குறிஞ்சி மலர்களும் நெருஞ்சி முட்களும்…!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 2, 2023
பார்வையிட்டோர்: 2,062 
 

(2003 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

காரிலிருந்து இறங்கிய ராஸிக் அந்தக் காட்சியைக் கண்டதும், அப்படியே அதிர்ந்து போய் நின்றான். எது நடக்கக் கூடாது என்று எச்சரிக்கையாக இருப்பானோ, அது மீண்டும் கண் முன்னே அரங்கேறுவதைக் கண்டதும் ஆத்திரத்தை அடக்க முடியவில்லை. அவனது பார்வையில் அமிலத்தின் வீரியம் தெரிந்தது. காரின் கதவை ‘படார்’ என்று அறைந்து சாத்தினான். விசையாய் வீட்டுக்கு ஓடினான்.

“சரீனா… ஏய் சரீனா… எங்க போயிட்டீங்க…? அவசரமா இங்க வாங்க…”

குரலில் கோபம் முகாம் அடித்திருந்தது.

உள்ளே ஏதோ வேலையாக இருந்த சரீனா பதறியடித்துக் கொண்டு ஓடி வந்தாள்.

“என்னங்க…என்னங்க? என்ன விஷயம்… ஏதாச்சும்…?” ஒன்றும் புரியாதவளாக விழித்தாள்.

“அந்தா பாத்தீங்களா… ஒங்கட ஆச மகன் போடுற கூத்த நல்லா பாருங்க… நான் ஒரு நிமிஷம் இந்த வீட்டில இல்லாட்டா போதும்… எல்லாமே நாசம்தான்… பாருங்க…”

கணவன் காட்டிய திசையிலே சரீனா கண்களை ஓட்டினாள். அங்கே ஓரிடத்தில் அவளது பார்வை நிலை குத்தி நின்றது.

மகன் ரமீஸ் கம்பி வேலிக்கு அப்பால் புகுந்து அந்தப் பையன்களுடன் தன்னை மறந்து விளையாடிக் கொண்டிருந்தான்.

“அந்த அசிங்கம் புடிச்ச அகதிப் பொடியன்மாரோட இவன சேர விடாதீங்க என்று எத்தன தடவ சொல்லி இருப்பன்… கவனிக்கிறீங்களா,… எவ்வளவு சொல்லியும்… அடிச்சும்… இவன் கேட்குறானா… இண்டைக்கு இவனச் சும்மா விடப் போறதில்ல… ராஸ்கல்…”

கையிலிருந்த ஒபிஸ் பேக்கை நாற் காலியில் தொப்பெனப் போட்டான். மகன் இருந்த திக்கை நோக்கி விரைந்தான்.

அங்கே ரமீஸ் தனது வயதை யொத்த நண்பர்களுடன் மண்ணில் புரண்டு கொண்டிருந்தான். அவனது முகத்தில் அலாதியானதொரு மலர்ச்சி! புதுச்சட்டையில் புழுதி அப்பிக் கிடந்தது. அதைப் பற்றித் துளியும் சட்டை செய்த தாகவே தெரியவில்லை. கலைந்த பரட்டைத் தலைகளுடன், வியர்வை நிறைந்த முகங்களுடன், பொத்தல் காற் சட்டையுடன், கிழிந்த சாரனுடன் அந்த அகதிச் சிறுவர்கள் அழுக்குத் தீவாய் நின்றார்கள். ரமீஸைச் சுற்றிச் சுற்றி ஓடினார்கள். கைகளைக் கோர்த்து ஆடி னார்கள்; பாடினார்கள்; எங்கும் இரைச் சல்! ஆரவாரம். வெள்ளி நாணயங்களைக் கொட்டி விட்டாற் போல கலகலப்பு.

“டோய்… ரமீஸ்… இங்க வாடா!”

ராஸிக்கின் குரலில் கொள்ளை கொள்ளையாய் கடூரம். பெரும் ஆரவாரம் ஓய்ந்தது போல எங்கும் திடீர் அமைதி.

“இந்த அசிங்கம் புடிச்சவனுகளோட சேராதேன்னு எத்தன தடவ சொல்றது… கேட்டியா?…இங்க வாடா தடிமாடு…”

ரமீஸ் பயத்தால் வெலவெலத்த படியே அருகே வந்தான். அவசரமாய் வியர்த்து, அவஸ்தையுடன் எச்சில் விழுங்கினான்.

“என்னடா…வாயில கொழுப்பா… பேசேண்டா… இந்தப் பஞ்சப் பரதேசிகளோட என்னடா சங்காட்டம்…சொல்லுடா…”

வார்த்தைகள் குத்தலாக வெடித்தன. அவனுடைய ‘ஷேர்ட் கொலரி’ல் தூக்கிப் பிடித்து ஒரு குலுக்குக் குலுக்கினான்.

“வாப்பா… வாப்பா… அடிக்காதீங்க… எனக்கு வீட்டுக்குள்ள தனியா இருக்க சோம்பலா இருக்கு… அதுதான் வந்தன். இனிமே வரமாட்டன்.”

அவனது நாக்கு நொண்டியடித்தது. வார்த்தைகள் தொண்டைக்குள் சிக்கி வெளியே வர மறுத்தன.

“அதுக்காக… இந்த விலாசம் இல்லாதவனுகளோடா விளையாடுறது… எங்கட மானம்… மருவாதி… எல்லாத்தையும் கெடுக்கப் பார்க்கிறியே… வாடா இங்கால…”

மகனைத் தரதரவொன்று இழுத்துக் கொண்டு போனான் ராஸிக்.

ரமீஸின் அகதித் தோழர்களான ஜவாது, அமீன், அமீரலி, நியாஸ், நவாஸ், அந்தக் காட்சியை கம்பி வேலிக்கூடாக கண்கலங்கப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

ரமீஸ் திரும்பித் திரும்பி பார்த்த வண்ணம் சென்று கொண்டிருந்தான். அது அடிக்கடி நடக்கிற நிகழ்ச்சிதான்!

***

ராஸிக் நிறுவனமொன்றின் உயர் அதிகாரி; உயர் பதவி என்று தலையில் சூட்டப்பட்ட கீரிடத்தால் தலை கனத்துப் போனவன்; மீசையின் அடிவாரத்தில் புன்னகையை மறந்த உதடுகள்; எடுத் தெறிந்த பார்வை; உம்மணா முஞ்சி. அவனுக்கேற்ற ஜோடு மனைவி.

அப்பகுதியின் அமைதியான சூழல் அவனை அங்கு குடியேற வைத்தது. சிலு சிலுவொன்ற காற்று; சலசலத்துப் பாயும் நீரோடை; நூற்றுக் கணக்கான குருவிகள் கீச்சுக் கீச்சு தாம்பாளம் பாடும் மரங்கள்; எங்கும் இயற்கையின் செழுமை, வீடுகள் அதிகம் முளைக்காத பகுதி. வெளிநாட்டில் படித்துப் பட்டம் பெற்ற ராஸிக் கட்டுப்பாடுக ளோடு வளர்ந்தவன். தனக்குள் சில வரம்பு முறைகளை போட்டுக் கொண்டவன். தனது மனைவி, ஒரே மகன்; அதே போக்கில் வாழ் வதிலேயே கரிசனை காட்டினான்.

அமைதியாக நகர்ந்து கொண்டிருந்தது அவர்களது வாழ்க்கை.

அன்று ராஸிக் மேல்மாடியில் பத்தி ரிகை வாசித்துக் கொண்டிருந்தான். கீழே வாகனங்கள் நிறுத்தும் சத்தம். இரைச்சல். பேச்சுக் குரல்கள் கேட்டன. அவனது அகல மான கண்களில் அமோக திகில் பயிராகி இருந்தது. அவசரமாக எட்டிப் பார்த்தான். கைகளில் ‘பைல்’களுடன் சிலர் மும்முரமாக வேலை. அப்பகுதியின் கிராம சேவகர் எதையோ சுட்டிக் காட்டிப் பேச, வந்தவர்கள் குறித்துக் கொண்டிருந்தார்கள். என்னவாயிருக்கும்? எண்ணம் மேளம் வாசித்தது. இதயப் பிரதேசத்தில் ஒரு போர்க்களப் பதட்டம் பரவ கீழே தாவி னான். அதிகாரிகள் போன்று தோற்ற மளித்தவர்களிடம் தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டான். காரணத்தை வினவினான்.

“மிஸ்டர் ராஸிக்… இந்த இடத்தில ஒரு அகதி முகாம் அமைக்கும் படி மேலிடத்து உத்தரவு… முகாம்களில் இருக்கிற நெருக்கடியைத் தீர்க்க எடுத்த முடிவு… இடம் பொருத்தமானதா என்று பார்க்க வந்தம்… வேறொன்றுமில்ல..”

உச்சந்தலையில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியது போல ராஸிக் துடித்துப் போனான். அமைதியான சூழல்; ஒதுங்கி வாழும் வாழ்க்கை; எல்லாம் காற்றில் பறப்பது போன்ற உணர்வு.

“இந்தப் பக்கத்தில் நாங்க ஏழெட்டுக் குடும்பங்கள் ரொம்ப கௌரவமா வாழுறம்… இந்த அகதிகளக் கொண்டு வந்து போட்டு சூழல அசுத்தப்படுத்தாதீங்க… ‘மெனர்ஸ்’ என்றால் என்னென்றே தெரியாத அந்தக் கும்பல இங்கே வரவழைச்சி எங்கட நிம்மதியை குலைக்காதீங்க… நாம கோபுரங்கள்… இந்தக் கோபுரங்களிட நிழல்ல கூட குடிசை கட்ட நாம அனுமதிக்க மாட்டோம்.”

ராஸிக் சூடு பறக்கப் பேசினான். தமது கடமையை முடித்த அதிகாரிகள் ஜீப்பில் ஏறினார்கள். புழுதியைக் கிளப்பிக் கொண்டு அது பறந்தது.

ராஸிக் சோர்ந்து போகவில்லை. இதற்கு சந்து பொந்துகள் இல்லாமலா இருக்கும்? எடுக்க வேண்டிய அனைத்து முயற்சிகளையும் எடுத்தான். தேவையான ஊசிகளை அந்தந்த இடத்தில் ஏற்றினான்.

பத்து நாட்கள் பறந்து போயின.

பிற்பகல் வேளை. இருபது முப்பது லொறிகள் ராஸிக்கின் வீட்டு முன்னால் இருந்த மைதானத்தில் கிறீச்சிட்டு நின்றன. தொப்… தொப்…என்று அவற்றிலிருந்து குதித்த அகதிகளைக் கண்டதும் ராஸிக் ஆடிப்போய் விட்டான். அனைத்து முயற்சிகளும் விழலுக்கு இறைத்த நீராகி விட்டனவே என்று குமுறினான்.

நாலைந்து நாட்களுக்குள் அந்த மைதானத்தில் நூற்றுக் கணக்கான கொட்டில்கள் முளைத்து விட்டன. அவர்களுக்கான நிவாரணப் பொருட்கள், மற்றும் உதவிப் பொருட்களை வழங்க அடிக்கடி வாகனங்கள் வருவதும் போவதுமாக இருந்தன. அவர்களின் கசமுசா என்ற உரத்த குரல்கள், பாலுக்காக ஏங்கும் குழந்தைகளின் ஓலம், சின்னஞ் சிறுசுகளின் வெடிச் சிரிப்பு. மொத்தத்தில் அந்தப் பகுதியின் அமைதியே குலைந்து விட்டது. ராஸிக் காதைப் பொத்திக் கொள்வான்.

“ச்சே… மனுசங்களா… அமைதியைக் கெடுக்க வந்த கோட்டான்கள்” பற்களை நறநறவென்று கடிப்பான். அவர்களைப் பற்றி நினைத்தாலேயே மனம் உஷ்ணமாய் தகிக்கும். அவர்கள் மீது வெறுப்பை கொப்பும் கிளையுமாக, வேரும் விழுதுமாக பெரும் ஆலமரமாகவே வளர்த்துக் கொண்டான்.

தான் வெறுக்கும் அகதிக் கும்பலு டன் மகன் நெருங்கிப் பழகுவது நெருப்பாய் எரித்தது. ஆயிரம் கட்டுப்பாட்டினைப் போட்டான். அந்தப் பூட்டை அடிக்கடி உடைக்கும் மகனைப் போட்டு செம்மையாய் விளாசினான். என்றாலும் அந்தப் பிணைப்பை இலேசில் துண்டிக்க முடியாமல் தவித்தான்.

அவனது மனதில் சிந்தனை ஓட்டம் விலாங்கு மீன் மாதிரி வழுக்கியும், வளைந்தும், நெளிந்தும் ஓடிக் கொண்டிருந்தது.

***

அன்று ராஸிக்கின் வீடு கலகல கப்பில் மிதந்தது. எங்கும் பிரமாதமான அலங்காரம். தோட்டத்து மலர்களும், வீட்டின் முகப்பும் நகைகள் அணிந்த மாதிரி கலர் கலர் ‘பல்பு’க்களில் மின்னின. வீட்டின் தரை கண்ணாடி போல் பளபளத்தது.

ரமீஸ் ‘டிப்டொப்’பாக உடுத்து இங்கு மங்குமாக வளைய வந்து கொண்டிருந்தான். அன்று அவனது பிறந்தநாள். என்றாலும் அவனது கண்களின் ஒளிப் புள்ளியில் சந்தோஷமே இல்லை.

பிரமுகர்கள், முதலாளிமார், உயர் அதிகாரிகள், ஆடம்பர வாகனங்களில் வந்து அட்டகாசமாய் இறங்கினர். ஒவ்வொருவர் கையிலும் பெரிய பரிசுப் பொதிகள்!

ராஸிக்கும், மனைவியும் வாய் நிறையச் சிரிப்புடன் அவர்களை வரவேற்றுக் கொண்டி ருந்தனர். அங்கே அமர்ந்திருந்த பெண்கள் ஆங்கிலத்தைக் கடித்துத் துப்பிக் கொண்டிருந்தனர்.

“ராஸிக்… ‘டைம்’ ஆயிடுச்சி… அப்போ கேக்க வெட்டி பார்ட்டிய தொடங்குவம்… மகன் ரமீஸக் கூப்பிடுங்க…”

நெருங்கிய உறவினர் ஒருவரின் வேண்டுகோளை அமுலாக்கப் பெற்றோர் தயாராகினர்.

பிறந்தநாள் ‘கேக்’ அலங்காரமாய் செய்யப்பட்டு அட்டகாசமாய் மேசையில் அமர்ந்திருந்தது. எட்டு மெழுகுவர்த்திகளும் எப்போது தலையைக் கொளுத்துவார்களோ என்பது போல் காத்திருந்தன. ரமீஸின் வயதை ஒத்த மொழு மொழுவென்ற பணக்காரச் சிறுவர்கள் ‘ஹெப்பி பேர்த்டே டூயூ’ பாடக் காத்திருந்தனர்.

“பையனைக் காணோம்… இவ்வளவு நேரமும் இங்கதான் இருந்தான்… எங்க போனானோ தெரியல்ல…”

ராஸிக்கும், சரீனாவும் பதறிக் கொண்டே சொன்னார்கள். அவர்களின் முகத்தில் ஏகப்பட்டக் கலவரம்.

செய்தி எங்கும் பரவ ஆளுக்காள் ரமீஸைத் தேடத் தொடங்கினார்கள்.

‘டோர்ச் லைட்’டை எடுத்துக் கொண்டு அகதி முகாம் பக்கமாக விரைந்தான் ராஸிக். முகாமுக்குள் சிம்னி விளக்குகள் சில ‘முணுக் முணுக்’ என சிலம்பாடிக் கொண்டிருந்தன.

குழந்தைகள் வீரிட்டு அலறும் குரல்கள். அதைத் தவிர எங்கும் அமைதி. எங்கும் இருட்டு, போர்வையாய்ப் போர்த்தியிருந்தது. சாக்கடையில் வரி செலுத்தாமல் வீடு கட்டிக் குடியிருக்கும் நுளம்புகள் ‘நொய்ய்ங்…’ என்று பறந்தன.

எங்கும் பார்வையைப் பாய்ச்சினான் ராஸிக்.

திடீரென்று கேட்ட பேச்சுக் குரல் அவனை ‘பிறேக்’ போட்டாற் போல் நிற்க வைத்தது.

“அமீன்… ஜவாது… பயப்படாம எடுங்க… இண்டைக்கு என்ட பேர்த்டே… இந்த டொபி, சொக்கலேட் எல்லாம் ஒங்களுக்குத்தான்…பிடியுங்க…”

ரமீஸின் குரல்தான்!

“ஐயோ… வேண்டாம் ரமீஸ். ஒங்கட வாப்பாவப் பத்தித் தெரியும் தானே… அகதிங்க என்றாலேயே அவருக்கு இளக்காரம்… புழுவப் பார்க்கிற மாதிரி ஒதுக்குறாரு… நீங்க எங்களோட சேருவதே அவருக்குப் பிடிக்கல்ல… இதையெல்லாம் கொண்டு வந்து தந்தத அறிஞ்சாரெண்டா நொறுக்கிடுவாரு… வேண்டாம். எடுத்திட்டுப் போங்க…”

அந்தப் பையன் தளதளத்த குரலில் சொன்னான். நெஞ்சிலே நெருப்பைக் கொட்டியது போன்ற வார்த்தைகள்.

“ஆமாம் ரமீஸ்… நீங்க ஒவ்வொரு தடவையும் எங்களுக்காக அடிபடுவீங்க… அப்போ எங்கட மனசு என்னமாய் வலிக்கும் தெரியுமா… நாங்களும் முந்தி ஒங்களப் போல வசதியாய் வாழ்ந்தவங்கதான்… படிச்சவங்கதான்… திடீர்னு இப்பிடி நடக்கும் என்று எதிர் பார்த்தோமா… எல்லாம் இழந்து வந்த எங்கள ஏன் இப்பிடி நடத்துறாங்க… நாங்க என்ன குத்தம் செஞ்சம்… வித்தியாசம் பார்க்காமல் பழகுற ஓங்களக் கூட பிரிக்கப் பார்க்கிறாங்களே…”

மற்றுமொரு அகதிப் பையன் சொல்லிக் கொண்டே போனான். அவனின் கண்கள் ஈரத்தோடு மினுமினுத்தன. அதைக் கேட்டதும் ரமீஸின் மனம் தரையில் விழுந்த மீனாகத் துடித்தது.

“இந்தாங்க… யார் எது சொன்னாலும்… என்னை அடிச்சி நொறுக்கினாலும்.. நான் ஒங்கட பக்கம்தான்… எங்கள யாராலும் பிரிக்க முடியாது… அகதிகள், அநாதைகள் சமமா நடத்த வேணும் என்று சொல்றாங்க… ஆனா…ஆனா… இங்க மட்டும் ஏன் இந்த வேறு பாடு… எங்களை எல்லாம் ஏன் ஒதுக்குறாங்க…. விளையாட விடாமல் ஏன் தடுக்குறாங்க…”

மகனின் கம்மிய குரலில் ராஸிக்கின் இதயத்துள் தைப்பது போல வலித்தது. நெஞ்சுக்கு மேலே யாரோ ஏறிக் குதித்து துவம்சம் பண்ணுவதுபோல வேதனை. தான் இதுவரை உணராத ஏதோ ஒன்று நீருக்கு மேலே தலையைத் தூக்கும் மீனாய் எட்டிப் பார்த்தது. குற்றமுள் நெருடியது.

“அப்போ…எல்லோரும் என்னைத் தேடிக்கிட்டு இருப்பாங்க… இதப் பிடியுங்க… இல்லாட்டா நான் இங்கேயே இருந்திடுவன்…”

ரமீஸ் இனிப்புப் பண்டங்களை அவர்களின் கைகளுக்குள் திணித்துக் கொண்டிருந்தான்.

“ரமீஸ்” ராஸிக்கின் குரல் இருளைக் கிழித்துக் கொண்டு பாய்ந்தது.

ரமீஸ் உடம்பில் நெருப்புப் பட்ட மாதிரி வியர்த்துப் போனான். ஏற்கனவே படபடத்த நெஞ்சுக்குள் பந்தயக் குதிரையை ஓட வைத்தான் ராஸிக்.

மனசுக்குள் பயம் தலைதூக்க அகதிப் பையன்கள் மெதுவாக நழுவப் பார்த்தார்கள்.

“எல்லோரும் நில்லுங்க. ஒருத்தரும் போகாதீங்க. இண்டைக்கு ரமீஸ்ட பிறந்த நாள். நீங்கள் எல்லோரும் கட்டாயம் வரணும். வாங்க போகலாம். ஹும்… பயப்படாம வாங்க.”

அவர்களின் முதுகைத் தடவிக் கொண்டே அழைப்பு விடுத்தான் ராஸிக்.

ரமீஸின் உள்ளத்தில் ஒரு சந்தோஷக் குறுகுறுப்பு ஊர்வது போன்ற உணர்வு. முகத்தில் நன்றி நிறைய, வியப்புடன் வாப்பாவையே பார்த்துக் கொண்டிருந்தான் ரமீஸ்.

– மல்லிகை, அக்டோபர் 2003

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *