கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: June 12, 2023
பார்வையிட்டோர்: 1,655 
 
 

(ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 03 | அத்தியாயம் 04 | அத்தியாயம் 05

தனக்கு அளிக்கப் பட்டிருந்த பெரும் பொறுப்பால் இலேசாக மமதை எட்டிப் பார்க்க, உதயபானுவின் காதலை உணர்ந்ததால், கர்வம் தலை தூக்க, அருள்மொழிவர்மனின் நட்பையும் அன்பையும் பெற்றிருக்கிறோம் என்பதால் பெருமிதம் சற்றே உயர்ந்தெழ, அனைத்தும் இணைந்ததால் உருவான ஆணவம் தலைக்கேற சிவலோக நாதன் குதிரையைத் தட்டிவிட்டான். 

“சேரமானிடம் உன்னை நல்லெண்ணத் தூதுவனாக அனுப்புகிறேன். சில காலம் முன்பாக அரியணை ஏறியுள்ள அருள்மொழிவர்மன் அமைதியையே விரும்புகிறார் என்று தெரியப்படுத்து. இளம் வயதிலேயே நிறையக் களப் போர்களைக் கண்டுவிட்ட நான் இனிக் கலைப் போட்டிகளிலேயே ஈடுபட விரும்புகிறேன். உலகம் வியக்கும் வண்ணம் போர்ச் சாதனைகளை அல்ல; கலைச் சாதனைகளை நிகழ்த்த விரும்புகிறேன். இதை எடுத்துச் சொல்லு. நீ சேரனிடம் செல்வது போலவே வேறு பல ராஜ்ய மன்னர்களுக்கும் தூதர்கள் செல்கின்றனர் என்பதை விவரித்துக் கூறு” என்றெல்லாம் அருள்மொழி பேசியவை ஏறக்குறைய அவனுக்கு மனப்பாடமாகிவிட்டிருந்தன. காடு, மலைகள், ஆறு, சுனைகள், நெடுஞ்சாலைகள், குறுக்குப் பாதைகள், நகரங்கள், கிராமங்கள் எல்லம் கடந்து ஒரே சீரான கதியில் விரைந்து கொண்டிருந்தது அவன் குதிரை. அவனுக்குக் களைத்துப் போகும்போது நிதானமாய்ச் செலுத்துவான். அது குதிரைக்கும் ஓய்வளித்ததாகியது. இரவு நெருங்குகையில் அவன் எதிர்ப்படும் கிராமம் அல்லது நகரத்தில் தெரு ஓரத் திண்ணையில் அல்லது பயணியர் விடுதியில் படுத்துறங்கி மறு நாள் காலை மீண்டும் புறப்படுவான். 

வழி நெடுக அவன் மாறிவரும் காட்சிகளை அனுபவைத்துக் கொண்டே சென்றான். காவிரியும் அதன் கிளை நதிகளும் பாய்ந்த பகுதியில் ஆற்றுப் பாசனத்தால் செழித்து வளர்ந்த சோலைகள், பழத்தோட்டங்கள், வெற்றிலைக் கொடிகள், அங்கே உழைக்கும் கரங்கள். உழைப்பை இலேசாக்க எழும் பாடல்கள், எங்கும் பசுமை… பசுமை… பசுமை! வெகு தூரம் சென்ற பிறகு காட்சி மாறியது. கிணற்றுப் பாசனமான பூமியில் கவலைகல் ஏற்றங்கள். அதன் பிறகு மானம் பார்த்த பூமியில் புழுதி மண்டலம். இரவில் கருவேலங்காடுகளில் நரிகளின் ஊளையிடும் சப்தம். சேர நாட்டு எல்லையைக் கடந்ததுமே மீண்டும் ஆறுகள், சிற்றோடைகள், ஏரிகள், இதர நீர்நிலைகள், மலைகள், கணவாய்கள், பட்சி ஜாலங்களில் பல்வகை ஒலிகள், இவ்வாறு பலவிதக் காட்சிகளை அனுபதித்துக் கொண்டே செல்கையில் ஒரு காட்சி மட்டும் மாறாமல் அவன் மனக் கண் முன் சதா இருந்து கொண்டிருந்தது. அது, உதயபானுவின் பால் நிலவு மேனியில் பூத்துக் குலுங்கிய எழில். ‘அன்று மட்டும் அருள்மொழிவர்மர் அந்தச் சமயம் பார்த்து வந்து தொலைக்காமலிருந்தால்…. சே! என்ன அசட்டு எண்ணம்!’ என்று அவன் தன்னைத் தானே கடிந்து கொண்டான். ‘அவர் வந்ததுதான் நல்லதாயிற்று. சந்தேகமென்ன. இல்லாதபோனால் இப்போது நான் அனுபவிக்கிற ஏக்கத்துடன் கூடிய எதிர்பார்ப்பை, அது அளிக்கிற இன்பத்தை உணர முடியுமா? 

மாலை வேளையில் அவன் ஒரு சிற்றோடையை அடந்தான். அதன் கரையில் போரடித்துப் போட்ட வைக்கோல் சிதறல்களைப் பொறுக்கி எடுத்து ஓடையில் இறங்கி குதிரையைத் தேய்த்துக் குளிப்பாட்டினான். பின்னர் அதனைக்கரையேற்றி மேயவிட்டான். குதிரையைக் குளிப்பாட்டிய இடத்திலேயே தானும் குளிக்க விரும்பாமல் சற்றே ஓடைக்கரையோடு மேலேறி நடந்தான். கொஞ்ச தூரம் நடந்ததும் ‘ஹோ’ என்ற ஓசை கேட்கவே அருவி விழுவதை உணர்ந்து அதில் குளிக்கலாம் என்று இன்னும் மேலே சென்றான். அங்கு சிற்றாற்றின் மறு கரையில் ஒரு பல்லக்கு இறக்கி வைக்கப் பட்டிருந்தது. பல்லக்கு தூக்கிகளைக் காணோம். பல்லக்கிலிருந்து இறங்கியிருந்த இரு பெண்கள் மட்டும் அருவியிலும் பிறகு ஆற்றிலும் குளித்துக் கொண்டிருந்தனர். இவனை அவர்கள் கவனிக்கவில்லை. பெண்கள் குளிக்கும்போது தான் அங்கிருப்பது முறையல்ல என்றுதான் பல்லக்கு தூக்கிகள் அப்பால் சென்றிருக்க வேண்டும். அவர்களுடன் வந்த ஒரு மெய்க்காப்பாளனும் அவ்வாறே சென்றிருக்கலாம் என்பதற்குத் தனித்து நின்ற ஒரு குதிரை சாட்சியம் கூறியது. 

சிவலோகநாதனும் தான் அங்கு தாமதிப்பது தவறு என உணர்ந்து திரும்பிவிட யத்தனித்தான். அச்சமயம் அவன் கண் பார்வையில் பல்லக்கின் திரைச் சீலை பட்டது. அதில் பொறிக்கப்பட்டிருந்த வில் அம்பு சின்னத்தைப் பார்த்ததும் இவர்கள் அரச குடும்பத்தை அல்லது அரண்மனையைச் சேர்ந்தவர்கள் என்று புரிந்து கொண்டான். அரசவையையே இவனும் நாடிச் சென்று கொண்டிருந்ததால் இவர்கள் யார் என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம் ஏற்பட்டது. 

அருவியை நெருங்காமல் சற்று எட்டத்திலேயே சிற்றாற்றில் இறங்கி நீராடி நீந்தியபடியே மறு கரையை அடைந்தான். உடலைத் துவட்டிக் கொண்டு சுற்று முற்றும் நோக்கியபோது புகை வாடை வீசவே அந்தப் பக்கமாகச் சென்றான். பல்லக்கு தூக்கிகளும் மெய்க்காவலனும் இரவு உணவு சமைப்பதில் ஈடுபட்டிருந்தார்கள். அப்பால் ஒரு வசதியான கூடாரமும் உருவாகியிருந்தது. உணவு வகைகளைப் பார்த்ததும் சிவலோகநாதனுக்கு வயிற்றைக் கிள்ளியது. பாவம், இத்தனை வகை உணவையும் இவர்களால் சமாளிக்க முடியாது. இன்றிரவு இவற்றைத் தீர்த்துக்கட்ட இவர்களுக்கு நாம் உதவிவிட வேண்டியதுதான் என்று தீர்மானித்துக் கொண்டவனாக மேலும் சற்று நெருங்கினான். 

அவர்கள் தங்கள் எஜமானி அருகில் இல்லை என்ற துணிவில் மனம் விட்டுப் பேசிக்கொண்டது அவன் செவிகளுக்கு எட்டியது. “பாவம், ராஜ நர்த்தகி என்று பட்டம் பெற்று என்ன புண்ணியம்? கிழவனைக் கட்டிக் கொண்டு படுகிற பாடு பரிதாபம்தான்” என்றான் ஒருவன். 

“அதனால்தான் ஆற்றைப் பார்க்கிறேன், அருவியைப் பார்க்கிறேன், கோவிலுக்குப் போகிறேன், குளத்தைக் காண்கிறேன்” என்று புறப்பட்டு விடுகிறாள் 

“கிழவனும் இவள் அழகில் நன்றாக மயங்கித்தான் கிடக்கிறான். எதற்குமே மறுப்பு சொல்வதில்லை” 

“சோமேசுவரர் மட்டுமில்லையப்பா! மன்னருக்கே இவளிடம் கொஞ்சம் கிறக்கம்தானாம்! நடந்த கதைதான் உனக்கு தெரியுமே. கோபப்பட்டுச் சற்றும் யோசியாமல் கிழவனுக்கு இவளைக் கொடுத்து விட்டாரே யொழிய அன்று முதலே இவளுக்காக மன்னர் ஏங்கிக்கொண்டுதான் இருக்கிறாராம். ஆனால் இவள் இப்போது முறுக்கிக் கொண்டிருக்கிறாள், மன்னரின் ஆசைக்கு இடம் தராமல்!” 

“போதும், போதும்! என்ன அரட்டை? வேலையைக் கவனியுங்கள்” என்று மெய்க்காப்பாளன் அதட்டும் குரலில் சொன்னான். 

சிவலோகநாதனின் ஆவல் மேலும் அதிகரித்தது. அருவியில் குளித்துக் கொண்டிருப்பவள் அரசனையே மயக்கிய அழகியா? அதையும் பார்த்துவிடத்தான் வேண்டும் என்று தீர்மானித்தவனாக அவர்களுடன் பேச்சுக் கொடுக்க ஓர் உபாயத்தை யோசித்தபடியே சிற்றாற்றங்கரையோடு கீழிறங்கிச் சென்றான். ஒரு சீழ்கை ஒலி எழுப்பியதும் அக்கரையில் மேய்ந்து கொண்டிருந்த அவன் குதிரை ஆற்றைக் கடந்து வந்து சேர்ந்தது. அதைச் சற்று மேலே அழைத்துப் போய்க் கழுத்தைத் தடவிக் கொடுத்துப் பின்புற முதுகை ஒரு தட்டுத் தட்டினான். குதிரை தன் எஜமானனின் கருத்தறிந்தாற்போல முன்னேறியது. சென்று அங்கு மேய்ந்து கொண்டிருந்த மெய்க்காப்பாளனின் குதிரையை அணுகி அதன் கழுத்தோடு தன் முகத்தை உரசியது. 

“அடேய்! யாரடா அவன் இந்தக் குதிரையின் சொந்தக்காரன்! சேர நாட்டில் மைவிழி மாதர்தாம் ஆடவரை மையல் கொள்ளச் செய்வார்கள் என்று கேள்வி. ஆண் குதிரைகளை ஈர்க்கவும் பெண் குதிரைகளைப் பழக்கியிருக்கிறீர்களா?” என்று உரக்கக் கேட்டவாறே அப்போதுதான் தன் குதிரையைத் தேடி வருவது போல் மேடு ஏறி வந்தான் சிவலோகநாதன். 

அந்தக் கூச்சலைக் கேட்டு வியப்புற்று மெய்க்காப்பாளன் எழுந்து வரவும் வண்டார் குழலி குளித்துவிட்டுப் பட்டு உடலின் மேல் புத்தாடையாகப் பட்டாடை அணிந்து வரவும் சரியாக இருந்தது. கேசத்தை உலர்த்திக் கொண்டே வந்தவள் இந்த அரவம் கேட்டு ஒரு கணம் திடுக்குற்று நின்றால். அடுத்து அவளுக்குச் சிரிப்பு வந்தது. 

“யாரப்பா நீ? சேர நாட்டுப் பெண்களைப் பற்றியும் பெண் குதிரைகளைப் பற்றியும் ரொம்ப நல்ல அபிப்பிராயம் வைத்திருக்கிறாயே!” என்றாள். 

“ஆகா! என் அபிப்பிராயம் மட்டுமா அது? சேரமான் அவையின் ராஜ நர்த்தகியுடைய சாகசங்கள்தாம் சோழ தேசம் வரையிலும் ஏன் அதற்கு அப்பாலும் எட்டியிருக்கிறதே” என்றான் சிவா. அதே நேரத்தில் தன் எதிரே நின்ற பேரழகில் சொக்கியும் போனான். மாலைக் கதிரவனின் பொன்னொளி பட்டு அந்தச் சொர்ண மேனி மேலும் தகதகத்துக் கொண்டிருந்தது. தங்க விக்கிரகமானாலும் கரைந்துருகிவிடும் மென்மையும் அதற்கு உண்டென்று தோன்றியது. அவள் அவயவங்களின் எழுச்சியும் செழுமையும் சிவலோகநாதனின் கண்களைக் கூசச் செய்தன. 

“ஓ! சோழ தேசத்தவனா நீ? அப்படி என்ன பேசிக் கொள்கிறார்கள் அங்கே ராஜ நர்த்தகி பற்றி?” என்று கேட்டாள். 

“அவள் பேரழகியாம். ஈரேழு பதினாலு உலங்கங்களிலும் அப்படி ஓர் அழகியைக் காண முடியாதாம். எங்கள் மன்னர் அருள்மொழிவர்மரின் பட்டத்து அரசி வானவன் மாதேவி கூட அழகுக்கு அவளிடம் பிச்சை வாங்க வேண்டுமாம். சொல்லிக் கொள்கிறார்கள். எனக்கென்னவோ எல்லாம் மிகையாகத் தோன்றுகிறது!” 

“எதனால் அப்படிச் சொல்கிறீர் வீரரே?” 

“அந்த ராஜ நர்த்தகி இதோ என் கண்ணெதிரே தோற்றமளிக்கும் எழில் குவியலை விட அழகில் உயர்ந்தவளாக இருக்கவே முடியாது என்று எனக்குப் படுகிறது.” 

“அடேய்! என்ன வார்த்தை மிஞ்சுகிறது? உன் குதிரையை இழுத்துக் கொண்டு ஓடிவிடு! அயல் நாட்டவனாயிற்றே என்று பார்க்கிறேன். விபரீதத்துக்கு விலை பேசாதே ஓடு!” என்றான் மெய்க்காப்பாளன். 

“சரி!” என்று அமைதியாகக் கூறிய சிவலோக நாதன், மெய்க்காப்பாளனுடைய குதிரையின் கடிவாளத்தைப் பற்றி இழுத்தான். 

“அடேய்! அது என் குதிரை! அதோ மேய்ந்து கொண்டிருக்கிறதே பயணக் களைப்புடன் சோர்ந்திருக்கும் சோனிக் குதிரை அதுதான் உன்னுடையது” என்றான் மெய்க்காப்பாளன் குஞ்சரமல்லன். 

“அழகுதான்!” என்று சீறினான் சிவா. “சேர நாட்டில் எவ்வளவு ஏமாற்ற வேலைகள் நடக்கும் என்று நான் எதிர்பார்க்கவேயில்லை. மன்னாதி மன்னர் அருள்மொழிவர்மர் தூதுவனுக்கென்று விசேஷமாகத் தேர்ந்தெடுத்து அராபியக் குதிரையை இவன் தன்னுடையது என்று கூசாமல் சொல்கிறானே! இது அடுக்குமா? அல்லது நான்தான் சும்மா விடுவேனா? சோழ தேசத்தவர் அப்படியொன்றும் ஏமாளிகள் அல்ல.” 

“என்ன, அருள்மொழியின் தூதனா நீ!” 

“ஆமாம், ஆமாம்! இந்த உதவாக்கரை நாட்டைப் போய்ப் பெரிதாக மதித்து நல்லெண்ணத் தூது வேறு அனுப்பினாரே அதைச் சொல்லுங்கள். அடேய்! என் குதிரையைத் தரப் போகிறாயா இல்லையா?” 

குதித்தெழுந்தான் குஞ்சர மல்லன். “நீ தூதனோ ஒற்றனோ சோழனோ பாண்டியனோ யாரானாலும் சரி, என் குதிரை மேல் கை வைத்தால் தொலைந்தாய்!” என்றான். 

சிவலோக நாதன் கரங்களை முஷ்டியாக்கிக் கொண்டு அவன் மீது பாய்ந்தான். நாலு குத்துக்கள் பரிமாறப்படுவதற்குள், “குஞ்சரமல்லா! நிறுத்து! விலகி நில்!” என்று உத்தரவிட்டாள் வண்டார் குழலி. பின்னர் சிவலோக நாதனைப் பார்த்து, “தூதரே! அமைதியாயிருங்கள். இந்தக் குதிரையைவிடச் சிறந்ததான ஒன்பது குதிரைகளை உமக்குப் பரிசளிக்கிறேன். சரிதானே?” என்றாள் புன்னகை புரிந்து. 

“இந்தத் தேசத்தில் யாரை நம்புவது என்றே தெரியவில்லை. எல்லைக்குள் நுழைந்ததுமே பரி பறிபோகப் பார்க்கிறது. இப்போது உங்கள் வாக்குறுதியை நம்ப வேண்டுமானால் முதலில் நீங்கள் யார் என்று தெரிய வேண்டும்” என்றான் சிவா. 

“நீங்கள் சற்று முன் வர்ணித்தீர்களே ஈரேழு பதினாலு உலகங்களிலும் காணக் கிடைக்காத அழகி என்று அந்த ராஜ நர்த்தகி நான்தான். பெயர் வண்டார் குழலி” என்றாள். அவள் இமைகள் பட படத்தபோது ஓராயிரம் மதன பாணங்கள் அவன் நெஞ்சில் பாய்ந்தன. 


அன்றிரவு அவன் அவர்களுடனேயே சேர்ந்திருந்தான். விருந்தினனுக்கும் எஜமானிக்கும் முதலில் உணவு படைத்துப் பிறகு மற்றவர்கள் உண்டனர். அவர்கள் சாப்பிடும் போது சற்றுத் தள்ளி அமர்ந்திருந்து வண்டார் குழலியும் சிவலோகநாதனும் உரையாடினர். தன் அவல வாழ்க்கையைப் பற்றி கல்லும் கரையும் விதமாகப் பேசினாள் அவள். சிவாவின் அனுதாபத்தை முழுமையாகப் பெற்றாள். 

கணப்புக்காகவும் துஷ்ட மிருகங்களை விரட்டுவதற்காகவும் சமையல் செய்த நெருப்பு தொடர்ந்து எரிந்து கொண்டே இருந்தது. சந்திரோதயமும் ஆயிற்று. அவள் ‘நாளை சந்திப்போம்’ என்று கூறிக் கூடாரத்தினுள் நுழைந்தாள். இவன் திறந்த வெளியில் படுத்தான். கூடாரத்தின் உள்ளிருந்து ஒரு சோக கீதம் எழுந்தது. அது போர்க் காயங்கள் அளிக்கும் வேதனையை விட அதிகமாகத் துன்பத்தை அளிப்பதாக அவன் நெஞ்சைப் பிளந்து இருதயத்தைத் தாக்கியது. ‘பாவம், ராஜநர்த்தகி என்று பெயர் பெற்று இத்தனை அழகுடன் விளங்கி இவ்வளவு ஆற்றலை அடைந்திருந்தும் என்ன பயன்? மகிழ்ச்சி என்பதே இவள் வாழ்வில் இல்லையே’ என்று எண்ணினான். உடல் களைத்திருந்தும் அவனுக்கு உறக்கம் வர நீண்ட நேரமாயிற்று. 

மறுநாள் அவன் கண் விழித்தபோது பலபலவென்று விடிந்து நீண்ட நேரமாகிவிட்டிருந்தது. ‘அடேடே! இவ்வளவு நேரம் தூங்கி விட்டோமே’ என்று வெட்கப்பட்டுக் கொண்டே அவன் எழுந்தபோது பெண்கள் இருவரும் ஏற்கனவே பல்லக்கில் ஏறிவிட்டிருந்தனர். புறப்பட அனைவரும் ஆயத்தமாக இருந்தனர். “சேர நாட்டில் நிலவும் இன்னோரு நல்ல பழக்கம் சொல்லாமல் கொள்ளாமல் நழுவி விடுவதாக்கும்” என்றான். 

அவள் சிரித்தாள். “நீண்ட தூரம் நெடுநாள் பயணம் செய்து வந்திருக்கிறீர்கள். உங்கள் களைப்பு எனக்குத் தெரியும். அதனால் எழுப்ப வேண்டாம் என்று கட்டளையிட்டேன்” என்றாள். 

“உங்களை மீண்டும் எப்போது சந்திப்பது?” 

“அரசவைக்குத் தானே வருகிறீர்கள், பார்ப்போம். நாங்கள் தயாரித்த காலை உணவில் சிறு பகுதி உங்களுக்காக எடுத்து வைத்திருக்கிறது. பசியாறுங்கள்.” 

“சேர நாட்டினரின் உணவின் ருசியை நேற்று உணர்ந்தேன். இன்று உபசரிப்புக் கலையிலும் உயர்ந்தவர்கள் என்று புரிந்து கொண்டேன்.” 

“சோழ நாட்டினர் முகஸ்துதி  செய்வதில் வல்லவர்கள் என்று நேற்று அறிந்தேன். நாடகக் கலையில் கை தேர்ந்தவர்கள் என்பதையும் கூடவே உணர்ந்தேன்” என்று கூறிக் குறிப்பாக அவன் குதிரையை நோக்கினாள். பல்லக்கின் பட்டுத் திரை இறங்கியது. உள்ளிருந்து கைதட்டும் ஒலி எழ பல்லக்குத் தூக்கிகள் அதனைத் தோளில் சுமந்து ஒரே சீராக ஓடத் தொடங்கினார்கள். குஞ்சர மல்லன் இவனைத் திரும்பிக் கூடப் பாராமல் பல்லக்கைப் பின்தொடர்ந்தான். 

நடந்ததெல்லாம் கனவல்ல என்பதற்கு அடையாளமாகக் காலை உணவு தயாரித்த இடத்தில் தீ இன்னமும் எரிந்து கொண்டிருந்தது. அருகே உணவுடன் கூடிய ஒரு துணி மூட்டை. 

முகம் கழுவிக் கொண்டு வந்து அதனைப் பிரித்தான். வாழை இலையில் சுற்றிய பணியாரங்கள். இலைக்கும் பட்டுத் துணிக்கும் இடையில் சில ஓலை நறுக்குகள். எடுத்துப் படித்தான். “அன்பரே! ஒரே ஒரு மாலை சந்திப்புத்தான். இருந்தாலும் உங்களை என்னால் சுலபத்தில் மறக்க முடியும் என்று தோன்றவில்லை. தாங்களும் அவ்விதமே என்னைப் பற்றி எண்ணுவீர்களானால் இன்றிலிருந்து நாலாவது இரவு என்னைச் சந்திக்க முயலவும். வஞ்சி நகரின் ராஜ வீதியில் தேர்கள் பழுது பார்க்கப்படும் பட்டறை ஒன்றிருக்கிறது. அந்தத் தொழிற் கூடத்துக்குள் நுழைந்து அதன் பின் கட்டுக்கு வாருங்கள். அங்கு ஒரு செவிட்டு ஊமையை நீங்கள் சந்திக்க முடிந்தால் அவனிடம் முத்திரை மோதிரத்தைக் காட்டுங்கள். என்னைக் காண்பதற்கான வழி பிறக்கும். 

“அன்பரே! நீங்கள் வந்தாலும் சரி, அல்லது நமது நட்பு நேற்றைய ஒரு தினக் கனவாக மங்கி மறைவதானலும் சரி, தயவு செய்து மறவாமல் இந்த ஓலையை உடனடியாக அதோ இன்னும் எரிந்து கொண்டிருக்கும் நெருப்பில் இட்டுக் கொளுத்திப் பொசுக்கிவிடுங்கள். இந்த அபலைக்கு ஏற்கனவே உள்ள அபக்கியாதிகள் போதும். இந்த ஓலை வேறு சந்தர்ப்பவசமாக யார் கையிலாவது சிக்கி, அதனால் புதிய தொல்லைகள் விளைய வேண்டாமே!” 

இரு ஓலை நறுக்குகளையும் இணைத்துக் கட்டியிருந்த பட்டு மணிக் கயிற்றில் ஒரு முத்திரை மோதிரமும் தொங்கியது. அதிலே வில் அம்புச் சின்னம் காணப்பட்டது. சிவலோக நாதன் முத்திரை மோதிரத்தைப் பத்திரப் படுத்திக் கொண்டான். எழுந்து சென்று ஓலையை நெருப்பிலிடப் போனான். பிறகு தயங்கி இடைக் கச்சில் பத்திரப்படுத்தினான். மீண்டும் மனம் மாறியவனாக ஓலையை அதனை எழுதியவள் விருப்பப்படியே நெருப்பிலிட்டுச் சாம்பலாக்கினான்.

– தொடரும்…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *