிக் கொண்டு வீட்டுக்கு வந்தான். 

அவனைப் பார்த்ததும் அம்மா கோபத்தோடு முகத்தைத் திருப்பிக் கொண்டாள். அம்மாவை பிறகு சமாதானப்படுத்திக் கொள்வோம் என்று நினைத்தவன் சத்யாவிடம் வந்தான். 

“சினிமா போலாம் கிளம்பு சத்யா.” 

”நானா?” 

“பின்ன நீதான் வரணும்” 

“என்ன படம்?” 

“நீ பாக்கணும் பாக்கணும்னு சொன்னயே அந்த படம்தான்.”

“எத்தனை மணி ஷோ” 

”ஏழு மணி.” 

“அதுக்கெதுக்கு இப்பவே கிளம்பச் சொல்றீங்க?”

“கிளம்பும்மா.அப்டியே ஜாலியா போய்ட்டு வருவோம்”

“குளிச்சுட்டு வந்துடவா?’ 

“சீக்கிரம் வா” 

”அம்மா கோவமார்க்காங்க. போய் சமாதானப்படுத்தி சினிமாக்கு போறோம்னு சொல்லுங்க” 

”சினிமாக்கு போறோம்னா இன்னும் கோவம் அதிகமாகும். வந்து சொல்லிக்கலாம்.” 

“காப்பி கீப்பி குடிக்க வேணாமா?” 

”எல்லாம் வெளிய பார்த்துக்குவோம். சீக்கிரம் கிளம்பி வா” 

சத்யா பீரோ திறந்தாள். புடவை தேடும் சாக்கில் நேரம் கடத்தினாள். 

“என்ன சத்யா புடவை தேடறயா நெய்யறயா?” 

“ஜாக்கெட் எல்லாம் போட்டு போட்டு கலர் மங்கிடுச்சுங்க.” 

“ஏதாவது ஒண்ணைப் போட்டுக்கிட்டு வாம்மா.” 

சத்யா கடிகாரத்தைப் பார்த்தாள். மணி ஐந்தே கால். இன்னும் அரை மணியில் சரண்யா வந்துவிடுவான். அதுவரை புறப்படக் கூடாது. எப்படியாவது சமாளிக்க வேண்டும் என்று நினைத்தபடி குளிக்கச் சென்றாள். நிறுத்தி நிதானமாக குளிக்க ஆரம்பித்தாள். 

சரவணன் பேப்பர் பிரித்து படிக்க ஆரம்பித்தான். பேப்பரில் ஆழ்ந்ததில் நேரம் போனதே தெரியவில்லை. ஐந்தே முக்காலுக்கு சரியாக சரண்யா உள்ளே வந்தாள். சரவணனைப் பார்த்து வியந்தாள். 

“அட அதிசயமா சீக்கிரம் வந்துர்க்கீங்க! அக்கா எங்கே?”

“குளிக்கப் போனா” என்றபடி மணி பார்த்தவன் எழுந்தான்.

”எவ்ளோ நாழியா குளிப்பா இவ? ஒரு இடத்துக்கு கிளம்புன்னா சுறுசுறுப்பு வேணாம்” என்றபடி பாத்ரூம் பக்கம் வந்தான். 

“எவ்ளோ நாழி சத்யா? மணி ஆறாகப் போவுது. சரண்யா கூட வந்தாச்சு”. 

அவன் குரல் கேட்டதும் சத்யாவின் முகம் மலர்ந்தது. உடைகளை அணிந்து கொண்டு கதவைத் திறந்தவள் முகத்தை ஒரு மாதிரி வைத்துக் கொண்டு அவனைப் பார்த்தாள். 

“யப்பா வந்தயா.ஒரு வழியா? சரி போய் சீக்கிரம் கிளம்பு. நா முகம் கழுவிக்கிட்டு வரேன்” 

“ஒரு நிமிஷம்ங்க” 

“என்ன?” 

“சோப்புல கால் வெச்சு உள்ள விழுந்துட்டேன். கால் நல்ல சுளுக்கிடுச்சு. நடக்க முடியல.” 

“அடடா..என்ன சத்யா இது.. ஜாக்ரதையா குளிக்கக் கூடாது? காலை நல்லா உதறு. சரியாய்டும்.” 

”இல்லைங்க. முடியல.” சத்யா மிகுந்த சிரமத்தோடு நொண்டினாள். சரவணன் சலிப்போடு அவளைப் பார்த்தான். அவளைத் தாங்கிப் பிடித்து உள்ளே அழைத்து வந்தான். 

“என்னாச்சு?” சரண்யா பதறினாள். 

“சினிமாக்கு கூட்டிட்டு போலாம்னு சீக்கிரம் வந்தா காலைச் சுளுக்கிட்டு நிக்கறா. ஒண்ணு பண்ணு சரண் டிக்கட் வேஸ்ட் ஆக வேண்டாம். நீயும் அம்மாவும் போய்ட்டு வாங்க. நா அம்மாட்ட சொல்றேன்.” 

சத்யாவின் கால் சுளுக்கு வெறும் நடிப்புதான் என்பதைப் புரிந்து கொண்ட அத்தை உள்ளுக்குள் அவளை மெச்சியபடி தானும் நடிக்கத் தயாரானாள். 

“எனக்கு காலேலேர்ந்தே மண்டை இடிக்குது. என்னால முடியாதுடா. மூணு மணி நேரம் அங்க போய் உக்காந்தா மண்டை வெடிச்சுடும்.” 

“இந்த டிக்கெட்டை கிழிச்சுப் போடு சரண்” சரவணன் டிக்கெட்டை அவளிடம் கொடுத்துவிட்டு சத்யாவின் கால் சுளுக்கை எடுக்க முடியுமா என்று பார்த்தான். 

“ஏய் ஏய்…சரண்…நீ பாட்டுக்கு கிழிச்சுடாதே. இப்ப என்ன குடிமுழுகிப் போச்சு. அம்மாவாலயும் முடியலன்னா கிழிச்சுடறதா? சரணும் நீங்களும் போய்ட்டு வரது! வாங்கின டிக்ககெட்டை வேஸ்ட் பண்ணுவானேன். காசென்ன கொட்டிக் கிடக்குதா கிழிச்சு பறக்கவிட?” 

சத்யா சொல்ல சரண்யா, சரவணன் இருவருமே திகைத்தார்கள். சரவணன் சத்யாவை உற்றுப் பார்க்க, அவள் அவசரமாய் விழிகளைத் திருப்பிக் கொண்டாள். 

”அவ சொல்றதும் சரிதானேடா. நீங்க ரெண்டு பேரும் போய்ட்டு வாங்க” அம்மாவின் ஜால்ராவில் சரவணனின் முகம் யோசனையில் ஆழ்ந்தது. ஒரு நிமிட யோசனைக்குப் பிறகு சரண்யாவைப் பார்த்தவன், ”சரி கிளம்பு சரண். நாம போய்ட்டு வருவோம்” என்றான். சரண்யா தயங்கியபடி சத்யாவைப் பார்த்தாள். 

“போய்ட்டு வா சரண்” 

சத்யா அழுத்தமாகச் சொல்ல வேறுவழியின்றி கிளம்பினாள். அவர்கள் இருவருமே ஜோடியாகச் செல்வதை நிறைவோடு பார்த்தாள் அத்தை. சத்யா அழுவதற்கு இடம் தேடி டாய்லட்டுக்குச் சென்றாள். 

“சினிமா போணுமா சரண்?” சற்று தூரம் வந்ததும் கேட்டான் சரவணன். 

“நீங்கதானே கூப்ட்டீங்க! எனக்கு போணும்னு இல்ல. வாங்க வீட்டுக்கே போய்விடுவோம்” 

“இல்ல வேணாம். நா உங்கிட்ட கொஞ்சம் பேசணும் சரண். ஏதாவது ரெஸ்ட்டாரண்ட் போலாமா?” 

“ம்..” 

சரவணன் நல்ல ஹோட்டலாகப் பார்த்து நுழைந்தான். டிபன் ஆர்டர் பண்ணிவிட்டு சரண்யாவைப் பார்த்தான். 

“நம்ம வீட்டுல கொஞ்ச நாளா ஒரு நாடகம் நடக்குது கவனிச்சயா சரண்?” 

“எதைச் சொல்றீங்க?” 

“எங்கம்மாவும் உங்கக்காவும் செய்யற கூத்தைத்தான் சொல்றேன்.” 

சரண்யாவுக்கு அவன் சொல்வது புரியவில்லை. 

“காலையில் நடந்த தகராறையா?” 

”சத்யாவோட கால் சுளுக்கு நிஜம்னு நினைக்கறயா?” 

“பின்னே?” 

“நாடகம். எங்கம்மாவோட மண்டையிடியும் அப்படித்தான். எதுக்கு இந்த நாடகம்னு புரியுதா?” 

“எதுக்கு?” 

“உன்னையும் என்னையும் ஜோடி சேர்க்கத்தான்!” 

சரவணன் சொன்னதும் சரண்யா தூக்கிவாரிப்போட அவனைப் பார்த்தாள். 

“இந்த பொம்பளைங்க புத்திய என்னன்னு சொல்றது? எங்கம்மாக்கு பாட்டியாகணும். அதுக்காக என்ன வேணா செய்யத் தயாராய்ட்டாங்கன்னு நினைக்கறேன்.” 

சரண்யா திகைப்போடு அவனை மலங்க மலங்க பார்த்தாள். 

”நா ஒண்ணு சொன்னா வருத்தப்படுவயா சரண்?” 

“என்ன?” 

“இனிமேலும் நீ எங்க வீட்ல இருக்கறது உனக்கு நல்லதில்லன்னு நினைக்கறேன்.” 

“ஹாஸ்டல்ல சேர்ந்துக்கறேன்னு அப்பா போனதுமே நான் சொன்னேன். நீங்கதான் பிடிவாதமா கூட்டிட்டு போனிங்க.” 

“தப்புதான் சரண். இப்டியெல்லாம் நடக்கும்னு தெரிஞ்சிருந்தா கூட்டிட்டு போயிருக்கமாட்டேன். அந்த தப்பை நானே சரி செய்துடறேன்.” 

“ஹாஸ்டல்ல பணம் கட்டணுமே. சம்பத் மாமாவோட நிலைமையே இப்ப சரியில்ல. எனக்கும் வேலையில்ல. உங்களுக்கும் மாசா மாசம் அவ்ளோ பணம் கட்டறது கஷ்டமாச்சே” 

”கஷ்டம்தான் நா வேற ஒரு வழி யோசிக்கிறேன். அதுக்கு இன்னும் ரெண்டு மூணு நாள் ஆகலாம். ஏற்பாடு பண்ணிட்டு அப்பறம் உன்னைக் சுட்டிட்டு போறேன். அதுவரை இவங்க நாடக மெல்லாம் நமக்கு தெரிஞ்சதாவே காட்டிக்க வேண்டாம் சரியா?” 

சரண்யா அவனை நன்றியோடு பார்த்தாள். “எங்கக்கா புண்ணியம் செய்திருக்கா. உங்களை மாதிரி நல்ல புருஷன் கிடைக்க. இதே இன்னொரு ஆம்பளையார்ந்தா அவளைத் தள்ளி வெக்க தயங்கியிருக்க மாட்டான்.” 

சரவணன் புன்னகைத்தான். ”எனக்கு வேற ஒரு ஆச்சர்யம் சரண்.” 

“என்ன?” 

”நீ சம்பத் மாமாவோட பையன் ஆகாஷை விரும்பறன்னு சத்யாவே எங்கிட்ட பலமுறை சொல்லியிருக்கா. அப்டியும் என்னையும் உன்னையும் சேர்த்து வெக்கணும்னு முடிவுக்கு வந்திருக்கான்னா அவ புத்தி கெட்டுப் போச்சா இல்ல இது எங்கம்மாவோட நிர்பந்தமா?” 

அவன் கேட்க சரண்யாவின் முகம் மாறியது. 

“என்ன சரண் ஒரு மாதிரியாய்ட்ட? உங்கக்கா சொன்னது நிஜம்தானே?” 

“நிஜம்தான்.ஆனா இப்பொ எதுவும் இல்லை.” 

“ஏன் சரண்?” 

“நாம நினைக்கறதெல்லாம் நடந்துடறதில்லையே” 

“ஆகாஷ்க்கு உன்னைப் பிடிக்கலையா?”

“நாம வேற ஏதாவது பேசுவோமே” 

சரண்யா விரக்தியோடு சொல்ல சரவணன் அவளை இரக்கத்தோடு பார்த்தான். 

சினிமா முடியும் நேரத்திற்கு இருவரும் வீட்டுக்கு கிளம்பினார்கள். அதுவரை மவுண்ட்ரோடு முழுக்க நடந்தார்கள். 

“சினிமா எப்டி இருந்துச்சுடுடி?” ‘சத்யா கேட்டாள். 

”எனக்கும் பைத்தியம் பிடிச்சுட்டா நல்லார்க்கும்னு தோணுது”

சரண்யாவின் பதிலில் சத்யா ஸ்தம்பித்துப் போனாள். ஏன் அப்படிச் சொன்னாள் என்பது புரியாமல் குழம்பி நின்றாள்.

– தொடரும்…

– வருவாள், காதல் தேவதை… (நாவல்), முதற் பதிப்பு: 2012, தேவி வெளியீடு, சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *