இதுவும் ஒரு (சிறு) கதை

2
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: March 3, 2013
பார்வையிட்டோர்: 14,515 
 

“ஒரு சிறுகதை வேணும்பா, பிச்சைக்காரங்க வாழ்க்கைய மையமா வச்சு, நாலு நாள்ல, முடியுமா?” என்று ஆனந்தம் நாளிதழ் சண்முகம் கேட்டபோது எனக்கு அவள்தான் நினைவுக்கு வந்தாள்.

“உண்மைக்கதையா இருந்தா இன்னும் நல்லா இருக்கும்” என்று அவர் மேலும் கூறியபோது, அவளைவிட்டால் இதற்கு வழியே இல்லை என்று தோன்றிற்று. “சரி சார் முயற்சி பண்றேன்” என்று போனை வைத்துவிட்டு சிந்திக்கலானேன்.

நான் சென்னைவாசி. என் முதல் காதல் இரயில் பயணம். நகர பேருந்துகளை நரகத்தின் கூடாரமாகத்தான் பார்ப்பேன். இரயில் போகாத சென்னையின் பகுதிகளுக்கு, நான் அவ்வளவாக சென்றது கூட கிடையாது. தி.நகரில் என் ஜாகை என்பதால், மாம்பலம் இரயில் நிலையம் எனக்கு இன்னொரு வீடு.

தினம் மேன்சனலிருந்து கிளம்பி, ரங்கநாதன்தெரு வழியாக இரயில் நிலையத்தை அடைந்து படிகட்டுகளில் ஏற ஆரம்பித்தால் இருபக்கமும் வரிசையாக பிச்சைக்காரர்கள் “அய்யா” என்று தட்டை நீட்டியபடி கெஞ்சுவார்கள். நான் ஒருநாள் கூட தர்மம் செய்ததே கிடையாது. ஆனாலும், ஏனோ அவர்கள் தினமும் என் கவனத்தை ஈர்க்க பேராடும்போது, என் பார்வை மேல்படிக்கட்டில் கடைசியாக உட்கார்ந்திருக்கும் அவளை நோக்கித்தான் செல்லும்.

அவளை எப்போதிலிருந்து நான் கவனிக்க ஆரம்பித்தேன் என்பது நினைவில்லை. அவள் எப்போதுமே என்னையோ, மற்றவர்களையோ காசு கேட்டு இம்சைப்படுத்தியதே இல்லை. ஒருபோதும் தன்னை பரிதாபமாக காட்டிக்கொள்ளவேமாட்டாள். “போட்டா போடு இல்லாட்டி போ” என்பது போல் திமிராகத்தான் அமர்ந்திருப்பாள். அவளை தினமும் கவனிக்க ஆரம்பித்ததற்கு இதுகூட காரணமாக இருக்கலாம்.

மாநிறம், ஒடிசலான நொடித்து போன உருவம், முகத்தில் உள்ள சுருக்கங்களில் ஊர்ந்து பார்த்தால், அவளின் கடந்த கால அழகின் மிச்சங்கள் தெரியும். பக்கத்தில் இரண்டு சிறிய மூட்டைகள், அது துணியாகத்தான் இருக்கவேண்டும். சிலசமயம் மூட்டைக்குள் மது பாட்டில்களும் இருக்கும். நான் பார்க்கும் போதெல்லாம், ஒரு நாயும் அவள்கூடவே இருக்கும். எப்போதோ அவளைக் கடக்கும்போது நாயை “மணிக்குட்டி” என்று கொஞ்சியதாக நியாபகம். நான் இரவுநேரங்களில் வரும்போது பெரும்பாலும் அவளும், மணியும் தூங்கிக்கொண்டிருப்பார்கள். அவள் ஏதோ ஒருவிதத்தில் மற்றவர்களிடமிருந்து தனித்து தெரிந்தாள், அது என்னவென்று சரியாக என்னால் சொல்லமுடியவில்லை. இவளின் கதை நிச்சயம் சுவாரஸ்சியமாகத்தான் இருக்கும் என்ற நம்பிக்கையும், அதை தெரிந்து கொள்ளும் ஆர்வமும், அவளை பார்க்கும்போதெல்லாம் மனதில் எழுந்ததை என்னால் தவிர்க்கமுடியவில்லை.

இன்று அதற்கான நாள். ஆனால் எப்படி பேசுவது என்றுதான் பிடிபடவில்லை. உதாசீனப்படுத்திவிடுவாளோ என்ற தயக்கம் நிறையவே இருந்தது எனக்குள். தயக்கத்தை விட நீண்டநாள் ஆர்வம் அதிகமாக இருந்ததால், சரி ஒருமுறை முயற்சி செய்துதான் பார்ப்போமே என்று முடிவெடுத்து கிளம்பினேன்.

இரயில் நிலையத்தை அடைந்து மேல்படியைப் பார்த்தபோது அவளையும், மணியையும் காணவில்லை. காத்திருக்கும் நேரத்தில், பதற்றத்தை குறைப்பதற்காக ஒரு சிகரெட்டை பற்ற வைத்துக்கொண்டேன். பாதி சிகரெட்டிலேயே அவள் வந்துவிட்டாள். மணி அவள்முன் குரைத்துக் கொண்டே வந்தது. அப்பொழுதுதான் எனக்கு தெரிந்தது, அவளால் சரியாக நடக்கமுடியாது என்பது. மிகவும் தாங்கி, தாங்கி நடந்து, என்னைத் தாண்டி, மெதுவாக படியேறி அவள் அமரந்தபோது, என் சிகரெட் முடிந்திருந்தது. படிகளில் ஏறி அவளை மெல்ல கடந்து சென்றுபார்த்தேன், அவள் வழக்கம்போல் என்னைக் கண்டுகொள்ளவே இல்லை. சற்று ஒதுங்கி நின்று என்ன செய்யலாம் என்று யோசித்துக்கொண்டேஇ அவளைப் பார்த்தபோது மணி என்னை முறைத்து கொண்டு இருந்தது. சரியென்று மனதைத் திடப்படுத்திக் கொண்டு விறுவிறுவென்று சென்று அவள் பக்கத்தில் உட்கார்ந்து விட்டேன்.

மணி உச்சக்கட்ட எரிச்சலுடன் என்னைப்பார்த்து குரைக்க, அவள் திரும்பி “என்ன?” என்று முறைப்பாய் கேட்டாள். நான் பதில் சொல்ல முயல்வதற்குள் மணியை சமாதானப்படுத்த திரும்பிவிட்டாள். எங்களை கடந்து செல்பவர்கள் எல்லாம் ஒரு மாதிரியாக என்னைப் பார்த்தது, என்னவோ போல் உறுத்தியது.

மணியைச் சமாதானப்படுத்திவிட்டு திரும்பியவள், “யார் நீ? என்ன வேணும்?” என்றாள். “நான் ஒரு எழுத்தாளன்…” என்று அறிமுகப்படுத்த முயலும்போதே, அதுக்கு இப்ப என்ன என்பது போல் ஒரு பார்வை பார்த்தாள். நான் இடைவிடாது “கதையெல்லாம் எழுதுவேன்இ உங்க வாழ்க்கையை சொன்னா கதையா எழுதி பத்திரிக்கையிலே போட்டு…” என்று இழுக்கும் போது “போட்டு இன்னா பண்ண போற” என்றவள்இ மணியை தலையில் தடவிக் கொடுக்க ஆரம்பித்தாள். எனக்கு உடனே பதில் கூற வரவில்லை. அவள் ஸ்பரிசம்பட்டப் பிறகு மணி என்னைப் பார்த்து கோபப்படவில்லை, அமைதியாக நடப்பதை வேடிக்கைப் பார்த்து கொண்டிருந்தது. கொஞ்சம் யோசித்து “புத்தகத்துல போட்டா மக்கள் தெரிஞ்சுவாங்கள்ல” என்று சம்மந்தம் இல்லாத ஒரு பதிலைச் சொன்னேன். அதை அவள் காதில் வாங்கியதாககூட எனக்கு தோன்றவில்லை.

சிறிதுநேரம் யோசித்துக்கொண்டே இருந்தவள் “எவ்ளோ தருவ?” என்றாள். எனக்கு சந்தோஷமாகவும், ஆச்சரியமாகவும் இருந்தது. “ஐம்பது ரூவா வேணும்” அவளே சொன்னாள். இவளும் யாரிடமாவது தன் கதையைச் சொல்ல வேண்டும் என்றுதான் காத்திருந்தாள்போல என்று நினைத்துக்கொண்டே, பாக்கெட்டிலிருந்து ஐந்து பத்து ரூபாய் நோட்டுகளை எடுத்து கொடுத்தேன். அதை வாங்கி நேர்த்தியாக மூட்டைக்குள் சொருகிய போது, இவள் பிச்சை வாங்கத்தான் தயங்குகிறாளே தவிர கூலி வாங்க அல்ல என்ற வேறுபாட்டினை புரிந்துக்கொண்டேன். “என் கதையை இன்னான்னு சொல்றது” என்று பெருமூச்சு விட்டவள், முதல் முறையாக இருமினாள். அதன்பிறகு நான் விடைபெறும் வரையிலும் இடையிடையே இருமிக் கொண்டேதான் இருந்தாள். சொல்லத் தொடங்கினாள், மணியும் நானும் அவள்மீது பார்வையை வைத்து கேட்க ஆரம்பித்தோம்.

“நான் பொறந்தது, வளர்ந்தது எல்லாம் இந்த மாம்பலம் ரயில்வே டேஷன்லதான், நாப்பத்திஎட்டு வருஷத்துக்கு முன்னே” என்று வயதோடு அறிமுகம் கொடுத்தாள். “அன்னிக்கு இருந்த ஆம்பிளைல்ல ஒருத்தன்தான் என் அப்பன், அதவுட்டா அவனைப் பத்தி வேரேதும் தெரியாது எனக்கு” என்று அப்பாவிற்கு அறிமுகம் கொடுத்தவள். “அவன நான் பார்த்ததே கிடையாது” என்று சொல்லும்போது முகத்தில் ஏக வெறுப்பு.

“எனக்கு விவரம் தெரிஞ்சப்ப நான், அம்மா, அப்பாலே மணி மட்டும்தான் இருந்தோம்”. நான் படுத்திருக்கும் மணியைப் பார்த்தேன். அவள் சிரித்துக் கொண்டே “அது இந்த மணி இல்ல, என் அம்மா வளத்த இன்னொரு நாய் மணி” என்று விளக்கம் கொடுத்தாள். “என் அம்மா கருப்புதான், ஆனா அழகா இருப்பா, நானும் அழகாத்தான் இருப்பேன். இப்பதான் இப்படி இருக்குறேன். என் அம்மா முகம் கூட இப்ப எனக்கு கரீக்டா நியாபகம் வரமாட்டேங்குது” என்றாள் ஏதோ யோசித்தபடியே.

“அதோ..” என்று கைகாட்டி “அந்த டேஷன் போர்டு நிக்குது பாரு, அதுக்கு கீழேதான் அப்போ எங்க வூடு” என்றாள் பெருமையாக. நான் அங்கே பார்த்தபோது அவள் வீட்டில் ஒரு காதல்ஜோடி மும்முரமாக பேசிக்கொண்டிருந்தனர். சட்டென்று கவனத்தை திருப்பினேன்.
“அப்பன் இல்ல, சோத்துக்கு? ரயில்ல பாடி பிச்சையெடுத்துதான் துண்ணனும். அம்மா நல்லா பாடுவா, அது எப்புடின்னு எனக்கு தெரியாது. அது இன்னா பாட்டு. இறைவன் … படைத்த …. மனிதன் வாழுகிறான்” நான் தெரியவில்லை என்பது போல் தலையாட்டினேன். “அந்த பாட்டை பாடுனா எல்லார் கண்ணுலயும் தண்ணி வந்துரும், அவ்வளோ கணீர்ன்னு பாடுவா” என்று அம்மாவைப் பற்றி கண்கள் மிளிர சொன்னாள்.

“அப்போல்லாம் இவ்வளோ ரயிலு கிடையாது, கூட்டம் கிடையாது. காலிலே நாஷ்டா துண்ணுட்டு ரயிலு ஏறினா, பாடிக்கினே தாம்பரம் போயி ரிட்டன் வர மத்தியானம் ஆயிறும். துண்ணுட்டுஇ சாயங்காலம் ஒரு தபா அவ்ளோதான்” நான் கேட்டுக்கொண்டே இருந்தேன்.

“அம்மா என்னதான் நல்லா கணீர்ன்னு பாடுனாலும், யாரும் காதுலேயே வுழுவாத மாறி உட்கார்திருப்பான்க அம்மா அவனுக கையைப் பாத்தா, நான் அவனுக மூஞ்சியைத்தான் பாப்பேன்”.

“ரயில்ல பாடிகின்னு போறப்ப, என் வயசு புள்ளைகலாம், இன்னன்னவோ துண்ணுறத பாக்க ஆசையா இருக்கும். ஆனா அத்தோட அதை மறந்துறுவேன். தினம் எட்டணா கிடைச்சுதுன்னா அப்போ பெரிய விஷயம். எங்க வூட்லயே, அதான் டேஷன் போர்டுக்கு கீழேயே பொங்கி துண்ணுக்குவோம். டேஷன் மாஸ்டர் ரொம்ப நல்ல மனுஷன், ஒன்னியும் சொல்ல மாட்டாரு. அம்மா அவளுக்கு துண்ண இல்லேனா கூட எனக்கும், மணிக்கும் வயிறு முட்ட துண்ணக் கொடுப்பா. பசின்னா இன்னான்னே தெரியாது” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே மணி சட்டென்று எழுந்துவிட்டது. பேச்சை நிறுத்தியவள் “என்னடா மணி? என்ன கண்ணு? ஒன்னுக்கு போவுனுமா?” என்று கேட்டாள்.

ஏதோ தோன்றியவளாய் என்னை திரும்பி பார்த்து “நான் ஏன் மணியை வளத்துக்கின்னு இருக்கேன்னு தெரியுமா?” என்றாள், “தெரியலை” என்றேன.; “அப்பாலே சொல்றேன்”இ சிரித்துக்கொண்டே சொன்னாள். அதற்குள் மணி கிளம்பிவிட்டது.

“டேய் மணி போயிகின்னு சீக்கிரம் வரனும்டா, அம்மாவ தேடிக்கின்னு வரவைக்காத” என்று பிள்ளையை அனுப்புவது போல் வாஞ்சையோடு அனுப்பியவள், என்னிடம் திரும்பி “மணி ரொம்ப டிஜெண்டு, எம் புள்ள மாதிரி, அவ்ளோ இஷ்டம், என் கைல. அந்த மணியும் அப்படிதான். என்கைல, அம்மாகைல, அவ்ளோ இஷ்டமா கடப்பான். நாங்க ரயிலு ஏறினா, திரும்பி வரவரைக்கும் வூட்டுலேயேதான் கடப்பான். எச்சிசோறு துண்ணமாட்டான், அம்மா போட்டாதான் தும்பான்” என்றெல்லாம் அந்தகால மணியைப்பற்றி அடுக்கிக்கொண்டே போனாள். அது வியப்பாகத்தான் இருந்தது, எனக்கு.

மணிப்புராணம் ஒரு வழியாக முடிந்ததும் மறுபடி விட்ட இடத்திற்கு வந்தாள். “அப்போ எனக்கு பத்து வயசுன்னு நினைக்கிறேன். ஒரு நாள் எப்பவும் போல நானும், அம்மாவும் ரயிலு ஏறினோம். பாடிக்கின்னே இருக்கிறப்போ, அம்மா மயக்கம் வர்ற மாறி இருக்குன்னு சொல்லிக்கினே கீழே வுழுந்துட்டா. எனக்கு ஒன்னும் புரில, எப்படியோ அங்க இருந்தவனுங்க எல்லாம், தெளிய வச்சு வூட்டு டேஷன்ல இறக்கிவுட்டுடானுங்க. அம்மா அன்னிக்கு பூரா சாயங்காலம் வரைக்கும் தூங்கின்னே இருந்தா. சாயங்காலம் எந்திரிச்சி கைல பத்து காசு குடுத்து போய் இட்லி வாங்கி நீயும், மணியும் துண்ணுங்கன்னா. அம்மா இத்தூணுன்டு இட்லி துன்னா, அப்பாலே அதையும் வாந்தி எடுத்துட்டா. அது என்ன நோவுன்னு எனக்கு தெரில, டாக்டராண்டே போனும்னு அறிவும் இல்ல, காசும் இல்ல. மறுநாளும் அம்மா முழிக்கவே இல்ல, காலைலே அதேமாறி கடைல இட்லி வாங்கி துண்ணோம், அம்மா எனக்கு வேணா ன்ட்டா. நானும், மணியும் விளையாடிகின்னு இருந்தோம்” அவள் சொல்லிக்கொண்டே போனாள், நான் குறுக்கிடவேயில்லை.

“கொஞ்ச நேரம் கயிச்சு அம்மா எந்திரிச்சா, என்னான்ட “அம்மாடி காசு இல்லடா, நீ போயி பாடி துட்டு சேத்துக்கின்னு வர்றியாடா, அம்மாக்கு வர முடிலடா ன்னா”. நான் அப்ப கட்டை தட்டிகினே பாடுவேன். சரிம்மான்னு கிளம்பிட்டேன். அம்மாக்கு தான் என்னை தனியா அனுப்ப பயம், ஐம்பது தபாவது தூக்கத்திலியே சொல்லியிருப்பா “பாத்து போயிகின்னு வாடான்னு”. எனக்கும் முதல் தபா தனியா போவ பயமாதான் இருந்துச்சு. பரவால்லை, போயிகின்னு வந்தராலம்னு மணி கைல அம்மாவ பாத்துக்க சொல்லிட்டு ரயிலு ஏறிட்டேன். அம்மா அப்ப தூங்கிட்டா”.

“பதினைஞ்சு பைசா துட்டும் சேர்ந்துடுச்சு, ஆசையா அம்மாகிட்ட காட்டாலாம்னு தூக்கின்னு வூட்டுக்கு ஓடியாந்தா, அம்மாவ காணும் மணியையும் காணும். ஒரே குழப்பமா இருக்குது. அங்க இங்க தேடுனா, டேஷனுக்கு இந்த பக்கம் மணி கத்திக்கின்னு நிக்றான். ஓடிபோய் படியேறி பாத்தா, இப்பவும் கண்ணுலேயே நிக்குது”. சிறிதுநேரம் சிந்தித்தப்படி இருந்தவள் “அம்மாவ ஒரு மீன்பாடி வண்டிலே புடவையை சுத்தி படுக்க வச்சிறுக்கானுங்கோ. எனக்கும் ஒன்னும் புரில, வண்டி உசரத்துக்கும் கம்மியாத்தான் நான் இருக்கேன். அம்மா! அம்மா! ன்னு கால புடிச்சு ஆட்றேன், மணி ஒரு பக்கம் கத்திகின்னு இருக்கான்;. அப்ப பீடி வழிச்சுக்கின்னே ஒருத்தன் என் கைல வந்து “என்ன?” ன்னான் “அம்மா!” ன்னேன். “அம்மால்லாம் இல்ல போ போ!” ன்னு விரட்டினு வண்டி இழுத்துக்கின்னு போவ ஆரம்பிச்சான்.

“நானும், மணியும் அழுதுகின்னே பின்னாடி ஓடறோம். கொஞ்ச தூரம் போயிருப்போம், வண்டியே நிறுத்திட்டு பின்னால வந்தான், என்னை முறைச்சு பாத்தான். “அம்மான்னு” கைகாட்டி அழுதுகின்னே சொன்னேன். “அம்மா செத்துபோச்சு, இங்கெல்லாம் வரக்கூடாது , வூட்டுக்கு போ” ன்னான். எனக்கு செத்து போச்சுன்னா இன்னான்னே தெரில, திரும்ப அம்மான்னு அழவுறேன். அவனுக்கு அப்ப இன்னா கோவம் வந்துதுன்னு தெரில, வுட்டான் ஒரு அறை கன்னத்துல கலங்கி போயி மயக்கம் வந்துருச்சு, அப்பாலே அம்மா!ன்னு கூட கத்த முடில. அப்படியே ரோட்டுல உக்காந்டேன். அவன் அம்மாவ கொண்டு போயிட்டான், மணி பின்னாலயே கத்திகினு போனான். அதான் மணிய நான் கட்சியாப் பாத்தது. அப்பால மணி எங்க போனானே தெரில”

“அழுதுகின்னே வ+ட்டுக்கு வந்தா, பொங்குற பாத்திரம் ஒன்னுத்தக்கூட காணும். எவன் எடுத்தான்னே தெரில, மூட்டைங்க மட்டுந்தான் கடந்துச்சி. அப்பவும், நான் அம்மா திரும்ப வந்துறுவான்னுதான் நினைச்சிகின்னு இருக்குறேன். அவ திரும்ப வரவே மாட்டான்னு அப்ப எனக்கு தெரில. அழுது, அழுது அப்படியே தூங்கிட்டேன். முழிச்சப்ப சாயங்காலம் வூட்ட போய் பாத்தேன், அம்மா வரல, ஆனா வயித்துல பசி வந்துடுச்சி. அந்த பதினைஞ்சு பைசாவ எங்க வுட்டேன்னு தெரில. வயித்த புடிச்சிகின்னே நிக்கறப்ப, இட்லி கட நியாபகம் வந்துச்சு. இட்லி வோணும்னா துட்டு வோணும், துட்டுக்கு? ரயிலு வந்தது, கட்டைய தட்டிக்கின்னே ஏறிட்டேன். எப்போதும் நாங்க பாடுறதுதான், எவனுக்கும் கேக்காது, ஆனா அன்னிக்கு மட்டும் நான் பாடுனது எனக்கே கேக்கல” என்று நிறுத்தியபோது அவள் சலனமே இல்லாமல்தான் இருந்தாள், நான்தான் இறுக்கமாக இருந்தேன்.

அதன் பிறகு, அவள் வாழ்க்கையைப் பற்றி சொன்ன எதுவுமே என் மனதில் பதியவில்லை. ஏன், அதை சரியாக நான் காதில்கூட வாங்கவில்லை காரணம் நாம் தினம் தினம் பார்க்கும் கேட்கும் சங்கதிகள்தான் அவை. இந்த நாட்டில் ஒரு ஏழை அபலைப் பெண்ணுக்கு என்னவெல்லாம் நடக்குமோ, அதில் ஒன்றுவிடாமல் அவள் சொல்லிக் கொண்டிருந்தாள். என் மனமோ அவள் அம்மாவின் இறப்பையே நினைத்துக் கொண்டிருந்தது. ஒரு வழியாக அவள் கதையை முடிக்கும்போது மணி வந்துவிட்டான் “மணிகுட்டி போயின்னியா” என்று கொஞ்சினாள். நான் மணியைப் பார்த்தேன். எனக்கு அந்தகால மணிதான் நினைவுக்கு வந்தான்.

“இப்பல்லாம் உடம்பு ரொம்ப முடில, நடக்ககூட முடில, ஆஸ்பத்திரில மருந்து வாங்கி குடிக்கிறேன். ஆனா ஒன்னும் கேக்கமாட்டுகுது” என்றபோது பலமாக இருமினாள். “கடைசி காலத்துல அம்மா வூட்டுகே போயிடலாம்னு இருக்கேன்”, நான் சரி என்பதுபோல் தலையாட்டினேன். “சாவு எப்போ வரும்னு தெரில, அம்மா உசிருவுட்ட இடத்திலேதான் உசிரவுடனும். நான் மண்டயப் போட்டா ஆரு அழுவப் போறா, நானே அழுதாதான் உண்டு” வெறுமையுடன் சொன்னாள். “என் அம்மா சுடுகாட்டுக்கு போனப்ப, நானும், மணியும் பின்னால போனோம். நான் போறப்ப இந்த மணிமட்டும் தான் வருவான்” என்றவள் என்னை உற்று பார்த்தாள். நான் என்னில் தோன்றிய எந்தவொரு உணர்ச்சியையும் முகத்தில் காட்டிகொள்ளவில்லை.

“நான் மணிய வளக்கிறதுக்கு இன்னொரு விஷயம் இருக்குது,” புதிர்போட்டாள். எனக்கு சில வினாடிகள் கழித்துதான் நினைவுக்கு வந்தது அவள் முன் பதில் சொல்வதாக சொன்ன கேள்வி. “என்ன அது?” என்றேன். “என் அம்மா உசிரவுட்டப்ப, நான் ரயிலுக்கு பூட்டேன். யாருக்கும் தெரில. மணிதான் கத்திக்கி;னே கடந்துக்கிறான். அதபாத்துதான் ஜனங்க வந்து பாத்துறுக்குதுங்க. நானே அம்மாக்கிட்ட இருந்திருந்தாலும், தூங்கிக்குன்னுதான் இருக்குறான்னு அந்த வயசுல நினைச்சிருப்பேன். மணிக்கு அவ்ளோ அறிவு. அவன் மட்டும் கத்தி ஊர கூட்டலைன்னா, “வெயில கடந்து பாடி நாத்தம் அடிச்சிறுக்கும்னு,” அப்பால டேஷன் மாஸ்டர் கூட்றவ கைல சொல்லிக்கினு இருந்தாரு”. ஒரு பெருமூச்சு விட்டவள், “நாளைக்கு நான் பூட்டாலும், இவன்தான் முதல்ல ஊருக்கைல சொல்லுவான். உசிரோடயே இவ்ளோ நாறிப்போயிட்டேன் என் புணமாவாவது நாறாம மணிதான் பாத்துக்கனும்” என்று துளிக்கூட உணர்ச்சிகள் இல்லாமல் சொன்னபோது. என் கண்களில் அவளுக்கான நீர்த்துளிகள் உருண்டுக்கொண்டிருந்தன.

விடைபெறும்போது நாளிதழ் பெயர், என்றைக்கு கதைவரும், எவ்வளவு விலை, எல்லா விவரங்களையும் கேட்டு கொண்டவள். என் பெயரை மட்டும் கேட்கவில்லை, நானும் அவள் பெயரை கேட்கவேயில்லை. எழுந்திருக்கும்போது மணியைப் பார்த்தேன், அவனும் சலனமில்லாமல் படுத்துக்கிடந்தான். அவனுக்கிருக்கும் கடமைகள்தான் என் நினைவிற்கு வந்தன. திரும்பி மேன்சனுக்கு நடந்து வருகையில், அவளுக்கு இன்னும் ஏதாவது உதவியிருக்கலாமோ என்ற எண்ணம் வந்தது. இரண்டு நாட்களுக்கு அவளின் வாழ்க்கை என்னைப் பாதித்துக் கொண்டிருந்தது. ஆனால் அவள் கதையை எழுத தோன்றவேயில்லை. சண்முகத்திற்கு போன் பண்ணி “முடியாது சார்” என்று கூறிவிட்டேன்.

இரண்டு நாட்கள் கழித்து ரயில் நிலையம் சென்றபோது அவள் தன் இருப்பை பழைய அம்மா வீட்டிற்கே மாற்றியிருந்தாள். “உன் கதை புத்தகத்துல வரும்” என்று அவளை ஏமாற்றியதும், அவளின் மிகப்பெரிய பத்து ரூபாயை நாளிதழ் வாங்க வைத்து வீணடித்திருப்பேன், என்ற குற்ற உணர்ச்சியும் என் மனதில் வந்ததால், அதன்பிறகு அவளை நான் கவனிப்பதைக்கூட விட்டுவிட்டேன்.

ஒரு வருட காலம் உருண்டுவிட்டது, எப்போதாவது என் நினைவில் வருவாள். உடனே மறந்துவிடுவேன். இன்று ஞாயிற்றுகிழமை, காலை நண்பரைப் பார்க்க குரோம்பேட்டை செல்லவேண்டியிருந்தது. கிளம்பி மாம்பலம் இரயில் நிலையம் படிக்கட்டுகளில் ஏறும் போது, ஏதோ நினைவு வந்தவனாய் அவள் வீட்டை நோக்கி பார்த்தேன். ஒரு பத்து நபர்கள் வீட்டைச் சுற்றிலும் நின்று கொண்டிருந்தனர். மனதை ஏதோ ஒன்று இறுக்க, அவள் வீட்டை நோக்கி நடக்கலானேன். வீட்டை நெருங்க, நெருங்க மணியின் சத்தம் அதிகமாகிக் கொண்ட போனது விஷயம் புரிந்துவிட்டது. கூட்டத்தை விலக்கி பார்த்தபோது, மணி அடிவயிற்றிலிருந்து குரைத்துக் கொண்டிருந்தது. “அவள் கதையை எழுதி அவளுக்கு சமர்ப்பிக்கவேண்டும், அவள் பெயரை கடைசிவரை கேட்கவேயில்லேயே, இனி நாம்தான் மணியை வளர்க்க வேண்டும், அவளிடம் பேசிய நிமிடங்கள்” என்று எண்ண அலைகள் என் மனதை துவம்சம் செய்துக் கொண்டிருந்தன. ஆனால் என் முகத்தில் எந்த உணர்ச்சியும் தோன்றியது போல தெரியவில்லை.

மணியைப் உற்று பார்த்தேன் அவனும் என் போல்தான், எந்த சலனமும் இல்லாமல் நின்றுக் கொண்டிருந்தான். அது அவளிடமிருந்து அவனும், நானும் கற்றுக்கொண்டது. மணி முதல் கடமையை சரியாக முடித்து விட்டான், அவனின் இரண்டாவது கடமைகளில் எனக்கும் பங்கு உண்டு என்று அந்த வினாடி தோன்றியது. இப்போது அவளின் இறுதி ஊர்வலத்தில் நானும், மணியும் மட்டும்.

Print Friendly, PDF & Email

2 thoughts on “இதுவும் ஒரு (சிறு) கதை

  1. உங்களது இணையதளத்தில் உள்ள சிறு கதைகள் அனைத்து மிகவும் சிறப்பாக உள்ளது. நான் சமீபத்தில் குழந்தைகளுக்கான சிறுகதைகள் பற்றி தேடி கொண்டிருக்கும் போது http://www.valaitamil.com/kids_kids-stories என்ற இணையதளத்தை பார்த்தேன். அதில் சிறுகதைகளின் அறிய தொகுப்புகள் கொடுக்கப்பட்டிருந்தது.

  2. மனதை உருக்குகிறது.எப்போதும் நாம் சலனமில்லாமல் கடக்கும் மனிதர்களின் வாழ்க்கை நம்மை குற்றவாளியாக்குகிறது. நன்றி..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *