கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: September 18, 2023
பார்வையிட்டோர்: 3,732 
 
 

அலை 1

சுனாமிப் பேரலையின் கோரத் தாண்டவம் குடத்தனை தாளையடிப் பிரதேசங்களை முற்று முழுதாக உருக்குலைத்திருந்தது. இடிந்த கட்டடச் சித்தைவுகள், முறிந்து விழுந்த மரங்கள், எங்கும் பரந்து கிடக்கும் தட்டுமுட்டுச் சாமான்கள் என்று அப்பிரதேசமே மாநகரசபையின் குப்பைத்தொட்டி போலப் பொலிவிழந்து காட்சி தந்தது.

நிவாரணப் பணியாளரின் கடைக்கண் இன்னும் சரியாக அந்தப்பிரதேசத்தில் விழவில்லைப் போலும். குடத்தனை அரசினர் கலவன் பாடசாலை இன்று அகதி முகாமாக மாறி இருந்தது. அதில் சிறுவர்கள் பெண்கள் முதியவர்கள் என்று முன்னூறு பேர் அளவில் அடைக்கலம் தேடியிருந்தார்கள். தொடர்ச்சியான போருக்கும் பொருளாதாரப் பிரச்சனைகளுக்கும் முகம் கொடுத்து வந்த அவர்கள், இயற்கையின் கோரத்தைக் கண்டு கிலி கொண்டு அந்த அதிர்ச்சியில் இருந்து விடுபடாதவர்களாய் நடைப்பிணங்களாய் உலவிக் கொண்டிருந்தார்கள்.

அரசினர் பாடசாலைக்கு அண்மையில் இருந்த பாலர்பள்ளி இன்று தற்காலிக மருத்துவ முகாமாக மாற்றப்பட்டிருந்தது.

உடல் வருத்தங்களுக்கு உள்ளானவர்களுக்கும் உளப்பாதிப்புக்கு உள்ளாகி மீளமுடியாது தவிப்பவர்களுக்கும் உள்நாட்டு வெளிநாட்டு மருத்துவர்களும், மருத்துவத் தொண்டர்களும் சிகிச்சையும் ஆலோசனையும் வழங்கிக் கொண்டிருந்தனர்.

உடல் உபாதைகளுக்கு உட்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை உடன் பலனைத் தரலாம். ஆனால் உள நெருக்குவாரத்துக்கு உள்ளானவர்கள் விரைவில் அதிலிருந்து விடுபடுவார்களா…? உள்ளத்தை அரிக்கும் புற்று நோயாக மரணத்தின் எல்லைக்குப் போய்விடுவார்களா…? பயங்கரமான கேள்வி ஒன்று, மருத்துவரை மட்டுமல்ல சமூகப் பணியாளர் ஒவ்வொருவரது உள்ளத்திலும் எழுந்து ஆட்டி வைத்தது.

மருத்துவ முகாமின் ஒரு மூலையில் மரியம்மா சுருண்டு படுத்திருந்தாள். அவள் கண்கள் மட்டும் தூக்கத்தைத் தொலைத்தனவாய் அங்கும் இங்கும் அலைபாய்ந்து கொண்டிருந்தன.அந்தக் கண்களில் நவரசநாயகியர் காட்டும் இரசபாவங்கள் பல கணந்தோறும் தோன்றுவதும் மறைந்து மீண்டும் மாறுவதுமாய் விந்தைகாட்டிக் கொண்டிருந்தன.அவள் உள்ளத்தில் இருந்து எழ விரும்பும் ஆயிரம் உணர்ச்சிகள் பிரமைகளாய் அலையடித்துக் கொண்டிருந்தன. அந்தப் பிரமைகளை உண்மைகளாய்க் கருதி அவள் தனக்குள் கதைத்துக் கொண்டிருந்தாள்…இல்லை… அவள் மன அந்தரங்கத்தில் அவளது உறவுகள் தோன்றிக் கொண்டிருந்தனர். அவர்கள் வெளிப்படுத்தும் உணர்வுகளுக்கு இணையாக மரியம்மாவும் தனது உணர்வுகளுக்குச் செயல் வடிவம் கொடுத்துக் கொண்டிருந்தாள்.

அலை 2

“மரியம்மா…மரியம்மா…”

கொஞ்சலாக சூசை அவன் மனைவியை அழைக்கிறான். குடிசையின் நீக்கலுக்கிடையே நிலவொளி மரியம்மாவின் முகத்தில் பட்டுத் தெறிக்கிறது. நிலவொளியில் கையால் கணவன் தன்னைத் துலாவுவது மரியம்மாவுக்கு நன்கு தெரிகிறது. அவள் மெல்லத் தனக்குள் சிரித்துக் கொள்கிறாள்.சற்றுப் புரண்டு படுத்தாலும் மௌனமே அவள் பதிலாகிறது.

“மரியம்மா…மரியம்மா…”

இம்முறை சூசையின் குரல் சற்று உரத்து ஒலிக்கிறது.

“இப்ப உமக்கு என்ன வேணும்…?”

சிணுக்கமாக அவள் குரல்…

“இப்படிக் கிட்ட வாவன்…”சூசை அன்பொழுக வேண்டுகிறான்.

“வயதுவந்த பிள்ளைகள் கிடக்குதுகள். உமக்கு விளையாட்டுத்தான்…” சற்றுக் கண்டிப்பான குரலில் மரியம்மாவின் மறுப்பு சூசையை உலுக்குகிறது.

“ஒரே கால் உளைவு… பிடிச்சுவிடு எண்டு கூப்பிட்டா பிகு பண்ணுறாய்”

அவன் கோபம் மனைவி மீதா…? அல்லது அந்தரங்கங்கங்ளைக் கூடப் பகிர்ந்து கொள்ள முடியாத… பேணமுடியாத தங்கள் பொருளாதரத்தின் மீதா…?

இவர்கள் உரையாடல் எற்படுத்திய குழப்பமோ அல்லது பசி மயக்கமோ இவர்களின் குழந்தை யேசுதாசனின் நித்திரையைக் குலைத்திருக்க வேண்டும். அவன் ஏணையில் நெளிந்தபடி குரல் எழுப்பத் தொடங்கினான்.

மரியம்மா சட்டென்று எழும்புகிறாள். குழந்தையை அள்ளி எடுத்து சமாதானப்படுத்த முயன்றவளாய் அவனை அணைத்துக் கொள்கிறாள்.

அதிகம் பால் சுரக்கா விட்டாலும் அந்தப் பரிசத்தின் மென்மையில் குழந்தை மீண்டும் துயிலில் ஆழ்ந்து போகிறது.

அவனை ஏணையில் கிடத்தி சற்று நேரம் ஆட்டிய மரியம்மாவிடம் சொற்பம் இருந்த நித்திரையும் ஒடிவிட அவள் தன் படுக்கையில் குந்தி இருக்கிறாள்.

அவளுக்கு அருகில் கபரி ஆழ்ந்த நித்திரையில் கிடக்கிறான். அந்த நிலையிலும் அவன் முகத்தில் பசிக் களைப்புத் தென்படுவதாக உணர்கிறாள் மரியம்மா.

நேற்றுத் தொழிலுக்குச் சென்று களைப்போடு திரும்பிய கபரி பெயருக்கு அள்ளி இரண்டு வாய் சாப்பிட்டுப் படுத்தது மரியம்மாவுக்கு நினைவு வருகிறது.

அவனுக்காகப் பொரித்த முட்டையும் அவித்த பிட்டும் அப்படியே கிடக்கிறது. தாய் மனம் பொறுக்கவில்லை…

அவனை உலுப்பி எழுப்பிகிறாள். “கபரி…கபரி…எழும்படா மொனை…எழும்படா… உனக்குப் பசி தாங்காதில்லே…எழும்பு மகன்…”

மரியம்மா தன்னையும் அறியாது பக்கத்தில் படுத்திருந்த வள்ளியம்மையை உலுப்பி எழுப்புகிறாள்.

உடல் மன உளைச்சல்களுக்கு உள்ளாகி நித்திரையின்றிப் புரண்டுவிட்டு அப்பொழுதுதான் சற்றுக் கண்ணயர்ந்த வள்ளிக்கு எரிச்சல் எரிச்சலாக வருகிறது.

“என்ன மரியம்மா உனக்கென்னவும் பயித்தியமே.. “எரிந்து விழுந்தவள்…தன் செயலுக்காகத் தன்னையே கடிந்து கொள்கிறாள்.

மரியம்மாவின் நடவடிக்கைகள் கடந்த சில நாட்களாகவே இயல்பாக இல்லை என்பது அவளுக்குத் தெரியும். முகாமுக்கு வரும் உளவளத் துணையாளர்களும் அதனை அவதானித்து அவளுடன் நேரத்தைச் செலவிடுகிறார்கள்.

இந்த வேளையில் மரியம்மாவுக்கு ஆறுதலாக இருப்பது தனது கடமை என்று எண்ணமிடுகிறாள் வள்ளி.

மரியம்மா பாவம். அவள் வாழ்க்கையில்தான் எத்தனை பிரச்சினைகள்..?எத்தனை இழப்புக்கள்..? நீண்ட பெருமூச்சென்று வள்ளியிடம் தோன்றி மறைகிறது…

அலை 3

அதிகாலை…

நிலவு மேலைக் கடலில் மெல்ல மெல்லச் சரிகிறது. நிலவு தந்த போதையால் கடல் அலை நிலமகளைத் தாகத்துடன் தாவி அணைக்கிறது. குடத்தனைப் பிரதேச வீடுகள் சிலவற்றில் மட்டும் விளக்கொளி வானத்திடையே சில நட்சத்திரங்கள் போன்ற பிரமையை எற்படுத்துகின்றன.

அதிகாலை… ….மணி மூன்றைத் தொடுகிறது. கடல் தொழிலுக்கான ஆயத்தங்கள் அயல் வீடுகளில் தொடங்கி விட்டன.

சூசைக்கு நித்திரை கலைந்து விட்டது. ஆனாலும் உடல் அலுப்பு எழும்புவதற்குத் தடையாக இருக்கிறது. அவன் புரண்டு படுக்கிறான்.

மரியம்மாவுக்கு விழிப்பு தட்டி விடுகிறது. அருகில் கபரி, மேரி, ரெமி உட்பட பிள்ளைகள் ஆழ்ந்த நித்திரையில் கிடக்கிறார்கள். மரியம்மா அரக்கப்பரக்க எழும்பி ,கணவனைப் பார்க்கிறாள்.

“இந்த மனுசன் விடிஞ்சது கூடத் தெரியாமல் இன்னும் குறட்டை விடுது.” தனக்குள் முணுமுணுத்தபடி கணவனைத் தட்டி எழுப்புகிறாள்.

“எழும்புமன் கண்டறியாத நித்திரை… அங்க பாரும் டானியல் தொழிலுக்கு வெளிக்கிட்டிட்டுது… இப்ப இங்க வந்து சத்தம் போடப் போகுது..”

“கபரியேல் எழும்பிட்டானே…?”சூசையின் கொட்டாவியிடையே வினா ஒன்றும் தொக்கி நிற்கிறது.

“கபரி….எழும்படாமோனை… தொழிலுக்கு நேரமாச்சுதில்லை…”மகனை எழுப்பி விட்டபோதும் மேரியை எழுப்புவது லேசான காரியம் இல்லை என்பது மரியம்மாவுக்குத் தெரியும். இவள் பெட்டைக்கு இனி தண்ணி ஊத்தினாலும் எழும்ப மாட்டாள்… “எடி மேரி எழும்படி. கொப்பரும் கொண்ணரும் வெளிக்கிட வேணுமில்லை…”

மேரி முனகியபடி புரண்டு படுக்கிறாள்.

“அதுக்கு நான் என்ன செய்யிறது…நீ எல்லாத்தையும் செய்யன்…”

எரிச்சலுடன் பதில் வருகிறது மேரியிடம்.

“நான் எல்லாத்தையும் செய்யிறது எண்டால் பிள்ளையள் எண்டு நீங்கள் ஏன் இருக்க வேணும். கருவாடு காயப் போட்டு நேற்றைக்கு முழுக்க முதுகு வலியில கிடக்கிறன். கதையை விட்டிட்டு எழும்பி பல்லை விளக்கிட்டு அடுப்ப மூட்டு பிள்ளை.”

“ஒழுங்கா நித்திரையும் கொள்ள விடாதுகள்.” புறுபுறுத்தபடி அரைமனதுடன் எழும்பி கிணற்றடி நோக்கிச் செல்கிறாள் மேரி. இந்த ஆர்ப்பாட்டத்தில் குழந்தை யேசுதாசன் எழும்பியழவே, அவனைச் சமாதானப்படுத்த ஒரு தாலாட்டுப் பாடலை முணுமுணுத்தபடி ஏணையை ஆட்டுகிறாள் மரியம்மா.

மேரி முகம் கால் கழுவிவிட்டு அடுப்பை மூட்டவே அவள் வேலைகளுடன் மரியம்மாவும் இணைந்து கொள்கிறாள்.

“நான் புட்டுக் கொத்திறன் பிள்ளை. நீராலை பொரி. நேற்றையான் நண்டுக் குழம்பைக் கொதிக்க வைத்துக் கொடுத்தால் கொப்பர் புறுபுறுக்காமல் சாப்பிடுவார்.”

மரியம்மா சொல்லியபடியே பேசினை எடுத்து அதற்குள் பிட்டு மாவைக் கொட்டுகிறாள். காலைக் கடனை முடித்துக் கொண்டு வந்த கபரி மரியம்மாவின் பக்கத்தில் குந்தியபடி மேரி கொடுத்த தேத்தண்ணியை உறிஞ்சுகிறான்.

“அம்மோய் படுவான் கரை ராசனும் இண்டைக்கு எங்களோடை வாரான். ஒரு பார்சலைக் கூடக் கட்டணை.”

ராசன் என்ற பெயர் மேரியின் காதில் தேன் எனப் பாய்கிறது. திடீரெனப் பாய்ந்த மின்சாரத்தால் உடல் சூடேர காது மடல்கள் சிவந்து போகின்றன. அவள் முகம் மலர்ந்து புதுப்பொலிவு பெறுகிறது.

“அம்மோய் அப்ப முட்டை ரெண்டும் பொரிச்சு வைப்பமே.” தன்னிச்சையாக அவளிடமிருந்து அந்தக் கேள்வி கிளம்பிகிறது.

“முட்டையென்ன கோழிக்கறி கூட நீ வைப்பையெண்டு எனக்குத் தெரியும்.” நமிட்டுச் சிரிப்புடன் கபரி சொல்லவும் அவனைப் பார்த்து முறைக்கிறாள் மேரி.

“இப்ப முட்டைக்கு நான் எங்க போறது? பேசாமல் இதுகளை வைச்சுச் சமாளிப்பம்.” புட்டுக் கொத்துவதிலேயே மரியம்மாவின் கவனம் செல்கிறது.

“கதைகண்ட இடம் இவனுக்கு கைலாயம். கபரி! வலையில சின்னப் பீத்தல் இருக்குதில்லை… அதைச் சரிப்படுத்தினியே? இண்டைக்கு காத்தமுத்துச் சம்மட்டியிண்டை மெசின் போட்டிலை கடலுக்குப் போறமெண்டு தெரியும்தானே…? அவன் டேவிட் ஒரு கொதியன். நடுக்கடலிலை நிண்டு கத்துவன்.”

“ஒமன அப்பு ராசனும் நானும் அதை நல்லாச் சரிக்கட்டிப் போட்டம். நீ யோசியாதை.”

மகனின் பதிலில் திருப்தி கண்டவனாய் மகள் கொடுத்த தேத்தண்ணியை வாங்கிக் கொண்டு வெளியே சூசை வரவும் ,அவனை அழைத்துக் கொண்டு டானியல் படலையைத் திறந்து கொண்டு உள்ளே வரவும் சரியாக இருக்கிறது.

“வா டானியல் அஞ்சு நிமிசத்தில நாங்கள் ரெடியாகிடுவம்.”

குடிசை வாசலில் போடப்பட்ட வாங்கில் இருந்து கொண்டு டானியல் இருக்க இடம் தருகிறான் சூசை. டானியல் சாவகாசமாய் அமர்ந்தபடி பீடியொன்றைப் பத்தவைத்துப் புகையை உள் இழுக்கிறான். அநதப் பனி படர்ந்த காலைப் பொழுதுக்கு அது இதம் அளிக்கிறது. அது தந்த உற்சாகத்தில் இருவரும் பலதும் பத்தும் கதைக்கிறார்கள்.

“என்ன சூசை நேற்றைக்குப் பேப்பர் பாத்தனியே?” திடீரென இப்படியொரு கேள்வி டானியலிடமிருந்து எழுகிறது.

“பேப்பரோ…? அதுகளை பாக்க வாசிக்க எனக்கு எங்க நேரம்…என்னவாம் போட்டிருக்குது.”

“கடலில் கடற் புலியிண்டை பயிற்சி நடக்குதெண்டு நேவியிண்ட கடற்கட்டுபாடு மேலும் அதிகரிக்கப் போகுதாம்…எண்டு போட்டிருக்குது.”

“இது போல நியூசுகள் நெடுக வாரதுதானே…இதுகளைப் பார்த்தா தொழில் செய்யேலுமே?”

சூசையின் குரலில் ஒருவித அலட்சியம். வாழ்க்கையை அதன் போக்கில் எதிர் கொள்ளும் மனம் அவனிடம் கைவந்திருந்தது.

“இல்லை……. எங்கட போட்டிலையும் மூண்டு இளந்தாரிகள் வாராங்களில்ல. அதுதான் யோசனையாக்கிடக்குது…”

டானியல் சொன்னவை சூசையைப் பெரிதும் பாதிக்கவில்லைதான். அனால் குடிசையினுள் வேலையாக இருந்தாலும் இவர்கள் கதைப்பதைக் காது கொடுத்துக் கேட்டுக் கொண்டிருந்த மரியம்மாவால் சும்மா இருக்க முடியவில்லை. அவள் வெளியே வருகிறாள்.

“என்ன அண்ணை அப்ப இவன் கபரி கடலுக்கு வாரதில எதும் பிரச்சினை வருமோ…?” கலக்கம் அவள் கேள்வியில் ஊடுருவி நிற்கிறது.

“இவள் பாவிக்கு எந்த நேரமும் பொல்லாத பயம். எது நடக்க இருக்கிறதோ அதுதான் நடக்கும். இதுகளுக்குப் பயந்தால் வாழமுடியுமோ…?”

“நீர் தத்துவம் பேசும். உங்களைக் கடலுக்கு அனுப்பிப் போட்டு வயித்திலை நெருப்பைக் கட்டின மாதிரி அவதிப்படுகிறது நாங்களில்லோ…? முந்திதான் கடல் கொந்தளிப்பு சூறாவளி எண்டா இப்ப சூரப்படையே கடலுக்க…”

உணர்ச்சி வேகத்தில் கண்களில் திரையிட்ட கண்ணீரை முந்தாணையால் துடைத்தபடி வேலையைத் தொடர உள்ளே செல்கிறாள் மரியம்மா. தாய்மையின் தவிப்பை சூசையோ டானியலோ உணராமலில்லை. ஆனால் அவர்களால்தான் என்ன செய்ய முடியும்..?

அப்பொழுது ராசன் அங்கு வரவே “கபரி! கபரி!! ராசன் வந்திட்டுது. போய் வலையை எடுத்து ஆயத்தப்படுத்து மோனை.” உட்பக்கம் பார்த்து சூசை குரல் கொடுக்கிறான்.

கபரி குடிசையில் இருந்து வெளியே வர மேரியும் வாசல் கதவருகில் வந்து எட்டி ஆர்வமாக இராசனைப் பார்க்கிறாள். இருவரின் முகங்களிலும் புன்னகை… மேரி சட்டென தலையைக் குனிந்து கொள்ள அதனை அவதானித்தவனாய் “காதல்…மழையே காதல்…மழையே” என்று பாடிக் கொண்டு கபரி ராசனை நோக்கி வருகிறான். இவர்கள் இருவரும் தங்களுக்காகவே அந்தப் பாட்டுப் பாடப்பட்டது என்பதை உணர்ந்தவர்களாய் வெட்கத்துடன் மீண்டும் புன்னகைத்துக் கொள்கிறார்கள்.

சற்றுத் தயங்கி நின்ற ராசனின் தோள்களைப் பற்றி அணைத்தபடி வலையை நோக்கி கபரி நடை போடுகிறான்.

“மேரி உங்க என்ன எமலாந்திக் கொண்டு நிக்கிறா… தண்ணி எடுத்துப் போத்தலில நிரப்பிட்டியோ..?”

மரியம்மாவின் அதட்டலால் தடுமாறியவளாய் “ஒமனை… இல்ல… இப்ப… எடுத்து வாரன்.” உளறுகிறாள் மேரி. வெளியில் சென்று ராசனை வடிவாகப்

பார்க்கச் சந்தர்ப்பம் கிடைத்ததற்காக மகிழ்ந்தவளாய்ப் போத்தல்களை எடுத்துச் செல்லும் அவள் நடையில் துள்ளல்…

வலையைப் பிரித்தபடி ராசனும் அவளைக் கவனிக்கவே அவன் தலையில் நொங் எனக் கபரியின் குட்டு விழுகிறது.

“வேலையை ஒழுங்காகப் பார் மோனே”

“வேலையை ஒழுங்காகத்தான் பாக்கிறன்.” கபரியின் கிண்டலுக்கு அவன் பாணியிலேயே பதில் கூறிய ராசனின் கண்கள் மட்டும் இமை வெட்டாது மேரியை விழுங்குகின்றன.

இவர்கள் இருந்த இடத்துக்குச் சூசையும் டானியலும் வருகிறார்கள். பின்னால் மரியம்மா சாப்பாட்டுப் பார்சல்களுடன் வர மேரியும் தண்ணிப் போத்தலுடன் அங்கு வந்து சேருகிறாள்.

கபரி வலையை எடுத்துத் தோளில் போடவே மேரி ராசனிடம் தண்ணிப் போத்தல்களைக் கொடுக்கிறாள்.

“கவனமாய்ப் போட்டு வாங்கோ…”அவள் குரல் கிசுகிசுக்கிறது.

“ம்…ஞாயிற்றுக் கிழம பின்னேரம் மாதா கோயிலில சந்திப்பம். எமாத்தாம வந்திடும்.”

ராசனின் வேண்டுகோளுக்கு ம்…எனத் தலையசத்துச் சம்மதித்த மேரியின் கண்கள் ஏக்கத்துடன் அவனையும் கடலையும் நோக்கித் திரும்புகின்றன.

மரியம்மா சாப்பாட்டுப் பார்சல்களைக் கணவனிடம் கொடுத்து விட்டுக் கபரியைக் கட்டியணைக்கிறாள்.

“கவனமாப் போட்டு வா ராசா… ராசன் நீரும் கவனமாய்ப் போட்டு வாரும்.” அவள் நாத் தழுதழுக்கிறது. கண்களில் முட்டிக் கொண்டு வந்த கண்ணீரை கணவனுக்குத் தெரியாமல் அவசர அவசரமாகத் துடைக்க முற்பட்ட போதும் சூசையின் பார்வையில் அது பட்டுவிடுகிறது.

“நாங்கள் கடல் மாதாட்டத்தனே போறம். எந்த நேரமும் கண்கலங்கிக் கொண்டு…” சற்று எரிச்சலுடனும் கண்டிப்புடனும் சூசை கூறுகிறான்.

“அப்ப நாங்கள் போட்டு வாறம்…”அங்கு நிலவிய இறுக்கத்தைத் தளர்த்துவதற்காய் டானியல் சொல்கிறான். நால்வரும் திரும்பி இரு பெண்களையும் பார்த்து விட்டுக் கடல் நோக்கிப் போகிறார்கள்

அவர்கள் கண்களைவிட்டு மறையும் வரை பெண்களின் பார்வை அவர்களைத் துரத்திச் செல்கிறது.

அலை 4

அலை ஓசை மெல்ல மெல்ல அதிகரிக்கிறது. மீனவர்களை வரவேற்கும் அன்னையின் கீதம் போல் அந்த ஒசையில் ரிதம் கூடி நிற்கிறது. இனிமையான காலைப் பொலுதைத் தரிசிக்கக் கீழ்வானில் சூரியனும் தன் கதிர்கரங்களைப் பரப்பியபடி ஆவலுடன் புறப்பட்டு விட்டான். அவன் மேனியின் பொற்கிரணங்கள் கடல் மகள் உடல் தொட்டுப் பொன்முலாம் பூசிவிட்டிருந்தன.

இயற்கையின் வினோதங்களை இரசித்தார்களோ இல்லையோ மீனவர்களின் முகங்களில் தொழிலுக்குச் செல்லும் போது ஏற்படும் உற்சாகக் களிப்பு வெளிப்படுகிறது. கபரி, ராசன், அன்ரனி மூவரும் போட்டின் கயிற்றை அவிழ்த்து அதைக் கடலில் தள்ளிச் செல்லுகிறார்கள். இளந்தாரிகளைத் தொடர்ந்து சூசை, டானியல், டேவிட் ஆகியோரும் கடலலை நடுவே நடந்து போட்டை அடைகிறார்கள். ஆறு பேரும் ஏறியதும் டேவிட் இயந்திரத்தை முடுக்கி விடுகிறான். இயந்திரத்தின் விசிறிகள் கடலைக் கடைய வெண்ணுரையைத் தள்ளியபடி படகு ஆழ்கடல் உழப் புறப்பட்டு விட்டது. அது துள்ளும் அலைகளின் எற்ற இறக்கத்துக்கு ஏற்ப மேல் எழுவதும் கீழ் விழுவதுமாய் விரைந்து செல்கிறது. சவுக்கடியாக அலைகள் இளைஞர் மேல் விழுகின்றன. அவற்றில் நனைவது கூட அந்த வேளையில் இன்பம் தருகிறது.

ராசன் படகின் அணியத்தில் அமர்ந்திருந்து பரந்து விரிந்த கடலைப் பார்த்த வண்ணம் வருகிறான். எப்பொழுதும் பார்க்கும் கடல்தான். ஆனால் அவன் உள்ள எழுச்சியை பிரதிபலிப்பது போலக் கடலும் புதுக்கோலம் கொண்டுள்ளதாக அவனுக்குப் படுகிறது. நாரைகள் நீர் மீது கெந்திக் கெந்தி விளையாடுவது போலத் தோற்றம் தருகின்றன, அனால் நீரில் திடீரென அமுங்கி மீன்களைக் கவ்வி மேல் எழுகின்றன. இப்படித்தான் மேரியும் என் உள்ளத்தைக் கவ்விக் கொண்டாளோ? ராசன் மனதுக்குள் சிரித்துக் கொள்கிறான். மீனவர்களின் நண்பர்களான ஓங்கில் பறவைகள் வானில் சுதந்திரமாய்ப் பறந்து படகுகளுக்கு திசைகாட்டிச் செல்லுகின்றன. அவை போலத் தாமும் சுதந்திர புருசர்களாகவும் வாழ்வுக்கு அர்த்தமளிப்பவர்களாயும் வாழ வேண்டும் என்ற வேட்க்கை அவன் உள்ளத்தில் என்றுமில்லாது தோன்றுகிறது. காதல்தான் எத்தனை வலியது. சாதாரண மனிதனைக் கவிஞனாக மட்டுமல்ல சிந்தனை வாதியாகவும் மாற்றும் இரசவாதம் அதற்கு உண்டோ…?

ராசன் மேரியின் தரிசனத்தை உள்ளத்தில் வைத்து ஆராதிப்பதாலேயே மவுனமாக வருகிறான் என்பது கபரிக்குப் புரிகிறது. அவனது மோன தவத்தை அதிகம் குலைக்க விரும்பாதவனாய் இடைக்கிடையே சீண்டுவதோடு விட்டு விடுகிறான். அதனால் அவன் அன்றனியோடேயே அதிகம் பேச்சுக் கொடுக்கிறான். அவ்விருவரதுப் பேச்சிலும் இளைஞருக்கேயுரிய கிண்டலும் கேலியும் இழையோடிக் கிடக்கின்றன.

டேவிட் கலகலப்பாகப் பேசும், பழகும் சுபாவம் இல்லாதவன். அவனே அந்த அறுவர் கொண்ட குழுவுக்குத் தலைவன் போலவும் செயற்பட்டு வந்தான். காத்தமுத்துச் சம்மட்டியாருக்கு அவன் மீது அதிக நம்பிக்கை. அவனும் அந்த நம்பிக்கையை ஒரு போதும் இழக்க விரும்பியதில்லை. அதனால் அவன் மற்றவர்களை விடச் சம்மட்டியாரிடம் அதிக சலுகைகளையும் பெற்று வந்தான். அலையசைவுக்கு எற்பப் படகு ஆட அந்த ஆட்டத்துக்கு இணைந்து ஒத்திசைவாகத் தானும் அசைந்து படகினை இயக்குவதிலேயே டேவிட்டின் கவனம் முழுவதும் குவிந்திருந்தது.

சூசையும் டானியலும் ஊர் உலகத்துக் கதைகளை அசை போட்டுக் கொண்டு வந்தார்கள்.

மதியம் அளவில் அவர்கள் ஆழ்கடலை அடைந்து விட்டார்கள். கபரிக்குப் பசி வயிற்றைக் கிள்ளுகிறது.. “சாப்பிட்டிட்டுத் தொழிலைத் தொடங்குவம்” என்ற அவனது முன்மொழிவை அந்த நேரத்தில் அனைவரும் ஏற்றுக் கொண்டார்கள். தங்கள் தங்கள் பாசல்களைப் பிரித்து ஒருவரோடு ஒருவர் பரிமாறிச் சாப்பாட்டைத் திருப்தியாக முடித்துக் கொண்டார்கள். மேரியின் கைப்பாகம் தனிச்சுவை தருவதாக ராசன் எண்ணிக் கொண்டான்.

சாப்பிட்ட பின் சிறிது நேரம் கூட ஓய்வு எடுக்க டேவிட் விடவில்லை. நீண்ட நேரம் கடலில் நிற்பது கூட உகந்ததில்லை என்ற எண்ணமும் அவன் தொழிற்படக் காரணமாய் இருந்தது.

டேவிட் வலையை எடுத்துக் கடலில் வீசத் தொடங்கி விட்டான். அவனுடன் மற்றவர்களும் இணைய வேண்டியதாயிற்று.

வழமைக்கு மாறாக அன்று அவர்களது வலையில் மீன்கள் அதிகம்பட்டன. அது அவர்களுக்கு பெரும் திருப்தியையும் உற்சாகத்தையும் தந்தது. நேரம் போவது தெரியாமல் தொழில் ஆழ்ந்து போனார்கள்.

நேரம் நடுனிசியைத் தொட்டது.

இருளின் கனதியில் ஆழ்ந்திருந்த கடலில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் சில மீனவர்களது படகுகள் புள்ளி வடிவில் தென்பட்டன.

அவை பெரும்பாலும் இந்திய மீனவர்களுடையதாக இருக்க வேண்டுமென்று எண்ணிக் கொண்டார்கள்.

துணிச்சல் கொண்ட ஒரு சிலரைத் தவிர ஈழத்து மீனவர்கள் இரவில் மீன்பிடிப்பதைக் கடந்த சில ஆண்டுகளாய்த் தவிர்த்து வந்தமையே அந்த எண்ண ஓட்டத்துக்குக் காரணமாய் அமைந்து இருந்தது. ஆழ்கடலில் அலை கூட அதிக ஆரவாரம் இல்லாமல் அமைதியாக இருப்பது போலத் தோன்றியது. அங்கு நிலவிய நிசப்த்தம் அதிக நேரம் நீடிக்கவில்லை. இரவின் அமைதியை விரட்டியபடி கெலிகொப்டர் ஒன்று இவர்களது படகைக் குறிவைப்பது போல மேலே சுற்றிவிட்டு வானில் மறைகிறது.

அதன் வருகை நல்ல அறிகுறியாகப் படகில் இருந்தவர்களுக்குத் தெரியவில்லை. இதுவரை உற்சாகமாகத் தோழிலில் கண்ணாயிருந்தவர்களை அச்சம் இறுக்குகிறது.

“என்ன டானியல் கோதாரியிலே போறவங்கள் வந்திட்டுப் போறாங்கள்…?”

சூசையின் குரலில் கலவரம் அப்பட்டமாகத் தெரிகிறது.

உள்ளத்தில் திடுக்குற்றாலும் பதறாது முடிவுகளை எடுக்கிறான் டேவிட்.

“அது அவங்கள் சும்மா போறாங்கள். நீங்கள் கவலைப் படாதுங்கோ… எதுக்கும் நாங்கள் இன்னும் பத்து நிமிசத்தில திரும்புவம். அன்றனி ராசன் வலையை உள்ளுக்குள்ள கெதியில இழுங்க.”

அவர்கள் மிக வேகமாக வலையை உள்ளிழுத்த போதும் அவர்கள் கண்கள் மட்டும் நாற்திசையும் சுழன்று படகு ஏதாவது வருகிறதா என்பதையே அவதானிக்கின்றன. காங்கேசன் துறைப்பக்கமாகப் புள்ளி வடிவில் தோன்றிய அந்தப் படகு கொஞ்சம் கொஞ்சமாய் வியாபித்துப் பெரிதாகி வருவதை முதலில் கபரியேலே காணுகிறான்.

“அங்க பாருங்கோ நேவியின்ற பீரங்கிப் படகொண்டு வருகுது.” கிலியுடன் கபரி காட்டிய திக்கை எல்லோரும் நோக்குகிறார்கள். அந்தப் படகு இவர்கள் போட்டை நோக்கி மிகவேகமாக வருவது மட்டும் இவர்களுக்குத் துல்லியமாகத் தெரிகிறது.

அதிர்ச்சியில் ஒருகணம் உறைந்து போனவர்கள் படகை மிக வேகமாகத் திருப்பிக் கரைக்குச் செல்ல எத்தனிக்கிறார்கள். ஆனால்…சாதரண மீனவப் படகால் அதிவிரைவான, ராடர் முதலிய நவீன கருவிகள் பூட்டப்பட்ட பீரங்கிப் படகுக்கு ஈடுகொடுக்க முடியவில்லை. நேவி போட் அவர்களது போட்டுக்கு சிறிது தூர இடைவெளிக்கு வந்து விடுகிறது. அங்கு

இருந்தவாறே மேல் வெடி வைக்கிறது. ஆயுததாரிகளான புலிகள் படகாக இருக்குமானால் ஒன்றில் எதிர்த்துத் தாக்குவார்கள். அல்லது தங்களை அழித்துக் கொள்ளுவார்கள். இதனை உறுதி செய்யவே இந்த இடைவெளி என்பது படகில் இருப்பவர்களுக்கு நன்கு புரிகிறது. மேலே வெடித்துச் சிதறும் றவைகள் இன்னும் சிறிது நேரத்தில் தங்கள் நெஞ்சுகளைப் பதம்பார்க்கப் போகின்றன என எண்ணும் போதே பயத்தால் உடலும் உள்ளமும் ஒருங்கே நடுங்குகின்றன.

தங்கள் முன்னே தத்தளித்துக் கொண்டிருக்கும் படகு மீன்பிடிப் படகுதான் என்பதைத் தொலைநோக்குக் கருவியாலும் உறுதி செய்து கொண்டு தமது படகை மீனவர் படகிற்கு மிக அருகில் கொண்டு வந்து முற்றுகையிடுகிறார்கள். ஒரு நேவி ஏ,கே 47 ஐ நீட்டிய வண்ணம் இவர்கள் படகுக்குத் தாவுகிறான். உழைப்பினால் உறுதியான கட்டுமஸ்தான உடற்கட்டுடன் காணப்பட்ட இளைஞர்களைக் கண்டவுடன் ஏற்கனவே குடியினால் சிவப்பேறியிருந்த அவன் கண்கள் சினத்தால் மேலும் கோரம் அடைகின்றன. தமிழ் இளைஞர்கள் யாவரையுமே புலிகளாகவே காணும் படையினரின் குரோதம் விழித்துக் கொள்ள தனது துப்பாக்கியைக் கபரியின் நெஞ்சினை நோக்கி அழுத்திப் பிடிக்கிறான் அவன்.

“ஐயோ என்ற மகன்…அவன் அப்பாவி…” கதறியபடி முன்வந்த சூசையை ஒரு கையால் நெட்டித் தள்ளுகிறான் நேவி. தடுமாறி விழுந்த சூசை நரகத்துக்கே தான் தள்ளப்பட்டதாக உணருகிறான்.

“நாங்கள் மீன்பிடிகாரர். இங்க பாருங்கோ மீன்தான்”. தனக்குத் தெரிந்த சிங்களத்தில் தங்கள் நிலையினை நிரூபிக்க முற்பட்ட டேவிட் துவக்குப் பிடியால் தாக்கப்படுகிறான். அடி பலமாக முழங்கையில் படவே அதில் இரத்தம் சொட்டுகிறது.. தலை விறுவிறுத்து மயக்க நிலைக்கு உள்ளாவது போல் தோன்றுகிறது டேவிட்டுக்கு.

இதற்கிடையில் படகில் மேலும் இரண்டு படைகள் குரங்குகள் போல் தாவுகின்றன ராசன், அன்றனி, ஆகியோரின் நெஞ்சுகளை நோக்கி அவர்கள் துப்பாக்கிகள் நீளுகின்றன. கைகள் இரண்டையும் உயர்த்திப் பலிக்கடாக்கள் போல் உறைந்து நிற்கும் இளைஞர்களைப் பார்க்கப் படைகளின் உள்ளதில் கருணைக்குப் பதில் குரோதம் குமுறி எழுகிறது. இரண்டு நாட்களுக்கு முன் புலிகளிடம் சிக்கி உயிரிழந்த இருபது படையினருக்காக பழிவாங்க அவர்கள் மனம் துடித்துக் கொண்டிருந்தது.

“டமில்நாய் …. கொட்டி நாய்… “ புரியாத தூசனை வார்த்தைகள் தாராளமாய் இளைஞர்களின் காதுகளை துவேசிக்கின்றன. எதிரியை உடலால் மட்டுமன்றி வார்த்தைகளாலும் முகத்தில் எச்சிலை விசிறி

அவமானப்படுதும் கோரம் அங்கு பல்லிலித்துக் கொண்டிருந்தது. வார்த்தைகள் கூட பொங்கி எழும் குரோத உணர்வுக்கு வடிகாலமைக்கப் போதவில்லைப் போலும். துவக்குக் கத்தியால் இளைஞரின் நெஞ்சுகளைக் கீறி இரத்தக் கோலமிட்டு இரசிக்கிறது படை. அவர்களின் வேதனை கண்டு துடிக்கும் முதியவரின் கதறல் வெறியை மேலும் கூட்டும் பறையொலியாகவே படைக்குப் படுகிறது.

இளைஞர்களைச் சுடுவதத்கு துவக்கின் நாக்கை இழுக்கச் சென்ற நேவியின் கரங்கள் கப்றனின் கட்டளையால் செயல் இழக்கின்றன.

“இவங்களைக் காம்பில கொண்டு போய் விசாரிப்பம்.” கப்றனின் கட்டளையின் உள் அர்த்தத்தைப் புரிந்தவராய் படையினர் ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரிக்கிறார்கள். நிராயுதபாணிகளான அவர்களைச் சம்பவ இடத்தில் வைத்துச் சுடுவதிலும் சித்திரவதை செய்த பின் சுடுவதில் அதிக சுகம் இருப்பதாக அவர்கள் கருதியதன் வெளிப்பாடுதான் அந்தச் சிரிப்பு என்பதை அங்குள்ளவர்களால் ஊகிப்பது கடினமாக இருக்கவிலை.

தங்கள் உயிர் சிறிது நேரத்தில் பந்தாடப்படப் போகிறது என்பது இளைஞர்களுக்கு இப்பொழுது பொருட்டாகத் தெரியவில்லை. உயிரோடு அவர்கள் செய்யப் போகும் சித்திரவதை… நிமிடத்துக்கு நிமிடம் சாவின் எல்லையைத் தொட்டு வரும் அவலம்… உள்ளங்காலில் இருந்து உச்சம்தலை வரை பயம் ஊடுருவி உடல் விறைத்து நீள்வது போல் உணர்கிறார்கள்.

எத்தனையோ கெஞ்சல்கள். கதறல்கள். நிரூபிப்புக்கள் எவையும் பயன் தராத நிலையில் மூன்று இளைஞர்களும் படகு மாற்றம் பெறுகிறார்கள். அன்றைய உழைப்பான மீன்கள் முழுவதும் நேவியால் கொள்ளையிடப்படுகின்றன.

தனது படை புலிகளிடம் வாங்கும் அடிகளுக்குக் களத்தில் நின்று சரியான பதில் கூறமுடியாத அவலத்துக்கு அப்பாவிகளைத் துன்புறுத்துவதன் மூலம் வடிகால் தேடிக்கொள்வது படையின் வழமையாகி விட்டது.

தங்கள் பிள்ளைகள் தங்கள் கண்முன்னாலேயே காலனிடம் பறிபோவதைத் தடுக்கமுடியாத அவலம் முதியவர்களின் கண்களில் கண்ணீராக வடிகிறது. ஏக்கத்துடன் தம் பிள்ளைகளை அவர்கள் பார்த்து நிற்கிறார்கள்.

இளைஞர் மூவருக்கும் தங்கள் வேதனைக்கு அப்பால் தங்கள் இழப்பு கண்டு துடிக்கப் போகும் உறவுகளின் முகங்கள் தோன்றி உள்ளத்தை உருக வைக்கிறது. குமுறிவரும் அழுகையை உதடுகளை இறுகப் பல்லால் கடித்து அடக்கிக் கொள்கிறார்கள். இப்பொழுது படகு தள்ளாடியபடி கரை

நோக்கிப் பயணிக்கிறது. மீன்களின் பாரத்தல் அல்ல. முதியவர்களின் மனப்பாரத்தால்.

கடல்மட்டும் எப்பொழுதும் போல இரவின் நிசப்தத்தில் ஆழ்ந்துகிடக்கிறது.

அலை 5

மறுநாள் காலை வழமை போலப் புலர்கிறது… மேரி குடிசையில் மதியச் சமையலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறாள். இன்று வெள்ளி… நாளை சனி… நாளை மறுநாள்… … அவள் மனம் ஞாயிற்றுக் கிழமைக்காக ஏங்கித் தவிக்கிறது.

இராசனின் கட்டுமஸ்தான உடல்… அவனது காதல் கனிந்த பார்வை… அன்பொழுகும் பேச்சு… … அவளது மனக்கண்களில் தோன்றி இன்பக் கிலுகிலுப்பை ஏற்படுத்திய வண்ணம் இருந்தன.

அவள் கனவு நிலையைக் குலைப்பது போலச் சந்தையில் இருந்து திரும்பியிருந்த மரியம்மாவின் குரல் வெளியில் கேட்க்கிறது.

“மேரி… மேரி… …”

மேரி அவசரமாய் குடிசையின் வெளியில் ஓடி வருகிறாள்.

“என்னம்மா… இப்படிப் பதறுகிறாய்…பதறாமல் சொல்லனை.”

“நேற்றைக்குக் கடலுக்குப் போன போட்டிலை ஒண்டை நேவி மறிச்சுப் பெடியலைப் பிடிச்சுக் கொண்டு போட்டுதாம்.”

“ உனக்கு ஆர் சொன்னது.”தாயின் பதற்றம் மேரியிடமும் தொற்றிக் கொள்கிறது.

“சந்தைக்குள்ளை ஒரே கதையாக் கிடக்குது. அதுதான் நான் ஓடிவாரன்”.

“நேற்றைக்குக் கடலுக்கை எத்தனை போட்டுப் போயிருக்கும். அதுக்கு நீ ஏன் பதறுகிறாய்…?” மேரி தாயைத் தேற்றுகிறாளா…? அல்லது தனக்குத் தானே ஆறுதல் சொல்லுகிறாளா…?

“ எனக்கென்னமோ பயமாக்கிடக்குது… வா போய் முதலில பாத்திட்டு வருவம்.”

மரியம்மா மீன் கடகத்தைக் குடிசையை நோக்கி எறிகிறாள்…ஏணையில் கிடக்கும் குழந்தையை அள்ளி எடுத்துக் கொண்டு கடலை நோக்கி ஓட்டமும் நடையுமாய்ச் செல்லுகிறாள். அவளைத் தொடர்ந்து ஒருவிதக் கலக்கத்துடன் மேரியும் போகிறாள்.

கரையில் ஒதுங்கிய படகொன்று இருவர் கண்களிலும் படுகிறது.

அதிலிருந்து சூசை, டானியல், டேவிட் மட்டுமே இறங்கி வருகிறார்கள். ஆனால் கபரி… ராசன்… ..

மரியம்மா சூசையிடம் பாய்ந்து செல்லுகிறாள். போட்டில் இருந்து சோர்ந்தவனாய் வந்த சூசையை உலுக்கி எடுத்து விடுகிறாள்.

“எங்க என்ற பிள்ளை… அவனை எங்க விட்டிட்டு வந்திருக்கிறீர்…? மரம் மாதிரி நிக்காமச் சொல்லுமன்…”

மரியம்மாவுடன் இணைந்து மேரியும் தகப்பனை உலுக்குகிறாள்…

“கபரி… ராசன் எல்லாம் எங்க அப்பு…? “ மேரிக்கு அழுகை பொத்துக் கொண்டு வருகிறது.

சூசை பதிலேதும் கூறாமல் குமுறி அழுகிறான்.

“அவங்களைக் குறுக்கால போன நேவி பிடிச்சிட்டுப் போட்டாங்கள்…”

கிணற்றுக்குள் இருந்து ஒலிக்கும் குரலாக டானியலிடமிருந்து பதில் வருகிறது.

“ஐயோ என்ற பிள்ளை…என்ற ராசா… இதுக்கோ நான் பத்து மாசம் பத்தியம் இருந்து பெத்து வளர்த்தன்…என்ற குலக் கொழுந்த கோதாரியில போறவங்கள் கொண்டு போனாங்களோ…”

மரியம்மாவின் ஒப்பாரியில் ஊரே கூடி விடுகிறது. மேரி குமுறிக் குமுறி அழுகிறாள் அவள் அழுகையில் அவள் எதிர்காலமும் மெல்ல வழுவிப் பாதாளம் நோக்கிச் செல்வது போன்ற உணர்வு மேலிடுகிறது.

கடலின் அலைகள் தரையில் மோதி எழும் பேரோசை அவர்களின் ஒப்பாரிக்குச் சுருதி கூட்டுகிறது.

அலை 6

“அம்மா…அம்மா…”

மேரியின் தொண்டைக்குள் மீன் முள் குத்தியது போலக் குரல் தடுக்கிறது.

“ஒம் பிள்ளை”

தவிப்புடன் மேரியை நோக்குகிறாள் மரியம்மா.

“அம்மா…நான்… நான்…”

“என்ன பிள்ளை சொல்லன்…”

“அம்மா நான் போட்டு வாரன்.”

மேரியின் குரலில் இப்பொழுது உறுதி. அது மரியம்மாவை ஏதோ செய்கிறது. அவள் வேதனையுடன் மேரியின் கைகளைப் பற்றுகிறாள்.

“எங்க பிள்ளை… நீயும் என்னை விட்டுட்டுப் போகப் போறாயோ…?”

அவள் கண்கள் மகளிடம் எதையோ யாசிக்கின்றன…

”ஓம் அம்மா…”

தாயின் தவிப்பு மேரியின் உறுதியான முடிவில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.

“ எதுக்குப் பிள்ளை போறாய்,,,?”

தாயின் இந்தக் கேள்வி மேரியிடம் சிரிப்பைத்தான் வரவழைக்கிறது. ஆனாலுமவள் பதில் கூறுகிறாள்.

“விடுதலைக்காக…”

மரியம்மாவின் கண்களில் திடீரென ஒளி கூடுகிறது.

“அப்ப உன்ற கொண்ணனையும் விடுவிப்பியோ…?”

அவள் ஆர்வத்துடன் மகளின் முகத்தைப் பார்க்கிறாள்.

மேரி இக் கேள்வியைச் சற்றும் எதிர் பார்க்கவில்லை.அவள் உள்ளத்தின் தடுமாற்றம் கண்களில் பட்டுத் தெறிக்கிறது. இந்தக் கேள்விக்கு மேரியால் எப்படிப் பதில் சொல்ல முடியும். அவள் மௌனமாகிறாள்.

“ஏன் பிள்ளை பேசாமல் நிக்கிற சொல்லன். கொண்ணனையும் விடுவிப்பியோ…?”

மரியம்மா ஆவேசம் கொண்டவள் போல் மேரியிடம் திரும்பத் திரும்பக் கேட்கிறாள்.

மேரி பதில் ஏதும் கூறாதவளாய்… கூறமுடியாதவளாய் அந்த இடத்தை விட்டு நகர்ந்து விடுகிறாள்.

“என்ற ராசனையும் விடுவிப்பியோ…? என்ற ராசா கபரி…” மரியம்மாவின் அழுகுரல் மேரியைத் துரத்திச் செல்கிறது.

மரியம்மாவால் கபரியேலை மறக்க முடியவில்லை. அவனது மறைவு அவள் உள்ளத்தின் ஆழத்தில் புதைந்து போனாலும் அவ்வப்போது மேல் வந்து அவளை வேதனைப் படுத்துவது வழமைதான். ஆனால்… சுனாமி அனர்த்தத்தின் பின் மரியம்மாவின் மனச்சமநிலை குலைந்த நிலையில் ஆழ்மன எண்ணங்களே ஆட்சிபுரிந்தன. காலத்தால் ஆற்றப்பட்டதாக எண்ணிய புண்கள் மீண்டும் கோரமாய் தாக்கப்பட்டு அதில் சீழும் இரத்தமும் கசிந்து கொண்டிருந்தன

அலை 7

1998 வன்னியில்

பரந்து விரிந்த வன்னிப் பிரதேசம்…

இன்று தமிழர் தாயகத்தின் இதயமாக விளங்கி வருகிறது… எனினும், அதன் வளம்…?வன்னி பொதுவாகவே மழை வீழ்ச்சி குன்றியது. அரசாங்கத்தின் தொடர்ச்சியான திட்டமிட்ட புறக்கணிப்புக் காரணமாகப் பண்டைய மன்னர்களால் வெட்டப்பட்ட குளங்களும் நீர்நிலைகளும் தூர்ந்து போய் அங்கு வறட்சி ஆட்சி செய்தது.

வடக்கிலும் கிழக்கிலும் போர் தொடங்கிய போது வன்னியின் நிலமை மேலும் மோசமானது. அரசாங்கத்தின் பொருளாதாரத் தடை வன்னி மக்களின் பொருளாதார முயற்சிகளை முடக்கிப் போட்டிருந்தது. இத்தனையும் போதாதென்று அரச ஆக்கிரமிப்புப் படையின் செல்வீச்சுக்களும் விமானக் குண்டு வீச்சுக்களும் மக்களைச் சொல்லொணாத் துன்பதுக்கு உள்ளாக்கிக் கொண்டிருந்தன.

இத்தகைய ஓர் சூழ்நிலையிலேயே 1995, 96 களில் யாழ்ப்பாணத்திலிருந்து கணிசமான மக்கள் வன்னிக்கு இடம் பெயர்ந்து சென்றனர்.

சூசையின் குடும்பமும் யாழ்ப்பாணத்திலிருந்து எத்தனையோ அவலங்களுக்கிடையே கிளிநொச்சியை வந்தடைந்திருந்தது.

கிளிநொச்சியிலிருந்து பத்துக் கிலோ மீற்றர் தொலைவில் உள்ள இராமனாதபுரம் இவர்கள் வசிப்பிடமாயிற்று.

செஞ்சிலுவைச் சங்கத்தினால் வழங்கப்பட்ட பிளாஸ்ரிக் விரிப்புக்கள் உள்ளூரில் கிடைத்த காட்டுத்தடிகள் ஓலைகள் கொண்டு எப்படியோ ஓர் குடிசையை அமைத்து விட்டார்கள். இடம் பெயர்ந்த மக்கள் பலரின் முக்கிய பிரச்சனையான வேலையின்மை இவர்களது வாழ்க்கையையும் தினறடிக்கச் செய்தது. மீன்பிடித் தொழிலையே நம்பியிருந்த இவர்களால் லேசில் இங்கு தொழில் வாய்ப்பைப் பெறமுடியவில்லை.

மரியம்மா தலைச் சுமையைக் குடிசை வாசலில் இறக்கி வைக்கிறாள். தலையில் விறகுச் சுள்ளிகள் அண்டாதவாறு வைத்த துண்டை எடுத்து வழியும் வியர்வையைத் துடைத்தவள் தன்னை ஆசுவாசப் படுத்துவதற்காகக் குடிசை வாசலில் உள்ள சிறிய திண்ணையில் அமருகிறாள்.

அவளையறியாது மன வெப்பியாரம் பெருமூச்சாக எழுகிறது. கண்களில் நீர்த் துளிகள் வருவதா வேண்டாமா என்று எட்டிப்பார்க்கின்றன.

“போனவளை நினைச்சு இப்பிடி இடிஞ்சு போய் இருந்தா குடும்பத்தை ஆர் பார்க்கிறது.”

வெறும் தேத்தண்ணியை உறிஞ்சியபடி எதிர்த் திண்ணையில் சூசை வந்து அமருகிறான்.

“கவலை கவலை எண்டு நீர் குடிச்சுக் கொண்டிருந்தால் மட்டும் குடும்பம் உறுப்படுமாக்கும்.” மனத்தில் கணவன் மீது ஏற்பட்ட எரிச்சல் நெருப்புத் துண்டமாய் வார்த்தைகளில் வந்து தெறிக்கிறது.

“அம்மோய் நிவாரண அரிசியும் முடிஞ்சு போட்டுதனை. மத்தியானச் சாப்பாட்டுக்கு என்ன செய்யிறது”. ரெமி வெறுந் தேத்தண்ணியை நீட்டியபடி தாயிடம் வினவுகிறாள்.

“கொப்பரக் கேள் அவர்தான் பதில் சொல்லுவார்.” அற்றாமை அவள் குரலில் தொனிக்கிறது.

இதற்கு பதில் கூறினால் மனைவியின் வசைக்கு மேலும் மேலும் உள்ளாக நேரிடும் என்பதைச் சூசை உணர்ந்தவனாய் மகளை நோக்குகிறான்.

“இந்தா பிள்ளை ரெமி உந்த மீன் பறியையும் தூண்டிலையும் எடுமோனை குளத்திலை ஏதும் கிடைக்குதோ எண்டு பாப்பம்.”

“குளத்தில கிடைக்கிறதை வித்துப் போட்டுப் பேந்தும் கசிப்புக் குடிக்கப் போயிடாதையும் யேசுதாசனுக்கும் காய்ச்சலாக் கிடக்குது. ஆஸ்பதிரிக்குப் போகக் பஸ் காசும் வேணும்.”

“கடலில் மீன் பிடிச்ச எங்களைக் குட்டையில மீன்பிடி எண்டால் என்னத்தைப் பிடிக்கிறது. வருகிற ஒண்ட ரெண்டையும் விக்கிறதுக்கு ஐஞ்சாறு மைல் சைக்கிள் உளக்க வேண்டியிருக்குது. களைப்பு வந்தால் எப்பவாவது குடிப்பன்”.

சூசையின் பதில் மரியம்மாவின் கோபத்தைத் தூண்டிவிடுகிறது.

“ஒம்….ஒம்…ஒருக்காக் களைப்பெண்டு குடியும். பேந்து மகள் இயக்கத்துக்குப் போட்டாள், மகன் காணாமல் போட்டான். கவலை பொறுக்க முடியேல்லை எண்டு குடியும் பேந்து வன்னியில இடம் பெயர்ந்து கஸ்டப்படுகிறம் எண்டு குடியும். உமக்குத்தான் குடிக்கிறதுக்கு ஆயிரம் காரணம் கிடைக்குமே…”

வறுமையால் வாடும் இவர்களிடம் ஏதோ ஒருவகையில் இந்தக் குடிப்பழக்கமும் ஒட்டிக் கொள்கிறது. தங்களை வாட்டும் துன்பங்களில் இருந்து தற்காலிகமாக விடுபட இவர்கள் கைக்கொண்ட பழக்கம் எல்லை மீறும் பொழுது இவர்கள் குடும்பத்தை எவ்வளவு சீரழிக்கிறது என்பதை இவர்கள் உணர்வதில்லை.

“உண்மையில இவள் மேரி எவ்வளவு பொறுப்பான பிள்ளை. இவள் இப்படி இயக்கத்துக்குப் போவாள் எண்டு நான் கனவிலையும் நினைக்கேல்ல…” கதையை மாற்றும் பொருட்டு இப்படி ஒரு கருத்தை முன் வைக்கிறான் சூசை. அதில் மகள் பற்றிய அவனது வேதனையும் புலப்படாமல் இல்லை.

“அக்கா பொறுப்பான பிள்ளை யெண்டதாலதான் இயக்கத்துக்குப் போனவ”. தமக்கையின் செயல் முற்று முழுதாக சரியானது என்பது ரெமியின் முடிந்த முடிவு. ரெமி தானும் இயக்கத்துக்குப் போக எத்தனையோ முறை எண்ணியிருக்கிறாள். ஆனால் எதோ ஒன்று அவளை அவ்வாறு செய்யாமல் தடுத்து வந்தது.

“ம்… …தமையனை ஆமி பிடித்தத அவளால பொறுக்க முடியேல்லை. இந்த அகதி அவல வாழ்க்கையும் அவங்களாலதானே…அதுதான் போட்டாள்.”

மரியம்மாவால் அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. தொடரும் அவலங்கள் உறுதியான அவள் மனதைக்கூட ஆட்டங்காண வைத்து விட்டன.

“சரி சரி … விடியகாத்தால அழாதை … நான் போட்டுவாறன். தா பிள்ளை அந்தப் பறியை…” ரெமி பறியையும் தூண்டிலையும் கொடுக்கச் சூசை வெளியேறுகிறான்.

மனப்பாரம் அழுத்தச் சிறிது நேரம் செயலற்று இருக்கிறாள் மரியம்மா… அங்கு அசூசையான மௌனம் நிலவுகிறது. அவள் சிந்தை வேரொன்றில் தாவுகிறது. மனப்பாரம் மேலும் அழுத்துகிறது. இனம் புரியாத பயம் அவள் மனதைப் பிசைகிறது.

யேசுதாசன்… மரியம்மா, சூசயின் கடைசி மகன். செல்லமகன். அவன் ஐந்தாறு நாளாய் காய்ச்சலால் அவதிப்படுகிறான். மரியம்மாவும் தனக்குத் தெரிந்த கைவைத்தியம் எல்லாம் செய்து விட்டாள். ஆனால் இன்னும் குணம் எற்பட்டபாடில்லை. இன்று அவனை எப்படியும் ஆஸ்பத்திரிக்குக் கூட்டிக்கொண்டு போய்க் காட்டுவதென்று தீர்மானிக்கிறாள்.

போசாக்கான உணவு கிடைக்காமை, நுளம்பின் பெருந்தாக்கம் என்பன இடம் பெயர்ந்து சுகாதாரக்கேடுகளுக்கிடையே வாழும் மக்களை மேலும் வாட்டி வதைத்து வருகிறது. பலர் நிமோனியா டெங்குக் காய்ச்சல்களால் இறந்திருக்கிறார்கள். மரியம்மாவின் பயத்துக்கு நியாயம் இல்லாமல் இல்லை.

“எங்க பிள்ளை இவன் யேசு ? காய்ச்சலோட விளையாடப் போட்டானே…? “

“இல்லையம்மா அவன் விடியத் தொடக்கம் முனகிக் கொண்டு கிடந்தவன். தேத்தண்ணி கொடுத்தன். அதையும் சத்தியெடுத்துப் போட்டான்.”

மகளின் பதில் மரியம்மாவின் வயிற்றில் புளியைக் கரைக்கிறது.

“அதையேன் எனக்கு முன்னமே சொல்லெல்ல?”குற்றம் சாட்டுவது போல அவசரம்மாய்க் கேட்கிறாள் அவள்.

“விடிய எழும்பி விறகு பொறுக்கப் போட்டு இப்பத்தானே இதில வந்து இருக்கிறாய். வந்தோன அப்புவோட சண்டை.”

“சரி சரி இப்பவே அவனை கூட்டிக் கொண்டு ஆஸ்பத்திரிக்குப் போறன். பத்துமணி பஸ்ச விட்டால் பேந்து இரண்டு மணிக்குத்தான் பஸ். பத்து மைல் போகவேணும். இந்தப் பிஞ்சு தாங்குமோ என்னமோ…?”

வன்னியில் பஸ் சேவை என்பது ஒழுங்காக நடைபெறுவதில்லை. பொருளாதாரத் தடை காரணமாகப் பல பஸ்கள் சேவையில் இருந்து நிறுத்தப்பட்டு விட்டன. ஓடும் இரண்டு மூன்று பஸ்களும் உடைந்து சிதலமாய்ப் போன ரோடுகளிலேயே பயணம் செய்ய வேண்டி இருந்தமையால் அடிக்கடி பஞ்சராகி நடுரோட்டில் நின்று விடுகின்றன. நிவாரண விடயமாய் ரவுனுக்குப் போகப் பஸ்சுக்காகக் காத்திருந்து அது கிடைக்காததால் நடந்து செல்ல வேண்டிய நிலைக்கு மரியம்மா உள்ளாகியிருக்கிறாள். பல மணி நேரம் காத்திருந்தும் பஸ் வராததால் தகிக்கும் வெய்யிலிலோ மழையிலோ நோயோடு தள்ளாடி நடக்கும் சீவன்களை அங்கு மிகச்சாதாரணமாகப் பார்க்கலாம். தானும் கொளுத்தும் வெய்யிலில் நோயால் வாடும் குழந்தையைத் தூக்கிக் கொண்டு நடக்க நேரிட்டால்…? நினைப்பதற்கே மரியம்மாவுக்குப் பயமாக இருக்கிறது.

“அம்மா அவனுக்குக் குளிருதெண்டு அழுதான். உன்ற சீலையாலதான் போர்த்து விட்டனான். எல்லா இடமும் மலேரியா.”

“நீ போய் கமலமக்காட்ட அரிசி கடன் வாங்கிக் கஞ்சிவை. நான் அவனத் தூக்கிறன்.”

மகனைத் தூக்கியவள் ஒருகணம் பதறித் துடித்துப் போகிறாள்.

“இங்க பார் ரெமி. இவனுக்கு அனலாய் உடம்பு கொதிக்குது.. எனக்கென்னமோ பயமாக் கிடக்குது… கொப்பரக் கூப்பிடுவமே…”

“பயந்து என்ன செய்யிறது…கெதியில் ஆஸ்பத்திரிக்கு வெளிக்கிடு. அப்புவ இப்ப நான் எங்கஎண்டு தேடிறது…?”

மரியம்மா தனது சீலையொன்றால் யேசுதாசனை நன்கு போர்த்தி அவன் தலையில் வெய்யில் சூடு படாதவாறு பார்த்துக்கொள்கிறாள். தூக்கிய போது காய்ச்சல் மயக்கத்தால் முனகிய யேசு தாயின் இதமான அணைப்பில் மீண்டும் சோர்ந்து அவள் தோளில் சாய்ந்து கொள்கிறான்.

மரியம்மா படலையை தாண்டும் வரை அவளையும் யேசுவையும் பார்த்துக் கொண்டிருந்து விட்டு உள்ளே செல்கிறாள் ரெமி.

“தம்பி பாவம் யேசப்பா…! அவனுக்குக் கெதியில சுகம்வர நீர்தான் உதவ வேணும்…ஆமென்.” கருணையே உருவாய் அவளையே நோக்கியிருந்த யேசு படத்தின் முன் நின்று மனம் உருகப் பிரார்த்திக்கிறாள் ரெமி.

ரேமிக்குப் பதினான்கு வயது மட்டுமே ஆகிறது. அனால் வாய்ப்புக் கிடைக்கும் பொழுதெல்லாம் மரியம்மா களை பிடுங்க, நாற்று நட எனக் கூலி வேலைக்குச் சென்று விடுவதனால் வீட்டு வேலைகள் ரெமியின் தலையில் விழுந்து விடுகின்றன.

சூசை குடும்பத்திலேயே ரெமிக்குத்தான் படிப்பில் ஆர்வமும் திறமையும் அதிகம் இருந்தது. அனால் இடம் பெயர்ந்த இந்த இரண்டு வருடத்தில் அவள் படிப்பும் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகியிருந்தது. அரசாங்கம் புத்தகங்களை இலவசமாக வழங்கியிருந்தாலும் கொப்பி இதர கல்வி உபகரணங்களை வாங்கிக் கொடுக்கும் நிலையில் அவள் குடும்பம் இருக்கவில்லை. இதனால் அவள் கல்வி ஊசலாடிக் கொண்டிருந்தது. மழைக்கு ஒதுங்குவது போல அவளும் இன்னும் ஏதோ பள்ளிக்கூடம் சென்று வருகிறாள். ஆரம்பத்தில் அவளது வரவின்மைக்கு ஆசிரியர்கள் கண்டித்தாலும் அவளைப் போன்ற மாணவர்களின் அவல நிலையை அறிந்திருந்ததால் வரும் அளவுக்கு வரட்டுமே என்று விட்டுவிட்டார்கள். தனது படிப்புப் பாதிக்கப்படுவதற்காக வருந்துவதைத் தவிர ரெமியாலும் என்னதான் செய்யமுடியும்…?

ரெமி தனது சிறிய குடிலை அழகாகக் கூட்டிவிட்டு முத்தத்தில் ஒரு பகுதியைக் கூட்டுகிறாள். நேரம் பதினொன்றைத் தொட்டுவிட அப்புவும் தேவதாசனும் பசியால் வருவார்களே என்ற எண்ணம் தோன்றுகிறது. ஒரு சிறிய பெட்டியை எடுத்துக் கொண்டு பக்கத்து வீடு நோக்கிச் செல்லுகிறாள்.

பக்கத்து வீட்டு கமலம் மாமியிடம் எத்தனை தடவைகள்தான் அரிசி, சீனி, மாவு என்று கடன் வாங்குவது…? பல சமயங்களில் வாங்கிய கடன் திருப்பிக் கொடுக்கப்படுவதில்லை. இப்பொழுது அவவிடம் கடனுக்குப் போக ரெமிக்குக் கூச்சமாக இருக்கிறது. அனால் இன்று உலை வைப்பதற்குக் கடன் வாங்குவதுதவிர வேறு வழியில்லை.

ரெமி தயங்கியபடி மாமியின் வீட்டு வாசலில் போய் நிற்கிறாள்.

கமலம் மாமிக்கு கிளிநொச்சி இராமனாதபுரம்தான் சொந்த இடம். அவவின் குடும்பம் பரம்பரையாக விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறது. ஊரில் ஓரளவு பசையுள்ள குடும்பமும் கூட. மாமியின் இயல்பான இரக்க சுபாவம் காரணமாக முகம் சுழிக்காமல் தன்னாலான சிறிய உதவிகளை செய்து வருகிறா… அல்லாமலும் கமலம்மாமியின் வயல் வேலைகளுக்குக் கூலியாக அவ கூப்பிடும் போதெல்லாம் மறுக்காமல் மரியம்மா போவதுண்டு. அவவிவன் வீட்டில் அரிசி இடித்தல், நெல் குற்றிப் பிடைத்தல், புழுங்கள் அவித்தல் என நீளும் வேலைகளைச் செய்யும்

நிரந்தர வேலையாளாக மரியம்மா திகழ்ந்தமையும் மாமியின் உதவிகள் நீடிப்பதற்கான மற்றுமொரு காரணமாய் இருந்து வருகிறது.

“மாமி…மாமி…”

மிக மெதுவாக ரெமி உட்பக்கம் பார்த்துக் கூப்பிடுகிறாள்.

வெளியில் வெளிக்கிட்டுக் கொண்டிருந்த மாமி கண்ணாடியில் பார்த்துப் பொட்டைச் சரி செய்கிறா. பின் முந்தானையை இழுத்துச் சொருகிய வண்ணம் குரல் வந்த திக்கை நோக்கி வருகிறா.

ரெமியின் தயக்கத்தைப் பார்த்தவுடனையே அவள் தன்னிடம் ஏதோ எதிர்பார்த்து வந்திருப்பதைப் புரிந்துகொள்கிறா…

“என்ன ரெமி ஏதும் வேணுமே…?”

“ஓம் மாமி…கொஞ்சம் அரிசி வேணும்…நிவாரணம் வந்தோன தாரம்…”

“ம்… கொப்பர் பொறுப்பில்லாமல் நடக்கிறார்… கொம்மா கூலிக்கு போறா… அது என்னத்தைக் காணும்…? இதில இரு பிள்ளை…அரிசி எடுத்திட்டு வாறன்.”

வெளிவிறாந்தையில் இருந்த கதிரையை ரெமிக்குக் காட்டிவிட்டு உள்ளே சென்று ஒரு கொத்து அரிசியுடன் வெளியே வருகிறா…

“உன்ற அம்மா எங்க…? கூலிக்கே போட்டா…?”

“இல்லை மாமி தம்பிக்குச் சுகமில்லை.அவனக் கூட்டிக் கொண்டு ஆஸ்பத்திரிக்குப் போட்டா.”

“நானும் ஆஸ்பத்திரிக்குத்தான் போறன். தம்பியிண்ட றக்க்றர் றவுனுக்குப் போகுது. மினக்கடாமப் போகலாம். மரியம்மா போறதெண்டா கூடிக்கொண்டு போயிருக்கலாம்.”

ரெமி அரிசியை வாங்கியபடி எழுந்து கொள்கிறாள். “மாமி நான் போட்டு வாரன்.”

“ஓம் பிள்ளை.. எனக்கும் நேரம் ஆகுது.” கூறியபடியே கேற்றை நோக்கி ரெமியுடன் மாமியும் நடக்கிறா…

ரெமி வீட்டுக்கு வந்து அடுப்பை மூட்டி உலையைக் கொதிக்க வைக்கிறாள். அரிசி கடன் வாங்கியாகி விட்டது. அனால் சோறு காய்ச்சினால் கறிக்கு எங்கு போவது. இடம் பெயர்வுக்கு முன் மீனும் நண்டும் எனச் சுவையாகச் சாப்பிட்ட நாவு இப்பொழுது வெறும் இலை

குலைகளைச் சாப்பிட்டுச் செத்து விட்டது. இன்றைக்கு முருங்கையிலைக் கஞ்சிதான். தீர்மானித்தவளாய் வெளியில் வந்து முருங்கையிலையை ஆய்ந்து சுத்தம் செய்கிறாள்.

கொதிக்கும் உலையில் அரிசியைப் போட்டுவிட்டு தேங்காய் துருவி பாலைப் பிழிகிறாள். அரிசி வெந்து வர முருங்கையிலை. தேங்காய்ப்பால் உப்பு ஆகியவற்றைப் போட்டுத் துலாவி விடுகிறாள். சிறிது நேரம் கொதிக்கவிட்ட பின்னர் கஞ்சி தயாராகி விடுகிறது.

சமையல் முடித்துப் பாத்திரங்களைச் சுத்தம் செய்து முடித்த போது நேரம் இரண்டைத் தொடுகிறது.

“நேரம் ரெண்டாகுது… அம்மா இன்னும் ஏன் வரேல்லை…” இனம் புரியாத சங்கடம் மனதை நெருடுகிறது… சிந்தனையோடு திண்னையில் படுத்தவள் சற்றுக் கண்ணயர்ந்து போகிறாள்.

“சின்னக்கா பசிக்குது… என்ன கிடக்குது…?”

தேவதசன் சத்தமாகக் கேட்டுக் கொண்டு வீட்டினுள்ளே வந்தவன் புத்தகப் பையை ஒரு மூலையில் எறிகிறான்.

தேவா வந்த அரவத்தில் எழும்பிய ரெமி ஒரு தடவை உடம்பு வளைத்துச் சோம்பல் முறிக்கிறாள்.

“பிரபு வந்திட்டார்… கண்ட கண்ட இடங்களில விளையாடுகிறது… கை கால் கழுவிட்டு சாப்பிட வாடா…” உள்ளே சென்று தட்டொன்றில் கஞ்சியை வார்த்து வைக்கிறாள் ரெமி.

“சின்னக்கா என்ன சாப்பாடு ?” அவசரமாகக் கைகால்களை அலம்பி விட்டு வந்தவனின் முகம் சாப்பாட்டைக் கண்டவுடன் சுருங்கிப் போகிறது.

“என்னனை இண்டைக்கும் கஞ்சியே…? தொட்டுச் சாப்பிட மாசிச் சம்பலாவது வைச்சிருக்கலாமே…?”

“ஓம்… ஓம்… அப்பு இரண்டு மூண்டு மீன் பிடிக்கும்….அதையும் வித்துப் போட்டுக் கசிப்புக் குடிக்கும்… இந்த லட்சணத்தில உமக்கு மீனும் இறைச்சியும் கேக்குதோ…? இனி நிவாரணம் வரும்வரை இதுதான் சாப்பாடு…”

சொல்லியபடி தானும் ஒரு தட்டை எடுத்துக் கஞ்சியை வார்க்கிறாள். ஒரு வாய் வாயில் வைக்கு முன் கமலம் மாமி அவளை கூப்பிடுவது கேட்கிறது. அவசரமாகக் கையைக் கழுவிக் கொண்டு வெளியே

வருகிறாள். அவளைத் தேவாவும் தொடர்கிறான், மாமியின் முகம் வழமைக்கு மாறாக இறுகி இருக்கிறது.

ரெமியால் அதன் காரணத்தை ஊகிக்க முடியவில்லை…

“என்ன மாமி ஒரு மாதிரியிருக்கிறியல்..? ஏதும் பிரச்சினையே…?”

“நான் ஆஸ்பத்திரியில உங்கட அம்மாவக் கண்டனான்… யேசுதாசனுக்குக் கொஞ்சம் கடுமையாகக் கிடக்குதெண்டு அந்தரப்பட்டுக்கொண்டு நிண்டவ…”

நடந்துவிட்டதை அந்தப் பிள்ளைகளிடம் பக்குவமாய்ச் சொல்ல வேண்டும் என்ற அக்கறையும் கவனமும் மாமியிடம் இருக்கிறது…

ரெமி பதில் ஏதும் கூறாமல் மாமியின் முகத்தைப் பாக்கிறாள்… அவள் இதயம் பயத்தால் வேகமாகத் துடிக்கிறது.

“யேசுவுக்கு நிமோனியா வந்திருக்கு… கொழும்புக்கு உடன கொண்டு போக வேணும் எண்டு டொக்ரர் சொன்னதாச் சொன்னவ…”

“கொழும்புக்கோ?” அதிர்ச்சியடைந்தவளாய் கேட்கிறாள் ரெமி.

நாடு இன்று இருக்கும் நிலையில் கொழும்புக்குப் போவது என்பது லேசான காரியம் இல்லை என்பது ரெமிக்குப் புரிந்திருந்தது.

“இப்படித்தான் கொம்மாவும் அதிர்ச்சியோட இருந்தா… ஆனால் ஒரு மணி போல யேசு… “ உண்மையை அந்தச் சிறுவர்களிடம் எப்படிப் போட்டு உடைப்பது என்று தெரியாமல் தாடுமாறுகிறா கமலம் மாமி…

“அம்மாவும் யேசுவும் எங்க மாமி கொழும்புக்குப் போகப் போயினமே…?”

தேவாவின் கேள்விக்கு பதில் கூற முடியாது சிறிது நேரம் மௌனம் சாதிக்கிறா மாமி. அவவின் கண்கள் கலங்குகின்றன.

“ஏன் பேசாமல் இருக்கிறியல். அம்மா எங்க… யேசு எங்க…”

கேட்கும் போதே அழுகை பொத்துக் கொண்டு வருகிறது ரெமிக்கு…

“யேசுவிண்ட சீவன் ஒரு மணிக்குப் போட்டுது… அம்மா உடம்பை எடுத்திட்டு வாரதுக்கு ஆஸ்பத்திரியில நிக்கிறா… கொப்பருக்கும் வழியில சொன்னனான். அவரும் ஆஸ்பத்திரிக்குப் போய்ட்டார்.”

கமலம் மாமி உண்மையை ஒருமாதிரி போட்டு உடைத்து விடுகிறா…

“என்ற யேசு… என்ற தம்பி யேசு…” ரெமியும்… தேவாவும் குழறி அழுகிறார்கள். இப்பொழுது மாமியும் வாய்விட்டு ஒப்பாரி வைக்கிறா… இவர்களின் கூக்குரல் கேட்டு அக்கம் பக்கத்தவர்கள் அங்கு ஓடி வருகிறார்கள்.

அலை 8

குடத்தனை மருத்துவ முகாமுக்கு ஒரு தாய் தன் குழந்தையைக் கொண்டு வருகிறாள்.

அந்தக்குழந்தைக்குக் காய்ச்சல், வயிற்றுப் போக்கு. பேரலையின் தாக்கத்தால் உடற் காயம்.

குழந்தை வீறிட்டுக் கத்துகிறது. அதனைச் சமாதானப்படுத்தத் தாயும், அதன் உறவினர்களும் படாதபாடு படுகின்றனர்.

மரியம்மாவின் இன்னுமொரு காயத்தில் நெருப்புத் துண்டொன்று வந்து விழுகிறது.

அவள் காதுகளில் குழந்தை ஒன்றின் அழுகுரல்… இல்லை அவள் குழந்தை யேசுதாசனின் அழுகுரல்…

அவள் சட்டென குழந்தையைத் தூக்குகிறாள்… அதனை மார்போடு அணைக்கிறாள். அதன் நெற்றியில் கை வைத்துப் பார்க்கிறாள்.

நெற்றி அனலாய்ச் சுடுகிறது.

“இங்கவந்து பார் ரெமி… என்ற பிள்ளைக்கு நெற்றி அனலாய்ச் சுடுகுது. மலேரியா வந்திட்டுப்போல…”

“ஐயோ..! என்ற பிள்ளை கைகால் அசைக்க முடியாமல் கிடக்குது…”

உடல் முழுவதையும் தடவுகிறாள்.

“என்ற பிள்ளையைக் காப்பாத்த ஆரும் இல்லையோ…?”

அவள் சிந்தனையில் ஒரு மின்னல். உடனே அதைத் தூக்கிக் கொண்டு டாக்டரிடம் ஓடுகிறாள்.

“டாக்டர் இவனைப் பாருங்கோ… இவனுக்கு என்னமோ செய்யுது… யமன்… யமன்.. கொண்டு போக முன்னம் காப்பாத்துங்கோ…டாக்டர்.”

டாக்டரின் கையைப் பற்றியவாறு கெஞ்சுகிறாள்.

மரியம்மாவின் கையில் சிக்கியிருந்த குழந்தையோ அன்னியப் பெண்ணின் பரிசத்தாலும் அவளின் அதிரடி நடவடிக்கையாலும் பயந்து வீறிட்டு அழுகிறது.

அவசர கருமமாக வெளியே போய் திரும்பிய அக்குழந்தையின் தாய் தன் குழந்தை மரியம்மாவிடம் சிக்கிப் படும்பாட்டைக் கண்டு பதறிப் போகிறாள். அவள் போட்ட கூக்குரலில் முகாமே சில கணப் பொழுது அல்லோலகல்லோலப்படுகிறது.

மருத்துவப் பணியாளருக்கு மரியம்மாவிடம் இருந்து குழந்தையைப் பிரிப்பதற்குள் போதும் போதும் என்றாகி விடுகிறது.

டாக்டர் மரியம்மாவைப் பரிதாபமாகப் பார்க்கிறார்.

மருத்துவப் பணியாளரின் உதவியுடன் அவளுக்கு வலுக்கட்டாயமாக நித்திரை மருந்து ஊசி மூலமாக ஏற்றப்படுகிறது.

மரியம்மாவின் நோய்க்கு இது நிரந்தரமான தீர்வு ஆகாது என்பது டாக்டருக்கு நன்கு தெரியும். ஆனாலும் உடனடி நிவாரணமாக இதைத் தவிர வேறு எதையும் அவராலும் செய்யமுடியாதுதான்.

அலை 9

யாழ் குடத்தனை

வராதமாமணி வந்தது போல 2002 இல் சமாதானப் பேச்சு வார்த்தைகள் அரசுக்கும் புலிகளுக்கும் இடையே தொடங்குகின்றன. அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் மக்கள் வாழ்விலும் சில சாதகமான விளைவுகளை ஏற்படுத்துகின்றன.

ஐந்து வருடங்களுக்கு மேல் வன்னியில் அஞ்ஞாத வாசம் செய்துவிட்டு சூசையின் குடும்பமும் சொந்த இடத்தில் மீண்டும் குடியேறிவிட்டது. பின்னும் ஒரு வாழ்க்கைப் போராட்டத்தைத் தங்கள் சொந்த மண்னில் எதிர் கொள்ளத் தொடங்கி விட்டார்கள்.

கபரியேல், ராசன், அன்றனி அகியோர் காணாமல் போய் பத்து வருடங்கள் ஓடிவிட்டன. ஆனால் அவர்கள் நினைவுகளை மட்டும் காலவெள்ளத்தால் அடித்துச் செல்ல முடியவில்லை. அவர்கள் உறவுகளின் உள்ளங்களில் அழியாத கோலங்களாய் நிலைத்து விட்டார்கள்.

தாய்மைத் தவம் இன்னும் தொடர்கிறது. மரியம்மா இன்று காணாமல் போனவர்களுக்கான அன்னையர் முன்னணியின் அங்கத்தவள். அவள் தேடுதல்கள் முடியாத தொடர்கதையாகவே இருந்து வருகிறது.

அப்பாவிகளான தன் உறவுகளுக்குக் கடல் நடுவே நிகழ்ந்த கோரம் மேரியின் உள்ளத்தைக் குமுற வைத்தது. அவள் கடற்புலியாய்க் களம் நோக்கிச் சென்று எட்டு வருடங்கள் பூர்த்தியாகி விட்டது. அவளது திறமை இன்று அவளை கடற்புலி அணியொன்றின் கப்றனாக மாற்றியிருந்தது.

கடந்த காலங்களில் போர்… சூசையின் குடும்பத்தில் தன் கோரப்பல்லை ஆழமாகப் பதித்து விட்டது. வறுமை விரக்தி இவற்றுக்கெல்லாம் மேலாக யேசுதாசனின் திடீர் மறைவு… சோதனை மேல் சோதனையை எதிர்கோண்டதால்தான் என்னமோ உழைப்பினால் உரமேறிய இவர் உடம்பு போல உள்ளமும் வைரித்துப் போயிற்று.

காலந்தான் எவ்வளவு பெரிய மருத்துவன்… அவனால் ஆற்றப்படாத புண்கள்தான் உண்டோ…? ஆனால் பத்துமாதம் பத்தியமிருந்து… ஐந்து பிள்ளைகளைப் பெற்ற மரியம்மாவின் புண்கள் மட்டும் மேலுக்குக் காய்ந்து போனாலும் உள்ளே குமைந்து கொண்டு அடிக்கடி வலியை ஏற்படுத்தத் தவறவில்லை. அதற்காக…. இறந்தவற்றுக்காக நிகழ்காலத்தைப் பலிகொடுக்க அவள் விரும்பவில்லை. உள்வலியைத் தாங்கிக் கொண்டு வாழ்க்கையை எதிர்கொள்ள அவளும் தயாராகி விட்டாள்.

சூசை தொழிலுக்குப் போக ஆயத்தமாகிக் கொண்டிருந்தான்… கிறிஸ்துமஸ் பண்டிகைக் கொண்டாட்டங்களில் மூழ்கி நேற்றைய பொழுது மகிழ்ச்சியாகப் போய்விட்டது. இன்று ஞாயிற்றுக்கிழமை… பூசை என்று தேவாலயத்துக்குப் போய்விட்டால் வரும் வருடப் பிறப்புக்குப் பிள்ளைகள் விரும்புவதை வாங்கிக் கொடுக்க முடியாது போய் விடும். ஆண்டவரைச் சில நிமிடங்கள் உளமாறப் பிரார்த்திக்கிறான்.அத்துடன் அவனது வைதிகக் கடமைகள் முடிந்து விடுகிறது.

கதியால்களில் உலரப் போட்டிருந்த வலையை இழுத்தெடுத்து ஒழுங்கு செய்வதில் அவன் கவனம் குவிந்திருக்கிறது.

“தரை மேல் பிறக்க வைத்தான்,,, பெண்களைக்

கண்ணீரில் மிதக்க வைத்தான்…”

அவனை அறியாது அவன் வாயிலிருந்து சினிமாப் பாட்டொன்று உரக்கப் பிறக்கிறது.

“பாட்டெல்லாம் பலமாக் கிடக்குது…?” கேள்வியுடன் டானியல் அவன் வீட்டுப் படலையைத் திறந்து கொண்டு உள்ளே வருகிறான்.

“ சொந்த இடத்திலே வந்து குந்தினோன பழைய ஞாபகம்.” சூசை தனது வேலையிலிருந்த கவனத்தைத் திருப்பாமலே சொல்லுகிறான்.

“ம்… இடம் பெயர்ந்து போய் காம்பிலையும் ரோட்டிலையுமெண்டு வாழ்க்கையே சலிச்சு போட்டுது…போனகாலத்தை நினைத்துப் பார்க்கவே டானியலுக்குப் பயம் ஏற்படுகிறது.”

“அதுமட்டுமே …என்ற பிள்ளையைப் பறிகொடுத்தன். குளத்திலையும் குட்டையிலையுமெண்டு மீன் பிடிச்சு என்னத்தை வாழுறது…? தந்த நிவாரணமும் ஒழுங்காக் கிடைக்காம நாங்கள் பட்ட துன்பம் எல்லாத்தையும் அந்த ஆண்டவன்தான் அறிவான்.”

“ம்… இங்க வந்தும் என்ன…? எல்லாம் புதுசாத்தான் தொடங்க வேண்டிக் கிடக்குது.”டானியலின் வார்த்தைகளில் சலிப்பு.

“அது சரி டானியல் . நீ புதிசா ஒரு போட் வாங்கப் போறாயெண்டு கதையடிபடுகுது.”

“ஓம் சூசை…என்ற மருமகன் வெளிநாட்டில இருந்து அனுப்பின காசை என்ற மகன் லாரன்சுக்கு ஒரு முதலா ஆக்கிப் போடலாமெண்டு பாக்கிறன் .அவனோட நானும் ஒத்தாசையாக இருக்கலாம். வயசும் போகுது. என்னாலையும் தனிச்சு நிண்டு தொழில் செய்யேலாதுதானே…?”

வெளிநாட்டுத் தொடர்பு இவர்கள் சமூகத்திலும் சில நல்ல மாற்றங்களை ஏற்படுத்தத்தான் செய்தது. வெறும் குடிசைகள் இன்று கல் வீடுகளாக மாறி வருகின்றன. சம்மட்டிமாரின் போட்டுகளில் தொழில் செய்து கூலிமட்டும் பெற்று வாய்க்கும் வயித்துக்கும் போதாதாய் வாழ்ந்த நிலையிலும் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. இன்று இளைஞர்கள் சிலர் புதிதாக மெசின் போட்டுக்கள் வாங்கித் தொழில் செய்யத் தொடங்கி விட்டார்கள். இவர்கள் வாழ்விலும் ஒளிக்கீற்றுக்கள் தென்படத்தான் செய்கிறது. ஆனாலும் அங்கும் இங்குமாய்ப் படையினரின் அடாவடித்தனங்கள் இன்றும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

அது போதாதென்று ஆழ்கடலில் பிற பகுதி மீனவர்களினாலும் பல சங்கடங்களை எதிர்கொள்ள வேண்டி நேரிடுகிறது. அவர்கள் இலங்கை எல்லைக்குள் மீன் பிடிப்பதோடல்லாமல் அவர்களது றோலர் படகுகளால் இலங்கை மீனவர்களின் வலைகளும் சேதப்படும் சம்பவங்களும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

ஆனால்… வெளிநாட்டுத் தொடர்புகள் இல்லாத சூசை போன்றவர்களின் வாழ்வு என்றும் மாறாத பழையநிலையிலேயே தொடர்கிறது

“அது நல்லம் டானியல். எத்தனை நாள்த்தான் நாங்களும் இந்தச் சம்மட்டிமாருக்கு உழைச்சு உழைச்சு உடம்பு தேயிறதுதான் மிச்சம்.. ம்… கபரியிருந்தால் கடன்பட்டாவது ஒரு போட்டை வாங்கிப் போடுவன்.”

சூசையின் பேச்சில் ஆதங்கம் இழையோடுகிறது. இவ்விருவருக்கும் தேத்தண்ணியைக் கொண்டு வந்த மரியம்மாவும் இவர்கள சம்பாசனையில் இணைந்து கொள்கிறாள்.

“போனகிழமை நடந்த காணாமல் போனவையிண்ட கூட்டத்தில உயிரோட இருக்கிற பத்து இளைஞர்கள வருகிற ரெண்டாந் திகதி அரசு வெளியில விடுகிறதாச் சொன்னவ. யேசுவே! சுவாமி இதிலயாவது என்ற பிள்ளையும் இருக்க வேணும்… “ மனமுருகி வேண்டி நிற்கிறாள் மரியம்மா.

“இப்படியே அங்க விடுகிறாங்கள்…இங்க விடுகிறாங்கள் எண்டு முழுசா பத்து வருசம் ஓடிட்டுது.” சூசையின் குரலில் அவநம்பிக்கை தொனிக்கிறது. ஆனால் ஒரு நூலிழையிலாவது நம்பிக்கையிருக்குமானால் அதை விட்டுவிட மரியம்மா தயாரில்லை. பலமான அந்த நம்பிக்கைதான் அவள் புண்ணை ஆற்றும் மருந்தாகவும் இருந்து வந்தது.

“எனக்கு நம்பிக்கையிருக்கு என்ற பிள்ளை உயிரோட இருப்பான்.”

“சரி நான் தொழிலுகுப் போக நேரமாச்சுது. சாப்பாட்ட எடுத்து வை.”

மரியம்மா கபரியேல் பற்றிக் கதைக்கத் தொடங்கினால் அதற்கு முடிவு இருக்காது என்பது சூசைக்குத் தெரியும். எனவே அந்தக் கதைக்ககு முற்றுப்புள்ளி வைக்கும் முகமாக அவன் சொல்லுகிறான்.

மரியம்மா உள்ளே சென்று சாப்பாட்டுப் பார்சலையும் தண்ணீரையும் கொண்டு வந்து கணவனிடம் கொடுக்கிறாள்.

“ஒண்டுக்கும் யோசியாதை தங்கச்சி…நம்பினவைய ஆண்டவன் கைவிட மாட்டான். அப்ப நாங்கள் போட்டு வாறம்.” டானியல் ஆறுதல் கூறியபடி விடைபெறுகிறான்.

“தேவதாசனை ஊர் சுற்றாமல் ஞாயிறு ஆராதனைக்குப் போகச் சொல்லு. அப்பிடியே யோசப்புப் பாதிரியாரிட்ட கோயிலில எதாவது வேலை போட்டுத்தரச் சொல்லிக் கேக்கச் சொல்லு.”

தேவதாசன் கடலுக்கு வர ஆசைப்பட்டாலும் அதைச் சூசை அனுமதிப்பதில்லை. கபரிபோல இவனையும் இழக்க சூசை

விரும்பவில்லை. ஒ.எல் வரை படித்த அவனை எதாவது சின்ன வேலையிலாவது அமர்த்திவிட வேண்டுமென்று துடித்தான் சூசை.

“அதையெல்லாம் நான் பார்க்கிறன். நீங்கள் கவனமாய்ப் போட்டு வாங்கோ..”

அவர்களுக்கு விடை கொடுத்து விட்டு அவர்கள் போவதையே கண் கொட்டாமல் சிறிது நேரம் பார்த்து நின்றாள் மரியம்மா..அவர்களுடன் கபரியும் போவது போல ஒரு பிரமை தட்டுகிறது. தலையை உலுக்கி அந்த நினைவுகளில் இருந்து வலுக்கட்டாயமாக விடுபட முயன்றவளாய் குடிசையுள்ளே வருகிறாள்.

ரெமி படுக்கையிலிருந்து எழாதவளாய் கதைப் புத்தகம் ஒன்றில் ஆழ்ந்திருக்கிறாள். மரியம்மாவுக்கு ரெமியைப் பார்க்கும் போது பெருமைதான். எத்தனையோ கஸ்டங்களுக்கிடையே அவள் ஏ,எல் கலைத்துறைப் பரீட்சையில் இரண்டாவது தடவையில் சித்தியெய்திவிட்டாள். பல்கலைக்கழகம் போகப் புள்ளிகள் போதாவிட்டாலும் யாழ்ப்பாணக் கல்வியியல் கல்லூரியில் அவளுக்கு இடம் கிடைத்து விட்டது, நாளை அவள் ஆரம்பக் கல்வி ஆசிரியையாக வெளியேறுவாள்… தங்கள் வாழ்வு போல இல்லாமல் அவள் வாழ்வு ஒளிமயமாகத் திகழப்போகிறது. மரியம்மாவின் உள்ளம் ஈன்ற பொழுதிலும் பூரிப்படைகிறது..

இந்த நேரத்தில் மரியம்மாவால் யோசப்புப் பாதிரியாரை நினைவு கூராமல் இருக்க முடியவில்லை. அவரது பண உதவியும் ஊக்கமுமே ரெமியின் இந்த வளர்ச்சிக்குக் காரணம் என எண்ணியவள் அவருக்கு மனசார நன்றி கூறுகிறாள்.

ஆனாலும் விடியற் பொழுதில் வேலைகளை விட்டுவிட்டு ரெமி கதைப்புத்தகத்தில் ஆழ்ந்திருப்பது சற்று எரிச்சலையே தருகிறது.

“நேற்றைக்கு முழுக்க இந்தப் புத்தகத்தோட கிடந்தது பத்தாம இப்பவும் தொடங்கிட்டியே படிக்க…”

“ராத்திரியில தலமாட்டில விளக்கு வைச்சு படிக்கக் கூடாதெண்டா இப்பவும் விடமாட்டியே…?” சுவாரசியாமான பகுதியை வாசிக்கும் வேளையில் தாய் தன்னைக் குழப்பியது ரெமிக்கு எரிச்சலைத் தருகிறது.

“கதையை விட்டுட்டு மாதா கோயிலுக்கு வெளிக்கிடுகிற் வேலையைப் பாரு. பூசை தொடங்கப் போகுது.”

புத்தகத்தைப் போட்டுவிட்டு பாயைச் சுருட்டி பரணில் வைத்தவளுக்குத் தீடீரென்று தமக்கை நாளை வருவதாகச் சொல்லியது ஞாபகம் வருகிறது. அவள் உள்ளம் பூரிப்பால் மலர்கிறது.

“அம்மோய் அக்கா நாளைக்கு வாறதெண்டு சொன்னவளில்லை.”

“இப்பத்தான் ஞாபகம் வருகுதோ..? அவளுக்குப் பிடிச்ச கறி வாங்க நான் சந்தைக்குப் போக வேணும். தலைக்கு மேல வேலை கிடக்குது. நீ ஒரு ஒத்தாசையும் செய்யாமல் புத்தகம் வாசிக்கிறா…”

“ஏன் நான் விடியச் சமையலுக்கு உதவி செய்து போட்டுத்தானே புத்தகம் வாசிச்சனான். நானும் இண்டைக்கு றவுனுக்குப் போக வேணும். அக்காவுக்குப் பிறந்தநாள் வருகுதில்லை…”

அவர்கள் சம்பாசனையைக் குழப்பியபடி அந்தத் திடீர்ச் சத்தம்… பெரும் வெடிச்சத்தம்… இதுவரை அவர்கள் கேட்டிராத பேரோசை…

கிபீர் விமானம் சீறி வந்து குண்டு மழை பொழிகிறதா…?

அவர்களால் சரியாக ஊகிக்க முடியவில்லை. அவர்கள் இருவரும் சில கணப்பொழுது திகைத்து நிற்கிறார்கள்.

“என்னடி பிள்ளை சத்தம்…பேந்தும் சண்டை தொடங்கிட்டோ…?” மரியம்மாவின் குரல் கிலியில் நடுங்குகின்றது.

ரெமி பதிலேதும் கூறாது வெளியில் ஓடி வருகிறாள். அவளை மரியம்மாவும் தொடர்கிறாள். அவர்கள் முன்னே பெரிய வெடிச் சத்தத்துடன் சீறிக்கொண்டு அலை உயர்ந்து வருகிறது.

தெளிந்த நீர் இல்லாமல் கழிவு நீர் போல எழுந்த அலைக் கூட்டத்தை எதிர்த்து என்ன செய்வது என்று அறியாதவராய் விறைத்து நிற்கையிலே வெளியில் சென்றிருந்த தேவதாசன் சைக்கிளோடு இழுபட்டு உள்வரவும் முடியாமல் வெளியேறவும் முடியாமல் அலையால் அலைக்கழிக்கப் படுகிறான்.

“ஐயோ காப்பாத்துங்கோ…அலை இழுக்குது…”

அவன் குரல் ஒலியின் வேகத்திலும் அசுர வேகத்தில் வந்த அலை எதிர்த்து ஒடாதவாறு கடலை நோக்கி மூவரையும் இழுத்துச் செல்லுகிறது.

“ஐயோ.. என்ர பிள்ளை… “கத்தியவள் ரெமியின் கையை இறுகப் பற்றி இழுக்க முயற்சி செய்தபடி அலை இழுப்பில் தானும் சிக்கிக் கொள்கிறாள். ஆனால் ரெமி அவள் கையில் இருந்து விலகி சில கணங்கள்

சென்றிருந்தன. தெவதாசனை அலை மூடி அவன் மரியம்மாவின் கண்களில் இருந்து மறைந்து விட்டான்.

“அம்மா என்னை பிடியணை… ஐயோ… அலை என்ன மூடுது.”ரெமியின் குரல் மட்டும் மரியம்மாவின் செவிப்பறையில் அவலமாய் ஒலிக்கிறது.

மரியம்மாவையும் அலை மூழ்கடிக்கத் தொடங்குகிறது.

“ஐயோ யேசப்பா…! என்ற பிள்ளைகளைக் காப்பாத்தும்.” அவள் கைகளை உயர்த்தி ஆண்டவனை இரஞ்சுகிறாள். பாஞ்சாலிக்குக் கண்ணனால் மானங்காக்கப் புடவை கிடைத்தது போல இவள் கைகளுக்கும் பெரிய மரக்கொப்பொன்று அகப்படுகிறது.

ஆழ்கடல் நடுவே தத்தழிக்கும் போது துரும்பைக் கூடப் பற்ற மனம் விழைவது மனித இயல்பு. தன்னிச்சையான செயல்.

மரியம்மாவும் அந்த இயல்பூக்கத்தால் உந்தப்பட்டு அந்த மரக்கிளையை இறுகப் பற்றிக் கொள்கிறாள். கடல் நீர் அவள் நாசிவரை வந்து மூச்சுத் தினறலை ஏற்படுத்தவே தன்னையறியாது உந்தி மரக்கிளையில் ஏறிக்கொள்கிறாள்.

கிளைகள் நிறைந்த அந்தத் தேக்கு மரம் இன்று மரியம்மாவின் உயிரைக் காத்து விட்டது. அவள் மரத்தில் இருந்து பார்க்கையிலேயே பலர் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்படுகின்றனர். சில நிமிடங்களில் நீர் மெல்ல மெல்ல வடிந்து செல்கிறது.

ஆண்டவன் மரியம்மாவின் பிரார்த்தனையை ஏற்று அவள் பிள்ளைகளைக் காக்கவில்லை. மண்டையில் இருந்து தொடங்கிய விறைப்பு அவள் உடல் எங்கும் பரவுகிறது. அவளது இயலாமை, உள்ளத்தைக் கண்டதுண்டமாய்க் குதறியெறிகிறது.

அலை வந்த வேகத்தில் திரும்பிச் சென்று கடலோடு சங்கமித்து விடுகிறது. மரியம்மாவையும் தொண்டர்கள் சிலர் முகாமில் சேர்த்து விட்டார்கள். அவள் உடலுக்குக் காப்புக் கொடுத்தாகி விட்டது, ஆனால் அவள் உள்ளத்துக்கு… … .?

அலை 10

ஒரு நித்திரைக்கான ஊசியால் எத்தனை நேரம்தான் மூளையைச் சோர்வில் வைத்திருக்க முடியும். ஆழ்மனம் ஓயாமல் விழித்திருக்கையில் நித்திரையும் விடைபெற்று ஓடிவிடுகிறதே…

மரியம்மாவின் மனத்திரையில் சுனாமியின் கோரத்தாண்டவம் திரும்பத் திரும்ப அரங்கேறிக் கொண்டிருந்தது.

அம்மா… என்னை அலை இழுக்குது… “ரெமியின் கடைசிக் குரல்… காதுகளை வண்டு போலக் குடைகிறது. கண்களில் தேவதாசனும் ரெமியும் அலையால் மூடப் படும் காட்சி…

ஓர் அலையல்ல … … … ஓராயிரம் அலைகள் ஒன்று திரண்டு அவள் மனக்கதவைத் தூள் தூளாக்கிச் சிதறடித்துக் கொண்டிருந்தன.

“என்ற பிள்ளயலை என்னால காப்பாத்த ஏலாமல் போட்டுது.”

ஆயிரம் தடவைகளுக்கு மேல் இந்த வார்த்தைகள் அவள் வாயிலிருந்து வெளிப்பட்டுவிட்டன.

“அம்மா என்னக் காப்பாத்து எண்டு கத்தேக்க இந்த ரெண்டு கையும் சும்மா கிடந்தது.”

தன் கைகளால் மிருகத்தனமாய்த் தன் தலையில் அடிக்கிறாள் மரியம்மா. மண்டையில் கைகள் ஏற்படுத்திய காயத்திலிருந்து இரத்தம் கசியத் தொடங்கி விட்டது.

அருகில் இருந்தவர்களால் அவள் வேகத்துக்கு ஈடுகொடுத்து அவள் செயல்களைக் கட்டுப்படுத்துவது பெரும் சிரமமாயிருக்கிறது.

சாப்பாடு தண்ணியைக் கூடச் சரியாகத் தொடாத அவளிடம் இந்த யம பலம் எங்கிருந்து வந்தது என்பது அவர்களுக்கு விளங்காத புதிராகவே இருக்கிறது.

சிறுவர்கள் பயத்துடன் சற்றுத் தூரத்தில் நின்று வேடிக்கை பார்க்கிறார்கள்.

“என்ற பிள்ளையல் செத்தாப் பிறகு நான் மட்டும் ஏன் உயிரோட இருக்கிறன். என்ன மட்டும் இந்த நாசமாப் போன கடல் ஏன் விட்டு வச்சிருக்குது.”

குற்ற உணர்வால் மரியம்மா குமுறுகிற போது அவள் தற்கொலை செய்து விடுவாளோ என்ற அச்சம் சூழ உள்ளவர்களுக்கு எற்படுகிறது.

டொக்றர்கள், பல சமயம் ஊசி மூலம் அவளை நித்திரையில் ஆழ்த்த வேண்டியிருக்கிறது.

உளவளத் துணையாளர்களும் மனநல மருத்துவர்களும் மரியம்மாவின் மனவடுவை வெறும் கவுன்சிலிங்கால் நீக்கிவிட முடியாததென்பதை உணராமலில்லை. ஆனால் பல்வேறு வேலைப் பளுக்களுக்கு இடையில்

உடனடியாக மனநோய்க்கான மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடுகளைச் செய்வது அவர்களால் முடியாதிருந்தது.

அவர்கள் கவலையைச் சற்றுக் குறைப்பது போல மேரி தாயைப் பார்க்க அந்த முகாமுக்கு வருகிறாள்.

அலை 11

மேரி எத்தனையோ களங்களைக் கண்டவள்தான். தன்னோடு நெருங்கிப் பழகிய தோழிகளை இழக்க நேர்ந்த போது அவள் மனதில் கலக்கம் உண்டகாமல் இருப்பதில்லை. ஆனால்… அதிலிருந்து அவள் விரைவில் விடுபட்டுவிடுவாள். போராளிகளுக்கு வழங்கப்படும் பயிற்சி அத்தகைய மனநிலையை அவர்களுக்குக் கொடுத்திருந்தது.

போர்க்களங்களில் கண்ட அவலத்திலும் சுனாமி அனர்த்தம் போரளிகள் உட்பட அனைவரையும் கதிகலங்க வைத்துவிட்டது. அதற்கு மேரியும் விதிவிலக்கல்ல.

மேரி தனது தந்தை சகோதரர்களின் இழப்பை அறிந்த போது மனதளவில் பெரும் பாதிப்புக்கு உள்ளாகத்தான் செய்தாள். எனினும் தன்னைச் சுதாகரித்துக் கொண்டு முல்லைத்தீவுப் பிரதேசத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காய் கடந்த ஏழு நாட்களாய் ஒருநாளைக்குப் பதினைந்து மணித்தியாலத்துக்கு மேல் வேலை செய்திருக்கிறாள். பிணங்களைத் தூக்கிக் கூட்டாகப் புதைத்துப் புதைத்து ஒருவகையில் அவள் மனம் விறைத்து வைரித்துப் போய்விட்டது. பலரது கொடூரமான அனுபவங்களைக் கேட்டதால்தான் என்னமோ தனது குடும்பத்துக்கு எற்பட்ட அவலத்தை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் அவளுக்கு வந்திருந்தது.

ஆனால் அந்தப் பக்குவ உணர்வு தாயைப் பார்த்தவுடனே உடைந்து சிதறியது. தாயின் கோலங்கண்டு அவள் உள்ளம் ஆடிவிட்டது. அவள் உள்ளிருந்து கட்டுப்படுத்த முடியாது கேவல்கள் தோன்றி அழுகையாக வெடித்தது. அவள் தாயைக் கட்டிக் கொண்டு சில பொழுதுகள் கதறியழுது விட்டாள்.

ஆரம்பத்தில் மரியம்மாவால் மேரியைக் கூட அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. ஆனால் மேரியின் பரிசம் பட்டவுடன் அவளது தாய்மை விழித்துக் கொள்கிறது. உடம்பில் புதிய இரத்தம் ஊற்றெடுப்பது போல் ஓர் உணர்வு… மேரியின் அழுகையுடன் மரியம்மாவின் அழுகையும் சங்கமிக்கிறது.

கரைகாணாத இருண்ட நரகத்தில் நடந்து கொண்டிருந்த அவளுக்கு முன் முதல் முதலாக ஓர் ஒளிக்கீற்று…

கடந்த ஏழு நாட்களின் பின் கனவு நிலையிலில்லாது நனவு நிலையிலேயே புன்னகை ஒன்று அவள் இதழ் கடையில ……..இதுநாள் வரையில்லாத ஒளி கண்களில்…

பெரிய ஊழியழிவைக் கண்டபின் இயற்கை ஓர் சமநிலையடையுமே அத்தகைய சமநிலை மரியம்மாவிடம் ஏற்படுகிறது.

இன்றுவரை மனநோயாளியாகத் தங்களால் கணிப்பிடப்பட்ட மரியம்மாவில் மேரியின் வருகை ஏற்படுத்திய மாற்றம் கண்டு உளவளத் துணையாளர்களும், வைத்தியர்களும் அதிசயித்து நிற்கிறார்கள்.

உறவுப் பிணைப்புக்கள் வலுகட்டாயமாக அறுக்கப்பட்ட போது வலுவிழந்திருந்த மரியம்மா இன்னுமொரு பிணைப்பு இருப்பதுகண்டு புத்துயிர் பெற்றுவிட்டாளா…? மனம் என்பது மிக நுண்ணியது. அணுவைத் துளைத்து அதன் கூறுகளைச் சரியாகக் கணகிட்ட மனிதனால் மனதின் ஆழத்தை அளவிட முடியவில்லை என்பதை அந்த நேரத்தில் மருத்துவர்கள் ஒப்புக்கொள்ள வேண்டியிருந்தது.

எது எவ்வாறாயினும் மீண்டும் தொடங்கும் மிடுக்காய் தோன்றியிருக்கும் இந்ச் சிறு மாற்றம் நிலைக்க வேண்டும் என அங்கிருந்த அனைவரும் மனதார இறைவனைப் பிரார்த்தித்துக் கொள்கின்றனர். நாமும் அவர்களுக்காகப் பிரார்த்திப்போமாக…!

(முடிவுற்றது)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *