(ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 04 | அத்தியாயம் 05 | அத்தியாயம் 06
சேரமானிடம் அருள்மொழி வர்மரின் இலச்சினையைக் காட்டிச் செய்தியைத் தெரிவித்து அரச முத்திரை இடம் பெற்றிருந்த ஓலையையும் அளித்தான் சிவலோக நாதன். பாஸ்கர ரவிவர்மனின் நன்றியையும் வாழ்த்தையும் பெற்றுக் கொண்டான். அருள்மொழி வர்மர் அனுப்பிய பரிசுகளை ஏற்று ஓலையைப் படிக்கச் செய்து அகமும் முகமும் மலர தூதனைப் போற்றிய சேரமான், “சிவலோக நாதா! சேர நாட்டின் விருந்தோம்பலைச் சில காலம் இங்கிருந்து நீ ஏற்க வேண்டும். ஓய்வு கொள்ளவும் வேண்டும். அதற்குள் சோழச் சக்கரவர்த்திக்கு எமது பரிசுகளையும் பதிலையும் ஆயத்தம் செய்கிறேன்” என்றான். “வஞ்சி நகரின் செல்வச் செழிப்பினை நீ காண வேண்டாமா? இங்குள்ள பலவித அங்காடிகளை நீ பார்க்க வேண்டாமா? முத்தும் பவழமும் தந்தத்தாலான கலைப் பொருட்களும் சந்தனம் ஏலம் போன்ற வாசனைப் பொருட்களும் குவிந்து கிடப்பதைப் பார். அப்புறம் இங்குள்ள இயற்கை எழிலையெல்லாம் கண் குளிர அனுபவி. அது அலுத்து விட்டால் இருக்கவே இருக்கின்றன கேளிக்கை விடுதிகள். சிவலோக நாதா! சேர நாட்டின் இளம் பெண்கள் பேரழகிகள் மட்டுமல்ல கொஞ்சம் பேராசையும் கொண்டவர்கள்! உன்னைப் போன்ற கட்டழகனைக் கண்டால் போட்டி பலமாகவே இருக்கும். எச்சரிக்கையாக இரு!”
இதைக் கேட்டு அவையோர் கலகலவென்று சிரிக்க சிவலோக நாதனும் அந்த நகைப்பொலியில் கலந்து கொண்டான்.
“மன்னா! சோழ நாட்டு வாலிபர்கள் எந்தப் போட்டிக்கும் அஞ்ச மாட்டார்கள்” என்றான்.
இப்போது நகைப்பொலி பலமாகவே இருந்தது.
அதனூடே அவன் கண்கள் நாலாபுறமும் சுழன்று வண்டார் குழலியின் இரு கயல் விழிகளையும் தேடின. ‘பாஸ்கரா! உனது சேர நாட்டுப் பெண்கள் யாருக்கு வேண்டும்? இங்கு வந்துள்ள ஒரு பாண்டி நாட்டு நர்த்தகி போதும் எனக்கு! அரம்பையையும் ஊர்வசியையும் தோற்கடிக்கும் அந்த அழகுத் தேவதையை நான் மறுபடி சந்தித்தாக வேண்டும். இன்பக் கதைகள் பேசி இனிய பொழுதாகக் கழிக்க வேண்டும்’ என்று தனக்குள் சொல்லிக் கொண்ட அவன் நகைப்பொலி அடங்கக் காத்திருந்தவன் போல் விட்ட இடத்தில் தொடர்ந்து உரக்கப் பேசினான்: “எனவே தங்கள் பதிலும் பரிசுகளும் ஆயத்தமாக எவ்வளவு காலதாமதமானாலும் பாதகமில்லை!”
மறுபடியும் அவையில் சிரிப்பொலி பீறிட்டு எழுந்தது. வண்டார் குழலியைக் காணாமல் அவன் கண்கள் ஏமாற்றமடைந்தன.
ஆயினுமென்ன, அவள் கருத்துப்படியே நான்காவது இரவு குறிப்பிட்ட இடத்துக்கு வந்து சேர்ந்தான். தொழிற் பட்டறையில் இரவு நேரமானபோதிலும் அவசர வேலைகளை மட்டும் ஒருசிலர் தீப்பந்தங்களின் ஒளியில் கவனித்துக் கொண்டிருந்தனர்.
அவள் சொல்லிக் கொடுத்திருந்தபடியே பின் கட்டுக்குள் நுழைந்தான். அங்கு உலைக்களத்துத் துருத்தியை இயக்கிக் கொண்டிருந்த ஒருவன் மட்டுமே காணப்பட்டான். இவன் வருவதையே அவன் உணராததால் கடமையே கண்ணாக ஓர் இயந்திர கதியில் இயங்கிக் கொண்டிருந்ததால் அவன்தான் வண்டார் குழலி குறிப்பிட்ட செவிட்டு ஊமையாக இருக்க வேண்டும் என்று ஊகித்தான். அவனை இவன் தொட்டதும் அவன் தலை திரும்பிப் பார்த்துப் பேந்தப் பேந்த விழித்தான். ஐயம் தீரவே தன் இடைக் கச்சிலிருந்து முத்திரை மோதிரத்தை எடுத்துக் காட்டினான் சிவலோக நாதன். தீப்பந்தத்தின் ஒளியில் அதைப் பார்த்ததும் இலேசாகப் புன்முறுவல் செய்தான் செவிட்டு ஊமை. சுற்று முற்றும் ஒருமுறை பார்த்துக் கொண்டான். பலகணியின் கதவையும் சிவலோக நாதன் நுழைந்து வந்த வாசலின் கதவையும் சாத்திவிட்டுத் திரும்பினான். ஒரு பக்கச் சுவரின் தேர்ச்சக்கரம் ஒன்று பொருத்தப்பட்டிருந்தது. அதன் மையத்தில் தன் இடையிலிருந்த ஒரு விசையை எடுத்துப் பொருத்தித் திருகினான் ஊமை. பிறகு சக்கரத்தைச் சுழற்ற அது மைய அச்சில் சுழன்றது. வலதுபுறம் சுவர் விலகி ஒரு சிறு துவாரம் தெரிந்தது. சீக்கிரம் சீக்கிரம் என்று செவிடன் ஜாடை காட்டவே சிவலோக நாதன் அந்தத் துவாரத்தில் நுழைந்தான். தவழ்ந்துதான் செல்ல வேண்டியிருந்தது. அடுத்த கணம் செவிட்டு ஊமை சக்கரத்தை மறுபுறமாய்ச் சுழற்ற விலகிய சுவர் மீண்டும் இணைந்து கொள்ள சிவலோக நாதனை அந்தகாரம் சூழ்ந்தது. வந்தது வந்தாயிற்று. இனிப் பின்னேறவும் முடியாது என்பதை உணர்ந்து நெஞ்சைத் திடப்படுத்திக் கொண்டு மேலே தவழ்ந்தான். சற்று தூரம் சென்ற பின் துவாரம் பெரிதாயிற்று. ஓர் ஆள் சற்றே குனிந்து நடந்தால் தலை இடிக்காமல் செல்லக் கூடிய சுரங்கப் பாதை. இலேசாகப் படர்ந்த வெளிச்சம் ஒரு திரும்புமுனையில் தீவட்டி ஏற்றிவைக்கப்பட்டிருப்பதை உணர்த்தியது. அது வழக்கமான காரியமா அல்லது தன்னை எதிர்பார்த்து வண்டார் குழலி செய்த முன்னேற்பாடா என்று யோசித்த வண்ணம் மேலே நடந்தான் சிவலோக நாதன். என்ன தான் தைரியசலியாக இருந்தாலும் அவன் இதயம் என்னவோ திக் திக்கென்று அடித்துக்கொண்டுதான் இருந்தது. சடபடவென்று ஒரு வெளவால் அவன் மேல் விழுந்தடித்துக் கொண்டு பறந்தபோது ஒரு கணம் நிலை குலைந்துதான் போய்விட்டான். பிறகு ‘சே! இவ்வளவு பயந்தாங்கொள்ளியா நான்’ என்று தன்னைத் தானே நொந்து கொண்டான். இருட்டைக் கண்டோ அல்லது சுரங்கப் பாதையைக் கண்டோ பயமில்லை. தவறான ஒரு காரியத்தில் இறங்கியிருப்பதால்தான் நெஞ்சம் நடுங்குகிறது என்று அவனுக்குப் புரிந்தது. ஆயினும் அதே நேரத்தில் வண்டார் குழலியின் பொன் வண்ண மேனி அருவி நீரில் மறைந்தும் மறையாமலும் காட்சி தந்த கண் கவர் வனப்பு அவன் மனக் கண் முன் தோன்றி அவனை மேலே மேலே கவர்ந்திழுத்துச் சென்றது.
சுரங்கப் பாதை இறங்கியும் ஏறியும் சென்றது. சில இடங்களில் திரும்பியும் வளைந்தும் குறுகலாயும் அகலமாயும் இருந்தது. ஒரு கட்டத்தில் மேலே நீர் அலை மோதுவது போல் ஓசை கேட்டது. சுவரின் ஈரக் கசிவு இருந்தது. அரண்மனையையும் அரசு மாளிகைகளையும் உள்ளடக்கிய அகழியையும் மதிலையும் கடந்து செல்கிறோம் என்று எண்ணினான். இன்னும் கொஞ்சம் தூரம்தான். சோமேசுவரனின் அந்தப்புரத்தில் வண்டார் குழலியின் அந்தரங்க அறைகளுக்கே இந்தச் சுரங்கப் பாதை நம்மைக் கொண்டு விட்டுவிடும்! அவள் ஆவலோடு தனக்காகக் காத்திருப்பாள்! ஆர்வம் மீதுற விரைந்தான் சிவா. சுரங்கப் பாதை ஒரு கட்டத்தில் முடிந்து விட்டதாகத் தோன்றியது. ஆனால் எப்படி இங்கிருந்து வெளியேறுவது? இருளுக்குப் பழக்கப்பட்ட கண்களால் சுற்று முற்றும் பார்த்தான். சற்றுத் தொலைவில் இருந்த தீப்பந்தத்தின் மங்கிய ஒளியில் சுவரில் ஒரு தேர்ச் சக்கர வடிவம் தென்பட்டது. ஆனால் இது பட்டறையில் பார்த்தது போன்ற பெரிய சக்கரம் அல்ல. சின்னஞ்சிறியது. அதைச் சுழற்றினான். சுழல மறுத்தது. அவனைப் பீதி ஆட்கொள்ள ஆரம்பித்தது.
இங்கேயே நம்மை யாராவது கண்டுபிடித்துக் கைதியாக்கும்வரை அடைபட்டுக் கிடக்க வேண்டியதுதானா? திரும்பி விடுவோமா? திரும்பினால் மறுபக்கக் கதவை உட்புறமிருந்து நம்மால் திறக்க முடியும் என்பது என்ன நிச்சயம்? பெரிய சக்கரத்தின் மையத்தில் செவிட்டு ஊமை ஏதோ விசையைப் பொருத்தித் திருகியது இவன் நினைவுக்கு வந்தது. இந்தச் சிறிய சக்கரத்தின் மையத்திலும் ஏதாவது விசை இருக்குமோ? விரலை வைத்து நெருடினான். அழுத்தினான். ஏதோ விசை சுழல்வது போலிருந்தது. அழுந்திய நிலையிலேயே மற்றொரு கரத்தால் சக்கரத்தைச் சுழற்ற, சுழன்றது. சுவர் நகர்ந்து வழி விட்டது. சிறிய திட்டி வாசல் போல் இருந்த அந்தத் துவாரத்தினுள் நுழைந்து சென்றான். ஓரிரு கணங்களில் சுவர், இடைவெளி இருந்தது தெரியாமல் மூடிக்கொண்டு விட்டது.
சுற்று முற்றும் பார்த்தான் சிவலோக நாதன். பெரிய அறை; அதன் சுவர் ஓரமாகப் பல பெட்டிகள், பேழைகள். ஒரு பக்கம் உயரே சாளரம். அறைக் கதவு சாத்தப் பட்டிருந்தது. அது வெளிப்புறம் தாளிட்டுப் பூட்டப்பட்டுமிருக்கும் என்று எண்ணினான். இனி என்ன செய்வது? வண்டார் குழலி இங்கு வந்து தன்னை அழைத்துப் போகும் வரை காத்திருக்க வேண்டியதுதான். சந்தர்ப்பம் சரியில்லாமல் அவளுக்குத் தாமதமாகிறதோ என்னவோ?
பெரிய சப்ரமஞ்சக் கட்டிலையும் திரைச் சீலைகளையும், அகிற் புகையையும் அகல் விளக்கையும் மலர்ச் சரங்களையும் மோகினிக் கோலத்தையும் எதிர்பார்த்து வந்தவனுக்கு என்னமோ போலிருந்தது. சற்று நேரம் செயலற்று உட்கார்ந்திருந்தவன் சலிப்பை நீக்க ஒரு பேழையைத் திறந்து பார்த்தான். பொற் கழஞ்சுகள்! இன்னொரு பேழையைத் திறந்தான். பவழங்கள்! மற்றொன்றில் முத்தாரங்கள்! மேலுமொன்றில் நவரத்தின மணிகள். சோமேசுவரனின் பொக்கிஷ நிலவறையா இது?
ஒரு பெரிய பெட்டியைத் திறந்து பார்த்தான். பதப்படுத்தப்பட்ட தோல் சுருள்கள் அடுக்கி வைத்திருந்தது. ஒன்றை எடுத்து அதனைச் சுற்றியிருந்த பட்டு நூலைப் பிரித்து விரித்தான். வரைபடம். சேரனின் கடற்கரைப் பட்டினங்களைக் குறிப்பது. அங்குள்ள கப்பல்களின் எண்ணிக்கையை விவரிப்பது. இன்னொரு தோல் சுருளைப் பிரித்தான். அதில் பல்வேறு கப்பல்களின் பெயர்கள் அவற்றின் எடை, தகுதி, திறமை, பலம் இதர சிறப்புக்களைப் பற்றிய குறிப்புக்கள் இடம் பெற்றிருந்தன. இந்தப் பெட்டி நிறைய கடற் படை பற்றிய விவரங்கள்தான் போலும்! இத்தனை விவரங்களையும் சேகரித்து வைப்பது கணக்கு அதிகாரி சோமேசுவரனின் கடமைகளுள் ஒன்று போலும்! மன்னன் கேட்கும்போது எந்தத் தினத்தில் எந்தத் துறைமுகத்தில் எந்தெந்தக் கப்பல்கள் உள்ளன அவற்றின் ஆற்றல் என்ன என்று பிசகின்றிக் கூறுவது அவன் பொறுப்பு என்றாகிறது!
மற்றுமொரு பெட்டியைத் திறந்தான். அதிலும் இதே போல் பாடம் செய்யப் பெற்ற தோல் சுருள்கள். அவற்றில் பல்வேறு கோயில்களுக்கு நிவந்தங்கள் அளிக்கப்பட்டிருந்தமை பற்றிய விவரங்கள். வேறொரு பெட்டியில் அரசாங்கப் பொக்கிஷ நிலவறையில் கையிருப்பு பற்றிய விவரங்கள், எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றிய குறிப்புக்கள். இன்னுமொன்றில் யானைப் படை பற்றிய விவரங்கள். பிறிதொன்றில் குதிரைப் படை பற்றிய கணக்குகள். மேலோட்டமாகத்தான் என்றாலும் அடக்க மாட்டாத ஆர்வத்துடன் ஒவ்வொன்றாகப் பார்த்து வந்த சிவலோக நாதனுக்கு வியப்பும் சந்தேகமும் மேலிட்டன. சேரமானின் படை பலம், பொக்கிஷ பலம் பற்றிய அத்தனை ரகசியக் குறிப்புக்களும் இந்த அறையில்தானே பாதுகாக்கப்பட்டு வருகின்றன? இங்கேயா என்னை வரச் சொன்னாள் வண்டார் குழலி? எதற்கு?
– தொடரும்…