கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: September 29, 2015
பார்வையிட்டோர்: 16,000 
 
 

வீட்டுக்குள் நுழைந்ததும், என் மனைவி நித்யா என்னிடம் ஒரு கடிதத்தை நீட்டினாள். அது என் சித்தி எழுதியது. ரொம்ப வருடங்களுக்குப் பிறகு, சொந்தங்களிடமிருந்து எனக்கு வரும் முதல் கடிதம். விஷயம் இரத்தினச் சுருக்கமாக எழுதியிருந்தது.

பிரியமுள்ள சேதுவிற்கு,
நலம். எப்படி இருக்கே? போன மாதம், நான் திரும்பவும் மதுரைக்கே வந்துவிட்டேன். உன்னைய பார்க்கணும் போல இருக்கு. நேரம் கிடைக்கும்போது மருமகளையும், குழந்தைகளையும் கூட்டிக்கிட்டு வா. – சித்தி மாலா.

படித்ததும் எனக்குள் ஏற்பட்ட உணர்ச்சிகளுக்கு வார்த்தையில்லை. மொபைல் உலகத்தில் இப்படி கையால் கடிதம் எழுதுவது, அரிதாகிவிட்டது. இப்படி யாரோ சிலர் தான் இன்னும் உறவுகளைக் கடிதம் மூலம் உறுதிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இப்படித்தான், முன்பு ஒரு முறை, இதே மாலா சித்தி, எழுதிய கடிதம், ஒரு பெரிய சூறாவளியை குடும்பத்தில் ஏற்படுத்தி, எத்தனை மன உளைச்சல்கள், சங்கடங்கள் ஏற்பட்டு, உறவுகள், குடும்பங்கள் சிதைந்து…….

“யார் கிட்டே இருந்து லெட்டர்ங்க அது?”

“என் சித்தி. மாலான்னு. மதுரைலெயிருந்து”

“அது யாருங்க, புதுசா. சித்தி உறவு?”

“உனக்கு தெரியாது அவங்களை. ரொம்ப நாளாச்சு பார்த்து”

“நம்ம கல்யாணத்தில கூட இல்லயே?”

“துபாயில இருந்தாங்க. இப்ப இங்க வந்திருக்காங்க”

“இப்ப என்னவாம்?” பதிலைக் கூட எதிர் பாராமல், சென்றுவிட்டாள்.

இவளுக்கு எப்படி, என்ன சொல்லி புரிய வைப்பது? பக்கத்தில் இருக்கும் உறவுகளையே நாம் கண்டுகொள்வதில்லை. தொலைதூரத்தில், எல்லா சொந்தங்களும் கைவிட்டுப் போய், தனிமையில், வெந்து, உருகி, எந்த ஒரு ஒட்டு உறவும் இல்லாமல் இருந்து விட்டு, வேதனையில் வாழ்ந்த ஜீவனின் தேடுதலைப் பற்றி, என்னவென்று சொல்வது.

சித்தி மறுபடியும் மதுரைக்கே வந்துவிட்டாளா? எவ்வளவு வருடங்களுக்குப் பிறகு? கிட்டதட்ட இருபத்தி இரண்டு வருடங்கள். எப்படி ஓடி விடுகிறது வாழ்க்கை. இதோ இப்போது தான் எல்லாம் நடந்தது போல இருக்கு. சித்தி எப்பவுமே இப்படித்தான், தடாலடியாக எதையும் செய்து விடுவாள். அவளுக்கு ஒன்று பிடித்துவிட்டது என்றால் அதை விட்டுக்கொடுக்கவே மாட்டாள்.

மிகவும் கட்டுக்கோப்பான குடும்பம் எங்களுடையது. சாந்தி பெரியம்மா, என் அம்மா விஜயா, சாரதி மாமா, அப்புறம் மாலா சித்தி. கடைக்குட்டி. என் தாத்தா ரொம்ப கண்டிப்பானவர். ஊரில் பெரிய தலை. கோபக்காரர். பழைய பஞ்சாங்கம். பெண்கள் சத்தமாக பேசினாலோ, சிரித்தாலோ அவருக்குப் பிடிக்காது. அவர் வீட்டில் இருந்தால், என் பாட்டி கூட சத்தம் போட்டு பேசமாட்டாள். அவளும் அப்படித்தான். ஆனால், இதற்கு எல்லாம் நேர்எதிராய் இருப்பவள், மாலா. துறுதுறு. பம்பரமாக சுழலுவாள். எந்த வேலையையும் சளைப்பில்லாமல் முடித்துவிடுவாள். நன்றாகப் பாடுவாள். துணிகளை துவைப்பது, மாடுகளை குளிப்பட்டுவது, பால் கறப்பாள். ஒற்றை ஆளாக உட்கார்ந்து எவ்வளவு படி அரிசியையும் உரலில் அரைத்து விடுவாள். சாணம் தெளித்து கோலம் போட்டுக்கொண்டே பாட்டு பாடுவாள், சத்தமாக. (செருப்பால அடி. பொம்பளைப் பிள்ளைக்கி என்னடி பாட்டு – பாட்டி). பாட்டு வால்யூம் கூடும். துடைப்பத்தை எடுத்துக் கொண்டு பாட்டி வந்தால், ஓடி, வீட்டின் பரண் மேல் ஏறிக் கொள்வாள். எவ்வளவு உயரமானாலும் தைரியமாக ஏறி விடுவாள். கிணற்றில் ஏதாவது பொருள் விழுந்துவிட்டால், கயிற்றை வயிற்றில் கட்டிக்கொண்டு இறங்கிவிடுவாள். துணிச்சலானவள். ஒருமுறை, கையில் பாம்பு ஒன்றை பிடித்துவிட்டாள்.

எதையும் சட்டென்று முடிவெடுத்து விடும் தைரியமானவள். அவள் சிரித்தால், அத்தனை அழகும், அட்டகாசமுமாக இருக்கும்.

அவளுக்கு நிறைய படிக்க வேண்டும் என்று ரொம்ப ஆசை. ஆனால், அது இக்குடும்பத்தில் நடக்காத காரியம். பெண்கள் படிப்பதா? ஆகவே, ருதுவானவுடன் படிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது. அழுது புரண்டாள். உண்ணாவிரதம் இருந்தாள். ஒன்றும் நடக்கவில்லை. அவள் மட்டும் இல்லை, எங்கள் குடும்பத்தில் உள்ள பெண்கள் யாருமே எட்டாம் வகுப்பு தாண்டவில்லை. ஆண்களும் அவ்வளவாக சோபிக்கவில்லை.

எங்கள் வீட்டிற்கு, பக்கத்து வீட்டிலிருந்து அன்னம் என்று ஒரு அக்கா வருவாள். அவள் தான் என் சித்திக்கு எல்லாம். அன்னத்தின் உதவியால் சித்தி சைக்கிள் ஓட்டினாள். தன் வீட்டிற்கு வரும் அனைத்து வார பத்திரிக்கையும் எங்கள் சித்திக்கு சப்ளை அன்னம் மூலம் தான். அதுவும் நேரடியாக கொடுக்க முடியாது, அது சாத்தியமே அல்ல. கல்கியோ, ஆனந்த விகடனோ அன்னத்தினால் மறைமுகமாக எடுத்து வரப்படும். கண்ணிமைக்கும் நேரத்தில் அன்னத்திடமிருந்து மாலா சித்தியிடம் (ரவிக்)கை மாறும். தொடர்கதைகள், சினிமா செய்திகள், துணுக்குகள், எல்லாம் படிக்கப்பட்டு திருப்பி தரும்வரை அன்னத்தின் வேலை, மற்றவரை யாரும் சித்தியிடம் நெருங்கவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது. இது ரொம்ப நாள் வீட்டில் யாருக்கும் தெரியாது. இருவரும் மணிக்கணக்கில் பேசிக்கொண்டிருப்பார்கள். இந்த இருவரில் மாலா சித்திக்குத் தான் முதலில் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்து வழியனுப்பும் போது, அன்னத்தை கட்டிக்கொண்டு இருவரும் அழுதது, உறவுகளைத் தாண்டி, நட்பின் உச்சம்.

பலராம் மாமா தனியார் நிறுவனத்தில் அக்கவுண்ட்ஸ் செக்ஷன். தங்கமான மனுஷன். திருமணத்திற்கு பிறகு, புகுந்த வீட்டில், சித்திக்கு கிடைத்தது மிதமிஞ்சிய சுதந்திரம். கிடைத்த சுதந்திரத்தை மிகவும் நல்ல முறையில் பயன்படுத்தினாள். தான் படிக்க நினைத்ததை முதலில் நிறைவேற்றினாள். சென்னை பல்கலைகழகத்தில் தொலைத்தூரக் கல்வியில் சேர்ந்து B.A. வரலாறு முடித்தாள். பிறகு டைலரிங், எம்பிராய்டரிங் போன்றவைகளையும் முழுவதும் கற்றாள். அவளின் திறமைக்கும், அறிவுக்கும் எட்டிய அத்தனையையும் பயின்றாள். சித்தி, ஒரு ஆண் குழந்தையும் ஒரு பெண் குழந்தையும் பொற்றாள். அவள் மேலும் இரண்டு விஷயங்களைக் கற்றுக் கொண்டாள். ஒன்று, சினிமா பார்ப்பது. மற்றொன்று, நிறைய செலவு செய்யப் பழகிக்கொண்டது.

திருமணத்திற்கு முன், அவள் பேச்சு, செயல் எல்லாமே வீடு, வாரபத்திரிக்கைகளில் வரும் தொடர்கதைகளைப் பற்றித் தான் இருக்கும். ஆனால், இப்போது, பேச்சு முழுவதும் சினிமாவைப் பற்றியதாகவே இருந்தது. அதுவும், சிவாஜி கணேசனின் உயிர் ரசிகையாகவே மாறியிருந்தாள். அவரின் படப்பாடல்களை மிகவும் ரசித்துப் பாடுவாள். அத்தனையும் அத்துப்படி. ஒரு முறை அவள் வீட்டில் நான் போயிருந்தபோது, அத்துனை பாட்டையும் அருமையாகப் பாடி காட்டினாள். சினிமா தியேட்டரும் அவள் வீட்டின் தெருவிலேயே அமைந்துவிட்டதால், அவளுக்கு மிகவும் வசதியாக போய்விட்டது.

சித்தி, குழந்தைகளுக்கு பணத்தை தாராளமாக செலவு செய்வாள். இதற்காக, என் அப்பா கூட ஒருமுறை “இப்படியே நீ இருந்தால், அது உன்னை பாழுங்கிணற்றில் தள்ளிவிடும். ஜாக்கிரதை” என்று எச்சரித்திருக்கிறார். தன் குழந்தைகளை கஷ்டம் தெரியாமல் வளர்ப்பதாகக் கூறி சமாதானப்படுத்துவாள். அவள் குணம் மாறவே இல்லை.

இப்படியே போய்கொண்டிருந்த அவள் வாழ்க்கையில் திடீரென்று புயல் வீசியது. மிகக் கடுமையான புயல். திடீரென்று ஒருநாள் இரவு, எங்கள் பாட்டி வீட்டிலிருந்து போன் வந்தது. செய்தி கேட்டு பதறியடித்து அங்கே ஓடினோம். நாங்கள் அங்கே போய் சேர ராத்திரி ஆகிவிட்டது. வீடே அழுது கொண்டிருந்தது. பலராம் மாமா கையில் அந்தக் கடிதம் இருந்தது. சித்தி எழுதியது,

“நான் தற்கொலை செய்து சாகப்போகிறேன். என்னை யாரும் தேடவேண்டாம். குழந்தைகளை நன்றாக படிக்கவைக்கவும் – மாலா”

எல்லோரும் மிகவும் கலவரத்தோடு மவுனமாக உட்கார்ந்திருந்தார்கள். என் பெரியப்பா,

“அந்தப் பொண்ணு அவ்வளவு கோழையில்ல. பயப்பட வேண்டாம். அப்படியெல்லாம் செய்யமாட்டாள்” என்றவர்,

“இந்த லெட்டரை எப்போ பாத்தீங்க?”

“ஆறு மணி இருக்கும். வீடு பூட்டி இருந்திச்சு. பக்கத்து வீட்டில சாவி வாங்கி தொறந்ததும், சாமி படத்துக்கிட்ட இருந்திச்சி”

“சாவிய எப்போ குடுத்திட்டு போனான்னு கேட்டீங்களா?”

“நாலு நாலரை இருக்கும்”

“எங்கயாவது போறதா சொன்னாளாமா?”

“இல்ல. கையில ஒரு கோணிப்பை மட்டும் எடுத்திட்டுப் போயிருக்கா”

“பசங்க எங்க போயிருக்காங்க?”

“ரெண்டு பேரும் டியுசன் போயிருக்குறாங்க”

“உங்களுக்குள்ள ஏதாவது பெரிய சண்டையா?”

“அப்படி ஏதுவும் இல்லயே”

“லெட்டர் எழுதி வைச்சிட்டு போற அளவுக்கு என்ன?”

தெரியவில்லை என்பது போல் மாமா தலையாட்டினார்.

“கவலை படாதீங்க. யாராவது அவள் தோழி வீடு எங்கயாவது போயிருப்பா. வந்துடுவா”

தொடர்ந்து மூணு நாட்கள் தேடினோம். எந்தத் தகவலும் இல்லை.

நான்காம் நாள்- ஒன்றும் நடக்கவில்லை.

ஐந்தாம் நாள், இரவு எட்டு மணி அளவில் எங்கள் வீட்டு வாசலில் சித்தி வந்து நின்றிருந்தாள்.

அழுது அழுது கண்களும், முகமும் வீங்கிப்போய், தலையெல்லாம் கலைந்து பார்க்கவே பரிதாபமாக இருந்தாள்.

“உள்ள வாம்மா” என் அப்பா தான் அழைத்தார். உடனே எங்கள் வீட்டிலுள்ள எல்லோரையும் அழைத்து,
“நீங்க யாரும் அவளிடம் எதுவும் கேட்க கூடாது. தொந்தரவு கொடுக்கக் கூடாது. நீ உள்ளர போ” என்றார்.
அம்மாவைப் பார்த்து, “விஜயா, அவளுக்கு சாப்பிட ஏதாவது கொடு. வேற எதுவும் பேசாத”

என் அம்மாவுக்கு உள்ளுக்குள் சந்தோஷம். முகமெல்லாம் சிரிப்பாக உள்ளே அழைத்துப் போய்விட்டாள்.
என் அப்பா எப்பவும் கண்டிப்பு. எது பேசினாலும் தீர்க்கமாக பேசுவார். அவர் பேச்சுக்கு எதிர் பேச்சு கிடையாது எங்கள் வீட்டில்.

இரவு சாப்பாடு முடிந்ததும், சித்தியிடம்,

“உங்க வீட்டில் யாருக்காவது சொல்லி அனுப்ப வா?” என்று கேட்க,

அவள் வேண்டாம் என்பது போல் தலையாட்டினாள்.

“அவளை என்னாங்க கேட்டுக்கிட்டு….?” அம்மா குறுக்கிட்டவே

“நீ சும்மா இரு” என்று அதட்டி விட்டு,

“உனக்கா எப்போ போசணும்னு நினைக்கறியோ அதுவரைக்கும் இங்கே இரு. யாரும் எதுவும் சொல்லமாட்டோம். அமைதியா இரு”

மூன்று நாட்கள் கழிந்தும், சித்தி பிடிவாதமாக மௌனம் காக்கவே, விஷயத்தை பக்குவமாக சொல்லி அவள் வீட்டார்களுக்கு ஆளனுப்பினார், அப்பா.

சாயங்காலம், இருவீட்டாரின் மக்கள் அனைவரும் எங்கள் வீட்டில் கூடிவிட்டனர். இப்போது விஷயம் வேறுவிதமாக தலைகீழாக மாறியிருந்தது. பலராம் மாமா, அவரின் அக்காள், மற்றும் அவள் கணவன் எல்லோரும் ஒன்றாகி, பேச்சு அனலாகிப்போனது. அவர்கள் சேர்ந்து வாழ இனி தகுதியே இல்லை என்று போச்சு திசைமாறி, முற்றிப்போனது. கூடியிருந்தவர்கள் அத்தனை பேரும் எவ்வளவு சமாதானம் சொல்லியும், அவர்கள் கேட்பதாக இல்லை. அவர் அக்கா,

“அசிங்கமாயிடிச்சு. என்னென்னமோ நடந்து போச்சு. என் தம்பி வாழ்க்கை பாழானதுதான் மிச்சம். இவ்வளவு ஆனதுக்கு பின்னால, இனி அவ கூட வாழ முடியாது” என்று பொறிந்தாள்.

பலராம் மாமாவோ, “என் மனைவி செத்துப்போயி இன்னியோட எட்டு நாளாச்சி” என்றார். “இனி என் பிள்ளைகளுக்கு அப்பா மட்டும் தான்”

சோதனையாக, அவள் பிள்ளைகளையும் “எங்களுக்கு இனி அம்மா இல்லை” என்று சொல்ல சொல்லி, அவர்களும் அப்படியே, ஈன்ற பொழுதின் பெரிதுவக்க, ஒப்பித்தார்கள். முடிவில்லாமல் பேச்சு பெரிதாகவே, சித்தி வாய் திறந்து முடித்துவைத்தாள் “எனக்காக இனி யாரும் ஏதும் பேசவேண்டாம். எல்லாம் முடிஞ்சி போச்சின்னு ஆகிடுச்சு. இனி நானே என் வாழ்க்கைய பாத்துகிரென். எல்லோருக்கும் நன்றி” என்று சொல்லி கும்பிடு போட்டுவிட்டு, விருட்டென்று வீட்டுக்குள்ளே போய்விட்டாள். இரவெல்லாம் அவள் அறையில் விளக்கு எரிந்தது.

மறுநாள், சித்தி, என் அப்பாவிடம்,

“எனக்கு இங்க இருக்கவே பிடிக்கல. எங்கயாவது போயி நான் பொழச்சுக்கிறே” என்றாள்.

“வீணா மனச போட்டு கொளப்பிக்காத”

“எதுக்கு இப்ப இந்த முடிவு. யாரச்சும் எதாவது சொன்னாங்களா?”

“அதெல்லாம் ஒண்ணுமில்ல. மனசு வெறுத்துப் போச்சு”

“மத்தவங்க ஏதோ சொல்றாங்கன்னு முடிவு எடுக்காத. எவ்வளவு நாளு வேணா நீ இங்க இரு”

“பெத்த புள்ளைங்களே என்னைய வேண்டாம்னு சொல்லிடுச்சுங்க. இன்னும் என்ன வேணும்”

“அட…. அதுகள அப்படி சொல்ல வச்சிருக்காங்க”

“யாரு சொன்னா என்ன. என் புள்ளைங்க அப்படி சொல்லலாமா. அப்படியா வளத்தேன். என்னையவே…….” முடிக்க முடியாமல் விம்மினாள்.

“நா எதுனாச்சும் வெளிநாட்டுக்கு போயிடறே. என்னைய அனுப்பி வச்சுட்டுங்க” என்றாள், கண்ணீரைத் துடைத்துக் கொண்டே.

அப்பா சிரித்துக்கொண்டே, “அங்க என்ன சொத்து வாங்கி போட்டா போட்டுருக்கு? இல்ல உங்க பாட்டன் ஆபீஸ் கட்டி விட்டிருக்காரா? நெனச்ச ஒடனே அனுப்புறதுக்கு” என்றார். அத்தோடு பேச்சு நின்றது.

பிறகு, சித்தியே முயன்று, அன்னத்தின் தோழி ஒருத்தியின் உதவியோடு, பாஸ்போர்ட், விசா எல்லாம் கிடைத்து, யாரிடமும் சொல்லாமல் ஒரு சுபதினத்தில் துபாய் பறந்து போய்விட்டாள். அப்புறம் எந்த ஒரு தகவலும் எங்களுக்கு கிடைக்கவில்லை. எல்லா தொடர்புகளையும் அவள் துண்டித்துகொண்டாள்.

இங்கே, பலராம் மாமாவும், அவரது குடும்பத்தினரும் எங்களை பரம்பரை எதிரியாகவே பார்க்க தொடங்கிவிட்டனர். எந்த ஒரு நிகழ்ச்சியில் பார்த்தாலும், முகத்தை திருப்பிக்கொண்டு போய்விடுவார்கள். அந்த உறவுகளை சீர்படுத்தவே முடியாமல், அப்படியே அந்த உறவும் உறைந்துபோனது.

மதுரை ரொம்பவே மாறியிருந்தது. ஷேர் ஆட்டோ பிடித்து, மீனாட்சி நகர் விரிவில், சித்தியின் விலாசம் கண்டுபிடிப்பது சுலபமாகவே இருந்தது.

சிறிய வீடு. கதவைத் தட்டியதும், சித்தி தான் திறந்தாள். மெலிந்து, தோற்றத்தில் பாதியாய் நின்றிருந்தாள். என்னைப் பார்த்ததும், ஆனந்தத்தில் கண்ணீர் கசிந்தது.

“வாடாப்பா, சேது கண்ணா” என்று என் கைகளை இறுக்கினாள்.

“எப்படி சித்தி இருக்கே” குரல் தழுதழுத்தது,

“சித்தி இது என் மனைவி நித்யா” அறிமுகப்படுத்தியதும் அவளைப் பிடித்துக் கொண்டாள்.

“வாடா உள்ளே” என்றழைத்து, நித்யாவிடம் “சௌக்கியமாடா! கண்ணா! (செல்லமாக எல்லோரையும் இப்படித் தான் கூப்பிடுவாள்) என்னைய யாருன்னு தெரியுமா. சொல்லியிருக்கானா?” நெற்றியில் குங்குமமிட்டாள்.
மையமாக தலையாட்டி வைத்தாள் நித்யா.

“நெசமாவா. சரி யாருன்னு சொல்லு பார்ப்போம்?” மடக்கினாள்.

சித்தி மாறவே இல்லை.

“சின்ன மாமியாடோய்” என்று சொல்லி கடகடவென சிரித்தாள். அதே சிரிப்பு.

“ஆமா! குழந்தைங்க எங்கே? கூட்டிட்டு வரலெ?”

“அவுங்க தாத்தா வீட்டுக்கு போயிருக்குறாங்க. ஒரு கல்யாணம்”

“கூட்டிட்டு வந்து இருக்கலாம்ல. சரி! எத்தன பசங்க உங்களுக்கு?”

“ரெண்டு. மூத்தவள் ஸ்வேதா. ஏழாவது படிக்கிறா. சின்னவன் தினேஷ், நாலாங் கிளாஸ் படிக்கிறான். அடுத்த தடவை கட்டாயம் கூட்டிகிட்டு வர்றோம்”

“நீ வர்றேன்னு ஒரு லட்டர் போடக் கூடாதா? இப்படி திடீருன்னு வந்து நிக்கிறே.”

“இல்ல சித்தி. நாங்களே நேத்து காலைல தான். முடிவு செஞ்சோம். உடனே கிளம்பி வந்துட்டோம்”

“நீங்கள்ளாம் மெட்ராஸுக்கு எப்போ போனீங்க?”

“நாங்க போய் பதினைந்து வருஷமாச்சு. எனக்கு வேலை கிடைச்சு அங்கயே இருந்திட்டோம். ஏதாவது விஷேசம், கல்யாணம்னாதான் ஊர் பக்கம் வர்றது”

“ஆ….ம்மா இங்க என்ன இருக்கு” ஏதோ சொல்ல வந்தவள், உடனே

“சரி. காப்பியா? டீயா? உனக்கு என்னம்மா..” என்று கேட்டுக்கொண்டே, நித்யாவை உள்ளே அழைத்து போய்விட்டாள். மாமியாளும், மருமகளும் கூடி கூடி நிறைய பேசினார்கள். மதிய சாப்பாட்டுக்குப் பின்னால்,

“சித்தி! நீ இங்க யாரையாவது துணைக்கு வச்சுக்கலாம்ல. ஏன் தனியா கிடந்து கஷ்டப்படணும்?”

“ம் ஹும்.. எனக்கு யாரும் தேவையில்ல கண்ணா. நான் இங்க ராணிமாதிரி இருக்குறே. ஒரு கஷ்டமுமில்ல” தெளிவாகப் பேசினாள் “தேவையான அளவு எடுத்து செலவு செய்ய பாங்கில பணம் போட்டு வச்சிருக்கேன். நீ கவலைப்படாத”

“யாராவது உன்னைய பாக்க வந்தாங்களா, நீ யாரையாவது பார்த்தியா?”

“யாரை கேக்குற. என்ன சொல்ல வர்ற” பிடி கொடுக்காமல் பேசினாள்.

“பழைய தோழி, தெரிஞ்சவங்க…” என்று இழுத்தேன்,

“ஏன்டா கண்ணா நான் பாக்கணும். அது தான் உறவே இல்லேன்னு அறுத்து எறிஞ்சிட்டு போயிட்டாங்களே. அவுங்களப்பத்தி என்ன இருக்கு? கேள்விப்பட்டேன், அவுங்க கம்பெனியிலேயெ இவனும் வேலைல இருக்கிறானாம்” உதடுகள் துடிக்க, சற்று நேர மௌனத்திற்குப் பின்,

“கூடப் பிறந்தவங்க அண்ணன், தம்பின்னு உறவுகள்னா, ஒரு கஷ்டம்னு வந்தா, ஒருத்தருக்கு ஒருத்தர் உதவியா இருக்கணும்னு சொல்லுவாங்க. யாருக்காவது ஏதாவது ஒண்ணுன்னா ஓடி வருவாங்க. கூடப் பிறந்தவனே, என்னையப் பத்தி கவலைப்படல. என்ன ஏதுன்னு அப்போ ஒரு வார்த்தை கேக்கல. பேச கூட இல்ல. பொண்டாட்டி பின்னால நின்னுக்கிட்டிருந்தான். ஒரு பொட்ட புள்ள தனியா என்ன பண்ணுனாளோ? ஏன் அப்படி செஞ்சான்னு யாருக்கும் அன்னிக்கு அக்கரயில்ல. நான் செஞ்சது தப்பு தான். இல்லங்கல. அனாதையா நின்றேனே. வேடிக்கைதானே பார்த்தாங்க. ஆதரவா ஒரு சொல்லு கிடையாதே? நல்லவேளை எங்களப் பெத்தவங்க அப்போ உயிரோட இல்ல. இல்லன்னா இவனுகளே சாகடிச்சிருப்பாங்க.

ஒங்க மாமாவுக்கு குடும்பம் எப்படி நடக்குதுன்னு தெரியாது. கொண்டுவந்து கொடுக்கிற அந்த சொற்ப சம்பளத்தில குடும்பத்த ஓட்ட முடியுமாங்கிற கவலையில்ல. வாடகை வீடு, பிள்ளைங்க படிப்பு, சாப்பாடு, துணிமணி மற்ற செலவுகளையெல்லாம் எப்படி சமாளிக்கிறான்னு ஒரு நாள் கூட பார்த்தது கிடையாது. கேட்டதும் கிடையாது. நான் இழுத்துப்பிடிச்சு ஓட்டினா, இவரு அக்கா சொல்லிட்டா, பொண்டாட்டியே வேண்டாம்னு சொல்லிட்டாரு? இப்ப தெரிஞ்சிருக்கும் கஷ்டம். என்னைய முழுசா புரிஞ்சிகிட்ட மனுஷன், உன் அப்பா தான்டா. என் பதறின மனசை சரியா தெரிஞ்சிகிட்டு ஆதரவா பேசினாரு பாரு, தங்கம்டா. நான் தற்கொலை செஞ்சிக்க போய், மனசு கேக்காம, கோயில் கோயிலா அலைஞ்சிட்டு, ஒரு வழியும் தெரியாம, கடைசியா, ஒங்க வீட்டுக்கு வந்தேனே, அப்பவே அவருக்கு எல்லாம் தெளிவாகிடுச்சு. எதுவும் பேசலே.
என்னைய வேண்டாம்னு சொன்னாங்களே, அன்னிக்கி ராத்திரியே நான் உங்க அப்பா கிட்ட எல்லாத்தையும் சொல்லிடலாம்னு போனேன்.

ஆனா, அவரோ, ‘நீ எதையும் சொல்ல வேண்டாம். எனக்கு எல்லாம் புரிஞ்சிடுச்சு. என்ன நடந்திருக்கும்னு எனக்கு தெரியும். பொறுப்பில்லாத புருஷன். சமாளிக்க நீ தனியா முடிவெடுத்து பண்ணின காரியம் எவ்வளவு சிக்கல ஏற்படுத்திச்சு பாத்தியா, இப்போ உனக்கே எதிரா போயிடுச்சின்னு வருத்தப்பட்டார். பிள்ளைகளுக்கு கஷ்டம் நஷ்டம் தெரிய வைக்கணும். அப்படி தெரியக்கூடாதுன்னு நீ வளர்த்து அதுகளும் உலகம் புரியாம இருந்துடுச்சுங்க. இப்படி நீ செஞ்சதுதான் பெரிய தப்பு. ரெண்டாவது லெட்டர் எழுதி வெச்சிட்டுப் போனது மகா முட்டாள்தனம்’னு சொல்லி எல்லாத்தையும் புரிய வைச்சார். நான் வெளிநாடு போக பணம் ஏற்பாடு செஞ்சிக் கொடுத்தவரே, அவர் தான். அதை உசிர் இருக்கிற வரைக்கும் நான் மறக்க மாட்டேன்”

முழுவதையும் இன்று கொட்டித் தீர்த்தாள் “போன வாரம் மீனாட்சியம்மன் கோயிலுக்கு போயிருந்தேன். அப்போ உன் ஃபிரண்டு தேவராஜனைப் பார்த்தேன். அவன் தான் உன் விலாசம் கொடுத்தான்”

மறுநாள், நாங்கள் கிளம்பினோம். சித்தி எவ்வளவு சொல்லியும் கேட்காமல், குழந்தைகளுக்கு புது துணிமணிகள், முறுக்கு, தின்பண்டங்கள் என வாங்கித் திணித்து அனுப்பி வைத்தாள். அரை மனசாகக் கிளம்பி சற்று தூரம் நடந்து பிறகு,

“நித்யா, ஒன் மினிட்” அவளை இருக்கச் சொல்லிவிட்டு, ஏதோ நினைவாய் திரும்பி போனபோது, சித்தி வாசல்படியிலேயே நின்றிருந்தாள்.

“ஏதையாவது மறந்துட்டியா கண்ணா?”

“இல்ல. சித்தி, நீ சந்தோஷமாகத் தானே இருக்க?”

சிரித்தாள்.

“இன்னும் பழையபடி பாட்டெல்லாம் பாடுறதுண்டா?”

“அதுதான் வாழ்ந்துட்டு இருக்கேன்” என்று கண்கள் பனிக்க, திரும்பி உள்ளே போய்க்கொண்டே

“பாலூட்டி வளர்த்த கிளி
பழம் கொடுத்து பார்த்த கிளி
நான் வளத்த பச்சை கிளி
நாளை வரும்…………….”

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *