பார், பார்! சிபாரிசு

0
கதையாசிரியர்: , ,
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: January 23, 2012
பார்வையிட்டோர்: 11,999 
 
 

எந்தச் சங்க இலக்கியத்துக்கும், எந்த இருபதாம் நூற்று¡ண்டு இலக்கியத்துக்கும் கட்டுப்படாத ஒரு புது தினுசான கூத்தை ஆடிக் கொண்டிருந்தார், அப்புசாமி.

“ஒய் இஸ் திஸ் ஓல்ட் மான் ஜம்ப்பிங்!” என்று சீதாப்பாட்டி, அப்புசாமி காதுபட முணுமுணுத்தாள். அப்புறம் உற்று நோக்கியபோது, அப்புசாமியின் கையில் ஒரு கடிதம் இருப்பது தெரிந்தது.

‘இந்திய ஜனாதிபதி இவரை ஏதாவது திடீரென்று பத்ம பூஷண், பத்ம விபூஷண் அல்லது பாரத ரத்னா பண்ணிவிட்டாரோ?’

சீதாப்பாட்டி கொஞ்சம் தன்னைக் குழப்பிக் கொண்டாள். பிறகு, “ஹாப்பி! லட் மீ ஸீ தி லெட்டர்!” என்று அவரிடமிருந்த கடிதத்தைப் பறித்துப் படித்துப் பார்த்தாள்.

பிறகு, “நான்ஸென்ஸ்!” என்று கடிதத்தைக் கசக்கிப் போட்டாள்.

அப்புசாமிக்குச் சுரீரென்று கட்டெறும்பு கடித்தாற்போல் கோபம் வந்துவிட்டது. “என்னை ஒருத்தர் புகழ்ந்தால் உனக்கு ஆவதில்லை,” என்றார்.

“ப்ளூடார்க் என்ன சொன்னான்!” என்றாள் சீதாப்பாட்டி.

“அவன் என்ன சொல்லியிருந்தாலும் எனக்கு அனாவசியம்,” என்றார் அப்புசாமி.  

“யார் புகழ்ச்சியைத் தேடுகிறார்களோ, அவர்கள், தாங்கள் ‘பவர் இன் மெரிட்!’ என்பதை நிரூபித்து விடுகிறார்கள் என்றான் புளூடார்க்!”

“கிடக்கிறான் விடு! என்னால் வினாயக மூர்த்தியின் பையனுக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் வாங்கித் தர முடிகிறதா, இல்லையா பார். இப்போதே போய்த் தந்தி அடிக்கிறேன்!”

“தந்தியை அடித்தாலும் சரி, கொன்றாலும் சரி, தபாலாபீசுக்கு இந்த வெய்யிலில் போக வேண்டாம். அம்ப்ரல்லா கூட இல்லை,” என்று சீதாப்பாட்டி அப்புசாமியைத் தடுத்துவிட்டாள்.

அப்புசாமி சிவனேயென்று ஈஸிசேரில் சாய்ந்தார்,.

வினாயகமூர்த்தி என்பவர் அப்புசாமியின் பூர்வீக கிராமத்தைச் சேர்ந்த ஒரு வியாபாரி. அப்புசாமியை ஆதி நாளிலிருந்து அறிந்தவர்.

அப்புசாமி, தரையில் கிடந்த கசங்கிய கடிதத்தை, காதலி எறிந்த கைக்குட்டையைப் பொறுக்குவதுபோலக் குனிந்து எடுத்தார். பிரித்துப் படிக்கலானார். மீண்டும் மீண்டும் படித்தார். படிக்கப் படிக்க அவர் தேகத்தில் ‘சியவனப் பிராசம்’ என்ற சித்த மருந்து சாப்பிட்டதுபோல உடம்பு சிலிர்த்தது.

வீனாயமூர்த்தி எழுதியிருந்தார்!

‘என் மதிப்புக்குரிய அப்புசாமிக்கு, அனேக கோடி நமஸ்காரங்கள்.

தங்களை நாங்கள் நினைக்காத நாள் இல்லை. உங்களால் எனக்கு ஒரு பெரிய ‘உதவி ஆக வேண்டியிருக்கிறது. தங்களைப் போன்றவர்களிடம் அதைப் ‘பெரிய உதவி’ என்று கூறுவது என் அறியாமையே. தாங்கள் மனம் வைத்து இந்த ஏழைக்கு இரங்கி, இந்த உதவியைச் செய்து என்னைக் காப்பாற்ற வேண்டும். உங்களுக்கும் பட்டணத்தில் தெரியாத பெரிய மனிதர்களோ, கல்லூரி பிரின்ஸிபால்களோ, மந்திரிகளோ இருப்பது அரிதிலும் அரிது. என் பையனுக்கு எப்படியாவது மெடிக்கல் காலேஜில் அட்மிஷன் வாங்கிக் கொடுத்து என் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பை உங்களிடம் விடுகிறேன்.’

குபீரென்று எழுந்துகொண்டார் அப்புசாமி.

‘வினாயகமூர்த்தி! என்னை நம்பின உன்னைக் கைவிடமாட்டேன். உன் பிள்ளைக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் வாங்கித்தர, இதோ, இப்போதே ஆவன செய்யப் புறப்படுகிறேன். என் வழியில் சூரியனே படுத்திருந்தாலும் அவன் தலையில் காலை வைத்துக் கடந்து செல்வேன்’ என்று மனத்துக்குள் சூளுரைத்தவராக, அங்கவஸ்திரத்தைப் போட்டுக்கொண்டு வெய்யிலில் அப்போதே கிளம்பினார்.

அப்புசாமிக்குப் பட்டணத்தில் அதிக பட்சம் தெரிந்த ஒரு பெரிய பிரமுகர் யாரேனும் உண்டென்றால் அது அவரோடு ஒருகாலத்தில் ஒன்றாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்புவரை படித்த திவான்பகதூர் ராஜலிங்கம்தான். அப்புசாமி அவரைப்போய்ப் பார்த்துவிடுவது என்று தீர்மானித்தார்.

திவான்பகதூரின் பங்களாவில் ‘நாய்கள்! நாய்கள்!” ஜாக்கிரதை ஜாக்கிரதை நாய்கள்! நாய்கள்! ஜாக்கிரதை! ஜாக்கிரதை!” என்று பலவிதமான எச்சரிக்கைப் பலகைகள் பலவித வர்ணங்களில் தொங்கிக் கொண்டிருந்தன.

அப்புசாமிக்கு மூக்குமேல் கண்ணாடி இருந்தது. ஆனால் யானை, எல். ஐ. சி. கட்டிடம், வைக்கோல்போர் இது மாதிரியான தினுசுகள்தான் அந்தக் கண்ணாடி வழியாகப் பார்த்தால் ஏதோ லேசுபாசாகத் தெரியும்.

சிறுசிறு எழுத்தில் தீட்டப்பட்டிருந்த அந்த அறிவிப்புப் பலகைகள் அவர் பார்வையில் படவில்லை.

அடுத்த கணம் “உ·ப்…உ·ப்…உ·ப்…” என்று ஓனாய்கள் மாதிரி இரண்டு மூன்று அல்சேஷன் நாய்கள் பாய்ந்து வந்தன, யார் முதலில் அப்புசாமியின் சதையைக் கிழிப்பது என்று ‘பெட்’ கட்டிக் கொண்ட மாதிரி.

வாட்டசாட்டமான ஓர் ஆள், ஓடோடி வந்தான்.

“யாரப்பா நீ?” என்றார் அப்புசாமி.

“நானா? நான்தான் சேஷன்! திவான் பகதூரய்யாவுக்கு பாடிகார்டு!”  

அப்புசாமி இருதலைக்கொள்ளி எறும்பாய்த் தவித்தார். வாசல் பக்கம் ஓடலாம் என்றால், அல்சேஷன். இந்தப் பக்கம் ஓடலாமென்றால் சாதா சேஷன்.

“ஆ, சீதே!” என்று அலறினார்…

“என்ன இது! பகல் தூக்கத்தில்கூட ‘பிராட்டில்’ செய்கிறீர்கள்!” என்று சீதாப்பாட்டியின் அதட்டும் குரல் கேட்டது.

‘அம்மாடி! இவ்வளவும் கனவுதானா?’ என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டார் அப்புசாமி.

அதே சமயம் வாசல் பக்கம், “அப்புசாமி சார் இருக்கிறாங்களா?” என்று குரல் கேட்டது.

சீதாப்பாட்டி, “யாரது? கம் இன்!” என்றாள்.

ஊரிலிருந்து நாலைந்து நாள் கழித்து வருவதாக இருந்த வினாயகமூர்த்தி, இப்போதே கண்ணெதிரில் நின்றார்.

வந்தவர் ஒரு கூடை நிறைய மாம்பழமும், ஒரு கூடை நிறைய ஆரஞ்சுப் பழமும் எடுத்து அப்புசாமியின் முன் வைத்தார்.

இடுப்பில் துண்டைக் கட்டிக்கொண்டு அப்புசாமியின் காலில் சாஷ்டாங்கமாக விழுந்தார்.

பின்னர், “ஹ! ஹ! என்னவோ நம்ம தோட்டத்திலே காய்த்தது…” என்றார்.

அப்புசாமி, சீதாப்பாட்டியைப் பெருமிதத்துடன் பார்த்தார். பிறகு, “சீதே எல்லாவற்றையும் கொண்டுபோய் உள்ளே வை. ஆமாம். பையனையும் கையோடு அழைத்து வருவதற்கென்ன? ஆமாம். அவன் பெயரென்ன, எனக்கு நினைவில்லையே!” என்றார்.

“உங்களை நினைக்காத நாளில்லை நாங்கள். உங்கள் திவ்யநாமமேதான் வைத்திருக்கிறோம் பையனுக்கு, எல்லாம் இனி உங்கள் பொறுப்பு,” என்ற வினாயகமூர்த்தி, குளிப்பதற்கான முஸ்தீபுகளில் இறங்கினார்.

“நான் போய் பிரின்ஸிபாலிடம் ஒரு வார்த்தை சொல்லி வருகிறேன்,” என்று வாக்கிங் ஸ்டிக்குடன் அப்புசாமி கிளம்பினார்.

பாட்டி அவரை வழி அனுப்ப வருவதுபோல வாசல் வரை வந்து, பல்லைக் கடித்தபடி, “நீங்கள் பார்க்கப் போகிற ·பெலோ யார்? டோன்ட் டெல் மி அக்ளி லைஸ்!” என்றாள்.

“நீ போய் ராத்திரி சமையலுக்கான வழியைப் பார். நான் யாரையோ பார்த்து எப்படியோ அட்மிஷன் பிடிக்கிறேன். உனக்கேகூட நான் மனசு வைத்தால் மெடிகல் காலேஜில் அட்மிஷன் வாங்கித்தர முடியுமாக்கும்!”

அப்புசாமி வாயால் பெரிதாகச் சொல்லிவிட்டாரே தவிர, யாரைப் போய்ப் பார்ப்பது என்று தெரியவில்லை. தன் ஆதி நாளைய சினேகிதர் திவான்பகதூர் ராஜலிங்கத்தைப் போய்ப் பார்க்கலாமா? ஆனால் அடுத்த கணமே பகல் கனவு ஞாபகத்துக்கு வந்தது.

திவான்பகதூர் வீட்டுப் பக்கம் போகாமல், ஒதுப்புறமான ஒரு பூங்காவில் இரண்டு மணி நேரம் உல்லாசமாக உட்கார்ந்து கொண்டிருந்துவிட்டு இருட்டுகிற வேளைக்கு வீடு திரும்பினார்.

சீதாப்பாட்டி, “காட் எ ஸீட்?” என்று வினவினாள்.

“ஸ்வீட்ஸா? யாருக்கு என்ன இழவு?” என்றார் எரிச்சலுடன் அப்புசாமி. “எங்கே வினாயகமூர்த்தி! நான் போன காரியம் பூஜ்யம். ஆனால் அவன்கிட்டே சொல்லி விடாதே. எப்படியாவது ஒரு அட்மிஷன் வாங்கிக் கொடுத்துவிட வேண்டும் அவன் பையனுக்கு!”

சீதாப்பாட்டி, “உங்கள் தலையில் ‘க்ளே’யினால் அழகாக எழுதியிருக்கிறது. அவதிப்படுகிறீர்கள். உங்கள் வினாயகமூர்த்தி மார்க்கெட்டுக்குப் போயிருக்கிறார், சரக்கு பிடிக்க! ஹி இஸ் எ பக்கா பிஸினஸ்மேன்!” என்றாள்.

“சும்மா வீட்டிலே பஞ்சு நூற்பானேன் பின்னே? ஏதோ பட்டணத்தைச் சுற்றிப் பார்க்கப் போயிருக்கிறான்,” என்றார் அப்புசாமி.  

சரியாக எட்டரை மணிக்கு வினாயகமூர்த்தி ஒரு ஆட்டோ ரிக்ஷாவில் ஏகப்பட்ட சாமான்களோடு வந்து இறங்கினார். பிளாஸ்குகள், குடைகள், ஜவுளி தினுசுகள்!

அப்புசாமி, “என்ன, கடைவீதியையே அள்ளிக் கொண்டு வந்து விட்டாய்?” என்றார்.

“எல்லாம் மாமா ஆசீர்வாதம். நம்ம கடைக்குச் சில சாமான் வாங்கிப் போட்டேன்.”

சீதாப்பாட்டி, பெரிய பிளாஸ்காக ஒன்றை எடுத்துப் பரிசீலனை செய்தாள். “என்ன ப்ரைஸ் அது ஹோல் ஸேலில்?” என்றாள்.

வினாயகமுர்த்தி, “அவ்வளவு அதிக லாபம் தருகிறார்களா? என்னவோ சில்லறை விலைக்கு ஒரு எட்டணா குறைவாக இருக்கும். இந்த பிளாஸ்க் வெளியே வாங்கினால் பன்னிரண்ட ரூபாய். எனக்குப் பதினொன்றரை ரூபாய் அடக்கம்!”

“இது எப்படி! அம்ப்ரல்லா?” சீதாப்பாட்டி குடையை விரித்துப் பிடித்துப் பார்த்தாள், பிறகு அப்புசாமியிடம், “ஷெல் வி பை ஒன்!” என்றாள்.

வினாயகமூர்த்தி, “என்ன பெரிய விலை. பதினைந்து ரூபாய். அவ்வளவுதான்” என்றார்.

“இது நைலக்ஸ் புடவை இல்லையோ? எப்படி இது ஸிக்ஸ் யார்ட்ஸ்?” என்று ஜவுளி தினுசை எடுத்துப் பார்த்தாள்.

அப்புசாமி, “கொல்லன் பட்டறையில் ஈக்கு என்ன வேலை? அதை ஏன் விசாரிக்கிறாய்?” என்றார்.

“மலிவாயிருந்தால் ஒரு பீஸ் வாங்கிப் போட்டால், கிடக்கிறது. அடிக்கடி, மாரேஜஸ், பர்த் டே ஸெலிப் ரேஷனுக்குப் போகிறோமே, கொடுக்க இருக்கட்டுமே?” ஒரு பீஸ் துணியை எடுத்து ஒருபுறம் வைத்துக்கொண்டாள்.

மறுநாள் வினாயகமூர்த்தி, சிமெண்ட் கண்ட்ரோல் ஆபீசரைப் பார்த்து வருவதாகச் சொல்லிக் காலையில் சாப்பிட்டுவிட்டுப் புறப்பட்டார்.

அப்புசாமி ‘அட்மிஷன்’ விஷயமாக ஒருவரைப் பார்க்கக் கிளம்பினார்.

எட்டு நாட்கள் ஓடின. வினாயகமூர்த்தி கிராமப்புறத்துப் பழக்கப்படி, சாப்பிட உட்கார்ந்தால் சம்பிரமமாக, காலே அரைக்கால் படிக்கு ஓர் அன்னம் குறையாமலும், இட்டிலி என்றால் பத்துக்குக் குறையாமலும் சாப்பிட்டுக் கொண்டு உற்சாகமாக இருந்தார். தினமும் தன் கடைக்காக விதவிதமான பொருள்கள் வாங்கி, அவர் சேர்த்தது ஒரு அறையில் பாதியை ஆக்கிரமித்துக் கொண்டது.

அப்புசாமி பாடுதான் பெரிய பாடாகிவிட்டது. கடைசியாக, மருத்துவக் கல்லூரி பியூனைப் போய்ப் பார்த்து ஏதாவது பக்ஷீஸ் கொடுப்பது, அவனும் அட்மிஷன் விஷயமாக ஒன்றும் செய்ய முடியாது என்று சொன்னால் திரும்பி வந்து தன் தோல்வியை ஒப்புக்கொண்டு விடுவது என்று கிளம்பினார்.  

சீதாப்பாட்டி வெடுக்கென்று அவர் கைத்தடியைப் பறித்துக் கொண்டார்.

“யூ ஆர் எ பர்·பெக்ட் ஜிரோ! நான் அப்போதே சொல்லவில்லை?” என்றாள்.

அப்புசாமி கோபத்துடன், “கிளம்புகிறபோதே அபசகுனம் மாதிரி தடுத்து விட்டாயே?” என்றார்.

“இனி அட்மிஷனும் வேண்டாம்! அவரைக்காவும் வேண்டாம். மெடிகல் காலேஜில் சேருகிற யோக்கியதையைப் பார்க்கவில்லை. அத்தனையும் ஹோக்ஸ்! ·பேக்! இதைப் பாருங்கள்! உங்கள் வினாயகமூர்த்தியின் அருமைக் குமாரனின் சர்டிபிகேட்டை!”

“கொண்டா இப்படி!” என்று கண்ணாடியைப் போட்டுக் கொண்டு அப்புசாமி பார்த்தார். அது ஒரு எஸ். எஸ். எல். சி. சர்டிபிகேட். சராசரி இருபதுக்கும் குறைவாக வாங்கியிருந்தான் வினாயகமூர்த்தியின் பையன்.

“எதற்கு இது?” என்றார் அப்புசாமி. “ஏது இது?”

“தலையடியில் போட்டுக் கொண்டு தூங்க! உங்கள் வினாயகமூர்த்தி பக்கா பிஸினஸ்மேன் என்றேன். கேட்டீர்களா? ஓட்டலில் கீட்டலில் தங்கினால் ரேஸ் சீஸனில் செலவு எக்கச் சக்கமாகுமென்று இப்படி ‘அட்மிஷன் ஆகிவிட்டார்! வேறென்ன? ஒரு வாரத்துக்கு அவன் சாப்பிட்டதற்கு மட்டும் ஓட்டலாயிருந்தால் நூறு ரூபாய் சார்ஜ் செய்வார்கள்!”

“நிஜமாகவா?” என்று பதறினார் அப்புசாமி. “எப்படி உனக்கு மூக்கில் வியர்த்தது இதெல்லாம்?”

“ஆரம்ப முதலே அவன் மேல் எனக்கு டெளட்தான். ஊருக்கு அவன் பிள்ளைக்கு ஒரு கடிதம் எழுதிப் போட்டேன், உன் அப்பா, உன் சர்டிபிகேட்டை உடனேயே அனுப்பச் சொன்னார் என்று. அவன் கடிதத்தையும் படியுங்கள்.”

அப்புசு¡மி படித்தார்: “அப்பா, நான்தான் படிப்பு வேண்டாம் என்று சொல்லிவிட்டேனே? மறுபடி எதற்கு என்னை எஸ். எஸ். எல். ஸி. சர்டிபிகேட் அனுப்பச் சொல்கிறே? மறுபடி மறுபடி என்னால் பெயில் ஆக முடியாது. நான் கடையைத்தான் பார்த்துக் கொள்வேன்!”

அப்புசாமி தன் எயிறுகளைக் கடித்தார்.

சீதாப்பாட்டி, “நமக்கொன்றும் நஷ்டமில்லை. டோன்ட் வொர்ரி! வினாயகமூர்த்தியிடமிருந்து குடை, பிளாஸ்க், ஒரு பீஸ் துணி இதெல்லாம் முன் ஜாக்கிரதையாக வாங்கிக் கொண்டிருக்கிறேன். எல்லாவற்றுக்கும் பாலன்ஸ் ஷீட் போட்டால் சரியாகப் போய்விடும். இன்றைக்கே அந்த ஆளை வேறு இடம் பார்க்கச் சொல்லுங்கள்!” என்றார்.

அப்புசாமி, “வரட்டும், வரட்டும்,” என்று கறுவியவாறு வாசலில் காத்திருந்தார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *