தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்  
கதைப்பதிவு: May 4, 2013
பார்வையிட்டோர்: 14,200 
 
 

மகேந்திரபுரி என்னும் நாட்டை மகேந்திரவர்மன் என்ற அரசன் ஆண்டு வந்தான். நீதியும் நேர்மையும் ஞானமும் உள்ள அரசனாகத் திகழ்ந்தான். அவனது ஆட்சியில் எந்த ஒரு வழக்கிற்கும் நல்ல நியாயம் வழங்கப்பட்டது. இதனால் அவனது புகழ் எங்கும் பரவியிருந்தது.

மகேந்திரபுரியில் சுந்தரி என்ற பெண் வாழ்ந்து வந்தாள். அவளிடம் இரண்டு பசுமாடுகள் இருந்தன. அம்மாடுகளின் மூலம் கிடைக்கும் பாலை விற்றுப் பிழைப்பு நடத்தி வந்தாள். வறுமைதான்… ஆனாலும் நேர்மையாக உழைத்துச் சம்பாதித்த பணத்தில் ஓரளவுக்குத் துன்பமில்லாமல் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருந்தாள்.

ஒரு செம்பு நீர்சுந்தரியின் எதிர்வீட்டில் ஒரு பெண் இருந்தாள். அவளுடைய பெயர் பரணி. அவளிடம் இருபது மாடுகள் இருந்தன. ஏராளமான வருமானம். இருந்தபோதிலும் கிடைத்த வருமானத்தை ஊதாரித்தனமாகச் செலவு செய்து வந்தாள். அவளுக்கு சுந்தரியைக் கொஞ்சம் கூடப் பிடிக்காது. சுந்தரியை ஏதாவது சிக்கலில் மாட்டி வைக்க வேண்டும் என்ற எண்ணத்தை மனத்தில் வளர்த்துக் கொண்டிருந்தாள். அதற்காக சமயம் பார்த்துக் கொண்டிருந்தாள்.

ஒருநாள் பரணி, சுந்தரியின் வீட்டிற்குச் சென்றாள். அவளிடம் தனக்கு இரண்டு படி வெண்ணெய் கடனாகக் கொடுக்கும்படி கேட்டாள்.

சுந்தரி மறுப்பு ஏதும் சொல்லாமல் உடனடியாக பரணி கேட்ட இரண்டு படி வெண்ணெயைக் கொடுத்து உதவினாள். அதை வாங்கிக் கொண்ட பரணி, விரைவிலேயே திருப்பித் தந்து விடுவதாகக் கூறிவிட்டுச் சென்றாள்.

நாட்கள் பல சென்றன. பரணியிடமிருந்து வெண்ணெய் திரும்பி வரவேயில்லை. தனக்குச் செலவுக்குப் பணமில்லாததால், சுந்தரி தான் கொடுத்து உதவிய வெண்ணெயை திருப்பித் தருமாறு பரணியிடம் கேட்டாள்.

அதற்கு பரணி, “நீ எப்போது எனக்கு வெண்ணெய் கொடுத்தாய்? உன்னிடமெல்லாம் நான் கடன் வாங்குவேனா என்ன?’ என்று அலட்சியமாகப் பதில் கூறினாள்.

சுந்தரி மனம் பதைத்துப் போனாள். இதற்கு என்ன செய்வது என்று யோசித்த அவள், நீதி வழுவாத அரசன் இருக்க நமக்கு என்ன கவலை என்ற முடிவுக்கு வந்தாள்.

வழக்கை மகேந்திரவர்மனிடம் கொண்டு சென்றாள்.
இருவரையும் விசாரித்த அரசன் மறுநாள் அரசவைக்கு இருவரும் வருமாறு உத்தரவிட்டான்.

மறுநாள் காலையில், அரண்மனைக்குள் நுழையும் வழியில் சேறும் சகதியுமாக இருக்கும்படி செய்தான். அங்கேயே இரண்டு செம்புகளில் தண்ணீரை நிரப்பி வைக்கும்படி தனது சேவகர்களுக்கு உத்தரவிட்டான்.

பரணியும் சுந்தரியும் அரசவைக்கு வந்தனர். வரும் வழியில் இருவரும் அந்தச் சேற்றைத் தாண்டி வரும்படி ஆனது. அப்போது இருவரின் கால்களிலும் சேறு அப்பிக் கொண்டது. அருகிலேயே செம்பில் நீர் இருப்பதைப் பார்த்த பரணி, அவசர அவசரமாக நீரை எடுத்துக் காலில் ஊற்றிக் கழுவினாள். சரியாகக் கழுவாததால் அவளுடைய கால்களில் நிறைய சேறு இன்னும் ஒட்டிக் கொண்டுதான் இருந்தது. அதோடு அரசவைக்குள் நுழைந்தாள்.

சுந்தரியோ, செம்பு நீரைக் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றித் தனது கால்களை நன்றாகச் சுத்தம் செய்தாள். அதன்பிறகும் செம்பில் பாதியளவு நீர் இருந்தது.

இவையனைத்தையும் ஒரு காவலாளியை வைத்து கவனிக்கும்படி செய்திருந்தான் அரசன் மகேந்திரவர்மன். காவலாளியும் உடனடியாக நடந்தவற்றை அப்படியே அரசனிடம் சென்று விளக்கமாகக் கூறினான்.

அவனுடைய விளக்கத்தைக் கேட்ட அரசனுக்கு பரணியின் ஊதாரித்தனமும் பொறுப்பற்ற குணமும் புரிந்தது. சுந்தரி பொறுப்பும், ஒழுங்கும் தன்னிடத்தே கொண்டவள் என்பதும் தெரிந்தது.

அரசவை கூடியதும் மகேந்திரவர்மன் தனது தீர்ப்பைக் கூறினான். பரணி வெண்ணெயை வாங்கிக் கொண்டு பொய் சொன்னதால் தண்டனையாக அவளுடைய மாடுகளில் இரண்டை சுந்தரிக்குக் கொடுக்க வேண்டும் அதனால் வரும் லாபத்தை ஓராண்டுக்கு சுந்தரி அனுபவித்துக் கொள்ளலாம் என்பதுதான் தீர்ப்பு.

மன்னனின் புத்திக்கூர்மையையும் நீதி வழுவாத குணத்தையும் அனைவரும் பாராட்டினர். அவனுடைய புகழ் மேலும் பரவியது.

-எம்.சாமிநாதன் (நவம்பர் 2011),
10-ம் வகுப்பு,
நா.ம.ச.சே.வாசன்
உயர்நிலைப் பள்ளி,
கே.வலசை, பரமக்குடி,
இராமநாதபுரம்.

1 thought on “ஒரு செம்பு நீர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *