விவேகம் விவாதிப்பதில் இல்லை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: December 14, 2023
பார்வையிட்டோர்: 1,319 
 
 

(2000ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

விவேகம் விவாதிப்பதில் இல்லை! விளங்கிக் கொள்வதில் உண்டு.

அறிவண்ணன் வருகிறார்

தமிழ் நிலா, தேன்மொழி, அன்பரசன், இளவழகன் ஆகிய நால்வரும் மிகக் கடுமையாக ஒரு விவாதத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். ஒரே கூச்சலும் குழப்பமும் அடிபிடியும் அறிவண்ணனைக் கண்டதும் அமைதியாகின்றனர்.

தமிழ்நிலா: (சிரிப்புடன்) அண்ணா வாருங்கள்….

தேன்மொழி : பட்டிமன்றத்துக்கு அண்ணாவை நடுவராக விடுவோம்.

அறிவண்ணன் : இப்போது நிலவுவது என் வருகையால் ஏற்பட்ட ஒரு தற்காலிக அமைதி; எதைப்பற்றி இவ்வளவு கடுமையான வாதம்?

அன்பரசன்: ‘விதி’ என்று ஒன்று இருக்கிறதா என்பது பற்றி.

இளவழகன் : நாங்கள் இனிமேல் விவாதிக்கவில்லை நீங்கள் சொல்லுங்கள். விதி என்பது என்ன?

அறிவண்ணன் : உங்களில் யார் யார் விதியின் பக்கம்?

தமிழ்நிலா: விதி என்ற ஒன்றை மாற்றவே முடியாது என்றால்.. நீங்கள் இனிமேல் படிக்க வேண்டாம். ‘விதி’ இருந்தால் ‘பாஸ்’ பண்ணலாம் என்று அன்பரசனும் தேன்மொழியும்…

அறிவண்ணன் : சரி, எவ்வளவு நேரம் விவாதித்தீர்கள்?

தேன்மொழி : ஒரு.. நாற்பது நிமிஷம் இருக்கும்..

அறிவண்ணன் : இப்போது விவாதத்திலே உங்கள் முன்னைய கருத்துக்களில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறதா?

அன்பழகன்: இல்லை. முந்திய கருத்து இன்னும் வலிமை பெற்றிருக்கிறது.

இளவழகன்: அண்ணா கேள்வியை விட்டுவிட்டு உங்கள் முடிவைச் சொல்லுங்கள்.

அறிவண்ணன் : நான் சொல்வதைக் கட்டாயம் ஏற்றுக் கொள்வீர்களா?

தேன்மொழி : சரி என்றால்…..

அறிவண்ணன்: நான் எப்படிச் சொன்னாலும் உங்களில் இருவருக்கு நான் சொல்வது பிழையாகவே இருக்கும்.

அன்பழகன் : இதற்கு முடிவு இல்லையா?

அறிவண்ணன் : விவாதங்களை நிறுத்துவதுதான் முடிவு.

இளவழகன் : விளங்கவில்லை?

அறிவண்ணன் : விவாதங்களில் ஒருபோதும் வெற்றி பெற முடியாது. நீங்கள் அதில் தோற்றுப் போனாலும் தோல்விதான். வெற்றி பெற்றாலும் தோல்விதான்.

தமிழ்நிலா : இன்று எங்களுக்கு விளங்காமல் கதைப்பது என்ற முடிவோடு வந்தீர்களா?

அறிவண்ணன் : இல்லை. பாடசாலைகளில் உங்களுக்கு ஒரு போதும் கற்பிக்கப்படாத சில விடயங்களைச் சொல்ல வேண்டும் என்ற முடிவோடு வந்தேன்.

தமிழ்நிலா : இன்று விஞ்ஞானம் பற்றி ஒன்றும் இல்லையா?

அறிவண்ணன்: இதுவும் விஞ்ஞானந்தான். உளவியல் விஞ்ஞானத்தின் ஒரு பிரிவு தான். விவாதங்களில் வெற்றி பெறும்போது இன்னொரு மனத்தில் தாழ்வுணர்ச் சியையும் எம்மீது வெறுப்பையும் ஏற்படுத்தி.. அதன் மூலம் நாங்கள் தோல்வி அடைந்து விடுகிறோம் என்ற உண்மையைப் பாடசாலைகளிற் சரியாக அறிவுறுத்தாத காரணத்தினால் நாங்கள் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று நிறுவ முயன்று முயன்று தொடர்ச்சியாகத் தோல்வி அடைந்து வருகிறோம்.

தேன்மொழி : அது எங்கள் விதி

(சிரிக்கிறார்)

அறிவண்ணன் : இல்லை; நெப்போலியனிடத்தில் வேலை செய்த ‘கொன்ஸ்ரன்ரைன்’ (Constantine) என்பவர் நெப்போலி யனின் வாழ்வு பற்றி ஒரு நூல் எழுதினார். அதில் அவர் கூறுகிறார். நான் ஜோசபீனுடன் அடிக்கடி பிலியட்ஸ் விளையாடுவேன். அவளை வெல்லக் கூடிய ஆற்றல் என்னிடம் இருந்த போதிலும் சந்தர்ப்பங்களில் அவள் என்னை வெல்லுமாறு நான் என்னை மாற்றியமைத்துவிடுவேன். அது அவளுக்கு அளவில்லாத திருப்தியைக் கொடுத்து வந்தது..

அன்பழகன் : ஒருவர் ஒரு விடயம் பற்றி தவறான கருத்தைக் கொண்டிருந்தால்..சரியான தை அவர் அறியத்தானே வேண்டும்?

அறிவண்ணன்: அது பிழையானது என்று நிச்சயமாகத் தெரிந்தால் அவருக்குத் தனிமையில் கூறலாம். அவருக்கு நீங்கள் கூறுவது விளங்கும்படி கூறவேண்டும். விவாதித்து வெல்ல முனைவது வீண்வேலை.

இளவழகன்: அண்ணா கஷ்டமான விஷயம் சொல்கிறார்.

அறிவண்ணன் : இல்லை இது ஒரு பண்பு. இது ஒரு பழக்கம். மற்ற மனிதனிடத்தில் பிழை காணுகிற வேலையையே முற்றாக விட்டுவிட வேண்டும்.

தமிழ்நிலா: நீங்கள் அப்படியா?

அறிவண்ணன் : பழகிவருகிறேன். சோக்கிரடீஸ் சொன்னார். ஒரு விடயம் மட்டும் எனக்குத் தெரியும். அது எனக்கு எதுவும் தெரியாது என்பதாகும். ஆகவே நாங்கள் எங்களுக்கு மட்டும் நிறையத் தெரியும் என்ற நினைவில் இன்னொரு மனிதனிடம் பிழை காணும் பழக்கத்தை இன்று முதல் நிறுத்துவோம்.

தேன்மொழி: விவாதங்களில் ஈடுபடுவதில்லை என்று அண்ணாவுக்கு முன்னால் சத்தியம் செய்து கொள்வோம்.

அறிவண்ணன் : சந்தோஷம். நீங்கள் மாற முயலுகிறீர்கள். எமது சூழல் மாறவில்லை என்பதுதான் எனக்கு மனவருத்தம். துப்பாக்கிச் சத்தங்கள் கேட்கத் தொடங்குகின்றன. நான் போய்வரப் போகிறேன்.

தேன்மொழி: நாளையும் உங்கள் வரவை ஆவலுடன் எதிர்பார்ப்போம் என்பதை மறந்துவிடாதீர்கள்.

அறிவண்ணன் எழுந்து போக மற்றைய நால்வரும் ஒன்றாக அமர்ந்து திருக்குறள் படிக்கிறார்கள்.

– விஞ்ஞானக் கதைகள், முதற் பதிப்பு: நவம்பர் 2000, கலை இலக்கியக் களம் தெல்லிப்பழை, ஸ்ரீலங்கா.

Print Friendly, PDF & Email
கோகிலா மகேந்திரன் (நவம்பர் 17, 1950 ,தெல்லிப்பளை, விழிசிட்டி, இலங்கை) ஈழத்து எழுத்தாளர். கலைத் திறானாய்வாளர், நாடகக் கலைஞர், சமூகசிந்தனையாளர், உளவள ஆலோசகர். இவர் சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள், கவிதைகள், விமர்சனம், நாடகம்.. என பன்முகப் பரிணாமம் கொண்ட பல விடயங்களை எழுதியுள்ள பன்முகக் கலைஞர். இவரின் எழுத்துக்கள் இலங்கையின் புகழ் பெற்ற பத்திரிகைகளில் எல்லாம் இடம் பிடித்திருக்கின்றன. இவரின் தந்தை செல்லையா சிவசுப்பிரமணியம் சமய எழுத்துக்காக சாகித்திய விருது…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *