ஆறு அது ஆழமில்ல…

2
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 29, 2015
பார்வையிட்டோர்: 13,120 
 

“அம்மா- சீனி மாமா ” என்று சாரதி மறுமுனையில் இரைந்தது என் காதில் விழந்தது.ஏனோ தெரியவில்லை,சாரதி என்னை நேரிடையாக “மாமா” என்று அழைத்ததில்லை.இந்த சிறு வயதில் உறவுகள் கசந்திருக்கலாம் அவனுக்கு. “சொல்லுடா” என்றாள் அக்கா.”ஒண்ணுமில்லக்கா , சும்மா தான்” என்றேன். “ம்” என்று சிரித்தாள் அக்கா.

லக்ஷ்மி அக்கா எனக்கு பெரியப்பா மகள் தான் என்றாலும் அக்கா தங்கையற்ற எனக்கு அவளிடம் சிறுவயதிலிருந்தே ஒரு ஒட்டுதல்.அக்காவுக்கும் அப்படியே.லக்ஷ்மி அக்காவுக்கு சொந்த தம்பி உண்டு.பெயர் ராஜு.அக்கா வீட்டுத்தெருவுக்கு அடுத்த தெருவிலேயே அவன் வீடு.ஆனால் அவர்களிடையே உறவு‌ மெச்சிக்கொள்ளும்படியாக இல்லை.நான் மாதம் ஒருமுறை போனில் விசாரிப்பதும்,முடியும் போது நேரில் சென்று பார்த்து வருவதும் உண்டு.

“அப்புறம்,சாரதிக்கு வேலை எப்படி போகுதாம்?” என்று ஆரம்பித்தேன்.சாரதி வேலையில் சேர்ந்து ஒரு மாதம் ஆகியிருந்தது.நகரத்தில் சொல்லிக்கொள்ளும்படியான ஒரு தனியார் கம்பெனியில் கை நிறைய சம்பளத்துடன் நல்ல வேலை.அவனை வளர்த்து ஆளாக்க அக்கா பட்ட பாட்டை நானறிவேன்.அவன் நல்ல வேலையில் சேர அவள் வேண்டாத தெய்வமில்லை.

அக்காவின் கணவர் வங்கியில் காசாளராக பணி புரிந்தவர். ஊர் மெச்சும்படியாக திருமணம் நடந்து ஒரு குழந்தையும்பெற்று அக்கா மகிழ்ச்சியோடுதான் குடும்பம் நடத்திக்கொண்டிருந்தாள்.சாரதிக்கு ஒரு வயதிருக்கும்..ஊரிலிருந்து அக்கா எங்கள் வீட்டிற்கு வந்து எங்களுடன் அளவளாவிக்கொண்டிருந்தாள்.அப்போதுதான் ராஜு கதறியபடி அந்த துயரச் செய்தியைக் கொண்டு வந்தான்.”அக்கா , மாமாவுக்கு ஹார்ட் அட்டாக்காம்,சீக்கிரம் கிளம்பு”.தலையிலடித்தபடி அக்கா ஓடிய அந்த நாளை என்னால் மறக்க முடியவில்லை.எல்லோருமாகச் சென்று காரியங்கள் முடித்து திரும்பிய நாளில் அக்காவும் பெரியப்பா குடும்பத்துடன் வந்து விட்டாள்.

பின் பெரியப்பா,பெரியம்மா எவ்வளவோ வற்புறுத்திக் கேட்டும் அக்கா மறுமணம் செய்துகொள்ள இசையவில்லை.சாரதியை வளர்த்து ஆளாக்குவதையே தன் வாழ்க்கையின் இலட்சியமாகக் கொண்டு தனக்கு தெரிந்த தையல் தொழிலை செய்து பெரியப்பா குடும்பத்துடன் வாழ்ந்து வந்தாள்.த‌ம்பி ராஜுவிற்கு திருமணம் முடிந்த கையோடு பெற்றோர் ஒருவர் பின் ஒருவராக போய்ச் சேர அக்காவின் துயர வாழ்க்கைக்கு மேலும் ஒரு இடி காத்திருந்தது.அக்காவால் ராஜு குடும்பத்துடன் ஒத்து போக முடியவில்லை.எங்கள் அப்பாவிடம் சொல்லி தனியாக ஒரு வீடு பார்த்துக் கொண்டு வந்துவிட்டாள்.

தையல் தொழில் செய்தும், கற்றுக்கொடுத்தும்,டியுஷன் சொல்லிக்கொடுத்தும் இரவு பகல் பாராது உழைத்து சாரதியைப் படிக்க வைத்தாள்.சாரதியும் தன் அம்மாவிற்கு மிகுந்த சிரமம் வைக்காமால் கருத்துடன் படித்து இன்று நகரத்தில் நல்ல வேலையிலமர்ந்து விட்டான்.கூடிய விரைவில் அக்காவை அழைத்துக் கொண்டு போய் தன்னுடன் வைத்துக் கொள்ள தனி வீடு பார்க்கப் போவதாகவும் தெரிவித்திருந்தான்.அவன் அந்த வாரம் ஊருக்கு வந்திருந்த போதுதான் நான் ஃபோன் பண்ணியிருந்தேன்.

“வேலை நல்லாபோகுதாம்,வீடும் பாத்துட்டானாம்-டா”.அடுத்த வாரம் என்ன வந்து பாக்க சொல்றான்.பிடிச்சிருந்தா நாள் பாத்து பால் காய்ச்சி குடி போயிடலாங்கிறான்.-அக்கா சொன்னாள்.

“சர்தான் -கா சீக்கிரமே அவன் கூட போயிடேன்.தனியே இருந்து ஏன் கஷ்டப்படறே?” என்றேன்.

“இல்லடா.எனக்கு இந்த ஊர விட்டு போக பிடிக்கல”.

“அப்படித்தான்-கா இருக்கும் முதல்ல. நீ போய் கொஞ்ச நாள் இருந்து பாரு.அவனும் எவ்வளோ நாள் தான் தனியா இருப்பான்?ஹோட்டல் சாப்பாடு சாப்பிடுவான்? – என்று கேட்டேன்.

அதெல்லாம் சரி தான்-டா.போய் இருக்கலாம் தான்.ஆனா அவன் வேலைக்கு போய் திரும்பி வர வரைக்கும் எப்படிடா தனியா வெட்டு வெட்டுனு உட்கார்ந்திருக்கறது?

என்னக்கா ? நீயே இப்படி சொல்ற?. நான் அழுத்தம் கொடுத்த “நீயே” அக்காவை வருத்தியிருக்க வேண்டும்.மறுமுனை அமைதியாயிருந்தது.

அக்கா – உன்ன கஷ்டப்படுத்தனும்-னு அப்படி சொல்லல‌க்கா.

இல்லடா.அதெல்லாம் ஒண்ணுமில்ல.கூடப்பிறந்தவன் பக்கத்திலிருந்து எட்டிக் கூட பார்க்காம இருக்கான். நீ அடிக்கடி ஃபோன் பண்ணி விசாரிக்கிறியேடா.உனக்கு அதெல்லாம் தெரியாது-னு எனக்குத் தெரியும் என்று நெகிழ்ந்தாள் அக்கா.

மறுவாரம் வீடு பார்த்து பால் காய்ச்ச என்னையும் குடும்பத்தாரையும் அழைத்தாள். நாங்களும் மற்றும் சில உறவினர்களும் சென்று சிறப்பாக நடத்தி முடித்து வந்தோம்.அப்போதே சாரதிக்கான திருமண பேச்சும் தொடங்கிவிட்டது.

இப்ப என்ன அவசரம்?இன்னும் கொஞ்ச நாள் போகட்டும் – என்று எல்லோரையும் அடக்கி விட்டு வந்தேன்.அக்கா கொஞ்ச நாளாவது சுகப்படட்டுமே என்று.

அதற்கு அடுத்த சில மாதங்கள் கழித்து அக்காவிடமிருந்து ஃபோன்.

என்னக்கா- என்றேன்.சாரதிக்கு ஒரு நல்ல பொண்ணா பாருடா – என்றாள்.

என்னக்கா ? ஏதாவது பிரச்சினையா?

இல்லடா – முன்ன சொன்னதுதான்.என்னால இங்க இருக்க முடியல.கல்யாணம் நடந்து அவங்க குடும்பம் நடத்த ஆரம்பிச்சுட்டா நான் நிம்மதியா ஊருக்கு போயிடலாம்னு பாக்கறேன்.

சரி.பாக்கலாம் ஜாதகத்த அனுப்பு – என்றேன்.

இரண்டு வாரம் கழித்து மிகுந்த தயக்கத்துடன் அக்காவுக்கு ஃபோன் பண்ணினேன்.

அக்கா , எனக்கு தெரிஞ்ச ஒருத்தர் பொண்ணு ரொம்ப அழகு,படிப்பு,தங்கமான குணம்.ஆனா… என்று இழுத்தேன்.

ஆனா என்னடா? நீ பாத்தா எல்லாம் சரியாத்தானிருக்கும்.சொல்லு நாங்க வந்து பாக்கறோம்.

அது இல்லக்கா.முழுசும் சொல்லிடறேன்.பொண்ணு நல்ல பொண்ணு தான்.ஆனா ஒரு வருஷத்துக்கு முன்னாடி நடந்த ஒரு ஆக்சிடென்டுல துரதிர்ஷ்டவசமா விதவையானவ. என்று சொல்லி நிறுத்தினேன்.கூடவே தப்பா எடுத்துக்காத என்றும் சொன்னேன்.

நீண்ட மெளனத்திற்கு பிறகு அக்கா “இந்த இடம் வேண்டாம்-டா” என்றாள் தீர்மானமாக.

Print Friendly, PDF & Email

2 thoughts on “ஆறு அது ஆழமில்ல…

  1. “இந்த இடம் வேண்டாம்” என்று சொன்னதன் காரணம் அந்த பெண்ணை அவனது அக்காவாகத்தான் அவனால் பார்க்க இயலுமே தவிர மனைவியாக அல்ல.

  2. ‘ஆறு அது ஆழமில்ல’ வாசித்தேன். முடிவு ‘இந்த இடம் வேண்டாம்டா’ என்று ஏன் சொல்கிறாள் என்று புரியவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *