கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம் முதல் அத்தியாயம்  
கதைப்பதிவு: December 21, 2023
பார்வையிட்டோர்: 8,313 
 
 

(2004ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 1-4 | அத்தியாயம் 5-8

முன்னுரை

1945-46-இல் என்னுடைய நண்பர் ஒருவருடன் ஓர் இ.தே.ரா. மேஜரைச் சந்தித்தேன். அவர் சொல்லிய சில தகவல்களை வைத்துக் கொண்டு ஒரு நாவல் எழுத வேண்டும் என்று தோன்றிற்று. அச்சமயம் என்னை நாவல் கேட்டுக்கொண்டு வந்த என் நண்பர்- பிரசுரகர்த்தர்- அ.கி.கோபாலனிடம் அதை எழுதித் தருவதாக ஒப்புக்கொண்டேன். சாத்தனூரில் ஒருநாள் கால அளவில் நடப்பதாகக் கதையை வைத்து ஒருநாள் என்று பெயர் வைத்துச் சொன்னேன். 1946-லே ஒரு பகுதியை எழுதிய நான் நாவலை 1950-ல்தான் முடித்தேன். 

அந்த இ.தே.ரா. வீரன் வெளிநாடுகள் பலவற்றில் சுற்றியவன். நான் 1950-க்கு முந்திய காலத்தில் வெளிநாடு சென்றதில்லை. ஆகவே சாத்தனூர்ச் சர்வமானிய அக்கிரஹாரத்துத் தெருக்களில் இருந்து மாத்திரம் வெளியூர்த் தகவல்களை அவசியத்துக்கு ஏற்பத் தருவது என்று தீர்மானித்தேன். இரண்டொருவரிடம் கேட்டறிந்து இரண்டொரு சில்லறை விஷயங்களையும் நாவலில் அவசியம் ஏற்பட்ட இடத்தில் சேர்த்துக் கொண்டேன். 

பலவீனமான உள்ளங்கள் பலவற்றில் ஒரு புது அனுபவம் தாக்குகிறபோது அந்த அநுபவ வேகம் காரணமாகப் புதுவெள்ளத்தால் பழம் அழுக்குகள் அடித்துக்கொண்டு போகப்படுகிற மாதிரி பழம் நினைப்புகள், லட்சியங்கள் எல்லாமே போய்விடுகின்றன என்பது நம்முடைய தினசரி அநுபவம். மூர்த்தி பலவீனமானவன் தான்; ஹிட்லருக்கும் சுபாஷ் சந்திர போஸுக்கும் அடிமைப்பட்ட மாதிரியே தன் மாமாவுக்கும் மாமிக்கும் மனைவியாகப் போகிற (?) மங்களத்துக்கும் அடிமைப்பட்டுக் கிடக்கப் போகிறவன்தான் என்று தொனிக்கவே கதையை அமைத்துக் கொண்டேன். 

சாத்தனூர் நிலைக்களன் உண்மையிலேயே பலமானதுதான். சர்வமானிய அக்கிரஹார வாசிகள் ஒவ்வொருவரும், ‘என்னைப்பற்றி எழுது! என்னைப் பற்றி எழுது!’ என்று என் கண்முன் நிற்கிறார்கள். ‘ஒருநாள்’ எழுதி முடிக்குமுன் நின்றுகொண்டே இருந்தார்கள். கதை முக்கியம் அல்ல; மனிதர்களும் அந்த மனிதர்களுக்கு இடையே உள்ள உறவுகளுந்தான் முக்கியம் என்கிற எண்ணத்துடன்தான் சாத்தனூர்ச் சர்வமானிய அக்கிரஹார வாசிகளைப் பற்றி நான் இவ்வளவு விரிவாக எழுதினேன். என் தேவை தேவை என்று சொல்வதைவிட ஆசை என்றும் சொல்லலாம்) அவர்களைப் பற்றி எழுதிப்பார்க்க என்னைத் தூண்டிற்று. மூர்த்தியின் சாத்தனூர் வருகையைச் சாக்காக வைத்துக்கொண்டு உற்சாகமாக எழுதினேன். அந்தப் பாத்திரங்களில் பலரும் உயிரோடு இருக்கிறார்கள் என்றால் அதற்கு என் கற்பனை காரணம் அல்ல; சாத்தனூர் வாசிகளேதான் காரணம். ‘நான் ஒரு புஸ்தகத்தில் இருக்க வேண்டியவன்; தவறுதலாகச் சாத்தனூர்ச் சர்வமானிய அக்கிரஹாரத்திலே உயிருடன் இருக்கிறேன்’ என்று அவர்கள் ஒவ்வொருவரும் என்னிடம்- இலக்கியாசிரியனாகிய என்னிடம்-வந்து என் காதில் மட்டும் பிரத்தியேகமாகச் சொன்ன மாதிரி எனக்குத் தோன்றுகிறது. என் அநுமதிக்காகக்கூடக் காத்திராமல் நேரே அவர்கள் ஓர் உரிமையுடன் என் நாவலுக்குள் நடந்து இடம் தேடிக் கொண்டுவிட்டார்கள். 

நான் சாத்தனூர் என்று சொல்லுகிற ஊரில் இருந்ததெல்லாம் என் கல்லூரிப் படிப்பு முடிந்தபிறகு இரண்டொரு வருஷங்கள்தான். அந்த இரண்டொரு வருஷங்களிலே நான் அறிந்துகொண்ட சாத்தனூர்வாசிகள் என் நினைவை விட்டு என் ஆயுள் உள்ளவரை அகல மாட்டார்கள். அதேபோல என் ஒருநாள் வாசகர்களுக்கும் இந்த மனிதர்களில் சிலராவது நல்ல நண்பர்கள் ஆகவேண்டும் என்கிற நினைப்புத்தான் என்னைத் தூண்டியது. அவர்களைப் பற்றி எழுத இந்த அளவில் நான் எதிர்பாராததையும்விட அதிகமாகவே எனக்கு வெற்றி கிடைத்துவிட்டது என்று நான் நினைக்கிறேன். 

என் நாவல்களிலே எனக்கு மிகவும் பிடித்த நாவல் எது என்று யாராவது கேட்டால் அதனாலேயே எனக்கு ‘ஒருநாள்’ தான் என்றே பதில் சொல்லத் தோன்றுகிறது. 

-க.நா.சுப்ரமண்யம் 

அத்தியாயம்-1

பங்கஜம் அதற்குமுன் ஒரு நாளும் அவ்வளவு அதிகாலையில் எழுந்ததில்லை. அவ்வளவு அதிகாலையில் எழுந்து செய்வதற்கு அவளுக்கு ஒன்றும் வேலையில்லை. வீட்டிலே, குழந்தை குட்டிகள். பிச்சுப் பிடுங்கல் எதுவும் கிடையாது. காபி போட்டுக் காலத்தில் தராவிட்டால் கோபித்துக்கொள்ளக் கணவன்கூடக் கிடையாது. 

ஆனால் கணவனைப் பற்றித் தொடர்ந்து சிந்திக்கிற மனநிலை யில் அவள் இல்லை. வாழ்க்கை பூராவும்தான் துயரில் ஆழ்ந்திருக்க வேண்டுமே – இந்த ஒரு நாளாவது, இந்த அறுபது நாழிகையாவது அவள் துயரத்திலிருந்து விடுபட்டிருப்பது நியாயமல்லவா? பெண்ணாகப் பிறந்ததற்கு உலகம் அந்த ஒரு நியாயத்தையாவது தனக்கு வழங்காமல் இருந்துவிடாது என்றுதான் அவள் எண்ணினாள். தன் துயரத்தைத் தானே நினைத்துப் பார்த்துக்கொள்ளாதிருப்பதற்கு யார் தயவு வேண்டும்? 

இந்த மாதிரித் துயரங்கள் வந்துவிட்டால் வயதானவர்கள் – கணவனுடன் நாற்பது ஐம்பது வருஷங்கள் வாழ்ந்து பிள்ளை குட்டி பேரன் பேத்தி பெற்றெடுத்தவர்கள் – மனம் கல்லாகி விட்டது என்று சொல்வதைக் கேட்டிருந்தாள் பங்கஜம். மனம் கல்லாவது என்பது இன்னும் அவளுக்கு ஏற்படாத ஒரு அநுபவம், மற்றவர்கள் சொல்கிறார்களே என்று இந்த முடியாத காரியத்தைச் சாதித்துவிட இந்த ஏழெட்டு மாதங்களாகவே அவள் முயன்றுகொண்டு வருகிறாள். 

ஆனால் பங்கஜத்தின் மனம் பங்கஜமாகவே இருக்கிறதே தவிர, கல்லாகி விடவில்லை. ராமாயணத்தில் வருகிற, அகலிகையைப்போல் யாராவது சபித்து, அந்தச் சாபமும் பலித்தால்தான், அவள் மனம் கல்லாக முடியும்போல் இருந்தது! 

வாசற்கதவின் குரங்குத்தாழ் திறப்பதற்குச் சிரமமாக இருந்தது. வேகமாகத் தட்டியதில் கையில் பட்டுவிட்டது. கை வலித்தது. 

மன வலியுடன் கை வலியும் சேர, பங்கஜம் வாசற்கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்து, திண்ணை ஓரத்துத் தூணில் சாய்ந்து கொண்டு நின்றாள். 

ஐப்பசி மாதந்தான் – எனினும் குளிர் விழுந்துவிட்டது. அதற்குள்ளாகவே; இழுத்துப் போர்த்துக்கொண்டேதான் நிற்க முடிந்தது பங்கஜத்தால். பொழுது இன்னும் விடியவில்லை. காற்று அதிகமாக இல்லை. மங்கிய நிலவொளி தேய்ந்து கொண்டே போய்ப் பகலை வரவேற்கக் காத்திருக்கிற நிலவொளி அக்கிரஹாரத்தில் பரவியிருந்தது. குளம், குட்டை, மரம், மட்டை எல்லாம் ஆடாமல் அசையாமல் அலை வீசாமல் நிலைத்திருந்தன. 

அக்கிரஹாரத்தில் அவ்வளவு அதிகாலையில் ஜன நடமாட்டமே இல்லை. ஒரு தலை முறைக்குமுன் என்றால், ஏன், பங்கஜத்துக்கே ஞாபகம் இருந்தது; பத்து வருஷங்களுக்கு முன்கூட ஐப்பசி மாதத்து அதிகாலையிலே யாராவது கிழங்கட்டைகள் எழுந்து போய் இதற்குள்ளாகவே நடுங்க நடுங்கக் காவிரியிலே குளித்து விட்டு வந்து, வீட்டில் காரியம் இருந்ததோ இல்லையோ, கை தடுக்கக் கால் தடுக்க மற்றவர்களையும் தூங்கவிடாமல் ஏதாவது பாத்திரங்களை உருட்டுவார்கள் – அல்லது ஸ்தோத்திரங்களை முணுமுணுப்பார்கள். பங்கஜத்திற்குக்கூட ஞாபகம் இருந்தது. 

ஒரு திட்டமான வாழ்க்கை, துயரம் எதையுமே மறப்பதற்குச் சிறந்த வழியாகத்தான் இருந்தது என்பதைப் பங்கஜம் சிந்திக்காமல் இருக்க முடியவில்லை. திட்டத்தையோ வாழ்க்கையையோ பற்றி அவள் அறிந்தது என்னவோ மிகவும் சொல்பம்தான். ஆனால் பெண்ணுக்கு என்று ஏற்படக் கூடிய துயரங்கள் பூராவையும் அறிந்துவிட்டவள் அவள். ஒன்றுகூட விடாமல் எல்லாத் துயரங்களையும் அவள்மேல் அடுக்கி அவளுடைய இளம் உள்ளத்தைச் சோதித்துவிட்டது. தெய்வம் – விதி… என்ன சொன்னால் என்ன? துயரம் துயரந்தானே? 

அவள் அவ்வளவு அதிகாலையில் எழுந்தது பிசகுதான். சாதாரண நாளில் உள்ள நாற்பது நாழிகை நேரத்தில் படுகிற துன்பம் போதாது என்றா அவள் இரண்டு நாழிகை நேரம் முந்தியே எழுந்து தன் துயரத்தைத் தனிமையில் நீடித்துக் கொண்டு நின்றாள்? 

ஐயோ, பாவமே! என்றுதான் அக்கிரஹாரத்தார் அங்கலாய்ப்புடன் அவளைப்பற்றிச் சொன்னார்கள். சொந்தத் துயரங்களை மீறி அவள் உடலையோ, உள்ளத்தையோ தொடப் பிறருடைய அங்கலாய்ப்புக்கு இடம் இல்லைதான்; அங்கலாய்ப்புத் தேவையாக இல்லை அவளுக்கு; நம்பிக்கை தருவதாகக்கூட இல்லை. 

வாழ்க்கைதான் தேவையாக இருந்தது – ஆனால் அதுவும், எண்ணிப் பார்த்தால், நம்பிக்கை தருவதாக இல்லைதான். 

பாவம்! என்ன செய்வாள்? 

அக்கிரஹாரத்திலே அன்று அதிகாலையில் அவளைத்தவிர வேறு யாருமே உயிருடன் இருந்ததாகத் தெரியவில்லை. தெரு நிசப்தமாக இருந்தது. நள்ளிரவில் கோஷ்டியாக ஊளையிட்டுப் பிறரைத் தூங்கவொட்டாமல் மனசில் கலவரத்தையும், காதில் கூக்குரலையும் உண்டாக்குகிற தெரு நாய்கள்கூட., ஓய்ந்து விட்டன. நன்றி மறவாத நாய்கள்கூட, எல்லாவற்றை யும் மறந்துவிட்டு, பிரக்ஞையற்றுக் கண்களை மூடிவிட்டன. 

துயரத்தின் எல்லைகளை அறிந்த தன்னைத் தவிர… என்று எண்ணினாள் பங்கஜம்! 

அப்படியானால் அந்தத் தெருவிலே அவளைத் தவிர துயரில் ஆழ்ந்தவர்கள் வேறு யாருமே இல்லையா, என்ன? தன்னைவிட அதிகத் துயர் அடைந்தவர்கள் உண்டு என்பது பங்கஜத்துக்கும் தெரிந்த விஷயந் தான். 

அடுத்த வீட்டிலே இருந்தாளே கல்யாணிப் பாட்டி – பெயர் தான் கல்யாணி. அவள் காரியங்களெல்லாம் கல்யாண மல்லாதவைதான்! கணவன் பார்த்துக் கல்யாணம் செய்து கொண்டது அவள் ஏழாவது வயதில் – அறுத்துக் குளித்துவிட்டு வீட்டுக்கு வந்தது ஒன்பதாவது வயதில்-இப்போது அவளுக்கு வயது அறுபத்துக்குமேல் இருக்கும். ஐம்பது வருஷங்களிலே அவள் உள்ளம் மரத்துவிட்டதோ? ஐம்பது வருஷங்களில் தன் உள்ளமும் இப்படியேதான் மரத்துவிடுமோ? 

பிறர் துயரத்தைப் பற்றி நினைப்பதால் தன் துயரம் மாறிவிடாது என்பது பங்கஜம் அநுபவபூர்வமாக அறிந்த விஷயந்தான். ஆனால் பிறர் துயரைப் பங்கிட்டுக் கொள்வதில் தன் துயரை மறக்க முடிவதையும் அவள் அநுபவபூர்வமாகக் கண்டிருந்தாள். 

அடுத்த வீட்டு அம்புலுவின் குழந்தை இறந்தபோது அவளுக் காகக் கண்ணீர் ஆறாகப் பெருக விட்டு, பங்கஜம் தன் துயரை வள்ளிசாகப் பதினைந்து நாழிகை நேரம் மறந்து விட்டுத்தான் இருந்தாள். 

மனிதர் மனோபாவத்திலே இது ஒரு விசித்திரந்தான். வேறு என்ன செய்தாலும் அகலாத ஒரு துயரம் பிறர் துயரத்தில் மங்கி, மக்கி, மறைந்துவிடுகிறது. வாழ்க்கையிலே துயரை அதிகமாக அநுபவித்தவர்களின் மனம் கனிந்திருப்பதற்கு இதுதான் காரணமோ? சுயநலம் காரணமாகவே அவர்கள் பிறர் துயரில் பங்கெடுத்துக்கொள்ள நேர்ந்ததோ? 

தத்துவ விசாரம் பங்கஜத்தின் வயசுக்கோ அறிவுக்கோ எட்டாத விஷயந்தான். ஆனால் துயரங்களை ஒன்றன்பின் ஒன்றாக, நேருக்கு நேர் சந்தித்துப் பார்த்துவிட்டவர்களுக்குத் தானாகவே ஒரு தத்துவ விசார வேகம் அமைந்துவிடுகிறது. தத்துவ விசாரம் என்பது இன்றுதான் கலாசாலைப் படிப்பாகி விட்டதே தவிர, என்றும் வாழ்க்கையோடு ஒட்டிய, வாழ்க்கையை விட்டு அகலாத ஒரு லணமாகவே இருந்து வந்திருக்கிறது. இன்றும் சரி, நேற்றும் சரி, இனி வரப்போகிற நாட்களிலும் சரி, அநுபவத் துயரந்தான் கலாசாலைப் பேராசிரியர்களைவிடப் பெரிய தத்துவ ஆசிரியன் என்பதில் சந்தேகமில்லை. 

பங்கஜம் சிந்தனையில் ஆழ்ந்து, ஆனால் எண்ணங்களைத் தெளிவாக உணராத அரைப் பிரக்ஞை நிலையில் தூணில் சாய்ந்துகொண்டு நின்றாள். 

அக்கிரஹாரத்தில் நடமாட்டம் எதுவும் இல்லை. ஆனால் விழித் துக்கொள்கிற நிலை வந்துவிட்டது. தூரத்திலே மேட்டுத் தெருக் கோழி ஒன்று அகம்பாவமாகக் கூவிற்று. கல்யாணிப் பாட்டியின் பேத்தி; அதாவது அவள் தங்கையின் பேத்தி; விடிகிற சமயம் அதற்கு எப்படித்தான் தெரிந்ததோ, விழித்துக்கொண்டு, அடுத்தவீட்டில், அலறிற்று. 

கிழக்கும் நெடுக்குமாக நாலுதரம் திரும்பிப் பார்த்தாள் பங்கஜம். கழுத்தைத்தான் வலித்தது. ‘தெருவில் வரானா’ என்று அவள் யாரையும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அன்று எழுந்தது முதலே அவளுக்கு என்னவோபோல்தான் இருந்தது. ஏதோ எதிர்பாராத ஒரு புதிய அநுபவம் ஏற்படப் போகிறது என்கிற முன்னெச்சரிக்கையான ஓர் உணர்ச்சி அவள் உள்ளத்தில் ஊசலாடியது. எதிர்பாராத அநுபவத்தை எதிர்பார்த்துப் பயனுண்டா என்பது பற்றி அவளால் தீர்மானிக்க முடியவில்லை. 

தான் எதிர்பார்ப்பதாலேயே அந்த எதிர்பாராதது நடக்காமல் நின்றுவிடுமோ என்கிற பயம் மட்டும் அவள் மனத்திலே எழுந்தது. 

கிழக்கே, தெருக்கோடியிலிருந்து மூங்கில் புதர், வெளுக்கும் கீழ் வானத்தில் படம் எடுத்துப் பதிய வைத்ததுபோல, அழகாகத் தெரிந்தது. அதையே பார்த்துக்கொண்டு நின்ற பங்கஜத்தின் காதில் ஒரு வீட்டுக் கதவுத் தாழ்ப்பாள் படார் என்று திறக்கப்படும் சத்தமும், கதவு கிறீச் சென்று அடுத்த நிமிஷம் திறக்கப்படும் சத்தமும் கேட்டது. எதிர்ச் சாரியில் இருந்த சிவராமையர் வீட்டுக் கதவுச் சத்தம் அது என்று எண்ணியபடியே திரும்பிச் சிவராமையர் வீட்டைப் பார்த்தாள் பங்கஜம். 

சிவராமையர் வீட்டுக் கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்தது ஓர் உருவம். அந்த வீட்டில் இருந்தவர்களுடைய உருவிமெல்லாம் பங்கஜத்துக்குப் பதினாறு வருஷங்களாகப் பழக்கமானவைதான். ஆனால் வந்தது அவளுக்குப் பழக்கமான உருவம் அல்ல. யாரோ புதிசாக இருந்தது. வாலிபன். ‘அவர்கள் வீட்டிலே வயதானவர்களையும் சிறுவர்களையும் தவிர வேறு யாரும் இல்லையே?’ 

சட்டென்று பங்கஜத்துக்கு, முதல் நாள் காலையில் இந்திராணி – சிவராமையரின் பத்துவயதுப் பேத்தி சொன்னது ஞாபகம் வந்தது. சிவ ராமையரின் தங்கை பிள்ளை ஒருவன் – சண்டை ஆரம்பித்த காலத்தில் ஜெர்மனியில் இருந்தவன், படித்துக்கொண்டு இருந்தவன். ஜெர்மனியி லேயே அகப்பட்டுக் கொண்டு அவர்களுடனிருந்து, அவர்கள் வாழ்க்கை வழிகளில் பிரியங் கொண்டு, அவர்கள் சண்டையைத் தனது ஆக்கி, முதலில் ஜெர்மானியருடனும் பிறகு நேத்தாஜி போஸின் இந்திய தேசீயச் சேனையிலும் சேர்ந்து, பர்மாவில் சண்டையிட்டுக் கைதியாகி, விடுதலையடைந்திருந்தவன் -அன்று மாலை வரப் போகிறான். தன் அத்தான் என்ற இந்திராணி பெருமையாகச் சொல்லிக்கொண்டது ஞாபகம் வந்தது. 

இவ்வளவு தெளிவாகச் சொல்லவில்லை சிறுமி. கேட்டுக் கேட்டுத் தான் அந்த அத்தானைப்பற்றி அறிந்துகொண்டாள் பங்கஜம். இப்போது வாசலில் வந்தது இந்திராணியின் அத்தானாகத்தான் இருக்க வேண்டும். அந்த அத்தான் வாசல் திண்ணையோரமாக வந்து பங்கஜம் நின்றமாதிரியே தூணில் சாய்ந்துகொண்டு கிழக்கும் மேற்குமாகத் தெருவை இரண்டு தடவை கவனித்தான். பங்கஜம் அவள் வீட்டுத் திண்ணையோரமாக நின்று கொண்டிருந்ததைக் கவனித்தானோ என்னவோ – கவனித்தமாதிரி காட்டிக்கொள்ளவில்லை. பையிலிருந்து சிகரெட் டப்பாவை எடுத்துப் படார் என்று திறந்து ஒரு சிகரெட்டை எடுத்து வாயில் வைத்துக் கொளுத்தினான். 

தீக்குச்சியின் வெளிச்சத்திலே அவன் முகம் நன்கு தெரிந்தது. அழகான முகம் என்று சொல்ல முடியாது என்றுதான் எண்ணினாள் பங்கஜம். முகம் எல்லாம் குழி விழுந்து, கண்கள் ஆழ்ந்து பஞ்சடைந்து உருவம் மெலிந்து… அந்தத் தீக்குச்சியின் வெளிச்சம் தன் முகத்தையும் காட்டியிருக்குமோ அவனுக்கு என்று பயந்தவள்போல, பங்கஜம் இரண்டடி பின்னிட்டு நின்றாள் ஒரு விநாடி – பிறகு கதவைத் திறந்து, சாத்திக் கொண்டு உள்ளே போய்விட்டாள். 

அத்தியாயம்-2

மேஜர் மூர்த்திக்கு வேலை ஒன்றும் கிடைக்கவில்லை ..வீரன் மேஜர் மூர்த்தி என்று பெரிதாகப் பாராட்டிப் பேசிவிட்டு நகர்ந்து விட்டார்களே தவிர, வேறு எவ்விதமான உதவியும் அவனுக்குச் செய்ய யாரும் முன்வரவில்லை. காங்கிரஸ் சர்க்கார்தான் மாகாணங்களிலும் மத்தி யிலும் ஆட்சியில் இருந்தது. அவர்கள் சுவனத்தைக் கவர வேறு எவ்வளவோ பெரிய விஷயங்கள் இருந்தன மேஜர் மூர்த்தி என்கிற இ.தே.ரா. வீரனின் எதிர்காலம் அவ்வளவு முக்கியமான விஷயமாக அவர்களுக்குப் படவில்லை. 

அதுபற்றி மேஜர் மூர்த்தியும் அவர்களைக் குற்றம்சாட்ட வில்லை. தேசத்தின் எதிர்காலத்தைக் கவனிப்பது தவறு என்று அவன் நினைக்க வில்லை. தன் காரியத்தைக் கவனிப்பார்கள் என்று தான் எதிர் பார்த்தது தவறுதான் என்று சில வாரங்களுக்குள்ளாகவே அவன் அறிந்து கொண்டான். தன்மேல் பிசகு என்று தன்னையே குற்றம் சாட்டிக் கொண்டான். 

முதலில் சென்னையிலும் பிறகு டில்லியிலும் பல தலைவர்களைச் சந்தித்தான். தனக்கு இல்லாவிட்டாலும், தன்னைப் போன்ற மற்றவர்களுக்காவது ஏதாவது ஏற்பாடு செய்து தர முடியுமா என்று முயன்று பாடுபட்டான். ‘சிவப்புநாடா’ குறுக்கிடத்தான் குறுக்கிட்டது – இப்பொழுது அது கதர்நாடா என்று வேண்டுமானால் பெருமைப்பட்டுக் கொள்ளலாம்; அவ்வளவுதான். மற்றப்படி அதன் தன்மை, போக்கு எல்லாம் பழைய தன்மையும், போக்கும்தான். 

நாலு தடவை டில்லிக்குப் போய் வந்த பின், நானூறு உள்ளூர்த் தலைவர்களைச் சந்தித்த பின், மேஜர் மூர்த்திக்கு ஒன்று தெளிவாகியது; மனிதன் தனக்கென்று எப்படிப்பட்ட லக்ஷ்யத்தையும் மேற்கொள்ளலாம் – பிறருக்கென்று, இன்று உலகம் உள்ள நிலையில், எந்த லக்ஷ்யத்தையும் மேற்கொள்வது மகாத்மா பட்டத்துக்கோ அல்லது அதிஅசட்டுப் பட்டத்துக்கோ தான் வழி. மகாத்மா பட்டமோ, அசட்டுப் பட்டமோ தனக்குத் தேவையில்லை என்கிற முடிவுக்குத்தான் வந்தான் மேஜர் மூர்த்தி, சென்னைக்குத் திரும்பிய இரண்டொரு மாதங்களுக்குள்ளாக. 

ஜெர்மனியில் அவன் படிப்புப் பூராவும் முடிந்துவிட வில்லை. பட்டம் பெற்றுவிட்ட பிறகு சைனியத்தில் சேரவில்லை அவன். லக்ஷ்யம் என்று அசட்டுத்தனமான ஒரு சிந்தனையிலே அவன் சேர்ந்து கொண்டான். பிறருக்கு ஏற்படாத அநுபவங்கள் ஏற்பட்டன அவனுக்கு அவ்வளவு தான். பிற்காலத்தில் பிரயோசனப்படுத்தக் கூடியதாக எதுவும் அவனுக்குக் கிடைக்கவில்லை. உற்சாகம் மனிதனை எந்த எந்த வழிகளில் உந்தித் தள்ளிக் கொண்டு செல்லும் என்பதற்கு மேஜர் மூர்த்தியின் வாழ்க்கையை ஓர் உதாரணமாகச் சொல்லலாம். 

முதலில் ஆடல்ப் ஹிட்லரின் ஜெர்மனி அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. ஜெர்மானியர்கள் அறிஞர்கள் அறிவை ஒட்டிய வாழ்க்கை நடத்துகிறார்கள் என்று எண்ணினான் அவன். 

கலாசாலையில் படித்துக் கொண்டிருந்த, உற்றார் உறவினர் இல்லாத ஏழைப் பையன் ஜெர்மனிக்குப் போக நேர்ந்ததே ஓர் அதிசய மான கதைதான். ஹாஸ்டலில் சாப்பிடுகிற பையன்களுக்குத் தண்ணீர் எடுத்துக் கொடுக்கிற பையனாக இலவச சாப்பாடு சாப்பிட்டுக்கொண்டு உண்மையான ஏழைச் சர்ட்டிபிகேட்டுகளுடன் இலவச மாணவனாகவும் படித்துக் கொண்டிருந்தவனை ஆசை காட்டி அழைத்தவர் கிருஷ்ணமேனன் என்பவர். அவர் கல்கத்தா சர்வகலாசாலையில் ரசாயனம் படித்து டாக்டர் பட்டம் பெற்று முதல் முதலாக உத்தியோகத்திற்கு வந்தது நம் கிருஷ்ண மூர்த்தி படித்துக்கொண்டிருந்த கல்லூரிக்குத்தான். 

கல்லூரியிலே முதல் வகுப்பில் படித்துக்கொண்டிருந்த கிருஷ்ணமூர்த்தி என்கிற ஏழைப் பையன் கிருஷ்ணமேனனின் கவனத்தைக் கவர்ந்தான். அவனுடைய பணிவும் அறிவும் அறிவிலே இருந்த ஆசையும் அவரை அவனிடம் பிரியங்கொள்ளத் தூண்டின. பிரியம் நாளடைவில் நட்பாக மாறிற்று – மிகவும் புனிதமான குரு சிஷ்ய பாவமாக மாறிற்று. 

அந்தக் கல்லூரியிலே கிருஷ்ணமேனன் ஒரு வருஷம் பூராவும் கூட வேலை பார்க்கவில்லை. அரசாங்கத்தாரே அவரை வர்ணச் சேர்க்கை விஷயமாக ரசாயன ஆராய்ச்சி செய்துவர ஜெர்மனிக்கு அனுப்பத் தீர்மானித்தார்கள். ஆர்டர் அவர் கையில் கிடைத்தபோது, அவர் கூட இருந்தான் கிருஷ்ணமூர்த்தி. அந்த ஆர்டர் தனக்கு எங்கே கிடைக்கப் போகிறது என்று நம்பிக்கையே இல்லாதிருந்த கிருஷ்ணமேனன். அந்தப் பையனின் அதிர்ஷ்டந்தான் தமக்கு உதவியது என்று எண்ணினார். அவன் தம்முடன் இருப்பது தமக்கு அதிருஷ்டகரமாக இருக்குமே என்று எண்ணியவர், முதலில் விளையாட்டாகவும், பிறகு உண்மையாகவும் அவனையும் தம்முடன் ஜெர்மனிக்கு வரத் தூண்டத் தொடங்கினார். 

அவர் தூண்டுதல் வீண்போகவில்லை. அவர் காட்டிய ஆசைகள் பையன் மனத்தைப் பெரிதும் கவர்ந்தன. அவர் போலவே பட்டம் பெற்றுக் கல்லூரிப் பேராசிரியராகப் பதவியும் பெறலாம் என்று நினைத்தான் சிறுவன். அப்போது அவனுக்கு வயது பதினேழு. பதினெட்டுக்குள்தான் இருக்கும். 

அவனுக்குப் புத்தி சொல்லவோ, அவன் காரியங்கள் எதிலும் குறுக்கே நிற்கவோ, யாரும் இல்லை அவனுக்கு. உண்மையிலேயே அநாதை அவன். பெற்றோர் இருவரும் வெகு நாட்களுக்கு முன்னரே இறந்து விட்டனர். நெருங்கிய உறவு அவன் தமக்கை ஒருத்திதான். அவள் இரண்டாவது தாரமாக ஒரு பெரிய இடத்தில் வாழ்க்கைப்பட்டவள். தம்பியைக் கவனிப்பதற்குப் போதிய செயலும் தெம்பும் இருந்தன. எனினும் கவனிப்பதில்லை. காரணம் தன் தம்பியிடம் பிடிப்பு அதிகம் இல்லை என்பது ஒன்று; இளையாளாகப் பெரிய குடும்பத்திலே இருந்த அவள் நிலை தடுமாறிவிடுமோ என்கிற பயம் இரண்டாவது; தம்பியிடம் சுபாவமாக இல்லாத ஒரு மனப் பிடிப்புக்காகக் கணவனிடம் உள்ள செளகரியமான, லாபகரமான பிழைப்பைத் தியாகம் செய்யத் தயாராக இல்லை அவள். அவனுடைய தாயுடன் பிறந்த சகோதரர், அவன் மாமா இருந்தார். ஆனால் அவன் அப்பா உயிருடனிருந்தபோது மைத்துனருக்கும் அத்திம்பேருக்கும் ஆவதில்லை. தன் மாமாவையே கிருஷ்ணமூர்த்தி இரண்டொரு தரந்தான் சந்தித்திருந்தான். தான் தன் ஆசிரியருடன் ஜெர்மனிக்குப் போகிற விஷயம் பற்றி அவரிடம் அனுமதி கேட்கவேண்டும் என்றே அவனுக்குத் தோன்றவில்லை. அத்திம்பேருக்குத் தகவல் தெரிவித்து, அக்காளிடம் சொல்லச் சொல்லி எழுதினான் ஒரு கார்டு அவ்வளவுதான் – இந்தியாவிலே அவனை நிறுத்தி வைத்திருந்த பந்தம் அறுந்துவிட்டது. 

மாணவன் என்று சொல்வதற்கில்லை. பேராசிரியர் கிருஷ்ண மேனனின் கையாளாகக் கிருஷ்ணமூர்த்தி ஜெர்மனி போய்ச் சேர்ந்தான். 1936-ஆம் வருஷக் கடைசியிலே – கடுங்குளிரிலே. 

1936-லிருந்து 1946 முடியப் பத்து வருஷங்கள்! அந்தப் பத்து வருஷங்களில் பத்து ஜன்மங்களின் அநுபவங்கள் அவனுக்கு ஏற்பட்டு விட்டன. 1938-லேயே கிருஷ்ணமேனனைக் கம்யூனிஸ்டுக் கட்சியை ஆதரிப்பவர் என்று ஜெர்மானியர்கள் நாடு கடத்தி விட்டனர். அவருடன் கிருஷ்ணமூர்த்தியும் வெளியேறியிருந்தான் ஆனால் அவன் வாழ்க்கையே வேறு தினுசாக மாறியிருந்திருக்கும். அவன் அந்த சமயம் ஜெர்மனியைவிட்டு வெளியேற விரும்பவும் இல்லை; அவனால் முடியவும் இல்லை. சுபாவமாகவே அவனுக்கிருந்த அறிவுத் தாகம் அவனுக்கு உதவி செய்தது. அந்த நாட்களில் ஜெர்மனியே விஞ்ஞானத்தின் பிறப்பிடம் என்று நம்பிவந்து, படிப்புப் படித்து ஆராய்ச்சியும் செய்வதில் ஈடுபட்டிருந்த இந்திய மாணவர்களிலே இந்த ஆர்.கே. மூர்த்தி என்பவனே சிறந்தவன் என்று பெர்லின் பேராசிரியர்கள் கருதினார்கள். சண்டை வந்திராவிட்டால் அவன் இரண்டொரு டாக்டர் பட்டங்களுடன் ஊர் திரும்பியிருப்பான். புதிதாகத் தொழில்கள் ஆரம்பிக்க உதவுவது பற்றியும் அவன் கனவு கண்டு கொண்டிருந்தான். 

ஜெர்மனியரின் பிரசார வேகமும், யுத்தத்தின் வருகையும் அவனைத் தாக்கின. தாக்கியது மட்டும் அல்ல; அவனைக் காலைவாரியும் விட்டுவிட்டன. சாதாரண வீரனாக அவன் கீழ் முனையிலும், மேல் முனையிலும் சண்டை செய்தான். பிரிட்டிஷ் பிரசாரத்திற்கு எதிராக அதேபோல் அரை உண்மையுடன ஜெர்மனி செய்த பிரசாரத்தை நம்புவதற்கு அவன் தயாராக இருந்தான். 

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் வருகையால் நிலைமை ஓரளவு மாறிற்று. தன்னைப் பாதிக்கக் கூடிய பல விஷயங்களைப் பற்றிச் சிந்தித்து லக்ஷ்ய முடிவுகளை ஏற்க அவன் தொடங்கியது அந்த நாளில்தான். போஸுடன் அவன் ஜப்பான், மலேயா, பர்மா முதலிய இடங்களுக்கு வந்தான். அவன் பதவி உயர்ந்தது. அவனுக்குத் திருப்திகரமாகவே இருந்தது. தைரியத்திற்கும் ஒரு கொள்கைக்கும் எடுத்துக்காட்டாக மேஜர் மூர்த்தியின் பெயர் விளங்கியது. 

யுத்தம் கிழக்கேயும் ஓய்ந்து, எதிலும் மாட்டிக்கொள்ளாமல் எவ்வளவோ சிரமப்பட்டு, மேஜர் மூர்த்தி கல்கத்தா வழியாகச் சென்னை திரும்பியபோது அவன் மனநிலையை விவரிப்பது ஆகாத காரியம். ஒரு தேசத்தின் எதிர்காலமே தன்னைப் பொறுத்து இருந்தது போன்ற ஓர் உணர்ச்சி விசுவரூபம் எடுத்திருந்தது. காரண காரியம் இல்லாத, அஸ்திவாரமே அற்ற, உணர்ச்சிதான் அது. ஆனால் தன் அநுபவங்களுக்கும், தனக்கென்று கிடைத்துவிட்ட பதவிக்கும் ஏற்பத் தான் நடந்து, தன் தேசத்துக்கு உதவிசெய்து தீரவேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டு வந்தான் அவன். 

அவன் படம் இரண்டொரு ஆங்கிலப் பத்திரிகைகளிலும், எல்லாத் தமிழ்ப் பத்திரிகைகளிலும் வெளியாயின. அவனைச் சந்தித்தவர்கள் எல்லோரும், “ஆஹா, அப்படியா!” என்று அதிசயோக்தியாக, ஆச்சரியத் துடன் அவனை மேலும் மேலும் விசாரித்தார்கள். 

இரண்டொரு வாரங்கள் ஆவதற்கு உள்ளாகவே மேஜர் மூர்த்திக்கு விஷயம் விளங்கிவிட்டது. இந்தியா தன் எதிர்காலத்தைப் பற்றி அவனைத் தொந்தரவு செய்வதாக இல்லை. தன் எதிர்காலத்தை அவன், சுயநலம் என்று கருதாமல், நிர்ணயித்தே தீரவேண்டும். 

அவன் படத்தைத் தமிழ்ப்பத்திரிகை ஒன்றில் பார்த்த அவன் மாமா, தன் மருமகனாகத்தான் இருக்க வேண்டும் என்று ஊகித்துக் கொண்டு, பிள்ளையில்லாதவரின் புத்திர வாஞ்சையுடன் அவனை வரவேற்றுத் தன்னுடன் அவன் சில நாள் சாத்தனூரில் வந்து தங்கவேண்டுமென்று எழுதியிருந்ததும், எந்தப் பக்கம் திரும்புவது, என்ன செய்வது மேலே என்று அறியாமல் விழித்துக்கொண்டிருந்த மேஜர் மூர்த்திக்கு, இருபத்தேழாவது வயசில் மாமா என்கிற உறவு மிகவும் நெருங்கிய உறவு தான் என்பது ஞாபகம் வந்தது. ஜெர்மனிக்குப் போகும்போதும் சண்டைக்கு முந்தியும் சண்டைக்குப் பிந்தியும் அவருக்குத் தான் எவ்வித தகவலும் தராதது மிகவும் தவறான விஷயமென்று அவன் மனமே அவனைச் சுட்டது. அதற்குப் பிராயச்சித்தம் என்ன செய்யலாம் என்று அவன் யோசித்தான். உடனே அவர் அழைப்பை ஏற்றுக்கொண்டு கிளம்பிவிட்டான். 

கடிதம் வந்த காலை எட்டு மணிக்கு. உடனே தன்னிடம் உள்ள சொற்பச் சாமான்களைத் தூக்கிக்கொண்டு பெட்டி படுக்கை சகிதம் சாத்தனூருக்கு, பத்து மணிப் பகல் வண்டிக்கு டிக்கட் வாங்கிவிட்டான். 

அத்தியாயம்-3

புதிய இடத்தில் படுத்திருந்ததால் என்று சொல்வதற்கில்லை. இ.தேரா. மேஜர் மூர்த்தி புதிய இடங்களில், இடமல்லாத இடங்களிலும் படுத்துத் தூங்கப் பழகியவன்தான். ஆனால் காய்த்துவிட்ட, தழும்பேறிய அவன் உடல்கூட, சாத்தனூர்க் கொசுவிடம் தோல்வியை ஏற்கவேண்டியிருந் தது. குளிர் இருந்தால் கொசு இராது என்பார்கள். ஆனால் சாத்தனூர்க் குளிர் இ. தே. ரா. மேஜருக்கு – குளிர் நாட்களில் குளிர் தேசங்களில் பழகி விட்டவனுக்கு அலக்ஷ்யமாக இருந்ததுபோல உள்ளூர்க் கொசுவுக்கும் அலக்ஷ்யமாகத்தான் இருந்ததுபோலும். 

ஜன்னலே இல்லாத, கூண்டுபோன்ற மாடியில் படுத்திருந்தவன், போர்வையை உதறிவிட்டு, சட்டையை மாட்டிக் கொண்டு எழுந்தான். மாடியிலே விளக்கு இல்லை. புதிய இடமாதலால் தட்டுத் தடுமாறிக் கொண்டுதான் படியை எட்ட வேண்டியிருந்தது. பக்கத்திலே படுத்திருந்த மாமா, கிழவர், லேசாக அரைக் கண் மூடியபடியேதான் தூங்கினார் போலும்! “என்ன கிட்டா? அதுக்குள்ளே எழுந்திருந்துட்டே! மணி அஞ்சுதானே இருக்கும்?’ என்றார். 

தன் கைக் கடிகாரத்தைப் பார்த்தான் கிட்டா என்கிற மேஜர் மூர்த்தி. மணி சரியாக ஐந்தடிக்க நாலு நிமிஷம் இருந்தது. கிழவருடைய அரை விழிப்புத் தூக்கமும் மணிக் கணக்குக் கூர்மையும் அவனுக்கு வியப்பளிப்பதாக இருந்தன, யுத்த அரங்கில் பல அதிகாலைச் சம்பவங்களை ஞாபக மூட்டிற்று அது அவனுக்கு. 

“ஐந்து மணிக்கு எளுந்திருச்சிப் பழக்கம்” என்றான் மேஜர் மூர்த்தி. 

“எளுந்திருச்சு” என்று சொன்ன பிறகுதான் அந்த மாதிரி அதை உச்சரித்தது தன் மாமாவுக்குப் பிடிக்காது என்கிற ஞாபகம் வந்தது அவனுக்கு. முந்திய நாள் வந்ததுமே, மாமாவினுடைய பெண்ணி னுடைய பெண், எட்டு வயதுச் சிறுமி கேட்டுவிட்டாள், “அத்தான் மாமா, ஏன் தாத்தா, மோட்டுத் தெரு முதலியாரெல்லாம் பேசற மாதிரி பேசறா?” என்று. 

“நான் முதலியார்தான்” என்றான் மேஜர் மூர்த்தி சிரித்துக் கொண்டே. 

“பொய் சொல்றே நீ! முதலியாராயிருந்தா, தாத்தா ஒண்ணும் உன்னோட ஒக்காந்துண்டு சாப்பிடமாட்டா!” என்றாள் சிறுமி. 

இதற்குப் பதில் சொல்லத் தெரியவில்லை மேஜர் மூர்த்திக்கு. மாமிகூடச் சொன்னாள்: “நன்னாருக்கு! பிராம்மணா பேச்சுக் கூடன்னா மறந்து போச்சு! இப்படியும் ஒரு புள்ளையும் உண்டோடா?” என்று மோவாய்க் கட்டையில் கை வைத்தாள். 

பெரிய தவறு செய்துவிட்டுத் திருத்திக்கொள்ள விரும்புகிறவன் மாதிரி, “கத்துக்கறேன் மாமி” என்று தாழ்மையாகப் பதில் சொன்னான் மூர்த்தி. 

சாத்தனூர் – ஸ்டேஷனில் இறங்கிய உடனே மேஜர் மூர்த்திக் குப் பல விஷயங்கள் புரியத் தொடங்கிவிட்டன. அவன் வெளியூர் எல்லாம் சுற்றியிருக்கலாம். எவ்வளவோ அற்புத விஷயங்கள் எல்லாம் தெரிந்து கொண்டிருக்கலாம். எவ்வளவோ அசாத்தியமான காரியங்களைச் சாதித்திருக்கலாம். ஆனால் அவன் தன் ஊரைப்பற்றியே, தன் ஊர்க்காரர்களைப் பற்றியே அறிந்துகொள்ள வேண்டியிருந்தது; நிறையவே இருந்தது. 

முதல் தவறு அவன் செய்தது – காக்கி உடையை அவன் அணிந்து வந்ததுதான். அவர்களுடைய அநுபவம் என்னவோ சாத்தனூர் கிராமவாசிகள் எல்லோரும் அவனை ஒரு தரம் பார்த்ததும், அவர்கள் முகத்திலே அவநம்பிக்கையும் சந்தேகமும் படர்ந்தன. இரண்டாந்தரம் யாரும் அவனை ஏறிட்டுப் பார்க்கவில்லை. ஒரு முகமாக முகத்தைத் திருப்பிக் கொண்டு போய்விட்டார்கள். பெட்டி படுக்கையைக் கடைசியாகத் தூக்க முன் வந்தவன், ‘சண்டையிலே போய்ச் சம்பாதிச்சவன் பணத்திலே பாதியாவது பறிக்க வேணும்’ என்கிற ஞாபகத்திலேதான் கூலி கேட்பது போல் இருந்தது. அக்கிரஹாரத்துக்கு என்றதும் இந்தக் கூலி இன்னும் கூடிற்று – தூரம் உண்மையிலேயே அதிகம் என்பதனாலோ, அல்லது பிரசித்திபெற்ற பத்திரிகையில் அமர்க்களப்பட்ட, வகுப்புவாத உணர்ச்சியினாலோ! 

வீடு போகிற வழியிலே வேண்டுமென்றே தன்னை மிகவும் கரடு முரடான பாதையிலே அழைத்துச் செல்லுகிறான் அந்தக் கூலி என்று தோன்றியது மேஜர் மூர்த்திக்கு. முனனெல்லாம் என்றால் இப்படி நினைப்பது தாழ்வு மனப்பான்மை என்று ஒதுக்கியிருப்பான். ஆனால் இப்பொழுது தான் அப்படி நினைப்பது சரி என்றும், அந்த நாட்டுப்புறத்தான் அப்படிச் செய்வது சரி என்றுமே அவனுக்குத் தோன்றிற்று. அரிசிலாற்றையும், காவேரியையும் கடப்பதற்குமுன் அவன் பிராணனே போய்விடவில்லை; துணி எல்லாம் நனைந்துவிட்டது. எதிர்பாராமல் குறுக்கிட்ட ஆறுகளிலே ஜலம் எவ்வளவு இருக்கும் என்றுகூடச் சொல்லாமல், கூலி இறங்கிவிட்டான். மேஜர் மூர்த்தியும் உடன் இறங்குவதைத் தவிர வேறு வழியில்லாது போய் விட்டது. கூலி வாங்குகிறபோதுகூட மேஜர் மூர்த்தியின் முகத்தை நிமிர்ந்து பார்க்க நம்பிக்கை வரவில்லை அந்த நாட்டுப் புறத்தானுக்கு. பேசியதற்கு அதிகமாக இரண்டணா கொடுத்தான் மேஜர் மூர்த்தி. அதற்கு நன்றிகூடச் சொல்லாமல் சாமான்களைத் திண்ணையிலே போட்டுவிட்டுப் போய் விட்டான். 

மூர்த்தியின் மாமா வீட்டிலே அவனை வரவேற்கத் தயாராக நின்றவர்களையும் பார்க்க முதலில் அவனுக்குச் சங்கோஜமாக இருந்தது. முதலில் அவர்களில் யாராலும் அவனை அடையாளங் கண்டு கொள்ள இயலவில்லை. அவ்வளவு சீக்கிரமே தன் அழைப்புப் பலித்துவிடும் என்று அவன் மாமா சிவராமையரே எதிர்பார்க்கவில்லை. அவன் மாமி பாகீரதியம்மாள்தான் முதலில் அவனைத் தெரிந்து கொண்டாள். யாரோ அன்னியன் எதிரில் முதல் தடவை யாரும் பேசுகிற மாதிரி முதலில் கூச்சப்பட்டுக் கொண்டு, “கிட்டா மாதிரியிருக்கு – கேளுங் கோன்னா” என்று தன் கணவனைத் தூண்டினாள். மருமகன் கிட்டாதான் என்று நிச்சயமானவுடன், “வாடாப்பா வா” என்று வாய் நிறைய வரவேற்றாள். உடனேயே தன் மாமி தன் உள்ளத்தில் இடம் பெற்று விட்டதை அறிந்து கொண்டான் மேஜர் மூர்த்தி. இந்த வார்த்தை உள்ளம் நிறையாத போலி இடங்களில் வரமுடியாதென்பது அவன் உணர்ந்து கொண்ட உண்மை. 

அவன் மாமாவுக்கு வயது அறுபதுக்குக் குறையாது; மாமிக்கு வயது ஐம்பத்தைந்தாவது இருக்கும். அவர்கள் இருவருந்தான் அந்த வீட்டிலே பெரியவர்கள். அவர்களுக்கும் பிள்ளை கிடையாது என்கிற விஷயம் அடிநாட்களிலேயே கிருஷ்ணமூர்த்தி அறிந்திருந்த விஷயந் தான். ஆனால் மறந்துவிட்டது; அவனுக்கு. 

“உங்க பிள்ளை?” என்று விசாரித்தான். 

ஐம்பத்தைந்து வயதிலும் மனத்திலிருந்த குறை தொனிச்சு அவன் மாமி பதிலளித்தாள்: “நீ தான் எங்க பிள்ளை!” என்றாள். 

இதற்குள் சாமான்களும் மேஜர் மூர்த்தியும் உள் கூடத்தை அடைந்துவிட்டார்கள். மாமி உள்ளே போய்க் கால் மணி நேரத்தில் ‘அயனான’ காபி தயாரித்து வந்தாள். 

“வேண்டாமே, சாப்பிட வேண்டியதுதானே!” என்று மேஜர் மூர்த்தி சொன்னதற்குப் பதில், அவன் மாமா சொன்னார். “அவ காபி நன்னாப் போடுவா. அதுக்கு மரியாதை செய்யறதுபோல நீ இதைச் சாப்பிட்டுத்தான் ஆகணும். தப்பிச்சுக்க முடியாது!” என்றார். தங்கள் குடும்ப வாழ்க்கையின் உயர்வை எடுத்துச் சொல்வதுபோல மாமா, ‘அவ’ தயாரித்த காபியின் நயத்தைப்பற்றிக் கூறினார். மருமகனுக்குக் காபியும் பேச்சும் திருப்தியாக இருந்தன. மாமிக்கும் திருப்தியாகத்தான் இருந்தது! 

அவன் உள்ளம் அன்று சாதாரணமாக நெகிழ்ந்ததற்கு அவனு டைய பலஹீனமே காரணம் என்று சொல்பவர்கள் இருக்கலாம் – நூதனமான அநுபவங்களிலே ஆசை கொண்டவன் அவன்; இது மிகவும் நூதனமான அனுபவமாக அமைந்தது என்பதுதான் காரணம் என்று சொல்பவர்கள் இருக்கலாம் தமிழ்க் குடும்பத்தையோ அதன் – தரத்தையோ, அது காரணமான அன்பையோ உறவுப் பிடிணப்பையோ அறியாதவன் அவன். புதிசாக அறிய நேரிட்டது, அதுதான் காரணம் என்று சொல்பவர்கள் இருக்கலாம். அது எப்படியோ, அன்றிரவு ஓர் அதிசய அநுபவமாகவே அவன் உள்ளத்தில், மறுநாள் விடியற்காலையில், ஞாபகம் வந்தது. 

சாவையும் ஏழைமையையும் நெருங்கி அறிந்தவன் அவன். வெட்டு வதும், கொல்லுவதும் ஆறு வருஷங்களில் அவன் ரத்தத்தில் ஊறி அவனுக்குச் சுபாவமாகி விட்ட விஷயங்கள். இது மாறாத ஒரு இயற்கை நியதி என்றுதான் அவன் எண்ணியிருந்தான். அவன் விடியற்காலையில் சாத்தனூர் சர்வமானிய அக்கிரஹாரத்தில், தன் மாமா வீட்டில் கண் விழித்தெழுந்தபோது இது இயற்கை நியதியல்ல; இயற்கைக்கு விரோதமாக ஆடால்ப் ஹிட்லர் முயன்று சாதித்துவிட்ட ஒரு காரியம் என்பது புலன் ஆகத் தொடங்கியது. ‘ஹிட்லரை மெச்சுவதா? அல்லது தன் பலஹீனத்தை நொந்துகொள்வதா?’ என்பது கடினமான பிரச்னைதான். அது அவரவர் இஷ்டத்தைப் பொறுத்ததுதான்! 

யுத்தம் இந்தியாவை நெருங்கித் தொடவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். பொருளாதார நெருக்கடி இருந்தது. அன்னிய ஆட்சியின் வலுக்கட்டாய அமல்கள் இருந்தன. எல்லைகளை எட்டி விடும்போல யுத்தம் சில சமயம் பயமுறுத்தியது. மற்றப்படி நேரடியாக யுத்தம் இந்தியாவிலே கிராமத்திற்கு இரண்டொரு பலிகளுக்குமேல் வாங்கவில்லை. ஐரோப்பாவிலே, யுத்த காலத்திலே புனிதமான செம்மண் பூமி ரத்த ஆறாக ஓடியதைக் கண்களால் கண்டவன் மேஜர் மூர்த்தி, இந்தக் குருதி வெள்ளத் தினால் பூமியின் புனிதத்தன்மையோ, வளமோ அதிகரித்து விட்டதாகச் சரித்திரம் சொல்லாது – நிச்சயமாகச் சொல்லாது. 

எத்தனையோ கிராமங்கள், குடும்பங்கள் அழிந்தன. 

எதற்காக என்று மனிதனால் கேட்காமல் இருக்க முடியவில்லை தான்.

இந்தக் கேள்விக்கு அவரவர்கள் இஷ்டப்படி பதில் சொல்ல வேண்டுமே தவிர, உலகெங்கும் ஒரே மாதிரியான பதில் சொல்ல முடியாது. வென்றவர்கள் ஒன்று சொல்வார்கள. தோல்வியுற்றவர்கள் வேறு சொல்வார்கள். 

இ.தே.ரா.மேஜர் மூர்த்தி சாத்தனூர் சர்வமானிய அக்கிரஹாரம் வந்து சேரும் வரையில் யுத்தம் பற்றித் தீர்மானமான ஓர் அபிப்பிராயம் வைத்திருந்தான் என்பது உண்மை தான். ஆனால் அந்த ஒரு இரவில், ஐந்து நாழிகை நேரம், மாமா,மாமி,அவர்களுடைய பேரன் பேத்திகள் இவர்களுடன் ஒன்றியிருந்த நேரத்தில், வாழ்க்கையிலே வேறு லக்ஷ்யங்கள், வேறு நியதிகள், வேறு முடிவுகள் இருக்கலாம் என்று தெரிய வந்தது. 

புது அநுபவமும், இப்புது அநுபவத்தால் ஏற்பட்ட புதுச் சிந்தனைகளும்தான் அன்றிரவு அவனைச் சரியாகத் தூங்கவிடவில்லை போலும். 

“அத்தான் மாமா, அத்தான் மாமா” என்று முதல் நாழிகைக் கூச்சத்திற்குப் பிறகு அந்தக் குழந்தைகள் எல்லாம் அவன் மடியில விழுந்தன. ஒன்றிரண்டு தைரியமாகவே, “எனக்கு என்ன மாமா கொண்டு வந்திருக்கே?” என்று கேட்டன. அந்தக் குழந்தைகளுக்கு ஒன்றும் கொண்டு வராதது தன்மேல் எவ்வளவு பிசகு என்று அப்பொழுதுதான் அவன் உணர்ந்தான். ஏழெட்டுக் குழந்தைகள் ஏழெட்டு வயசுக்கு உட்பட்டவை. அவற்றின் பெயரை எல்லாம் ஒவ்வொன்றாக விசாரித்து மனத்தில் இருத்தி வைத்துக் கொள்ள முயன்றான். பத்து வயதுப் பெண் ஒன்று. பன்னிரண்டு வயதுப் பெண் ஒன்று. இன்னும் பெரிய பெண் ஒன்று – ஆக மூன்று பெரிய பெண்கள் இருந்தன. உலகெல்லாம் சுற்றித் தான் பார்த்திருந்த பெண்களை விட இந்தப் பெண்கள் மூன்றும் அழகாக இருப்பதாக அவன் மனத்தில் பட்டது. 

அந்த மூன்று பெண்களும் மற்றக் குழந்தைகளுடன் சேராமல் தனித்து நின்றதை அவன் மாமா, மாமியே பரிஹாசம் செய்தார்கள். “ஒத்தி தான் அத்தானைக் கல்யாணம் பண்ணிக்கலாம் – யார்னு தீர்மானம் பண்ணிண்டு மத்த ரெண்டுபேரும் அத்தானோடே சகஜமாப் பேசலாமே!” என்றார் மாமா. 

“போ தாத்தா” என்றாள் மூவரில் மூத்தவள். மூவரில் இளையவள் குறும்புச் சிரிப்புடன், “அத்தானுக்கு இன்னும் கல்யாணம் ஆகலேன்னு எப்படித் தாத்தா நீ தீர்மானம் பண்ணினே? ஆயிருந்தாலும் ஆயிருக்கும்” என்றாள். 

மேஜர் மூர்த்தி சிரித்தான். “ஆகல்லேடி யம்மா ஆகல்லை. உன் பேரைச் சொல்லு – கல்யாணப் பத்திரிகை அடிக்க நாளைக்கே கொடுத்துடறேன்.” 

அத்தான் மாமா மற்றபடி எப்படியானாலும் பேச்சிலே தோல்வியை ஒப்புக்கொள்ள மாட்டான் என்று தோன்றிற்று போலும் அந்தப் பெண்ணுக்கு. மறுசமயம் கிடைத்தால் பார்க்கலாம் என்று அச்சமயம் பேசா திருந்துவிட்டாள். 

மற்றது எல்லாம் எப்படியானாலும் இந்தக் குடும்பம் என்கிற பிணைப்பு மட்டும் மனிதன் தப்பமுடியாத ஒரு உண்மை என்கிற முடிவுக்கு வந்தான் மேஜர் மூர்த்தி. ஆதிகாலத்திலிருந்து இன்றுவரை இதைக் காப்பாற்ற மனிதன் பாடுபட்டிருக்கிறான். சண்டையிட்டிருக்கிறான். 

ஆனால் அதற்கு ஆதாரம் அன்பு- 

ஆம், அன்புதான்! 

அத்தியாயம்-4

தட்டுத் தடுமாறிக்கொண்டே மாடிப்படியிறங்கிக் கீழே வந்தான் மேஜர் மூர்த்தி. குழந்தைகள் எல்லோரும் கூடத்தில் வரிசையாகக் கொசு வலை கட்டிக்கொண்டு படுத்திருந்தார்கள். சிறிய ‘பெட்ரூம்’ விளக்கு ஒன்று சுவரில் ஆணியில் மாட்டப்பட்டிருந்தது – மங்கலான, ஆனால் போதிய வெளிச்சம் தந்துகொண்டிருந்தது. கொசு வலையில்லாத ஒரே ஒரு படுக்கை மட்டும் இருந்தது. அதில் மாமிதான் படுத்திருக்க வேண்டும் என்றும், அவள் அதற்குள்ளாகவே எழுந்திருந்து விட்டாள் என்றும் ஊகித்துக் கொண்டான் கிருஷ்ணமூர்த்தி, மாமியினுடைய வாழ்க்கை, பேரன் பேத்திகளால் சூழப்பட்டு, குடும்பக் கவலைகளில் முழுவதும் ஆழ்ந்து, அவள் நடத்திய வாழ்க்கை பரிபூரணமான வாழ்க்கையாகப் பட்டது கிருஷ்ணமூர்த்திக்கு – இந்த மாதிரியான பூரணத்வமும், பக்குவமும் பெற்ற வாழ்க்கை மேல் நாடுகளில் அபூர்வம்தான்- கிழக்கேயும் இந்தியாவிலும், சீனாவிலும்தான் சாத்தியமானது என்று சொல்ல வேண்டும். 

கையில் சிம்ணி விளக்குடன் இரண்டாங்கட்டிலிருந்து உள்ளே வந்த அவன் மாமி கேட்டாள்: ‘என்ன கிட்டா, அதுக்குள்ளேயா எழுந்துட்டே?” என்று. 

“இப்படிக் காலையிலே எழுந்துதான் பழக்கம்.” 

“வெந்நீர் அடுப்பை மூட்டிவிட்டு வந்தேன். பாளையமெல்லாம் விடிய காலம்பற எழுந்து குளிக்க ஆரம்பிச்சாத்தானே பத்துமணிக்கு வெந்நீர் அறை காலியாகும்?” என்றாள் மாமி சிரித்துக்கொண்டு. 

“ஏன் மாமி,குழந்தைகளை அப்படிச் சொல்றே” என்றான் மூர்த்தி, குழந்தைகளுக்காகப் பரிந்துகொண்டு. 

“பரிஞ்சு பேசறதைப் பாரு, புதுசா வந்தவன்” என்றாள் மாமி கேலியாக. பிறகு சொன்னாள்: “ஒரு நாள் பழகிப் பாரு தெரியும். 

பாம்பும் பல்லியுமா பிடுங்கத் தொடங்கிடாதுகளா?” 

“எனக்கு என்னமோ, ஏன் இத்தனை நாளா இங்கே வராம இருந்தோம்னு இருக்கு, போ, மாமி” என்றான் மூர்த்தி. 

“வந்தயே, கடைசியிலேயாவது – கொஞ்சநாள் இரு…பார்க்கலாம். நல்ல பொண்ணாப் பார்த்து.”

“வேண்டாம் மாமி. இவ்வளவு அதி காலம்பர வேளையிலே அது பத்தி வேண்டாம். வெயில் ஏறட்டும். மத்தியானமா பேசுவோம்” என்றான் கிருஷ்ணமூர்த்தி. 

வாசற் கதவைத் திறந்துகொண்டு, வெளியே வந்தான். ஓர் இரவு பூராவும் சிகரெட்டு பிடிக்காமலே இருந்துவிட்டது இதுதான் முதல் தடவை. தெரு ஓரமாகப் போய் நின்றுகொண்டு, திண்ணைத் தூணில் சாய்ந்தபடியே, சிகரெட் பெட்டியையும் தீப்பெட்டியையும் சட்டைப்பையில் துழாவி எடுத்தான். சிகரெட்டைப் பற்ற வைத்துக்கொண்டே தெருவைக் கிழக்குமேற்காக, இரண்டு தடவை மேலும் கீழும் பார்த்தான். வலது ஓரமாகத் தள்ளியிருந்த ஒரு வீட்டின் திண்ணையில் இருந்து ஒரு பெண்ணுருவம் வீட்டிற்குள்ளே நகருவது அவன் கண்ணில் பட்டது. பட்டணத்திலே யானால் அந்தப் பெண்ணைப் பற்றி இரண்டு நிமிஷம் ஏதாவது ஏதாவது, என்ன? ஒரு தினுசான-சிந்தனைகளுக்கு இடங்கொடுத்திருப்பான். சாத்தனூர் சர்வமானிய அக்கிரஹாரத்தில் இருந்து கொண்டு அப்படி நினைப்பது தவறு என்று அவனுக்குத் தோன்றியது. 

புகையை உறிஞ்சிக்கொண்டே கிழக்கே நோக்கினான். சாலை வானம் வெளிறிட்டுக் கிடந்தது. வானத்து வெளியிலே பரந்து நின்ற மூங்கிற் புதர் அழகாகக் காட்சியளித்தது. லேசான காற்றிலே அது அசைந் தாடியது, ஏதோ ஒரு இன்ப உணர்ச்சியை ஊட்டியது அவனுக்கு.. உலகம் என்கிற சிலுவையிலே மாலை நேரத்திலே அறையப்பட்டு, காலை வேளை யில் உயிர் நீத்துக்கொண்டிருக்கும் ஏசு பகவானாகக் கண்டான் அவன், அந்த மூங்கிற்புதரை. 

சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்து சிந்திப்பதற்கும் பார்ப்பதற்கும் மகத்தான விஷயம் தான். பல பெரிய பெரிய கல் தச்சர்கள் கலைஞர்களின் கைவரிசையை ஐரோப்பாவிலே பார்த்திருந்தான் மேஜர் மூர்த்தி. தெருக்கோடியிலிருந்து மூங்கிற் புதர்ச் சிலுவையிலிருந்து கண்களைத் திருப்பித் தெருவிற்குள் கொண்டு வர வெகு நேரம் பிடித்தது அவனுக்கு. எதுவும் பிரமாதமான சிந்தனையல்ல. சிந்தனையற்றிருப்பதே ஓரளவுக்குப் பிரமாதமான விஷயமாக இருந்தது இந்த நாட்களில். 

இந்த நாட்களில் என்று எண்ணும்போது பெருமூச்சு விட்டான் மூர்த்தி. அந்த நாட்களில், இந்த நாட்களில் என்ற எண்ணம் அவனுக்கு ஒன்றும் அவ்வளவு வயதாகி விடவில்லை. யுத்தம் என்கிற மகா பெரிய, அவன் உள்ளத்தில் அடங்காத ஓர் அனுபவத்தைத் தவிர அவனுக்கு வேறு என்ன இருந்தது? அதுவும் அவனாகத் தேடிக் கொண்டதல்ல – தானாகத்தான் வாய்த்தது. எப்படியோ வாய்த்தது. அந்த அனுபவத்திலிருந்து எவ்வளவு லாபம் அடைய முடியுமோ அவ்வளவையும் அடைந்து விட வேண்டும் என்று விரும்பினான் அவன். பொருள் பற்றிய வரையில் லாபம் எதுவும் இருக்குமென்று தோன்றவில்லை. ஆத்மீகமான ஒரு லாபம் ஏற்படுத்திக்கொண்டு விட்டால் போதும். 

அந்த யுத்தம் ஆத்மீக அனுபவமாக அமையவில்லை என்று அவனே ஒப்புக்கொள்ளத்தான் வேண்டியிருந்தது. ஆனால் அவன் மாமா வீட்டுக்கு வந்தது அமைந்து விடும் போல இருந்தது – இந்தக் குடும்பம், இந்த வீடு, இந்தத் தெரு – 

இந்தத் தெருவிலே உயிர்வாழ்வது என்பது நடக்காத காரியமா என்று தன்னையே கேட்டுக்கொண்டான் அவன். உயிர் வாழ்வதும் நடந்ததா இங்கே, உண்மையிலேயே உண்டா? அந்தச் சமயத்திலே, விடியற்காலை வேளையில், அவ்வளவு நிசப்தமாக, அவ்வளவு நிம்மதியாக, அவ்வளவு… உயிரற்ற பான்மையிலே இருந்தது தெரு. 

அவன் மனத்தில் இந்த மாதிரி ஒரு சந்தேகம் எழுந்ததே தவறு என்று உணர்த்துவதற்கேபோல மேலண்டைப் பக்கத்து வீட்டிலே ஒரு குழந்தை வீரிட்டு அலறியது. 

அந்த அலறலுக்காகக் காத்திருந்தது போல, தெரு விழித்துக் கொள்ளத் தொடங்கியது. 

எங்கேயோ இதுகாறும் முடங்கிக் கொண்டு இருந்த நாய்கள் யாரோ அந்நியன் அத்துமீறிப் பிரவேசித்துவிட்டவனைக் கண்டு குரைப்பது போலக் குரலெடுத்துக் குரைக்கத் தொடங்கின. 

வடக்கே தொலைவிலிருந்து கோழிகள், உதிக்கிற நாளுக்கு கட்டியங் கூறின. 

வானத்திலே மேற்கேயிருந்து கிளம்பி நாலைந்து காகங்கள் சிற கடித்து வெளுத்துக்கொண்டிருந்த கீழ்வானம் நோக்கி ‘காகா’ வென்று இரைந்து கொண்டே பறந்தன. 

அக்கா குருவி என்பார்களே, அது கூவிற்று. பஞ்சாங்கத்தின் படி ஐப்பசி மாசம் என்பதை அது அறியாது ஆற்றிலே விழுந்துபோன தன் அக்காளைக் கூவியழைக்க, அன்புப் பிச்சை வேண்ட, பஞ்சாங்கம் வேறு பார்க்க வேண்டுமா? 

இவ்வளவு நேரம் மரக்கிளையிலே ஓய்ந்து பதுங்கியிருந்த வாடைக் காற்று ஊதத் தொடங்கியது. வெளிறிட்ட கிழக்கு வானத்தைக் கண்டு பொறாமை கொண்டு மற்றத் திசைகளும் வெளிறிடத் தொடங்கின. 

எதிர் வரிசை வீட்டுக் கூரை மேடுகள் ஒன்றுக்கொன்று ஒவ்வாத லட்சியக் கோடுகளாக வானத்தை முட்டின. வானம் விட்டுக் கொடுக்க வில்லை வளைந்து கொடுத்தது. 

எதிர் வீட்டுக் கூரை மேட்டிலே உட்கார்ந்து தனிக் குரல் எடுத்துப் பாடிய காகம் அச்சமயம் கருமை நிறம் பெற்றிருக்கவில்லை -கண்ணனைப் போல நீலமாக இருந்தது என்று கவனித்தான் மேஜர் மூர்த்தி. 

அடிவானத்திலே திடீர் என்று தோன்றுகிற மொட்டைப் பனை மரத்தைப்போல “காக்கைச் சிறகினிலே, நந்த லாலா” என்று கவி பாரதியாரின் அடி அவனுக்கு ஞாபகம் வந்தது. அது சிந்தனை வேரும் விட வில்லை – தளிரும் காட்டவில்லை. தனிச் சிந்தனையாக நின்றது. மேஜர் மூர்த்தி சாத்தனூர் சர்வமானிய அக்கிரஹாரத்தில் ஒட்டாமல் தனியாக நின்றது போல அந்தச் சிந்தனையும் அவன் மனத்திலே நின்றது. எதனுடனும் ஒட்டாமல், வேர் விடாமல், தொடர் சிந்தனை எழுப்பாமல், எதிரொலி தராமல் நின்றது. 

கையிலிருந்த சிகரெட்டு கையைச் சுட்டது. அதைத் தூக்கித் தெருவில் எறிந்துவிட்டுத் திண்ணையில் உட்கார்ந்தான் மேஜர் மூர்த்தி. 

– தொடரும்…

– ஒரு நாள் (நாவல்), முதற் பதிப்பு: 2004, கண்மணி கிரியேட்டிவ் வேவ்ஸ், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *