முன்னொரு காலத்தில், சொர்க்கத்தில் சும்மா இருந்த கடவுளுக்கு ஓர் ஆசை. பூமியைச் சுற்றிப் பார்க்க வேண்டும் என்ற ஆசை. தாம் படைத்த மக்களின் செயல்பாடுகளை மாறுவேடத்தில் சென்று பார்த்து மகிழ வேண்டும் என்ற ஆசை.
அதற்காக, புத்தரும் மகான்களும் அவதரித்த புண்ணிய கண்டத்தை அவர் தேர்ந்தெடுத்தார்.
ஒருநாள் விடியும் வேளையில், பூமிக்கு இறங்கினார். ஆண்டிக் கோலத்தில். அவர் கரங்களில் திருவோடு. அவர் இறங்கிய இடம், குக்கிராமம்.
அந்தக் கிராமத்தில் வீடு வீடாகப் போய் தன் பசிக்கு உணவு கேட்டார். திருவோடு ஏந்தி தெருத் தெருவாகச் சுற்றினார். திருவோட்டில் ஒரு பருக்கைகூட விழவில்லை. ஈவிரக்கம் என்பது எவனிடமும் இல்லை. தெருநாயை விரட்டியடிப்பதைப் போல அவரை விரட்டியடித்தனர்.
ஏமாற்றம் அடைந்த கடவுள் அந்தக் கிராமத்தைவிட்டு வெளியேறினார். உணவுக்காக ஊர் ஊராக அலைந்தார். எவனும் மனம் இரங்கி கடவுளின் பசியைப் போக்கவில்லை. அன்பு, பண்பு, பாசம், மனித நேயம் போன்ற அருங்குணங்கள் மக்களிடம் இல்லாதது கடவுளுக்கு அதிர்ச்சியைத் தந்தது.
புத்தரையும் புனிதர்களையும் பூமிக்கு அனுப்பி வேத சாஸ்திரங்களையும் அறிவுரைகளையும் வழங்கியும் மனிதர்கள் திருந்தவில்லையே என்று மனம் வருந்தினார் கடவுள்.
நொந்து போனவர், பசியும் பட்டினியுமாக ஒரு நகரத்துக்கு வந்தார். நகரத்திலும் அவர்மீது இரக்கப்பட எவனும் இல்லை.
பசி மயக்கத்தில் கண்கள் பஞ்சடைந்து கால்கள் தள்ளாடியபோதுதான் பூமிக்கு வந்தது எவ்வளவு பெரிய தவறு என்பது அவருக்குப் புரிந்தது.
அப்போது அவரைப் போன்ற ஒரு பிச்சைக்காரன் தெம்பாக வயிற்றைத் தள்ளிக் கொண்டு, ஏப்பம் விட்டபடி எதிரே வந்து கொண்டிருந்தான்.
அவனை ஆச்சரியத்துடன் பார்த்த கடவுள், “”இந்த நகரத்தில் உனக்கு யாரப்பா உணவு கொடுத்தது?” என்று கேட்டார்.
அதற்கு அவன், “”மடையா! எந்த மனிதனும் இன்னொரு மனிதனுக்கு உதவமாட்டான். எல்லோருமே சுயநலத்தோடு வாழ்பவர்கள். உன் பசிக்கு உனக்கு உணவு தேவையென்றால் காட்டுக்குப் போ. அந்தக் காட்டில் மூன்று பாசக்கார நண்பர்கள் இருக்கிறார்கள். ஒரு குரங்கு, ஒரு நரி, ஒரு முயல்… மூன்றும்தான் நான் சொல்லும் அந்த நண்பர்கள். அந்த மூன்று மிருகங்களிடமும் மனிதர்களிடம் நீ பார்க்க முடியாத நல்ல குணங்கள் அனைத்தும் இருக்கின்றன. நீ பசியால் வாடுவதைப் பார்த்துக் கொண்டு அவர்கள் சும்மா இருக்க மாட்டார்கள். உயிர் பிழைக்க ஆசை இருந்தால் உடனே போ…” என்று சொல்லிவிட்டு நகர்ந்தான் அவன்.
உடனே கடவுள் நகரத்தைவிட்டு வெளியேறினார். அடிவானத்தில் தெரிந்த மலைத் தொடரை நோக்கி நடந்தார். நடக்க நடக்க மலை விலகிப் போய்க் கொண்டே இருந்தது. அந்தப் பிச்சைக்காரன் சொன்னது உண்மையாக இருக்குமா? என்ற சந்தேகம் கடவுளுக்கு வந்துவிட்டது. மாலை வரை நடந்த கடவுள் ஒருவழியாக காட்டை அடைந்துவிட்டார். ஒரு பாறையைப் பார்த்ததும் அதன் மீது உட்கார்ந்தார். அவரால் மேற்கொண்டு நடக்க முடியவில்லை. பசி களைப்பு, கால்களில் வேதனை.
எங்கிருந்தோ அவரைப் பார்த்துவிட்ட குரங்கு, நரி, முயல் மூன்றும் அவரிடம் ஓடிவந்தன. அவரை அன்பாக வரவேற்றன.
கடவுள் அந்த மூன்று நண்பர்களையும் பார்த்து, “”நான் காலையிலிருந்து பட்டினி. உணவுக்காக நான் சுற்றாத ஊர் இல்லை. எனக்கு பிச்சை போட எந்த மனிதனுக்கும் மனமில்லை. பசி உயிர் போகிறது….” என்றார்.
உடனே குரங்கு, “”கவலைப்படாதீர்கள் ஐயா. சரியான இடத்துக்குத்தான் வந்திருக்கிறீர்கள். ஒரு பத்து நிமிடம் பசியைப் பொறுத்துக் கொள்ளுங்கள். எங்களால் முடிந்ததைக் கொண்டுவந்து தருகிறோம்…” என்றது.
அடுத்த வினாடி மூன்றும் அந்த இடத்தில் இல்லை. மூன்றும் வெவ்வேறு திசைகளில் ஓட்டம் பிடித்தன.
சில நிமிடங்களுக்குப் பிறகு குரங்கு, காய், கனி கிழங்கு வகைகளை அள்ளிக் கொண்டு வந்தது.
ஓடைப் பக்கம் ஓடிய நரி ஒரு பெரிய மீனைக் கவ்விக் கொண்டுவந்தது.
குரங்கும் நரியும் சுள்ளிகளைச் சேகரித்து நெருப்பு மூட்டின. கிழங்குகளையும் மீனையும் நெருப்பில் வாட்டியெடுத்து ஆண்டிக் கோலத்தில் அமர்ந்திருந்த கடவுளுக்கு அன்போடு படைத்தன.
பரவசமடைந்த கடவுள் பசி வேகத்தில் அவற்றைச் சாப்பிட ஆரம்பித்தார். அப்போது நரி, “”குரங்கண்ணே! நம்ம முயல் தம்பி என்ன ஆனான்?” என்று கவலையுடன் கேட்டது.
“”பாவம் சின்னப் பையன். அவனை நாம தனியா அனுப்பியிருக்கக் கூடாது. போக்கிரிப் புலிகிட்ட சிக்கியிருந்தால் அது அவனைக் கடிச்சு சாப்பிட்டிருக்கும்…” என்று கலக்கத்துடன் பேசியது குரங்கு.
இரண்டும் மிகுந்த கவலையுடனும், அக்கறையுடனும் முயலைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தபோது, முயல் களைத்துப் போய் வெறுங்கையோடு திரும்பி வந்தது. அதன் முகத்தில் அளவில்லாத வருத்தம்.
முயல் பத்திரமாக வந்துவிட்டதைப் பார்த்ததும் நண்பர்களுக்கு சந்தோஷம்.
“”எங்கே தம்பி போயிட்டே! நாங்க எப்படி துடிச்சுப் போயிட்டோம் தெரியுமா..” என்றது குரங்கு.
விலங்குகளின் அன்பையும் அன்யோன்யத்தையும் பார்த்து வியந்து, மனம் நெகிழ்ந்தார் கடவுள். மக்களிடம் இல்லாதது இந்த மாக்களிடமாவது இருக்கிறதே என்று மகிழ்ந்தார்.
அப்போது முயல், கடவுளைப் பார்த்து, “”ஐயா, என்னை மன்னியுங்கள். என் அண்ணன்மாருக்கு இருக்கும் அறிவையும் திறமையையும் பலத்தையும் கடவுள் எனக்குக் கொடுக்கவில்லை…” என்றது. கடவுளுக்கு “சுரீர்’ என்றது.
முயல் தொடர்ந்தது. “”உங்களுக்கு விருந்து படைக்க எனக்கு மனசு இருக்கிறது. ஆனால் அண்ணன்மாரைப் போல எதையும் சேகரித்துக் கொண்டுவர என்னால் முடியவில்லை…” என்று வருத்தத்துடன் சொல்லிற்று. பிறகு எரியும் நெருப்பையே யோசனையுடன் பார்த்த முயல், குரங்கிடம் சென்று அதைக் கட்டித் தழுவியது. பிறகு நரியின் கால்களைக் கட்டிக் கொண்டு கண் கலங்கியது. யாரும் எதிர்பாராத அடுத்த வினாடியில் அந்த முயல் நெருப்புக்குள் பாய்ந்தது. ஆண்டிக் கோலத்தில் அமர்ந்திருந்த கடவுளைப் பார்த்து, “”ஐயா! என்னால் முடிந்தது இதுதான். என் உடம்பு நன்றாக வெந்ததும் வெளியே எடுத்து தோலை உரித்துப் போட்டுவிட்டு என் மாமிசத்தை உண்டு உங்கள் பசியை முழுமையாகப் போக்கிக் கொள்ளுங்கள்…” என்று சொல்லிக் கொண்டே ஜுவாலைக்குள் மயங்கிச் சாய்ந்தது.
திடுக்கிட்ட கடவுள் அவசரமாக நெருப்புக்குள் தன் கரங்களைச் செலுத்தி, பாதி கருகிவிட்ட முயலைத் தூக்கி தன் மார்போடு அணைத்துக் கொண்டார். அப்போது அதன் மீதிருந்த தீக்காயங்கள் சட்டென்று மறைந்து, கருகி மயங்கியிருந்த முயல், உயிர்த்துடிப்புள்ள பழைய முயலாக மாறியது.
இந்தக் காட்சியை குரங்கும் நரியும் ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்த போது, ஆண்டிக் கோலத்தில் இருந்தவர் மறுபடியும் கடவுளாக மாற, அவரைச் சுற்றி கண்களைப் பறிக்கும் ஒளி!
ஓர் ஏழையின் பசியைப் போக்க மனமில்லாத சுயநல மனிதர்கள் வாழும் பூமியில், தன் இன்னுயிரையே ஈந்திட முன்வந்த அந்த அன்பான முயலை மார்போடு அணைத்தவாறு கடவுள் சொர்க்கத்துக்குப் பறந்தார்.
மேகங்களை ஊடுருவியபடி வான மண்டலத்துக்கு அவர் முயலுடன் சென்று கொண்டிருந்ததைப் பார்த்த குரங்கும் நரியும் கலங்கின. நண்பனை இழந்துவிட்ட சோகம் அவர்களுக்கு.
குட்டி முயலைத் தூக்கிச்சென்ற கடவுள், அது வசிப்பதற்கு நிலாவில் ஒரு மாளிகையைக் கட்டிக் கொடுத்தார். அந்த முயல்தான் பெüர்ணமி தோறும் முழு நிலாவில் தோன்றும் முயல்.
– சுமந்திரன் (ஆகஸ்ட் 2012)