பார்டர் லைன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 14, 2023
பார்வையிட்டோர்: 1,492 
 

குணசீலத்துக் கதை – 1

‘திறத்துக்கேத் துப்புறவாம் திருமாலின் சீர்’. என்ற நம்மாவாழ்வார் வாக்குப்படி குணசீலம் பெருமாள் மனநலத்தைக் காக்கும் பெருமாள் என்பது பிரசித்தம். அந்த வகையில் மனநலம் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் பற்றிய நிகழ்வுகளை ஊர், பெயர் எல்லாம் மாற்றி, கதையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களுக்குக் கட்டுரையாய் சொல்வதை விட கதாபாத்திரங்கள் மூலம், மனநல பாதிப்புகளையும், அதனை எப்படிச் சரி செய்து கொள்ளலாம் என்ற விழிப்புணர்வையும் ஊட்டுவதே இந்தக் குணசீலத்துக் கதைகளின் நோக்கம்.


‘சேகரா இது?;

ம்ஹூம்..! இருக்காது…;

ஒரே மாதிரி ஏழு பேர்’னு சொல்வாங்களே…! அதுல ஒருத்தரா இருக்கும்…;

சேகர், ‘அத்லெட்’;

‘ஸ்கூல் டேஸ்’ல, மாவட்டம், மாநிலம்னு ஓடி, தங்கம், வெள்ளி, வெண்கலம்னு நிறை…ய்…ய… மெடல் அடிச்ச ஓட்டப் பந்தய வீரன்..;

இருக்காது!, இவன் சேகரா இருக்காது…!;

சேகராக இருக்கவேக் கூடாது! கடவுளே…!’

அஸ்விதாவின் மனதில் போராட்டம்.

மனசு மறுத்தது.

புத்தியோ, ஆறாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை, ஏழு ஆண்டு காலம் ஒரே வகுப்பில் சேர்ந்து படித்தக் கேண்மையும் (intimacy), உள்ளுணர்வையும் வைத்து, ‘இது சேகர்’தான் என்று உறுதியாகச் சொல்லிற்று.

‘கட்கத்தில் ஊன்றுகோல் தாங்கிய மாற்றுத் திறனாளியாக இருந்ததால், ‘சேகர்தானா?’ என்கிற சந்தேகமும் அவள் உள்ளுணர்வை லேசாகக் குழப்பியது.

எத்தனைக் காலங்கள்தான் ஆனால் என்ன?

பள்ளி நாட்கள் பசுமரத்திலடித்த ஆணியல்லவா?

“நீ…ங்…க…?”

கண்சுருக்கி, புருவம் உயர்த்தி, மூளையின் மடிப்புகளைக் ‘கசக்கி நினைவுகளைப் பிழிந்துச் சோர்ந்து, நேரடியாகவே விரல் நீட்டிக் கேட்டேவிட்டாள் அஸ்விதா.

“நான் சேகர் தான் ‘ஆப்டிமிஸ்ட் அஸ்விதா……!,. சந்தேகமே வேண்டாம்..!”

விரக்தியோடு புன்னகைத்தான் சேகர்.

“ஓட்டப்பந்தய வீரனாகக் கொடி கட்டிப் பறந்த, ‘ஸ்டேட் அதெலட்டான சேகருக்கு, ஸ்போர்ட்ஸ் கோட்டா’வில் பைசா செலவில்லாமல் ‘ஸ்காலர்ஷிப்’போடு கல்லூரியில் இடம் கிடைத்துச் சென்றபோது பார்த்ததுதான்.

இத்தனை வருஷங்களுக்குப் பிறகு, சற்றும் எதிர் பாராத சந்திப்பாய், அவனை ஒரு மாற்றுத் திறனாளியாகப் பார்த்தபோது, மனசு ஒரு கணம் கனமானது அவளுக்கு.

அனுதாபப்பட்டு, அவனை எந்த வித்ததிலும் பலஹீனப் படுத்திவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தாள்.

அஸ்விதா.

சிறுவயதிலேயேத் தந்தையை இழந்துத், தாயின் அரவணைப்பில் வளர்ந்தவள்;

வாழ்வின் போராட்டங்களைச், சவால்களாக ஏற்றுப் படிப்படியாக முன்னேறியவள்;

அர்பணிப்புணர்வுள்ள, உழைப்பாளி.

சமுதாயத்தில் மதிக்கத்தக்க வகையில், எக்ஸிகியூட்டிவ்வாக, உயர்ந்த நிலையில் இருக்கிறாள் இப்போது;

‘அமாவாசை இரவு, வானத்தில் நிலாத் தெரியுமா ?’ என்று கேட்டால் கூட ‘நோ’ என்று சொல்ல மாட்டாள்;

பௌர்ணமி ராத்திரி பெருசா நிலா தெரியும் என்பாள்;

பள்ளி நாட்களிலேயே அப்படி ஒரு ஆப்டிமிஸ்ட் அவள்;

‘எதற்கும் ஒரு தீர்வு உண்டு!’ என்ற சித்தாந்தத்தில் மிகுந்த நம்பிக்கை கொண்டவள்.

எட்டாம் வகுப்புப் படிக்கும்போது ‘ஆப்டிமிஸ்ட் அஸ்விதா’ என்று, அவளுக்குப் பட்டப் பெயர் வைத்தது இதே சேகர்தான்.

இதெல்லாம் கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களுக்கு முந்தைய கதை.

மனிதர்களின் வாழ்வில், காலம்தான் எத்தனையெத்தனை மாற்றங்களையெல்லாம் செய்து விடுகிறது.!

வழக்கம்போல மாதாந்திர விசிட்.

அண்ணன் வீட்டோடு இருக்கும், அம்மாவைப் பார்க்கச் சென்றாள் அஸ்விதா.

பேரக்குழந்தையை அம்மா கண்ணில் காட்டியாயிற்று;

வழக்கம்போல, “என் வீட்டுக்கு வாயேம்மா!;” அழைத்தாள்.

வழக்கம்போல மறுத்தாள் அம்மா.

அம்மாவுக்கு உடல் ரீதியாக எந்த நோயும் கிடையாது.

எதிரே யாருமில்லாதிருந்தாலும், நாலைந்து பேர் உட்கார்ந்து, ஆர்வத்துடன் அவள் சொல்வதை ஆர்வமாய்க் கேட்பதைப் போலப், பழைய அனுபவங்களைப் பேசிக் கொண்டே இருப்பாள் அம்மா.

தனக்குத் தானே அம்மா பேசுவதால், அண்ணன் அண்ணியின் சமநிலை பாதிப்பதாகக் குற்றச் சாட்டு எழுந்தது.

எதற்கும் சரியான தீர்வை நோக்கிச் செல்லும் இயல்புடைய அஸ்விதா (Geriatric counseller) முதியோர் மன ஆலோசகரிடம் அம்மாவை அழைத்துச் சென்றாள்.

“ஏஜ் ரிலேடட் இஷ்யூதான். அதோட Delusion னு சொல்ற மாய வலை அவங்க முன்னால விரியத் தொடங்கியிருக்கு. ஆரம்பத்துலயே குணப்படுத்திடணும். ரெண்டு மூணு சிட்டிங்’ல சரி பண்ணிடலாம். கவனிக்காம விட்டா Disorder ஆயிரும்” என்றார்.

அம்மாவை நான்கைந்து வாரங்கள் தொடர்ந்து, தனியாக உட்கார வைத்துப் பேசினார்.

என்ன பேசினாரோ அம்மாவுக்கும், ஆண்டவனுக்கும்தான் தெரியும்.

அம்மா முற்றிலும் மாறிவிட்டாள்.

அல்லி அரசாணி மாலை, கைவல்ய நவநீதம், பெரிய எழுத்து விக்ரமாதித்தன் கதை இப்படிப் புத்தகங்களை வைத்துக் கொண்டு படிப்பதும், சிந்திப்பதுமாக இருக்கிறாள் அம்மா.

‘மின்சார ரயிலில் சென்னைக்குத் திரும்பிக் கொண்டிருந்தாள் அஸ்விதா.

பரபரப்பான நேரமில்லை என்பதால், ரயிலில் அதிகக் கூட்டமும் இல்லை. இங்கொன்றும் அங்கொன்றுமாகச் சிலரே இருந்தனர்.

தன் மூன்று வயது ஆண் குழந்தையை, ஜன்னல் ஓரத்தில் உட்கார வைத்திருந்தாள். அவன் வெளி உலகத்தைப் பார்த்துக்கொண்டே வந்தான்.

கக்கத்தில் ஊன்றுகோலை இடுக்கிக் கொண்டு லாகவமாய் ரயிலேறி, அஸ்விதாவின் எதிர் இருக்கையில், முன்னாள் ‘அதெலெட்டும்’, இப்போது மாற்றுத்திறனாளிய் அமர்ந்திருந்த சேகரைப் பார்க்கப் பார்க்க அதிர்ச்சியும் வருத்தமும் மனதுக்குள் எழுந்தன.

வெளியேக் காட்டிக் கொள்ளவில்லை.

ஜன்னலுக்கு வெளியே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த குழந்தையின் தோளைத் தொட்டு, கவனத்தைத் திருப்பினாள் அஸ்விதா.

“மாமாவுக்கு நமஸ்தே சொல்லு..” என்றாள்.

“வணக்கம்..”

அழகாய்க் கைக்கூப்பி மழலையுடன் வணங்கியது ;

இத்தனை நேரம் வேடிக்கை பார்த்த களைப்பில் அஸ்விதாவின் மடியில் முகம் புதைத்தபடித் தூங்கிவிட்டது குழந்தை .

சேகர் தனக்கு ஏற்பட்ட விபத்தைப் பற்றி விலாவாரியாகக் சொன்னான்..

‘ஸ்போர்ட்ஸ் கோட்டாவு’வில் வேலைக்குப் போக வேண்டியவன், ‘மாற்றுத்திறனாளி கோட்டா’வில் வேலைக்குச் சென்றதாகச் சொன்னபோது மனசு வலித்தது அஸ்விதாவிற்கு.

எந்த நேரத்திலும் யாருக்கும் எது வேண்டுமானாலும் நேரலாம்’

நிலையாமைத் தத்துவம் மனதில் ஒரு கணம் வந்து போனது.

பள்ளியில் 6ம் வகுப்பில் ஜூனியர் பிரிவு முதல், +2 வகுப்பில்

சூப்பர் சீனியர் பிரிவு வரை ஒவ்வொரு வருடமும் ‘அத்தலெட்’ பிரிவில் தங்கப் பதக்கம் பெற்று, சாதனை புரிந்ததும்;

பள்ளி நிர்வாகம், இறைவணக்கக் கூட்டத்தில் அவனை நிற்க

வைத்து, மெடலை இங்கொரு முறை அணிவித்து, ‘ச்சியர்-க்ளாப்’ சொல்லி மாணவர்களை கைத்தட்டச் செய்துப் பாராட்டியதும்;

ஸ்கூல் ஃபைனல் முடித்ததும்,போட்டிப் போட்டுக்கொண்டு பல்வேறு கல்லூரிகளில், ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் அவனை அழைத்ததும்.

அஸ்விதாவின் நினைவில் பாட்டம் பாட்டமாக வந்து கனத்தது.

“உனக்கு எவ்ளோ பசங்க சேகர்?”

பேச்சை திசை திருப்பினாள்.

“கலியாணமே கட்டலை அஸ்விதா.”

“ஏன்?”

தன் குடும்ப நிலையை விளக்கினான்.

சேகரின் தாயும் தந்தையும் பிரிந்துத் தனித்தனியாக வாழும் அவல நிலையைச் சொன்னான்.

‘இப்படியும் கூடப் பெற்றோர்கள் இருப்பார்களா?’,

வியப்பும் அதிர்ச்சியினாய் இருந்தது, அஸ்விதாவிற்கு.

“சேகர்..!”

“சொல்லு அஸ்விதா?”

“நீ உன் அம்மாவோட, ஒரு இடத்தில இருக்கறதும், உன் அப்பாவும் உன் தம்பியும் வேறு இடத்துல குடித்தனம் நடத்துறதும், ஆரோக்கியமான விஷயம் இல்லை..சேகர்.”

“தெரியுது அஸ்விதா”;

“அப்பா அம்மாவை சேர்த்து வைக்க நீ முயற்சி பண்ணவே இல்லையா?.”

“ஒரு அளவுக்கு மேல அப்பாவோட கொடுமையைப் பொறுத்துக்க முடியாம அம்மா எமோஷனலா எடுத்த முடிவு இது; எந்த விதத்துலயும் அம்மா கன்வின்ஸே ஆகவே மாட்டேங்கறாங்க.”

“நீரடிச்சி நீர் விலகாது’ சேகர்.. முறையா முயற்சி பண்ணினா சேர்த்து வைச்சிடலாம்.”

“எங்கம்மா, ஆறாங் க்ளாஸ் வரைதான் படிச்சவங்க. ‘ஹவுஸ் வைஃப்., அப்பா அவங்களை அடிமை போல நடத்துவாரு. அம்மாவுக்கு எந்த மரியாதையும் கொடுக்க மாட்டாரு!;

அதுவும், அப்பா குடிச்சிட்டு வந்தாரோ, அவ்ளோதான், “சின்னவன்தான் குடும்பத்தை உயர்த்த போறான்”னு என் தம்பியை உயர்த்திப் பேசுறதும்,

“இந்த சேகர் பய ஒரு விடியா மூஞ்சி. தண்டச் சோறு, உருப்படாது. எதுக்கும் உதவாத ஜன்மம்!”னு என்னை மோசமாத் திட்டுவாரு…; ரொம்பவும் டயர்ட் ஆயிட்டேன் அஸ்விதா”.

“இந்த அளவுக்கு எப்படிப் போச்சு சேகர்?”

“குடி போதைல ஒருநாள் ரொம்ப ரொம்ப அதிகமாப் பேசிட்டாரு அப்பா. வரம்பு மீறிட்டாரு;

“பெத்த புள்ளைங்கள்ல வித்தியாசம் பார்க்கக் கூடாதுங்க ரெண்டு பேரையும், ரெண்டு கண்ணா நேசிக்கணும்!”

நியாயமா, வெள்ளந்தியாப் பேசினாங்க அம்மா.

முடியைப் பிடிச்சி பளார் பளார்னு அறைஞ்சிக் கீழேத் தள்ளி விட்டாரு, எட்டி உதைச்சாரு;

அப்பாவோட முழு ‘சப்போர்ட்’ ல தம்பியும் எடுத்தெறிஞ்சி பேசினான் அம்மாவை.

பொறுமைக்கும் எல்லை உண்டு தானே;

சாது மிரண்டால் காடு கொள்ளாதுதானே;

“கிளம்புடா! இனிமே இந்த வீட்ல ஒரு நிமிஷம் இருக்கக் கூடாது!”

வைராக்யமா, பிடிவாதமா, என்னை அழைச்சிக்கிட்டு, வந்துட்டாங்க அம்மா.

ஒரு சில மாசத்துல, மாற்றுத்திறனாளி கோட்டாவுல வேலையும் கிடைச்சிடுச்சு எனக்கு;

போதுமான அளவுக்கு சம்பளம் வருது;

ஆனா நிம்மதிதான் போயிருச்சு.”

சோகம் இழையோடியது அவன் பேச்சில்

“என்னதான் முயற்சி பண்ணினே நீ?”

நட்போடு கேட்டாள் அஸ்விதா.

அப்பாவுக்கு ரொம்ப வேண்டியவங்க சிலபேரை மீடியேட்டரா அனுப்பி ‘சால்வ்’ பண்ண முயற்சி எடுத்தேன்;

‘இன் தி மீன் டைம்’, தம்பியும் அப்பாவோட பிஹேவியர் புடிக்காம வெளிநாட்டுல போய் செட்டில் ஆயிட்டான்னு கேள்விப்பட்டேன்.;

ஈகோயிஸ்ட்டான அப்பாவும் இறங்கி வரத் தயாரா இல்ல. அம்மாவும் தன் பிடிவாதத்தை விடறதா இல்ல…;

இந்த லட்சணத்துல என்னத்த கல்யாணம் பண்ணி; என்னத்த குடித்தனம் நடத்த…;

நொந்துப் பேசினான் சேகர்.

சேகர், சொன்ன அத்தனை விஷயங்களையும் குறுக்கீடு இல்லாமல் காதில் வாங்கிக் கொண்டார் மனநல ஆலோசகர் வரதராஜன்.

மிஸ்டர் சேகர், ஆரம்பத்துலேந்து, உங்களை உயிருக்கு உயிரா நேசிச்ச அப்பா, உங்களுக்கு ஆக்ஸடெண்ட் ஆகி மாற்றுத் திறனாளியானபிறகு புறக்கணிச்சது, உங்க மேல உள்ள வெறுப்புல இல்லை. உங்க மேல உள்ள அதீத அன்புல.

“புரியலை டாக்டர்”

“பெற்ற குழந்தை தெருக் கோடி நாயாலக் கடிப் பட்டு வந்து நின்னதும் மொதல் ரியாக்‌ஷனா, “நீ ஏண்டா அங்கே போனேனு’ முதுகுல ரெண்டு போடுவாங்கதானே பேரண்ட்ஸ்.”

உதாரணம் சொன்னதும் யதார்த்தம் புரிந்தது சேகருக்கு.

சேகரின் அம்மா சாமானியத்தில் பிடி கொடுக்கவில்லை.

“இப்படியேப் போனா சேகருக்குக் கல்யாணம் காட்சினு ஆகி வம்சம் வளர வேண்டாமா,,,?”

சென்டிமெண்டாகப் பேசி, Family Counselling’ என்ற குடும்ப இணைப்பு ஆலோசனைக்குச் சம்மதிக்க வைத்தார்..

அடுத்த கட்டமாக அஸ்விதாவும் அவள் கணவரும் சேகரின் தந்தையை சந்தித்தனர்.

அவர் மிகவும் தளர்ந்து போயிருந்தார்.

மனைவி, மூத்த மகன் சேகர், இருவரையும் எதிர் கொள்ளவே வெட்கப்பட்டார்.

மனநல ஆலோசகர் சொன்னதைப் போல அவரிடம் பேசியதில் முடிவாகக்,கவுன்சிலிங்’கிற்கு ஒத்துக் கொண்டார்.

மனநல ஆலோசகரின் எதிரிலும் பக்கவாட்டிலுமாக மூன்று

இருக்கைகள் இருந்தன.

ஒரு இருக்கையில் சேகர், மறு இருக்கையில் சேகரின் தந்தை.

“தற்போதைக்கு வரவேண்டாம்.!”, என்று அருகாமை அறைக்குள் அம்மாவை உட்கார வைத்து விட்டார் சைக்காலஜிஸ்ட்.

ஹிப்னாட்டிக் முறையில் அணுகினார் வரதராஜன்.

சேகருடையத் தந்தையின் ஆழ் மனத்திலிருந்த ஆதங்கங்களை வெளியே கொணர்ந்தார்.

அவருள் இருந்த ‘அவாய்டன்ஸ் பர்ஸனாலிடி’யைக் கண்டார்.

குடிப்பழக்கத்தால் அவருக்குள் ஏற்பட்ட Dipsophobia-ம் அவரைப் பாதித்திருந்தது.

‘கில்டி கான்ஷன்ஸ்’ என்கிற குற்ற உணர்வின் புழுக்கம் தெரிந்தது.

மகனின் எதிர் காலம் பற்றிய பயம் அவருக்குள் அப்பியிருந்தது.

தீவிரக் கூச்சம், தர்மசங்கடமான பயம், பதட்டம், குற்ற உணர்வு, எல்லப் பிரச்சனைகளிலிருந்தும் தப்பியோட அவாய்டன்ஸ் பர்ஸனாலிடி என்ற தவிர்க்குமை ஆளுமைக் கோளாறு அவருக்குள் படிந்துவிட்டது.

க்ளையன்டிற்கு தன் மனைவியோடும், மகனோடும் முகம் கொடுத்துப் பேசுவதற்கு பயப்படுவதைத் தெரிந்து கொண்டார். இபோதைய நிலையில் அவருக்கு இருந்தது,

Border Line Personality Disorder என்று டைக்னோஸ் செய்தார்.

ஒவ்வொன்றாக, படிப்படியாக, கவுன்சிலிங் தொடர்ந்தார்.

முதல் சிட்டிங்கில் அவரிடம் மனைவியின் பெயரை பலமாய் உச்சரித்து, க்ளையண்டின் ரியாக்‌ஷன் பார்த்தார் சைக்காலஜிஸ்ட்.

“அவ பேரையே சொல்லாதீங்க!’

காதுகளை பொத்திக் கொண்டார் க்ளையண்ட்.

“பேர்ல என்ன இருக்கு?” குறிப்பிட்ட இடைவெளியில், மீண்டும் மீண்டும் அவர்மனைவியின் பெயரை உச்சரித்தில், அந்தப் பெயரில் உள்ள அவர்ஷன் நீங்கியது..

அதன் பிறகு அந்த பெயரை சொன்னபோது அவர் மூர்க்கமாகவில்லை. தொடர்ந்து அந்தப் பெயரை ஏற்றுக் கொள்ளவும் செய்தார்.


அடுத்த சிட்டிங்கில் மனைவியின் ‘மேக்ஸி’ அளவு புகைப்படத்தை க்ளையண்ட் முன் காட்டி, வெறியேற்றி, இண்டென்சிடி குறைத்து, ஏற்க வைத்துப் பார்க்க வைத்து, தன் வழிக்குக் கொண்டு வந்தார் கவுன்சிலர்.

மகுடிக்குக் கட்டுப்பட்டப் பாம்பை போல் Vent அல்லது Out let கிடைத்ததும் சைக்காலஜிஸ்ட்டிடம் தன் மனதில் உள்ள அனைத்தையும் கொட்டினார் க்ளையண்ட்..

மதில் மேல் பூனை போல் ‘இந்தப் புறமா! அந்தப் புறமா!” என்ற

தொங்கலில், சமுதாயத்தின் விளிம்பில் நிற்கும் க்ளையன்ட் முன், அவரது மனைவியை கொண்டு வந்து நிறுத்தினார் சைக்காலஜிஸ்ட்.

அதன் பிறகு சில சிட்டிங்களில்

கணவனுக்கும் மனைவிக்கும் இடையே நின்ற பனிப்பாறையை Breaking the Ice உடைத்தெறிந்தார் கவுன்சிலர்.

சேகரை அழைத்துக் கொண்டு அம்மா பிடிவாதமாகத் தனிக்குடித்தனம் வந்த அந்த நாளை, அந்த கணத்தை, Family counselling முறையில் மீள்பார்வை பார்க்க வைத்தார்.

சின்னச் சின்ன கருத்து வேறுபாடுகளை பூதாகாரமாக்கிய அந்தச் சிறுபிள்ளைத்தனமான செயல்களை நினைத்து இப்போது வெட்கப்பட்டனர் அந்த முதிய தம்பதியர்.

BORDER LINE PERSONALITY DISORDER, என்பது மன நோய் அல்ல;

மனநோய் வருவதற்கு முன் இருக்கும் நிலை.

மனநோய் என்கிற மடுவுக்கும், நல்வாழ்வெனும் மலைக்கும் நடுவில் உயர்ந்து நிற்கும் பெரிய சுவரின் மேல் நிற்கும் பூனைகளாய் நின்ற தம்பதியர், மனநோய் என்கிற படுகுழியில் விழாமல், குடும்ப ஒருங்கிணைப்பு என்கிற மலைமேல் ஏறினர்.

‘கவுன்சிலர் வரதராஜனின் முயற்சியால் சராசரி மனிதர்களாய் மாறினர்.

“என் கல்யாணத்துக்கு அழைக்க பேரண்ட்ஸ் வரணும்னு சொல்றாங்க அஸ்விதா. எப்போ வரலாம்?”

சேகர் ஃபோன் செய்து கேட்டான்.

“எப்ப வேணா!” என்றாள் அஸ்விதா.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *