கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 19, 2023
பார்வையிட்டோர்: 2,354 
 

(1996ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அன்று சுற்றாடல் பாட நேரத்தில், ஆசிரியர் வாழை மரத்தைப் பற்றிப் பாடம் நடத்தினார். முதலில் இரண் டடி நீளம், இரண்டடி அகலம், இரண்டடி ஆழமான குழி வெட்டவேண்டும். அந்தக் குழியிலே குப்பை கூளங்களைப் போட்டு எரித்துத் தொற்று நீக்க வேண்டும். அதன்பின் ஒரு வாரம் முன்னாற் பிடுங்கப்பட்டு நிழலில் வதங்கவிடப் பட்டிருந்த வாழைக் குட்டியைக் குழியில் நட்டுக், குழியிலே உக்கிய மாட்டெரு காய்ந்த சருகுகள் ஆகிய வற்றை இட்டுக் குழியை மூடவேண்டும். நட்டு இரண்டு வாரங்களுக்குத் தண்ணீர்விடத் தேவையில்லை. இரண்டு வாரங்களில் வாழைக்குட்டி குருத்துவிட்டு வளரும். அதன்பின்னர் நீர் பாய்ச்ச வேண்டும். நட்டுப் பத்துப் பன்னிரண்டு மாதங்களில் வாழை குலை ஈனும். குலை தள்ளுமுன்னர் கட்டைக்குருத்து ஒன்று தோன்றும். அதன் பின்னரே மொத்தி தள்ளும். அதன் இதழ்கள் ஒவ்வொன் றாய் விழ அதனிடையே சீப்பு சீப்பாய்க் காய்கள் தோன்றும்.

வாழையில் மொந்தன், கதலி, இதரை, கப்பல் எனப் பல இனங்கள் உண்டு. மொந்தன் வாழைக்காய் கறி சமைகக உதவும். மற்ற இனங்களைப் பழமாகச் சாப்பிடலாம். வாழைப்பழத்தில் உயிர்ச்சத்துகள் நிறைய உண்டு. எல்லாருமே அதைச் சாப்பிடலாம். அது முக்கனிகளில் ஒன்று.

எனப் பாடம் நடத்திய ஆசிரியர், நீங்கள் எல்லாரும் உங்கள் வீட்டுத் தோட்டத்திலே ஒரு வாழை மரமாவது வளர்ப்பீர்களா?” என ஐந்தாம் வகுப்பு மாணவர்களைக் கேட்டார்.

மாணவர்கள் எல்லாருமே ”ஆம் ஐயா'” என்று ஒரு சேரப் பதிலளித்தார்கள்.

பாவம்! அந்த மாணவர்கள் எல்லோருமே தொண் ணூறாம் ஆண்டு நடந்த உள்நாட்டுப் போரின் காரண மாக தம் ஊரைவிட்டு அகதிகளாக ஓடி வந்தவர்கள். ஐந்தாண்டுகளுக்கும் மேலாக அந்த வேதக் கோயில் அருகாமையிற்தான் அகதிகளாகத் தம் பெற்றாரோடு வாழ்கிறார்கள். அந்தக் குடிசைகளின் ஒருபுறமாகத்தான் அவர்களது ஓலைக் கொட்டகைப் பாடசாலையும் இறால்குழி அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை’ என்ற பழைய விலாசத்தோடு நடந்து கொண்டிருக்கின்றது!

அந்தக் கோயிலருகிலே அகதிகளாகவிருந்த பல்வேறு கிராமத்து மக்கள் எல்லாருமே தத்தம் கிராமங்களில் மீண்டும் குடியேறிவிட்டார்கள். ஆனால் இறால்குழி மக்கள் மட்டும் இன்னமும் தங்கள் ஊருக்குப் போகவில்லை!

மகாவலி கங்கையும் அதன் கிளை ஒன்றும் கடலோடு கலக்கும் ஆற்றிடை மேட்டுக் கிராமந்தான் இறால் குழி. வெறும் மணல் வெளி. அம்மணல் வெளியில் முருங்கை மரங்களும் மர முந்திரிகையும் சேழிப்பாக வளரும். கிணற் றடியில் மட்டும் ஓரிரண்டு வாழை மரங்கள் நட்டிருப்பார்கள்!

இரண்டு மைல்களுக்கப்பால் கங்கைக்கரையின் செழுமையான இருவாட்டி மண்ணில் ஊரவர்கள் எல்லாருமே புகையிலையும், மிளகாயும் பயிரிடுவார்கள்.

அவர்களது தோட்டங்களுக்கு அப்பால் அடர்ந்த சோலைக்காடுகள். அந்தக காடுகளிற்தான் போராளி கள் பதுங்கியிருப்பதாக அரச படையினர் நம்புகிறார்கள். அக்காடுகளைக் ‘கிளீயர்’ பண்ணும் வரை இறால் குழி மக்கள் தம் ஊரிற் குடியேற முடியாதென அரசாங்கம் சொல்கிறது. அதனால் இறால்குழி மக்கள் இன்னமும் அகதிகளே. அவர்களுக்கு வீடாவது? வீட்டுத் தோட்டமாவது?

கோயிலின் பக்கமாக அமைந்துள்ள சிறுசிறு ஓலைக் வாழ்கிறார்கள் அம்மக்கள். குடிசைகளில் ஓலைகள் இற்று, ஈர்க்குகள் மட்டுமே நீட்டிக் கொண்டிருக்கும் அக் குடிசைகளில் கோடைக் காலத்தில் எப்படியோ வாழ்ந்து விடலாம் ஆனால் மாரியிற் குடிசைகள் தாக்குப் பிடிக் காது. மழைத்தண்ணீர் குடிசைக்குள்ளே வெள்ளமாய நிற்கும். பின்னர் அக்கலட்டித் தரை சேறும் சகதியுமாய் விடும். அப்போதெல்லாம் மழை பெய்து ஓய்ந்த அடுத்த கணத்திலேயே மழைத் தண்ணீரை மாயம் போல உறிஞ்சி குடித்துவிடும் தம் வெண் மணற் கிராமத்தை எண்ணி ஏங்குவார்கள்.

பாடசாலை முடிந்து தன் குடிசைக்கு வந்த குமார் தன் தாயிடம் சொன்னான். ‘அம்மா நான் ஒரு வாழை மரம் நாட்ட வேணும்”

“சரிதான் மனிசன் நிக்கவே இஞ்ச இடங்காணாது. இதுக்குள்ள வாழய எங்க நாட்றது?”

“வீட்டுக்குள்ளவா அம்மா வாழய நாட்டப்போறன். குடம் வைக்கிற இடத்தில் நாட்டலாம் அம்மா”

“சரிதான், கோடையடிச்சித் தரை காய்ந்திருக்கிற காச்சலுக்கு இந்த நாய்க்கழித் தரையில் உன்னால ஒரு குழி தோண்ட முடியுமா? மண்வெட்டிய ஓங்கித் தரை யில் கொத்தினாத் தரை ‘கிண்ணரம் பாடும். ஒரு கட்டி மண் பெயராது. எப்படிக் குழி வெட்டுவா? சும்மா மெனக்கிடாம வேறு வேலயப் பார்” என்றாள் அம்மா.

ஆனாற் குமார் வாழை மரம் நடும் தன் எண்ணத்தை விட்டு விடவில்லை. குடம் வைத்திருந்த இடத்திலே மண்வெட்டியாற் கொத்திப் பார்த்தான். அம்மா சொன் பாட வில்லை. னதுபோல மண்வெட்டி ‘கிண்ணரம்’ டி மாறாகக் களிமண் பசைபோல மண்வெட்டியில் ஒட்டிக் கொண்டு வந்தது. இரண்டடி நீளம் இரண்டடி அகலம் வெட்டினான் ஆனால் அரை அடி ஆழத்திற்கப்பால் மண்வெட்டி இறங்க மாட்டேன் என்றது. ஓங்கிக் கொத் வெட் தினால் களிமண் சிராய் சிராயாகப் பெயர்ந்தது. டவே முடியவில்லை. குமார் தான் வெட்டிய குழிக் குள்ளே குடத்துத் தண்ணீரைச் சரித்து ஊற்றினான். குழி யிற் தண்ணீர் தேங்கி நின்றது. அத்தண்ணீர் வற்ற ஒரு இரவு சென்றது. அடுத்த நாட் காலையில் எழுந்ததும் குமார் குழியை மீண்டும் ஆழமாக்கினான். மேலும் அரை அடியே வெட்ட முடிந்தது. இப்படியாகக் குழியிற் தண்ணீர் ஊற்றி, ஊற்றி இரண்டு அடி ஆழக் குழியை பாட குமார் ஐந்து நாட்களில் வெட்டி முடித்தான். அகலம் குழியின் நீளம், சாலை அடிமட்டத்தால் ஆழத்தை எல்லாம் அளந்து திருப்திப்பட்டுக் கொண்டான்.

அந்தக் கோயிலைச் சுற்றி இருந்த ஊர் அடங்கலும் வாழைத் தோட்டந்தான். மாரியில் மதர்த்துக் கோடை யில் வதங்கி அவை வளர்ந்தன. அவ்வூரவனான வாய்க்காலிற் அமலனுடன் குளிக்கையில் குமார் வாழைக்குட்டி ஒன்று கேட்டிருந்தான். அமலன் வாக்களித்தபடி குமாருக்கு ஒரு கதலி வாழைக்குட்டி கொடுத் திருந்தான். இலைகள் எல்லாம் வெட்டப்பட்ட அந்த வாழைக்குட்டி முகாமுக்கு முன்னால் நின்ற இலுப்பை மரத்திற் சார்த்தப்பட்டிருந்தது.

குமார் அந்த வாழைக் குட்டியைத் தூக்கி வந்து குழி யில் நட்டு அது சரிந்து விழுந்து விடாமல் இருக்க, வாழையைக் கையாற் பிடித்துக் கொண்டு, காலாற் குழியடியில் வெட்டிக் குவிக்கப்பட்டிருந்த களி மண்ணைத் தள்ளி னான். வாழைக் குட்டி நிறு திட்டமாக நின்றதும் கூடையை எடுத்துக் காய்ந்த சாணி பொறுக்கிக் கொண்டு வந்து குழியிலே போட்டான். இலுப்பை மரத்துச் சருகு களையும் வேறு சருகுகளையும் பொறுக்கி வந்து குழியை நிறைத்தான். அம்மா அடுப்புச் சாம்பலையும் குழியிற் கொட்டினால் வாழைக்குட்டிக்கு நோய் வராது என அவள் சொன்னாள். குமார் மண்வெட்டியால் மண்ணைத் தள்ளிக் குழியை மூடினான். வாழைமரத்தடியில் மண்ணைக் குவித்து மேடாக்கினான்.

வாழை நட்டாய் விட்டது. குமார் தண்ணீர்க்குடத்தைத் தூரமாகக் கொண்டு போய் வைத்தான். அதன் பின்னர் காலையில் எழுந்ததும் முதல் வேலையாகக் குமார் தன் வாழைக்குட்டியையே பார்த்தான்.

இரண்டு வாரங்கள் கடந்து விட்டன. னெட்டாது விடப்பட்டிருந்த வாழைக்குட்டியின் குருந்து சிறிது நீண்டிருப்பதைக் குமார் அவதானித்தான். அடுத்த நாள் காலையில் அக்குருத்து இன்னும் சற்று நீண்டிருந் தது. ஆனந்தமடைந்த குமார் தண்ணீர்க் குடத்தைத் தூக்கிக் கொண்டு வந்து வாழையினடியில் வைத்தான்

குடத்து நீரின் ஈரக்கசிவிற் குமாரின் வாழை நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டேயிருந்தது. இதற்குள் மழைக் காலம் வந்து விட்டது. சோவென்று கொட்டிய மழை அகதி முகாமை வெள்ளக் காடாக்கியது. அகதி முகாம் மக்களின் வாழ்க்கையை நரகமாக்கிய மழைக்காலம் முடிந்து, பனிக்காலம் தொடங்கி மீண்டும் கோடை வந்தது. இவை எதனையுமே கண்டு கொள்ளாமல் குமாரின் வாழைக்குட்டி வாழை மரமாகியது. வாழை மரத்தின் காய்ந்த சருகுகளைக் குமார் வெட்டிவிட்டான். மரத்தடியில் முளைத்த அறுகம்புற்களைப் பிடுங்கினான். கோடையின் கொடிய வெப்பத்திலும் குமாரின் வாழை மரம் குடத்து நீரின் ஈரக்கசிவில் மதாளித்து வளர்ந்தது.

ஒருநாட் காலையில் எழுந்து பார்த்தபோது வாழை மரத்தினடியிலே நிலம் பிளவுப்பட்டிருப்பதைக் குமார் அவதானித்தான்.குமார் அதைக் கிண்டிப் பார்த்தான். அம்மா சத்தம் போட்டுச் சொன்னாள். “சும்மா விடு குமார். வாழை குட்டி விடப் போகுது”

அம்மா சொன்னதைப் போல அடுத்த நாட் காலை குட்டியின் ஊசிமுனை வெளியே எட்டிப் பார்த்தது. நாளுக்கு நாள் அக்குட்டி வளர்ந்து மூன்றடி உயரமான போது அதன் எதிர்ப்பக்கமாக இன்னோர் குட்டி தோன்றியது.

அதைப் பார்த்துவிட்டு அம்மா சொன்னாள். “இனி வாழை கெதியாய்க் குலை போடும்.”

குலை போடுமுன் கட்டைக் குருத்து வருமாமே” என்றான் குமார்.

“ஓமோம்.இப்ப இருக்கிற குருத்துக்குப் பின்னால் வர்ற குருத்து, கட்டைக் குருத்தாத்தான் இருக்கும்” என்றாள் அம்மா.

அன்று தொடக்கம் காலையில் எழுந்ததும் குமார் கட்டைக் குருத்து வந்துவிட்டதா என்று பார்க்கத் தொடங்கினான். இரண்டு வாரங்களின் பின்னால் வந்த குருத்து இரண்டு முழங்களுக்கு மேல் வரவில்லை.

ஆம். அது கட்டைக் குருத்து!

குமார் துள்ளிக்குதித்து, “அம்மா கட்டைக்குருத்து வந்திற்றம்மா. இனி வாழை குலை போடும்” என்று ஆனந்தத்தோடு கத்தினான்.

சில நாட்களில் கட்டைக் குருத்திலையின் தண்டுக் கிடையில் வாழைப் பொத்தி கருஞ்செம்மையாய்த் தோன்றிற்று.அது நாளுக்கு நாள் வளர்ந்து தரையை நோக்கி வளைந்து தொங்கியது. பின்னர் அப்பொத்தியின் மடல் ஒன்று விரிந்து தரையில் விழுந்தது. குமார் பொத்தியின் வளர்ச்சியைக் குதூகலத்துடனும், ஒரு விஞ்ஞானியின் ஆராய்ச்சியுடனும் கவனித்துக் கொண்டிருந்தான்.

அடுத்த நாளும் பொத்தியின் மடல் ஒன்று கீழே விழுந்தது குமார் வாழைக்குலையின் முதற்சீப்பைக் கண்டான். அதிகாலையில் அண்ணாந்து பார்த்துக்

குமார் அச்சீப்பிலுள்ள காய்களை எண்ணினான். பதினான்கு காய்கள்!

அதற்கடுத்த நாள் மேலும் இரண்டு சீப்புகள் தெரிந்தன. அண்ணாந்தபடி அதன் காய்களை எண்ண முடியாதிருந்தது குமாருக்கு. ஆனால் ஒவ்வொரு நாட் காலையிலும் புதிய புதிய சீப்புகள் தென்பட்டன. எல்லாமாகப் பதினான்கு சீப்புகள் வந்ததும், அதன் பின்னால் வாழைக்குலையின் நடுத்தண்டு மட்டுந்தான் நீண்டு வளர்ந்தது. அந்தத் தண்டு சாண் நீளத்திறகு மேலே வளர்ந்தபோது அம்மா உரலிலே ஏறி நின்று பொத்தியை நீளமான கத்தியால் வெட்டி விட்டாள். பொத்தி தரையிலே விழுந்தது. வாழைக் குலையின் தண்டிலிருந்து பிசின்போல நீர் சொட்டிற்று.

அம்மா அன்று வாழைப் பொத்தியைச் சுண்டிக் கறி சமைத்திருந்தாள். குமார் வாழைப்பொத்திச் சுண்டலை ரசித்துச் சாப்பிடுகையில் அம்மா சொன்னாள் ”இன்னும் மூணு மாசத்தில் வாழைக்குலை முற்றிவிடும். தீபாவளிக்கு வெட்டிப் புகை ஊதிப் பழுக்க வைக்கலாம்”

காயில வெட்டிப் புகையடிக்கப்படாதம்மா. புகை யூதின பழம் ருசியாயிருக்காது. மரத்தோட இருந்து பழுத்தாத்தான் தேன் போல இனிக்கும் என அமலன் சொன்னான்” என்றான் குமார்.

“சரி,சரி. மரத்தோட இருந்தே பழுக்கட்டும்.”

“ஓம் அம்மா. நம்ம நாலு பேரும் பத்து நாளைக்கு ஆளுக்கு நாலஞ்சு பழமாச் சாப்பிட லாம்” என்றான் குமார்.

மீண்டும் மழைக்காலம் தொடங்கி விட்டது தீபாவளிக்கு இன்னமும் ஒரு மாசந்தான் இருந்தது. தனக்கில்லாவிட்டாலும் தன் இரண்டு மகன்களுக்கும் இளைய மகளுக்கும் தீபாவளிக்குப் புது உடுப்புகள் வாங்க வேண்டுமே என்ற கவலை தாய்க்குப் பிடித்துக் கொண்டது!

அவள் கணவன் மட்டும் இருந்திருந்தால், கோடைப் போக அருவி வெட்டிலும், மாரிப்போக விதைப்பிலும் கூலிக்குப் போய் உழைத்திருப்பான் ஆனால் ஊருக்குள்ளே ஆமிக்காரன் வர முன்னர் ஷெல் அடித்ததில் அவன் உயிரிழந்து விட்டான். கணவனைப் பிறந்த இறால் குழி மண்ணில் புதைத்து விட்டுத்தான் அவள் ஊரவர் களோடும் இங்கு அகதியாக இங்கு வந்தாள். அரசாங்கம் கொழ்க்கும் நிவாரணிமான அரிசியையும் சீனிப்யையும் நம்பியே வாழ்க்கை நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையிற் புது உடுப்புகளுக்கு எங்கே போவது?

தீபாவளிக்கு இன்னமும் ஐந்து நாட்களே இருந்தன. இனித் துணி வாங்கினாலும் தைக்க முடியாது. தைச்சு விக்கிற சட்டைதான் வாங்கவேணும், ரேஷனுக்கு எடுத்த அரிசியையும் சர்க்கரையையும் விற்று…

தாய் யோசித்துக் கொண்டிருக்கையிற் பாடசாலைக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்த குமார் சொன்னான். “தீபாவளிக்கு என்ர வாழைக்குலை பழுத்திரும் என்று சொன்னீங்களே அம்ம. அது பழுக்கல்லியே. நீங்க அவசரப்பட்டு வாழைக்குலையை வெட்டீராதீங்க அம்மா.”

குமார் பாடசாலைக்குப் போய்விட்டான். “எப்பவும் இவனுக்கு வாழைக்குலையிர கதைதான்” என்று அம்மா அலுத்துக் கொண்டே அடுத்த குடிசையில் இருக்கும் செல்லப்பாக் கிழவரிடம் சொன்னாள். “தீபாவளிக்குப் பிள்ளைகளுக்கு உடுப்பு ஒண்ணும் வாங்கல்ல சித்தப்பா. ரேஷன் அரிசிய வித்துப் போட்டு வாங்கலாம் என்று யோசிக்கிறன்.”

மடக் கத கிழவர் ஆத்திரப்பட்டு “என்னடி புள்ள கதைக்கிறா. அரிசிய வித்துப் போட்டு நல்ல நாள் திருநாளில் அடுப்பு மூட்டாமல் இருக்கிறதா? அடுத்த மாதம் ரேஷன் தரமட்டும் பட்டினி கிடப்பியா? அந்த எண்ணத்த விட்டிற்று வேற வேலையைப் பார்” என்றார்.

“வேற எங்க நாள் பாப்பன் சித்தப்பா?”

சற்று யோசித்த கிழவர் வாழை மரத்தை நிமிர்ந்து பார்த்துவிட்டு, “இந்த வாழைக்குலை நல்லா முற்றிற்றுப் புள்ள. கள்ளன் கையில குடுத்தாலும் இருநூறு ரூபாத் தீபாவளிப்பாட்டுக்கு தருவான். இத வெட்டி வித்தா உதவும்” என்றார்.

“இது என்ர மூத்த மகன் ஆசையோடு நாட்டி வளர்த்த மரம் சித்தப்பா. மரத்தோட பழுத்த பிறகுதான் வெட்டிச் சாப்பிட வேணும் என்று காலயிலும் சொல்லிற்றுப் பள்ளிக்குப் போறான்”

“அவன் கெடக்கிறான் வெளையாட்டுப்புள்ள. நம் மெல்லாம் வாழப்பழம் தின்ற நெலபரத்தில்யா இருக்கம்? வெட்டி வித்தாக் காச நீயா எடுக்க போற. புள்ளைகளுக்குத்தானே வாங்கப்போறா. நான் கையோட போய் வியாபாரியக் கூட்டிவாறன்” என்று சொல்லிவிட்டுத் தெருவைப் பார்த்து நடந்தார்.

செல்லம்மா யோசித்துக் கொண்டேயிருந்தாள்.

வெளியே சென்ற கிழவர், கூட்டிவந்த வியாபாரி வாழைக்குலையை நிமிர்ந்து பார்த்து “இருநூறு ரூபா தாறன்” என்றதும், செல்லம்மா தயங்கினாள்!

அவள் தயக்கத்தைக் கண்ட வியாபாரி “சரி, இன்னும் பத்து ரூபா மேல தாறன். குலையை வெட்றன்”

செல்லம்மா ஏதுமே பேசாமல் நின்றாள்!

வியாபாரி வாழைக்குலையை பாய்ந்து பிடித்து வாழை மரத்தை வளைத்துத் தான் கொண்டு வந்த கத்தியால் வாழைக்குலையை வெட்டினான். செல்லம்மா மௌனமாகவே நின்றாள்!

குலையை வெட்டிக் கொண்ட வியாபாரி செல்லம்மா விடம் இரண்டு நூறு ரூபா நோட்டுக்களையும் ஒரு பத்து ரூபா நோட்டையும் நீட்டினான்.

அந்த நோட்டுக்களை வாங்கிக் கொண்டபோது செல்லம்மாவின் கண்ணீர் அந்நோட்டுக்களில் விழுந்து சிதறியது. பாடசாலை மூடுவதற்கான மணி ஓசை அவள் காதுகளிற் கேட்டது.

– ஒரு காவியம் நிறைவு பெறுகின்றது (ஐம்பது சிறுகதைகள்), முதற் பதிப்பு ஒக்டோபர் 1996, மித்ர வெளியீடு, சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *