தொடு உணர்ச்சி!

1
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 21, 2019
பார்வையிட்டோர்: 34,100 
 

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளானதால், மணி, 7:00 ஆகியும் படுக்கையில் இருந்து எழுந்திருக்கவில்லை, செல்வனும், கவிதாவும்!

தாலுகா அலுவலகத்தில், கிளார்க்காக பணிபுரிகிறான் செல்வன். அவன் மனைவி கவிதா, கிறிஸ்துவ மேனிலைப் பள்ளியில், பிளஸ் 2 ஆசிரியையாக பணிபுரிகிறாள்.

இருவருக்கும் இடையே படுத்திருந்த அவர்களின், ஐந்து வயது மகள் ஸ்பூர்த்தி, ”அம்மா… ஒன் பாத் ரூம் வருது,” என்றாள்.

”அம்மாப்பா துக்கத்தை கெடுக்காதே; நீயே, பாத்ரூமுக்கு போய்ட்டு வந்திரு,” என்றாள் கவிதா.

தலையாட்டியபடி, படுக்கையிலிருந்து உருண்டு எழுந்து, உள்ளாடையை கழற்றி, குளியலறைக்கு ஓடினாள். சிறுநீர் கழித்த பின், பல் துலக்க ஆரம்பித்தாள்.

வாய் கொப்பளித்து, ”அம்மா… நானே குளிக்கவா…” என்று கேட்டாள்.

”என்னை தொந்தரவு செய்யாம, எது வேணும்ன்னாலும் செய்…”

ஜான்சன் பேபி சோப் உபயோகித்து குளித்தாள்; பூத்துவாலை எடுத்து, உடல் ஈரத்தை ஒற்றிய பின், உள்ளாடை அணிந்து, குட்டை பாவாடை, மேற்சட்டை அணிந்து கொண்டாள்.

குளிர்சாதன பெட்டியை திறந்து, பிரட்டும், வெண்ணெயும் எடுத்தாள்.

பிரட் ஸ்லைசில், வெண்ணெய் தடவி தின்று, தண்ணீர் குடித்தவள், தூங்கிக் கொண்டிருக்கும் பெற்றோரை பார்த்து, தாயின் அருகில் சென்று, மெதுவாக, ”அம்மா…” என்றாள்.

பதில் இல்லை.

குரல் உயர்த்தி, ”அம்மா…”என்றாள்.

”என்ன…”

”வெளியில விளையாடப் போறேன்.”

”விளையாடிட்டு, ஒரு மணி நேரத்ல வீடு திரும்பிடனும்; விளையாட ரோட்டுக்கு போகக் கூடாது; யாரையும் அடிச்சிட்டோ, அடி வாங்கிட்டோ வரக் கூடாது…”

”சரிம்மா…”

காலணியை அணிந்து, விளையாட கிளம்பியவள், ஏற்கனவே, விளையாடிக் கொண்டிருந்த தெரு சிறுவர், சிறுமியருடன் இணைந்தாள்.

பத்து வயது சிறுவன் விக்னேஷ், ‘பேட்’ செய்ய, ‘பீல்டிங்’ செய்தாள், ஸ்பூர்த்தி.

பந்தை தூக்கி அடித்தான், விக்னேஷ். பந்து ஒரு வீட்டுக்குள் போய் விழுந்தது. பந்தை எடுத்து வர அனைவரும் தயங்க, தைரியமாய் வீட்டின் வெளிக்கேட்டை திறந்து, உள்ளே போனாள், ஸ்பூர்த்தி.

அவள் வீட்டுக்குள் போய், 10 நிமிடங்கள் ஆகியும், திரும்பி வரவில்லை. சிறுவர், சிறுமியர் திகைத்து, வீட்டு வெளிவாசலில் நின்றனர்.

”விக்னேஷ்… நீ உள்ள போய் பார்…”

”ஏன் நீங்க யாரும் போய் பாக்க மாட்டீங்களா…” என்று அவர்களுக்குள் வாதம் ஏற்பட்டிருந்த நிலையில், தலைதெறிக்க ஓடி வந்தாள் ஸ்பூர்த்தி.

அவளை துரத்தியபடி வந்தான், அவ்வீட்டில் குடியிருக்கும் சிங்கமுத்து. அரசுக் கல்லூரியில், துறைத் தலைவராக பணிபுரிகிறான். அவனுக்கும், அவனது மனைவிக்கும் கருத்து வேற்றுமை ஏற்பட்டு, தன் அம்மா வீட்டுக்கு போய் விட்டாள், மனைவி.

”சனியனே… குட்டிப்பிசாசே… ரத்தவெறி பிடித்த காட்டேரியே… வீட்ல கறிசோறு போடலைன்னா, மனுஷக்கறியா திம்ப…” என்று திட்டியபடியே விரட்டி வந்தான், சிங்கமுத்து.

அவன் கையில், சிக்காமல் அங்கும், இங்கும் ஓடி, தன் வீட்டுக்குள் புகுந்து, கதவை தாளிட்டாள் ஸ்பூர்த்தி.

தடாலடி காலடி சத்தம் கேட்டு, செல்வனும், கவிதாவும் தலை உயர்த்தி,

”என்ன செய்துட்டு இப்படி தலைதெறிக்க ஓடி வர்ற…” என்றாள் கவிதா.

அப்போது, வீட்டு கதவு வேகமாக தட்டப்படும் ஓசையுடன், ‘ஸ்பூர்த்திம்மா… கதவை திறங்க…’ என்ற தெருக்காரர்களின் சத்தம் கேட்டது.

மிரண்டு விழித்தாள் ஸ்பூர்த்தி.

எழுந்து போய், கதவை திறந்தான், செல்வன். இடது புறங்கையிலிருந்து, ரத்தம் சொட்டச் சொட்ட நின்றிருந்தான், சிங்கமுத்து. கண்களில், கொலைவெறி மின்ன, ”எங்கே அந்த குட்டி சாத்தான்… நாலு போடு போட்டா தான் என் மனசு ஆறும்,” என்றான்.

”எதுக்கு அவள அடிக்கணும்ன்னு சொல்றீங்க…” என்றான், செல்வன்.

”சின்னப் புள்ளைங்க தெருவுல கிரிக்கெட் விளையாடிட்டு இருந்த போது, பந்து, என் வீட்டுக்குள்ள விழுந்திருச்சு. அதை எடுத்து வச்சுருந்தேன். அப்ப, இந்த ஸ்பூர்த்தி சனியன் வந்து, ‘யோவ்… எங்க பந்தை குடுய்யா’ன்னு மரியாதை இல்லாம கேட்டுச்சு.

‘இனிம உங்க வீட்டுக்குள்ள பந்தடிக்க மாட்டோம்; எங்களை மன்னிச்சிருங்க’ன்னு சொல்லிட்டு, பந்தை வாங்கிட்டு போகச் சொன்னேன். உடனே, என் மீது பாய்ந்து, கையை கடிச்சு, பந்தை பறிச்சிட்டு போய்ட்டா… ஒரு பொம்பளை பிள்ளைய, ரத்த வெறி பிடித்த, ரவுடியாவா வளப்பீங்க… குட்டி ட்ராகுலா!”

”ஏன் அங்கிள் கைய கடிச்ச…” ஸ்பூர்த்தியை அடிக்க, கை ஓங்கினாள், கவிதா.

‘அடியாத மாடு படியாது; முதுகுல நாலு போடு போடுங்க…’ என்றனர், தெருக்காரர்கள்.

தன் மேல் அடி விழும் முன், ”அம்மா.. அந்தாள் பொய் சொல்றான். பந்தை எடுக்க, இந்தாள் வீட்டுக்குள்ள போனேன். அப்ப, இவன் வெறும் லுங்கியோட இருந்தான். என்னை பாத்ததும், ‘ஏய் குட்டி ஹன்சிகா, வா வா’ன்னான்.

‘அங்கிள் எங்க பந்தை குடுங்க’ன்னு கேட்டேன். ‘பந்துக்கென்ன அவசரம்… உனக்கு, சாக்லேட்டும், பிஸ்கெட்டும் வாங்கி வச்சிருக்கேன்; தின்னுட்டு பொறுமையா போ’ன்னு சொன்னான்.

‘வெளியாள் கிட்ட சாக்லேட் வாங்கி தின்ன மாட்டேன்; பந்தை கொடுங்க நான் போகணும்’ன்னு சொன்னேன். உடனே வேகமாக வந்து என்னை தூக்கி, என் கன்னத்துல முத்தம் கொடுத்தான். என் பிரைவேட் பார்ட்ஸ்களில், ‘பேட் டச்’ செய்தான். அதனால, இவன் கையை கடிச்சிட்டு, தப்பிச்சு வந்திட்டேன், ” என்று திக்கி திக்கி கூறினாள்.

இதைக் கேட்டதும் தெருக்காரர்கள் ஸ்தம்பித்தனர்.

”பிரைவேட் பார்ட்ஸ், பேட் டச் இந்த வார்த்தையெல்லாம், உனக்கு யார் சொல்லிக் குடுத்தா?” என்று கேட்டாள், கூட்டத்தில் ஒரு பெண்.

”எங்க டீச்சர் தான், எது எது பிரைவேட் பார்ட்ஸ், குட் டச், பேட் டச்ன்னா என்னான்னு சொல்லிக் குடுத்தாங்க. சொந்தக்காரங்க, பிரண்ட்ஸ், ஆம்பிளைக யாராக இருந்தாலும், அவங்க, நம்மள எப்படி தொடுறாங்கன்னு ஆராஞ்சு பாக்கணும்ன்னு சொன்னாங்க.

‘பேட்டச்சுக்கு ஒருபோதும் உடன்படக் கூடாது; அவங்க கிட்ட இருந்து நம்மள காப்பத்திக்க, கடிக்கலாம்’ன்னு அட்வைஸ் செய்தாங்க,” என்றாள்.

கோபத்துடன், ‘என்னய்யா… இந்த பாப்பா சொல்றதெல்லாம் உண்மையா…’ என்று கேட்டனர், தெருவாசிகள்.

”அய்யய்யோ… அடிக்கு பயந்து, அந்தப் பாப்பா பொய் சொல்லுது; அது, எனக்கு மக போல…” என்றான், சிங்கமுத்து.

‘ஒன் மக கிட்ட, இப்டி தான் மிருகத்தனமா நடந்துப்பியா…மானங்கெட்டவனே…’ என்று கூறி, சிங்கமுத்துவை அடித்து துவைத்தனர்; சட்டையை கிழித்து, கைகளை பின்னுக்கு முறுக்கி கட்டினர்.

‘அடிச்ச அடியே தண்டனை தான்; போலீஸ்ல புகாரெல்லாம் கொடுக்க வேணாம்…’ என்று தெருக்காரர்கள் கூறிய போது, கவிதா வேகமாய் மறுத்து, ”இவனுக்கு தண்டனை வாங்கிக் குடுத்தா தான், என் மனசு ஆறும்,” என்று கூற, சிங்கமுத்துவை போலீஸ் ஸ்டேஷனுக்கு இழுத்துச் சென்றனர்.

விஷயத்தை சொன்னதும், தன் பங்குக்கு நாலு அறை அறைந்தார், பெண் காவல் துறை ஆய்வாளர். ஸ்பூர்த்தியை தனியே அமர வைத்து, வாக்குமூலம் பெற்றனர். முதல் தகவல் அறிக்கை தயாரிக்கப்பட்டது.

மாஜிஸ்டிரேட்டிடம் அழைத்து செல்லப்பட்டு, 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டான், சிங்கமுத்து.

பத்திரிகைகளில், ஸ்பூர்த்தியின் பெயர் மாற்றப்பட்டு, செய்திகள் வெளியாகின. பொதுமக்களும், மீடியாக்களும் ஸ்பூர்த்தியின் துணிச்சலை வெகுவாக பாராட்டினர்.

அதன் பின், பள்ளிகளில், ‘பேட் டச், குட் டச்’ எது எது என்பதை, குழந்தைகள், ‘ரைம்சாக’ பாடினர்.

நீதிமன்றத்தில், எட்டு மாதங்கள் வழக்கு நடந்தது.

சிங்கமுத்து சார்பாக ஆஜராக, உள்ளூர் வக்கீல்கள் வர மறுத்தனர்; வெளியூர் வக்கீல், அவன் சார்பாக ஆஜரானார்.

அன்று பெண் நீதிபதி முன் ஆஜராகி, நடந்ததை உணர்ச்சிப் பூர்வமாய் விவரித்தாள் ஸ்பூர்த்தி.

பெண் நீதிபதி தீர்ப்பை வாசிக்க ஆரம்பித்தாள்… ”பாலியல் வன்முறை, பருவமடைந்த பெண்டிர் மீதோ, சிறுமியரிடமோ பிரயோகிக்கப் பட்டால், அந்த காட்டுமிராண்டித் தனத்தை கடுமையாக தண்டிக்க வேண்டும். குற்றவாளிகள் மீது சிறிதும், ஈவு, இரக்கம் காட்டக் கூடாது. குழந்தைகளை, பாலியல் வன்முறைகளிலிருந்து பாதுகாக்கும் சிறப்பு சட்டம், 2012 பிரிவு, 11ன் படி, குற்றவாளிக்கு, ஐந்து ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், 50,000 ரூபாய் அபராதமும் விதிக்கிறேன்; அபராதம் கட்ட தவறினால், மேலும், ஆறு மாதம் தண்டனை அனுபவிக்க வேண்டும்.

”இவ்வழக்கு விசாரணைக்கு வந்த, இந்த எட்டு மாதங்களில், பாலியல் வன்முறையில் ஈடுபட்ட, 14 பேர், சிறுமிகளால் கடிபட்டுள்ளனர். ஸ்பூர்த்தியின் துணிச்சலான நடவடிக்கை, நாட்டின் அனைத்து சிறுமிகளையும், ‘பாசிட்டிவ்’வாக தாக்கியுள்ளது. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை, அறவே இல்லாத காலம் விரைவில் வரும். ஸ்பூர்த்திக்கு வாழ்த்துகள்!”

வெற்றிநடை போட்டபடி, நீதிமன்றம் வெளிவாசலுக்கு நடந்து வரும் ஸ்பூர்த்தியின் கன்னங்களை கிள்ளி, ”சூப்பர் பாப்பா!” என, பாராட்டினான் ஒரு மீடியா கேமராமேன்.

கிள்ளிய கைகளை தட்டி, ”தொடாம பாராட்டு…” என, கண்டிப்பான குரலில் ஓங்கி அறிவித்தாள் ஸ்பூர்த்தி!

– செப்டம்பர் 2016

Print Friendly, PDF & Email

1 thought on “தொடு உணர்ச்சி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *