கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: February 12, 2013
பார்வையிட்டோர்: 16,578 
 

அவன்… அஸ்வின். ஆணவத்தின், அகம்பாவத்தின் மொத்த உரு. நான் என்ற குட்டையில் மூழ்கி, ஜலக்கிரீடை செய்து கொண்டே இருப்பவன். அவ்வப்போது தன் அதீத மேதாவிலாசத்தை அபிலாஷாவிடம் வெளிச்சம் போட்டுக் காட்டுவான். அந்த தடாலடி, “சைக்கோ’ தனத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல், அவள் சிறகொடிந்த சிட்டுக் குருவியாய் சுருண்டு விழுவதைப் பார்த்து, குரூர திருப்தியுடன் மகிழ்ந்து போவான்.
அவள்… அபிலாஷா. இந்த சைக்கோவின் மனைவி. பூஜை அறையில் தஞ்சம் அடைவாள். அங்கே மேடையில் சுடர்விட்டு எரியும் வெள்ளி விளக்கின் முன் உட்கார்ந்து, தன்னுள் சீழ்பிடித்துப் போன ரணங்களை ஆற்றிக் கொள்ளும் முயற்சியில், மனதை கடந்த காலத்து சிந்தனை ஆற்றின் முகத்துவாரத்திற்கு இழுத்துச் சென்று, ஆறுதலடைய முயற்சிப்பாள்.
அபிலாஷாஇதைத் தவிர பாவம் அவளுக்கு வேறு வழியே இல்லை. கடந்த காலத்து சிந்தனையின் உல்லாச ஊஞ்சலாட்டத்திற்கு பின், நிஜங்களுக்கு திரும்பி, கண்களை திறந்தால், அங்கே, அந்த வெள்ளி விளக்கு சிவப்பாக மாறியிருக்கும். ஐயோ… இதென்ன விபரீதம் என்று அலறுவாள்.
“பெண்ணே… ஏன் வீணாக அலறுகிறாய்? உன் மன ஓட்டத்தில் கலப்படம்… ரத்த களறியாய் கலப்படம்… அதன் பிரதிபலிப்புத்தான் இந்த சுடரின் சிவப்பு நிறம். புரிகிறதா?’ என்று அவளுள் சின்னதாய் ஒரு இடி முழங்கும். தன் இயலாமையின் அவலத்தை எண்ணி, மனம் குமுறுவாள்.
அஸ்வினுக்கு பார்ட்டி, டின்னர் என்றால் அவளை அழைத்து போக வேண்டிய நிலை. ஆபிசில் நம்பர் ஒன் அதிகாரியாயிற்றே. மனைவி இல்லாமல் போனால் எப்படி? அவள் எத்தனை கவனமாக டிரஸ் செய்து கொண்டாலும், அதைப் பற்றி ஆயிரம், “கமென்ட்’ அடிப்பான்; படு மூர்க்கமாக லட்சார்ச்சனை செய்வான்.
“லுக் ஹியர் அபிலாஷ்! உனக்கு துளியும், “டிரஸ் சென்சே’ இல்லை. ஒரு சோஷியல் கேதரிங்கில் என்ன பேசணும், எப்படி பேசணும் என்பதெல்லாம் உனக்கு புரியாத புதிர். உன் ஆங்கில புலமை இருக்கே, அதை கேட்க இரண்டு காதுகள் போதாது. ஹூம்… ஒருவரின் லாபம், மற்றவரின் நஷ்டம் என்பது என் விஷயத்தில் எத்தனை உண்மை பார்த்தியா? அதல பாதாளத்தில் இருக்கும் உனக்கு, வான் உச்சியில் இருக்கும் நான் ஜோடி. உன் அப்பன் எந்த பாங்க்கை கொள்ளை அடிச்சானோ… எங்கே கள்ள நோட்டு அடிச்சானோ… அதெல்லாம் எனக்குத் தெரியாது.
“என் அசட்டு அப்பா, அம்மாவிற்கு பணத்தாசை காட்டி, என்னை வளைத்து விட்டான் அந்த படுபாவி. விளைவு… இப்போ நான் அதல பாதாளத்தில்; நீ ஆகாசத்தின் கூரையில். நினைக்க நினைக்க வயிறு எரிகிறது. என்னையும் விட படிப்பில், அந்தஸ்தில் எல்லாம் கீழ்படியில் உள்ளவர்களுக்கெல்லாம் எப்பேர்ப்பட்ட மனைவிகள்?
“என் அசிஸ்டென்ட் ஷங்கரின் மனைவி, உலக அழகிப் போட்டியில் கலந்து கொண்டால், மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை அனாயசமாக தட்டிக் கொண்டு வருவாள். என் அக்கவுன்டன்ட் வினோத்தின் மனைவி, உலக அரங்கில் பேச்சுப் போட்டியில் கலந்து கொண்டால், கென்னடியும், ஏன், அந்த வின்சன்ட் சர்ச்சிலுமே கூட அசந்து போகும் அளவு அத்தனை அழகான, நயமான சலங்கை ஒலியான ஆங்கில புலமை. எங்கிருந்து வருகிறது இந்த வீணையின் ராகம்… குயில் எப்படி இங்கே வந்து கூவுகிறது என்று, அரங்கத்தையே அசர அடித்துவிடும் குரல் வளம்.
“என் டைப்பிஸ்ட் ஷில்பா குல்கர்னிக்கு… மை காட்! இவன்களெல்லாம் எங்கிருந்து இப்படி, “கோஹினூர்’களை தட்டிப் பறித்து வந்தனரோ தெரியவில்லை. பூஜ்யத்தை மணக்க, நான் மட்டும் என்ன பாவம் செய்தேன்!’
– இப்படித்தான் பார்ட்டி, டின்னர்களுக்கு போகும் வழியிலெல்லாம் அவன் பேச்சில் நாக சர்ப்பங்கள் படமெடுத்து ஆடும்.
உண்மையை சொல்ல வேண்டுமானால், அபிலாஷா எம்.ஏ., லிட்டரேச்சர் கோல்ட் மெடலிஸ்டும் கூட. இன்கம்டாக்ஸ் அசெஸ்சியும் கூடத்தான். இவள் அப்பா, டாக்டர் கோபியின் சிபாரிசில் வேலை வாங்கிக் கொண்டான் அஸ்வின். அவர் உதவியால் ஒரேயடியாக உத்தியோக மேல் படிப்பில் ஏறி உட்கார்ந்து கொண்டு, அவரின் கஜானாவை ஒட்டுமொத்தமாக காலி பண்ணி, தன் கணக்கில் சேர்த்துக் கொண்டு, இப்ப என்ன ஒரு தடாலடி பேச்சு… தன்னை தட்டிக்கேட்க டாக்டர் கோபி உயிரோடு இல்லை என்ற தைரியம். அவன் பக்கமும் பெற்றோர் இல்லை; இருந்தால் மட்டும், தங்கள் பிள்ளைக்கு எதிராக கூடாரம் போட்டு விடுவரா என்ன?
வெளியில் மட்டுமல்ல… வீட்டிலும் அவளுக்கு எதிராக ஒரு, “யுனைட்டட்’ அமைத்துக் கொண்டான். அபிலாஷா பத்து மாதம் சுமந்து பெற்ற அவளின் பதினெட்டு வயது பெண்ணும் சரி… பதினாறு வயது பையனும் சரி, இருவரும் அப்பாவின் கட்சி. அவர்கள் எதிரிலேயே இவளை மட்டப்படுத்தி பேசிப் பேசியே, அவர்களை முழுவதுமாக, “பிரெயின் வாஷ்’ செய்து, தன் பக்கம் இழுத்து விட்ட பெருமை இவனின் மற்றுமொரு, “அச்சீவ்மென்ட்!’
“ஹேய் டார்லிங்! வாட் டஸ் யுவர் மம்மீ நோ… ஷி நோஸ் நத்திங்…’ என்பான்.
உடனே, “யா டேட்…’ என்று ஜெமினி இரட்டையராய் ஸ்ருதி சுத்தமாக குழல் ஊதும். ஹூம்… இந்த சிறுமையை எந்த தாயால்தான் பொறுத்துக் கொள்ள முடியும்?
அவள் மனம் நொந்து, தொய்ந்து போகும் நேரங்களில், அவளுள் ஒரு சிறு நட்சத்திரம் தோன்றி மறையும்.
“என் இனியவனே… உனக்கு நான் செய்து விட்ட துரோகத்தின் விளைவுதான், இப்படி என் வாழ்க்கை சீரழிந்து கிடக்கிறது. இந்த நரகத்திலிருந்து நான் எப்படி மீள்வேன்…’ என்று கதறிக் துடிப்பாள்.
இருபது வருடங்களுக்கு முன் ஒரு நாள், கண்களில் ஏகமாக பாசத்தையும், ஏக்கத்தையும் தேக்கிக் கொண்டு,”ஏண்டா அபிலாஷ்… நீயும் உன் அப்பா கட்சியா? என்னை உதறிவிட முடிவு பண்ணிட்டாயா? குறுக்கே நிற்க மாட்டேன்; நான் கண்ணியமாக ஒதுங்கிடறேன். ஆனா, ஒண்ணு மட்டும் சத்தியம். உன்னை இத்தனை வருஷமாக ஏத்தி வெச்சு ஆராதித்த என் நெஞ்சிலே இனி யாருக்குமே இடமில்லை. என் கடைசி மூச்சு அ… பி… லா… ஷ்… என்று இழுத்து விட்டுத்தான் நிற்கும்!’ தொண்டை கமற சொல்லிவிட்டு நகர முயன்றான் ஜிஷ்ணு.
“ஜிஷ்ணு… நாம் இரண்டு பேரும் இணையனும்ன்னா அதற்கு ஒரே வழி, ஓசைப்படாமல் நாம் ஓடிப் போவது தான்!’ என்றாள்; பதறினான் அந்த நேர்மையின் சின்னம். “என்னடா அபிலாஷ்… நீ இப்படியெல்லாம் பேசலாமா? விதிதான் உன் அப்பாவின் மனசாட்சியை நொண்டி ஆக்கி விட்டதென்றால், உன்னையும் கூடவா அந்த விதி சீண்டுகிறது? கனவில் கூட உன் பெற்றோருக்கு தலைகுனிவை ஏற்படுத்தி விடாதே… மனசை தேத்திக் கோடா… ஆல் தி பெஸ்ட்!’ அவன் சென்று விட்டான்.
இத்தனை வருடங்களாக, “ஜிஷ்ணுதான் என் மாப்பிள்ளை…’ என்று கொட்டி முழக்கிக் கொண்டிருந்த அவள் அப்பா டாக்டர் கோபி, தன், “டிராக்’கை மாற்றிக் கொண்டார். ஏன்?
ஜிஷ்ணுவின் அப்பாவும், அபிலாஷாவின் அப்பாவும் பால்ய நண்பர்கள். ஜிஷ்ணுவின் அப்பாவிற்கு தன் மகனை, லாயர் ஆக்க வேண்டும் என்ற ஆசை. ஆனால், டாக்டர் கோபி, “என்னடா ரங்கா இது? என் நர்சிங்ஹோமை யார் பார்த்துக் கொள்வதாம். என் மாப்பிள்ளை டாக்டருக்குத் தான் படிக்கணும்…’ என்று அடித்துச் சொல்லி, ஜிஷ்ணுவை மெடிக்கல் காலேஜில் சேர்த்து விட்டார். ஜிஷ்ணு மெடிக்கல் காலேஜில் சேர்ந்து மூன்று வருடங்கள் ஓடிவிட்டன.
“கோபி… உன் இஷ்டப்படி ஜிஷ்ணுவை மெடிக்கல்லே சேர்த்துட்டே. இன்னும் எதுக்கடா இவர்கள் கல்யாணத்தை ஒத்திப் போடணும். இந்த வருஷமே கல்யாணத்தை முடிச்சுடலாம்டா!’ என்றார்.
“படிப்பு முடிச்சதுக்கு அப்புறம் தான் கல்யாணம். அப்புறம் மேல் படிப்பிற்கு லண்டனுக்கு அனுப்பப் போறேன். இதிலே எந்தவித மாற்றமும் இல்லை!’ அடித்துப் பேசினார் டாக்டர் கோபி; ரங்கா மவுனியானார்.
ரங்காவிற்கு உள் மனதில் ஏதோவொரு தேவ ஒலி கேட்டிருக்க வேண்டும். இல்லையெனில், அடுத்து வந்த இரண்டு நாட்களில் மறுபடியும், “கோபி… எனக்கு என்னன்னே தெரியலேடா. என்னுள்ளே ஒரே குழப்பம். திடீர் திடீரென்று என்னுள்ளே ஒரே வக்கிர ஓட்டங்கள். என் பிள்ளையின் கல்யாணத்தை முடிச்சுட்டேன்னா என் கடமையை முடிச்சுட்ட திருப்தியிருக்கும்டா…’ இடை வெட்டினார் கோபி. “உன் பல்லவியை ஆரம்பிச்சுட்டாயா? நான் சொன்னா சொன்னது தான். பெண், பிள்ளை இருவருமே, அவரவர்கள் படிப்பு முடிந்ததும் தான் கல்யாணம். நோ மோர் ஆர்கியூமென்ட்ஸ்!’
“கோபி… நா சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதே… எதிர்காலத்திலே நீ வார்த்தை மாறிட மாட்டாயே?’ பாம்பாய் சீறினார் ரங்கா.
“ஏண்டா! உன்னுள் முளைத்த அந்த வக்கிர ஓட்டம் இதுதானா? யாரை பார்த்து என்ன வார்த்தை கேக்கறே நீ…’ கோபியின் உஷ்ணத்தைக் கண்டு ஜகா வாங்கிவிட்டார் ரங்கா.
அடுத்த வாரம் திடீரென ரங்கா இறந்துவிட, அவருடைய நய வஞ்சக கூட்டாளிகள், அவரின் அளப்பற்ற சொத்துக்களை தங்களுக்குள் பங்கு போட்டுக் கொண்டு, தங்கள் கடன்களையும் சேர்த்து, இவர் கணக்கில் எழுதிவிட்டனர்.
டாக்டர் கோபி மட்டும் இவர்களுக்கு சளைத்தவரா என்ன?
“இனி இந்த ஜிஷ்ணுப் பயல் ஒரு அன்னக்காவடி. இவனை நம்பி நான் எப்படி என் பொண்ணைக் கொடுப்பது? இவன் கடன் அத்தனையும் அடைத்து, இவன் படிப்பு செலவுகள் முழுவதையும் ஏற்று, இதெல்லாம் சுத்த அனாவசிய வேலை. நைசாக இந்தப் பயலையும், இவன் அம்மாவையும், “கட்’ பண்ணிவிட்டு, வேறு ஒரு நல்ல மாப்பிள்ளைத் தேடவேண்டியது தான்!’ என்று, ஒரு மெகா திட்டத்தை மனதினுள் தீட்டிக் கொண்டார்.
ஆனால், டாக்டரின் மனைவிக்கு இதில் சிறிதும் உடன்பாடில்லை.
“என்ன அக்கிரமம் இது? ஜிஷ்ணுவிற்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து, ஏன் அபிலாஷா பிறந்த நாளிலிருந்து, “நீ தாண்டா என் மாப்ளே…’ என்று சொல்லிச் சொல்லியே அவனை வளர்த்துவிட்டு, இப்போ அந்த குழந்தை அநியாயமாக வஞ்சிக்கப்பட்டு நிர்க்கதியாக நிற்கும் போது, இப்படி உதறலாமா? அவனை மேற்கொண்டு படிக்க வையுங்கள்… படிப்பு முடிந்ததும் அபிலாஷாவை அவனுக்கு மணம் முடித்து வைக்கலாம்…’ என்று எத்தனையோ முறை மன்றாடியும், அவர் மசியவில்லை.
ஆனால், பாவம் ஜிஷ்ணுவிற்கும், அவன் அம்மாவிற்கும், அவரிடம் அபார நம்பிக்கை.
“டாக்டர்… முகூர்த்தம் எப்போ வெச்சுக்கலாம்?’ என்று அவன் அம்மா கேட்டபோது, டக்கென்று, “மீனா… அவன் ஜாதகத்தை அனுப்பி வை…’ என்று சொல்லி, ஜாதகம் வந்ததும், “ஐய்யய்யோ… ஜாதகம் கொஞ்சம் கூட பொருந்தவே இல்லையே…’ என்று அடித்து சொல்லி, அம்மாவையும், பிள்ளையும், “அண்ட்டார்டிக்கா ஐஸ்பெர்கில்’ புதைத்து விட்டார் டாக்டர் கோபி என்ற குள்ள நரி.
உடனே, இந்த அஸ்வின் என்ற மிருகத்தைத் தேடிபிடித்து வந்து, அதற்கு தன் பெண்ணை பலிக்கடாவாக்கி விட்டார்.
அபிலாஷாவின் மனதுள், அவ்வப்போது சின்ன சின்னதாக அலைகள் எழும்பும்.
“எப்படியாவது ஜிஷ்ணுவை, “மீட்’ பண்ணணும். நானும், என் அப்பாவும் உங்களுக்கு இழைத்துவிட்ட அநீதிக்கு தெய்வம் நிறையவே கூலி கொடுத்து விட்டது…’ என்று மனம் விட்டு, அவர் காலடியில் விழுந்து கதறணும். ஆனால், அவரை எங்கே என்று தேடுவது?
“ஜிஷ்ணு… என் இனியவனே… உன்னோடு உன் மனைவியாக வாழாமல், இந்த அசுரனுடன் என்னை ஏன் விதி இணைத்தது? உன்னை மணந்திருந்தால், உன்னைப் போன்ற உத்தமமான இரண்டு பொற்சிலைகளுக்கு அம்மாவாகி இருப்பேன். நீங்கள் மூவருமாக சேர்ந்து உங்களது அன்பு மழையில் என்னை குளிப்பாட்டி, தாலாட்டி மகிழ்வித்து இருப்பீர்கள்!’
பாவம் இப்படித்தான் மிக இனிமையான கற்பனைகளில் உறைந்து போய், தன்னை முழுமையாக தொலைத்துக் கொள்வாள்.
ஆனாலும், சில சமயங்களில், “ஹோய் அபிலாஷ்… உனக்கு என்ன ஆயிற்று? இருபது வருஷமா ஒருத்தனுடன் வாழ்ந்து கொண்டு, மனசாலே மற்றொருவனுடன் சோரம் போகலாமா? அப்படி செய்தால் இதுவும் கூட ஒரு வகையில் சிவப்பு விளக்கு பத்தினித்தனம் தான்…’ என்று, மிக மெல்லிசாய் ஒரு கோபக் குரல் அவளுள் எழும்பும்.
அன்று அவள் முற்றிலும் எதிர்பாராத சந்தர்ப்பத்தில், இடத்தில், அதோ அவளின் ஜிஷ்ணு அந்த பழைய அழகும், கம்பீரமும் துளியும் மாறவில்லை. ஆனாலும், அந்தப் பெரிய அருள் பொழியும் கண்களில், இப்போது முற்றிலுமாய் சோக ரேகைகள்…
ஜிஷ்ணுவும் இவளை இனம் கண்டு விட்டான்.
“”ஏய்! ஏய்! நீ அபிலாஷா தானே? இந்த நேரத்தில் பீச்சில். தனியாக உட்கார்ந்து என்னம்மா செய்யறே? உன்னவர், உன் குழந்தைகள் எங்கேம்மா?” ஆர்வமும், அன்பும் வழிந்தோட, கேள்வி மேல் கேள்விகள்…
தான் தபசிருந்தவனை சந்தித்துவிட்ட அதிர்ச்சியிலிருந்து மீண்டு, படபடப்பை அடக்கி, பதில் சொல்ல அவளுக்கு சில நிமிடங்கள் தேவைப்பட்டன.
“”ஏன் ஜிஷ்ணு… நீங்கள் கேட்கும் அதே கேள்விகளை நானும் உங்களிடம் கேட்கலாமா? உங்களவள் எங்கே? உங்கள் குழந்தைகள் எ<ங்கே?'' ""சொல்லட்டுமா? ஒரே வார்த்தையில் சொல்லி விடவா? உன்னைத் தவிர, வேறு எந்தப் பெண்ணையும் ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்று உன்னிடம் சத்தியம் செய்தேன். அப்புறம் என் அம்மாவிற்காக, அவளின் வற்புறுத்தலுக்காக, ஒருத்தியை மணந்து கொண்டேன். அந்த ஒருத்தி, என் குழந்தைகள் இரண்டையும், தன் கட்சியில் சேர்த்துக் கொண்டு, என்னை ரணமாக்கி வருகிறாள். "நான் தப்பு கணக்குப் போட்டு, இவளை உன் தலையில் கட்டிட்டேன். என்னை மன்னிச்சுக்கோடா...' என்று சொல்லிக் கொண்டே அம்மா கண்ணை மூடிட்டாள். ""உண்மையை சொல்லணும்ன்னா என் இதயத்தில் ஒரு சின்ன பசுமையாக நீ தான் இருக்கிறாய்... அன்று தைரியமாக, ஒரு ஆண்மகனாக, உன் அப்பாவுடன் சண்டை போட்டு, உன்னை என்னவளாக்கிக் கொள்ள தவறியதன் விளைவு. நேசமானவளுக்கு செய்து கொடுத்த சத்தியத்தை மீறியதன் விளைவு... இதோ ஒரு நடைப் பிணமாய் உலவி வருகிறேன். ""எப்படியாவது உன்னை ஒரு நாள் சந்திக்கணும் என்ற ஆவல், என்னுள் மின்மினித்துக் கொண்டே இருந்தது. இப்போ அது நிறைவேறிடுச்சு. உன்னை பார்த்த பின், என் மனசு எத்தனை லேசாக, எத்தனை பரவசமாக இருக்குத் தெரியுமா? ப்ளீஸ்... என்னிடம் மறைக்காமல் உண்மையை சொல்லும்மா... இத்தனை வருஷங்களில் நீ எப்போதாவது என்னைப் பற்றி கொஞ்சமேனும் நினைத்ததுண்டா... ப்ளீஸ் டெல் மீ தி ட்ரூத்.'' "நினைப்பதா? உன் நினைவில் தானே வாழ்ந்துக் கொண்டிருக்கிறேன்!' நெஞ்சுக்குழியோடு நின்று விட்டன வார்த்தைகள்... வெகு நேரத்திற்குப் பின், ஜிஷ்ணு விடை பெற்றான். இப்போது அவள் மனம் தெளிவடைந்து விட்டது. கனத்த இதயத்துடன்... காட்டு மிருகங்களுடன் ஒரு போலியான வாழ்வு வாழ்வதை விட, நிறைந்த மனதுடன், ஒரு நேர்மையானவனுடன் ஒரு நிஜ வாழ்வைத் தொடர வேண்டும் என்று தீர்மானித்து விட்டாள். இப்போதெல்லாம் அவள் கண்மூடி தியானிக்கும் போது, அவளுள் அந்த சிவப்பு விளக்கு தோன்றுவதில்லை. ஏனெனில்... இப்போதெல்லாம் பூஜை அறையில் மிக நிஜமான உரிமையுடன், அவள் பக்கத்தில் அமர்ந்து அவளுடன் தியானத்தில் மூழ்கி இருப்பவர் அவளின் ஜிஷ்ணு! - செப்டம்பர் 2010

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *