புதிய ஐபோன் 15 இன் கில்லர் அம்சம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: அறிவியல் புனைவு
கதைப்பதிவு: September 4, 2023
பார்வையிட்டோர்: 3,331 
 
 

செப்டம்பர் 13, 2023 அன்று, ஆப்பிள் நிறுவனத்தின் அதிபர் டிம் குக்,அமெரிக்காவில் நடைபெற்ற ஒரு நேரலை நிகழ்வில் புதிய ஐபோன் 15ஐ அறிவித்தார். ஐபோனின் புதிய அம்சங்கள் ஏற்கனவே உலகிற்கு தெரிந்து விட்டதால் அந்த நிகழ்வை யாரும் பெரிதாக பொருட்படுத்தவில்லை. பலர் பார்க்காத ஐபோன் டெமோவை டிம் துரிதமாக முடித்தார்.

அதற்குப் பின் அனைவரையும் திகைக்க வைத்த போனின் கில்லர் அம்சம் ஒன்றை டிம் விவரித்தார். தொழில்நுட்ப ரீதியாக அது ஒரு அம்சமே அல்ல. ஆனால் அது முழு உலகையும் நிறுத்தி கவனிக்க வைத்தது. ஸ்டீவ் ஜாப்சை கூட அவரது கல்லறையில் திரும்ப வைத்தது.

அந்தத் தருணத்தின் முக்கியத்துவத்தை முழுமையாகப் புரிந்துகொள்ள, நாம் பல மாதங்கள் பின்னோக்கிச் சென்று, டிம் தனது நிதி ஆய்வாளர்களில் ஒருவருடன் நடத்திய கலந்துரையாடலைக் கேட்க வேண்டும். அந்த ஆய்வாளரை சாரா என்று அழைப்போம்.

டிம், ஒரு மின்னஞ்சலின் பிரிண்ட் அவுட்டைப் பார்த்துக் கொண்டே பேசினார். “சாரா, வரவிருக்கும் ஐபோன் 15 க்கு ஒரு புதிய யோசனை உங்களிடம் இருப்பதாக என்னிடம் கூறப்பட்டது. பொதுவாக வடிவமைப்பு யோசனைகள் பொறியாளர்களிடமிருந்து வரும். ஆனாலும் உங்கள் யோசனையை கேட்க நான் தயாராக இருக்கிறேன்.”

“சார், இது ஒரு வடிவமைப்பு யோசனை அல்ல. போனின் அம்சங்களுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.” என்றாள் சாரா கொஞ்சம் தயக்கத்துடன்.

அவரது ஆரம்ப ஆர்வம் குறைந்துவிட்டாலும், டிம் அதைக் காட்டக் கொள்ளவில்லை. அவர், “சரி, சொல்லுங்கள்.” என்றார்.

சாரா தொண்டையைச் செருமிக் கொண்டு, “உங்களுக்கே தெரியும், ஆப்பிள் ஒரு பெரும் பணக் குவியலில் மேல் அமர்ந்திருக்கிறது – சரியாக சொன்னால் 202 பில்லியன் டாலர்கள் – அத்தனை பணத்தையும் என்ன செய்வது என்று நமக்குத் தெரியவில்லை.”

டிம் பெருமூச்சு விட்டார். “ஓ, ஆமாம். அந்த பணத்தை சிறந்த வழிக்கு பயன் படுத்த சில திட்டங்கள் உள்ளன, ஆனால் அவற்றில் எதிலும் எனக்கு திருப்தி இல்லை.”

சாரா தொடர்ந்தாள். “அமெரிக்காவில் 328 மில்லியன் மக்கள் உள்ளனர். அவர்களிடையே 202 பில்லியனைப் பிரித்தால் ஒரு தலைக்கு $615 வரும்.”

டிம் சாராவை உற்றுப் பார்த்து, “அனைவருக்கும் நம் பணத்தை தூக்கிக் கொடுத்து விட வேண்டும் என்கிறீர்களா?” என்று கேட்டார்.

“அப்படி இல்லை சார்.” ஒரு செகண்ட் யோசித்து விட்டு சாரா கேட்டாள். “புதிய ஐபோன் 15 ஐ உருவாக்க நமக்கு எவ்வளவு செலவாகும் என்று தெரியுமா?”

“ஆமாம், தெரியும். ஒரு போன் செய்ய நமக்கு…” டிம் தனது லேப்டாப்பை பார்த்து விட்டு, “…$615 ஆகும்.” என்றார்.

“என் யோசனை இது தான். 328 மில்லியன் ஐபோன் 15 களை உருவாக்கி அவற்றை அமெரிக்க மக்களுக்கு இலவசமாக வழங்குவோம்.”

டிம் திகைத்துப் போனார். இதற்கு முன்னால் பல அதிரடி யோசனைகளைக் கேட்டிருக்கிறார், ஆனால் இதற்கு அருகில் எதுவும் வரவில்லை.

அவனது மௌனத்தால் உற்சாகமடைந்த சாரா தொடர்ந்தாள். “யோசித்துப் பாருங்கள். நம் பணத்தை இந்த வழியில் செலவழிப்பதன் நீண்ட கால ஆதாயங்கள் மகத்தானவை… நாம் ஆண்ட்ராய்டை நசுக்கி ஒழித்தி விடலாம். கோடிக்கணக்கான மக்களை ஆப்பிள் சுற்றுச்சூழல் அமைப்பிற்குள் கொண்டுவந்து விடலாம். மேலும் தலைமுறை தலைமுறைகளாக அவர்களை ஆப்பிளுடன் கட்டிப்போட்டு விடலாம்.”

சாராவின் யோசனை ஒரே நேரத்தில் பல பிரச்சினைகளை தீர்க்கும் என்பதை உணர்ந்த டிம் புன்னகை புரிந்தார்..

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *