கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: December 8, 2012
பார்வையிட்டோர்: 16,438 
 
 

எங்கும் மீன்கள் செத்துக்கிடக்க, வறண்டு கருத்த குளம் போலாகி இருந்தது அப்பாவின் முகம். முப்பது ஆண்டுகளாகக் கட்டிச் சுமந்து திரிந்த பொய் மூட்டை ஒன்று அவிழ்ந்து, வீடெங்கும் பொசுங்கிய ரோமத்தின் துர்நாற்றம், முற்றத்தில் நின்ற தூண்களைப்போல நிலைகொண்டு நின்றது. தரைக்குள் முகம் புதைத்துக்கொள்ளும் நெருப்புக் கோழிபோல, முகத்தைத் தொண்டைக்கும், மார்புக்கும் நடுவில் புதைத்துக்கொண்டார் தாத்தா. முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு, வீடு தேடி வந்திருந்த அத்தையையும் மாமாவையும், தாத்தாவும் அப்பாவும் ஏறெடுத்தும் பார்க்கவில்லை.

தாத்தா உட்கார்ந்திருந்த கட்டிலுக்கு நேர் எதிரில்கிடந்த நாற்காலியின் விளிம்பில், மாமா உட்கார்ந்தார். யாரும் உட்காரச் சொல்லாததால், அத்தையே அவரை அதில் உட்காரச் சொன்னதாக சுமதி பிற்பாடு சொன்னாள். நல்ல கறுப்பாக, லட்சணமாக, தீர்க்கமான கண்களுடன், மாமா எல்லோரையும் மாறி மாறிப் பார்த்துக்கொண்டே இருந்தார். கட்டிலுக்கு இடது புறம் இருந்த பழைய ஸ்டீல் சேரில் சாய்ந்து உட்கார்ந்துகொண்டு, வாசலைத் தாண்டி, அதையும் தாண்டி எங்கோ பார்த்தபடி உட்கார்ந்து இருந்தார் அப்பா. நடுக்கூடத்தில், இரண்டு கைகளையும் தரையில் ஊன்றியபடி, தாத்தா வுக்கும் அப்பாவுக்கும் நடுவில், இருவருக்கும் சேர்த்துப் பொதுவாகத் தரையில் விழுந்து கும்பிட்டது அத்தை. ஆதரவாகத் தொட்டுத் தூக்கப் போன அம்மாவின் கையைப் பிடித்து வெடுக்கென இழுத்து, தனக்கு அருகில் தரையில் உட்காரவைத்துக்கொண்டார் அப்பா. கொஞ்ச நேரம் அப்படியே கிடந்துவிட்டு, கூப்பிய கரங்களுடனும் சிவந்து கலங்கிய கண்களுடனும் எழுந்த அத்தை, அங்கேயே மாமாவின் காலடியிலேயேஅமர்ந்து கொண்டது.

”எல்லாம்… மறந்து… எங்கள… ஏத்துக்கணும்… ஒரே… மகளுக்குக்… கல்யாணம் வச்சுருக்கேன்… எல்லாரும்… வந்துரணும்…” – அத்தையின் ஒவ்வொரு சொல்லுக்கும் இடையே, கடந்துபோன ஆண்டுகளின் இடைவெளி கனத்துப் படிந்து இருந்தது. ஒவ்வொரு சொல்லையும், ஒவ்வொரு முகமாகப் பார்த்துச் சொன்னது அத்தை. எங்களுக்கு அத்தை என்று ஒருத்தி இருப்பதும், அப்பா தனியாகப் பிறந்தவர் இல்லை என்பதும் தெரிய வந்த அதிர்ச்சியில் இருந்து, குழந்தைகளாகிய நாங்கள் மீளவே இல்லை.

நான், தம்பி சதீஷ், தங்கை சுமதி மூன்று பேரும் அம்மாவுக்குப் பின்னால் நெருக்கமாக உட்கார்ந்துகொண்டோம். தாத்தா, அப்பா, அம்மா மூவருமாகச் சேர்ந்து, கட்டிக் காத்த பொய் மூட்டை ஒன்று அவிழ்ந்து, அத்தையாக வெளிப்பட்டு நின்றது.


கருகருவென்று சுருட்டையான தலை முடி, திருத்தமான முகவெட்டு, கன்றிப்போன தக்காளிச் சிவப்பில் பேரழகாக இருந்தாள் அத்தை. ”எங்கள ஏத்துக்கிடணும்… எல்லோரும் வந்துரணும்!” என்று சொல்லிவிட்டு, இரண்டாவது முறையும் விழுந்து கும்பிட்டது அத்தை.

”எதுக்கு இப்பிடித் திரும்பத் திரும்ப…” என்று சொல்ல வந்த அம்மாவைத் தனது உதடுகளில் விரல்வைத்து மௌனமாக்கினார் அப்பா. யாரும் எதுவும் பேசவில்லை. திறந்திராத வீட்டுக்குள் அலை அலையாக மௌனம் நுழைந்துகொண்டே இருந்தது. மௌனம் மள மளவென்று நீர் மட்டம்போல ஏறி எல்லோரையும் மூச்சுத் திணறவைத்தது.

”அப்பா… அண்ணே… ஏத்துக்குங்க… ஏதாவது பேசுங்க… எதுக்கு வந்தேன்னாவது கேளுங்கண்ணே… அப்பா… அண்ணே…” என்று குரல்வளை அறுந்துபோகிற மாதிரி தீனமான குரலில், அத்தை சொன்னது எல்லாம், தண்ணீருக்குள் இருந்து கூப்பிட்டது போலாகியது. கரையேறி நின்ற தாத்தாவுக்கும் அப்பாவுக்கும் எதுவும் கேட்கவில்லை. வீடு முழுவதும் நின்று தளும்பிக்கொண்டே இருந்த மௌனத்தின் அலைகள் வெளியேறிய போது, அத்தையையும் மாமாவையும் அடித்துக் கொண்டுபோய் இருந்தது.

மௌனத்தின் கசடுகள், சேறுபோல வீட்டுக்குள் படிந்துவிட, யார் பேசுவதும் குற்றமாகப் பார்க்கப்பட்டது. சிறிய சத்தம் வந்தால்கூட, தாத்தா திடுக் கிட்டுத் திடுக்கிட்டு சுற்றுமுற்றும் மலங்க மலங்கப் பார்த்துக்கொண்டே இருந்தார். முற்றத்துக்குப் போகிற நடை பாதையில் பாய் விரித்துப் படுத்துக் கொண்ட அப்பா, உறங்குவதுபோல் கண்களை மூடிக்கொண்டு, எல்லோரும் மௌனமாக இருக்க வேண்டும் என்ற உத்தரவைத் தனது உடலில் இருந்து வெளியேற்றிக்கொண்டே இருந்தார். எப்போதும் சட்டை உரிக்காத அழுக்குப் பிடித்த பாம்பாக மௌனம் வீட்டை விழுங்கிக்கொண்டே இருந்தது.

அடுத்தடுத்த நாட்களில், கொல்லைப்புறத்தில், கிணற்றடியில், சமையல்கட்டில், மொட்டை மாடி யில் என வேறு வேறு தனிமையான இடங்களைத் தேர்ந்தெடுத்து, அம்மாதான் அத்தையைப்பற்றிய எல்லாச் சேதிகளையும் சொல்லிக்கொண்டே இருந்தாள். அப்பாவுக்கும் தாத்தாவுக்கும் இதுபற்றி எல்லாம் குழந்தைகளுக்கு ஏதும் சொல்ல வேண்டி யது இல்லை என்கிற உறுதியான கொள்கை இருந்தது.

காவல் துறையின், உளவுப் பிரிவில், தலைமைப் பொறுப்பில் இருந்த தாத்தாவைத்தான், ஊரில் நடக்கிற எல்லாவற்றுக்கும் அரசாங்கமே நம்பி இருந்தது. அவருக்குத் தெரியாமல் ஒட்டுமொத்த மாநிலத்திலும், ஒருத்தனும் ஒண்ணுக்குக்கூடப் போக முடியாது என்கிற அளவுக்கு, அவரது ஆட்கள் ‘எல்லாரையும், எல்லாவற்றையும்’ கண் காணித்துக்கொண்டே இருந்தார்கள்.

ஆனால், உள் வீட்டில் ஒரே மகள், பக்கத்தில் இருந்த வேதக் கோயிலில் மணி அடித்துக்கொண்டு இருந்த ‘கோயில் பிள்ளையின்’ ஒரே மகனான சாமுவேல் எட்வர்ட் ராஜகுமாரைக் காதலித்துக் கல்யாணம் பண்ணிக்கொள்வதற்காக, ஒரு விடியற்காலையில் வீட்டைவிட்டு ஓடிப் போனபோதுகூட, மகளை யாரோ கடத்திக்கொண்டு போய்விட்டார் கள் என்றுதான் பதறினார்.

அதிகாலையில், வாசல் தெளிக்கக் கொண்டுபோன ஒரு வாளித் தண்ணீரும், வெளக்குமாறும், கோலப் போடி போட்டுவைத்து இருந்த டப்பாவும் அப்படியே வாசலில் இருக்க, மகள் காணாமல் போனது அவரைக் கலங்கடித்தது. தன்னால் பாதிக்கப்பட்ட யாரோ இதைச் செய்திருக்கக்கூடும் என்றுதான் அவரது போலீஸ் புத்தி கணித்தது. அவரது ஆட்கள் மாநிலம் எங்கும் தேடத் துவங்கி இருந்தார்கள்.

மகள் காணாமல் போனதைவிடவும் மனைவி பதற்றமாகி, வயிறு கலங்கிக் கலங்கி, அடிக்கொரு தரம் கழிப்பறைக்குப் போவதும், கழிப்பறைக்குள் குமுறிக் குமுறி அழுவதும், சமையல் கட்டிலேயே பாய்கூடப் போட்டுக்கொள்ளாமல் தரையில் படுத்து அழுவதும் அவரைப் பெரிதும் நோக வைத்தது.

துயரத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டு, மகன் கனக சபாபதியை மட்டும் மகளின் நண்பர்களது வீட்டில் தேடச் சொல்லிவிட்டு, வீட்டிலேயே இருந்துகொண்டார். ஆடர்லி வாங்கி வந்த காப்பியையும், பலகாரத்தையும் சாப்பிட மறுத்த மனைவியைக் கடிந்துகொண்டு, ”ஏலே… உனக்கு எம் பேர்ல நம்பிக்கையில்ல… பொழுது சாயுறதுக்குள்ள புள்ளயக் கொண்டாந்து உங் கண்ணு முன்னால நிறுத்துறேன். இப்பம் சாப்புடுதியா இல்லையா…” என்றதும், அவரின் அதிகாரத்தின் அருமை பெருமைகளை அறிந்ததினால், கொடுத்ததைச் சாப்பிட்டுவிட்டு, அங்கேயே படுத்துக்கொண்டாள். ”நீங்க சாப்புடலையா?” என்று கேட்டதும், ”குளிச்சுட்டு, சாமி கும் புட்டுட்டுச் சாப்புடுறேன்!” என்றபடி எழுந்து கிணற்றடிக்குப் போனார் கல்யாண சுந்தரம் ஐ.பி.எஸ்!

குளித்து முடித்து ஈரத் துணியோடு பூசை அறைக்கு வந்து, நெல்லையப்பரை மனமார வழிபட்டால், எந்த வழக்கிலும் அவன் துப்புக் கொடுப்பான் என்பது அவரது நம்பிக்கை. அடியும் முடியும் அறியப்படாத எம்பெருமானுக்கு எல்லாத் திசைகளிலும் என்ன நடக்கிறது என்று தெரியும் என்பதால், எந்த வழக்கை, எந்தத் திசையில், எப்படிச் செலுத்துவது என்று, பூஜை நேரத்தில் அவருக்குள் தோன்றுவதை, நெல்லையப்பரே தனக்குக் காட்டுகிற பாதையாகத்தான் கருதிக்கொள்வார். குளிக்கப் போகிறபோதே, ”நெல்லையப்பரே! வழி காட்டுமய்யா… பொம்பளப் புள்ளயப் பத்திரமா பொழுது சாயறதுக்குள்ள வீட்டுக்குக் கொண்டாந்து சேத்துருமைய்யா… நீரு கேக்குற காணிக்கைய உம்ம காலடியில கொண்டாந்து சேக்குறேன்!” என்று மனசுக்குள் கரைந்து, உருகி வேண்டிக்கொண்டார்.

நெல்லையப்பர் அவரை முழுவதுமாகக் கைவிட்டுவிடவில்லை. பூசை அறையில், நெல்லை யப்பர் படத்துக்குக் கீழே, மகள் எழுதிவைத்து விட்டுப்போன கடிதம் கிடந்தது. எல்லாம் தெளிவாகிவிட்டது. மகளைத் தேடுவதை நிறுத்துமாறு தனது ஆட்களுக்கு உத்தரவிட்டார். மகனைத் திரும்ப வரச் சொல்லி, வேலைக்குப் போகச் சொன்னார். மகளின் கடிதத்தை, மனைவி யின் கையில் வாசிக்கக் கொடுத்து, ”உம் மவ செத்துப்போயிட்டா!” என்று சொல்லிவிட்டு ஆபீஸுக்குப் புறப்படத் தயாரானார். ”மத்தியானம் எப்பவும்போல சாப்பிட வர்றேன்… எதையாவது ஆக்கிவை” என்றார்.

கல்யாணியம்மாள் தயங்கித் தயங்கி, ”அறியாத புள்ள… அதுக்காகச் செத்துருச்சுன்னா சொல்றது… எங்கன இருந்தாலும் தேடிக் கூட்டிக்கிட்டு வாங்க” என்றாள்.

”இப்பிடி ஒரு சாதி கெட்ட, ஓடுகாலியைப் பெத்ததுக்கு இந்த வயித்துல கொள்ளிய வெச்சுரலாம்!” என்று மனைவியின் வயிற்றுக்கு நேரே ஐந்து விரல்களையும் ஆயுதம்போல நீட்டினார்.

ஓசையே எழாமல் அழுதுகொண்டே, மீண்டும் அடி வயிற்றைப் பிடித்துக்கொண்டு கழிப்பறைக்கு ஓடினாள் கல்யாணியம்மாள். பெத்த வயிறு பேதலித்தது. அடி வயிறெங்கும், அவரது சொற்களும் விரல்களும் பாதாளக் கரண்டிபோலப் புரண்டது. உஷ்ணமாய்க் குருதி பெருக்கெடுத்துக் கால்களை நனைத்துத் தரை எங்கும் ஓடியது. அறுந்துபோவதற்கே இழுத்துக் கட்டப்பட்ட வீணையின் நரம்புபோல் கால்கள் விறைத்துக்கொண்டு நீண்டன. கழிவறையிலேயே சவமானாள் கல்யாணியம்மாள். கழிவறைக் கதவை உடைத்து, மாலையிலேயே இறுதிச் சடங்குகளை முடித்துக்கொண்டார் கல்யாணசுந்தரம்.

மனைவி செத்ததைவிடவும், மகள் ஓடிப் போனதைவிடவும், ஊரெல்லாம் உளவு பார்த்துச் சொன்ன தனது அதிகாரத்தின் மீது மண் விழுந்தது, அவரை உடுப்பைக் கழற்றித் தூரப் போடவைத்தது. அன்றைக்குத் தலையைத் தொண்டைக்கும் நெஞ்சுக் கும் நடுவில் புதைத்தவர்தான். நிமிரவே இல்லை. அப்பாவும் மகனுமாகச் சேர்ந்து, ‘ஓடிப் போனவளது’ உடைமைகள், நினைவுகள் என எல்லாவற்றையும் தடயம் இன்றி அழித்தார்கள். அப்படி ஒரு பெண் பிறக்கவில்லை என்கிற பொய்யைப் பிறப்பித்து, அதைப் பேணி வளர்த்தார்கள்.

அப்பாவுக்குக் கல்யாணமாகி வீட்டுக்கு வந்த அம்மாவும், அதைச் சேர்த்துக் காப்பாற்றி இருக்கிறாள். பிறந்து வளர்ந்த வீடு தேடி, அத்தையே வருகிற வரை, அந்தப் பொய் மூட்டை அவிழாமல் இருந்தது. இப்போது எல்லாமே அவிழ்ந்து, உடைந்து தெறித்துக்கிடந்தது. இந்தக் கதை எல்லாம் இரண்டு மூன்று நாட்களில் ரகசியமாக அம்மா சொல்லித்தீர்த்தாள்.

வீடு தன்னிலை திரும்பப் பல வாரங்களாகிவிட்டன. ஓடுகிற காலம், தன் காலடியில் அகப்பட்ட எல்லாவற்றையும் அரைத்துத் தேய்த்துக் கூழாக்கி, உருமாற்றி, உருட்டிப் புரட்டி எங்கெங்கோ கொண்டு சேர்த்துவிடுகிறது.

ஒன்பது வருடங்கள் கழித்து இன்றைக்குத்தான், வள்ளியூரில் வேலை பார்த்துக்கொண்டு இருந்த எனக்குத் தங்கை சுமதி போன் செய்தாள். ”அண்ணே… மாமா செத்துப்போயிருச்சாம். அத்தையே போன் பண்ணிச் சொல்லுச்சு. இங்க யாரும் போறதாத் தெரியல. யாராவது போயி, அவளுக்குப் பொறந்த வூட்டுக் கோடி எடுத்துப் போடணும்னு அம்மா சொன்ன துக்கு, ‘எம் பொண்டாட்டி செத்ததுக்குக் காரணமானவ வீட்டு எழவுக்கு, நான் போக மாட்டேன். கனகு, நீ வேணா போய்க்கப்பா’ன்னுட்டார் தாத்தா. ‘உங்க ளுக்கே மக இல்லன்னா, எனக்கு எங்க இருந்து உடம்பொறப்பு வரும்’னு சொல்லீட்டு, அப்பா ஆபீஸுக்குப் போயிட்டாருண்ணே… அங்க இருந்து கயத்தாறு பக்கமா இருந்தா நீ போயிட்டு வாண்ணே!” என்று ஒரே மூச்சாகச் சொல்லிவிட்டு, பதிலுக்குக்கூடக் காத்திராமல் போனைத் துண்டித்தாள் தங்கை. போகணும் என்பதைத் தவிர, வேறு எதுவும் தோன்றவில்லை.

ஆபீஸுக்கு லீவு சொல்லிவிட்டு, டாக்ஸி ஸ்டாண்ட் போய், வழக்கமாக ஆபீஸுக்கு வண்டி ஓட்டும் குருநாதன் அண்ணாச்சியைப் பார்த்து, வண்டி பிடித்தேன். எங்க போகணும், எப்ப திரும்புவோம் என்று கேட்க ஆரம்பித்து, எல்லாம் கேட்டுத் தெரிந்துகொண்ட அண்ணாச்சி சொன்னார், ”அடப் பாவமே… ஒரு மனுஷன் மேல ஒரு மனுஷி ஆசப்பட்டதுக்கா, இம்புட்டுத் துயரம்? அத்தைக்குப் பொறந்த வூட்டுல இருந்து தம்பி மட்டும்தான் போறீங்களா? வெறுங் கையோடு போக் கூடாது. பொறந்த வூட்டுக் கோடின்னு ஒரு புடவை வாங்கிட்டுத் தான் போகணும்!” என்று பாளையங் கோட்டையில் ஒரு பெரிய துணிக் கடை வாசலில் வண்டியை நிறுத்தினார்.

முதன்முறை வீட்டுக்கு வந்தபோது அடர்ந்த செம்மண் நிறத்தில், வெள்ளைப் பூப் போட்ட, உடம்போடு ஒட்டிய ஒரு சேலையை அத்தை கட்டியிருந்தது நினைவுக்கு வந்தது. ஏறக்குறைய அதே வண்ணத்தில், ஏதேதோ கோடுகளும், வட்டங்களுமாகப் போட்ட ஒரு புடைவை அத்தைக்குப் பொருத்தமாக இருக்கும் என்று தோன்றியது.

புடவை வாங்கிக்கொண்டு வந்து காரில் ஏறும்போது அண்ணாச்சி கேட்டார், ”தம்பி… நீங்க போனது நாளைக்கு தாத்தாவுக்கோ, அப்பாவுக்கோ தெரிஞ்சா, என்ன செய்வீக?” ”தெரிஞ்சப்புறம் பார்த்துக்கலாம்!” என்றேன். மலர்ந்து சிரித்து, ”இதுதான் மனுஷங்குறது!” என்றார் அண்ணாச்சி.

கயத்தாறுக்கு நாங்கள் போய்ச் சேர்ந்தபோதுதான், ‘எடுக்க’ நேரம் குறித்து வேலைகள் நடந்துகொண்டு இருந்தன. மாமா வீடு விசாலமாக இருக்க, நடுக் கூடத்தில், தரையில் மாமாவைக் கிடத்தி இருந்தார்கள். வீட்டுக்குள் கூட்டம் நெருக்கி நின்றது. மாமாவின் தலை மாட்டில் தரையைப் பார்த்துக் குனிந்தபடி உட்கார்ந்து இருந்தது அத்தை. பக்கத்தில் மௌனமாகக் கண்ணீர்விட்டபடி இருந்ததுதான் கட்டிக் கொடுத்த மகளாக இருக்க வேண்டும்.

என் ஊகங்களுக்கு நடுவே, ஒரு பெரியவர் ‘எடுப்பதற்கான’ எல்லா வேலைகளையும் சத்தம் போட்டுச் செய்துகொண்டு இருந்தார். எல்லா இழவு வீடுகளிலும், இந்த நடைமுறை களை யாராவது வயசாளியே எடுத்துப் போட்டுக்கொண்டு செய்வது, மரணத்தை எதிர்கொள்ளப்போகும் துணிச்சலா, அச்சமா, அல்லது தன்னை எடுக்கிறபோது என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று கற்றுக்கொடுப்பதா என்பது புலப்படவில்லை. ஈவு இரக்கம் இல்லாத ஆள் மாதிரிதான் பெரிசு பேசிக்கொண்டும், நடந்துகொண்டும் இருந்தார்.

மாமாவின் தலைமாட்டில் போய் நின்று கொண்டு, எல்லாரையும் ஒரு சுற்று பார்த்து விட்டுப் பெரிசு சத்தமாகக் கேட்டது, ”அந்த அம்மாவுக்குப் பொறந்த வூட்டுக் கோடி யாரு போடுறா?” அவர் குரல் முடிவதற்குள் ளேயே, ”பத்து முப்பது வருஷமா அவுக யாரும் போக்குவரத்துக் கிடையாது!” என்றது ஒரு குரல். சொன்னது யார் என்று கண்டறிவதற்குள், ”அப்ப சம்பந்தி வீட்டுல கோடி போடுறாங்களா?” என்றார் பெரிசு. குருநாதன் அண்ணாச்சி என் காதருகே வந்து, ”பொறந்த வூட்டுக் கோடி கொண்டாந்துருக்கமின்னு சொல்லுங்கப்பா!” என்றார்.

சொல்ல விரும்பியும் சொல்ல இயலாது திகைத்து நின்ற தருணத்தில் அண்ணாச்சியே பெருங் குரலெடுத்து, ”தம்பி… பொறந்த வூட்டுக் கோடி கொண்டாந்திருக்கு!” என்றார்.

அறை எங்கும் பரவிக்கொண்டு இருந்த சின்னச் சின்ன ஓசைகள் அடங்கி, கண் இமைக்கும் நேரத் துக்கும் குறைவான நொடியின் இடைவெளியில் மௌனம் வெடித்துக் கிளம்பியது. எல்லோரும் அண்ணாச்சியைத் திரும்பிப் பார்க்க, ஏதும் பேசாமல் என்னைத் தோள் தொட்டு ஆதரவாக முன்னே நகர்த்தினார் அண்ணாச்சி. கூட்டம் தன்னிச்சையாக விலகி, உருவாக்கிய வழிக்கு நேர் எதிரில், அத்தை நிமிர்ந்து என்னைப் பார்த்தது.

இரண்டு கைகளையும் கழுத்து வரை உயர்த்தி, கைகளைச் சேர்க்காமல் வணங்கினேன். எல்லா வற்றையும் உணர்ந்துகொண்டதான பாவனையில், மெள்ளத் தலையசைத்துத் தன்னருகே வருமாறு கூப்பிட்டது அத்தை. அத்தையை நோக்கி நகர்ந்து, பைக்குள் இருந்த புடவையை எடுத்த கணத்தில், ஏதோ ஒரு கை பையை என்னிடம் இருந்து ஆதர வாக வாங்கிக்கொண்டது.

இரண்டு கைகளாலும் கனத்த புத்தகம்போல புடவையை ஏந்திக்கொண்டு, குனிந்து அத்தைக்கு முன்பாக நீட்டினேன். இழந்த அன்பை முழுவதுமாக அன்றே யாசித்துப் பெறுவதுபோல, இரண்டு கை களையும் நீட்டிப் புடவையை வாங்கியது அத்தை. ஈரம் இன்றிக் குளிர்ந்துகிடந்தது அத்தையின் கைகள். புடவையைத் தன் மார்பில் ஒத்தி எடுத்து, மடியில் போட்டுக்கொண்டது.

இரண்டு அடி தள்ளி நின்ற என்னை மீண்டும் நிமிர்ந்து பார்த்து, இன்னும் அருகே வருமாறு தலையசைத்து அழைத்தது அத்தை. நெருங்கிய கணத்தில், என் இரண்டு கால்களையும் கட்டி, இறுக்கமாக அணைத்துக்கொண்டு, எல்லோரும் திகைத்துக் கண் கலங்க, பெருங்குரலில் கதறியபடி அத்தை கூப்பிட்டது… ”யண்ணே..!”

– மே 2011

Print Friendly, PDF & Email

1 thought on “கோடி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *