மென்பொருள் கதைகள் 1 – Microsoft PowerPoint

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: அறிவியல் புனைவு
கதைப்பதிவு: April 19, 2024
பார்வையிட்டோர்: 2,347 
 
 

நீள் முட்டை வடிவ மேசைக்குப் பின் நாங்கள் இருபது பேர் பலியாடுகள் போல் அமர்ந்திருக்க, எங்கள் டிபார்ட்மென்ட் தலைமையாளர் எழுந்து நின்றார். அவர் கையில் கசாப்புக்கு கத்திக்குப் பதிலாக ஒரு ரிமோட். ரிமோட்டை அமுக்கியதும், அவர் பின்னே உள்ள பெரும் திரை உயிர் பெற்று அதில் ஒரு பவர்பாயிண்ட் பிரசண்டேஷன் தோன்றியது.

நான் லாவகமாக தலையைத் திருப்பி என் பக்கத்தில் உட்கார்ந்திருந்த அசோக்கின் காதுகளில் கிசுகிசுத்தேன். “127 பக்கம்டா.” என்னைத் திரும்பி பார்த்த அவன் கண்களில் பேயைப் பார்த்த அதிர்ச்சி.

தலைமையாளர் வேக வேகமாக பவர்பாயிண்ட் பக்கங்களைத் திருப்பி (ரிமோட்டி?) ஒவ்வொரு பக்கத்திலும் ஒரு நிமிடம் பேசி அடுத்த ஒன்றரை மணி நேரத்தில் நூறு பக்கங்களைக் கடந்து விட்டார். வரைபடங்கள், விளக்கப்படங்கள், அட்டவணைகள் மற்றும் புள்ளிவிவரங்களின் ஆக்கிரமிப்பு ஒவ்வொரு பக்கத்திலும். முதல் முப்பது நிமிடம் எப்படியோ கஷ்டப்பட்டு நான் செலுத்திய கவனம் பிறகு குலைய ஆரம்பித்தது. என் கண்கள் சொருக ஆரம்பித்தன. இரண்டு செகண்ட் தூக்கம் பத்து செகண்ட் விழிப்பு என்று மாறி மாறி சைன் வேவ் போல நான் போராடிக் கொண்டிருந்தேன்.

என் அருகில் அமர்ந்திருந்த அசோக்கைப் பார்த்தால் அவன் ஏற்கனவே நன்றாக தூங்கிக் கொண்டிருந்தான். பதற்றமடைந்த நான், அவனை எழுப்பும் பொருட்டு அவன் இடுப்பில் லேசாக இடித்தேன். சுதாரித்துக்கொண்டு எழுந்திரிப்பதற்குப் பதிலாக, டபாலென்று எதிரிலிருந்த மேசையில் அலங்கோலமாக சரிந்தான்.

அவன் இறந்து விட்டிருந்தான்.

அவனுடைய இறப்புக்கான காரணத்தை மருத்துவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. மாரடைப்பு அல்லது ஸ்ட்ரோக் ஏற்பட்டதற்கான எந்த அறிகுறியும் இல்லை. இருபத்தியெட்டு வயதில் முற்றிலும் ஆரோக்கியமாக இருந்த அசோக்கின் திடீர் மரணத்திற்கு யாராலும் சரியாக விளக்கம் கொடுக்க முடியவில்லை.

ஆனால் அவனைக் கொன்றது எதுவென்று எனக்குத் தெரியும்.

மூளையை மழுங்கடித்து சலிப்பின் உச்சத்திற்கு கொண்டு செல்லும் ஒரு பவர்பாயிண்ட் பிரசண்டேஷன் தான் அவனைக் கொன்றது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *