கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 22, 2012
பார்வையிட்டோர்: 9,614 
 
 

வாசலில் வந்து நின்றவன் எதிரில் பரந்து விரிந்து விச்ராந்தியாய்க் கிடந்த வெளியை வெறித்தான்.

கொஞ்ச காலமாகவே இந்த உலகம் தனக்குள் உருமாறி புத்துரு கொண்டு மிரட்டுவதை அவன் மருண்டு பார்த்து குழம்பிக் கிடக்கிறான். வேட்டை நாயாக காதைச் சிலுப்பி தன்னை இரவு பகலாக துரத்தி வரும் அந்த மாயப் பிசாசைக் கண்டு பதுங்க இடம் தேடுகிறான்.

எங்கும் காரிருள். தீக்குச்சி ஒன்று கிடைத்தால் போதும். இருளுள் அலையும் விரல்களில் இருள் மட்டுமே. அதன் தொடக்கப் புள்ளி எது? அவனால் குறிப்பிட்டதொரு காலவரையறையை உறுதியாய்ச் சொல்ல இயலாமல் போனாலும் தோராயமாகவேனும் அதனோடு தொடர்புடைய நிகழ்வு எது என்பதில் தெளிவிருந்தது.

ஒரு பகல் வேளையின் பின் பகுதிதான் அதன் தொடக்கப்புள்ளியாக இருந்திருக்க வேண்டும்.

வீட்டினுள் பிணமாகக் கிடந்த தனது அம்மாவை வழியனுப்ப வேண்டி வந்திருந்திருந்த சுற்றமும் நட்பும் வாசலைத் தாண்டி சாலை வரை நீண்டிருந்தது. ஒவ்வொரு முகத்திலும் ஒவ்வொரு கேள்விக்கணை. அவனது அடிவேர் வரை ஊடுருவிப் பாய்ந்து அசைத்து கலங்கடித்தது. இறுகிய முகமும் உடைந்த மனத்துடனும் இயந்திரமாய் இயங்கிய அவனது செவிகளில் விழும் மௌனப் பாஷைகளின் அர்த்தம் நிரைந்த குடைச்சல்.

தனது அம்மாவை பெட்டியில் சுமந்து அமரர் ஊர்தியில் வைத்து நிமிர்ந்தபோது அத்தனையும் பெயர்த்துக்கொண்டு உடைப்பெடுத்து உடல் குலுங்க இவன் பெட்டியின் மேல் தலை வைத்து கதறியதை புரிதலுடன் மௌனமாய் பார்த்திருந்த கூட்டமும் சேர்ந்து கலங்கியது.

இப்போதெல்லாம், ஒவ்வொரு பகல் வேளையின் பின்பகுதியிலும் அவனது அம்மாவை அன்று கிடத்தி வைத்து காரியம் செய்த அதே வீட்டுவாசலில் நின்று அவளை மனதில் சுமந்து கலங்குகிறான்.

வரிசையில் நிற்கிற மரங்கள். பருத்து உயர்ந்து அடர்ந்த இலைக்கூட்டத்தின் கவியும் நிழல். இப்போது வெயில் கால வெம்மையில் இலை உதிர்ந்த அம்மணக் கோலத்தில். வழக்கத்தைவிட சீக்கிரமாய் வந்துவிட்ட வெயில் காலம். எல்லாமும் மாறித்தான் கிடக்கிறது. வெயில் மழை புயல் வெள்ளம் என எல்லாரும் மாறித்தான் கிடக்கிறது. காலத்தோடு எதுவுமில்லை.

கண்ணை இடுக்கி நோட்டமிடுகிறான். அனல் வீசுகிறது. கண்ணுக்கெட்டிய தொலைவில் படுக்கைப்போட்டு நீண்டு சோர்ந்து கிடக்கிறது. மன அவசத்தின் பொழுதில் நின்று பார்க்க நிறையும் நிசப்தம். நீல வான் பின் விரிய தலைக்கு மேல் தொங்கும் மேகக் கூட்டத்தினை மல்லாக்கப் படுத்து ரசித்துக் கிடக்கும் அதன் கம்பீரமும் உள்ளுறை மௌனனமும் சாந்தமும் தவ முனிகளை நினைவூட்டும்.

இப்போது அதன் மடியில் இயந்திரங்களின் இரைச்சலம், சரிவில் முட்டிமோதி சிதைந்து நகர்ந்தபடி உள்ளன. மண்ணை ஏற்றிய லாரிகள் புழுதி கிளப்பி பறக்கின்றன. காற்றின் திசையில் மிதந்து வரும் புழுதி மண்டலம். மைனா ஜோடியொன்று இரைந்த இரை பொறுக்க வாசல் குறுக்குச் சுவரில் வந்தமர்ந்து சத்தம் போடுகின்றன.

அவன் வழக்கம்போல் இன்றும் அதை வேடிக்கைப் பார்க்கிறான். இந்நேரம் வரும் அதை இன்று காணோமே என்கிற நினைப்பு வர இடது வாக்கில் திரும்பி பாதையை நோட்டமிடுகிறான். குட்டிகள் பின்தொடர ஜிம்மி என்று இவனாக பெயரிட்டிருந்த அந்த சாக்லெட் நிறத்து நாயின் தலை தெரியவில்லை. அதற்கு என்னவாகியிருக்கும் என்கிற கற்பனை விரிய பதட்டம் கூடுகிறது.

இத்துணை வன்மம் கொண்ட நெருப்புத் தீண்டலை இதுவரை எதிர்கொண்டிராத அவனது உடல் புழுக்கத்தில் வெந்தது. கசகசத்தது வியர்வை மொட்டுக்கள் அரும்பி வழிந்தோடி வாடை வந்தது. கண்களை இறுக மூடி நிமிர்கிறான். விழிக்கோளம் அழுந்த வலி. விழியோரங்களில் ஈரக்கசிவு. நெற்றிப் பொட்டில் தொடரும் தெறிப்பு. இரண்டு நாட்களாய் இடைவெளி இல்லாத வலி. கட்டை விரல்களால் அழுந்த தேய்த்துவிட்டு கீறேங்கும் விரல்களை நெருடுகிறது நான்கு நாட்களாய் சவரக்கத்தி கண்டிராத முள்முடிகள். இதற்குள் கறுப்பில் வெள்ளைத்திட்டு தோன்ற ஆரம்பித்திருந்தது. இளமையில் தோட்டப்புறத்து ரப்பர்காட்டு வெளிகளில் அனுபவித்தவை குறுக்குவெட்டில் நகர்கின்றன. இந்தப் பொழுதின் பின்புலத்தில் அதனை எண்ணிப் பார்க்க அந்தப் பொழுதுகளின் மென்மையும் அழகும் தனக்குள் இன்னமும் பச்சைக்கட்டி இருப்பதை உணர முடிகிறது அவனால்.

அடர்ந்த ரப்பர் காடு. அதில் உலா வரும் குளிர்காற்று. கிழக்கில் துளிர்விட்ட காலைக்கதிர் கித்தாமர இலைகளை ஊடுருவி உடலைத் தீண்டி கதகதப்புடன் பின்தொடர தோட்டத்து மண்சாலையில் நண்பர்கள் புடைசூழ பள்ளிக்கு போனது நினைவு வருகிறது. ஒளியின் ரகசிய ஈர்ப்பில் மனம் வசியப்பட தொடங்கிவிட்ட காலம் அது.

குளத்தின் பரப்பில் காற்றின் உராய்வில் அலையடித்து வர விரவிப் படர்ந்த ஒளிச்சிதறல்…. மாலைவேளை மழைத் தூறலில் முளைக்கும் வானத்து வில்லின் வர்ண ஜாலங்கள். அதன் ஏழு நிறங்கள் ஒளியின் மூல நிறங்கள் என்பது புரியாமலேயே கண்டு அதிசயத்ததுண்டு…அடுப்பங்கரையில் எரிந்த மண்ணெண்ணை விளக்குத் திரியின் சிவந்த மஞ்சள் ஊசலாட்டம்…பௌர்ணமி இரவில் வானில் விரிந்த பால் ஒளியின் மயக்கமூட்டிய அழகு… இரவுநேர கித்தாகாடு மின்மினிகளின் படையெடுப்பில் பறக்கும் ஒளிப்புள்ளிகளால் நிரம்பி வயே ததும்பும் அழகை கண்களில் நீர் கசிய நின்று கண்டதுண்டு.

பள்ளியில் சன்னலோர மேசை விருப்பமான இருக்கை. அதன் கால்களில் ஒன்று ஊனம். முனை உடைந்து தள்ளாடியது. நோட்டுப் புத்தகத்தை வைத்து “ரெழுத்தையும் ஒழுங்காய் எழுத முடிந்ததில்லை. அசௌகரியப்படுத்தியது. ஆனாலும் இடம்பெயற மனமில்லை. அங்கே கட்டிப்போட்டது தலைக்கு மேலிருந்த சன்னல். மொத்தமே நான்கு சன்னல்கள். வெயிலேற தகரக் கூரையின் கீழ் காற்றோட்டமின்றி புழுங்கும் அதன் உட்புறத்தில் சன்னலோர இருக்கை ஒரு வரப்பிரசாதம். சன்னலைத் தாண்டி வரும் காற்றை முழுவதுமாய் ஸ்பரிசிக்க வாய்ப்பது அந்த இருக்கைவாசிகள்தான். தடுப்புக்கள் அமைத்து பிரிக்கப்பட்ட வகுப்பறைகள்.

நாற்காலி மேல் ஏறி நின்று தலையை நீட்டினால் அடுத்த வகுப்பு தலை தெரியும். ஆறு வகுப்புகளாக இருந்தது தோட்டம் உடைந்து மக்கள் சிதறியபோது சுருங்கி மூன்று வகுப்புகளாகிவிட்டிருந்தது. ஒவ்வொன்றும் கூட்டு வகுப்புகள். ஒரே சமயத்தில் இரண்டு வகுப்புகளுக்குப் பாடம் எடுக்க வேண்டிய தர்மசங்கடம் ஆசிரியருக்கு. தோட்டத்து மாரியம்மனோடு இடத்தை பங்கு போட்டு அதன் கூத்துக் கொட்டகையில் பள்ளி குடியேறி பலகாலமாகிறது. வலது பக்கம் தலைக்கு மேல் திறந்திருக்கும் நான்கடி சதுர சன்னல். மேல்நோக்கித் திறக்கும்படியான வசதியுடன் கூடியது. அதனை முட்டுக் கொடுத்து தூக்கி நிறுத்த வசதியாய் ஒரு மரச்சட்டம்.

அதனை ஊடுருவி வந்து மேசைமேல் விழும் காலைநேர பொன் கிரணங்கள். சன்னலை ஒட்டியே நிற்கும் வாதாமரம், காற்றில் அல்லாடும் இலைக்கூட்டங்கள். அதன் நிழலாட்டம். அதனை உள்ளங்கையில் பதிவுசெய்ய விரையும் கைகள். இளஞ்சூட்டு ஒத்தடத்தில் மனசுள் பற்றிக்கொள்ளும் மத்தாப்பு புத்தகப் பையில் புத்தகங்களோடு கலந்து கிடக்கும் உடைந்த கண்ணாடித் துண்டு ஒன்று. வீட்டுப் பலகைச் சுவரில் முகம் பார்க்க தொங்கிய கண்ணாடி ஒருநாள் அறுந்து தரையிறங்க உடைந்து சிதறியதை பொறுக்கி பத்திரப்படுத்தி வைத்தது. மேசைமேல் கவியும் ஒளிக்கற்றைகளோடு விளையாட அவ்வப்போது பையிலிருந்து வெளிவரும்.

ஒளியை வழிமறித்து திசைமாற்ற…. தகரக்கூரை முகட்டு சட்டங்களில் படிந்த சிலந்தி வலையில் சிக்குண்டு தவிக்கும் ஏதோ ஒரு பூச்சியின் மரணப் போராட்டத்தின் இறுதி வினாடிகள்… கரும்பலகை சுண்ணாம்புக்கட்டி வார்த்தைகள் ஏதோவொன்றின் தலைமேல்…எவனோ ஒருவனின் கண்களைக் குறி வைத்து ஒளி பாய்ச்சி பதுங்க “எவன்டா அவன்…?” என்கிற குரலைக் கண்டுகொள்ளாத பாவனையில் வேறு பக்கம் முகம் திருப்பி எழும் நமட்டுச் சிரிப்பை அடக்கி சரேலென பின்னால் திரும்பும் யாரோ ஒரு பெண்ணின் கன்னக்கதுப்பில் யதேச்சையாய் மோதிச் சிதறும் ஒளிக்கோலம்.

அதில் ஒருத்தியின் கன்னக்கதுப்பும் அதில் ஒரேயொரு முறை மாத்திரமே மின்னலாய் பளீரிட்டு மறைந்த ஒளியின் நிழலாட்டத்தையும் இன்றும் அதன் சகல நுட்பமான விவரணைகளோடும் மனக்கண்ணில் எந்த நேரத்தில் நினைத்தாலும் கொண்டுவர இயல்வதன் காரணம் மறுமுறை அதற்கான வாய்ப்பு ஏதும் ஏற்படும் முன்பே ஒரு நான்கு நாள் காய்ச்சலில் அவள் மாண்டுபோன துக்கம்தான் என்பது அவனது திட நம்பிக்கை.

இன்றைய பொழுதில், அண்டம் புணர்ந்த ஒளிப்புனல் என்பதே அவனது தீண்டத்தகாத தீட்டுப் பொருளாகிவிட்டிருந்த வேளையில் அதன் வனப்பும் உயிர்ப்பும்கூட மனித மனத்தின் வெற்றுக் கற்பிதங்கள்தானோ என்கிற எண்ணம் அவனுள் எழுந்தவாறிருக்கிறது.

வெளிச்சிட்ட வெளியில் நிலைக்குத்திய மயான நிசப்தத்தில் அதிர்வலைகளை எழுப்பியவாறு பயணிக்கும் உலக உயிர்களின் தாங்கொனா துயரம் நிரம்பிய அந்தப் பொழுதின் பெருவலியை எதிர்கொள்ளும் ஒவ்வொரு நாளும் அவனுள் பெரும் துக்கம் பிரவாகமெடுத்தவாறு இருக்கிறது.

தன்னுள் சதா ஊற்றெடுத்து சலனிக்கும் இந்த ஆற்றாமை கலந்த வெறுமை உணர்வை விலக்கி நடக்க அவனால் நிரந்தரமாய் இயலாமல் போனது. அது நிஜத்தில் என்ன? உண்மையில் அது தனது தற்போதைய மன அவசத்தின் நீட்சிதான் என்பதை அவன் தனது நுட்பமான அவதானிப்பின் வழி அடையாளம் கண்டுகொண்ட தருணம்முதல் துயரம் தன்னுள் அதிக மூர்க்கர்த்துடன் கசிவதாய் உணருகிறான்.

வானத்தின் எல்லையைத் தொட்டுத் துழாவும் தூரத்துப் பார்வை. விருட்டென வீட்டினுள் பிரவேசிக்கிறான்.

அடுத்தமுறை அவன் வாசலுக்கு வந்து நின்றபோது இருளின் ஆட்சி தொடங்கிவிட்டிருந்தது. வானத்து வெளியில் கண்ணைப் பறித்த ஒளியின் வெறியாட்டம் கண்காணா தொலைவில் தன்னை ஒடுக்கிக்கொண்டு உறங்கப்போயிருந்தது. எங்கும் இருள். அவன் உற்சாகமானான். தனது இஷ்ட தேவதையின் முன்பு பயபக்தியோடு கைகட்டி நிற்கும் பக்தனைப்போல் தலைவணங்கி நின்றான்.

அவனது பிரார்த்தனைக்கு செவிசாய்த்தது போல் இருளின் கரங்கள் நீண்டு வளர்ந்து அவனை நோக்கி வருகின்றன. அவன் பயமேதுமின்றி அதனைப் பற்றி தனது கண்களில் ஒற்றி சிலிர்க்கிறான். அதன் உதவியோடு மெல்ல எழுப்பி அடந்த கறுத்த வானத்துள் நுழைகிறான். மனதில் கல்லாய் கனத்ததெல்லாம் கரைந்தோட அவன் இலவம் பஞ்சாய் காற்றில் மிதந்து போகிறான். கிழக்கே ஒரு நட்சத்திரக் கூட்டம். அதனை நோக்கி நகர்கிறது அவனது அன்றைய பயணம்.

வானில் நிலவு பூக்கும் நாட்களும் விஷேசமானவைதான். அன்று அவன் வீதி உலா போவதும் உண்டு. விளக்குக் கம்பங்கள் வரிசைப்பிடித்து நிற்கும் சாலையோரங்களில் மேலும் கீழுமாய் பலமுறை நடப்பதுண்டு. விளக்குக் கம்பத்தினடியில் நின்று அது தரையில் சிந்திவிடும் மஞ்சள் ஒளியில் நனைவதும் பிடித்திருந்தது.

இருளும் அதனுள் ஐக்கியமான ஒளியும் மட்டுமே அவனுக்கு உகந்த ஒன்றாய் மாறிவிட்டிருந்தது.

இருட்போர்வைக்குள் மூழ்கும் உலகை அவன் வியப்புடன் அணுகத் தொடங்கிவிட்டிருந்தான். அவனது இயக்கத்தின் மூலம் அங்கிருந்துதான் தனக்காக உயிர்ச் சக்தியை உறிஞ்சிக்கொண்டிருந்தது. அதனைக் கொண்டாட பலநாட்கள் அவன் பட்டணப் பிரவேசம் போகிறான். வண்ண ஒளியில் மிதக்கும் உலகை நெருங்கி நின்று ரசிக்கிறான்.

இருளுக்கும் அதன் ஒளி ஜாலத்திற்கும் இடையிலான தொப்புள்கொடி உறவும் அதன்பால் தனக்காக ஈர்ப்பும் அவனைக் குழப்பத்தில் ஆழ்த்தின. அதன் கண்ணாமூச்சி விளையாட்டு தன்னுள் மிக ஆழத்துள் வேர்கொண்டு சதா சலனித்தவாறு அவஸ்தைப்படுத்துவதை உன்னிப்புடன் அவதானித்து உறக்கம் கலைந்தான்.

அன்றும் பகல் வெளியை நீண்ட நேரம் வெறித்து வாசலில் நின்றிருந்தான். பின் அதன் உக்கிரம் தாளாமல் உள் நடந்தான்.

உள் நுழைந்த வாக்கில், இடதுபுறம் அப்பனது அறை. வாசலைத் தாண்டி வரும் அவரது பகல்நேர தூக்க முணகல், தயங்கி நிற்கிறான். சற்றுநேரம் அதனை உற்று கேட்கிறான். தலையை பலமாக ஆட்டி கால்களை முன் நகர்த்த போனவன் ஏதோ நினைவுவர அறை நோக்கி திரும்பி நின்றான். வாசல் திரைச்சீலை அசைந்தாடியது. உள்ளே காற்றாடியின் சுழற்சி. தரையில் துண்டை விரித்துப் போட்டு படுத்து தூங்கும் வழக்கம். சிமிந்தி தரை கொடுத்த குளிர்ச்சியின் இதம் தேவைப்பட்டிருக்கும்.

நாலடி வைக்க அறை வாசலில் வந்து நின்றான். காற்றுக்கு படபடத்த திரைச்சீலை முகத்தில் அலைந்தது. விலக்கி தலையை மெதுவாய் உள் நீட்டினான். சுவரில் முணகலுடன் சுழன்ற காற்றாடி ஒலியின் பின்னணியில் வரும் மூச்சிறைப்பு. அம்மா அவரோடு அந்த அறையில் இருந்தவரை பகல்நேர தூக்கம் என்பது வெளிவாசலில் கிடந்த சாய்வு நாற்காலியில்தான். அவள் அதிலிருந்து வெளியேறிய அன்று தொடங்கி அதுவும் அறைக்குள் அவரோடு ஐக்கியமாகிவிட்டிருந்தது. அதனை நீட்டி மடக்க முடியாமல்போய் நாளாகிறது. அதன் மடங்கும் மூட்டுக்கள் எண்ணெய் காணாமல் காய்ந்து துருப்பிடித்து இறுக்கிக்கொண்டிருந்தது. அது வெளிவாசலுக்கு வர இயலாமல் போனதற்கு அதுவும்கூட ஒரு காரணமாய் இருக்கலாம் என்பது அவனது கணிப்பு. எப்பவும் இடம்பெயறாமல் சன்னலையொட்டியே இருந்தது. அதில் தலைக்கு தலையணை முட்டுக்கொடுத்து சாய்ந்து கண்மூடிக்கிடக்கிறார்.

அவன் சற்றே கூர்ந்து பார்த்து நிற்கிறான். மார்புக்கூடு சீரான ஏற்ற இறக்கத்துடன் வரும் மூச்சிறைப்பு. அதில் நிறைந்து கிடக்கிறது பழுத்த முடிகள். வயதாகியும் அடர்த்தி குறையாத அதிசயம். நேர்மாறாய் இருக்கிறது தலை. முன்பக்கம் முழுவதுமாய் முடியை உதிர்த்துவிட்டிருந்தது. வழக்கமாய் வைத்துவிடும் நல்லெண்ணெய்யின் மினுமினுப்பு உள்வாங்கிய விகேள். ஒடுங்கிய கன்னத்தில் குறைந்தது ஒரு வார முடி பிளேடைக் காணாமல்.

நாற்காலியை ஒட்டி சிறிய மேசை. கழற்றி வைத்த கண்ணாடி. காலையில் குடித்து வைத்த காப்பி கொஞ்சம் மீந்திருக்கும் குவளை. அதனை வளையவரும் ஒன்றிண்டு ஈக்கள். காற்றில் பக்கங்கள் படபடக்கும் மூலிகைப் புத்தகம். அதில் ஒட்டிக்கொண்டிருக்கும் துண்டு பென்சில். அடிக்கோடிட்ட சொற்கள். வாக்கியங்கள். நூல் பிரிந்து தனியாய் விலகிவந்த சில பக்கங்கள்.

அவர் ஆர்வத்துடன் பலநூறு முறையாவது புரட்டிய ஒரே புத்தகம். கண்ணாடி மூக்கின் நுனியில் சரிந்து நிற்க மிகுந்த கவனக் குவிப்புடன் அவர் ஒவ்வொரு வார்த்தையைய் வாய்விட்டு வாசிப்பதை தள்ளி நின்று ரசித்த காலம் ஒன்றிருந்தது.

இப்போது இல்லை.

அவனது அம்மாவுடனான அவரது தொடக்கக்கால உரசல்கள் சின்னச் சின்ன வாக்குவாதங்களாக அறைக்குள்ளிலிருந்து கசிந்தபோது இவன் தனது அறையின் மூலையில் உட்கார்ந்து விசனத்துடன் கேட்டிருந்தான். சிலபொழுது நடுநிசியைத் தாண்டிய கோபக் குரல்களின் மோதலில் தன் முன் நீண்டுக் கிடந்த பின்னிரவின் மௌன வெளியில் தூக்கமின்றி புரண்டு கிடந்தான்.

அதனைத் தொடர்ந்து வந்த நாட்கள் அவனை சன்னஞ்சன்னமாக கொத்திக் குதறி சின்னாபின்னமாக்கி சிதைக்கத் தொடங்கியபோது அவன் தன்னுள் எங்கிருந்தோ வெடிப்புடன் புறப்பட்ட புதியதோர் முகத்தின் அவலக் குரலின் துயரில் மூழ்கி மாண்டுபோனான்.

என்றோ ஒருநாள் என்றிருந்த உரசல்கள் விஸ்வரூபமெடுத்து தினமும் என்பதான வழக்கமானதோடு மிகுந்த உக்கிரம்பெற்ற வக்கிர வார்த்தைகளின் கிடங்காக அந்த அறை மாற்றம் கண்டதிலிருந்து உடல்ரீதியான வன்முறையும் தலைதூக்கத் தொடங்கிவிட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து அவனது அறை வாசலைத் தாண்டி வந்து அல்லாடிய அம்மாவின் இயலாமைக் கலந்த வலியின் குரலை எதிர்கொள்ளும் திராணியற்று கண்மூடி கலங்கினான்.

அப்பனின் உடலில் லேசான அசைவு. இமைகளின் படபடப்பு. விழிப்புவரும் நேரந்தான். விலக்கிப்பிடித்திருந்த திரைச்சீலைலையை விட்டு விலகியது கை. சற்று அங்கேயோ நின்று எதையோ யோசித்துக்கொண்டிருந்தவன், ஏதோ தீர்மானத்துக்கு வந்துவிட்டிருந்தான்.

வந்த வழியே திரும்பி நடந்தான். வாசலுக்கு வந்து, பழைய சாமான்கள் அடைத்துக் கிடந்த அலமாரியைப் பார்த்து நடந்தான். அதைத் திறந்து எதையோ தேடினான். மூலையில் இருந்தது அது. அப்பனின் மராமத்து வேலைக்கான உபகரணங்கள் அடங்கிய பெட்டி. திறந்து சுத்தியலை எடுத்து பெட்டியை மூடி மீண்டும் உள் நடந்தான்.

சிறிது இடைவெளியில் வீடு அதிரும்படியான ஒலி. சத்தம்கேட்டு தூக்கம் கலைந்து திடுக்கிட்டு எழுந்த அவனது அப்பன் அதனது மூலத்தை தேடி கொஞ்சம் குழம்பித்தான் போனார். மூலம் தெளிவானபோது பதட்டத்துடன் எழுந்து அறை வாசலில் வந்து நின்று பார்த்தார். அவரது கணிப்பு சரிதான் என்பதை உறுதிசெய்து கொண்ட திருப்தியோடு மகனது அறை நோக்கி நடந்தார்.

இந்தியன் கேம்ப் என்கிற சொல்லில் வழங்கப்பட்ட பிரதான சாலையையொட்டிய குடியிருப்பு. கம்யூனிஸ்டுகால எமர்ஜென்சி பிரகடனத்தின்போது உருவான இந்தியர்கள் குடியிருப்பு. நான்கு அறைகள்கொண்ட கம்பத்து வீடு. அதன் வடக்கு மூலையில் ஒதுங்கிய அறை அவனது.

அறை வாசலில் நின்று குரல் கொடுக்கிறார்.

‘என்னடா அங்க சத்தம்?….’

‘தெரியல? சன்னல சாத்தி ஆணி வைச்சேன். அம்மாவ நீ தொரத்தன பின்னால இதுலதான சன்னல சாத்திவச்சு கடசிவரக்கும் தெறக்காம இருட்டுல உட்கார்ந்து கிடந்தாங்க. இப்ப எதுக்கு இங்க இத்தனை வெளிச்சம்? எனக்கு தாங்கல?….’

மெதுவாய் திரைச்சீலையை விலக்கி உள் பார்த்தார்.

இருளுள் மறைந்து போயிருந்தான் அவன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *