இங்லீஷ் பரீட்சை இன்றைக்குப் பார்த்து மெயின் ஹால் சூப்பர்வைசிங்செய்து கொண்டிருந்த சந்திரா பாய் டீச்சருக்கும் ரேணுகா டீச்சருக்கும்பரீட்சை ஆரம்பித்து முக்கால் மணி நேரத்திற்குள் பெருத்த சந்தேகம் ஒன்றுவந்து யார் சொல்வது மெத்தச் சரி என்பதில் பெரிய போட்டியாகப் போய் விட்டது. மெயின் ஹால் பள்ளியின் இந்தக் கோடிக்கும் அந்தக் கோடிக்குமாய்விரிந்து கிடக்கிறது. மொத்தம் இருபத்தி ஐந்து வரிசைகளாக பெஞ்சுகளும்டெஸ்க்க்குகளும் அதில் உட்கார்ந்து எழுதும் பிள்ளைகளுமாய் நீளக்கிடந்தது .
அதனால் தான் இந்த ஹாலுக்கு மட்டும் சூப்பர்வைசிங் செய்யஎப்போதும் .இரண்டு டீச்சர்களைப் போடுவார்கள் . பிள்ளைகள் அதன் பாட்டில் எழுதிக் கொண்டிருக்க வரும் டீச்சர்கள் அவரவர்போக்கில் எதையாவது பேசிக் கொண்டே ஹால் கவனிப்பார்கள். இப்படித் தான்சென்ற அரைப்பரீட்சைக்கும் மேனகாவுக்கு மெயின் ஹால் தான் .அதிலும் டீச்சர்கள் பேசுவதை வரிக்கு வரி காதாரக் கேட்கும் படியான இடத்தில் அவளதுபெஞ்சும் டெஸ்க்கும் . பத்தாவது கணக்குப் பாடம் எடுக்கும் அனுராதா டீச்சர் அதிகப் படியாகயாரோடும் பேசுவதில்லை ,குட்டி போட்ட பூனை மாதிரி ஹால் முழுக்க சுற்றுசுற்றி வந்து கொண்டிருப்பதைக் கூட சகித்துக் கொள்ளலாம் .
மேனகாவுக்குகணக்கு எப்போதும் கொஞ்சம் பிணக்கு தான் ,எல்லாப் பாடங்களிலும்தொண்ணூறுக்கு மேல் மார்க் வாங்கியும் கணக்கு அவளைப் பெரும் பாடுபடுத்தும் , படுத்துவது பாடம் மட்டுமல்ல கணக்கு டீச்சரும் தான் . அரைப் பரீட்சைக்கு முந்தி வைத்த மன்த்லி டெஸ்ட்டில் சயன்சில் 99 3 /4மார்க்குகள் வாங்கி இருந்தாள் மேனகா .பேப்பர் கொடுக்கும்போது முருகன்சார் மொத்தம் மூணு செக்சன்லையும் வச்சு இந்தப் பொண்ணு தான் இவ்ளோமார்க்கு வாங்கிருக்கு ,100 /100மார்க் போடலாம் ,அப்டி போடக் கூடாதுன்னுதான் கால் மார்க் குறைச்சிட்டேன்.என்று பெருமையாகச் சொல்லி எல்லோரையும் மேனகாவுக்காக கை தட்ட சொன்னார் .
ஒரு செக்சனுக்கும் இன்னொரு செக்சனுக்கும்இடையே சுவர் வைத்து மறைத்திருக்க அதென்ன இங்க்லீஷ் மீடியம் ப்ரைவேட்ஸ்கூலா ! வெறும் ஓலைத் தட்டி தான் செக்சன் பிரிக்கும் ,முருகன் சார் பேசியதும்,பிள்ளைகள் கை தட்டியதும் அந்தப் பக்கம் 10th B க்கு கணக்குப் பாடம்எடுத்துக் கொண்டிருந்த அனுராதா டீச்சர் காதில் தெள்ளத் தெளிய விழுந்துவைக்க மேனகாவுக்கு அடுத்த வகுப்பு கணக்கு வகுப்பாகிப் போயிருக்ககூடாது! வெளியே அப்பட்டமாய் காட்டிக் கொள்ளப் படாவிட்டாலும் அனுராதா டீச்சருக்குமுருகன் சாருக்கும் இடையே யார் அடுத்த HM என்பதில் போட்டி இருந்தது.ரெண்டு பேரும் வகுப்பு இடைவேளைகளில் பேசிக் கொள்ளும் போதும் சரி,ஸ்டாப் ரூமில் பேசிக் கொள்ளும் போதும் சரி சிரிக்கச் சிரிக்கப் பேசும்பேச்சிலும் ஒருவரை ஒருவர் வாரிக் கவிழ்க்க நினைக்கும் இடக்கு மடக்குகள் நிறைய தென்படும்.
கணக்குப் பாடத்தில் 59 /100 தான் வாங்கி இருந்தாள் மேனகா . முதல் பீரியடில் எல்லோரும் கை தட்டிப் பாராட்டிய சந்தோசத்தை இந்தக்கணக்குப் பேப்பர் மார்க் தவிடு பொடியாக்கியது ,அப்படியே பேப்பரை வாங்கிமடித்து பைக்குள் வைத்து விட்டு முதல் மார்க் வாங்கிய மதன் கபில் தேவ்ஐ அனுராதா டீச்சர் பாராட்டி கை தட்டச் சொல்வதை சுணங்கிப் போன முகத்தோடுபார்த்தும் பாராமல் பார்த்துக் கொண்டிருந்தாள் மேனகா . அவ்வப்போது டீச்சர் இவளிருந்த பக்கம் பார்த்த போதெல்லாம் டீச்சரின்பார்வை வட்டத்தில் விழாமல் தப்பிக்க அவள் செய்த பிரயத்தனம் தோற்றுப்போனது.
கொஞ்ச நேரத்தில் டீச்சர் மேனகாவை பேப்பரோடு எழுந்து தன் மேஜை அருகேவரச் சொன்னாள் . ; “என்னம்மா மேனகாதேவி உனக்கு சயன்ஸ் பாடம்னா இனிக்குது மார்க் வாங்க,கணக்குப் பாடம்னா கசக்குதா ? என்ன மார்க் வாங்கிருக்க நீ ? எடு உன்பேப்பரை ” என்று ஆணையிட்டாள் . கிட்டத் தட்ட கால்மணி நேரம் அவள் வாங்காமல் போன 49 மார்க்குகள்அனாமத்தாய் துச்சமாய் போக காரணம் அவளுக்கு கணக்கு டீச்சரை பிடிக்காததும்தான் என்பது வரை அனுராதா டீச்சர் படையலிட்டு பட்டியலிட்டுகொண்டிருக்கையில் வகுப்பு மொத்தமும் கொல்லென்று சிரித்தது .
“போன பீரியட்ல கை தட்டல் வாங்கிட்டு இந்தப் பீரியட்ல பார்டர்ல மார்க்வாங்கி பைக்குள்ள மடிச்சு வச்சுக்க வெட்கமா இல்லியா உனக்கு?!அடுத்து அரை பரீட்சை வருது ..அதுல எத்தன மார்க் வாங்கறதா உத்தேசம் மேடமுக்கு?! ” “ஏன் கணக்குப் பாடம்னா வேப்பங்காயா இருக்கா ? ” “கணக்குப் பாடம் பிடிக்கலையா …கணக்கு டீச்சரையே பிடிக்கலையா ?சொல்லும்மா …நான் வேணா ட்ரான்ஸ்பர் வாங்கிட்டு போயிடவா? ” கண்களை உருட்டி நக்கலாய் சிரித்துக் கொண்டே கேலியாக டீச்சர் கேட்கமேனகாவுக்கு மளுக்கென்று கண்ணோரம் கண்ணீர் ஏரி கரையை உடைத்துக் கொண்டது.
அவள் அழுவதைப் பார்த்ததும் டீச்சர் கொஞ்சம் சாந்தி ஆகி விட்டார் போலிருந்தது. “நீ என்ன சின்னக் குழந்தையா இதுக்கெல்லாம் அழற …அடுத்த பரீட்சைக்குநல்லா படிச்சு கணக்குலயும் நல்ல மார்க்க வாங்கி கை தட்டல் வாங்கணும். புரியுதா… கண்ணைத் தொட அழதா …அழாத பிரம்பால அடிச்ச மாதிரி என்ன ஒருஅழுகை உட்காரு…உட்காரு ” இதேதடா தொல்லை இந்தக் கழுதை அழுது ஊரைக் கூட்டப் போகிறதோ ! என்றுடீச்சர் சமாதானப்படுத்துவதை முந்திக் கொண்டு சாப்பாட்டு மணி அடித்துவிட்டார்கள் .இனி நீ அழுதாலும் எனக்கென்ன என்று டீச்சர் வெளியேறிப் போய்விட்டாள்.
டீச்சர் போன மாயத்தில் பத்து (பத்மினி) தான் ஓடோடி வந்து தேற்றினாள் மேனகாவை . “மேனா அழாத மேனா …அந்தக் ஒன்ற கண்ணு டீச்சரப் போச் சொல்லுடி .அதுக்கும்சயன்ஸ் வாத்தியாருக்கும் சண்டைன்னா நாம என்ன பண்ணுவோம்,அவர் பாடத்துலமட்டும் நீ நிறைய மார்க் வாங்கிட்டு கணக்குல குறைஞ்சுட்டன்னு இப்டிதிட்டி உன்ன அழ வச்சுட்டுப் போகுது . விடு ராப்பகலா அடுத்த பரீட்சைலகணக்கு போட்டு போட்டுப் பார்த்து நல்ல மார்க் வாங்கிக்கலாம் .” டீச்சர் போன பின் பத்மினியின் தேற்றுதலைத் தாண்டியும் கணக்கில் முதல்மார்க் வாங்கிய சுப்பலக்ஷ்மியின் கோணல் நக்கல் சிரிப்பு தான் மேனாவைரொம்ப துடிக்க வைத்தது.
“இவள் ஏன் இப்டிச் சிரிக்கிறாள்? ” சுப்பு சயன்ஸிலும் 95 மார்க் வாங்கி இருந்தாள் .அவளுக்கு சோசியல்சயன்ஸ் பாடம் தான் பெரும் பிணக்கு .அந்தப் பாடத்தில் மட்டும் தான் அவளைஅடித்துக் கொண்டு முந்த வழி இருந்தது. சந்திரா பாய் டீச்சர் தான்சோசியல் பாடம் எடுப்பார்கள். இன்னும் சோசியல் பேப்பர் தரவில்லை .ஒருவேளை மத்தியானத்துக்கு மேல் தரலாம். இல்லாவிட்டால் நாளைக்கு தான் . மேனாவுக்கு சோசியல் எடுத்த இந்த சந்திரா பாய் டீச்சருக்கும் ஆறாம்வகுப்பு ரேணுகா டீச்சருக்கும் தான் இன்றைக்கு எக்ஸாம் ஹாலில் வைத்துபெரும் போட்டி ஆகி விட்டது .
அடடா… அனுராதா டீச்சர் பரீட்சை ஹாலில் சூப்பர் வைசிங் செய்யும் லட்சணம் பற்றிச் சொல்ல வந்து விட்டு கதையில் எங்கெங்கோ சுற்றிக்கொண்டிருக்கிறோம் . சரி டீச்சருக்கு வருவோம் . அந்த அனுராதா டீச்சர் பரீட்சை ஹாலுக்கு வந்தாள் என்றால் சும்மாவாஇருப்பாள் ? ஹால் சுற்றி வருவது ஒரு பக்கம் ,இன்னொரு பக்கம் மேனா வகையாகமாட்டிக் கொள்வாள், அனுராதா டீச்சர் மேனகா பரீட்சை எழுதும் டெஸ்கில்சாய்ந்து நின்று கொண்டு கணக்குப் பரீட்சை என்றால் அவள் கணக்குப்போடுவதை உன்னிப்பாக பார்த்துக் கொண்டு இடையிடையே அதிரடியாய் ஏதாவதுகமென்ட் அடித்துக் கொண்டிருப்பாள் , தப்பாக ஃபார்முலா எழுதினால் நாலைந்து கொட்டுகள் இலவசம் ,அவள் அடிக்கும் கமெண்டுகளில் மொத்த ஹாலும் வேறுதிரும்பிப்பார்த்து சிரித்து தொலைக்கும்.
“பிள்ளையாரப்பா கணக்குப் பரீட்சை அன்னிக்கு மட்டுமிந்த அனுராதா டீச்சர்என் ஹாலுக்கு வரவே கூடாது ” என்று மேனா நடுங்கிச் செத்திருக்கிறாள் பலமுறை . எல்லாம் அரைப் பரீட்சை வரை தான் .அப்புறம் ரொம்பவும் ரோசப் பட்டுக்கொண்டு இவள் ராத்திரி எல்லாம் முட்டிக் கொண்டு கணக்குப் பரீட்சைக்குபடியோ படியென்று படித்து எல்லாக் கணக்குகளையும் தலை கீழ பாடமாய் போட்டுப் பார்த்து 90 /100 மார்க்குகள் வாங்கிய பின் டீச்சரின் கெடு பிடிஇவளிடத்தில் குறைந்து விட்டது .கொஞ்சம் மதிப்போடு கூட பார்க்க ஆரம்பித்துவிட்டிருந்தாள் மேனாவை.
“பள்ளிக் கூடம் போய் வருவதென்ன அவ்வளவு லேசுப் பட்ட காரியமா ? ” அனுராதா டீச்சர் யாரோடும் பேசி கவனம் திருப்பாமல் பிள்ளைகள் ஒருபேச்சுக்கு கூட காப்பி அடிக்க இடம் கொடாமல் பரீட்சை ஹாலில் ரோந்துசுத்தி வருவாள் என்றால் ஏழாம் வகுப்பு லச்சுமி காந்தம் டீச்சர் அதற்குஅப்படியே தலை கீழாய் ஹால் க்கு உள்ளே வரும் போதே மூச்சு விடாமல்சளா..புளாவென்று பேசிக் கொண்டே தான் வருவாள்.
பேச்சு யாருடன்வேண்டுமானாலும் நடக்கும் . பக்கத்து ஹால் ராஜாம்பா டீச்சர், அட்டன்டன்ஸ் கொண்டு வரும் ஆயா தனபாக்கியம,ஹாலுக்கு வெளியே கிரவுண்டில் நிற்கும் பி.டி மாஸ்ட்டர்….அப்படி இவர்கள் யாரும் அகப் படவில்லை என்றால் உள்ளே பரீட்சை எழுதும்மாணவிகள் . யாருடனாவது பேசிக் கொண்டே தான் இருந்தாக வேண்டும் அந்தடீச்சருக்கு. இல்லா விட்டால் உன்னைப் பிடி என்னைப் பிடி என்று ஒற்றைத்தலை வலி வந்து விடும் . பிறகு வாட்டர் பாட்டிலில் மாணவிகள் யாராவதுவெந்நீர் கொண்டு வந்திருக்கிறார்களா என்று ஒவ்வொருவராகக் கேட்டு ஆள்அனுப்புவாள் . ஒற்றைத் தலை வலிக்கு இப்படி வெந்நீர் பாட்டில் ஒத்தடம்கொடுத்தால் சுகமாக இருக்குமாம்.
கால் பரீட்சைக்கு எட்டாம் வகுப்பு C செக்சன் நான்சியையும் பத்தாம்வகுப்பு A செக்சன் மேனகாவையும் ஒரே டெஸ்க் போட்டிருந்தார்கள் .நான்சி இருந்த ஓரத்தில் தான் டீச்சர் உட்கார ஒற்றைச் சேர்போடப்பட்டிருந்தது .பெரும்பாலும் ஹால் பார்க்கும் போது உட்காரக் கூடாது.ஆனால் லட்சுமி காந்தம் டீச்சர் உட்கார்ந்து தான் ஹால் பார்ப்பதுவழக்கம். HM வரப் போவது தெரிந்தால் ரொம்ப சின்சியராக ஹால் பார்ப்பதுபோல காட்டிக் கொள்ள இத்தனை வருசத்தில் டீச்சருக்கு நன்றாகப் பழகிஇருந்தது.
நான்சி காந்தம் டீச்சர் ஹாலுக்கு வருவதற்கு முன்பிருந்தே டீச்சரை திட்டிக்கொண்டே தான் இருந்தாள். “எருமை மாடு இது எங்க பரீட்சை எழுத விடப் போகுது ? பேசியே கொல்லுமே,கொறத்தி மாதிரி வேஷங்கட்டிட்டு டீச்சர்னு வந்திருக்கு பாரு! ” அவள் பேச்சைப் பார்த்து மேனகாவுக்கு பயமாகி விட்டது ,இவளென்ன டீச்சர்என்ற மரியாதை துளி கூட வைக்காமல் இப்படி கொட்டி முழக்குகிறாள் என்று ;
நான்சிக்கு லட்சுமி காந்தம் டீச்சர் தான் குடிமையியல் பாடம் எடுக்கிறாள்.நான்சி க்கு மேனகாவை விட வயது ஒன்றிரண்டு கூடத்தான் இருக்கும்.அவள்முறையே ஆறு மற்றும் ஏழாம் வகுப்பில் இரண்டு முறை பெயில் ஆகி உட்கார்ந்துஉட்கார்ந்து தக்கி முக்கித் தான் எட்டாம் வகுப்புக்கு வந்திருந்தாள்பாவம். பொதுவாக நான்ஸியின் வகுப்புப்பிள்ளைகள் அவதானத்தின் படி டீச்சருக்குநான்சி என்றால் செந்திலைப் பார்த்த கவுண்டமணி மாதிரி ஏறுமாறாக கோபம்எகிறும் என்பதை அன்று பரீட்சை ஹாலில் பார்க்க முடிந்தது . அன்றைக்கு நான்சிக்கு செம மண்டகப் படி நடந்தது லட்சுமி காந்தம் டீச்சர் வாயில் .
தன் சேருக்குப் பக்கத்தில் நான்சி இருப்பதைப் பார்த்ததும் மெயின் சீட்கொடுக்கும் போதே ஆரம்பித்து விட்டாள் ; “பாரு இதெல்லாம் பரிட்சை எழுதலைன்னு யார் அழுதா ? மெயின் ஷீட்லையே அஞ்சுபக்கம் மிச்சம் வப்பா இவ. ஏண்டி இன்னைக்கு படிச்சிட்டு வந்து எழுதறியாஇல்ல பிட்டு ஒழிச்சு கொண்டாந்திருக்கையா? ” நான்சி பயந்து பவ்யமாய் பதில் சொல்லி இருந்தால் ஒருவேளை லக்ஷ்மி காந்தம்டீச்சர் அன்றைக்கு பேசாமல் விட்டிருப்பாள் போலும். இவளைப் பிடித்த சனியன் ரெட்டை ஜடையில் சஞ்சரித்ததோ என்னவோ ;
“சும்மா இருங்க டீச்சர் ,நான்லாம் பிட்டு அடிச்சதே இல்லை.என்னை திட்றதேஉங்களுக்கு வேலையாப் போச்சு”
என்று எதிர்த்து பேசி விட்டாள் . எல்லோருக்கும் மெயின் சீட் கொடுத்து முடித்து விட்டு சேரில் உட்கார்ந்தடீச்சர் நான்சி 2 பக்கம் தாண்டி எதுவும் எழுத தெரியாமல்உட்கார்ந்திருப்பதைப் பார்த்ததும் கொதித்துப் போய் ஆரம்பித்து விட்டாள் ; “ஏண்டி டீச்சர் கிட்ட பேசற மாதிரியா பேசின நீ? எல்லாரையும் பார் மெயின்சீட் முடிச்சிட்டு அடிசனல் சீட் வாங்கிக் குமிக்குதுங்க .அவோ எல்லாம்படிக்கிற புள்ளைங்கடி. நீ என்ன ஸ்கூலுக்கு வர மாதிரியா வரவ? கண் மையும்,மூணு இஞ்சுக்கு பவுடரும் ,உடம்பு வெடிச்சுப் போறாப்ல சட்டையும் அரைப்பாவாடையும் .என்னாடி சட்டை இது மூணு வருஷம் முன்ன தச்சதாட்டம். ஆம்பளவாத்தியாருங்க முன்ன வெட்கமில்லாம எப்டி நிக்கிற இதப் போட்டுக்கிட்டு?இதுல கேம்ஸ்ல வேற சேர்ந்துகிட்டு பாதி நாலு முக்காவாசி வகுப்புக்குமட்டம் போடறவ. ” டீச்சர் பெரு மழையென பொழிய …இடையிடையே ;
“டீச்சர் அடிசனல் சீட் ; டீச்சர் எனக்கொரு பேப்பர் ” என்று மற்ற மாணவிகள் எல்லோரும் தங்களது சின்சியாரிட்டியை தவறாதுகாட்டிக் கொண்டார்கள் . மேனகாவும் நெருக்கிப் பிடித்து பத்து அடிசனல்சீட் வாங்கி எழுதிக் குவித்துக் கொண்டிருந்தாள் .அன்றைக்கு வரலாறுபரீட்சை .கதை அடிக்க சொல்லியா தரவேண்டும் . இந்த மக்கு நான்சிக்கு ஒரு எழவும் தெரியவில்லை. டீச்சர் அத்தனை திட்டியும் எருமை மாடு சேற்றில் நிற்பதைப் போல தேமேவெனநின்று கொண்டிருந்தாள் . கடைசியாய் அலுத்துப் போனது டீச்சர் தான் …
ஆனாலும் நான்சியை இன்னும்காயப் படுத்த வேண்டுபவளைப் போல எக்கி அவள் வயிற்றைப் பிடித்து கிள்ளி ; “இந்தா பாருடி …நாளைக்கு ஒழுங்கா ஒரு தாவணிய சுத்திகிட்டு வாஸ்கூலுக்கு …இல்லனா தாராளமா சட்டை தச்சு முழுப் பாவாடை போட்டுட்டுவரணும் ,நீ படிக்கத் தான் வரியா இல்ல ரிகார்டு டான்ஸ் ஆட வரியா இங்க”ஜாக்ரதை என்று ஓய்ந்தாள்.
நான்சி அழுது விடுவாளோ அன்று அவள் மூஞ்சியை மூஞ்சியை பார்த்துக் கொண்டுஉட்கார்ந்திருந்த மேனகா தன் எதிர்பார்ப்பில் தோற்றுப் போனாள். அவள் பாட்டுக்கும் முதல் மணி அடித்ததும் பேப்பரை குப்புரக்கவிழ்த்துவிட்டு எழுந்து போய் விட்டாள் .
“போகுது பாரு “கோயில் மாடு ” மாதிரி திங்கு திங்குன்னு” டீச்சர் தான் உரக்க முணு முணுத்துக் கொண்டே நகர்ந்தாள். டீச்சருக்கு போக்குக் காட்டவேனும் நான்சி ரெண்டொரு நாட்கள் டைட்டாய்சட்டை அணிந்து கொள்வதை தவிர்த்து தாவணி உடுத்திக் கொண்டு வருவாள் எனமேனகா நினைப்பில் ஒரு கூடை மண் ,அவள் அப்படியே தான் வந்தாள் ,டீச்சரும்அப்படியே தான் கூடை கூடையாய் திட்டிக் கொட்டிக் கொண்டிருந்தாள் .
சரி அவர்கள் எக்கேடோ கெட்டு ஒழியட்டும் சந்திரா பாய் டீச்சருக்கு வருவோம் நாம் . ஹாலின் இந்த முக்கில் சந்திரா பாய் டீச்சரும் அந்த முக்கில் ரேணுகாடீச்சரும் நின்று இன்றைக்கும் அதே மெயின் பரீட்சை ஹால் தான். மேனகாவுக்கு சந்திரா பாய்டீச்சர் என்றால் கொள்ளைப் ப்ரியம் .டீச்சர் ரொம்பவெல்லாம் தொண தொணவென்று பேசிக் கொண்டிருந்து பரீட்சைஎழுதும் பிள்ளைகளை துன்புறுத்த மாட்டாள். அவளது சோசியல் பாடமே பரீட்சைஎன்றாலும் கூட அனுராதா டீச்சர் போல முந்திரிக் கொட்டையாய் முன்னால் வந்துநின்று கொண்டு தப்புக் கண்டு பிடித்து தலையில் குட்டி மாணவியை அவமானப்படுத்தி மொத்த ஹாலையும் கொல்லென்று சிரிக்க வைக்க மாட்டாள்.
மேனகாவை டீச்சருக்குப் பிடிக்கும் .டீச்சரின் அக்கா மகள்கள் யாரோஒருத்தியின் ஜாடையில் மேனா இருப்பதாக சந்திரா பாய் டீச்சரும் தையல்டீச்சர் காமாட்சியும் மாலை கோச்சிங் எடுக்கையில் ஒருநாள 9th A செக்சன்படிகளில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கையில் அவர்களுக்குள் சொல்லிக்கொண்டார்கள் . கூடவே மேனாவுக்கு சோசியல் சயன்ஸ் படிக்க ரொம்பப் பிடித்திருந்ததால்சந்திரா பாய் டீச்சரையும் ரொம்ப ரொம்ப பிடித்துப் போயிருந்தது .அப்படித்தான் டீச்சருக்கும் அவளுக்குமான பாசப் பிணைப்பு இறுகி இருந்தது.
டீச்சர்வகுப்பில் எல்லோரையும் ஏசுவாள் மேனாவைத் தவிர ; ஒருமுறை மாடல் எக்சாம் நடக்கையில் முன் தினம் சோசியல் ரிவிசன்வைத்துக்கொண்டிருந்தார்கள். மேப் ஸ்கெட்ச் பேனாவால் கடலுக்குஅடர்த்தியாக நீலத்தை இவள் கொட்ட ஒவ்வொரு பெஞ்சாக மேப் நோட்டுதிருத்திக் கொண்டு வந்த டீச்சர் ஆள் யாரென்று பார்க்காமல் இவள் ஸ்கெட்ச்வைத்து தீட்டி இருந்ததைப் பார்த்து கடும் கோபத்தில் ;
“கழுதை ஏண்டி இப்படி மையக் கொட்டி தீட்டி இருக்க கடலுக்கு ” ஆக்கங்கெட்ட கூகை …கலர் பென்சில் இல்லியாடி ஒங்கிட்ட… ” என்று தலையில் குட்ட கையை ஓங்கி விட்ட பிறகு தான் அது தனப்ரியத்துக்குகந்த மாணவி மேனகா என்று தெரிந்தது. டீச்சரின் ஓங்கிய வலது கை அப்படியே அந்தரத்தில் நின்று விட்டது .
“ஏய் நீயா …என்று சிரித்து மழுப்பி விட்டு , இப்டி ஸ்கெட்ச்ல மையக் கொட்டக் கூடாது பென்சிலாட்டி தான் அடிக்கனும்…அடிச்சி முடிச்சிட்டு ஒரு துண்டு பேப்பர் கிழிச்சு கடல்பக்கம்முழுசும் ஒரே சீரா தேய்க்கணும் அப்பத்தான் கடல் கண்ல உறுத்தாது…பப்ளிக்ல மார்க் போடுவான் சரியா ?!” என்று பேசாமல் போய் சேரில் உட்கார்ந்து விட்டாள்.
எல்லாப் பிள்ளைகளுக்கும் டீச்சர் மேனாவைத் திட்டாததால் பொறாமையில் வயிறு எரிந்தது. அத்தனை பிரியமான டீச்சர் தான் சந்திரா பாய் டீச்சர் .மேனாவுக்கு பப்ளிக்எக்சாம் வர இன்னும் ஒரு மாதமே இருக்கிறது. அதற்கான மாடல் எக்சாம் எழுத தான் இப்போது இந்த மெயின் பரீட்சையை நினைத்துக்கூட அவளுக்கு அத்தனை துக்கம் எதுவுமில்லை ,போனவாரத்தில் ஒருநாள் டென்த் பிள்ளைகள் எல்லோரும் சேர்ந்து ஆளுக்கு கொஞ்சம்காசு போட்டு தங்களுக்குப் பாடம் சொல்லித் தந்த எல்லா டீச்சர்வாத்தியார்களுக்கும் சின்ன சின்னதாய் அன்பளிப்புகள் வாங்கி வைத்து ஒருஸ்வீட் ஒரு காரம் காப்பி என்று பிரிவுபச்சார பார்ட்டி வைத்தார்கள் . அப்போது பேசும் போது சந்திரா பாய் டீச்சர் சொன்னது;
“இதுவரைக்கும் எட்டு செட் டென்த் பிள்ளைங்க இங்க முடிச்சிட்டுபோயிருக்காங்க …அவங்க ஒவ்வொருத்தரையும் எம்பிள்ளைகளைப் போலவே எனக்குநல்லா ஞாபகம் இருக்கும் ,என்னடா டீச்சர் வகுப்பெடுக்கைல அப்படிஏசறா..இப்படி எசறாளே ன்னு இருந்திருக்கும் உங்களுக்கெல்லாம் பிள்ளைகளா ! எம்பிள்ளைங்க பப்ளிக்ல நல்ல மார்க்கு வாங்கி டாக்டர், இஞ்சினியர்ன்னு வந்து நின்னா அதுல வர சந்தோசம் வேற எதுல இருக்கு! எல்லாம் உங்க நல்லதுக்கு நினைச்சு சொன்னது தான். பப்ளிக் பரீட்சைக்கு ஒரு மாசம் தான் இருக்கு ,திரும்பி பார்க்கறதுக்குள்ள ஓடிப் போயிடும் நாளு .அப்புறம் நீங்க ரெக்கை முளைச்ச பறவைங்க உங்களைப் பிடிக்க முடியாது …எல்லாரும் பறந்து போய்டுவீங்க. இந்த டீச்சர் அன்னிக்கி அப்படிச் சொன்னாளேன்னு ஞாபகம் வச்சுக்கறதே ரொம்பப் பெரிய விஷயம் தான்.”
லேசாக கண்கள் கலங்க டீச்சர் இப்படிச் சொல்லி முடிக்கக் கூட இல்லை மேனாவுக்கு பொங்கிப் பொங்கி அழுகை வந்தது ,கணக்கு டீச்சரின் செல்லப்பிள்ளை ஜெயலட்சுமி அனுராதா டீச்சர் பேசுகையில் விக்கி விக்கி அழுதேவிட்டாள்.
தமிழ் சாரை எல்லோருக்கும் பிடிக்கும் (அவர் தான் வகுப்பில் யாரையும்திட்டியதே இல்லையே …குச்சனூர் பக்கம் ஏகப்பட்ட விவசாய பூமி அவருக்குராவெல்லாம் தோட்டம் வயல் என்று நீர் பாய்ச்சி விட்டு வருவார் என்று கேலிசெய்வார்கள் மற்ற ஆசிரியர்கள்.
அவர் ஒரு நாளும் வகுப்பில் தூங்காமல்இருந்ததே இல்லை .தமிழ் ரெகார்டு நோட்டில் கையெழுத்துப் போடும் போது கூடதூங்கிக்கொண்டே தான் போடுவார். ஆனால் எப்படியோ பரீட்சை வருவதற்குள் போர்சன் முடித்து விடுவார் )
இப்பேர்ப் பட்ட தமிழய்யாவை விட்டு பிரிந்துபோகப் போகிறோமே என்று ஒவ்வொரு பிள்ளைகளும் அழுது தவித்தார்கள் அன்றைய தினம் . பிறகு டீச்சர்களும் வாத்தியார்களுமாய் எல்லாப் பிள்ளைகளையும் ரொம்ப நேரம்தேற்ற வேண்டியதாயிற்று .
ஒரு வழியாய் பிள்ளைகள் தங்கள் டீச்சர்களோடும் வாத்தியாரகளோடும் ஹெட்மாஸ்ட்டரோடும் குரூப் போட்டோ எடுத்து முடித்த பின் பார்ட்டி இனிதேமுடிவடைந்தது.
“அடடா…எங்கே ஆரம்பித்து எங்கெல்லாம் போய் விட்டோம் பாருங்கள்!?”
ம்ம்…சந்திரா பாய் டீச்சரும் ரேணுகா டீச்சரும் மெயின் ஹால் உள்ளே நுழைகையில் பரஸ்பரம் புன்னகை முகத்தோடு தான் உள்ளே வந்தார்கள், இருவருமே பொதுவில் சாப்ட் டீச்சர்கள் தான் , இருவருக்கும் முகம் சாந்தமாகத் தான் இருக்கும் எப்போதும் கடு கடு கடுவன் பூனைகள் அல்ல .
முதல் ஒரு மணிநேரத்தில் எதுவும் பேசிக் கொள்ளவில்லை இருவரும்,பிறகு சும்மாவே நிற்பது போர் அடித்திருக்கும் போல ரேணுகா டீச்சர் தான்ஆரம்பித்து வைத்தாள்.
” உங்க மாமியாருக்கு உடம்பு முடியாம சிரமப் பட்டாகளே டீச்சர் இப்பந்தேவலையா அவுகளுக்கு ? ”
” இப்பங் கொஞ்சந் தேவலை டீச்சர் … நடமாட்டமில்லை …ஒன்னுஞ் சாப்பிடக்கொள்ளல …நீர்க்க கரைச்சிக் கொடுத்தா என்னவோ சிந்தியும் சிதறாமஇம்புட்டு உள்ளபோகும் ”
“அம்புட்டுக்கு என்ன ஆச்சு டீச்சர் அவுகளுக்கு ? கரைச்சி ஊத்துனா பசிதாங்குமா ? நீங்க இங்கிட்டு வந்திற்றீங்க …புள்ளைங்க ஸ்கூல் போயிரும்,உங்க சார் ஆபீசுக்கு போய்டுவாரு ,வீட்ல அவுக மட்டும் தான் என்னமாச்சும்பசி அத்தில புடிச்சா என்ன செய்வாக?”
“அதெல்லாம் பசிச்சா தான டீச்சர் …படுக்க ஓரத்துலையே டப்பாவுல போட்டுரொப்பி வச்சிட்டுத்தான் வாறது இங்க. அவுகளுக்கு ரெண்டு நாளா மலச் சிக்கவேற .சும்மாவே பசி இல்லம்பாக இப்போ ஒரு காப்பி குடிக்க கூட கஷ்டப் படுதாக” நல்ல பச்ச வாழப் பழம் ஒரு சீப்பு வாங்கி கை எட்டுற தொலாவுல வச்சிட்டுவந்திருக்கேன் சாயங்காலமே போய் பார்த்தா சொல்வாக கக்கூஸ் போனாகளாஇல்லியான்னு” டெட்பான் தான் அவுகளே வச்சிக்கிடுவாக .”
“ஏன் டீச்சர் பச்ச வாழப் பழம் வாங்கி வச்சிங்க ரஸ்தாளி நெல்லா ருசியாஇருக்குமே அத வாங்கி வச்சிட்டு வந்திருக்கலாமே ? நெல்லா இளக்குமேரஸ்தாளியும் .”
ரேணுகா டீச்சர் இப்படிச் சொன்னதும் சந்திரா பாய் டீச்சர் சிரித்துக் கொண்டு ;
“என்ன டீச்சர் இப்படிச் சொல்லிட்டீக …என்ன இருந்தாலும் பச்சப்பழம் ருசி ரஸ்தாளி தராது …பச்சப் பழம் ..பச்சப் பழம் தான் .நீங்க எப்டி இப்டிச்சொல்றீகன்னு தெரியல ! இதற்கு ரேணுகா டீச்சர் கொஞ்சமே கொஞ்சம் திகைத்தார் போல அதிருப்தியாய்முகத்தை வைத்துக் கொண்டு ;
“இல்லைங்க டீச்சர் ரஸ்தாளி ருசியே தனி , லேசா இனிப்பும் புளிப்புமா அந்தருசி பச்சப் பழத்துல காணாது ! ” பச்சப் பழம் துவர்ப்பா இல்ல இருக்கும்சமயத்துல இனிப்பு கூட காணாது ” சப்புன்னு இல்ல இருக்கும் ”
சந்திர பாய் டீச்சர் பதிலுக்கு தன தரப்பு வாதமாய் ஏதாவது சொல்லியாகவேண்டிய கட்டாயத்தில் இருந்தால் இப்போது ;
“அய்யே …ரஸ்தாளியும் தான் சமயத்துல சவ சவன்னு ருசிய இல்லாம சப்புன்னுஇருக்கும் , சுமாரான பழத்தைக் காட்டிலும் மொந்தையா இருக்கற ரஸ்தாளிப்பழம் என்னிக்குமே இனிச்சு கண்டதில்லை நான். என்ன இருந்தாலும் பச்சைப்பழம் பச்சைப் பழம் தான் .”
ரேணுகா டீச்சர் தன் பிரதிவாதித் தனத்தை நிறுவுபவளைப் போல நெற்றிசுருக்கி சந்திரா பாய் டீச்சரைப் பார்த்து ;
“அய்யய்யே …சந்திரா பாய் டீச்சர் நீங்க உங்க பக்கத்துக் கடைல சல்லிசா கிடைக்குதுன்னு மாமியார்க்கு பச்சப் பழம் வாங்கித் தந்து ருசியாஇருக்கும் ன்னு ஏமாத்தலாம் ,அதுக்கு நானும் அதை ஒத்துக் கிட முடியுமா என்ன ? எங்க வீட்ல எல்லாம் சின்னப் புள்ளைங்க கூட நம்பாதுங்க பச்சப் பழம் தான் ரஸ்தாளியக் காட்டிலும் ருசி ன்னு சொன்னா ”
திகைத்துப் போவது இப்போது சந்திரா பாய் டீச்சர் முறையானது ;
என்ன இந்த ரேணுகா டீச்சர் சாதாரண வாழைப் பழ விவகாரத்தில் மாமியார் மருமகள் உள்அரசியலை எல்லாம் நுழைத்துப் பேச ஆரம்பித்து விட்டாளே என்று ; உட்கார்ந்து பரீட்சை எழுதிக் கொண்டிருந்த மாணவிகளுக்கு விஷயம் ரொம்பவும் சுவாரஷ்யமாகிப் போனது போலும் ; பரீட்சை முடியும் நேரமாகி விட்டபடியால் டீச்சர்களின் வாய் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருப்பது பொழுதுபோக்காக இருந்திருக்கும் .
அந்த நாளின் கடைசியில் எந்தப்பழம் ருசியானது என்பது தீர்மானமானதோ இல்லையோ ? சந்திரா பாய் டீச்சருக்கும் ரேணுகா டீச்சருக்கும் இடையில்இருந்த சுமூகமான ஒரு உறவு குழைந்து சீர் கேட்டுப் போனது .
அடுத்து மேனாவுக்கு முழுப் பரீட்சை லீவு விட்டதும் பாட்டியோடு சேர்ந்துகேபிள் டி.வி .யில் பக்திப் படம் பார்க்கவே நேரம் சரியாகிப் போனது. தினமும மத்தியானத்தில் கந்தன் கருணை , ஆதி பராசக்தி,முப்பெரும்தேவியர்,ஸ்ரீ வள்ளி என்று பக்தி சொட்டச் சொட்ட படங்கள் பார்த்துக்கொண்டிருந்த வேளையில் திருவிளையாடல் படம் பார்த்த நாளில் தான் அவளுக்கு மறுபடியும் சந்திரா பாய் டீச்சருக்கும் ரேணுகா டீச்சருக்கும் இடையில்நடந்த பழப் பிரச்சனை உள்ளபடியே திருவாளர் முருகன் மற்றும்பெருவாளர்(ஞானப் பழத்தைப் பெற்ற பெற்றல் பெறுவாளர் !) விநாயகரால் நினைவூட்டப்பட்டது.
அதாகப் பட்டது …
“பழம் என்றாலே ஆதியில் இருந்தே பிரச்சினை தான் போலும் ” என்று பாட்டியிடம் பெரிய மனுஷி போல கொண்டாள் அவள். பாட்டியும் ஆர்.கே நாராயணின் “சுவாமியும் சிநேகிதர்களும் ” கதையில் வரும் பாட்டி போல மேனா சொன்னதற்கு பள்ளி விஷயம் எல்லாம் தெரிந்தார்போலொரு பாவனையில் பெரிதாக சப்தமெழ “ம்ம்” கொட்டிக் கொண்டாள் .
– ஏப்ரல் 2011
கதை சவசவவென்று இழுத்துக்கொண்டே செல்கிறது..
இரண்டுமுறை படித்தால்தான் புரியும். கதாபாத்திரத்தின் பெயர்கள் குழப்பம் ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது கதைக்கு பின்னடைவு..
மொத்தத்தில் ரஸ்தாளி இனித்தது