கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: January 15, 2019
பார்வையிட்டோர்: 12,891 
 
 

“நாற்பது வயதில் நாய்க்குணம் நாம்தான் அறிந்து நடக்கணும்”…………பாடிக் கொண்டே வந்த பரமுவைப் பார்வையாலேயே தகித்தாள் சீத்தா. இன்னும் பத்து நாட்களில் அவளது நாற்பதாவது பிறந்தநாள் வரப்போகிறது! அதற்குத்தான் பரமுவின் அந்த அழகான வாழ்த்துப்பா!

‘ணங்’கென்று காபித் தம்ப்ளரை மேசைமீது வைத்தவளைக் குறுகுறு வென்று பார்த்தான் பரமு. ‘என்ன மேடம்? உண்மை கசக்கிறதா? இல்ல, பாட்டு பிடிக்கலயா?’……..சீத்தா பதில் பேசவில்லை.

‘ஓகே…ஓகே! கூல்கூல்….இந்தத் தடவை மஹாராணிக்கு என்ன கி:.ப்ட் வேணும்னு சொல்லு’

‘அதல்லாம் ஒண்ணும் வேண்டாம்’…….சொல்லும்போதே, எங்கே அதைப் பரசு சீரியஸாக எடுத்துக் கொண்டு, எதுவும் வாங்கித் தராமல் போய்விடுவானோ என்றிருந்தது, சீத்தாவுக்கு.

‘அப்ப ரொம்பச்சரி…எனக்குப் பர்ஸ¤ வீங்காது…’ காப்பியைக் குடித்து முடித்தவன் எழுந்து கொண்டபோது, முரளி டென்னிஸ் விளையாடிவிட்டு வருவது தெரிந்தது.

‘ஹாய் டாட்! அம்மாக்கு பர்த்டே வரப்போறதே…என்ன ப்ளான்?’

‘முரளி!…..அம்மாவுக்கு எதுவும் வேண்டாமாம்!…தியாகி ஆகிவிட்டாள்! நாற்பது வயதில் வந்த திடீர் ஞானோதயம்!’………பரசு சொல்லி நிறுத்தியதும், கடகடவென்று சிரித்தான் முரளி!….கடைசி வருஷம் இஞ்சினீரிங் படிக்கும் முரளியும் பரசுவும் சேர்ந்தால் போதும், வீடே இரண்டுபடும்.

‘அம்மா…டேக் இட் ஈஸிமா. நிச்சயமா நான் இந்தத்தடவை உனக்கு ஒரு உயர்ந்த பரிசு தரப்போறேன். ஆனால் என்னங்கிறதுதான் யாராலயும் ஊகிக்க முடியாது’…….முரளி சொன்னபோது சீத்தாவுக்குள் பளீரென்று மின்னலடித்தது.

இப்படித்தான் தனது சினேகிதி வனிதாவின் பிறந்தநாளன்று அவளது பிள்ளை குமார், ஒரு பெண்சினேகிதியைக் கூட்டிக் கொண்டு வந்து ‘இதோ பார் அம்மா! உனது பிறந்தநாளுக்கு உனக்குப் பரிசாக ஒரு மருமகளைக் கொண்டு வந்திருக்கிறேன்’ என்று சொல்லி, அவள் உடம்பு சரியில்லாமல் ஆஸ்பத்திரிக்குப் போகும்படி ஆயிற்று!….அப்படி ஏதாவது முரளியும் செய்துவிடுவானோ?…..

ஆனாலும் முரளி இப்படி ஏடாகூடமாக எதுவும் செய்துவிட மாட்டான் என்றே தோன்றியது. இதுவரை, வாட்ச், பட்டுப்புடவை, பளிங்குப் பிள்ளையார், வெள்ளிக் கீச்செயின், டெரக்கோட்டா யானைகள் என்று அவன் தந்திருந்த பரிசுகள் எல்லாம் தரத்திலும், மதிப்பிலும் உயர்வானவை ஆகவே இருந்திருக்கின்றன….

முரளியின் இன்னொரு நண்பன் பாலுவின் அம்மாவுக்குத் திருமணநாள் என்று போனமாதம் ஸ்பெஷலாக ஆர்டர் செய்து ஒரு ச:.பயர் மோதிரம் பரிசளித்ததாகச் சொன்னான்….ஒருவேளை முரளியும் மோதிரம், பெண்டண்ட் என்று தர போகிறானோ என்னவோ?…

….அன்று சீத்தாவின் பிறந்தநாள்! சின்னப்பெண் மாதிரி பிறந்தநாள் கொண்டாடி, இப்படிப் பரிசுப்பொருட்களுக்காக ஆவலோடு இருப்பது அவளுக்குப் புதிது ஒன்றுமில்லை. ஆனாலும் இந்தத்தடவை ஏனோ ஒரு புதுவித உணர்வுக்கு ஆளாகி இருந்தாள்!…..அவளைப் பொறுத்த வரையில், பரசுவும் முரளியும் எது கொடுத்தாலும் அதற்கு விலையே இல்லைதான்! சிறுவயதில், முரளி தனது பிஞ்சுக்கரங்களால் தானே இயற்றிய அன்னையர்தின வாழ்த்து அட்டையும், ‘உள்ளே திறந்துபார் தாயே’ என்று கோணலும் மாணலுமாக எழுதிய பிறந்தநாள் வாழ்த்து
அட்டையும், பொக்கிஷம் போல் இன்னமும் அவளது பீரோவில் பத்திரமாக இருக்கிறது! அதுபோல் பரசுவின் ஒவ்வொரு பரிசும், கண்ணில் ஒற்றிக் கொள்வதுபோல்தான் இருக்கும்!

‘சாயங்காலம் ரெடியா இரு சீத்தா! கோவிலுக்குப் போய்விட்டு வரலாம்’—-பரமு காலையிலேயே, அருமையான டிஸைனர் புடவை ஒன்றைக் கொடுத்து, மெனி ஹாப்பி ரிடர்ன்ஸ் சொல்லிவிட்டான்.

மாலை மணி ஐந்து. ‘ஹாய் மாம்!…ஹாப்பி பர்த்டே!’…..முரளியின் குரல். கையில் ஒரு பெரிய பெட்டி, ரிப்பனெல்லாம் சுற்றி!

கைக்கு அடக்கமாக ஏதேனும் ஒரு நகைப்பெட்டியோடு வரப் போகிறான் என்று உள்ளூர எதிர்பார்ப்போடு இருந்தவளுக்குச் சின்ன ஏமாற்றம் எட்டிப் பார்த்தது!….எதற்கு இத்தானாம் பெரிய கேக் ஆர்டர் பண்ணி இருக்கான்?

‘அம்மா! இங்க வா. வந்து வாங்கிக்கோ’….

‘தாங்க்ஸ் முரளி’…பெட்டி ஏகத்துக்கும் கனத்தது! திறந்து பார்த்த போது….’லொள், லொள்’ என்று சன்னக் குரலில் குரைத்துக் கொண்டு சின்னப் பமரேனியன் துள்ளிக் குதித்தது.

‘ஓ! நோ!’…பதறியபடியே சீத்தா உள்ளே ஓடினாள்.

‘என்ன முரளி! அம்மாவுக்கு நாய்னா அலர்ஜினு உனக்குத் தெரியாதா? என்னடா இது?’….பரசு அங்கலாய்த்தான்.

‘அப்பா, இதவிட பெஸ்ட் கிப்ட் எதுவும் இல்லப்பா. நீ விடு. அம்மாவை நான் சரிபண்ணிடுவேன்’.

‘அம்மா, இந்த ஜிங்கிலி ரொம்ப ஸ்வீட்மா. நீ இப்பல்லாம் ரொம்பவும் தனியா, லோன்லியா இருக்கறதா நானும் அப்பாவும் நினைச்சோம். உனக்கு ஒரு நல்ல கம்பானியன் வேணும்னு
தோணித்தும்மா. ஜிங்கிலி ரொம்ப சமர்த்து, அப்புறம் ரொம்ப அண்டர்ஸ்டாண்டிங்மா. நீ பழகிட்டினா விடவே மாட்டே.’

…….முரளியின் அழகான பேச்சு எதுவும் சீத்தாவைச் சமாதனப் படுத்தவில்லை.

சிறுவயதில் சினிமா நோட்டீஸ் வண்டியைத் தொடர்ந்து ஓடிய போது, அவளை ஒரு நாய் துரத்தியதும், கீழே விழுந்து பல் உடைந்ததும், நேற்று நடந்ததுபோல்தான் இருக்கிறது!
அன்றிலிருந்து, நாயோ/பூனையோ எதுவானாலும் புலியைக் கண்டாற்போல் ஒடுவாள்….இதெல்லாம் தெரிந்தும் முரளி தன்னை இப்படிப் பயமுறுத்தி இருக்கக் கூடாது!….அவளுக்கு ஒரே
ஆயாசமாக இருந்தது. பேசாமல் போய்ப் படுத்துக் கொண்டாள்.

உள்ளங்காலை யாரோ வருடுவது போல் இருந்தது….’முரளி, பேசாமல் இரு; எரிச்சலைக் கிளப்பாதே. சும்மா நேரம் காலம் தெரியாமல் வம்பு பண்ணிக்கொண்டு,…..சொல்லியபடியே படுக்கை யிலிருந்து எழுந்தபோது, அவள்காலை ஜிங்கிலிதான் தடவிக் கொண்டிருந்தது.

‘சட்! பெட்ரூம் வரைக்கும் வந்தாச்சா?’…எரிந்து விழுந்தவள் வேகமாக பாத்ரூம் போய்க் கதவைச் சாற்றிக் கொண்டாள்.

குளித்து முடித்து, விளக்கேற்றிவிட்டு ஹால்பக்கம் வந்தபோது ஜிங்கிலி சைலண்ட்டாக அவளையே பார்த்துக் கொண்டிருந்தது.

‘ஹாய் ஜிங்கிலிக் கண்ணா, இங்க வா….’ முரளியின் குரலைக் கேட்டு உற்சாகமாக அவன்பக்கம் தாவியது ஜிங்கிலி. முரளியின் வழக்கமான ‘குட்மார்னிங்மா’ இன்று மிஸ்ஸிங். தானாகவே ரொட்டியை டோஸ்ட் செய்துகொண்டு, பாலைச் சூடாக்கிக் கொண்டு ப்ரேக்:.பாஸ்ட் முடித்துக்கொண்டவன், ஜிங்கிலிக்கும் ஒரு தட்டில் ரொட்டித்துண்டங்களையும், ஒரு குவளையில் பாலையும் ஊற்றிக் கொடுத்தான்! வாலை ஆட்டிக் கொண்டு சமர்த்தாகச் சாப்பிட்டது ஜிங்கிலி. “ச்சோ ஸ்வீட்’ என்று அதைத் தடவிக்கொண்டே முரளி கல்லூரிக்குக் கிளம்பினான்…..

‘அப்பா…நான் வர்றேன்! டேக் கேர் ஆப் ஜிங்கிலி’

நூறுதடவையாவது ‘பை’ சொல்லிவிட்டுக் கிளம்பும் பிள்ளை இன்று எதுவுமே சொல்லாமல் போனது சீத்தாவுக்கு ஏக வருத்தமாக இருந்தது. நேற்றுவந்த ஜிங்கிலி அம்மாவைவிட, அவனுக்குப் பெரிசாகப் போய்விட்டதா என்ன?….

மணி எட்டு. பரசுவும் கிளம்பியாச்சு. ஒரு பீங்கான் குவளையில் தண்ணீரும், மற்றொரு தட்டில் பழத்துண்டுகளும், பிஸ்கட்டுகளும் எடுத்துக் கொண்டு, ஜிங்கிலியின் அருகில் வைத்தான். ஹாலிலேயே அது சுற்றிக்கொண்டிருக்கும்படியாகச் சற்று நீளமான கயிற்றால் அதைக் கட்டிப் போட்டான். ஜிங்கிலியைப் பார்த்தபடி அவளிடம் ஏதோ சொல்ல வந்தவன், ‘வரேன் சீத்தா’ என்று கிளம்பினான்.

அன்று மதியம் அலுவலகத்தில் ஆடிட்டிங் என்றும் மதிய உணவுக்கு வர முடியாது என்றும் காலையிலேயே சொல்லி இருந்ததால், சீத்தாவும் ஹால் சோபாவிலேயே சிறிது நேரத்தில் கண்ணயர்ந்தாள்.

‘லொள்…லொள்…லொள்’….ஜிங்கிலியின் குரைப்பும், அது அவள் காலைப் பிராண்டியதாலும் மிரட்சியுடன் எழுந்து கொண்டபோது அங்கே நடக்க இருந்த விபரீதம் புரிந்தது. புழுக்கமாக இருக்கிறது என்று ஜன்னலைச் சாத்தாமல் இருந்ததால், ஜன்னல் வழியே யாரோ கம்பை விட்டு, அவர்கள் வீட்டு பீரோவைத் திறக்க முயற்சி செய்து இருக்கிறார்கள்….அதைப் பார்த்துவிட்டுத்தான் ஜிங்கிலி குரைத்துத் தள்ளி இருக்கிறது!…..தூங்கியவளின் காலைப் பிராண்டி எழுப்பி இருக்கிறது!

சுதாரித்துக் கொண்ட போது, சீத்தாவுக்கு நடக்கவிருந்த விபரீதம் புரிந்து ஏகத்துக்கும் வியர்த்துக் கொட்டியது. ‘மைகாட்! தமிழ் வருடப் பிறப்புக்கு, விஷ¤க்கனி பார்ப்பதற்காக பாங்கிலிருந்து எடுத்து வந்திருந்த நகைகள் எல்லாம் அந்த பீரோவில்தான் இருக்கின்றன…..இப்போதெல்லாம்தான் வெகு நூதனமாகக் கொள்ளை அடிக்கிறார்களே!….இந்த ஜிங்கிலி மட்டும் சமயத்தில் குரைத்துத் தன்னை எழுப்பி இருக்காவிட்டால், எல்லாம் பறி போயிருந்திருக்குமே! முதன்முறையாக, சீத்தாவிற்கு அந்த வாயில்லா ஜீவன் மீது அன்பும், கருணையும், நன்றியும் பொங்கியது!…..’ஓ!

ஜிங்கிலி நீ என்னோட செல்லம்டா…ரொம்ப ரொம்ப தாங்க்ஸ்டா’…..

ஜிங்கிலியைக் கட்டிக் கொண்டு….’முரளி சொன்ன மாதிரி நீ ஒரு பெஸ்ட் கம்பானியன் தான்…சமயத்தில் என்னைக் காப்பாத்திட்டேடா……..அதை அன்போடு தடவிக் கொடுத்த போது அவளுக்குக் குழந்தையைக் கொஞ்சுவது போல் இருந்தது.

‘ஜிங்கிலி!…மை பாய்’ என்று அழைத்துக் கொண்டே அன்று மாலை முரளி வந்தபோது, ஜிங்கிலியோடு விளையாடிக் கொண்டிருந்த சீத்தா, அவனுக்கு உலகத்தின் எட்டாவது அதிசயமாகத் தெரிந்தாள்!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *