ஆபீசர் வீட்டு அம்மா

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: April 29, 2018
பார்வையிட்டோர்: 24,603 
 
 

“ஆபீசர் வீட்டு அம்மா உங்களைக் கையோடு அழைச்சுகிட்டு வரச் சொன்னாங்க!”

பியூன் சின்னமணி வந்து சொன்னதும் பங்களாவை ஒட்டிய அவுட் ஹவுஸில் ஒரு ஃபைலைப் புரட்டிக் கொண்டிருந்த காம்ப் கிளார்க் வைத்திக்கு வயிற்றில் புளியைக் கரைத்தது போலிருந்தது.

பரபரப்புடன் எழுந்தான்.

பவ்யமாக பங்களாவுக்குள் அடியெடுத்து வைத்தவன் வரவேற்பறையில் தனக்காகக் காத்திருந்த ஆபீசர் வீட்டு அம்மாவைப் பார்த்ததும் கை கூப்பினான். “மேடம்,
கூப்பிட்டீங்களாமே..?” என்றான்.

கூந்தலை விரித்துப் போட்டு, பிரஷ்ஷால் வருடி நின்ற மானேஜரின் மனைவி ரம்பா, வைத்தியைப் பார்த்துப் புன்முறுவலித்தாள்.

“வாங்க மி°டர் வைத்தி, நம்ம கார்டன்ல நிறையப் புளிய மரம் இருக்கே… அதில் விளைகிற புளி வீணாகத்தானே போகும்?” என்று ஆரம்பித்தாள்.

“இல்லீங்க மேடம்! வருஷா வருஷம் நம்ம கார்டன்ல விளைகிற புளியைப் பங்கு பிரிச்சு, இங்கே பங்களாவில் வேலை பார்க்கிற வாட்ச்மேன், பியூன், காம்ப் கிளார்க், டபேதார், கார்டனர் எல்லோருக்கும் கொடுத்துடறது முன்பு இங்கிருந்த மானேஜர் சம்சாரத்தின் வழக்கம்..”

“மி°டர் வைத்தி, இந்தத் தடவை வேறவிதமாப் பண்ணலாமா?”

“எப்படிங்க மேடம்?”

“புளியைச் சுத்தம் பண்ணினதும் எல்லாப் புளியையும் நீங்க கொண்டுபோய் மண்டியில் நல்ல விலைக்குப் போட்டுக் காசைக் கொண்டு வந்திடுங்க, என்ன?”

“ஆங்..! ” காம்ப் கிளார்க் வைத்திக்குத் தூக்கிவாரிப் போட்டது.

“ஒரு மண்டிக்கு நாலு மண்டியில் விசாரிச்சு, நல்ல விலைக்குப் போட்டுட்டுக் காசைக் கொண்டு வரணும், தெரிஞ்சுதா? உம்.. நீங்க போகலாம்!”

வைத்தி தன் இருக்கைக்கு யோசனையுடன் திரும்பினான்.

பியூன் சின்னமணியும் கூட வந்தான்.

வைத்தி வேதனையோடு சொன்னான்: “பார்த்தியா சின்னமணி, நான் மானேஜரின் காம்ப் கிளார்க்கா, இல்லை, புளி வியாபாரியா? அந்த வியாபாரம் செய்தால் கூட கொஞ்சம் மரியாதை இருக்கும். நிறையப் பணமும் சம்பாதிக்கலாம். என்ன பிழைப்பு இது?”’

“உனக்கென்னப்பா யோகக்காரன்! மானேஜர் பங்களாவில் உத்தியோகம்!” பொருமினார் அக்கவுண்டண்ட் ஆராவமுதன்.

“நீங்கதான் சார், மெச்சிக்கணும்!” என்றான் வைத்தி. கடைத் தெருவில் தற்செயலாக அவர்கள் சந்திக்க நேர்ந்தபோது நடைபெற்ற உரையாடல் இது.

“வைத்தி, எல்லாத்துக்கும் கொடுப்பினை வேணும். நாங்க எப்ப பார்த்தாலும் ஆபீசைக் கட்டிண்டு அழறோம். நீ என்னடான்னா ஜாலியா, சொகுசுக் காரில் ஆபீசரோட டூர், இன்ஸ்பெக்ஷன், ஓசிச் சாப்பாடு, பிராஞ்ச் ஆபிசிலே நல்ல கவனிப்பு, மரியாதையான உபச்சாரம்… அடடா!”

மனுஷன் சரியான வற்யிற்றெரிச்சல் பேர்வழி.

பார்க்கிறபோதெல்லாம் ஆராவமுதன் இப்படித்தான் புலம்புவது வழக்கம்.

தான் ஆபீசர் வீட்டு அம்மாவிடம் அகப்பட்டுக் கொண்டு அல்லாடுவதை அவரிடம் கூறமுடியுமா? கூறினால், அவர் நம்பத்தான் செய்வாரா? யோசனையுடன் தன் டூவீலரைக் கிளப்பினான் வைத்தி.

“மொத்தம் 150 கிலோ புளிங்க மேடம். இப்ப கிலோ ௫௦ ரூபாய்க்கு மேலே எங்கேயும் வாங்க மாட்டேங்கறாங்க. இதுதான் இன்னியத் தேதியில் நல்ல விலைன்னு எல்லாக் கடையிலேயும் விசாரிச்சுப் பார்த்து வித்துட்டேங்க மேடம், இந்தாங்க பணம்!”

பணத்தை வாங்கி, கணக்குப் போட்டு, சரியாக இருக்கிறாதா என்று இரண்டு மூன்று தடவை எண்ணிப் பார்த்தாள் ஆபீசர் வீட்டு அம்மா. பின் ஒரு தாங்க்° கூடச் சொல்லாமல் உள்ளே போய் விட்டாள். பக்கத்தில் நின்றிருந்த பியூன் சின்னமணி, கார்டனர் ராமசாமி இருவருக்கும் ஏமாற்றமாக இருந்தது. புளி கொடுக்காவிட்டாலும் போகிறது. மரங்களில் ஏறி, புளியம்பழம் உலுக்கி, தோல், கொட்டை நீக்கிச் சுத்தம் செய்ததற்குக் கூலியாகவாவது ஒரு தொகை கொடுக்கக் கூடாதா?

ஒருமுறை கீழத்தெரு கருமாரி கோயிலில் திருவிழா என்று மானேஜரைக் குடும்பத்துடன் அழைத்திருந்தார்கள். மானேஜர் தன் அருமை மனைவியுடன் போயிருந்தார். அபிஷேக ஆராதனை முழ்்து, சர்க்கரைப் பொங்கல், வெண் பொங்கல், பஞ்சாமிர்தம் போன்ற பிரசாதங்களை எவர்சில்வர் பாத்திரங்களில் நிறையப் போட்டுக் கோயில் தர்மகர்த்தா கொடுக்க, மானேஜர் காரில் கொண்டுவந்த அந்தப் பாத்திரங்கள் கோயிலுக்குத் திரும்பப் போகவேயில்லை! பூசாரி தினம் பங்களாவுக்கு வந்து, படாதபாடு பட்டுக் கெஞ்சி, அதன் பிறகே, பாத்திரங்கள் திரும்பக் கோயிலுக்குக் கிடைத்தன. அப்படித் தங்கமான குணம் படைத்த ஆபீசர் வீட்டு அம்மாவா புளி விற்ற காசை வேலையாட்களுக்குக் கொடுக்கப் போகிறாள்? பைசா கூடப் பெயருவது கஷ்டம் என்று புலம்பி ஏமாற்றத்தோடு வைத்தியுடன் திரும்பினார்கள்
சின்னமணியும் ராமசாமியும்.

ஒரு வருடம் ஓடியது.

இந்த முறை கார்டனில் இருந்த புளியமரங்களில் சடை சடையாகக் காய்ப்பு. தலைவிதியே என்று புளியம்பழத்தை உலுக்கி, தோல் நீக்கி, கொட்டை அகற்றிச் சுத்தம் செய்து முடித்தார்கள் ஏவலர்கள், வயிற்றெரிச்சலோடு.

ஆபீசர் வீட்டு அம்மா வைத்தியை வரவழைத்து இம்முறையும் விற்று வரும்படிச் சொன்னபோது, வைத்தி மெல்ல வாயைத் திறந்தான். “மேடம், நம்ம ஆபீசில் ஆராவமுதன்னு ஒர்த்தர் அக்கவுண்டண்டா வேலை பார்க்கிறார். மண்டிகளில் அவருக்கு நெறயச் செல்வாக்கு இருக்குன்னு ஆபீ° பூராத் தெரியும். என்னை
விட அதிக விலைக்கு இந்தப் புளியைத் தள்ளிடுவாருங்க மேடம்..!”

ஆபீசர் வீட்டு அம்மா குளிர்ந்து போனாள். “அடடே! அவரை நாளைக்குக் காலையில் என்னை வந்து பார்க்கச் சொல்லுங்க வைத்தி!”

“எஸ் மேடம்!”

“இதோ பாருங்க மிஸ்டர் ஆராவமுதன், போன வருஷம் மிஸ்டர் வைத்தி கிலோ அம்பது ரூபாய்க்கு விற்றார். அவருக்குத் திறமை பத்தாதுங்கறது என் அபிப்ராயம். அதைவிட அதிகமான விலைக்கு நீங்க விற்பீங்கன்னுதான் உங்களை அனுப்பறேன்…

நல்ல விலைக்கு வித்துட்டுக் காசைக் கொண்டு வரணும்!”

“யெஸ் மேடம்!” என்று பவ்யமாகச் சொன்ன ஆராவமுதன் உற்சாகமாகக் கிளம்பினார்.

“டேய் வைத்தி! பாருடா எம்மேல ஆபீசர் வீட்டு அம்மா எத்தனை மதிப்பு, மரியாதை வெச்சிருக்காங்கன்னு! ஆபீஸ்ல இருக்கிற என்னைக் கூப்பிட்டு அம்மா இந்தப் பொறுப்பை என்கிட்டே கொடுக்கறாங்கன்னா என்ன அர்த்தம்? என் புகழ் அவ்வளவு பரவியிருக்குன்னுதானே?” மானசீகமாக வைத்தியிடம் பேசியபடி, மகிழ்ச்சியுடன் நடந்தார்.

மார்க்கெட்டில், மண்டி வீதியில் எல்லாக் கடைகளிலும் சுற்றி விலை விசாரித்தபோது அவருக்குப் பகீரென்றது.

“இப்பப் புளி நிறையக் காய்ப்பு. அதனால் விலை இறக்கம் சார்! கிலோ முப்பத்தி எட்டு ரூபாய்க்கு ஒரு பைசா கூட அதிகமாத் தர முடியாது..” என்று ஆராவமுதன் சென்ற எல்லாக் கடைகளிலும் கிட்டத்தட்ட இதையே சொன்னார்கள். போன வருஷம் கதை வேற சார். காய்ப்பே இல்லை. இப்ப ஏராளக் காய்ப்பு..”

ஆராவமுதன் இன்னும் சில கடைகளில் ஏறி இறங்கினார். ஒரு கடையில் சொன்ன நாற்பது ரூபாய்தான் அதிக விலை என்று தெரிந்து, வேறு வழியின்றி விற்றார்.
ஆபீசர் வீட்டு அம்மாவான ரம்பா, முக மலர்ச்சியுடன் ஆராவமுதனிடம் பணத்தை எண்ணி வாங்கினாள்.

“பரவாயில்லியே! புளியை கிலோ 60 ரூபாய்க்கு வித்துட்டீங்களே, பேஷ்! பேஷ்! அடுத்த வருடமும் உங்களைத்தான் அனுப்பணும். மிஸ்டர் வைத்திக்குத் திறமையே பத்தாது..”

பங்களா வாசற்படியில் கால் வைத்துக் கீழிறங்கியபோது ஆராவமுதன் ஒரு கிலோவுக்கு இருபது ரூபாய் கைக்காசு என்றால் இந்த முறை விளைந்த 180 கிலோ புளிக்குத் தன் கை நஷ்டம் எவ்வளவு என்று கணக்குப் போட்டான்.

வேதனையோடு நடந்தவனின் எதிரில் வைத்தி எதிர்ப் பட்டான்.

“என்ன அக்கவுண்டண்ட் சார்! புளியை அதிக விலைக்கு வித்து அம்மாகிட்டே நல்ல பேர் சம்பாதிச்சுட்டீங்க போல இருக்கே?”

ஒருகணம் வைத்தி கிண்டல் பண்ணுகிறானோ என்று எண்ணித் துணுக்குற்ற ஆராவமுதன் சமாளிப்புடன் புன்னகை செய்ய முயன்றார்.

“ஏதோ நம்மால் முடிஞ்ச பரோபகாரம். என்னால் இது முடியும்னு மேடம் நம்பினாங்க. அதைச் செஞ்சு முடிக்க முடியலேன்னா அப்புறம் நமக்கு என்ன மரியாதை வைத்தி?” அசடு வழிந்தபடி சொன்னார், ஆராவமுதன்.

“ஆமாம் ஆமாம்! நீங்க ரொம்பத் திறமைசாலின்னு அம்மா கிட்டே நான் சொன்னது சரியாப் போச்சு! காம்ப் கிளார்க் போஸ்ட்டுக்கு என்னைவிட நல்ல திறமைசாலியா ஒர்த்தர் வேணும்னு மானேஜர் சார் சொல்லிகிட்டிருந்தார். மேடத்துகிட்டே ஒரு வார்த்தை போட்டீங்கன்னா உங்களையே இந்தப் போஸ்டிங்குக்கு சிபாரிசு செய்துடுவாங்களே… நான் வேணும்னா ஏற்பாடு பண்ணட்டுமா?” என்றான் வைத்தி.

“ஐயோ! எனக்கு வேணாம்ப்பா.. எனக்கு வேணாம்ப்பா!” என்று கூறியபடி, ஆராவமுதன் ஏன் இப்படி அலறியடித்துக் கொண்டு ஓடுகிறார் என்று புரியாமல் வைத்தி விழித்தான்.

(ஆனந்த விகடன் வார இதழ்)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *