கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: January 6, 2013
பார்வையிட்டோர்: 19,079 
 

பைக்கை விட்டு இறங்கி, மது வீட்டின் உள்ளே நுழைந்தபோது, ”இங்க கொடுப்பா…” என்று அவனுடைய கைப்பையை வாங்கிக் கொண்டாள் அம்மா சொர்ணம். உடை மாற்றி, முகம் கழுவி, ரிலாக்ஸ்டாக அவன் ஹாலில் உட்கார்ந்தபோது… இரவு ஒன்பது மணி!

வைபவிஐ.டி. நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறான் மது. மாதச் சம்பளம் ஒன்றரை லட்சத்துக்கும் மேல். அழகான இளைஞன். பெற்றவர்களுக்கு ஒரே பிள்ளை. அப்பா, வங்கி அதிகாரி. அம்மா, குடும்பத்தலைவி.

சூடான ரொமாலி ரொட்டியுடன் பாலக் பனீரையும் எடுத்து வந்த சொர்ணம், மதுவிடம் தந்துவிட்டு, மெதுவாக ஆரம்பித்தாள்.

”நாளைக்கு… நீ லீவு போடணும் மது…”

”எதுக்கும்மா?”

”பத்துப் பொருத்தமும் பொருந்தின ஜாதகம் ஒண்ணு வந்திருக்கு. பெண் பார்க்கப் போறோம்!”

– பதில் சொன்னது… அப்பா ராமகிருஷ்ணன்.

”என்னைக் கேக்காம பெண் பாக்கப் போற அளவுக்கு எப்படீப்பா நீங்க முடிவெடுக்கலாம்?”

– மகனின் இந்த ரியாக்ஷனை இருவருமே எதிர்பார்க்கவில்லை. சொர்ணம் மதுவின் அருகில் வந்தாள். அவன் கண்களை ஊடுருவிப் பார்த்தாள்.

”உன் மனசுல யாராவது இருக்காங்களாடா?”

மது ஒரு நொடி கண்களை மூடி, கொஞ்சம் லயித்து, பிறகு சின்னச் சிரிப்பு உதட்டோரம் கசிய, கண்களைத் திறந்தான்!

”ஆமாம்மா!”

”யாருடா அது..?”

– இருவரும் சுவாரஸ்யமானார்கள்.

”மும்பையிலயிருந்து மாற்றலாகி வந்து, நாலு மாசத்துக்கு முன்னால எங்க ஆபீஸ்ல ஜாயின் பண்ணினா வைபவி. பி.டெக். படிச்சவ. என்னைவிட ஒரு வயசுதான் சின்னவ. அழகா இருப்பா. மாசம் எழுபதாயிரம் சம்பளம். திருவான்மியூர்ல வீடு.”

”அவ குடும்பம்?”

”தெரியாதுப்பா. இதுவரைக்கும் அவகிட்ட உருப்படியா பத்து வார்த்தைகூட நான் பேசினதில்லை. அவ வேற டிபார்ட் மென்ட். மேற்படி தகவல்கள் போன வாரம்தான் சர்வீஸ் ரெக்கார்ட்ல சேகரிச்சேன். சூழ்நிலை சரியா இருந்து, அவளும் சம்மதிச்சு, இது அமைஞ்சா, நான் சந்தோஷப்படுவேன்!”

”சரி, அவ அட்ரஸ் கொடு. நாங்க பார்த்துக்கறோம். பீ ஹேப்பி!”

”தேங்க்யூ பா!”

அட்ரஸைப் பார்த்தார் ராமகிருஷ்ணன். ”அடடா! நம்ம முரளிதரன் இதே ஃப்ளாட்லதானே இருக்கான்? போன்ல அவன்கிட்ட விசாரிச்சுக்கலாமே…”

”வைபவி இந்த ஃப்ளாட்டுக்கு வந்து நாலஞ்சு மாசங்கள் இருக்கும். அவளும், அவளோட விதவைத் தாயும் மட்டும்தான். அப்பா இறந்துட்டார்னு நினைக்கறேன். ரொம்ப டீசன்ட்டான லேடீஸ்…” – சர்டிஃபி கேட் கொடுத்தார் முரளிதரனின் மனைவி!

இரவு…

”என்னங்க… ஒரு நெருடல்!”

”என்ன?”

”இந்தப் பெண்ணைச் சார்ந்தே அவ அம்மா இருந்தா, இவ கல்யாணம் முடிஞ்சதும் அந்தம்மா நிலைமை என்ன? அம்மாவை விட்டு அவ வருவாளா?”

”சரிடி! அதுக்காக காலம் முழுக்கக் கல்யாணமே செஞ்சுக்காம இருப்பாளா?”

”அதில்லீங்க. நமக்கும் இவன் ஒரு பிள்ளை. நாளைக்கு அந்தப் பக்கம் இவன் சரிஞ்சிட்டா?”

”இப்பவே மாமியார் புத்தி தலை தூக்குதா?”

”உளறாதீங்க. தோணினதை சொன்னேன். பார்ப்போம், நாளைக்கு என்ன நடக்குதுனு…”

காலையில் மதுவை அனுப்பி விட்டு இருவரும் காரில் புறப்பட்டார்கள்.

இருவரையும் வரவேற்று வைபவியின் ஃப்ளாட்டுக்கு அழைத்துச் சென்ற முரளிதரனின் மனைவி, ”லஷ்மிம்மா! உங்க வைபவி வேலை பாக்கற ஆபீஸ்ல வேற செக்ஷன்ல இவங்க மகன் மது வேலை பாக்கறார். வைபவியை மதுவுக்கு ரொம்பப் புடிச்சிருக்கு. அதை வைபவிகிட்ட சொல்லலை. பெத்தவங்கிட்டச் சொல்லி, அவங்க மூலமா சம்பந்தம் பேச நினைக்கறாங்க. இந்தக் காலத்துல இப்பிடி ஒரு பிள்ளை. இனி நீங்க பேசலாம்…” என்று ஆரம்பித்து வைத்தார்.

லஷ்மியின் முகத்தில் சந்தோஷமா, சங்கடமா என்று பிரித்தறிய முடியாத ஒருவித ரியாக்ஷன்!

”வைபவிகிட்ட இதைப் பத்திப் பேசணுமே!”

”கண்டிப்பா பேசுங்க. எங்க மதுவுக்கு எல்லா தகுதிகளும் இருக்கு. யாரும் மறுக்க மாட்டாங்க. இது என் கார்டு. நல்ல செய்தி சொல்லுங்க…” – ராமகிருஷ்ணன் எழுந்துகொண்டார்.

இருவரும் காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்கள்.

”ஏங்க… அவங்ககிட்ட ஒரு தயக்கம் இருக்குங்க. மகளைக் குடுத்துட்டு, தனிச்சு வாழணுமேனு சங்கடப்படறாங்களோ என்னவோ?”

”இருக்கலாம்!”

”அம்மாவை விட்டுட்டு அந்தப் பெண் வருவாளா? இப்பல்லாம் புருஷனைப் பெத்தவளைவிட, பெண்களைப் பெத்தவதானே கொடி பிடிக்கறா? முதியோர் இல்லம் நிரம்பி வழியக் காரணம், ஆம்பளப் பசங்களை பெத்தவங்களாலதான்! மாமியாரை எந்தப் பொண்ணு மதிச்சா?”

”புள்ளையார் சுழி போட்டாச்சா?”

”எதுக்கு?”

”பாரம்பரிய யுத்தத்துக்கு”

”போதும் நிறுத்துங்க!”

மாலையில் மது வீடு வந்ததும் விவரம் சொன்னார்கள். அன்று இரவு வரை எந்தத் தகவலும் இல்லை. மறுநாள் காலை மது ஆபீஸுக்கு புறப்பட்டுக் கொண்டிருக்க, வைபவியும் அவள் அம்மாவும் வாசலில் நின்ற ஆட்டோவிலிருந்து இறங்கினார்கள்.

”வாங்க வாங்க…”

– மதுவின் பெற்றோர் பரபரத்தனர்.

”நீங்க வந்த மாதிரியே, நாங்களும் வந்துட்டோம். ஒரு பிள்ளை நேரா சொல்லாம, பெத்தவங்க மூலம் அணுகினது கண்ணியம். அதுக்கு இதுதான் மரியாதை!”

– லஷ்மிம்மா, சின்னக் குரலில் சொல்ல, ”காபி கொண்டு வர்றேன்!” என்றாள் சொர்ணம்.

”வேண்டாம்… நாங்க பேசிடறோம்!”

”அம்மா… நீங்க பேசவேண்டாம். நான் பேசிடறேன்!”

– வைபவி வாய் திறந்தாள்!

”மன்னிக்கணும்… இவங்க – இந்த லஷ்மிம்மா – எனக்கு அம்மா இல்லை… மாமியார்!”

மது குடும்பத்துக்கு கண்கள் இருண்டது!

”அவரும், என் மாமனாரும் ஒரு வியாபார விஷயமா வெளியூருக்குப் போய், விபத்துல சிக்கி, ஒரே சமயத்துல நாங்க ரெண்டு பேரும் மாங்கல்யத்தை பறிகொடுத்தோம். அந்த நேரத்துல நான் படிச்சுக்கிட்டிருந்தேன். தொடர்ந்து என்னைப் படிக்க வச்சு, அதுக்காக படாதபட்டு உழைச்சு, நான் இப்ப நல்ல வேலையில இருந்து சம்பாதிக்கக் காரணம்… என் மாமியார்தான். ஸாரி… அம்மாதான்! இவங்கதான் எனக்கு எல்லாமே. நீங்க எங்க வீட்டுக்கு வந்து பேசிட்டு போன பிறகு, நேத்து ராத்திரி எங்க ரெண்டு பேருக்கும் முதன் முதலா பெரிய சண்டை நடந்தது!”

”எதுக்கும்மா?”

” ‘நல்ல வரன் வந்திருக்கு! நீ கல்யாணம் செஞ்சுகிட்டு வாழணும்’னு பிடிவாதம் பிடிக்கறாங்க. ‘உன் புருஷனா வரப் போறவனும் எனக்குப் பிள்ளைதான்’னு சொல்லி அழறாங்க. நான் ஒப்புக்கவே இல்லை. ஆனாலும், உங்களுக்குப் பதில் சொல்ல வேண்டிய மரியாதை இருக்கில்லையா. அதுதான் வந்தோம். புறப்படறோம்…”

”நீ கொஞ்சம் இரு வைபவி! இப்ப நான் பேசறேன்!”

”……………!”

”தம்பி! உங்களுக்கு ஒரு விதவைப் பெண்ணைக் கல்யாணம் செஞ்சுக்க தயக்கம் வரலாம். அப்படி என்ன அவசியம்னு உங்கப்பா, அம்மா நினைக்கலாம். ஆனா, எங்க வைபவி தங்கமான பொண்ணு. அவளோட வாழ என் பிள்ளைக்குத்தான் கொடுத்து வைக்கல. நீங்கதான் அவளைக் கட்டிக்கணும்னு நான் சொல்ல முடியாது. ஒரு நல்ல வரனை நீங்க தேடிக் கொடுத்தாகூட நான் நன்றியுள்ளவளா இருப்பேன்!”

”அப்படி நீங்க தேடும்போது… ‘பொண்ணு அவங்க அம்மாவைவிட்டுத் தனியா வராது’னு சொல்லிடுங்க மிஸ்டர் மது! அதுக்கு சம்மதிக்கறவங்க கூடத்தான் நான் வாழ முடியும்!”

”அப்படிச் சொன்னா, இந்த ஜென்மத்துல உனக்கு வாழ்க்கை வராது!” என்று சீறினார் லஷ்மிம்மா.

”வேண்டாம். அம்மாவை உதறிட்டு, ஒரு வாழ்க்கை எனக்கு வேண்டாம். ஸாரிங்க… உங்களை நாங்க தொந்தரவு பண்ணிட்டோம்… புறப்படுங்கம்மா!”

வைபவி வாசலை நோக்கி நடக்க,

”வைபவி… கொஞ்சம் நில்லு!”

– அவளது கால்களைக் கட்டிப் போட்டது சொர்ணத்தின் குரல்!

வைபவி திரும்பினாள்!

”ரெண்டு பேரும் கொஞ்சம் ஒக்காருங்க! என்னங்க… நீங்களும், மதுவும் உள்ளே வாங்க!”

அப்பா, பிள்ளை இருவரும் பின் தொடர, கதவு சாத்தப்பட்டது!

”விதவைப் பெண்ணுக்கு தாலி தர்றதுல உனக்கு தடையுண்டா மது?”

”இல்லம்மா… இப்பவும் எனக்கு வைபவியப் பிடிச்சிருக்கு!”

”என்னங்க? உங்களுக்கு இதுல எதிர்ப்பு உண்டா?”

”நீயே சம்மதிச்சிட்டா, எனக்கு ஆட்சேபமே இல்லை சொர்ணம்!”

”வாங்க என் கூட!”

மூவரும் ஹாலுக்கு வந்தார்கள்.

”என்னங்க… நம்ம மாடி போர்ஷன் காலியா இருக்கு. லஷ்மிம்மா தாராளமா, சுதந்திரமா அங்க குடியிருக்கலாம். கல்யாணத்துக்கு பிறகு உன் மாமியாரை, ஸாரி உங்கம்மாவை நீ பிரிய வேண்டாம் வைபவி! இப்ப என் பிள்ளையைக் கல்யாணம் செஞ்சுக்க உனக்கு சம்மதமா…?”

வைபவி இதை எதிர்பாராமல் தடுமாறிப் போக, சொர்ணம் அருகில் வந்தாள்.

”நூத்துக்கு தொண்ணுத்தி எட்டு பேரும் மாமியாரை யோசிக்கறதேயில்லை. அப்படி இருக்க, புருஷன் போன பிறகும் இவங்க மேல நீ உயிரையே வெச்சிருக்கே. உன்னைப் படிக்க வெச்சு, இந்த சமூகத்துல நிக்க வெச்சவங்க இந்தத் தாய். உன்னைவிட, ஒரு நல்ல மருமகளை நான் தேடிப்பிடிக்க முடியாது வைபவி!”

– பெப்ரவரி 2011

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *