மச்சினனுஙக மாறிட்டானுக…

0
கதையாசிரியர்: , ,
தின/வார இதழ்: தென்றல்
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: August 10, 2013
பார்வையிட்டோர்: 41,257 
 
 

காலப்போக்கிலே எதெதுவோ மாறுகிறது. நல்ல ஆறாயிருந்தது கூவமாயிடுது. சமுத்திரம் முன்னே போகுது. பின்னே வருது. பனந்தோப்பாக இருந்த இடம் காலனி அந்தஸ்து பெறுகிறது.

குளமாயிருந்த இடம் குடியிருப்பா மாறுது.

அதெல்லாம் மாறிட்டுப் போகுது… ஆனால் மனுஷாள் மாறிப் போறதுலேதான் எனக்கு ரொம்ப வருத்தம்…

மனுஷங்களிலும் இந்த மச்சான்மாருங்க எப்படி மாறிட்டாங்க இந்தக் காலத்திலே.. சே!

முன்னேயெல்லாம் தீபாவளி மலருங்களை எடுத்துப் பிரிச்சால் அதிலே அத்தான் மச்சான் ஜோக் நிச்சயமா ரெண்டு வழவழ பிளேட்டாவது இருக்கும்.

தலைதீபாவளிக்கு வந்த அத்தான், அந்தரங்கமா அக்காவின் கன்னத்தைக் கிள்ளறப்போ சோபா மறைவிலிருந்து மைத்துனன், “அத்தான்! பட்டாசுக்குக் காசு குடுத்தால் நீங்க அக்காவைக் கட்டிப் பிடிச்சுக்கிட்டதை யார்கிட்டேயும் சொல்ல மாட்டேன்”னு குரல் கொடுப்பான்.

இளம் மனைவிகிட்டே தூது அனுப்ப குட்டி மச்சினனைத்தான் அத்தான் வர்க்கம் தேர்ந்தெடுத்துக் கொண்டிருந்தன.

இப்போ “தலைதீபாவளியா? அப்படீன்னா?” என்று கேட்கிறார்கள்.

அந்தக் காலத்துலே தலைதீபாவளிக்கு வருகிற மாப்பிள்ளையை அந்தக் கிராமமே எதிர்பார்த்துக் காத்திருக்கும்.

வில்லு வண்டி ஸ்டேஷனிலிருந்து ‘ஜல்ஜல்’னு சத்தம் போட்டுக்கொண்டு கிராமத்திலே பிரவேசித்ததுமே, “கர்ணம் மாமா வீட்டுக்கு தலைதீபாவளி மாப்பிள்ளை வந்தாச்சு! வந்தாச்சு!”ன்னு கிராமம் பூரா செய்தி பரவிடும்.

மாப்பிள்ளை வந்ததும் ஈன்னு இளிச்சுக்கிட்டு வாசலுக்கு பொண்டாட்டி வந்துடுவாளா என்ன?

தம்பிப் பயல், “அக்கா! அக்கா! அத்தான் வந்தாச்சு! வந்தாச்சு!”ன்னு கத்திக்கொண்டு சமையல் கட்டுக்கு வருவான்.

காரியமே இல்லாவிட்டாலும் அக்கா அங்கே ஏதோ காரியம் பண்ணுறமாதிரி பாவனை பண்ணிக்கொண்டிருப்பாள்.

‘ஏண்டா கடன்காரா! எட்டு ஊருக்குக் கேட்கறமாதிரி கத்தறே.. அத்தான் வந்தால் இப்ப என்ன?’ என்று அதை சாதாரண நிகழ்ச்சி மாதிரி எடுத்துக்கொள்வதுபோல நடிப்பாள்.

ஆனால் மூஞ்சியிலே பிரகாசம் நூறுவாட் பல்ப் கணக்கா அடிக்கும்.

சில வீடுகளிலே நாதசுரம், மேளதாளம் காத்திருக்கும்.

வண்டி வந்தவுடனே அமர்க்களமாக எழுந்து வாசலுக்குப் போய் வாசிக்க ஆரம்பித்துவிடுவார்கள். அபசுரமோ, சுஸ்வரமோ அந்த மேளதாள சத்தத்துக்கு பழக்கப்பட்ட மாடுகள் மிரளாமல் சமர்த்தாக நிற்கும்.

அப்புறம் வீட்டின் சகல பேர்களும் – மைனஸ் பொண்ணைத் தவிர – வாசலில் நெரிசலாக நின்று வரவேற்பார்கள்.

மச்சினன்காரன் ‘விஷமக்கார விச்சு’ ஒரு சரம் பட்டாசைக் கொளுத்திப் போடுவான்.

“அச்சச்சோ! மொட்டக் கடன்காரா! வெடியைத் தூரமாத் தூக்கிப் போடக்கூடாது?” என்று அப்பா அதட்டல் போடுவார்.

“அத்தான் பயப்படறாரான்னு பாத்தேன்பா!” என்று அவன் ஒரு சிரிப்பு வெடியைப் போடுவான்.

எல்லாரும் பெரிசாச் சிரிசிரின்னு அந்த ஹாஸ்யத்துக்குச் சிரிப்பார்கள்.

மாப்பிள்ளையோட கண்ணு ‘எங்கே சுகன்யா?’ன்னு தேடிட்டிருக்கும்.

மச்சினன் தான் அத்தானுக்குக் காப்பி கொண்டு வருவான்.

அவன்கிட்டே அத்தான்அதிகப்படியாக் கொஞ்சுவார்.. “சமர்த்து! என்ன படிக்கிறே, பட்டாசுப் பையைப் பார்த்தியோ?”ன்னு காக்கா பிடிப்பார்!”

“அடே! என்னென்னவோ வாணம்! எல்லாம் எனக்கேவா?” என்று அவன் ஆச்சரியப்படுவான்.

“உங்க அக்காகிட்டே குடுத்து இதையெல்லாம் கொஞ்சம் அடுப்புகிட்டே வைக்கச் சொல்லு..”ன்னு அக்கா பேச்சுக்கு அத்தான் மெதுவா தாவுவார்.

“அய்யய்யோ! என்ன அத்தான்! அடுப்புகிட்டே வெச்சால் படபடன்னு வெடிச்சுடுமே..”ன்னு மச்சினன் பயப்படுவான்.

“அக்காவை வரச் சொல்லு.. அவள்கிட்டே விவரமாச் சொல்றேன். உனக்குப் புரியாது..”ன்னு அத்தான் அக்காவை வரவழைக்க முயலுவார்.

விஷமக்கார விச்சு யமகாதகனாச்சே.

“அத்தான்! பட்டாசெல்லாம் நல்லாத்தான் வெடிச்சதே! அக்காவை வரச் சொல்றதுக்குத்தானே ட்ரிக்கு பண்றீங்க?”னு இடக்கு பண்ணுவான்.

“பொல்லாத பயலாருக்கியே.. பட்டணத்திலேருந்து பட்டர் சாக்லெட் உனக்கு வாங்கி வந்திருக்கேனே..” என்று அத்தான் அவனுக்குப் பெட்டியைத் திறந்து ஸ்பெஷலாக ஒரு சாக்லேட் அஸ்திரத்தை எடுத்து விடுவார். அப்புறம் மச்சினன் அக்காகிட்டே தூது போவான்.

“அக்கா! அத்தான் ரொம்பக் கோபமா இருக்கார். உடனே நீ வரணுமாம். இல்லாட்டா இங்கே வந்து உன்னைக் கடிச்சுத் துன்னுடுவாராம்!”னு அம்மா அப்பா இருக்கறப்பவே சொல்லுவான். வெட்கத்தாலே அக்கா மூஞ்சி செக்கச் செவேல்னு ஆகிடும். (அக்கா கறுப்பாயிருந்தால் கருஞ்சிவப்பா மாறும்னு வெச்சுக்கலாம். அக்கா என்கிறவள் நிறைய வெட்கத்தை ஸ்டாக் பண்ணி வைச்சிருப்பாள். அப்பப்போ கொஞ்சம் கொஞ்சமாச் செலவு பண்ணுவாள்)

“வேலையாயிருக்காளாம்னு சொல்லு”ன்னு அக்கா பிகு பண்ணிப்பாள்.

“சரி. வரமுடியாதாம்னு சொல்லிடட்டுமா?”ன்னு அக்காவை டீஸ் பண்ணுவான் விஷமக்கார விச்சு.

“அம்மா! பாரேன், இந்த மொட்டக் கடன்காரனை..”ன்னு பொண்ணும் செல்லம் கொஞ்சுவாள்.

“எனக்கு ரெண்டு ரவா லாடு குடுத்தா அத்தான்கிட்டே ‘வர்றேன்னு சொன்னான்னு’ சொல்லுவேன். தரலையானால் ‘வரமுடியாதாம்’னு சொல்லிடுவேன்னு பிளாக்மெயில் பண்ணுவான் – சும்மா வேடிக்கைக்குத்தான்.

சில சமயம் வீட்டுக்குள்ளேயே அத்தானுக்கும் அக்காவுக்கும் கடிதப் போக்குவரத்து நடக்கும்.

அந்தக் கடுதாசியை மச்சினன் எழுத்துக் கூட்டிப் படித்துவிடுவான்.

‘உன்னை நிறையப் பார்க்காமல் என் கண்ணு இருண்டு போயிட்டுது! பட்டாசுப் புகைன்னு முதலில் நினைச்சேன். அப்புறம்தான் அது உன்னோட ஒளி படாததாலே இருண்டு போச்சுன்னு தெரிஞ்சுது…’ என்று இந்த மாதிரி பேத்தலாக மாப்பிள்ளை ஏதாவது எழுதியிருப்பான்.

அதுலே ஒரு வார்த்தையை மச்சினன் பிடித்துக் கொண்டு, அத்தானை “அத்தான்! பட்டாசுப் புகை, பட்டாசுப்புகை!”ன்னு கிண்டல் பண்ணுவான்.

அவர் செல்லமாக அவன் காதைக் கிள்ளி, ‘ஏண்டா பிறத்தியார் லெட்டரைப் படிக்கலாமா? அசடாயிருக்கியே’ன்னுவார்.

அவன், “அய்யய்யோ நான் எங்கே அத்தான் உங்க லெட்டரைப் படிச்சேன்.. புகையாலே உங்களுக்குக் கண்ணு தெரியாமல் போயிடப் போறதேன்னு புகை, புகைன்னேன்!! என்று அவன் சமத்காரமாகப் பேசுவான்.

மச்சினனைச் சாக்கு வைத்து,

“குழந்தை ஆசைப்படறான். பிக்சருக்குப் போகணுமாம், கூட்டிட்டு போயிட்டு வரேனே!! என்பார் மாப்பிள்ளை.

மாமனார் புரிந்த மனுஷராக இருப்பார். அதனால், ‘சுகன்யாவையும் அழச்சிட்டுப் போங்களேன். அவளுக்கும் பாவம் ஆசையாயிருக்கும்’னு சொல்லுவார்.

ஆக — இப்படியெல்லாம் ஒரு ஜாலியான சூழ்நிலைக்கு அந்தக் காலத்திலே குட்டி மச்சான்களின் தேவையும் சேவையும் அவசியமாயிருந்தது.

இப்ப தலைதீபாவளியே வழக்கொழிந்து போய்க் கொண்டிருக்கிறது. அபூர்வமாக நடக்கிறது எங்கேயோ!

குட்டி மச்சினன்கள் அதைவிட அபூர்வமாகிவிட்டார்கள்.

அதிலும் ‘அத்தான்!’ என்று கூப்பிடுகிற மச்சான்கள் ரொம்ப அரிது. அத்தானை, “சார்! சார்” என்று சார் போட்டு அழைக்கிறார்கள்.

மைத்துனன் மூலம்தான் புதுப் பெண்டாட்டியைச் சந்திக்கவேண்டும் என்கிற த்ரில்களோ, அவசியமோ இல்லாமல் போய்விட்டது.

கல்யாணமானதுமே ஏதாவது போர்ஷன் பார்த்துக்கொண்டு புதுத் தம்பதியர் தனிக்குடித்தனம் போய்விடுகிறார்கள்.

“உன் தம்பி சாயந்தரமா போயிடுவானோ இல்லயோ.. சொல்லிடு, இங்கே இடம் கிடையாது..”ன்னு கறாராக மாப்பிள்ளை சொல்லிடறார்.

தீபாவளியன்றைக்கு மச்சினனுக்கு டி.வி. பார்க்கவே நேரமில்லை. பட்டிமன்றம், அரட்டை அரங்கம், புதுச் சினிமா, பழைய சினிமான்னு நாள் பூரா உட்கார்ந்துவிடுகிறான்.

அத்தானும் அக்காவும் காரிலோ, ஆட்டோவிலோ தீபாவளி ராத்திரிக்கு வீட்டுக்கு வருவார்கள். அவர்களுக்குன்னு ஒரு ரூம் ஒதுக்கியாகணும். அநேகமாக அது மச்சினன்காரனுடைய ஸ்டடி ரூமாகத்தானிருக்கும்.

அவனுக்கு அதிலேயே மகா எரிச்சல். ‘சீனு சார் வந்தாலே என் பாடு தகராறுதான். கம்ப்யூட்டரை ஏதாவது நோண்டுவார்’னு கம்ப்ளெயிண்ட் பண்ணுவான்.

“யார்ரா சீனு சார்?”னு அப்பா கேட்பார்.

அம்மா சொல்லுவாள், “அம்புஜா புருசனைத்தான் சொல்றான். அத்தனை அழகா. சீனு சாராமே, சீனு சார்..”னு அம்மா சிரிப்பாள்.

“அத்தான்னு கூப்பிடப்படாதோ?”ன்னு அப்பா ஒப்புக்குக் கண்டிப்பார்.

“அத்தானா.. ப்ளேடுப்பா அந்த ஆள். அவருக்கு மேலே பிளேடு அம்புஜா! ரெண்டு டிக்கட் மட்டும் சினிமாவுக்கு புக் பண்ணிகிட்டிருக்குகள்! கஞ்சம்…” என்று கடுமையாக விமர்சனம்.

கபடு சூது இல்லாத மச்சினன்கள் அருகிவிட்டார்கள். அதைவிடக் கொடுமை — அத்தான் ஒரு உதவாக்கரைன்னு அவர்களுக்கு அபிப்பிராயம். தன்னோடு பழகுவதற்கும் பேசுவதற்கும் லாயக்கில்லாத ஜீவன் அவர் என்று ஓர் அபிப்பிராயம்.

அதனால் அத்தானைப் பார்த்தால் சாதாரணமாக ஒரு புன்னகைகூடச் செய்யமாட்டானுங்க.

முகத்தை உர்ருனு வெச்சிக்கிட்டு சோபாவில் அலட்சியமாக காலை டீபாயில் வைத்தபடி தான் பாட்டுக்கு ஏதாவது காமிக்ஸைப் படிச்சிகிட்டிருப்பானுங்க.

அப்பாவோ அம்மாவோ.. “அடே கோகுல்! யார் வந்திருக்கா பாரு..”ன்னு சொல்லுவார்கள். அவன் நிமிர்ந்து பார்த்து, ”ஹாய்!” என்று சொல்லிவிட்டு தொடர்ந்து தலையைக் குனிந்து படித்துக் கொண்டிருப்பான்.

கொஞ்சநேரத்திலே, ‘ஸீயூ.. சார்.. நான் கொஞ்சம் பிரண்ட் வீட்டுக்குப் போகணும்னு’ வெளியே போய்விடுவான்.

அக்காகூடப் பேசவே மாட்டான்.

‘நல்ல நாளும் அதுவுமா இவங்க ஏன் வந்து நாளோட மூடையே கெடுக்கறாங்க’ன்னு நினைப்பு அவனுக்கு.

அதிலும் அத்தான் எனப்பட்ட பிராணி, ரிமூட்டை வைத்துக்கொண்டு டி.வி.யிலே தனக்கு விருப்பமான சானலைத் திருப்பச் சொல்லிவிட்டாலோ அவரைப் பரம எதிரியாக நினைத்துக்கொண்டு ‘வாக் அவுட்’ செய்துவிடுவான்.

“கோகுல் ஏன் டல்லா இருக்கான்?” என்று அக்காகிட்டே அத்தான் கேட்பார்.

அக்கா அலட்சியமாக, “அவன் அப்படித்தான் கடுவம் பூனை.. பிரண்ட்ஸ்தான் அவனுக்கு..” என்பாள்.

அவளை ஒரு முறை முறைத்துவிட்டு, அவசரமாக அள்ளிச் சாப்பிட்டுவிட்டு வெளியே புறப்பட்டுவிடுவான் கோகுல்.

அம்மாக்காரி “ஏண்டா நாளும் கிழமையுமா வீட்டிலே இருந்தால் என்ன? அக்கா அத்தானெல்லாம் வந்திருக்காங்க இல்லயா?”ன்னு கேட்டால், ‘அதனால்தான் வெளியே போறேன்’னுட்டு ஸ்கூட்டரைக் கிளப்பிக்கொண்டு வெளியே போயிடறான்.

பழைய காலத்து மச்சினன் உறவுகளை அனுபவித்த பழைய கால மாப்பிள்ளைகளுக்குத்தான் அந்த இனிமை தெரியும்.

– பிப்ரவரி 2001

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *