ஒரு பெரிய பணக்காரர், புதிதாக வாழைத் தோட்டம் அமைத்தார். முதலில் கிடைக்கும் வாழைத்தாரை பழனி முருகனுக்கு அளிப்பதாகப் பிரார்த்தனை செய்து கொண்டார்.
முதல் தாரை வெட்டி வந்து பழுக்க வைத்தார்.
பழத்தாரில் 125 கனிகள் இருந்தன. பணக்காரர், பண்ணையாள் வேலனை அழைத்து அவனிடம் வாழைத் தாரைக் கொடுத்து பழனி கோவிலுக்குக் கொண்டுபோய் கொடுக்கும்படி சொன்னார்.
15 கி.மீட்டர் தூரம் வரை வாழைத்தாரை சுமந்து செல்ல வேண்டியிருந்தது. ஆனால் வேலனுக்கு செலவுக்கு ஏதும் பணம் அவர் கொடுக்கவில்லை.
வேலனும் தட்டாமல் தூக்கிச் சென்றான்.
நெடுந்தூரம் நடந்த வேலனுக்குக் களைப்பும் பசிமயக்கமுமாக வந்தது.
ஓரிடத்தில் அமர்ந்து ஓய்வெடுத்தவன், பழத்தாரைப் பார்த்தான்.
பசி தாங்க முடியாமல் அதிலிருந்து 5 பழங்களைப் பிய்த்து சாப்பிட்டு விட்டான்.
பின்னர் கோவிலுக்குச் சென்று பழத்தாரை உரிய அதிகாரியிடம் ஒப்படைத்தான்.
அந்த அதிகாரி பழங்களை எண்ணிப் பார்த்துவிட்டு, 120 பழங்கள் பெற்றுக் கொண்டதாக ரசீது எழுதிக் கொடுத்துவிட்டார்.
திரும்பி வந்து ரசீதைக் கொடுத்தான் வேலன்.
அதைப் பார்த்ததும் பணக்காரருக்கு வந்ததே கோபம்!
5 பழங்களைத் திருடிவிட்டதாகக் கூறி, வேலனைக் கை வலிக்குமளவுக்கு அடித்து விட்டார். அடித்த களைப்பில் பணக்காரர் தூங்கி விட்டார்.
அவருடைய கனவில் முருகன் தோன்றி, “”நீ அனுப்பிய ஐந்து பழங்களும் வந்து சேர்ந்தன” என்று கூறிவிட்டு மறைந்தார்.
பணக்காரருக்கு அப்போதுதான் புத்தி வந்தது. வேலன் தின்ற பழங்கள்தான் முருகனுக்குப் போய்ச் சேர்ந்தது என்பதை உணர்ந்தபடி வேலனிடம் மன்னிப்பு கேட்டார்.
– எஸ்.ஆறுமுகம், கழுகுமலை. (ஜூன் 2012)