ராஜ்குமாரின் சிறிய குறைபாடு

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: அறிவியல் புனைவு
கதைப்பதிவு: March 8, 2024
பார்வையிட்டோர்: 4,164 
 
 

எங்கள் நேர்காணல் முடிந்தவுடன் நான் ராஜ்குமார்க்கு நன்றி தெரிவித்தேன். அவன் எழுந்து, பணிவாக என் கையை குலுக்கி விட்டு அறையை விட்டு வெளியேறினான். அடுத்த நிமிடம் கேசவ் அறையின் கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்தான். முகத்தில் ஒரே பரபரப்பு. “என்னடா, என் படைப்பு எப்படி?” என்று சிறு குழந்தையின் ஆர்வத்துடன் கேட்டான்.

கேசவ் என்னுடைய நெருங்கிய நண்பன். ரோபாட்டிக்ஸ் துறையில் அசகாய சூரன். அவன் படைப்பு என்று சொன்னது, ராஜ்குமார் எனும் யந்திரனை. நடை, உடை, பாவனை என்று எல்லாவற்றிலும் மனிதனைப் போலவே இருக்கும் ராஜ்குமாரை உருவாக்க கேசவ்க்கு பத்து வருடங்கள் பிடித்தது. வெளியுலகிற்கு வெளியிடுவதற்கு முன், ராஜ்குமாரை நான் நேர்காணல் செய்து, மற்ற சோதனையாளர்கள் தவறவிட்ட குறைபாடு ஏதேனுமிருந்தால் அதைக் கண்டறிய வேண்டும் என்று கேசவ் விரும்பினான். இப்போது நான் முடித்த நேர்காணல் அது தான்.

நான் எழுந்து கேசவ்வை கட்டிக் கொண்டு அவன் கையை வலுவாக குலுக்கினேன். “கேசவ், யு ஆர் பிரில்லியன்ட்! அசல் மனிதனைப் போலவே இருக்கிறான் ராஜ்குமார். தாடை எலும்பு, கண்கள், மூக்கு, விரல்கள் மற்றும் தோலின் கீழ் உள்ள நரம்புகள் – அனைத்தும் மனிதனைப் போலவே. அது மட்டுமா, ராஜ்குமார் மனிதனைப் போலவே பேசுகிறான், நடக்கிறான்… இவன் ஒரு யந்திரம் என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள்!”

“அப்படியானால், நான் அவனை ஆயிரக்கணக்கில் உற்பத்தி செய்து விற்க ஆரம்பிக்கட்டுமா? அவனுக்கு வெளியே மிகப் பெரிய மார்க்கட் இருக்கிறது.”

“சரி, அதைப் பற்றி…” நான் தயங்கினேன்.

“என்ன?”

“நான் ராஜ்குமாருடன் பேசிய பிறகு, எங்கள் உரையாடல் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது போல் உணர்ந்தேன். எங்கேயோ சிறிதாக உறுத்துகிறது. ராஜ்குமாரிடம் ஒரு சிறிய குறைபாடு இருக்கலாம் என்று நான் நினைக்கிறேன்.”

“என்ன குறைபாடு? என்ன இருந்தாலும் சரி செய்து விடலாம்…”

“குறைபாடு இது தான் என்று திட்ட வட்டமாக சொல்ல முடியவில்லை. விசித்திரமாக உணர்கிறேன்… ஆனால் அந்த உணர்வை ஏற்படுத்தும் குறை என்ன உறுதியாக சொல்ல தெரியவில்லை.”

கேசவ் பெருமூச்சு விட்டு, “குறைபாடு என்னவென்று தெரியாவிட்டால் அதை எப்படி நான் சரி செய்ய முடியும்?” என்று சொல்ல, எங்களுக்குள் ஒரு சங்கடமான அமைதி நிலவியது.

நான் எழுந்து, “நான் ஒன்று செய்கிறேன். ராஜ்குமாருடன் நான் செய்த நேர்காணலின் வீடியோ பதிவை எடுத்துப்போகிறேன். நான் அதை துப்பரவாக அலசி ஆராய்ந்து பார்க்கிறேன்.” என்றேன்.

அடுத்த நாள் அந்த ஏழு நிமிட நேர்காணல் வீடியோவை பலமுறை பார்த்தேன். ஒவ்வொரு முறையும், ராஜ்குமாரின் நடத்தையும் உருவமும் என்னை பிரமிப்பூட்டியது. ஆனால் அந்த விசித்திரமான விவரிக்க முடியாத உணர்வும் மிஞ்சி இருந்தது.

இரண்டு மணி நேரம் கழித்து, பத்தாவது தடவையாக வீடியோவைப் பார்த்துக் கொண்டிருந்த போது திடீரென்று பொறி தட்டியது. என்ன குறைபாடு என்று புரிந்து போனது. உடனே கேசவ்வை போனில் அழைத்தேன். “குறைபாடு என்ன என்று கண்டு பிடித்து விட்டேன். ஒரு சாதாரண விஷயம். ஸோ சில்லி!” என்றேன்.

“என்ன, சொல்லு?” என்று பரபரத்தான் கேசவ்.

“ராஜ்குமாரின் கண்கள். அவை ஒருபோதும் இமைக்கவேயில்லை.”

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *