கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: February 1, 2024
பார்வையிட்டோர்: 2,390 
 
 

(2009 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பானு பள்ளிக்கூடம் புறப்பட்டுக் கொண்டிருந்தாள். வெளிர் பச்சை நிறத்தில் ‘ப்ராக்’ அணிந்திருந்தாள். அவள் உடம்புக்கு அழகாக இருந்தது அது. கன்னங்குழியத் தோன்றும் மென்சிரிப்பு! புத்தகப் பெட்டி கையில் இருந்தது. மாரிஸ் அவளையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தான்.

“மாரிஸ். . .!” என்றாள் பானு. அன்பு மெல்லலையாக அந்தக் குரலில் புரண்டது.

“என்ன பானு?” என்று மாரிஸ் கேட்டான்.

“பள்ளிக்கூடம் போய் வரட்டுமா? அம்மாவை நன்றாகப் பார்த்துக்கொள்ளவேண்டும். சரிதானே?”

“ஆகட்டும்,பானு!”

“பானு” என்றவாறு அப்பா வந்தார். காரில் ஏறிக் கொண்டாள் பானு. அப்பாவின் கரம் ‘ஸ்டியரிங்’ கைப் பற்றியது. வண்டி மறையுமட்டும் நின்று பார்த்தான் மாரிஸ்.

போன வாரம்தான் பானுவின் வீட்டிற்கு வந்தான் மாரிஸ். வேலை வேண்டும் என்று பானுவின் அப்பாவிடம் கேட்டான். அவருக்கு நல்ல மனம். வீட்டிலேயே இருக்கலாம் என்று சொன்னார். மாரிஸுக்கு எந்தக் குறையும் இல்லை.

இரண்டு நாள் ஒட்டியும் ஒட்டாமலும் இருந்தான். பிறகு எப்படியோ ஒரு வாரம் ஆகிவிட்டது. பானுவை அவனால் ஒரு நிமிடம் கூட நினைக்காமல் இருக்க முடியவில்லை. பணக்காரர் வீட்டுப் பெண் என்ற மிடுக்கு அவளிடம் இல்லை. பச்சை மனம்! பானு எத்தனை நல்லவள்!

மாரிஸ் தெருவைப் பார்த்தான். காலை வெயில் ஏறிக் கொண்டிருந்தது. அவன் முகத்தில் புரியாத மருட்சி. அழுவதா, சிரிப்பதா என்று தெரியவில்லை.

மாரிஸின் பார்வை தெருவிலேயே இருந்தது. அழகிய தோற்றம் அவனிடம் இருந்தது. நல்ல சிவப்பு மேனி; பளபளப்பான கண்கள்! மாரிஸை ஏழைப் பையன் என்று யாராவது சொல்வார்களா? பானுவின் வீட்டில் வேலைக்குச் சேர்ந்திருக்கிறான் என்றால் யாரும் நம்ப மாட்டார்கள். மாரிஸுக்குப் பானுவின் அப்பா அப்படி ஒன்றும் அதிக வேலைகள் கொடுக்கவில்லை. வீட்டிலேயே உட்கார்ந்திருக்க வேண்டும். பானுவின் அம்மா வீட்டோடு முடங்கியிருந்தாள். பல ஆண்டுகளாகவே நோயாகப் படுத்திருந்தாள். சில சமயங்களில் சித்தசுவாதீனம் இருக்காது. அம்மாவுக்கு வேண்டிய மருந்தை வேளைக்குத் தரவேண்டும். அதைக் கவனிக்கக்கூட வேறொரு பெண் இருந்தாள். சொல்லப் போனால் மாரிஸ் அந்த வீட்டுக்கு ராஜாமாதிரி. ரேடியோ கேட்டுக் கொண்டு உட்கார்ந்திருப்பான். எப்போதாவது தொலைபேசி மணி கிணு கிணுக்கும். செய்தியைக் கேட்டு வைப்பான். யாராவது விளையாடக் கிடைத்தால் ‘கேரம்’ ஆடுவதுண்டு. மாலையில் பானுவோடு கடற்கரைக்கோ, பூங்காவுக்கோ போவான். எந்தக் கவலையுமில்லை. ஆனாலும் வண்டு மாதிரி ஒரு நினைவு அவன் மனத்தை அரித்துக் கொண்டிருந்தது.

மீண்டும் தெருவிலேயே பார்வை!… தெருக்கோடியில் ஒரு ‘ஸ்கூட்டர்’ விரைந்து வருவது தெரிந்தது. அந்த ஒலி நெஞ்சில் மோதியது. துணுக்குற்ற மனத்தோடு மாரிஸ் நின்றான்.ஆமாம், ஆர்தர்தான் வந்து கொண்டிருந்தான். நீலநிறத்தில் கழுத்தில் ‘டை’ கட்டியிருந்தான். முகத்தில் குளிர்ச்சிக் கண்ணாடி; சற்றே வழுக்கை கண்ட தலை; நாற்பதுக்கு உட்பட்ட வயதுதான்! வெளியே வேப்ப மரத்தடியில் ஸ்கூட்டரை நிறுத்தினான் ஆர்தர். அசாதாரணமாக மாரிஸைப் பார்த்தான். அருகே போனான் மாரிஸ்.

ஆர்தர் கேள்விக்குமேல் கேள்வியாகக் கேட்டான். புரிந்தும் புரியாமலும் இருந்தது. பதிலுக்கு ஏதேதோ சொன்னான் மாரிஸ். எல்லாம் இரண்டு மூன்று நிமிடங்கள் தான். ஆர்தர் அவன் முதுகில் தட்டிக் கொடுத்தான். “த்ரீ மோர் டேஸ். பீ சீரியஸ். ஆஃபன் ரிங் அப்” என்று ஆர்தர் சொன்னான்.

மாரிஸ் தலையசைத்தான். ஒலியெழுப்பிய வண்ணம் ஸ்கூட்டர் விரைந்தது; மறைந்தது. மாரிஸின் மனத்தில் ஒலியடங்கவில்லை.

மூன்றே நாட்கள்! மாரிஸின் மனம் நடுங்கியது.

உள்ளே வந்தான் மாரிஸ். பானுவின் அம்மா படுக்கையில் ஓய்ந்திருந்தாள்.

“அம்மா!” என்று மென் குரலில் அழைத்தான். பானுவின் தாய் அவனை வெறித்துப் பார்த்தாள்.

“பழம் கொண்டு வரட்டுமா?”

“வேண்டாம்” என்பதற்கான தலையசைவு! அவன் நின்றான். அந்த நோயுற்ற தாய் அவனையே பார்த்தாள். மாரிஸின் சிவந்த கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்தது சிலுவை. அம்மா பார்வையைத் திருப்பிக்கொண்டாள். இரண்டே நாட்கள்!

ஆர்தர் இடையில் வரவில்லை. உருவம்மட்டும் உள்ளத் திலிருந்து மறையவில்லை. நினைவு தெரிந்த நாளிலிருந்து மாரிஸுக்கு எல்லாமாக இருப்பவன் ஆர்தர்தானே!

ஆர்தரின் தங்கை மகன் என்பது மட்டும் மாரிஸுக்குத் தெரியும். சின்னவனாக இருக்கும் போதே அவன் அம்மா இறந்து விட்டாளாம். அதற்குமேல் தன்னைப் பற்றி ஒன்றும் தெரியாது. ஆர்தரின் வீடு நகரத்தின் அமைதியான ஒரு பகுதியில் இருந்தது. என்றாலும் மாரிஸ் எப்பொழுதும் வீட்டிலேயே இருப்பதில்லை. இப்பொழுது பானுவின் வீட்டில் இருப்பதுபோல் பல பெரிய இடங்களில் இருந்து பழக்கம். ஏன் என்பது மாரிஸுக்குத்தான் தெரியும்.

இந்த ஒரு வாரமாகப் பானுவின் பூமனம் அவன் நெஞ்சைக் கனியச் செய்து விட்டது. சாந்தமான அவளின் அன்புச் சொற்கள் அவனைக் கவர்ந்தன. பானு ஏன் இப்படி உயிரை விடுகிறாள் என்று கேட்டது அவன் மனம். அவனையும் அறியாமல் பானுவின்மீது அன்பு படர்ந்து விட்டிருந்தது. ஆர்தரின் வீட்டில்தான் கிரேஸியும் பீட்டரும் இருந்தார்கள். ஆனால் அவர்களிடம் இந்த மாதிரி அன்பு இல்லை.

ஆர்தரின் குரல் நெஞ்சில் ஒலித்தது. தலை தூக்கியது அச்சம். மூன்றே நாட்கள் என்று சொல்லி விட்டுப் போனான். மூன்று இரண்டாகி விட்டது.

மாரிஸ் ஓசைப்படாமல் நடந்தான். நெஞ்சில் மகிழ்ச்சி யில்லை. நடையில் தளர்ச்சி. மனத்தில் ஏனோ பீதி! ஆர்தரைப் பார்க்கவில்லை. எந்தச் செய்தியும் இல்லையே என்று ஆர்தர் சீறுவான். இதை எண்ணித்தான் வீட்டை விட்டுப் புறப் பட்டான். சினிமாவுக்குப் போக வேண்டும் என்று பொய் சொல்ல வேண்டியிருந்தது. பத்திரமாகப் போய்விட்டு எங்கும் நிற்காமல் வந்துவிட வேண்டும் என்று சொன்னார் பானுவின் அப்பா. அவர் தந்த ரூபாய் நோட்டு சட்டை பைக்குள் சவமாகிக் கிடந்தது. தொட்டுப்பார்க்கக் கை நடுங்கியது.

அவனுக்கு ஆர்தரைப் பார்க்கத் துளி ஆசைகூடக் கிடையாது. பயம் ஒரு புறம், எப்படியோ வந்து விட்டான்!

சுற்றுப்புறத்தில் இருட்டு! மின்மினிமாதிரி விளக்குகள் சுடர் விட்டுக் கொண்டிருந்தன. இதோ ஆர்தரின் வீடு! சின்ன வீடுதான். உள்ளே வெளிச்சம் இருந்தது. பூனை போல மெல்ல அடியெடுத்து வைத்தான். வாசல் பக்கம் ஒதுங்கி நின்றான். உள்ளே குரல் கேட்டது. உருவம் மட்டும் தெரியவில்லை. ஆர்தர்தான் பேசிக் கொண்டிருந்தான்; காது கொடுத்துக் கேட்டான். ஒரே நிமிடந்தான். சண்டமாருதமே எழுந்து விட்டது. முறிந்து விழுந்த மரக் கிளையாக மனம் துவண்டது. ஒரு கணம்கூட அங்கே நிற்க விரும்பவில்லை மாரிஸ். வந்த சுவடு தெரியாமல் திரும்பினான். அவனால் எதையும் நம்ப முடியவில்லை. விரைந்து நடந்தான்.

ஒரே ஒரு நாள்! சுவரில் இருந்த ‘காலண்டர்’ சொல்லிக் கொண்டிருந்தது. மாரிஸின் முகம் மலர்ந்திருந்தது. மனத்தில் அலைச் சிரிப்பு. பானு காலையில் பள்ளிக்கூடம் போய் விட்டாள். அப்பாவும் வீட்டில் இல்லை. கண்ணாடியில் தன்னைப் பார்த்தான் மாரிஸ். தன் தோற்றம் அவனுக்குப் பிடித்தது. மாரிஸ் புதியவனாக நின்றான். அவன் நிறத்துக்கேற்ற ஆடைகள். பானுவின் அப்பா வாங்கித் தந்திருந்தார்.

ஆர்தரைப் பார்க்கவில்லை. தொலைபேசித் தொடர்பும் வைத்துக் கொள்ளவில்லை. அம்மாவைக் கவனிக்கச் சொன்னாளே பானு!

அம்மா மெல்லப் புரண்டாள். சுவரில் புகைப்படத்தைப் பார்க்கும் மாரிஸை உற்றுப் பார்த்தாள். மாரிஸ் திரும்பினான். நீர் முத்து உருவாகியிருந்தது கண்ணில். அம்மாவைப் பார்த்தான். அந்த அன்னையின் பார்வை அவனிடமே இருந்தது.

“அம்மா!” மாரிஸின் குழந்தைக் குரல்! அம்மா உணர் வற்றுப் பார்த்தாள்.

ஆடாமல் அசையாமல் நின்றான் மாரிஸ். பானுவின் அம்மா மெல்ல எழுந்து உட்கார்ந்தாள். சுவரில் அந்தப் புகைப் படம்! கண்கொட்டாமல் அம்மா நோக்கினாள். விழியின் ஒளியில் நெளிவு! மாரிஸைப் பார்த்தாள். கழுத்தைப் பார்த்தாள் அம்மா. அங்கே ஏதோ… இல்லை. . . சிலுவைதான்! எத்தனை நேரம் இந்தப் பார்வையோ! அம்மாவின் விழிகளில் சலனம்; நெளிவு; மின்னல்! நாக்கு மெல்லப் புரண்டது.

“மா…மா…த..வ..ன்…!”

அம்மாவின் குரலில் படபடப்பு. படுக்கையில் சாய்ந்தாள்.

ஒரு நாள் மட்டும் இல்லை. பத்து நாட்கள் ஆகி விட்டன. ஆர்தர் ‘போனில்’ பேசினான். அவனுக்குப் பதில் சொல்லி வைத்தான். ஆனால் படபடப்பு இல்லை முன்போல். ஆர்தரை நன்றாக அறிந்தவர்கள் குறைவு. அவனை அணு அணுவாக அறிந்த ஒருவன் மாரிஸ்தான்.

ஆர்தர் எத்தனை பெரிய குற்றம் செய்து விட்டான்! ஒரு தாயுள்ளத்தையே கருகச் செய்து விட்டவன் அல்லவா? எத்தனையோ பணக்காரர்களை ஏங்கச் செய்திருக்கிறான் ஆர்தர். அதற்குத் தானும் துணையாக இருக்க நேர்ந்ததே என்ற வருத்தம்தான் மாரிஸுக்கு. ஆர்தர் யார்? கை தேர்ந்த களவாளி, கள்ளக்கடத்தலில் பெரிய புள்ளி. பெரிய வஞ்சகன். அவனுக்குக் கை போல் இருப்பவன்தானா மாரிஸ்? இந்தப் பத்து நாட்கள் மாரிஸைப் புதியவனாக ஆக்கிவிட்டது. ஆர்தரின் பேச்சே மாரிஸ் யார் என்று காட்டிக் கொடுத்து விட்டது. முதல் நாள் ஆர்தரின் வீட்டுப் பக்கம் போனபோது கேட்ட குரலை மாரிஸால் நம்ப முடிய வில்லை. நம்பாமலும் இருக்க முடியவில்லை. வீட்டுக்கு வந்ததும் புகைப்படத்தைப் பார்த்ததும் புதிர் அவிழ்ந்து விட்டது.

ஆர்தர் வருவான். அவனுக்கு முடிவு அமையப் போகின்றது. போலீஸுக்குப் ‘போன்’ செய்தான் மாரிஸ். “மாதவன்.. . மாதவன்!” புதிய ஒலி! அம்மாவின் குரல்தான்.

“வந்து விட்டேன், அம்மா”

ஆமாம், அம்மாதான். அவன் மாதவன்தான். என்றோ ஒரு நாள் காணாமல் போன அன்பு மகன் மாதவன் இதோ உட்கார்ந்திருக்கிறான். பத்து வருடங்களுக்கு முன் அவனை இழந்தாள் அம்மா. அப்போது பானு கைக்குழந்தை. மாதவன் காணாமல் போனபிறகு படுக்கையில் விழுந்து விட்டாள் தாய். ஏக்கம் நோயில் தள்ளி விட்டது. இதோ மாதவன்! தாயைத் தேடி மகன் வந்துவிட்டான். யார் எதிர்பார்த்தார்கள்?

தாயும் மகனும் அமர்ந்திருந்தார்கள். தெருவைப் பார்த்தான் மாதவன். விழிகள் மலர்ந்தன.

மோட்டார் வண்டி வாசலில் நின்றது. அம்மா புதிய களையோடு எழுந்து நின்றாள். புன்னகையோடு வந்தாள் பானு. வியந்து போனாள், அம்மாவா இப்படி நிற்கிறாள்! ஒரு நாளும் இல்லாத காட்சி! பானுவுக்குப் பரபரப்பாக இருந்தது. அப்பாவுக்கும் அப்படியே!

“பானு” என்றவாறு மகளைத் தழுவிக் கொண்டாள் தாய்.

“என்னம்மா?”

“இதோ பார், உன் அண்ணன்…மாதவன்!”

“நிஜமாகவா?”

“ஆமாம், மாதவனேதான்!”

அப்பா அவனையே பார்த்தார்.

“அண்ணா!” என்றாள் பானு,

“பானு!” என்றான் மாதவன். அன்பின் ஒலியாக அது விரிந்தது.

– ஓரு கிளைப் பறவைகள், சிறுவர் நூல், முதற் பதிப்பு: ஆகஸ்ட் 2009, பூம்புகார் பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *