கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: April 11, 2024
பார்வையிட்டோர்: 2,293 
 
 

“நந்தா உனக்கு லெட்டர் வந்திருக்கு போல இப்போதான் டைம் ஆஃபிஸ் போர்டு பார்த்துட்டு வரேன் உன் பேர் இருக்கு” என்றான் பஷீர் அறைக்குள் நுழைந்துகொண்டே. நீண்ட நாட்கள் கழித்து தனக்கு கடிதம் வந்திருக்கிறது என்ற செய்தியைக் கேட்டதும் நந்தனுக்கு தன்னையே நம்ப முடியவில்லை, அலுவல் முடிந்து வந்து குளியலுக்குத் தயாரான நிலையில் தேநீர் தயாரிப்பில் இருந்த நந்தன் கண்கள் அகலமாக விரிய “பஷீர் நிஜமாவா சொல்லுற?”, “ஆமாடா” என்றான் பஷீர் தனது அலுவல் உடையை மாற்றிக்கொண்டு குளியலுக்குத் தயாராகிக்கொண்டே.

“வரும்போது பார்த்தேண்டா டைம் ஆஃபிஸ் போர்ட் கிட்ட கூட்டமா இருந்துச்சு, இன்னிக்கு லெட்டர் டெலிவரி வந்திருக்கும்னு அப்பவே நினைச்சேன். ஆனா எனக்கு லெட்டர் வந்து ரொம்ப மாசம் ஆச்சா, அதான் இப்பவும் வந்திருக்காதுன்னு நினைச்சு போர்டை பார்க்காம நேரா ரூமுக்கு வந்துட்டேன்”, என்று பஷீரிடம் சொல்லிக்கொண்டே, “யார்கிட்ட இருந்து லெட்டர் வந்திருக்கும்?” என்று தனக்குத்தானே கேள்விகேட்டுக்கொண்டு உற்சாகத்தில் “ஊ..லல்லல்லா” பாடினான் நந்தன்.

“நின்னு பாடிக்கிட்டே இருந்தா எப்படி தெரியும் போய் வாங்கிட்டு வாடா” என்றான் பஷீர். “இப்படியேவா?” என்று தான் குளிக்கத் தயாரான நிலையில் தலையில் தேய்த்த எண்ணை வடிவதை காட்டிக்கொண்டே நகைப்புடன் கேட்டான் நந்தன்.

“சரி சரி அப்ப குளிக்கப்போ” என்றான் பஷீர்

“டீ போட்டிட்டிருக்கேண்டா கொஞ்சம் பொறு” என்றான் பதிலுக்கு நந்தன்.

“தாங்ஸ் டா, அதுல இஞ்சி போட்டியா” கேட்டான் பஷீர்

“ம்” பதிலளித்தான் நந்தன்.

நந்தனும் பஷீரும் மூன்றாண்டு கால நண்பர்கள். இருவரும் ஒரே கான்ட்ராக்ட்டிங் கம்பெனியில் ஒரே விதமான வேலை பார்க்கும் ஊழியர்கள். இந்தக் கம்பெனி கேம்பில் மொத்தம் ஐந்து பிரிவுக் கட்டிடங்கள் ஒவ்வொரு பிரிவிலும் சுமார் நூறு அறைகள் ஒவ்வொரு அறையிலும் அதிகபட்சம் இரண்டு நபர்கள் என்கிற கணக்கில் ஊழியர்களுக்கு அறைகள் ஒதுக்கிக்கொடுத்திருக்கும் நிர்வாகம். மூன்றாண்டுகளுக்கு முன்

தமிழகத்திலிருந்து இந்த சவூதி அரேபியாவிற்கு ஒரு ஏஜெண்சி மூலமாக வேலைக்கு வந்தவர்கள்தான் நந்தனும் பஷீரும். சவுதிக்கு வந்தபிறகுதான் நந்தனும் பஷீரும் ஒருவருக்கு ஒருவர் பரிச்சயம் ஆனார்கள். உறவுகள் நட்புக்களை ஊரிலே விட்டுவிட்டு வந்து ஆண்டுக் கணக்காக வேலைபார்க்கும் நந்தன் பஷீர் போன்ற நபர்களுக்கு இந்தக் கேம்ப் தான் உலகம். இங்குள்ள நபர்கள் தான் உறவுகள். இங்கே நந்தன் பஷீர் போல நிறையப் பேர்கள் உண்டு, உதாரணத்திற்கு குமரன் என்கிற சென்னையைச் சேர்ந்தவர் உண்டு, கிறிஸ்டோபர் என்கிற கன்னியாகுமரிக் காரர் உண்டு, வாஹித் என்கிற ராமநாதபுரத்துக் காரர் உண்டு, ஆப்ரஹாம் மேத்யூ என்கிற கேரளத்துக்காரர் உண்டு, தமிழ்விந்தன் என்கிற இலங்கைக்காரர் உண்டு, காலித் பாய் என்கிற பாகிஸ்தானைச் சேர்ந்தவர் உண்டு, இன்னும் இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம், இவர்கள் பல ஆண்டுகளாக ஒரே கேம்பில் வாழ்ந்து பயணித்து வரும் உறவுகள். இவர்கள் அனைவருக்கும் ஒரே உணவுக் கூடம் ஒரே சமையல். காலை ஏழு மணி முதல் மாலை ஏழு மணிவரை, என்கிற கணக்கில் ஒரு நாளைக்கு பன்னிரண்டு மணிநேரம் வேலை பார்ப்பவர்கள்தான் இந்தக் கேம்பில் இருப்பவர்கள். வெள்ளிக்கிழமை மட்டும் விடுமுறை. ஒரு நாளில் எட்டு மணிநேரம் தான் வேலை பார்க்க வேண்டும் என்று உலகச் சட்டம் சொல்லலாம் அதை நடைமுறையில் இவர்கள் கண்டதில்லை, இவர்கள் அதை பொருட்படுத்தவும் இல்லை. இங்கே வசிக்கும் நிறைய ஊழியர்கள் கனரக வாகன ஓட்டுனர்கள், வாகனங்கள் பழுதுபார்க்கும் ஒர்க் ஷாப் ஊழியர்கள், கப்பலிலிருக்கும் கிரேன் ஆபரேட்டர்கள், ஃபோர்க் லிஃப்ட் ஆப்பரேட்டர்கள், கப்பலில் இருந்து சரக்குகளை இறக்குவதற்கு குனிந்து நிமிர்ந்து உடலுழைப்பு நல்குபவர்கள், இப்படி உடலுழைப்பு நல்குபவர்களை லேபர் என்றழைக்கிறது ஆங்கில வார்த்தை, இறக்கிய சரக்குகளை பி.எல். படி சரி பார்த்து பிரித்து வைத்து, இரவு பகல் என்று இருபத்திநான்கு மணிநேரமும் காவல் செய்யும் கண்காணிப்பாளர்கள், சரக்குகளின் உரிமையாளர்கள் வரும்பொழுது அவர்களிடம் சரியானபடி பொருட்களை டெலிவரி செய்யும் விநியோகிப்பாளர்கள் என்று பலவகை உண்டு. இவர்களுக்கெல்லாம் உணவு தயாரிக்க கேம்ப்பின் உள்ளேயே சமையற்கூடமும், சமையல் ஊழியர்களும் உண்டு.

தயாரான தேனீரை கோப்பையில் இட்டு பஷீரிடம் நீட்டினான் நந்தன். பெற்றுக்கொண்ட நந்தன், “சீக்கிரம் குளிச்சுட்டு போடா மணி இப்பவே எட்டு ஆகிடுச்சு ஒன்பது மணிக்கு டைம் ஆஃபிஸ் க்ளோஸ் பண்ணிடுவாங்க தெரியுமில்ல?”.

தானும் ஒரு கோப்பையில் தேநீர் இட்டு அதை சுவைத்துக்கொண்டே “ம்… பயங்கர பசிடா மொதல்ல டீ, அப்பறம் குளியல் அப்பறம்தான் டைம் ஆபீஸ்” என்று வரிசைப்படுத்திவிட்டு தேநீரைச் சுவைக்கத் தொடர்ந்தான் நந்தன்.

நூறு அறைகள் என்று சொல்லியிருந்தேன் அல்லவா, இந்த நூறு அறைகளுக்கும் பொதுவாக மேல் தளத்திலோ கீழ் தளத்திலோ அமைந்திருக்கும் சுமார் இருபது குளியல் அறைகள். கூடுமான வரை காலை நேரமும் சரி மாலை நேரமும் சரி ஷிஃப்ட்க்கு செல்பவர்கள் ஷிஃப்ட் முடித்து வந்தவர்கள் என குளியல் பகுதி கூட்டமாகவே இருக்கும். நட்புகளுடன் உரையாடி இந்தக் கூட்டத்திற்குள் காத்திருந்து பாட்டுப்பாடி குளித்து முடித்து அறைக்குத்திரும்புவதே ஒரு நகைச்சுவை கலந்த பொழுதுபோக்கு. இன்றையதினம் டைம் ஆஃபிஸ் நோட்டீஸ் போர்டில் கடிதம் வந்தவர்களின் பெயர்ப்பட்டியல் ஒட்டப்பட்டிருக்கிறது அல்லவா குளியல் பகுதியில் அதிகமாக கடிதம், ஊர், திருமணம், வீடு, நிலம், அத்தை மகள், மாமன் மகள், அப்பா, அம்மா, மனைவி, குழந்தை, நண்பன், அண்ணன், அக்கா என்ற வகையான பேச்சாகவே இருந்தது.

இவைகளின் நடுவே பொருளாதாரமும் முக்கியப் பங்கு வகித்தது. குளியல் அறைகள் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியிருந்ததால் தானும் வரிசையில் காத்திருந்தான் நந்தன். நின்றிருந்த வேளையில் தனக்கு யாரிடம் இருந்து கடிதம் வந்திருக்கும் என்கிற நினைப்பு மீண்டும் ஆவலைத் தூண்டியது, எப்போ ஊருக்கு வருவேன் என்று அப்பா அம்மா கேட்டிருப்பார்களோ, நண்பர்கள் யாரவது ஊருக்கு வரும்போது பொருட்கள் ஏதாவது வாங்கி வரச்சொல்லியிருப்பார்களோ, யாருக்காவது திருமணம் நிச்சயம் ஆகியிருக்குமோ, உறவுகள் யாராவது யாரையாவது விசாரிக்கச்சொல்லி எழுதியிருப்பார்களோ, இப்படியான பல சிந்தனைகளின் ஊடே தன்னைப்போலவே அருகாமையில் வரிசையில் நின்றிருந்த சக ஊழியர்களின் உரையாடல்களும் நந்தனின் காதுகளைத் தீண்டியது.

அப்படியான உரையாடல்களில் சில…

“தள்ளி எடுத்த சீட்டுப் பணத்தை வாங்கித்தான் ஏஜெண்டுக்கு கொடுத்தேன், சீட்டு முடிய இன்னும் ஆறு மாசம் இருக்கு அதுக்கு அப்புறம் தான் ஊருக்கு ஏதாவது பொருட்கள் வாங்குவது பற்றி யோசிக்கணும்”

“மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வரதட்சணை வேண்டாம்னு சொல்லிட்டாங்களாம், இருந்தாலும் அப்பா சொல்றாரு வெறுங்கையோடு எப்படிடா அனுப்பறது, கடனை உடனை வாங்கி அனுப்ப முடியுமா ஒரு அஞ்சு பவுனாவது போடணும்”

“வட்டிப் பணம் கொடுக்கலைன்னா வீட்டு வாசலுக்கு வந்து மானத்தை வாங்கிடுவான்னு வட்டியை விடாம காட்டுறாங்க இப்போ ரெண்டு மாசமா வாடகை குடுக்கலையாம் வட்டிக்காரனுக்கு பதில் வீட்டுக்காரன் மானத்தை வாங்கப்போறான்”

“அந்தப் பொண்ணுக்கு சவூதி மாப்பிள்ளை வேண்டாமாம்”

“அதுக்கு நீ என்ன சொன்ன?”

“நான் என்ன ஃபிளையிட் ஏறி வந்து கலெக்டர் உத்தியோகமா பாக்குறேன், பாக்குறது லேபர் வேலை இதுக்கெல்லாம் அந்தப் பொண்ணு சம்மதிக்குமா, அதான் கல்யாணம் இப்போதைக்கு வேண்டாம்னு சொல்லிட்டேன்”

“என் பையன் கல்லூரியில் அவுங்க டிபார்ட்மெண்ட்லேயே முதல் மாணவனா வந்திருக்கானாம், ரொம்ப சந்தோஷமா இருக்குய்யா, வருஷக் கணக்கா தள்ளி இருந்தாலும் பிள்ளைங்களை அந்த ஆண்டவன் சந்தோஷமா வச்சிருந்தா அது போதும்”

வீடு கிரகப் பிரவேசம்ன்னு பத்திரிகை வந்திருக்குடா, இங்க இருந்துட்டு என்ன செய்யுறது, வீடியோ எடுத்து அனுப்பச் சொல்லியிருக்கேன்.

“மூணு மாசமா லெட்டர் வரலை இன்னைக்காவது வந்திருக்கும்னு ஆசையா நோட்டிஸ் போர்டில் என் பேரைத் தேடினேன், ம்ஹூம், இன்னைக்கும் வரலை”

“கல்யாணம் முடிஞ்ச ஒரு மாசத்தில இங்க வந்தேன், இப்போ ரெண்டு வருஷம் ஆச்சு, எப்போ வருவேன்னு கேட்குது, கடனை அடிக்காம எப்புடி ஊருக்கு போக முடியும்?”

“ரெண்டு வருஷ சம்பாத்தியம் ஊருல நிலம் வாங்கி என் பேர்ல ரெஜிஸ்டர் பன்னிட்டான்டா மச்சான், ஐ ஆம் ஹாப்பி”

“ஒவ்வொரு தடவையும் ரெண்டு லெட்டர் மூணு லெட்டர் எழுதுறா மச்சான், லவ்வோ லவ்வு, எப்படா ஊருக்குப் போவோம் கல்யாணத்தை முடிப்போம்னு இருக்கு”

“டேய் மாப்ள இங்க கேளுடா, போன வாரம் லீவு முடிஞ்சு ஊர்ல இருந்து வந்தான்ல நம்ம ராஜேசு”

“ஆமா”

“அவன் மொதல்ல ஊர்ல இருந்து வந்தபோது அவன் பொண்ணுக்கு ஒரு வயசாம், இப்போ மூணு வருஷம் காண்ட்ராக்ட் முடிச்சுட்டு லீவுல போனான், இப்ப அவன் பொண்ணுக்கு நாலு வயசு ஆகுதா, இவனைப் பார்த்து அடையாளம் தெரியாம யாரும்மா இந்த மாமான்னு கேட்குதாண்டா.. ஹா ஹா ஹா”

இந்தச் சிரிப்பொலிகூட நந்தனின் காதுகளைத் தொட்டது.

இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்தூர்வது அஃதொப்ப தில்;

என்கிறான் வள்ளுவன். ஆனால் இவர்களிடம் அந்த குறளைச்சொல்லி நியாயம் கேட்க முடியாது. சராசரி வாழ்க்கையில் இதுபோன்ற வலிகளை சிரித்துக் கிடப்பதுதான் இவர்களின் பாக்கியம்.

வார்த்தைப் பரிமாறல்களும் வரிசையும் மெல்ல மெல்லக் கடக்க ஒரு அறை காலியானது. குளியல் முடித்த நந்தன் அறைக்குத்திரும்ப நேரம் ஒன்பதை நெருங்கிக்கொண்டிருந்தது.

அறைக்குத்திரும்பிய நந்தன், “பஷீர் சாப்பாடு வாங்கீட்டு வந்துட்டியா, இன்னிக்கு என்ன டின்னர்?”

“என்ன புதுசா செஞ்சுடப் போறானுங்க, அதே கூசாக்காய் சாம்பார், ரசம், மோர், ஊறுகாய், சாதம். டேபிள்ள வச்சிருக்கேன், சாப்பிடு நான் கொஞ்ச நேரம் கழிச்சு சாப்பிடுறேன்”, என்று நந்தனிடம் கூறிவிட்டு தான் பார்த்துக்கொண்டிருந்த ‘உள்ளத்தை அள்ளித்தா’ திரைப்படத்தைத் தொடரலானான் பஷீர். கடந்த ஆறு மாதங்களுக்கு முன் டி வி, வி சி ஆர் வாங்கவேண்டும் என்று நினைத்திருந்தான் பஷீர், ஆனால் அப்பொழுது அவனால் வாங்க இயலவில்லை, காரணம் அந்த மாதம் அவன் அக்கா வீட்டுக்காரரிடமிருந்து ஒரு கடிதம் வந்திருந்தது அதில் அவர் செய்த தொழில் சரியான வருமானம் தரவில்லை என்றும் புதுத்தொழில் தொடங்க இருப்பதாகவும் அதற்கு கொஞ்சம் பணம் அனுப்பித்தரும்படியும் கேட்டிருந்தார், அவர் கேட்டிருந்த தொகையை அடுத்த இரண்டு மாதங்கள் சம்பளம் வாங்கி அனுப்பி வைத்தான், பிறகு பெற்றோரிடமிருந்து எதிர்பாராத செலவுகள் என்றும் கடிதம் வரவே அவற்றையும் சரிசெய்து அவன் விரும்பிய டி வி, வி சி ஆர் வாங்க இதோ ஆறு மாதங்கள் ஆகிவிட்டது. சென்ற வாரம்தான் புதிதாக வாங்கி வந்திருந்தான், அதில் தான் இப்போது ‘உள்ளத்தை அள்ளித்தா’ திரைப்படத்தை பார்த்துக்கொண்டிருக்கிறான். படம் பார்க்கும் ஆவல் காரணமாக நந்தனை சாப்பிடச்சொல்லிவிட்டு தான் பிறகு சாப்பிடுவதாகச் சொன்னான்.

“அவங்கள குறை சொல்லாதடா, கிச்சன்ல இருக்கவங்க என்ன செய்வாங்க, அவங்களும் நம்மள மாதிரி கான்ட்ராக்ட்ல வந்தவுங்கதானே, கம்பெனி விதவிதமா காயும் கறியும் வாங்கிக் கொடுத்தா அவங்க சமைக்கப் போறாங்க. கம்பெனி வாங்கிக் கொடுக்காததுக்கு கிச்சன்ல இருக்கவங்க என்ன செய்வாங்க?” என்று சமையல் ஊழியர்களுக்கு ஆதரவாக பேசினான் நந்தன்.

“யப்பா, தெரியாம சொல்லிட்டேன், கிச்சன் ஸ்டாஃப் மேல எந்த தப்பும் இல்லை. சரியா? இப்போ நீ சாப்பிடு சீக்கிரம் பொய் உன் லெட்டரை வாங்கிட்டு வா, டைம் ஆஃபிஸ் மூடிடுவாங்கள்ள?” என்று நந்தனை அவசரப்படுத்தினான் பஷீர்.

“ஓ.கே.டா நீயும் அப்பறம் தான் சாப்பிடுறேன்னு சொல்லுற, நானும் உன் கூடவே சாப்பிடுறேன், இப்போ போய் லெட்டர் வாங்கிட்டு வந்துடறேன்.” என்ற நந்தன் தான் உடுத்திய பாண்ட் ஷர்ட் சரியாக இருக்கிறதா என்று சுவற்றில் மாட்டியிருந்த முகம் பார்க்கும் கண்ணாடியின்முன் நின்று தெரிந்தவரை எட்டி எட்டி சரி செய்து கொண்டான், கண்ணாடியின் முன்னிருந்த சீப்பை எடுத்து தலை வாரினான், சீப்பிற்கு பக்கத்தில் இருந்த யார்ட்லி பவுடர் டப்பாவை எடுத்து தனது இடதுகையில் லேசாகக் கொட்டிக்கொண்டான் பவுடரை இரண்டு

கைகளாலும் தடவி பிறகு மிகவும் லேசாக பட்டும் படாமலும் முகத்திற்குத் தடவிக்கொண்டான், ” வரேண்டா பஷீர்” என்று டைம் ஆஃபிஸ் கிளம்பினான்.

“நந்தா, கான்டீன் திறந்திருந்தா வரும்போது குபூஸ் (ஒரு வகை ரொட்டி, அரபு மொழியில் ‘குபூஸ்’) வாங்கிட்டு வாடா, சாம்பாருக்கு நல்லா இருக்கும்.” என்றான்,

“ஓகேடா”, என்று பஷீருக்கு பதிலளித்துவிட்டு அறையிலிருந்து வெளியேறினான் நந்தன்.

வெகு சீக்கிரமாகவே அறைக்குத்திரும்பினான் நந்தன் கையில் குபூஸுடன்.

“என்னடா, யார்கிட்ட இருந்து லெட்டர்” என்று கேட்டான் பஷீர்.

“டைம் ஆஃபிஸ் மூடிட்டாங்க பஷீர்”, என்றான் சற்று தோய்ந்த குரலில்.

“அதான் சொல்லிக்கிட்டே இருந்தேன் சீக்கிரம் போடான்னு, சரி நாளைக்கு டூட்டி முடிஞ்சு வரும்போதே நேரா டைம் ஆஃபிஸ் போயிட்டு, லெட்டரை வாங்கிட்டு வந்துடு.” என்று சொல்லிவிட்டு ‘உள்ளத்தை அள்ளித்தா’வைத் தொடர்ந்தான் பஷீர்.

இருவரும் உணவருந்தி முடித்ததும், பஷீரிடம், “டேய் வெளில நல்லா காத்து வருது வரியா ஒரு சின்ன வாக் போயிட்டு வரலாம்” என்று நடக்கக் கூப்பிட்டான் நந்தன். பஷீரும் சம்மதிக்க இருவரும் அறையைப்பூட்டிக்கொண்டு வெளியில் நடக்கக் கிளம்பினர்.

“என்னடா ஒண்ணுமே பேசாம வர்ற, லெட்டர் யார்கிட்ட இருந்து வந்திருக்கும்னுதான நினைக்கிற?” கேட்டான் பஷீர்.

“இல்லடா, அது எனக்கு நல்லாத்தெரியும், எங்க அப்பா அம்மாதான் எழுதியிருப்பாங்க, எப்போ ஊருக்கு வரேன்னு கேட்டிருப்பாங்க, நானும் வந்து மூணு வருஷம் ஆச்சு, காசும் கொஞ்சம் சேத்திருக்கேன், இந்த காண்ட்ராக்ட் முடிஞ்சதோட ஊருக்குப்போய் ஏதாவது தொழில் செஞ்சு செட்டில் ஆகிடனும்”

“நந்தா, இப்டித்தாண்டா முதல் முறை பிளைட் ஏறும்போது எல்லோரும் சொல்றாங்க, ஆனா காலமும் இந்த சவூதி அரேபியாவும் வேற கணக்கு போட்டுடுது”

“ஏண்டா அப்படி சொல்ற, நான் நினைச்சதெல்லாம், கொஞ்சம் காசு சேக்கனும் சீக்கிரம் ஊருக்குப்போய் பிசினஸ் பண்ணனும், இப்போ என் கணக்குப்படி எனக்கு இது போதும் இனி புது காண்ட்ராக்டுக்கு நான் சைன் பண்ணப் போறதில்ல, போதும், ஊர்ல தொழில் செஞ்சு சொந்தக்காரங்க பக்கத்துல

இருந்துக்கிட்டு அக்கம் பக்கத்துல எல்லா விசேஷத்துக்கும் அட்டண்ட் பண்ணிக்கிட்டு மகிழ்ச்சியா இருக்கணும்” என்றான் நந்தன் ஒரு வித மன நிறைவுடன்.

“நந்தா, இந்த சவுதிக்கு வர்ற எல்லோருடைய மனநிலையும் இதான்டா, நீ ஹாப்பியா இருப்படா” என்று நந்தனுக்கு ஆதரவாகச்சொன்னான் பஷீர்.

அறைக்குத்திரும்பிய இருவரும் சற்று நேரத்தில் தத்தமது கட்டில்களுக்கு உறங்கச்சென்றுவிட்டனர். கடிதம் பற்றிய நினைப்பு தொடர்ந்துகொண்டே இருந்ததால் நந்தனுக்கு இரவு உறக்கம் சற்று கடினமாகவே இருந்தது.

அடுத்தநாள் விடியும் முன்னர் எழுந்துகொண்டான் நந்தன், குளியல் அறைகள் பகுதியில் மிகுந்த நடமாட்டம் இல்லை ஒன்றிரண்டு அறைகள் மட்டுமே உபயோகத்தில் இருந்தன காரணம் அந்த அதிகாலை நேரம், அவ்வளவு சீக்கிரம் இருளிலேயே எழுந்துகொண்டான் நந்தன்.

காலை ஷிஃப்டுக்கு செல்லும்முன் டைம் ஆஃபிஸ் திறந்திருந்தாலும் கடிதங்கள் பெறுவதற்கான நேரம் மலையில் மட்டும்தான் எனவே மாலை வரை பொறுத்திருக்கத்தான் வேண்டும் என்று மனதைச் சமாதனப் படுத்திக்கொண்டு ஷிப்டுக்கு அழைத்துச்செல்லும் பேருந்தின் வரவை நோக்கி டைம் ஆஃபிசின் அருகிலேயே நின்றுகொண்டிருந்தான் நந்தன்.

கப்பலின் அருகாமையில் சரக்குகளின் அணிவகுப்பில் தனது உத்தியோகத்தை மிகுந்த சிரமத்துடன் பார்த்துவந்தான் நந்தன். அதிகமாக அவனது சிந்தனையை கடிதமே ஆட்கொண்டிருந்தது. மதியம் வரை மிகுந்த சிரமப்பட்டு நேரத்தைக் கடத்தினான் நந்தன். மதிய உணவுப் பொட்டலங்கள் விநியோகிக்கும் வண்டி நந்தன் வேலை பார்க்கும் கப்பலின் அருகில் வந்து நின்றது. வண்டியின் உள்ளிருந்து ஒருவர் ஒரு பாலிதீன் பையை உணவுடன் நீட்ட அதைப் பெற்றுக்கொண்டான் நந்தன், “அண்ணா எத்தனை தடவை சொல்லியிருக்கோம் பிளாஸ்டிக் பைல சூடு சாதத்தை அப்படியே போடாதீங்கன்னு?” என்று வண்டியில் இருப்பவரிடம் கேட்டான் நந்தன்.

“ஏன் தம்பி எங்களுக்கு மட்டும் என்ன ஆசையா இப்படி பிளாஸ்டிக் பைல போடணும்னு, ஒரு நாளைக்கு மத்தியானத்துக்கு மட்டும் கிட்டத்தட்ட ஐநூறு சாப்பாடு கட்டுறோம், எல்லாத்துக்கும் கம்பெனி எங்ககிட்ட பக்சா கொடுத்திருக்கு, கம்பெனி கொடுக்கிறத வச்சு நாங்க காலம் தள்ளுறோம், வரட்டுமா தம்பி, அடுத்த கப்பல்ல உங்கள மாதிரியே பசியோட நிப்பாங்க.” என்று வண்டியிலுருந்தவர் கூற வண்டி அடுத்த கப்பல் நோக்கிப் புறப்பட்டது.

மாலையில் வேலை முடிந்து கேம்ப் திரும்பிய நந்தன் முதல் வேலையாக டைம் ஆஃபிஸ் சென்றான், வெளியில் பெரிய வரிசை நின்றது, ஒருவரிடம் வரிசைக்கான காரணத்தைக் கேட்டான், அவரும் புதுக் கான்டராக்டில் சேர விருப்பம் உள்ளவர்களை டைம் ஆஃபிஸ் வந்து பெயர் கொடுக்கச் சொல்லியிருந்தார்கள் அல்லவா அதற்குப் பெயர் கொடுக்கத்தான் இந்த வரிசை என்றார்.

நந்தனோ இது தனக்குச்சம்பந்தம் இல்லை என்ற நினைப்பில் கடிதம் வாங்க டைம் ஆஃபிஸ் அதிகாரியை நாடினான். கடிதத்தைப் பெற்றுக்கொண்டு மிகுந்த மகிழ்ச்சியில் அனுப்புனர் விலாசம் பார்த்தான் அவன் நினைத்ததுபோல அவனது அப்பாவிடமிருந்து வந்திருந்தது. பொறுமை இழந்தவனாய் ஆவலுடன் கடிதத்தை அங்கேயே பிரித்துப் படிக்கத் துவங்கினான்.

கடிதத்தைப் படிக்கப் படிக்க அவனது உற்சாகம் சற்றே குறையத் துவங்கியது, அப்படி என்ன அப்பா எழுதியிருந்தார், ஆம், ஊரில் விலைவாசி கட்டுக்கடங்காமல் போய்க்கொண்டிருக்கிறது எதுவும் சமாளிக்க முடியவில்லை இன்னமும் தாமதிக்க வேண்டாமென்று வீடு கட்ட லோன் போட்டிருந்தோம் அதற்கான அனுமதி கிடைத்துவிட்டது இன்னும் ஓரிரு நாட்களில் பணம் வந்துவிடும் வேலைகளைத் துவங்கிவிடுவோம், உன்னிடம் இருக்கும் சேமிப்பையும் அனுப்பினால் கடனை சீக்கிரம் அடைந்துவிடலாம். உன்னுடைய அடுத்த கான்டராக்ட் எப்பொழுது ஆரம்பம் ஆகிறது? இந்த வயசிலேயே சம்பாதித்துக்கொண்டால்தான் நல்லது, இப்பொழுது உறவுகளை சொந்தங்களை பிரிந்து இருக்கிறோம் என்று எண்ணாதே, பின்னர் கல்யாணம் குழந்தை என்று வந்துவிட்டால் அவர்களைப் பிரிந்து சென்று சம்பாதிப்பது என்பது கடினமாகிவிடும். நல்ல செய்திக்கு பதில் போடவும். என்று எழுதியிருந்தார்.

கடிதத்தைப் படித்து முடித்த நந்தன் டைம் ஆபிஃஸ் வெளியில் நின்றிருந்த வரிசையில் கடைசியில் பொய் நின்றான். நேற்றிரவு பஷீர் சொன்ன வரிகள் மனதில் அலை மோதியது “ஆனா காலமும் இந்த சவூதி அரேபியாவும் வேற கணக்கு போட்டுடுது”

– ‘குடைக்குள் கங்கா’ சிறுகதைத்தொகுப்பில் வெளிவந்த கதை. ஆண்டு 2022

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *