பாட்டுப் பாடவா…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: August 9, 2012
பார்வையிட்டோர்: 9,737 
 
 

நாடோடிக் கதை வரிசை-21 (தமிழ்நாடு)

மரத்தின் மீது அமர்ந்து இனிய குரலெடுத்துப் பாடிக்கொண்டு இருந்தது குயில். அதன் தொண்டையில் இருந்து வெளிப்பட்ட குக்கூ, குக்கூ என்ற இசை, கானகம் எங்கும் பரவியது.

அந்த மரத்தின் அருகில் ஒரு குட்டை இருந்தது. அதில் வசித்துவந்த தவளை ஒன்று, குயிலின் பாடலைக் கேட்டது. அதற்கு குயிலின் பாடல் மிகவும் பிடித்துப் போயிற்று. தத்தித் தத்தி மரத்தை நெருங்கியது தவளை.

‘‘குயிலே, உன் பாடல் என் மனதை மயக்குகிறது. நானும் இப்படிப் பாட முடியுமா என்கிற ஏக்கம் எழுகிறது. இவ்வளவு அருமையாகப் பாட எங்கே கற்றுக்கொண்டாய்?’’ என்று கேட்டது.

தவளையின் புகழ்ச்சி குயிலுக்கு சந்தோஷத்தை உண்டாக்கியது. அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல், ‘‘உன்னாலும் நிச்சயம் பாட முடியும். முறையாகக் கற்றுக்கொண்டால் போதும்.’’ என்றது.

‘‘ஹ§ம்… உன்னைப் போன்ற அருமையான பாடகரிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும். அப்படிப்பட்டவர் எனக்கு யார் கிடைப்பார்கள்?’’ என்றது தவளை ஏக்கத்தோடு.

‘‘என்ன அப்படிச் சொல்லிவிட்டாய்? நானே உனக்குப் பாடச் சொல்லித் தருகிறேன்’’ என்று மகிழ்ச்சியாகச் சொன்னது குயில்.

தவளைக்கு சொல்ல முடியாத மகிழ்ச்சி. குயிலின் சிஷ்யனாகத் தயாராகிவிட்டது. அன்றே தொடங்கியது இசைப் பாடம்.

‘‘ஸ.. ப… ஸ… இதைத் திரும்பச் சொல்’’ என்றது குயில்.

‘‘ஸ்ர்ர்ர்… ப்ர்ர்ர்… ஸ்ர்ர்ர்…’’ என்றது தவளை. அதனால் அப்படித்தான் சொல்ல முடிந்தது. கொஞ்ச நேரம் இதே மாதிரி பாடம் நடந்தது. தவளைக்கு சரியாகப் பாட வரவில்லை என்று குயிலுக்குத் தெரிந்தது. இருந்தாலும் ஆசிரியரான தனக்குக் கெட்ட பெயர் வந்துவிடுமே என்று நினைத்து, ‘‘முதலில் கஷ்டமாகத்தான் இருக்கும். போகப்போக சரியாகிவிடும். நாம் நாளைக்கும் இசைப் பாடத்தைத் தொடரலாம்’’ என்றது.

இப்படியே ஒரு வாரம் ஆயிற்று. இரண்டு வாரமும் கழிந்தது. ‘ஸ்ர்ர்ர்… ப்ர்ர்ர்… ஸ்ர்ர்ர்…’ தொடர்ந்தது.

குயிலுக்கு என்ன செய்வ தென்றே தெரியவில்லை. பாடத்தை நிறுத்தியது. ஆனால் மழையின் தொடர்ச்சியான தூறலைப் போல குயிலின் கனவிலும் தவளையின் ‘ஸ்ர்ர்ர்… ப்ர்ர்ர்… ஸ்ர்ர்ர்…’ எதிரொலித்துக்கொண்டே இருந்தது.

நான்கைந்து நாட்கள் இப்படிக் கழிந்தன.

ஒரு நாள் காலை குயில் பாட ஆரம்பித்தது. ‘‘கா… ரீ… ஸா…’’

வெளிப்பட்ட சத்தமோ வேறு விதமாயிருந்தது ‘‘க்ர்ர்ர்… ர்ர்ர்… க்ர்ர்ர்…’’

என்ன முயற்சி செய்தும் குயிலால் பாட முடியவே இல்லை. அது உலகின் முதல் காகமாகிவிட்டது.

ஆம் நண்பர்களே… தவளை, தவளையாகவே இருந்தது. குயில், காகமாகிவிட்டது!

வெளியான தேதி: 01 நவம்பர் 2006

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *