பட்டாம்பூச்சியைத் தேடி

 

எனது சுய விவரம்: பெயர் விண்முகிலன். அஸ்ட்ரா யுகத்தைச் சேர்ந்த ஒரு தமிழ் பேசும் இளம் யுக ஊர்தி ஆய்வாளன். யுக ஊர்தி என்பது காலத்தின் ஊடே பின்னோக்கி மட்டும் செலுத்தக்கூடிய ஒரு விண்கலம். மிக மிக ரகசியமாகப் பாதுகாக்கப்படும் ஒரு விஞ்ஞானத் தொழில்நுட்பம். இதன் மென்பொருள் வடிவமைப்பில் என் பங்கு பெரிய அளவில் இருப்பதால் பூமிப்பந்தில் இந்த ரகசியம் அறிந்த சொற்ப நபர்களில் அடியேனும் ஒருவன்.

‘மெல்லத் தமிழ் இனி சாகும்! அந்த மேற்கு மொழிகள் புவிமிசை ஓங்கும்!’

பாரதியின் இந்தக் கவிதை வரிகளில் முதல் வரி எங்களுக்கு முந்தைய டெக்னோ யுகத்தில் தமிழ் பேசும் மென்பொருள் ஆர்வலர்கள் மூலம் விர்ச்சுவல் பேஜ் என்கிற வெளிப் பக்கம், மற்றும் விமெயில் மூலம் நோய்த்தொற்றுபோல் (வைரலாக) பகிரப்பட்டு உலகின் அதிகம் பகிர்ந்த, அதிகம் பேசிய, அதிகம் விவாதித்த மற்றும் அதிகம் பாதிப்பை உண்டாக்கிய வரிகளில் ஒன்றாக மாறியது. அதன் விளைவு, தமிழ் சாகவில்லை என்பதோடு மட்டும் அல்லாமல் பல மொழிகளைப் பின்னுக்குத் தள்ளி முன்னேறி விஞ்ஞானத் தொழில்நுட்ப மொழியாக உருப்பெற்றது. இது நடந்தது டெக்னோ யுகத்தில். ஏறக்குறைய உங்கள் நூற்றாண்டில் இருந்து ஆயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்குப் பின்னர். யுகம் என்றதும் கலியுகம், துவாபரயுகம் போல் நினைத்துக் குழப்பிக்கொள்ளாதீர்கள். இது வேறு, ஆயிரம் ஆண்டுகளுக்கு மில்லினியம் போல தோராயமாக 652.45 ஆண்டுகள் ஒரு சாகா அல்லது தமிழில் ஒரு யுகம்.

உங்கள் நூற்றாண்டில் ‘தமிழ் என் உயிர் மூச்சு’ என்று சொல்லிக் கதைத்துத் தமிழை சுவாசிப்பதாகக் கூறி சொத்து சேர்த்த கரை வேட்டிகளும், ‘மெய்ப்பொருள் காண்பது அறிவு’ என்று புலம்பிய புலவர்களும், செம்மொழிப் புரவலர்களும் தமிழைக் கைவிட்டனர். பின் எங்களுக்கு முன்தோன்றிய மூத்த குடி டெக்னோ யுக தமிழ் பேசும் மென்பொருள் விற்பன்னர்கள் முயற்சியில், உலகமெங்கும் இணைந்த மென்பொருள் தமிழ்ச் சங்கங்கள் மூலம் எழுத்து மற்றும் கணினித் தமிழை இன்னும் எளிமைப்படுத்தி முப்பது எழுத்துகளுக்குள் கொணர்ந்து, ஆங்கிலத்திற்கு அடுத்து முக்கிய மூன்று மொழிகளில் ஒன்றாகத் தமிழ் மாறியது குறித்தும், மென்பொருள் தமிழ் முப்பது எழுத்துகளில் எப்படிச் சுருங்கியது என்றும் விரிவாக விவரித்தால் உங்கள் மண்டை காய்ந்துவிடும். (உதாரணம்: மணடஐ கஆயநதஉ வஇடஉம) சுருக்கமாக குறில், நெடில், சந்தி மற்றும் ஒள, ஃ மற்றும் பல வட எழுத்துகள் காலி செய்யப்பட்டு, பார்ப்பதற்கு கிட்டத்தட்ட ராஜராஜ சோழன் கல்வெட்டுத் தமிழ்போல். சரி, இப்போது கொஞ்சம் உங்கள் தமிழ் மூச்சை விட்டுக்கொள்ளுங்கள்.

இந்த அஸ்ட்ரா யுகத்தில் (நூற்றாண்டு என்ற சொற்பதம் வழக்கொழிந்துவிட்டது) தமிழில் நீங்கள் மிக எளிதாகக் கவிதை எழுதலாம், கருப்பொருளை மட்டும் கணினிக்குள் செலுத்திவிட்டால் போதும்… பின்னர் எத்தனை வார்த்தைகள், வரிகள் மற்றும் கவிதை வடிவம் தேர்வு: புது, மரபு, ஹைக்கூ, விருத்தம் என்று உங்கள் விருப்பத்தைத் தேர்விய பின் ஒரே ஒரு விசைத்தட்டு அல்லது ஒரு விரல் சொடுக்கு. அவ்வளவே, கவிதை ரெடி. ஆனால் கவிதையின் கருப்பொருள் சார்ந்தே உங்கள் கவிதையின் மாண்பு அமையும். என் முயற்சி ஒன்று இதோ.

என் விண்கல சாளரத்தின் ஊடே தெரியும் போர்க்கால வான்வெளி சாரல். தூரத்தில் மின்னும் அந்த குட்டி நட்சத்திரம் உண்மையில் பொய்யே.

அது நிஜத்தில் மரித்தது

பல ஒளியாண்டுகள் முன்னம்.

இன்று நான் காண்பது

ஒரு உண்மையின் பிம்பமே.

காணும் காட்சிகள் உண்மையோஉண்மையின் பிம்பமோ பொய்மையோபொய்மையின் நிசமோநானும் என் கவிதையும் உட்பட

என் கவிதை பிடித்திருந்தால் விமர்சனம் மற்றும் சினக்கருத்துகள் வரவேற்கப்படுகின்றன, என் வி-மெயில் முகவரி சில நிமிடங்களில் தருவேன்.

சரி, இப்போது தமிழில் இருந்து நாம் எங்கள் யுக விஞ்ஞானத்திற்கு மற்றும் என் கதைக்கு, உண்மையின் பிம்பத்திற்கு வருவோம்.

கதைக்கு முன் உங்கள் நூற்றாண்டிலிருந்து எங்கள் யுகத்தில் ஏற்பட்ட சில முக்கிய மாற்றங்கள். தேசியம் போய் உலகியம் வந்தது. உலகமெங்கும் டாலர் மட்டுமே பணப்பரிவர்த்தனைக்கு. எல்லோருக்கும் வார சம்பளம் டாலரில்தான். மின்சாரம், தண்ணீர் மற்றும் தொழில்நுட்பம் குடிகளுக்கு இலவசம். பெட்ரோல் முற்றிலும் அரிதாகி தேவையற்றுப் போனதால் பெட்ரோல் ஊற்றுகள் அழிக்கப்பட்டன. பஞ்சபூதங்களான மண், வெளி, காற்று, நீர், நெருப்பு இவற்றின் மீது யாருக்கும் உரிமை இல்லை. கிரிப்டோ கரன்சிக்கு மாற்றாக டிஜி-காசு உருவானது. நகர மய்யப்பகுதிகளில் இருந்த உயர் கோபுரங்கள் நீக்கப்பட்டு மினார் காந்த வாகனங்கள் செல்ல ஏதுவாக வழித்தடங்கள் அமைக்கப்பட்டன. அச்பிடா வைரஸ் உட்பட நோய்கள் அனைத்தும் கிட்டத்தட்ட ஒழிந்து, குடிகளின் சராசரி வயது நூறைக் கடந்தது. தொழில்நுட்ப அறிவு எகிறி, ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ என்றழைத்தது. தொல்காப்பியம் முதல் உங்கள் கால ஜெயமோகன், சாருநிவேதிதா, எஸ்ரா மற்றும் எங்கள் யுக புரட்சி எழுத்தாளர் அழகியராமர் வரை புத்தகங்கள் அனைத்தும் சுண்டுவிரல் மேற்பரப்பு அளவில் உள்ள இரண்டு கிராம் மெலிக்கான் சிப்பில் அடக்கம்.

விவகாரம் மண்ணுரிமையில் தொடங்கி இட உரிமை மற்றும் மொழியியல் குறித்து மொழி சார்ந்த புரட்சி அமைப்புகளின் சர்ச்சை மற்றும் எழுச்சியால் நேர்ந்தது. சிறு பொறி பெரும் தீயாக மாறி, ஆயுதம் மற்றும் தொழில்நுட்ப வசதிகள் துணையுடன் உலகை உலுக்கும் போராக வெடித்தது.
எங்கள் யுகத்தில் இப்போது நடைபெறும் இந்த யுத்தம் மனித குலத்திற்குப் பேரழிவு ஏற்படுத்தி முற்றிலும் மனித இனத்தைக் களையெடுத்துவிடும் என்றேதான் தோன்றுகிறது. தப்பிக்க வழியேயில்லை. இதற்கு எந்தப் புரட்சியும் தேவையில்லை. பல நூறு புரட்சி இயக்கங்கள் மற்றும் யுத்த அமைப்புகள் ஒன்றிணைந்த விளைவுதானே இந்த யுகப்போர். இதை நிறுத்த எனக்குத் தோன்றிய ஒரே வழி, சரித்திர மாற்றம் மட்டும்தான்.

அது எப்படி சாத்தியம்? என்னால் முடியும் தம்பி. காலத்தின் பின்னோக்கிச் செல்லும் ஊர்தி என் அதிகாரக் கட்டமைப்புக்குள். யுக ஊர்தி என்பது நீங்கள் கதைப்புத்தகங்களில் படித்த அதே கால ஊர்திதான். ஆனால் இது முன்னோக்கிச் செல்ல முடியாது. எதிர்காலப் பயணம் இதில் சாத்தியம் கிடையாது. அத்தகைய முழுவடிவம் இன்னமும் கொள்கையளவில்தான் உள்ளது. எங்கள் ஊர்தி வடிவமைப்பு பாதி வெற்றி என்பது ஊரறிந்த, ஆனால் ஒரு பாதுகாக்கப்பட்ட ரகசியம். இதில் ஏற்கெனவே பின்னோக்கி இருமுறை பயணம் நடத்தி பயண விவரங்கள் துல்லியமாகப் பதிவு செய்யப்பட்டு பெட்டகத்தில் பாதுகாப்பாக உள்ளது. ஒரு முறை நேர்ந்த பயணத்திற்கு நான்தான் நெறிமுறையாளன். ஒருவர் மட்டுமே செல்லக்கூடிய இந்தப் பயணத்திற்கான நெறிமுறைகளில் மிக முக்கியமான சில.

பயணத்தின்போது விண்கலத்திலிருந்து இறங்குதல், நிறுத்த முயலுதல் அறவே கூடாது. சொந்த பந்த, ரத்த உறவு, தலைமுறைத் தடயங்களைத் தேடிச் செல்லுதல் தடை. தன் சுய வாழ்க்கையின் பகுதிகளைப் பின்னோக்கிச் சென்று அலச ஆராயத் தடை. செல்லும் தடங்களில் எந்த ஒரு பொருளையோ, உயிர்களையோ, ஒரு சிறு மணல் துகளாக இருந்தாலும் அதைக் கையாள்வதோ தீண்டுவதோ குற்றம். காரணம், இவற்றைத் தொடுவதன் மூலமோ மற்றும் கையாள்வதன் மூலம் கால அட்டவணை மாறுதல் ஏற்படவோ சரித்திரக் கோளாறுகள் உண்டாகவோ சாத்தியக் கூறுகள் உண்டு. இந்த எதிர்காலவினை உங்கள் யுகத்திலேயே ஆராயப்பட்டு கதைகளில் சித்தரிக்கப்பட்ட ஒரு சித்தாந்தம்தான். இதை ‘பட்டாம்பூச்சி விளைவு’ என்று சொல்வார்கள். பல புத்தகங்கள் மற்றும் கதைகள் இதுகுறித்து உங்கள் காலங்களிலேயே உண்டு.

ஐசாக் அசிமோவ் மற்றும் ரே பிராட்பெரி போன்ற எழுத்தாளர்கள் இந்த விதியை மையமாக வைத்து கதைகள் புனைந்துள்ளனர். அவற்றில் எனக்குப் பிடித்த புத்தகம் டெக்னோ யுகத்தில் ராபர்ட் வில்லியம்சன் எழுதிய ‘பட்டர்பிளை எபெக்ட்: சம் ராண்டம் தாட்ஸ்.’ அதாவது, பட்டாம்பூச்சி விளைவு பற்றிய குத்துமதிப்பான சிந்தனைகள். ‘ராண்டம்’ என்பதற்கு இணையான தமிழ் வார்த்தை என்னவென்று தெரியவில்லை. குத்துமதிப்பாக, குத்துமதிப்பு என்ற வார்த்தையைக் கையாளுகிறேன். உங்களுக்கு ஆட்சேபனை இருந்தாலோ அல்லது சரியான வார்த்தை தெரிந்தாலோ விண்முகிலன்_7236215×**** எனும் வி-மெயில் முகவரிக்கு கடைசியில் ஜிமெயில்.காம் என்று சேர்த்து அனுப்பவும். அனுப்பியதும், ‘முகவரி தவறு, சேர்ப்பிக்கப்படவில்லை’ என கூகுள் சொல்லும். கவலைப்படாதீர்கள். அது கண்டிப்பாக எனக்கு வந்து சேரும்.

சரி, இப்போது ‘பட்டாம்பூச்சி விளைவு என்றால் என்ன’ என்று கேட்பவர்களுக்கு ஒரு சிறிய விளக்கம். உங்கள் வாழ்க்கைப்பயண கால வரிசையையே ஓர் உதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள். இன்றைக்கு நீங்கள் திருமணமாகி, நித்யா என்ற பெண் மனைவியாகவும், உங்கள் இருவருக்கும் பிறந்த நிவேதா மற்றும் சுந்தர் ஆகிய குழந்தைகளுடன் இருப்பது கோவையில். சற்று பின்னோக்கி வாழ்க்கைச் சக்கரத்தை ஓட்டி விடுங்கள். கல்லூரியில் உங்களுடன் படித்த தர்ஷினி மேல் உங்களுக்கு ஒரு ‘இது’ இருந்தது. அவளுக்கும் உங்கள் மேல் ஈடுபாடு இருந்தது. ஆனால், அது உங்களுக்குத் தெரியாது. உங்கள் நண்பன் சிவராமன் இதை அறிந்தவன். ஏனோ பொறாமையில் உங்களிடம் சொல்லாமல் விட்டான். உங்கள் காதல் சொல்லாமலேயே முடிந்துபோய் இப்போது தர்ஷினி மதுரையில் சங்கர் என்ற ஒரு வங்கி அதிகாரியை மணந்து ஒரு பெண்குழந்தையுடன் சந்தோஷமாக இருக்கிறாள். கொஞ்சம் கற்பனையை அவிழ்த்து விடுங்கள். ஒருவேளை சிவராமன் உங்களிடம் உண்மையைக் கூறி நீங்களும் தர்ஷினியிடம் மனம் திறந்திருந்தால், நீங்கள் அவளை மணந்து கொண்டு, உங்களுக்கு வேறு இரு குழந்தைகள், ரஜத் மற்றும் ராகினி. உங்களது நித்யா வேறு யாரையோ மணந்துகொண்டு, தர்ஷினியின் கணவன் சங்கர் வேறு ஒரு பெண்ணைக் கல்யாணம் செய்து… ஒரு சிறிய மாற்றம் உங்கள் பலரின் தலைமுறைகளை மாற்றியிருக்கும். நல்லபடியாகவோ, அல்லது இன்னும் கெட்டபடியாகவோ! ஒருவேளை, உங்களுக்கு இப்போது ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டால், உங்களால் மீண்டும் காலச் சக்கரத்தின் பழைய நேரத்தை அடைய முடிந்தால், உங்களுடைய கால வரிசை முழுதாக மாறவும், உங்களைச் சுற்றி உள்ளவர்கள் மற்றும் உங்களைச் சார்ந்த அனைத்து நிகழ்வுகளும் உருமாறவும் நேரிடலாம். இதுவே பட்டாம்பூச்சி விளைவு, அதாவது தோராயமாக நீங்கள் பழைய கற்காலம் சென்று ஒரே ஒரு பட்டாம்பூச்சியை அழித்தால்கூட இப்போதைய உலகம் மொத்தமாக வேறு ஒரு உலகமாக உருமாறக் கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளது.

சரி, அதற்கென பட்டாம்பூச்சியைத்தான் அழிக்க வேண்டுமா என்ன? இல்லை, பட்டாம்பூச்சி அழகுணர்ச்சிக்காகச் சொல்லப்பட்ட வெறும் ஒரு புனைவே. நீங்கள் காலச்சக்கரத்தில் பின்னோக்கிப் பயணித்து என்ன இடையூறு செய்தாலும் இது நிகழும். இப்போது நான் செய்யப்போவது என்ன? நான் ஒரு சாத்வீகன், ஒரு கடும் யுகப்போரை நிறுத்தும் முயற்சியாகவே இருந்தாலும், ஒரு பட்டாம்பூச்சிக்கு மேலாக வேறு எதையும் கொல்ல நினைக்கும் மனமும் துணிவும் என்னிடம் இல்லை. அது மட்டுமல்லாமல், இந்த எளிய செயல் இந்தக் கோட்பாட்டை உருவாக்கியவர்களுக்கு நான் செய்யும் ஒரு அர்ப்பணிப்பு என்றுகூட வைத்துக் கொள்ளலாம். அல்லது ஒரு கவித்துவ நீதி என்றும் சொல்லலாம். (‘பொயடிக் ஜஸ்டிஸ்’ தான்).

பயணத்துக்குரிய பாதுகாப்புக் கவச உடைகளை அணிந்துகொண்டு விண் ஊர்தியின் விசைகளைச் சொடுக்கி, கடவுச்சொற்களைப் படபடவென்று பதிவு செய்து, பின் எந்திரங்களை சடுதியில் செலுத்தினேன். செல்லும்போது யுக ஊர்தியின் ஒளித்திரை எதிர்ப்படும் வழிகளைத் திரையிடாது. விர் என்று சீறிய ஊர்தியினுள் அமைந்த பல்வேறு திரைகளில் ஒன்று, செல்லும் காலத்தின் ஆண்டுக்கணக்கைத் துல்லியமாகக் காட்டும். என் திட்டப்படி கூடியமட்டும் மிகப் பழைமையான காலகட்டம் ஒன்றை ஏற்கெனவே தேர்ந்தெடுத்து வைத்திருந்தேன். எவ்வளவு நேரம் என்ற கணிதம் ஊர்திக்குள் செல்லாது. யுக ஊர்திக்குள் கால நேர கணக்கு இல்லை. கிட்டத்தட்ட ஐன்ஸ்டீன் விதிபோல்.

கால அட்டவணைச் சக்கரம் அந்தக் குறிப்பிட்ட இடத்தை அணுகும்போது, என் உயிர்தேடி மென்பொருள் ஒரு உயிருள்ள பட்டாம்பூச்சியைக் கண்டுணர்ந்து இடம் கண்டறிந்து குறியிட்டு வைத்திருந்தது. நிறங்கள் குறைவாய் அமைந்த நம் கால பட்டாம்பூச்சிகளின் அளவுகோல் படி அழகற்ற ஒன்று அது. அவசர உதவிக்காக அமைக்கப்பட்ட வேதிய பீச்சான் மூலம் துல்லியமாக ஒரு சில துளிகள் டெவெதெலான் திரவம் பட்டாம்பூச்சியை நோக்கிப் பீச்சி அடிக்கப்பட்டது. நொடியில் அந்தப் பட்டாம்பூச்சி சுருண்டு விழுந்தது. இவை அனைத்தும் நடைபெறும் அதே நேரம் யுக ஊர்தியின் செல்திறன் மற்றும் விரைவுத்திறன் கொஞ்சமும் குறையாமல் விரைந்தபடி இருந்தது.

இப்பொது ஊர்தியைத் திருப்பிச் செலுத்தும் ஆணைகளைத் தொடர்ச்சியாக தட்டச்ச, உடன் இருண்டிருந்த பல ஒளித்திரைகள் மின்னின. டிஜிடல் காலச்சக்கரம் பூஜ்ஜியத்தில் இருந்து உயிர் பெற்று அதிகரிக்கத் தொடங்கியது. இப்போது யுக ஊர்தியின் ஒளித்திரைப் பட்டையில் பல்லாயிரக்கணக்கான சம்பவத் துணுக்குகள் கணநேரத்தில் மாறியபடி ஒளிர, அருகில் இன்னொரு திரைப்பட்டையில் பட்டாம்பூச்சி விளைவைக் காட்டும் அல்காரிதம். கால வரையறைப்படி தொடர்ச்சியாக நியாண்டர்தால், மொகஞ்சதாரோ, இது என்ன யுத்தம், ஒரு வேளை ராமாயண, மகாபாரதமோ, ஜீசஸ், புத்தர், திருவள்ளுவர், கம்பன், அதோ… யூதர்களைக் கொன்று குவிக்கும் ஹிட்லர், முசோலினி, ஆ, நம் மீசைக்காரக் கவிஞன் பாரதி… இதுவரை இணைத்திரையில் அல்காரிதம், ஒரு துளி மாற்றமும் காட்டவில்லை. இதோ இப்போது உங்கள் யுகம், எம்ஜிஆர், சிவாஜி, அமிதாப், ரஜினி, கமல், டெக்னோ யுக தமிழ்ப் போராட்டத்துக்கு வித்திட்ட மெரினா ஜல்லிக்கட்டுப் போராட்டம்… டிரம்ப்… என்ன நடக்குது இங்க, வாட்ஸ்அப். கொரோனா…அடுத்த யுகம், மூன்றாவது உலகப்போர்… அணு ஆயுதத்தை முடக்கும் அமெரிக்காவின் ‘ஆட்டோம் ஸ்டெபிலைசர்’ கண்டுபிடிப்பு, லேசர் மற்றும் ரசாயன ஆயுதம் நிறைந்த பத்தாண்டுகள் நடைபெற்ற குட்டிக் குட்டிப் போர்கள் நிறைந்த நான்காம் உலக யுத்தம், கொரோனாவைத் தூக்கிச் சாப்பிட்ட வளைகுடா நாடுகளில் இருந்து வந்த அச்பிடா வைரஸ், வழக்கொழிந்த நியூட்டன் மற்றும் ஐன்ஸ்டீன் வகுத்த பௌதிக விதிகள்… ராக்கெட் விஞ்ஞானத்தைப் புரட்டிப் போட்ட ராபர்ட் அண்ட் ஐசாக் இயற்றிய அல்ட்ரா ஏவியேஷன் விதிகள் 2.36… எல்லாம் அப்படியே.

இதோ வந்து விட்டது டெக்னோ யுகம். நம் தமிழ்ப் புரட்சி, ‘மெல்லத் தமிழ் இனி சாகும்’ வைரல் வரி பகிர்வு. உலகம் முழுவதும் கொதிக்கும் தமிழர்கள், கொஞ்சமும் மாறாமல். எங்கள் அஸ்ட்ரா யுகத்தைக் கடைசிக் கட்டமாக நெருங்கும்போது ஒளித்திரைப் பட்டையின் கிர் என்ற மெல்லிய சத்தத்தை மீறி என் இதயத்துடிப்பைக் கேட்க முடிந்தது. என்ன நடந்தது, ஏன் மாற்றங்கள் ஏதும் நிகழவில்லை. தோல்வியா என் முயற்சி? துல்லியமாக யுக ஊர்தியில் கவுன்டர் எண்கள் குறைந்து பூஜ்ஜியம் தொட்டபோது நான் கண்டது நிஜத்திரையில் இங்கிருந்து புறப்பட்டபோது தோன்றிய அதே போர்க் காட்சிகள்தான். உலகம் முழுவதும் ஆங்காங்கே நடைபெறும் அழிவைத் தரும் வண்ண வண்ண நாச மழைச் சாரல்கள்… ஒரு துளி மாற்றமுமில்லை. என் பட்டாம்பூச்சி விளைவுத் திட்டம் இறுதியில் தோல்விதானா? என்னால் இந்த பூமிக்கு நாசகாரப் போரிலிருந்து அமைதியை மீட்டுத் தர இயலவில்லையா?

பட்டாம்பூச்சி விளைவின் மூலம் காலச் சக்கரத்தின் நிகழ்வுகளில் மாற்றம் ஏற்படுத்தி எங்கள் யுகம் சந்திக்கும் பேரழிவைத் தடுக்க நினைத்து நான் செய்த வேலை மிகப் பெரிய உலக துரோகச் செயல் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. முதல் குற்றம், யுக ஊர்தியை அனுமதியின்றிப் பயன்படுத்தியது. இரண்டாவது, பால்வீதியின் கால அட்டவணையை மாற்றத்திற்குட்படுத்தத் திட்டமிட்டது. மூன்றாவது, கால ஊர்தியின் சொடுக்கு விசைக்கான பத்துக்கும் மேற்பட்ட குறியீடுகளை என் மென்பொருள் அறிவைப் பயன்படுத்திக் களவாடியது. மொத்தத்தில் மரண தண்டனைக்குரிய குற்றம். யுக ஊர்தியின் கதவு திறந்தால் என்ன காட்சி தெரியும் என்பதை என்னால் எளிதாக யூகிக்க முடிந்தது.

நினைத்தது போலவே லேசர் ஆயுதங்கள் ஏந்திய பாதுகாப்புப் படை புடைசூழ விண்வெளி அமைச்சர், அஸ்ட்ரா யுக பாதுகாப்பு அதிகாரிகள், இவர்களுடன், நடு நாயகமாக யுக ஊர்தித் திட்ட வடிவமைப்பின் தொழில் நுட்ப முதன்மையாளன் அலெக்ஸ் மிகாலோவ்.

என் கைகள் லேசர் கைவிலங்குகளால் பிணைக்கப்பட்ட பின், முதற்கட்ட விசாரணை அங்கேயே என் அறையிலேயே தொடங்கியது. இறுக்கமான முகத்துடன் அலெக்ஸ் சினேகபாவம் விடுத்து கேள்விகளைத் தொடுத்தான்..

“முகில்! சொல், யுக ஊர்தியில் பயணிக்க உனக்கு யார் அனுமதி தந்தார்கள்?”

“யாரும் இல்லை.”

“விண்கலத்தின் விசை சொடுக்கும் குறியீடுகள் உனக்கு எப்படிக் கிடைத்தது?”

“மென்பொருள் ஆணை வரிசைகளில் சிறிய மாற்றம் ஏற்படுத்தி புதிதாகப் பதிவுகள் செய்து கடவுச்சொற்கள் பெற்றேன்.”

“பன்னிரண்டு பேரின் கடவுச்சொற்களுமா?”

“ஆம்!”

“அது எப்படி சாத்தியம்?”

“அந்த மென்பொருள் ஆணைகளின் வரிசைகள் முழுக்க எழுதியது நானே, அதனால் எளிதில் சாத்தியமானது.”

“எத்தனை பேர் உன்னுடன் இந்த சதியில் கூட்டு?”

“யாருமில்லை, நான் மட்டுமே!”

“எவ்வளவு காலமாக திட்டம் தீட்டினாய்?”

“மூன்றரை ஆண்டுகள்.”

“இந்தக் குற்றம் நிரூபிக்கப்படுமானால் உனக்கு விதிக்கப்படும் தண்டனை குறித்த விவரம் தெரியுமா?”

“தெரியும். மரண தண்டனை. சிலியோ வாயு நிரப்பிய அறையில் மீளா நீள் தூக்கம்.”

“கடவுளே! தெரிந்துமா? சரி… இதற்கு உனக்கு உத்வேகம் கொடுத்தது யார்?”

“யுகப் புரட்சி செய்ய எனக்கு உத்வேகம் பிறந்தது பாரதி பாடல்களால்.”

“பாரதி?”

“ஆம், மகாகவி பாரதியார், தமிழ்க் கவிஞன்.”

அலெக்ஸ் தன் கையிலிருந்த விரல் தேடியினுள் விசை சொடுக்கி பாரதி என்று சொல்லி `கிரேட் தமிழ் பொயட்’ என்று முணுமுணுக்க, அவன் முன் ஒரு வட்ட மெய்நிகர் திரை ஒன்று தோன்றி அதில் மீசை வைத்த முண்டாசு பாரதி, மற்றும் வரலாறு அவனுக்குப் புரிந்த ருசிய மொழியில்… பின்னணியில் அவரது சுதந்திரப் பாடல்கள்… ‘என்று தணியும் இந்தச் சுதந்திர தாகம்…’

“என்ன பாடல் என்று குறிப்பாகச் சொல்ல முடியுமா?”

“குறிப்பாக என்று ஒன்றும் இல்லை. பூமியில் அமைதி உண்டாக்கி பின் `வெந்து தணிந்தது காடு’ என்ற ஹாஷ்டாக் உருவாக்கி வைரலாகப் பகிர நினைத்தேன்.”

“அபத்தம். அனைத்தும் ஆபத்துகள் நிறைந்த அபத்தம். உன்னை மிக்க அறிவாளி என்று நினைத்தேன். இவ்வளவு குழந்தைத்தனமாக… சே… சரி… அசலில் உன் திட்டம் மற்றும் உத்தேசம்தான் என்ன?”

“பட்டாம்பூச்சி விளைவை ஏற்படுத்த வேண்டி யுக ஊர்தியில் பின்னோக்கிச் சென்றேன்.”

“என்ன..?”

“கால நிகழ்வுகளில் சங்கிலித் தொடர் மாற்றம் ஏற்படுத்தி இந்த யுகப்போர் நடைபெறாமல் தடுக்க முயன்று தோல்வியுற்றேன். ஒரு இம்மி அளவும் சரித்திரத்தில் எதுவும் மாறவில்லை. இந்தத் தோல்விக்குக் காரணம் ஏதோ மென்பொருள் கோளாறா அல்லது விண்கலத் தொழில் நுட்பச் சரிவா என்பது மட்டும் எனக்கு இன்னும் புரிபடவில்லை.’’

“அதற்காக நீ எந்த யுகம் சென்றாய், என்ன மாறுதல் செய்தாய், உள்ளபடி உண்மையைச் சொல்.’’

“மாற்று வினை விளைவு உண்டாக்க நியாண்டர்தால் யுகம் சென்றேன்.”

“அடக்கடவுளே, அத்தனை தூரமா… பிறகு?”

“பட்டாம்பூச்சி விளைவு விதிக்கேற்ப அங்கு ஒரு பட்டாம்பூச்சியைக் கொன்றேன்.’’

அலெக்ஸ் மிகாலோவ் அவனது நீலநிறக் கண்களைச் சுருக்கியபடி சற்றுக் குழப்பமான முகபாவத்துடன் என்னை ஊடுருவிக் கூர்ந்து நோக்கி பின்னர் வினவினான்.

“பட்டாம்பூச்சியா, அது என்ன?”

அவன் முன்னிருந்த மெய்நிகர் திரை அவன் உச்சரித்த ‘பட்டாம்பூச்சி’ என்ற வார்த்தையைக் கோடானு கோடி டிரில்லியன் தகவல்களை ஊடுருவி அலசி ஆராய்ந்து மைக்ரோ நொடியில் பதில் தந்தது.

“முடிவுகள் ஏதும் இல்லை.”

- ஜூன் 2021 

தொடர்புடைய சிறுகதைகள்
ஒட்டுமொத்தமனித குலத்தின் பொது எதிரி எது என்ற கேள்விக்கு உங்கள் பதில் என்னவாகஇருக்கும்? உங்கள் நூற்றாண்டில் இதற்கு நூற்றுக்கும் மேற்பட்ட பதில்கள்கிடைத்திருக்கும். தீவிரவாதம், போர், மதக்கலவரம், கேன்சர், கொரோனா, புவி வெப்பமயமாதல், பசி, பஞ்சம், இயற்கைச் சீற்றம் என்று உங்கள் லிஸ்ட் நீள்கிறது. ...
மேலும் கதையை படிக்க...
கொரோனா முதல் அலை ஆரம்பம். வருடம் 2020 மார்ச் மாதம் ஒரு ஞாயிற்றுக்கிழமை. பகல் 11மணி. கொரோனா ஒரு கொடிய நோய், சீனாவில் இருந்து இறக்குமதி ஆன இந்த கொள்ளை நோயில் இருந்து நம்மை எப்படி பாதுகாத்துக் கொள்ளலாம் என்று சன் டிவியில் ...
மேலும் கதையை படிக்க...
பொது எதிரி
ஒரு கொரோனா டைரிக்குறிப்பு

பட்டாம்பூச்சியைத் தேடி மீது 2 கருத்துக்கள்

  1. இரத்தினவேலு says:

    Very good! Please keep it up. you have narration and content.

  2. S.Ganesh says:

    My dear writer time travel is a interesting subject iam a very great fan of time travel stories butterfly effect is related to gayas theory gayas theory is a related theory of theory of relativity the story has an interesting end,you know one thing time travel is possible theoretically it is proved by one foreign scientist.

  3. kallan krishnaraj says:

    Interesting confusion Sasitharan bro! I wish I had chosen science at college! What can I do for a “butterfly effect” now, at this old age? Even if I get a “time machine” I need a pilot like you to reach my goal!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)