கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: June 16, 2023
பார்வையிட்டோர்: 1,715 
 
 

(ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 05 | அத்தியாயம் 06 | அத்தியாயம் 07

“எல்லாவற்றையும் பார்த்தாகி விட்டதா? தேவையான விவரங்களைச் சேகரித்தாகி விட்டதா?” என்ற குரல் கேட்டுத் திடுக்கிட்டுத் திரும்பினான் சிவா.

அங்கே குஞ்சர மல்லன் நின்றுகொண்டிருந்தான். அவனுக்குப் பின்னால் திறந்த கதவு வழியாக அப்போதுதான் உள்ளே நுழைந்து கொண்டிருந்தான் ஒரு கிழவன். அவன்தான் சோமேசுவரனாக இருக்க வேண்டும்.

”யாரப்பா நீ? எதற்கு இங்கு வந்தாய்? எப்படி வந்தாய்? இங்கு அனுமதி இன்றி வந்தவர்கள் உயிருடன் திரும்பிச் செல்ல முடியாது என்பது தெரியாதா உனக்கு?” என்று கடுமையாகக் கேட்டவர், குஞ்சர மல்லன் உயர்த்திப் பிடித்த தீப்பந்தத்தின் ஒளியில் அப்போதுதான் அவனை நன்றாகப் பார்த்தவராக, “ஓ! நீ அருள்மொழி வர்மரின் தூதுவனல்லவா?” என்றார் வியப்பு மேலிட.

“தூதனல்ல, ஒற்றன்! இது இப்போது புரிந்து விட்டது ஐயா!” என்றான் குஞ்சர மல்லன்.

கையும் மெய்யுமாக அகப்பட்டுக் கொண்டோம் என்று உணர்ந்தான் சிவலோக நாதன். அவன் அருகில் ஒரு பெட்டி திறந்திருந்தது. அவன் கரத்தில் பிரிக்கப்பட்ட ஒரு வரைபடமும் இருந்தது.

“ஒற்றன் என்பதுதான் உள்ளங்கை நெல்லிக் கனியாகத் தெரிகிறதே! இவன் இங்கு எப்படி வந்தான் என்பதுதான் எனக்கு வியப்பு” என்றான் சோமேசுவரன்.

“அதை நான் சொல்கிறேன்” என்று கூறியபடியே உள்ளே நுழைந்தாள் வண்டார் குழலி. “நான்கு தினங்களுக்கு முன் நான் யாத்திரை முடித்துக் கொண்டு திரும்பும் வழியில் இவனை யதேச்சையாகச் சந்தித்தேன். அப்போதும் தன்னைச் சோழ மன்னனின் தூதன் என்றுதான் அறிமுகப்படுத்திக் கொண்டான். பசியால் வாடிக் களைத்திருந்தவனிடம் கருணை கொண்டு உணவளித்தேன். அதற்குப் பிரதியுபகாரமாக இவன் குஞ்சர மல்லனின் குதிரையைத் திருடிச் செல்லப் பார்த்தான். ஆனால் அந்த முயற்சியில் நல்ல வேளையாக இவனால் வெற்றி பெற முடியவில்லை. அப்போதே நான் இவனைத் தண்டித்திருக்கலாம். நல்லெண்ணத் தூதன் என்றதால் தயங்கினேன்.”

“அப்படியா?” என்றார் சோமேசுவரன். “ஏன் என்னிடம் முன்பே சொல்லவில்லை” என்றார்.

“சொல்ல வேண்டும் என்று தோன்றவில்லை பிரபோ! யாரோ ஒரு போக்கிரி என்னையும் குஞ்சர மல்லனையும் ஏமாற்றப் பார்த்து அம்முயற்சியில் தோல்வி அடைந்து விட்டான் என்றுதான் எண்ணினே தவிர அதைப் பெரிதாகக் கருதத் தோன்றவில்லை. சேரமானின் அரசவைக்கு இவன் வந்து சோழ மன்னரின் ஓலைகளைச் சமர்பிப்பதை, பார்த்திருந்தால் இவனிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று உடனே உங்களிடம் கூறியிருப்பேன். ஆனால் அன்று ராஜ சபைக்கே என்னால் வர முடியாமல் போய்விட்டது. உங்களுக்குத்தான் தெரியுமே அன்று நான் உடல் நலிவுற்றிருந்தது.”

வியந்து வாயடைத்துப் போனான் சிவா. ‘எப்படியெல்லாம் கதையை மாற்றுகிறாள் இவள்! எதற்காக? இது தெரியவில்லையா? தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்ளத்தான். அப்படியானால் என் கதி?’ அவன் அவள் முகத்தைப் பார்த்தான். சலனமற்றிருந்த அந்த முகத்தில் மின்வெட்டும் நேரத்தில் ஓர் அபிநயம்!

‘அஞ்சாதே! உன்னைக் காப்பாற்ற நான் இருக்கிறேன்’ என்ற அபயக் குறி. என்னைக் காட்டிக் கொடுக்காதே என்ற கெஞ்சல். நடன மணியல்லவா அவள்! மௌன மொழி பேசுகிறாள்!’

மறுத்துப் பேச வாய் திறந்தவன் தயங்கித் தடுமாறினான். ‘இப்போது என்ன சொல்வது? குதிரையைத் திருட நான் முயலவில்லை என்பதா? குஞ்சர மல்லன் சும்மா இருப்பானா அதைக் கேட்டுக் கொண்டு? விளையாட்டு வினையாகிவிட்டதா? இனி என்ன செய்வது? இவள்தான் இங்கு என்னை வரச் சொல்லி முத்திரை மோதிரம் தந்தாள் என்பதா? அப்படிக் கூறினால் இவள் மீது ஒரு பெண் மீது பயங்கரமான பழி சுமத்தியதாக ஆகும். அல்லது இவளை நம்பி இவ்வளவு தூரம் வந்துவிட்டவன் இனியும் இவளையே நம்பி மௌனம் சாதிக்கலாம். தனக்குக் கிடைக்கக் கூடிய தண்டனையிலிருந்து எப்படியாவது இவள் தன்னைத் தப்புவிப்பாள் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கலாம். ஆனால் அது எப்படிச் சாத்தியமாகும்? இவளால் என்னை எப்படி நல்ல பெயருடன் இனிச் சோழ தேசத்துக்குத் திருப்பி அனுப்ப முடியும்?’

இந்தக் குழப்பங்களுக்கு இவன் விடை காண்பதற்குள் சோமேசுவரன் மீண்டும் அதே வினாவை எழுப்பினார். “அதெல்லாம் சரிதான். ஆனால் இவன் இங்கு எப்படி வந்தான்? அதற்கு இன்னும் பதில் இல்லையே?”

“நாதா!” என்று குழைந்தாள் குழலி. “யாத்திரையிலிருந்து திரும்பியதுமே உங்களிடம் நான் சொல்லவில்லை? முத்திரை மோதிரம் காணாமல் போயிற்று என்று? குதிரையைத் திருட முயன்றவன் அதில் தோற்றாலும் முத்திரை மோதிரத்தை என்னிடமிருந்து களவாடுவதில் எப்படியோ வெற்றி கண்டிருக்கிறான். அதைப் பயன்படுத்தி இங்கு வந்துவிட்டிருக்கிறான்!”

ஏதோ பெரிய சூழ்ச்சியில் தான் அகப்பட்டுக் கொண்டிருப்பதாகப் புலனாயிற்று சிவலோக நாதனுக்கு. ‘தன்னை ஒற்றன் என்று நிரூபிக்க இவள் படாத பாடு படுகிறாள். ஏன்? எதற்கு? என்னை ஒற்றன் என்று பழி சுமத்திச் சிறையில் தள்ளுவதால் இவளுக்கு என்ன லாபம்?’ ஒரே குழப்பமாக இருந்தது அவனுக்கு. வண்டார் குழலி சோமேசுவரன் குஞ்சர மல்லன் அந்த அறையிலிருந்த பொக்கிஷப் பேழைகள் கணக்கு விவரங்களைக் கொண்ட பெட்டிகள் எல்லாமே கண்ணெதிரே சுழன்று சுழன்று வந்தன. “தயவுசெய்து இந்த ஓலையைக் கொளுத்திவிடுங்கள்” என்று அவள் கெஞ்சிக் கேட்டது இதற்குத்தானா? அதனைப் பத்திரப்படுத்தாமல் விட்டது எத்துணை பெருந்தவறு? சட்டென்று அவன் தன்னைச் சுதாரித்துக் கொண்டான். “முத்திரை மோதிரத்தை இவளிடமிருந்து நான் களவாடியிருந்தாலும் அதைப் பயன்படுத்த வேண்டிய இடம் எது என்பது எனக்கு எப்படித் தெரிய வந்தது? அதை யார் எனக்குச் சொல்லிக் கொடுத்தது? ராஜ வீதியில் தேர்ப்பட்டறையின் பின் கட்டுக்கு வந்தால் சுரங்கப் பாதையின் கதவு திறக்கும் என்று ஓர் அன்னியனுக்கு, அயலானுக்கு வஞ்சி நகருக்கு மூன்று நாட்கள் முன்னதாகத்தான் வந்து சேர்ந்த ஒருவனுக்கு எப்படித் தெரியும்? இவளன்றி வேறு யார் அந்த ரகசியத்தை என்னிடம் வெளியிட்டார்கள்? சோமேசுவரரே! அதைக் கேளுங்கள் உமது ஆசை நாயகியிடம்!” என்றான் சிவலோக நாதன் ஆத்திரத்துடன்.

“அதுதானே கேட்கிறேன். ஆச்சரியமாயிருக்கிறதே குழலி! அந்த விவரம் உனக்கும் எனக்கும் மன்னருக்கும் மட்டுமே தெரிந்த ரகசியமல்லவா? அந்தச் செவிட்டு ஊமை ஜாடை மாடையாகக் கூட யாரிடமும் இது பற்றிப் பேசியிருக்க முடியாதே! அவனுக்கு என்னிடம் தேவதா விசுவாசம் ஆயிற்றே!” என்றார் சோமேசுவரன்.

அவளுடைய அழகிய முகம் கணப்போது விகாரமடைந்தது. அவனை எரித்து விடுவது போல் பார்த்தாள். இமைக்கும் நேரத்தில் அது மீண்டும் சாந்த சௌந்தரியத்தைக் குறைவறப் பெற்றது.

“நாதா! இதிலிருந்தே தெரியவில்லையா? சோழ தேசத்திலிருந்து வந்திருக்கும் ஒற்றன் இவன் ஒருவன் மட்டுமல்ல வேறு பலரும் இங்கே ஏற்கனவே வளைய வந்து கொண்டிருக்கிறார்கள் என்று? கடந்த மூன்று தினங்களில் அவர்களுடன் தொடர்பு கொண்டு அறிந்த தகவல்கள் இவனுக்கு இந்த இடத்திற்கு வரும் மார்க்கத்தை உணர்த்தியிருக்கும். அந்த மார்க்கத்தில் இவன் வழி நடக்க என்னிடமிருந்து களவாடிய முத்திரை மோதிரம் உதவியிருக்கிறது!”

”பொய், பொய்! அத்தனையும் பொய்! கற்பனைக் கதை அளக்கிறாள்! சோமேசுவரரே உமது ஆசை நாயகியை நம்பாதீர்கள்” என்று சொல்லும்போதே சிவலோக நாதனுக்குத் தன் வழக்கில் வலுவில்லை என்பது புரிந்தது.

சோமேசுவரர் சிரித்தார். “என் உயிருக்குயிரான இவளை நான் நம்பாமல் ஓர் ஒற்றனையா நம்ப முடியும்?”

“நாதா!” என்று குழைவாக அழைத்தாள். “இன்னும் ஏன் தாமதம்? இவனைக் கைது செய்து விசாரிக்கிறபடி விசாரித்தால் இவனைத்தவிர இங்கு ஏற்கனவே உள்ள ஒற்றர்கள் பற்றிய விவரங்களையும் அறியலாம். அத்தனை பேரையும் ஒழித்துக்கட்ட அருமையான சந்தர்ப்பம்!”

சிவலோக நாதனை நோக்கி ஒரு வெற்றிப் புன்னகையை வீசினாள் வண்டார் குழலி.

“அடிப் பாவி! மோசக்காரி! சண்டாளி! சூனியக்காரி! என்ன சூழ்ச்சி இது? எதற்கு என்னை இப்படிப் பலியிடுகிறாய்?” என்று இரைந்து ஏசினான் சிவலோக நாதன். அது துரிதமாக ஒரு முடிவுக்கு வர சோமேசுவரனுக்கு உதவியது. “யார் அங்கே?” என்று அழைத்தார் அவர். ஒற்றனைக் கைது செய்யக் குஞ்சர மல்லன் ஒருவன் மட்டும் போதாது என்ற முன்னெச்சரிக்கையோடு!

சிவலோக நாதனின் கண்ணெதிரே அடுத்தடுத்துப் பல காட்சிகள் மின்னல் வேகத்தில் தோன்றின. ராஜ சபை பாஸ்கர ரவிவர்மன் வழக்கு, விசாரணை குஞ்சர மல்லன் வண்டார் குழலியின் சாட்சியங்கள் சோமேசுவரனின் அறிவுரை தீர்ப்பு சிறைச்சாலை சித்திரவதை இல்லாத பிற ஒற்றர்களைப் பற்றி அறிய முயற்சி அது பலனளிக்காமல் போக மேலும் கடுமையான சித்திரவதை வேதனைகளை அனுபவித்துக் கொண்டு துடிதுடித்தபடி மரணம்!

“அருள்மொழி வர்மரே! என்னை உங்களால் மன்னிக்க முடியுமானால் மன்னித்து விடுங்கள்!” என்று மனசுக்குள் அவன் இறைஞ்சினான்.

– தொடரும்…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *