கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 21, 2023
பார்வையிட்டோர்: 12,941 
 

சுகிக்கு மன அழுத்தம் கூடிக்கொண்டே போனது. அழுத்தத்தை கட்டுப்படுத்தி இழுத்துப்பிடித்து நிறுத்த வழியின்றி தவித்தாள். துக்கம் தொண்டையை அடைத்தது. அடிக்கடி கட்டிலுக்கு அருகே வைத்திருந்த தண்ணீரை எடுத்துக்குடித்தாள்.

‘யாரிடம் பேசினால் இதற்குத்தீர்வு? அம்மாவிடமே பேசி விடலாமா? ச்சீ…அம்மாவிடம் பேசக்கூடிய விசயமா இது…? தோழிகள்….? திருமண வரவேற்பில் கலந்து மகிழ்ச்சியுடன் வாழ்த்தியவர்களிடம் போய் இதைச்சொன்னால் வருத்தப்படுவதோடு நம்மை பலவீனமாகவும் நினைப்பார்கள். தற்போது இருக்கும் கெத்தான இமேஜ் காணாமப்போயியிடும்’ மனம் குழப்பத்தில் ஆழ்ந்தது. 

போர்வையை முகத்துக்கும் சேர்த்து முழுவதுமாக போர்த்திக்கொண்டதோடு கணவன் முகன் படுத்திருக்கும் பக்கத்துக்கு எதிர் திசையில் ஒருக்களித்து முட்டிக்கால்களை முன்னே இழுத்து குறுக்கி படுத்து வெறுப்பை வெளிப்படுத்தினாள்.

உறக்கம் வர மறுக்க கட்டிலுக்கு கீழே போர்வையை விரித்து படுத்தவள் சற்று நேரத்தில் உறங்கிப்போனாள்.

காலையில் எழுந்து பல் துலக்கி, முகம் கழுவி சோபாவில் அமர்ந்த போது சூடாக ஆவி பறக்க பில்டர் காஃபி வைக்கப்பட்டிருந்தது. ‘ம்..இதுக்கொன்னும் குறைச்சலில்லை. வெறும் பையன்..’என நினைத்தவள் பசி வயிற்றைக்கிள்ள காஃபியை எடுத்து சுவைத்துக்குடித்தாள்.

அப்போது தனதருகில் வந்தமர்ந்த முகனிடம் முகம் கொடுத்து பேசாமல் முகத்தை வெடுக்கென திருப்பி தனது வெறுப்பைக்காட்டினாள்.

“சுகி… இன்னைக்கு என்னோட அத்தை வீட்ல விருந்துக்கு அழைச்சிருக்காங்க. போகலைன்னா சங்கடப்படுவாங்க. ப்ளீஸ்….” என கெஞ்சியபடி கேட்ட போது தனது புது மனைவி மறுப்பு சொல்லாமல் இருந்ததை சம்மதமாக நினைத்துக்கொண்டு கிளம்பத்தயாரானான்.

முகனின் அத்தை வீட்டில் வரவேற்பு பலமாக இருந்தது. சுகியை பெரிதாகத்தாங்கினர். அவளது நிறத்தையும், அழகையும் முகனின் அத்தை மகன் நிகி ஆஹா, ஓஹோ என புகழ்ந்தாள்.

“எப்படியோ ரதி மாதர பொண்ணப்புடிச்சுப்போட்டே. இப்படியொரு ராஜ யோகம் உனக்கிருக்கும் போது என்னையெல்லாம் கட்டுவியா என்ன?” என நிகி தன்னை மணந்து கொள்ளும் வயதும், முறையும் இருந்தும் அழகும், வசதியும் குறைவாக இருந்ததால் பேருக்காககூட பெண் கேட்கவில்லை எனும் வருத்தம் அத்தை குடும்பத்துக்கு இருந்தாலும் மிகவும் சகஜமாக விருந்து வைத்து புதுத்தம்பதியை மகிழ வைத்த போதும் சுகியின் முகம் வாடி இருந்ததைக்கண்ட முகனின் அத்தை “என்னடா பொண்ணு மொகம் வாட்டமா இருக்குது? கண்ணாலத்துக்கு முன்ன இருந்த மாதர பசங்க கூட சுத்தீட்டு சாமத்துக்கு ஊட்டுக்கு வந்து சட்டுனு படுத்து தூங்கிடப்பிடாது. உனக்குன்னு ஒருத்தி காத்திட்டிருக்கிறதை மறந்திடாதே” என கூறிய போது பதில் சொல்ல முடியாமல் நெளிந்தான்.

நேற்று போல் இன்றிரவும் வீணாகக்கழிந்தது.

காலையில் அம்மா வீட்டிலிருந்து அழைப்பு வந்தது. முகனிடம் மாமியார் அலைபேசியில் பேசியபோது ‘அத்தை, அத்தை’ என நெகிழ்ந்து பேசியதை சுகியால் சகித்துக்கொள்ள முடியவில்லை.

அம்மா வீட்டில் காலடி எடுத்து வைத்தவுடன் அணையில் தேக்கி வைத்த வெள்ளம் போல் தனது அறைக்கு விரைந்து சென்றவள் பெட்டில் குப்புறப்படுத்தவாறு கதறி அழுதாள். அவளது பின்னால் ஓடிச்சென்ற தாய் ராகவி தன் பெண்ணின் நிலை கண்டு பதற்றமடையாமல் பக்கத்தில் அமர்ந்து நிலைமையை கேட்டறிந்தாள்.

“எல்லாமே யூடியூப் வீடியோ பார்த்து தப்புத்தப்பா நீ புரிஞ்சிட்டது தான் காரணம். அந்தக்காலத்துல எங்கம்மாவுக்கு அப்பாவுக்கு கல்யாணமாகி ஒரு மாசம் கூச்சப்பட்டு பேசாம இருந்திருக்கிறாங்க.

அதுக்கப்புறம் நாங்க நாலு குழந்தைங்க பிறக்கலியா? முகத்த வெறுப்பா காட்டுனா சிறப்பா எதுவுமே நடக்காது. வம்பா பேசறத விட்டுட்டு அன்பா நாலு வார்த்த பேசிப்பாரு, அனுசரணையா நடந்து பாரு. எல்லாமே புடிச்சமாதர நடக்கும்” என அறிவுரை கூறிய அம்மாவைக்கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த போது “இத செய்ய வேண்டிய இடம் வேற” என அம்மா பேசியதும், புரிந்து கொண்டவள் திருமணத்துக்கு பின் முதலாக வெட்கப்பட்டவாறு கணவன் முகனைத்தேடிச்சென்றாள்!

Print Friendly, PDF & Email

5 thoughts on “நினைத்தது வேறு!

  1. வணக்கம்,

    மீண்டும் மீண்டும் இதே கருப்பொருள் எடுத்துக் கொள்ளப்படுகிறது. பெண்களின் எதிர்பார்ப்பு இது தான், இவ்வளவு தான் என்று அதிகளவில் கையாளப்படும் கருத்து இந்தக் கதையிலும் கையாளப்பட்டுள்ளது.

    புதிதாக திருமணமான ஒரு பெண்ணுக்கு என்ன எதிர்பார்ப்பு இருக்கும் என்ற பட்டியலில் பெரும்பாலான தொடக்கநிலை கதாசிரியர்கள் முன்னிலைப்படுத்தும் கருத்தையே இந்தக் கதையும் கையாள்கிறது.

    புதிதாக திருமணம் ஆனப் பெண்கள், கணவன் வந்ததும் எவ்வளவோ பரந்த சிந்தனையையும், அழுத்தமான உணர்வுகளையும், துணிச்சலையும் வெளிப்படுத்த விரும்புவதும் உண்டு. இந்த விருப்பங்கள் அல்லது உணர்வுகளை அவர்களின் வாழ்க்கைச் சூழல் தீர்மானிக்கிறது. அவற்றை கதாசிரியர்கள் கையாள்வதில்லை.

    தமிழ் கதாசிரியர்களின் சிந்தனையும் கண்ணோட்டமும் இன்னும் பல காத தூரம் விரிவடைய வேண்டி இருப்பதை இந்தக் கதை தெளிவுபடுத்துகிறது.

    நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *